இலக்கியம்கட்டுரைகள்

கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 19

-மேகலா இராமமூர்த்தி

இராவணன் மனத்தில் சூர்ப்பனகையால் விதைக்கப்பட்ட சீதை மீதான காம விதை விறுவிறுவென வளர்ந்து விருட்சமானது. அதன்பின்னர் அரியணையில் அமர்ந்திருக்கவோ அமைச்சர்களோடு அளவளாவவோ அவனால் இயலவில்லை. விருட்டென ஆசனத்திலிருந்து எழுந்தான். அவன் உளக் குறிப்புணர்ந்த ஏனையோரும் அவையினின்று வெளியேறினர். பிறன்மனை நயத்தலைப் பாவமென்று எண்ணாத இராவணன், சீதையைக் காணும் ஆசையால் மனம் நைந்தான். சோலையின் நடுவே அமைந்திருந்த தன் மாளிகைக்குச் சென்று அமளியில் வீழ்ந்தான்.

”பாலும் கசந்ததடி சகியே படுக்கை நொந்ததடீ
கோலக் கிளிமொழியும் செவியில்
குத்தல் எடுத்ததடீ” என்று மகாகவி படைத்த கண்ணனின் காதலி வாடுவதுபோல், சீதையை எண்ணி வாடினான் இராவணன். விரக வேதனை அவனுக்கு நரக வேதனையானது. பகைவன் அடைந்த புகழ் ஒருவனைச் சுடுவதுபோல் சீதையின் நினைவு அவனைச் சுட்டது.

ஆதலால், நிலவினை அழைத்து வானில் தண்ணொளி பொழியச் செய்யுமாறு ஏவலர்களைப் பணித்தான். ஆனால் நிலவொளியும் கதிரொளியாய் அவனை எரிக்கவே, வீரக்கழலணிந்த இயமனும் அஞ்சுகின்ற இராவணன் சினந்து, ”குளிர்ச்சிதரு கிரணங்களை உடைய சந்திரனை அழைத்து வாருங்கள் என்றால் கொடுநெருப்பையும், வலிமிகு நஞ்சினையும், கடுங்கோபத்தினையும், வெம்மையான கிரணங்களையும் கொண்ட அருக்கனை (சூரியன்) ஆர் அழைத்தீர்கள்?” என்றான் கடுமையான குரலில்.

கருங் கழல் காலன் அஞ்சும்
     காவலன் கறுத்து நோக்கி
தரும் கதிர்ச் சீத யாக்கைச்
     சந்திரன் தருதிர் என்ன
முருங்கிய கனலின் மூரி விடத்தினை
     முருக்கும் சீற்றத்து
அருங் கதிர் அருக்கன்தன்னை ஆர்
     அழைத்தீர்கள் என்றான். (கம்ப: மாரீசன் வதைப் படலம்: 3274)

சீதை குறித்தே எப்போதும் சிந்தனை சுழன்றமையால் அவள் உருவெளித் தோற்றம் இராவணனுக்குத் தோன்றியது. நாம் யாரை எப்போதும் எண்ணிக்கொண்டிருக்கின்றோமோ (அன்பின் காரணமாகவோ பகையின் காரணமாகவோ) அவர்களின் உருவம் அவர்கள் இல்லாதபோதும் நம் கண்களுக்குத் தெரிவது ஒருவகை மனப் பிரமைதான்!

தேவகியின் தமையனான கம்சன், கண்ணனை அழித்துவிடவேண்டும் என்ற வெறிச் சிந்தனையிலேயே எப்போதும் இருந்தமையால் கண்ணன் தன்னெதிரில் நிற்பதாகவே எண்ணி அடிக்கடி வாளை வீசி ஏமாறிப் போவானாம்! அவ்வாறே தங்கை சூர்ப்பனகை சீதை குறித்து வருணித்ததிலிருந்து அவளிடம் தன் மனத்தைப் போக்கிவிட்ட இராவணனுக்கு, ”எங்கெங்கு காணினும் சீதையடா!” என்று சொல்லும்படி அவள் மாயத்தோற்றம் எங்கும் புலப்படத் தொடங்கியது!

”ஆகா! இவள் போல்வதோர் உருக்கண்டிலேன்!” என்று தன்னுள் எண்ணி வியந்தவன், தனக்குப் புலப்படுவது சீதையின் தோற்றந்தானா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளச் சூர்ப்பனகையை அழைத்துவரச் செய்தான்.

பொய் நிறைந்த நெஞ்சுடைய சூர்ப்பனகை வந்துசேர்ந்ததும் அவளிடம் நறுநெய் பூசிய கூர்வாளை உடைய இராவணன், ”பெண்ணே! நன்றாக உற்றுப் பார்! அஞ்சன மை பூசிய, ஒளிமிகு கண்களோடு தோகை மயிலென என்முன் வந்துநிற்கும் இவளா நீ குறிப்பிட்ட சீதை?” என்றான் ஆர்வத்தோடு!

பொய்ந் நின்ற நெஞ்சின்
     கொடியாள் புகுந்தாளை நோக்கி
நெய்ந் நின்ற கூர் வாளவன் நேர்
     உற நோக்கு நங்காய்
மைந் நின்ற வாள்கண் மயில் நின்றென
     வந்து என் முன்னர்
இந் நின்றவள் ஆம்கொல்
     இயம்பிய சீதை என்றான். (கம்ப: மாரீசன் வதைப் படலம் – 3311)

இராவணன் காட்டிய இடத்தை உற்றுப் பார்த்தாள் சூர்ப்பனகை. ”என்ன அண்ணா நீங்கள்? செந்தாமரைக் கண்களோடும் கோவைக்கனி போன்ற இதழ்களோடும் சந்தனம் பூசிய தோளோடும் தாழ்ந்த தடக்கைகளோடும் மலரணிந்த மார்போடும் நீலமலைபோல் நிற்கின்றவனைப் பார்த்துச் சீதை என்கிறீர்கள்? இவன் வீர வில்லேந்திய இராமன் அல்லவோ? என்றாள். இராமன்மீது காமப் பித்தேறி நின்ற அவள் கண்களுக்கு உருவெளித் தோற்றமாய் இராமன் தெரிந்தானேயொழியச் சீதை தெரியவில்லை.  

செந் தாமரைக் கண்ணொடும்
     செங்கனி வாயினோடும்,
சந்து ஆர் தடந் தோளொடும்
     தாழ் தடக் கைகளோடும்
அம் தார் அகலத்தொடும்
அஞ்சனக் குன்றம் என்ன
வந்தான் இவன் ஆகும் அவ்
வல் வில் இராமன் என்றாள்.
(கம்ப: மாரீசன் வதைப் படலம் – 3312)

இராவணனும் அவன் தங்கை சூர்ப்பனகையும் சீதைமீதும் இராமன்மீதும் கழிகாமம் கொண்டதனால் அவர்கள் உள்ளத்தில் நிகழும் வேடிக்கை வினோதங்களை இவ்விடத்தில் அழகிய நாடகமாக்கியிருக்கின்றார் கவிவேந்தர் கம்பர். கம்ப நாடகம் என்று இக்காட்சிகளை விளிப்பர்; வியப்பர்  கம்பனில் தோய்ந்த அறிஞர்பெருமக்கள்.

இராவணன் சூர்ப்பனகையின் பதிலால் வியந்து, ”நான் சீதையையே எண்ணி மறுகிக்கொண்டிருப்பதால் அவள் உருவம் எனக்குத் தோன்றுகிறது; ஆனால் உனக்கு இராமனின் உருவம் தோன்றக் காரணம் என்ன?” என்றான் ஐயத்தோடு.

பொய்சொல்வதில் தேர்ந்தவளான சூர்ப்பனகை உடனே, ”அந்த இராமன் எப்போது எனக்குக் கொடுமை இழைத்தானோ அதுமுதல் அவன் நினைவு என்னை நெஞ்சைவிட்டு அகலவில்லை; அதனால்தான் காணும் திசையெங்கும் அந்தக் கார்மேனியான் எனக்குக் காட்சியளிக்கின்றான்” என்றாள் தந்திரமாகத் தன் காமத்தை மறைத்து!

”நீ சொல்வது ஏற்றுக்கொள்ளத் தக்கதே!” என்று மொழிந்த இராவணன், ”சீதையை நினைந்தேங்கும் இந்தத் துன்பத்திலிருந்து நான் விடுதலை அடைவது யாங்ஙனம்?” என்று சூர்ப்பனகையிடம் கேட்க, ”உலகுக்கு ஒப்பற்ற முதல்வனாக விளங்கும் நீ இதற்குப் போய் கலங்குவதா? நீ சென்று பூங்குழலியான சீதையைக் கவர்ந்து வா; அதுவே உன் துன்பம் தீர்வதற்கான வழி!” என்று பிறன்மனையாளைக் கவர்ந்துவரும் அறம்பிறழ்ந்த யோசனையை அண்ணனுக்குரைத்து அவ்விடம்விட்டு அகன்றாள் அரக்கர் குலத்தை அழிக்கவந்த விடமன்ன சூர்ப்பனகை.

ஆம் ஆம் அது அடுக்கும் என்
     ஆக்கையொடு ஆவி நைய
வேமால் வினையேற்கு இனி என்
     விடிவு ஆகும் என்ன
கோமான் உலகுக்கு ஒரு நீ
     குறைகின்றது என்னே
பூ மாண் குழலாள்தனை வவ்வுதி
     போதி என்றாள். (கம்ப: மாரீசன் வதைப் படலம் – 3316)

சீதை விஷயத்தில் தான் அடுத்து என்ன செய்யலாம் என்று தன் அமைச்சர்களையும் அழைத்து ஆலோசனை நடத்தினான் இராவணன். எனினும் தெளிவான முடிவு எதனையும் அவ் ஆலோசனை அவனுக்கு அளிக்கவில்லை என்கிறார் கம்பர். அப்படியாயின், சீதையைக் கவர்ந்துவர எண்ணும் அவன் விருப்பத்துக்கு ஆதரவாகச் சிலரும் எதிராகச் சிலரும் கருத்துக்களைக் கூறியிருக்க வேண்டும் என்று நாம் ஊகிக்க முடிகின்றது.

ஆனால், யார் என்ன ஆலோசனை சொன்னாலும் இறுதியில் தன் விருப்பப்படியே நடந்துகொள்ளும் இயல்புடைய இராவணன், சீதையைக் கவர்வதற்குத் தன் மாமன் மாரீசன் உதவியை நாடி அவன் இருப்பிடம் வந்துசேர்ந்தான்.

இராவணனை வரவேற்ற மாரீசன், அவன் தன்னை நாடிவந்த காரணமென்ன என்று வினவ, ”உன் மருகிக்கு (மருமகள்) தீங்கிழைத்து, உன் மருகர்களான கரன் தூடணன் திரிசிரன் ஆகியோரையும் அழித்துவிட்ட மானுடர்களை நான் பழிவாங்க விரும்புகின்றேன்; ஆதலால் அவர்களோடிருக்கும் பெண்ணைக் கவர்ந்துசெல்ல முடிவெடுத்திருக்கின்றேன்; அதற்கு உன் துணை தேவை” என்றான் இராவணன்.

அதைக் கேட்டுத் துணுக்குற்றான் மாரீசன். அவன் இராம இலக்குவர்களின் வில்லாற்றலை நன்கறிந்தவன். தன்னுடைய தாய் தாடகையையும் தம்பி சுபாகுவையும் ஏற்கனவே இராம பாணத்துக்குப் பலிகொடுத்தவன். எனவே இராவணனை இந்த அடாதசெயலில் ஈடுபடவிடாது தடுக்கவேண்டும்  என்றெண்ணி, ”ஐயா! அன்பு பூண்டாரது நாட்டைக் கைப்பற்றிக் கொண்டவர்களும், நீதிநெறிக்குப் பொருந்தாத வகையில் குடிமக்களை வருத்தி வரிப்பொருளைப் பெற்றவர்களும், பிறருக்கு உரிமையாய் அவர் இல்லத்தில் வாழும் மனைவியை வயப்படுத்திக் கொண்டவர்களுமான இவர்களை அறக்கடவுள் அழித்துவிடுவான். இக்கொடுமைகளைச் செய்தவர் எவர் தப்பிப் பிழைத்துள்ளார்?  எனவே இவ்வெண்ணத்தைக் கைவிடுக! என்றான்.

நாரம் கொண்டார் நாடு கவர்ந்தார்
     நடை அல்லா
வாரம் கொண்டார் மற்று
     ஒருவற்காய் மனைவாழும்
தாரம் கொண்டார் என்ற
     இவர்தம்மைத் தருமம்தான்
ஈரும் கண்டாய் கண்டகர்
     உய்ந்தார் எவர்ஐயா. (கம்ப: மாரீசன் வதைப் படலம் – 3344)

இதனைக் கேட்டு முனிந்த இராவணன், ”நமக்கு அம் மானிடர்களால் நேர்ந்த தீங்கினை நீ நினைந்திலை; அவர்களுக்குச் சாதகமாய்ப் பேசிக்கொண்டிருக்கின்றாய்; எனினும் உன் பிழை பொறுத்தேன்!” என்றான்.

அப்போது மாரீசன், ”இராவணா! நான் உன் மாமன்; உன்னைவிட வயதில் மூத்தவன் என்ற முறையில் உனக்குச் சொல்லுகிறேன்! தயைகூர்ந்து நீ செய்யக் கருதியிருக்கும் தீச்செயலைக் கைவிட்டுவிடு! அது நிருதர் குலத்தையே அழித்துவிடும்!” என்றான்.

மாரீசனின் இதோபதேசம் இராவணனின் கோபத்தைக் கிளறிற்றேயன்றி அவனிடம் எவ்வித நல்ல மனமாற்றத்தையும் உண்டாக்கவில்லை. ’விநாச காலே விபரீத புத்தி’ என்பதை மெய்ப்பிப்பதாகவே இருந்தது அவன் செய்கை.

[தொடரும்]

*****

கட்டுரைக்குத் துணைசெய்தவை:

  1. கம்பராமாயணம் – கோவை கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.
  2. கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.
  3. கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.
  4. கம்பனில் மக்கள் குரல் – பேரா. ந. சுப்புரெட்டியார், வானதி பதிப்பகம், சென்னை – 17

 

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க