அன்பிற்கினிய நண்பர்களே!

கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

ராமலக்ஷ்மி எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃபிளிக்கர் குழுமத்திலிருந்து நம் ஆசிரியர் குழுவினர் தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளோம். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (20.09.2020) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

பதிவாசிரியரைப் பற்றி

5 thoughts on “படக்கவிதைப் போட்டி – 276

 1. மாறுவானா…

  குஞ்சுகளுக்கு இரைதேடிய
  பறவை
  கூட்டை நாடி வந்தது..

  நெடுந்தூரம் பறந்த
  களைப்பிலும் விட்டது
  நிம்மதிப் பெருமூச்சு-
  கூடிருக்கும்
  மரம் இருக்கிறது
  மனிதனால் வெட்டப்படாமல்..

  முன்பு
  கூட்டோடு குஞ்சுகளோடு
  மரம் வெட்டப்பட்டது
  மறக்கவில்லை பறவைக்கு,
  மனம் குமுறுகிறது
  மனிதனை நினைத்து..

  மனிதன் ஏன் இப்படி
  மாறிவிட்டான் இப்போது-
  தன்னினம் அழிக்கிறான்,
  தாயாய் உதவும்
  இயற்கையை அழித்து
  எங்களை வாட்டுவதுடன்
  தனக்கும்
  தேடுகிறான் கேடு..

  மாறுவானா மனிதன்…!

  செண்பக ஜெகதீசன்…

 2. பட்ட மரமும் பறவையும்

  விட்டு விட்ட உறவுகளால்
  விரக்திதனை மிக அடைந்து
  எட்ட எட்ட பறந்து
  எங்கெல்லாமோ திரிந்து
  சுட்டுப் பொசுக்கும் வெயிலால்
  சோர்வடைந்த பறவையே!

  உட்கார்ந்து ஓய்வெடுக்க
  ஓரிடம் கிடைக்காதா என்று
  கஷ்டம் கண்டு மனமிரங்கும்
  கடவுளிடம் முறையிட்டாயோ நீ!

  பட்ட மரக் கிளையொன்றை உன் பார்வையிலே பட வைத்து
  கஷ்டமதைத் தீர்த்து வைத்த
  கடவுளுக்கு நீ நன்றி சொல்!

  எந்த கவலையானாலும்
  இறைவனிடம் சரணடைந்தால்
  வந்த கவலை தீரும்
  வழி ஒன்று பிறக்குமென்று
  இந்த படம் விளக்கும்
  விந்தை கண்டு வியக்கின்றேன்!

  கோ சிவகுமார்
  மண்ணிவாக்கம், சென்னை.

 3. அந்நிய தேசத்து பறவை நான்
  இந்திய தேசத்தில் தான்
  எத்தனை எத்தனை விதமாக
  வேறுபாடுகள் இருக்கின்றன

  அத்தனை வேறுபாடுகள்
  இத்துணைக் கண்டத்தில்
  இந்தியன் ஒற்றை சொல்லில்
  இமயம் முதல் குமரி வரை
  கட்டுண்டு இருக்கும் அழகு
  உலகில் எங்கும் காண முடியாது

  சுதந்திரமான பறவை நான்
  அதேபோல்
  சுதந்திரமான
  மக்கள் இந்திய மக்கள்

  கருத்து சுதந்திரம்
  பத்திரிகை சுதந்திரம்
  தனிமனித சுதந்திரம்
  பேச்சு சுதந்திரம்
  எழுத்து சுதந்திரம்
  மாபெரும் ஜனநாயக நாடு

  இந்தியனின் அறிவு
  இதனாலே செறிவு

  சிந்தனைக்கு
  எழுத்தாற்றழுக்கு

  இந்த மண்ணில் தான்
  சுதந்திரம்
  பறவையாகிய
  என்னைப் போல

  சுதந்திர இந்தியா காண
  எத்தனை எத்தனை
  உயிர் தியாகங்கள்

  பெருமை படு
  இந்த மண்ணில்
  பிறந்ததற்கு

  பெருமை படு
  இந்த மண்ணில்
  வாழ்வதற்கு

  பெருமை படு
  இந்த மண்ணில்
  மீண்டும் பிறப்பதற்கு

  சுதந்திரத்தின் மகிமை
  சுதந்திரத்தின் அருமை
  குடிமக்களுக்கு
  தராது
  வல்லரசு என்றால்
  அங்கே எங்கே
  தனிமனித சிந்தனை
  தலைசிறந்து விளங்கும்??

  உலகிலேயே
  சுதந்திரமாக
  பறவை போல்
  வாழ்பவன்
  கருத்து சுதந்திரத்தில்
  இந்தியர்களே

  சீ.காந்திமதிநாதன்
  கோவில்பட்டி

 4. நல்ல பண்பு

  நாடு விட்டு நாடு வந்து
  கூடு கட்டும் பறவையே!
  கூடு கட்ட இடம் தந்து
  குஞ்சுகளையும் காத்த மரம்
  காடு கண்ட காட்டுத்தீயால்
  கட்டையான சேதி கேட்டு
  நாடு விட்டு நாடு வந்து
  நலம் விசாரிக்க வருகின்றாயோ
  நன்றிதனை மறவாமல்!
  நாட்டில் வாழும் மனிதரும்
  காட்டத் தயங்கும் பண்பினைக்
  கூட்டில் வாழும் பறவைக்கு
  கொடுத்தது அந்த இறைவனோ!

  கோ சிவகுமார்
  மண்ணிவாக்கம், சென்னை

 5. செயல்வீரர்

  உறுமீனைக் கண்டறிந்து
  இலக்கு நோக்கிப் பாய்ந்து
  வான் நோக்கி மீண்டெழுந்து
  இரை தேடும் பறவையென
  காலமதைத் தானறிந்து
  கனியும்வகைத் தெளிந்து
  காரியங்கள் செய்திடுவார்
  திறன் வாய்ந்தோர் செயல்வீரர்!

  கொட்டும் மழைப் பொய்ததென
  வெட்டியாய் நேரம் கடத்திடாமல்
  கால்வாய் வெட்டி கழனி திருத்தி
  நிலம் கொழிக்க வழி செய்வார்
  பட்டினியால் வாடினாலும்
  விதைநெல்லைச் சேர்த்துவைத்து
  வருங்காலச் சந்ததிக்கு
  வாழ வழிச் செய்த்திடுவார்!

  எதிர்காலம் கனவென்று
  எதிர்வாதம் செய்துவிட்டு
  நிகழ்காலம் வீணாக்கும் – வெற்று
  வேதாந்தம் விட்டுவிட்டு
  வருங்கால வெற்றிக்குத்
  திட்டங்கள் தீட்டிவைத்து
  முயலாமை தனை விழுங்கி
  முன்னேற்றப் பாதையிலே
  சிறகடித்துப் பறந்திடுவர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *