கட்டுரைகள்செய்திகள்

உருசியத் தமிழறிஞர் அலெக்சாந்தர் துபியான்ஸ்கி மறைந்தார் | Alexander Dubiansky passes away

உருசியத் தமிழறிஞர், பேராசிரியர் அலெக்சாந்தர் துபியான்ஸ்கி (Алекса́ндр Миха́йлович Дубя́нский, Alexander Dubiansky) (வயது 80), மாஸ்கோவில் இன்று மறைந்தார். கொரோனா தொற்றின் தாக்கத்தால் அவர் உயிரிழந்தார்.  அவரது மறைவுக்கு வல்லமை மின்னிதழ், வாசகர்கள் சார்பிலும் தமிழ்கூறு நல்லுலகு சார்பிலும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.

சென்னையில் பேராசிரியர் அலெக்சாந்தர் துபியன்சுக்கி அவர்களும் எழுத்தாளர் செயகாந்தன் அவர்களும். படம் கே. பிச்சுமணி, இந்து ஆங்கில நாளிதழ் (சூன் 22, 2010) (The Hindu, June 22, 2010, Picture: K. Pichumani)

மாஸ்கோ அரசுப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மற்றும் இந்திய இலக்கியப் பேராசிரியராகப் பணிபுரிந்து வந்த இவர், உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பயணித்து தமிழ் மொழி சார்ந்த நிகழ்வுகளில் பங்கேற்று தமிழ் மொழியின் சிறப்புகளை உரையாடி வந்தார். தமிழில் சரளமாகப் பேசவும் கற்றவர். இவர் தொல்காப்பியத்தைப் பற்றியும் சிலப்பதிகாரத்தைப் பற்றியும் உருசிய மொழியில் கட்டுரைகள் எழுதியுள்ளார். ஏறத்தாழ 110 ஆய்வுக் கட்டுரைகள் எழுதியுள்ளார். இவருடைய பணியைப் போற்றி இவருக்குத் தென் ஆசிய கல்விக்கான குமுகத்தின் (The South Asian Studies Association) தலைசிறந்த கல்வியாளர் விருது (Exemplar Academic Awards) 2013இல் வழங்கப்பெற்றது.

1998ஆம் ஆண்டு சென்னையில் நடந்த உலகளாவிய முருகன் மாநாட்டில் பேரா.அலெக்சாந்தர் துபியான்ஸ்கி அவர்களைச் சந்தித்து உரையாடியுள்ளேன். தமிழ்ச் செவ்விலக்கியங்களின் பெருமைகளை உலக சமூகத்தின் பார்வைக்கு எடுத்துச் சென்றதில் இவருக்குக் குறிப்பிடத்தக்க பங்கு உண்டு.

இவரது 75ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, வல்லமையாளர் விருதினை வழங்கி மகிழ்ந்தோம். இது தொடர்பான பேரா.செ.இரா.செல்வக்குமார் அவர்களின் அறிவிப்பு இங்கே: https://www.vallamai.com/?p=69166

துபியான்ஸ்கி அவர்களின் மறைவு குறித்து, ழான் லூக் செவியார் (Jean-Luc Chevillard), வல்லமைக் குழுமத்தில் பகிர்ந்துள்ள செய்தி இங்கே:

Dear Vallamai list members,

It is with great sadness that I have to announce that our dear colleague
and friend Alexander Dubiansky (b. 1941) died in Moscow this morning
because of Covid.

We shall miss him very much.

I include a picture taken in Paris on 28th september 2019 during the 4th
European Tamil conference. This was the last occasion for Eva and me to
meet with him face to face.

— Jean-Luc Chevillard (in Müssen)

போற்றுதலுக்கு உரிய பணிகள் புரிந்த துபியான்ஸ்கி அவர்களின் மறைவு, தமிழுலகிற்கும் மொழியியலுக்கும் பேரிழப்பு. தமிழின் தகுதிகளை, தமிழிலக்கியத்தின் சிறப்புகளை உலக அரங்கில் ஓயாமல் உரைத்த தமிழறிஞர், அறிவியல் பார்வையும் நம்பகத்தன்மையும் கொண்டவர், உவந்தேற்று மதிக்கப்பெற்ற அறிஞர் துபியான்ஸ்கியின் மறைவுக்குப் பெரிதும் வருந்துகிறோம். அவர் நினைவுகளால் வாழ்வார், நித்தியத்தில் தோய்வார்.

படத்துக்கு நன்றி: https://www.ldcil.org,

                                                The Hindu, June 22, 2010, Picture: K. Pichumani

 

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க