இந்த வார வல்லமையாளர்
செ. இரா.செல்வக்குமார்
இந்தக் கிழமையின் வல்லமையாளர் உருசியத் தமிழறிஞர் பேராசிரியர் அலெக்சாந்தர் துபியன்சுக்கி (Алекса́ндр Миха́йлович Дубя́нский, Alexander Dubyansky) அவர்கள்.
. இவருடைய 75 ஆவது அகவை ஏப்பிரல் 27 அன்று நிறைவுபெற்றதை ஒட்டி உலக அறிஞர்கள் இவரைப் பெருமைப்படுத்தும்முகமாக, பற்பல ஆய்வுக்கட்டுரைகள் நிறைந்த, தமிழ் தந்த பரிசு என்னும் தலைப்பில் 558 பக்க பாராட்டுமலர் (Festschrift) ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். இதில் தமிழில் கட்டுரைகள் ஏதுமில்லை எனினும், பெரும்பாலானவை தமிழைப்பற்றி ஆங்கிலத்திலும் உருசிய மொழியிலும் உலக அறிஞர்கள் கட்டுரைகள் எழுதியுள்ளார்கள். பேராசிரியர் சியார்ச்சு ஆர்ட்டு (George Hart), முனைவர் ஏவா வில்டன் (Eva Wilden), முனைவர் இழான் இலூக்கு செவியார் (Jean-Luc Chevellard) போன்ற பலர் கட்டுரைகள் எழுதியுள்ளனர்.
பேராசிரியர் அலெக்சாந்தர் துபியன்சுக்கி அவர்களைப் பெருமைப்படுத்தும்முகமாக உலக அறிஞர்கள் எழுதிய கட்டுரைகள் அடங்கிய 558 பக்கப் பாராட்டுமலர் (Festschrift)படம்: இழான் இலூக்கு செவியார் (Jean-Luc Chevillard), சி-தமிழ் (CTamil) குழுமத்தில் அறிவிப்பு, மே 17, 2016)
உலகிலேயே ஆகப்பெரிய நாடு உருசியா (Rassia). இந்த நாட்டில் தமிழ்க்கல்விக்கும் தமிழ்மொழிப் பதிப்புகளுக்கும் நெடிய வரலாறு உண்டு. குறைந்தது 50-60 ஆண்டுகள் வரலாறு உண்டு. முனைவர் மிகெயில் செர்கெயெவிச்சு ஆண்டிரனோவ் (Michail Sergeyevich Andronov Михаил Сергеевич Андронов) அவர்கள் 1960-களில் தமிழ் ஆய்வுக்கும் திராவிடமொழிகள் ஆய்வுக்கும் புகழ்பெற்றார். பலநூல்களும் ஆய்வுக்கட்டுரைகளும் எழுதியுள்ளார். அவரைத்தொடர்ந்து உருசியாவில் தமிழ்மொழியில் நல்ல புலமை பெற்றவர்களில் மாசுக்கோவைச் சேர்ந்த பேராசிரியர் அலெக்சாந்தர் துபியன்சுக்கி குறிப்பிடத்தக்கவர். இவர் தொல்காப்பியத்தைப் பற்றியும் சிலப்பதிகாரத்தைப்பற்றியும் உருசிய மொழியில் கட்டுரைகள் எழுதியுள்ளார் [1]. ஏறத்தாழ 110 ஆய்வுக்கட்டுரைகள் எழுதியுள்ளார் [2] இவர் எழுதியவற்றில் சில நூல்களையும் நெடிய ஆய்வுக்குறுநூல்களையும் (Monographs) குறிப்பிடல் பொருந்தும்:
ஆய்வுக்குறுநூல்கள்:
ஆய்வுக்கட்டுரைகள்:
பேராசிரியர் அலெக்சாந்தர் துபியன்சுக்கியும் எழுத்தாளர் செயகாந்தனும்.- சென்னையில். படம் கே. பிச்சுமணி, இந்து ஆங்கில நாளிதழ், சூன் 22, 2010 (Photo K. Pichumani, The Hindu, June 22, 2010) [1]
பேராசிரியர் துபியன்சுக்கி ஏப்பிரல் 27, 1941 ஆம் ஆண்டு மாசுக்கோவில் பிறந்தார். இவர் மாசுக்கோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருக்கின்றார். இவர் நெதர்லாந்திலும் ஆய்வு செய்திருக்கின்றார். இவர் சரளமாகத் தமிழ்பேசவல்லவர். இவர் இளம் உருசிய தமிழறிஞர்களையும் ஆய்வாளர்களையும் உருவாக்கிவருகின்றார். இவருடைய பணியைப் போற்றி இவருக்குத் தென் ஆசிய கல்விக்கான குமுகத்தின் (The South Asian Studies Association) தலைசிறந்த கல்வியாளர் விருது(Exemplar Academic Awards) 2013 இல் வழங்கப்பெற்றது [3]. அப்பொழுது, இவர் எழுதிய நூல்களில் ஆங்கிலத்திலும் கிடைக்கும் கீழ்க்காணும் நூல்களைச் சுட்டியிருந்தனர்.
தமிழ்வழங்கும் நிலங்களைத் தாண்டி, தமிழ்பால் ஆர்வம்கொண்டு, தமிழறிஞராக எழுந்து உருசிய நாட்டிலிருந்து தமிழுக்கு அரும்பணியாற்றும் 75 அகவை நிரம்பிய பேராசிரியர் அலெக்சாந்தர் துபியன்சுக்கி அவர்களைப் பாராட்டி வாழ்த்தி அவரை இந்தக் கிழமையின் வல்லமையாளராக அறிவிக்கின்றோம்.
அடிக்குறிப்புகள்
[1] இந்து ஆங்கில நாளிதழ, சூன் 22, 2010 (The Hindu, June 22, 2010, http://www.thehindu.com/news/cities/chennai/tamil-has-gravity-of-expression-not-found-in-any-language/article477828.ece )
[2] உருசிய மொழி விக்கிப்பீடியா (https://ru.wikipedia.org/wiki/Дубянский,_Александр_Михайлович அல்லது http://bit.ly/1TxA9e4 )
[3] http://sasaonline.net/awards/
1998ஆம் ஆண்டு சென்னையில் நடந்த உலகளாவிய முருகன் மாநாட்டில் பேரா.அலெக்சாந்தர் துபியான்ஸ்கி அவர்களைச் சந்தித்து உரையாடியுள்ளேன். தமிழ்ச் செவ்விலக்கியங்களின் பெருமைகளை உலக சமூகத்தின் பார்வைக்கு எடுத்துச் சென்றதில் இவருக்குக் குறிப்பிடத்தக்க பங்கு உண்டு. 75ஆம் பிறந்த நாள் காணும் வல்லமையாளர் அலெக்சாந்தர் துபியான்ஸ்கி அவர்களைப் பாராட்டி, இவரது பணி சிறக்க வாழ்த்துகிறேன்.
பேராசிரியர் அலெக்சாந்தர் துபியன்சுக்கியவர்களுக்கும், செல்வாவுக்கும் என் வாழ்த்துக்கள்.முனைவ்ர் ஏவா வில்டனை அண்மையில் சந்திக்கம்போது, இந்த நூலை வாங்கி படிப்பேன். நன்றி, வணக்கம்.
இன்னம்பூரான்