-மேகலா இராமமூர்த்தி

நெடிது வளர்ந்துநிற்கும் தென்னை மரங்கள், ”நிமிர்ந்து பாருங்கள் எம்மை” என்று நம்மை அழைப்பதுபோலிருக்கும் இந்தக் கவின்மிகு காட்சியைப் படம்பிடித்து வந்திருப்பவர் திரு. எம். மோகன். இப்படத்தை வல்லமை பிளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்துப் படக்கவிதைப் போட்டிக்கு அளித்திருப்பவர் திருமிகு. ராமலக்ஷ்மி. இவர்கள் இருவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

”பெற்றபிள்ளை கைவிட்டாலும் தென்னம்பிள்ளை கைவிடாது” என்பது கிராமங்களில் வாழும் மக்களின் நீங்காத நம்பிக்கை!

மகாகவி பாரதிகூடத் தம் பாட்டில் பராசக்தியிடம், காணிநிலமும், கேணியும், அதனருகே பத்துப் பன்னிரண்டு தென்னை மரங்களும் கேட்டார் என்பதிலிருந்து தென்னையின் அருமைதன்னை நன்குணரமுடிகின்றது.

கண்ணைக் கவரும் தென்னை மரங்களைத் தம்  எண்ணச் சரங்களால் அலங்கரிக்க வருகின்றார்கள் புலமைமிகு கவிஞர் பெருமக்கள்! அவர்களை வாழ்த்தி வரவேற்போம்!

*****

”பச்சை வயல்களின் ஓரத்திலே பாங்காய் நிற்கும் தென்னைகளை அழிக்காதே; இயற்கை அழகினில் இன்பம்கொள்!” என்று அறிவுறுத்துகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

அழிக்காதே அழகை…

பச்சை வயல்கள் ஒரத்தில்
பார்க்க அழகாய்த் தென்னைகள்
உச்சி மரத்தில் காய்களுடன்
உயர்ந்தே நிற்கும் காண்பாயே,
துச்ச மாக எண்ணாதே
துணைதான் இயற்கை நமக்கேதான்,
இச்சை கொண்டே அழிக்காதே
இன்பம் கொள்வாய் அழகினிலே…!

*****

”தன்னலமற்ற எண்ணம் உன்னுடையது; உன்தலை விரித்துக் கிடந்தாலும் அடுத்தவன் தலைக்கு எண்ணெய் தருகிறாய்! உன் நா வறண்டு கிடக்கையில் அடுத்தவன் நாவின் தாகம் தீர்க்கிறாய்” என்று தென்னையின் நல்லியல்புகளைப் பாட்டில் பட்டியலிட்டுள்ள முனைவர் செ.நீதி, தம்முடைய மற்றொரு பாட்டில், ”நீ என்னை மிதித்த போதும்  நான் உன்னை உயரத்தில் தானே வைத்திருந்தேன்?! மிதிவண்டியாகிய என்னைச் சாதாரணமாக நினைத்துவிடாதே! வாகன மாசுகளிலிருந்து இயற்கையைக் காக்கும் ஆத்மா இல்லாத ஆத்மா நான்!” என்று தென்னைகளின் அருகில் தனித்து நின்றிருக்கும் மிதிவண்டியையும் மதியூகியாய்ப் பேச வைத்திருக்கின்றார்.

தென்னை

வரிசையாய்நின்று யார் உயரம்? என்று
வானிடம்கேட்டு நிற்கின்ற தென்னையே!
உங்கள் உயரத்தை அளவிட முடியாமல்
வானம் வியந்து முகம் வெளுத்து நிற்கிறது!
கொடுப்பதில் உனக்கு நிகர் உலகில் இல்லை
உயரத்தில் உனக்குச் சமம் எதுவுமில்லை!
வேலை இல்லாதவனுக்கு உன் ஓலை வேலை தருகிறது
குடில் இல்லாதவனுக்குக் குடிசைத் தருகிறது
தன்னலமற்ற எண்ணம் உன்னுடையது
உன்தலை விரித்துக் கிடந்தாலும் பரவாயில்லையென்று
அடுத்தவன் தலைக்கு எண்ணெய் தருகிறாய்!
உன் நா வறண்டு கிடக்கையில்
அடுத்தவன் நாவின் தாகம் தீர்க்கிறாய்
உன் உடலைக் காயப்படுத்தினாலும்
சுவையான காயைத் தருகிறாய்
உன் ஓடும் ஓசைதரும் கருவியாய்ப் பேசுகிறது
உன் ஏடும் கைவினைப் பொருளாய் அழகைப் பறைசாற்றுகிறது!
தலையாட்டுப் பொம்மைக்கும்
தலையாட்டக் கற்றுக் கொடுத்ததும் நீதானோ?
நீ தருவ தெல்லாம் நன்மை
இது உலகம் அறிந்த உண்மை!
கஜா புயல்உன் தலையைப் பிடித்துப் பிய்த்துப் போட்டபோது
வலியைத் தாங்கித் தாய்போல் நின்றாய்!
உன் சேயெல்லாம் வீழ்ந்த போது
தென்னீர் தந்தவனுக்காகக் கண்ணீர்விட்ட மக்கள் எத்தனையோ பேர்!
ஏழைகளின் வாழ்வாதாரம் நீ!
ஓங்கி நில்! உலகத்தைத் தாங்கி நில்!
பல்லாண்டு பல்லாண்டு பலகோடி யாண்டு!

*****

மிதிவண்டி!

ஏய் நண்பனே! நன்றி மறந்தாயே நவீனப் பயணத்தில் ஓடி ஓடி -ஓடிய
என் பயணத்தை நிறுத்தி விட்டாயே!
சாலை ஓரத்தில்அனாதையாய் விட்டு விட்டாயே!
விட்டுச் சென்ற கரங்கள் என்னை அழைத்துச் செல்லுமென்று
முதியோர் இல்லத்து முதியவனாய் ஏக்கத்தோடு
காத்துக்கொண்டிருக்கிறேன் கள்வன்கூட என்னை களவாட மறுக்கிறானே!
அதோ காண்! தென்னையெல்லாம் என்னைப்பற்றி
ஏதோ சலசலத்துப் பரிகாசம் செய்கிறது அதனால்தான்
திரும்பி நிற்கிறேன் முகத்தைக்காட்ட வெட்கப்பட்டு!
நீ என்னை மிதித்த போதும்- நான்
உன்னை உயரத்தில் தானே வைத்திருந்தேன்!
பழமையை விட்டுப் புதுமையில்
பாரதி கண்ட செந்தமிழ்நாட்டைத் தொலைத்து விட்டாயே!
நீ காணும் பாரதத்தை இதோ பாரய்யா!
நஞ்சை நிலமெல்லாம் நஞ்சாகிப் போனதய்யா
புஞ்சை நிலமெல்லாம் புண்ணாகிப் போனதய்யா
சாலையோர மரங்களெல்லாம் காணாமல் போனதய்யா
ஒற்றையடிப் பாதையெல்லாம் மறைந்து போனதய்யா
ஆறுகள் எல்லாம் கழிவாகிப் போனதய்யா
வாழ்க்கை தடம் மாறிப் போனதய்யா
தூய்மையான காற்றில் இன்று துர்நாற்றம் வீசுதய்யா
நாகரிகம் என்ற சொல்லும் துகிலுரிக்கப் பட்டதய்யா
மிதிவண்டியாகிய என்னைச் சாதரணமாக நினைத்துவிடாதே
வாகன மாசுகளிலிருந்து இயற்கையைக் காக்கும்
ஆத்மா இல்லாத ஆத்மா நான்!

*****

”ஒருகாலத்தில் மிதிவண்டி மட்டுமே இருந்த இல்லத்தில் ஆரோக்கியம் மட்டுமே இருந்தது! இன்றோ வாகனங்களின் மிகுதிபோல நோய்களும் மிகுந்துவிட்டன” என்று நியாயமாய்க் கவலையுறும் இயற்கை விவசாயியைக் காண்கின்றோம் திரு. சீ. காந்திமதிநாதனின் கவிதையில்.

நான் ஒரு இயற்கை விவசாயி அப்பா
காலநேரத்தைச் சரியாகக் கணக்கிடும் பட்டதாரி விவசாயி அப்பா!

எதிர்காலத்தில் விவசாயம்தான் அதிக வருமானம்
பெற்றுத்தரும் தொழிலாக இருக்கும் அப்பா!

இயற்கையோடு இயைந்த வாழ்க்கை
எனது வாழ்க்கை முறை அப்பா!

மிதிவண்டியில் வந்து விவசாயம் காலை மாலை
விளைச்சல் நிலம்தான் என் உடற்பயிற்சிக் கூடமப்பா!

ஏன் செய்கின்றோம்
எதற்குச் செய்கின்றோம்
எதனால் செய்கின்றோம்
என்ற சிந்தனை மறந்த நிலையில் தான்
செய்வினை செய்பவர்களைப் பார்த்துச் சில கேள்விகள்…

நடையை மறந்து எரிபொருள் வண்டியில் பயணிப்பதால்
இருமடங்கு செலவை அதிகரிக்கிறீர்கள்!

ஒன்று எரிபொருளுக்கு…
மற்றொன்று வைத்தியத்திற்கு!

ஏன் ஒரு முப்பது நிமிடங்கள் முன்னதாக
மிதிவண்டியில் செல்ல முடியாதா?
பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த முடியாதா?

ஒருகாலத்தில் மிதிவண்டி மட்டுமே இருந்த இல்லத்தில்
ஆரோக்கியம் மட்டுமே இருந்தது!

இன்றோ
இருசக்கர வாகனங்கள் இரண்டு!
நான்கு சக்கர வாகனங்கள் ஒன்று!
நோய்களின் எண்ணிக்கையும் ஒன்றுக்கு இரண்டாக!!

சிந்திப்போம்…
எது தேவையோ
அதைத் தேடுவோம்
அதை நாடுவோம்
மற்றதை விடுவோம்

இலவசமாக
ஏரோபிளேனே கிடைத்தாலும்
தேவையில்லை எனில்
வாழ்க்கை பிளானில்
இல்லை யென்று
பிளாக் செய்து விடுவோம்!

*****

”பசுமை வரப்பினிலே உடற்பயிற்சிக்கு ஏற்றதென நினைத்து வந்தவரின் மிதிவண்டி இது” என்று அதனை அறிமுகப்படுத்தும் திருமிகு. சுதா மாதவன், ”வாருங்கள்! மிதிவண்டியில் மனமகிழ்ந்து மிதந்துசெல்வோம்” என்று நமையழைக்கிறார்.

பசுமை வரப்பினிலே
வரிசையாய் நிற்கும் தென்னை மரத்தருகே
உடற்பயிற்சிக்கு ஏற்றதென
நினைத்தவருடைய மிதிவண்டி

அழகிய சாலை நெடும் பயணம்
ஆள் அரவமில்லாமல் வெறிச்சோட
இரு சக்கரங்களை மிதிக்கும் போது
மனம் பூங்காற்றில் அமைதியுறுமோ?

எரிபொருள் விலையேற்றம்
பொதுப் பயண மார்க்கங்கள்
இயங்காத காலமிது என்பதனால்
மிதிவண்டிப் பயணத்திலே
மிதந்து செல்வோம் மனமகிழ்ந்து!

*****

”சூரியனை மறைத்துச் சற்றே தாகம் தீர்த்திட வானுயர்ந்து வளர்ந்த தென்னை நிழலிங்கே, வளரும் புஞ்சையை மட்டுமல்லாது மறந்து போன விவசாயியையும் விவசாயத்தையும் தளராது காத்து நின்றதே!” என்று வியக்கின்றார் திரு. ராஜ்மோகன் கிருஷ்ணராஜ்.

தொலை தூரப் பயணம்
தொய்வில்லாமல் செல்ல
சாலையோரம் எங்கும்
தென்னை மரங்களை நட்டோம்!
கார்மேகம் வந்து
மாதம் மும்மாரிப் பொழிந்து
வளம் எல்லாம் பெறுக
வசதிகள் வந்து
காரில் பயணம் செய்வதாய்
வரும் தினம் கனவு!
கரங்களாய் நீண்ட கதிர்களால்
சீதையைச் சிறைபிடித்த ராவணனாய்
எங்கள் வாழ்வைச்
சிறைபிடித்த சூரியன்!
வானரப் படை சூழச்
சீதையை மீட்க வந்த ராமனாய்
விண்மீன்கள் படை சூழ
இரவில் வந்த வெண்ணிலவு
இதயத்தை குளிரவைத்ததே!
மெல்ல நகர்ந்திடும் நாடு
முன்னேற்றப் பாதையில்
பாதைகள் மாறியது சாலைகளாய்
இன்னும் மாறாத
எங்கள் வண்டிச்சக்கரம்
என்றும் துணையாய் வரும்
மிதிவண்டிச் சக்கரம்
வானம் பார்த்த பூமியாய்
வானம் பார்த்து
மழை வருமோ என எதிர்பார்த்து
வாழ்ந்திடும் எங்கள்
வாழ்க்கை சக்கரம் மாறிடுமோ?
ஓடிடும் மேகம்
சூரியனை மறைத்து
சற்றே தாகம் தீர்த்திட
வானுயர்ந்து வளர்ந்த
தென்னை நிழலிங்கே
வளரும் புஞ்சையைக்
காத்து நின்றதே
மறந்து போன
விவசாயியையும்
விவசாயத்தையும்
அது காத்து நின்றதே!

*****

தென்னையையும் மிதிவண்டியையும் வைத்து அருமையான கருத்துக்களைக் கவிமுத்துக்களாய்க் கோத்துத் தந்திருக்கும் பாவலர்களின் கவியாற்றலுக்கு என் வந்தனங்களையும் பாராட்டுக்களையும் சாற்றி மகிழ்கின்றேன்!

அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவாகியிருப்பது…

மிதிவண்டியும் தென்னையும்!

ஆட்டும் திசையில் ஆடும்
காட்டும் திசையில் ஏகும்
நேர்பாதையில் நிமிர்ந்து செல்லும்
மிதிவண்டியும் தென்னையைப் போலே…

முதலில் கீழே சறுக்கும்
மிதித்து ஏறக் கீழ் தள்ளும்
பழகப்பழகக் கைக்கொள்ளும்
சீராய் ஏற்றம் கொள்ளும்…

க(ள்)ல்(ளு)லும் முள்ளும் கவனம்
நேர்பாதையில் செல்ல முன்னேற்றம்
வீண் ஆட்டம் போடாது வாழ – வெற்றிக்
கனியும் கையில் கிட்டும்!

”முதலில் கீழே சறுக்கும்; மிதித்து ஏறக் கீழ் தள்ளும்; க(ள்)ல்(ளு)லும் முள்ளும் கவனம்; நேர்பாதையில் செல்ல முன்னேற்றம்” என்று மிதிவண்டிக்கும் தென்னைக்கும் பொருந்துவதாய்த் தம் கவிதையில் இரட்டுற மொழிந்துள்ள (சிலேடை) திரு. வேங்கட ஸ்ரீநிவாசனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.