படக்கவிதைப் போட்டி 284இன் முடிவுகள்

-மேகலா இராமமூர்த்தி
சுடர்விடும் சோடிக் குத்துவிளக்குகளை அழகாய்ப் படமெடுத்து வந்திருக்கின்றார் திருமிகு. ராமலக்ஷ்மி. இவ் ஒளிப்படம் வல்லமை பிளிக்கர் குழுமத்திலிருந்து தேர்வுசெய்யப்பட்டுப் படக்கவிதைப் போட்டி 284க்கு வழங்கப்பட்டிருக்கின்றது. அழகொளிரும் படம்தந்த ஒளிப்பட வல்லுநர்க்கு என் நன்றி!
”இருளகற்றும் சோதி விளக்குகளைப் போலநம்
மருளகற்றும் கல்வி ஒளி!”
சுடர்விடும் இந்தக் குத்துவிளக்குகள் குறித்து முத்தாகக் கவிசொல்லக் காத்திருக்கும் வித்தகக் கவிஞர்களை மெத்த மகிழ்ச்சியோடு வரவேற்கின்றேன்!
*****
”மனிதனின் மன இருட்டை விரட்ட உண்மையே விளக்கு” என்ற நற்கருத்தை நவிலும் திரு. செண்பக ஜெகதீசன், ஏற்றிவைத்த குத்துவிளக்குக்கு ஈடாக வேறோர் விளக்கில்லை என்கிறார் வியப்போடு!
எல்லா விளக்கும்…
இருளை அகற்றிட ஏற்றிடும் விளக்கு
இருக்கும் இடமே ஒளியால் சிறப்பு,
இருட்டு மனிதன் இதயத்தில் இருந்தால்
இதனை ஓட்டிட உண்மையே விளக்கு!
எத்தனை விளக்குகள் வகைகள் பலவாய்
ஏற்றி வைத்தே அழகு பார்த்தாலும்
குத்து விளக்கின் அழகைப் போலக்
குடும்பப் பாங்காய் எதுவும் இலையே…!
*****
”இருமுக விளக்கு; இல்லற விளக்கு; கார்த்திகை விளக்கு; காரிருள் விலக்கு” என்று விளக்கின் சிறப்பினை விவரமாய் விளம்புகின்றார் திருமிகு. சுதா மாதவன்.
இருமுக விளக்கு
இல்லற விளக்கு
இருள் அகல் விளக்கு
இறை அருள் விளக்கு
சொல்லக விளக்கு
சுடரொளி விளக்கு
பன்முக விளக்கு
பாவை கை விளக்கு
ஒளிச்சுடர் விளக்கு
ஓங்கச் செய் விளக்கு
ஒற்றுமை ஆக்கும் விளக்கு
ஓங்கார விளக்கு
கார்த்திகை விளக்கு
காரிருள் விலக்கு
வள்ளலார் விளக்கு
வாழ்வு மலரச்செய் விளக்கு!
*****
விளக்குகளை வைத்து நல்ல கருத்துக்களை விளக்கியிருக்கும் கவிஞர்களுக்குப் பாராட்டுக்கள்!
அடுத்துவருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவாகியிருப்பது…
தீப ஒளி!
கருமைத் தாளில் நிறங்கள் தீட்டி
வண்ணங்கள் ஏற்றும் தூரிகை
இருளெனும் மௌனம் விரட்டிட
வெளிச்சத் தாளம் கொட்டும் பேரிகை
மறையும் பகலின் வாழ்வை நீட்டிக்கும்
வெளிச்சக் கீற்றெனும் தேவதை
அறியாமை இருளை நீக்கி உண்மை
ஞானம் வளர்க்கும் நல்லொளிக் காரிகை
இருளை விலக்கி வாழ்வில் தினமும்
வெளிச்சம் செதுக்கும் உளி
காரிருள் நீக்கிப் பார்வையில்
தெளிவைக் கொடுக்கும் சூரியத் துளி
தனிமை வெக்கைப் போக்கித்
துணையைக் காட்டும் இன்ப வளி
இனிமை பொங்கி நம் இல்லம் சிறக்க
ஒளிரட்டும் நல் தீப ஒளி!
”இருளை விலக்கி வாழ்வில் தினமும் வெளிச்சம் செதுக்கும் உளி; காரிருள் நீக்கிப் பார்வையில் தெளிவைக் கொடுக்கும் சூரியத் துளி” எனும் அழகிய வரிகளால் நம் சிந்தையை வருடியிருக்கும் திரு. வேங்கட ஸ்ரீநிவாசனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.