-மேகலா இராமமூர்த்தி

திருமிகு. நித்தி ஆனந்த் கலைநுட்பத்தோடு எடுத்துவந்திருக்கும் இந்தக் கருப்புவெள்ளைப் படத்தை வல்லமை பிளிக்கர் குழுமத்திலிருந்து தேர்வுசெய்து வழங்கியுள்ளார் திருமிகு. ராமலக்ஷ்மி. இவ்விருவரும் நம் நன்றிக்கு உரியவர்கள்!

’உப்பிட்டவரை உள்ளளவும் நினை’ என்பது பழமொழி. அந்த வகையில் வியர்வை சிந்தி உப்பை உருவாக்கி நம் உணவுக்குச் சுவைகூட்டும் தொழிலாளர்கள் என்றும் நம் நன்றிக்கும் நேயத்துக்கும் உரியவர்கள்.

இனி, இப்படத்துக்குப் பொருத்தமான கவிதைகளோடு காத்திருக்கும் கவிஞர்களை அன்புபாராட்டி அழைப்போம்!

*****

”வான்மழை கண்டால் கோனும் குடிகளும் மகிழ்வர்; ஆனால் உப்பளத் தொழிலாளர்களோ மழைநீர்ப்பட்டு உப்புக் கரைந்தால் உழைப்பும் பிழைப்பும் கரைந்துபோகுமே என்று பதைப்பர்!” என்ற உண்மையை விண்டுரைக்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

வேண்டாம் அங்கு…

வானில் மேகம் திரண்டுவந்து
வையம் நனைய மழைபெய்தால்
கோனி லிருந்து குடிகள்வரை
கும்பிட் டேத்துவர் மகிழ்ச்சியிலே,
தானியம் போலிலை உப்பதுவே
தண்ணீர் பட்டால் கரைந்திடுமே,
மேனி யுழைப்போர் உப்பளத்தில்
மேகம் கண்டால் பதைப்பாரே…!

*****

”குழந்தைகளை நாம் தூக்குகிறோம் உப்புமூட்டை; இறுதியில் நம்மீது அடுக்கப்படுவதோ மணல்மூட்டை” என்று வாழ்க்கையின் சுமைகளை விளக்குகின்றார் திருமிகு. சுதா மாதவன்.

இருவர் தூக்கியும் சுமையின் பாரம்
குறையவில்லை
வாழ்க்கையின் பாரமும் அதுதானே

வானத்தைத் தொட்டு விடுமோ பாரம்
வாய்பிளந்து நோக்கின்றோம் கூடையைத் தான்

வானத்தைத் தொட்டு விடுமோ பாரம்
வாய்பிளந்து நோக்கின்றோம் கூடையைத் தான்

எத்தனையெத்தனை இன்னல்கள்
அத்தனையத்தனை பாரங்கள் பிறகு
வந்தனவந்தன இன்பங்கள்
வாழ்வின் நிதசுகத் தருணங்கள்

மழலைகளைத் தூக்கினோம் உப்புமூட்டை
உழைக்கும் வர்க்கமெனப் பலமூட்டை
புடைக்கும் நரம்பதில் உடற்கூட்டை
இறுதியில் நம்மீது அடுக்கிடுவர் மணல்மூட்டை

மொத்தத்தில் பாரம் சுமந்திட மனிதனன்றோ
வாழ்க்கையின் பாடமும் அதுவன்றோ!

*****

”ஆழக்கடலில் விளைந்து ஆதவன் அருளால் உருக்கொண்டு மானுடனின் பசிதீரத் தான் கரையும்” என்று உப்புக்கும் மேகத்துக்கும் உள்ள ஒப்புமையை இனிதாய் இரட்டுற மொழிந்துள்ளார் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன்.

உப்பும் மேகமும்

ஆழக் கடலில் தான் விளையும்
ஆதவன் அருளால் உருக் கொள்ளும்
கொடுவெப்பம் ஏறுகையில் உயிர் தரிக்கும்
கொட்டும் மழையில் கரைந்து போகும்
மானுடனின் பசிதீரத் தான் கரையும்
வானுயர அதன் மேன்மை ஓங்கி நிற்கும்
அளவுக்கு மிஞ்சுகையில் அதிர்ச்சியூட்டும்
களவுசெய்ய ஒண்ணாப் பெருஞ்செல்வம்
படிக வடிவில் உருவான பெட்டகமாம்
உப்பும் முகிலும் உலகம் காக்கும்!

கவிஞர்களே! உப்பின் சிறப்பை, உப்பளத் தொழிலாளரின் உழைப்பை விளக்கி நீங்கள் வடித்துள்ள கவிதைகள் நன்று! உங்களுக்கு என் பாராட்டுக்கள்!

அடுத்துவருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவாகியிருப்பது…

பகலவன் பார்வை பட்டுப்
பாற்கடலின் பரந்த கரை மடியில்
படிகம் படிகமாய்ப் படிந்த
படியலின் பளிங்குக் குவியல்!

அவியல் முதல் பொரியல் வரை
அறிவியல் முதல் ஆன்மவியல் வரை
அலைகளின் உவர்ப்பு நீருக்குள்
அடங்கிய உப்புக்குள் அடக்கம்!

கூடை நிறைய வெள்ளை உப்பு
கூட்டு உழைப்பில் விளைந்த உப்பு
நாட்டுக்கு விடுதலை நல்கிய உப்பு
நம்ம காந்தியார் காய்ச்சிய கல்உப்பு!

உப்பளத்தில் உழைத்து உழைத்து
அப்பளமாய் ஆன உடம்பின்
உப்பு வியர்வை உரமானது
உப்பு நீர்க் கடலுக்கு உயிரானது

வெண்மேகம் தாலாட்டுமா இங்கு?
வெயில் சுடும் தேகம் நீராடுமா?
கைகள் இணைந்து சேராமல் போனால்
மெய்யுடல் ஒருவேளை பசியாறுமா?

வானமே எங்கள் எல்லை
வாய்ப்புகளை என்றும் நாங்கள் நழுவவிட்டதில்லை
வல்லமையோடு வலிமை கொண்டு உழைத்தால்
வாழ்வில் என்றும் இல்லை தொல்லை!

”உப்பளத்தில் உழைத்துழைத்து அப்பளமாய் ஆன தொழிலாளர்களின் உடம்பின் உப்பு வியர்வையே உரமானது; உப்புநீர்க் கடலுக்கு உயிரானது” என்றுரைக்கும் திரு. யாழ். பாஸ்கரன், ”வல்லமையோடு உழைத்தால் வாழ்வில் என்றும் இல்லை தொல்லை” என்று முத்தாய்ப்பாய் முடித்திருக்கின்றார். அவரை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *