-மேகலா இராமமூர்த்தி

மரக்கிளையில் ஒயிலாய்ச் சாய்ந்திருக்கும் முருங்கை இலைகளைப் படமெடுத்திருப்பவர் அண்ணாகண்ணன். இப்படத்தைத் தெரிவுசெய்து படக்கவிதைப் போட்டி 274க்கு வழங்கியுள்ளனர், வல்லமையின் ஆசிரியர் குழுவினர் . படப்பதிவாளருக்கும், ஆசிரியர் குழுவினருக்கும் என் நன்றிகள் உரித்தாகுக!

மர வகைகளில் முருங்கை வலிமையற்ற ஒன்றாகும். அதனால்தான் அதனை ”நாரில் முருங்கை” என்கின்றது அகநானூறு.

“”…அலங்குசினை
நாரில் முருங்கை நவிரல் வான்பூச்
சூரலங் கடுவளி எடுப்ப ஆரூற்று
உமைதிரைப் பிதிர்வில் பொங்கி…” (அகம்: 1)

நார்த் திசுக்களே ஒரு மரத்திற்கு வலிமை தருவன. அவை இல்லாமையாலேயே முருங்கை மரம் வலியற்றிருக்கின்றது என்கிறது அறிவியல்.

’முருங்கை’ என்ற தமிழ்ச் சொல்லானது ’முருங்கா’ என்ற சிங்களச் சொல்லிலிருந்து வந்ததாகத் திறனாய்வாளர்கள் சிலர் கருதுகின்றனர். ”அது தவறு! முருங்கை என்பது தமிழ்ச்சொல்லே என்பதற்குச் சங்க இலக்கியத்தில் அச்சொல் பயின்றுவந்திருப்பதே சான்று” என்பார் தமிழண்ணல்.

இனி, படத்தில் காணப்படும் முருங்கை இலைகளுக்கு நம் கவிஞர்கள் தீட்டவிருக்கும் கவி வண்ணங்களைக் காண்போம்!

*****

”பச்சை இலைகள் பழுத்துவீழ்வது இயல்பானது; அதனால் மரத்திற்குப் பாதகம் ஏதுமில்லை” எனும் வாழ்க்கைப் பாடத்தை இவ் இலைகள் தமக்கு உணர்த்துவதை நமக்கும் அறியத்தருகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

வாழ்க்கைப் பாடம்…

பச்சை இலையுடன் முருங்கையிலே
பழுத்தே யுதிரும் இலைகளெல்லாம்
நிச்சய மாக ஓரிடத்தில்
நிலைத்தே யென்று மிருப்பதில்லை,
இச்சை கொண்டே கீரையாயினும்
இயல்பாய்ப் பழுத்து வீழ்ந்திடினும்
அச்ச மில்லை மரத்திற்கே
அதுதான் வாழ்க்கைப் பாடமதே….!

*****

பல்விழுந்த கிழவிபோல் காட்சிதரும் பழுத்த இலைக்காம்பும், பச்சைப் பட்டுடுத்திய பருவப்பெண்போல் மினுமினுக்கும் பச்சை இலைக்காம்பும் தமக்குள் நிகழ்த்திய உரையாடலைச் சுவையான கவிதையாக்கியிருக்கின்றார் திரு. கோ. சிவகுமார்.

இளமையும் முதுமையும்

பல் விழுந்த‌
கிழவி போல்
பரிதாபமாய்ப்
பழுத்த இலைக் காம்பு!
பக்கத்தில்
பச்சைப் பட்டுடுத்திய
பருவப் பெண் போல்
பச்சை இலைக் காம்பு!

இலைக் காம்புகளுக்கிடையே
ஏதோ சலசலப்பு.
உற்றுப் பார்த்து
ஒட்டுக் கேட்டேன்.
பச்சை இலைக் காம்பு பரிகாசத்துடன் பேசியது,

“பழுத்த இலைக் காம்பே,
நான்
பசியால் வாடும்
உயிரினங்களுக்கு
உணவாகப் போகின்றேன்!
நீயோ,
மேலும் பழுத்து
யாருக்கும் பயனின்றி
மண்ணில் புதையுண்டு
மாளப் போகின்றாய்!”

பதிலுக்குப்
பழுத்த இலைக் காம்பு‌
பணிவுடன்,
“என்னைத் தாங்கிய
மரத்தை வளர்த்த
பூமித்தாய்க்கு
என் பழுத்த இலைகளால்
அர்ச்சனை செய்து
புண்ணியம் தேடிக்கொள்வேன்”
என்றது!

பச்சை இலைக் காம்பு
வெட்கித்
தலைகுனிந்தது!

இளமை
இறுமாப்பு கொண்டு
முதுமையைப் பழித்தல்
முற்றிலும் தவறென்று
இலைக்காம்புகளின்
உரையாடல்
இவ்வுலக மானிடருக்கு
உணர்த்துகின்றதோ!

*****

”ஒடித்து வளர்த்தும் அதற்காக வருந்தாது காய் தருகின்ற நீ, ஏன் கனி தருவதில்லை? உன்னைக் காயிலேயே நாங்கள் காயப்படுத்துவதாலா?” என்று முருங்கையை நோக்கிக் கேள்விக்கணை விடுக்கிறார் திரு. சீ. காந்திமதிநாதன்.

பிள்ளையை
அடித்து வளர்
முருங்கையை
ஒடித்து வளர்

அகிம்சைப் பாடம்
நடத்துகிறாய்
இம்சை செய்பவருக்கும்
பலன்கள் தருகிறாயே!

பெயரில் தான்
இருக்கிறதே கை
ஏன் நீட்ட மறுக்கிறாய்?

மரம் என்பதாலே
மனித இனம்
ஒடிக்கிறது
நீ வளர!

புரிந்து தான்
தெரிந்து தான்
பலன்கள் தருகிறாயே!

உன்னிடம்
ஒரு கேள்வி…

நீ ஏன் கனி தருவதில்லை?

காயிலேயே
காயப்படுத்தி
விடுகிறோம்
என்பதாலா?

உன்னிடம்
கற்க வேண்டியவை
ஏராளம் ஏராளம்!

கீரை வகைகளில்
கறிவேப்பிலை யாக
மரமானவனே!

இலை ஆகட்டும்
பூ வாகட்டும்
காய் ஆகட்டும்
ஒவ்வொன்றும்
ஒவ்வொரு
மருத்துவ குணம்!

சமூகத்திற்கும்
வீட்டிற்கும்
நாட்டிற்கும்
மனிதனாகப்
பிறந்தால்
பயன்பட வேண்டும்
நீ கற்றுத்தரும்
பாடம்!

நான்
கற்றுக்கொண்ட
பாடம்!!

*****

”தோட்டத்தின் அழகுதனை நிர்ணயிக்கும் முருங்கையின் பசுமை இலையில் பறவைகளும் வந்தாடுகையில் ஏற்படும் குதூகலத்துக்கு அளவில்லை” என்று மகிழ்ந்துரைக்கும் திருமிகு. சுதா மாதவன்,  ”பசுமைத் தாயகமான இந்தியாவில் பசுமைப் புரட்சி ஏற்படுத்துவோம்!” என்று  மக்களுக்கு அன்பு வேண்டுகோளும் விடுக்கிறார்.

பச்சைப்பசேல் இலைத்துளிகள்
சார்ந்து வளரும் செடிகொடிகள்
பார்ப்பதற்குக் கண் குளிர்ச்சிதான்
மண் வளத்தைக் குறிக்கும் அது சிறப்புதான்!

தோட்டத்தின் அழகுதனை
நிர்ணயிக்கும் பசுமை இலை
வளமான சுற்றுச்சூழல் என
வார்த்தையிட்டுச் சொல்லிடலாம்!

பறவைகளும் அதனூடே
பறந்து வந்தாடுகையில்
குதூகலமோ குறைவில்லை!
நறுமணமும் நலியவில்லை!

பசுமைத் தாயக இந்தியாவில்
பசுமைப் புரட்சி ஏற்படுத்திப்
பசுமையோடே காத்திடுவோம்!

*****

மரத்தின் ஆதாரம் தளிரா? தளிரின் ஆதாரம் மரமா? என்றோர் ஆய்வுசெய்து அதனோடு மனித உறவுகளையும் சமூகத்தையும் நயமாகப் பொருத்திக் காட்டியிருக்கின்றார் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன்.

சுற்றம்

தளிரா? மரமா?
தனி மனிதனா? சமூகமா?

விதை வீழ்ந்து
சிறுமுளை விட்டு
நாற்றாகி, தளிராகி,
சேற்றில் கால் பரப்பிச் செடியாகி,
கிளை விரிந்து பெரு மரமாகி நின்றாலும்
தளிர் இல்லா மரத்தை யாரும் கண்டதுண்டோ?
ஆகையின்…
தளிரே மரத்தின் ஆதாரமோ?

எனில்…
பற்றும் கிளையின்றி, தண்டின்றி
உணவளிக்கும் வேரின்றி
மரத்தின் துணையின்றி
தளிருக்கு வாழ்வு ஏது?
ஆகையின்…
மரமே தளிருக்கு ஆதாரமோ?

மரமின்றித் தளிரில்லை
தளிரின்றி மரமில்லை

அதுபோன்று
பிறப்பு முதல் இறுதிவரை
உருத்துக் காட்டும் உறவு வேண்டும்
பொறுப்பு கொண்டு காத்து நிற்கும்
சிறப்புக் கொண்ட சுற்றம் வேண்டும்
மனிதம் வாழ நற்சமூகம் வேண்டும்
சமூகத்தில் நல்ல மனிதன் வேண்டும்

ஒன்றில்லாமல் மற்றொன்று இருப்பதில்லை!
சுயநலத்தால் சுற்றம் என்றும் வாழ்வதில்லை!

*****

பலன்கள் பல நல்கும் முருங்கையின் அருமை அறியாத மாந்த சமூகம், பலனற்ற குரோட்டன்ஸ் செடிகளைக் கொண்டாடி மகிழ்வதை மென்மையான மொழிகளில் இடித்துரைத்திருக்கின்றார் திருமிகு. ஜெயஸ்ரீ.

துரித சுவைகளின்
அடிமை நாக்குகள்
சிவந்த நஞ்சு நாவின்
நிறமே பிடித்து உண்ணும்

பிறிதோர் உயிர்க்குருதி
காணும் குரூரப் பேருவகை
பெருவெளியில் நீயோ
பழுத்தும் பழுக்காமலும்
பயனின்றி உதிர்கிறாய்

கொல்லையில் ஊன்றினால்
குழம்பு காய் கூட்டோடு
குலம் தழைக்க வைப்பாய்
வித்துக்களை உருவாக்கும்
சத்துக்களைக் கொண்டதால்
பிரம்ம விருட்சம் நீ!

இருந்தும் என்ன?
வேருக்கு நீரூற்ற நேரமில்லை
எங்களுக்கே தாகம் தீர்க்க
நெகிழிநீர் போதவில்லை
முற்றியது கலி!

நீயாகவே காய்ந்து போ!
இல்லை கண்ணைப் பறிக்கும்
வண்ணக் குரோட்டனாய் மாறு!
அப்போது நாங்கள் ஆராதிப்போம்!

*****

முருங்கை இலையையும் மரத்தையும் ஆய்ந்து, பல்வேறு வாழ்வியல் உண்மைகளை உரக்கச் சொல்லியிருக்கின்றார்கள் சீரிய சிந்தனையாளர்களான நம் கவிஞர்கள்; அவர்களைப் பாராட்டி மகிழ்கின்றேன்!

அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவாகியிருப்பது…

வாழ்க நீ!

முருங்கையே! உன் இதழ் சிந்தும் புன்னகைக்கு வணக்கம்!
சமதர்மத்தை நிலைநாட்டி நிற்கும் நீ மரம் அல்ல
உச்சி முதல்அடி வரை உன்னதத்தை மறைத்து வைத்துள்ள
கற்பகத்தரு! மனிதாபிமானத்தின் மறுவுரு!

”முறித்துப் போட்டாலும் முளைத்துவிடு!
வெட்டிப்போட்டாலும் விதையாய் விழுந்து விருட்சமாய் எழுந்துவிடு!” என்ற தன்னம்பிக்கையைத் தழைக்கச் செய்யும் குரு நீ!
சத்துக்களைச் சத்தமிடாமல் தந்து கொண்டிருக்கிறாய் – அன்றாட
வீடுகளில் வெந்து கொண்டிருக்கிறாய்!

காற்றோடு ஆடுகிறாய்; புயல்காற்றோடு ஓடுகிறாய்!
எத்தனை முறை உன்னை அசைத்துப்போட்டாலும்
அசந்து போகாத பூமித் தாயின் வீர மகன் நீ!

முருங்கையே உன் கை ஏழைகளின் நம்பிக்கை!
ஒட்டிய வயிறுகளைத் தட்டி எழுப்பும் கை!
புரட்சியாளர் பிடல்காஸ்ட்ரோவுக்கும் பிடித்த கை!
உழைத்து உழைத்து உலகுக்குச் சோறூட்டும்
பாட்டாளிகளுக்கும் உனக்கும் உள்ள வேறுபாடு…
நீ மரம்! அவன் மனிதன்!

உன் கரம் துண்டிக்கப்பட்டால் முளைத்து விடும்
அவன்கரம் துண்டிக்கப்பட்டால் சோற்றுக்கு அலையும் நாள்வரும்
அந்த நாள் வந்துவிடக்கூடாது என்றுதானே
வறுமையெனும் கொள்ளைக்காரனிடமிருந்து
பாட்டாளியைக் காக்கக் காவலனாய் நிற்கிறாய் அவன் இல்லத்தில்!
உன்பசுமையான இதழ்களுக்குச் சத்தமில்லாத முத்தமே
என் அன்புக் காணிக்கை! வாழ்க நீ ! வளர்க நீ!

”முருங்கையே! முறித்துப் போட்டாலும் முளைத்துவிடு; வெட்டிப்போட்டாலும் விதையாய் விழுந்து விருட்சமாய் எழுந்துவிடு! என்ற தன்னம்பிக்கையைத் தழைக்கச் செய்யும் குரு நீ! உன் கை ஏழைகளின் நம்பிக்கை; ஒட்டிய வயிறுகளைத் தட்டி எழுப்பும் கை!” என்று முருங்கையின் பெருமைகளைத் தம் கவிதையில் திறம்பட உரைத்திருக்கும் முனைவர் செ. நீதியை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.   

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *