மீ.விசுவநாதன்

நேரம் போவது தெரிகிறது – அது
நிற்பதில்லை ஏனெனத் தெரியவில்லை?
பாரம் உடலெனத் தெரிகிறது – தினம்
பசிக்கிறது ஏனெனத் தெரியவில்லை?

மானம் பெரிதெனத் தெரிகிறது – மனம்
மாசுதேடி அலைவதேன் தெரியவில்லை?
கானம் சுகமெனத் தெரிகிறது – அதில்
கரைகின்ற முறையேன் தெரியவில்லை ?

தாழ்வும் உயர்வுமே தெரிகிறது – எனில்
தரமில்லா பழக்கமேன் தெரிவதில்லை?
வாழ்வும் பண்புமே தெரிகிறது – அதை
வகையின்றிச் செய்வதேன் தெரியவில்லை?

பேரும் புகழுமே தெரிகிறது – அதைப்
பிடித்திடநற் சேவையேன் தெரியவில்லை?
நீரும் நெருப்புமாய்த் தெரிகிறது -அந்த
நிலைதான்”நான்” என்பதேன் தெரியவில்லை?

(வாய்பாடு: மா, விளம், காய், காய், விளம், காய்)
(23.05.2016)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *