அன்பிற்கினிய நண்பர்களே!

கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

ராமலக்ஷ்மி எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃபிளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளோம். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (18.10.2020) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

5 thoughts on “படக்கவிதைப் போட்டி – 280

 1. பாடமாக…

  சமூக இடைவெளி
  சற்றுக் கூடுதலாகிவிட்டது,
  பெற்று வளர்த்துப்
  பேணிக்காத்தவர்கள் வயதில்
  பெரியவர்கள் ஆனதும்
  தெருவில் நிற்கிறார்கள் அல்லது
  தேடிச் செல்கிறார்கள்
  முதியோர் இல்லங்களை..

  வேலை செய்ய இயலாதபோது
  வேடங்கள் போட்டு
  ஓடவிடுகிறார்கள் பசியை..

  வழிபாட்டுத் தலங்ளில்
  வழிமறிக்கும் சாமிகளெல்லாம்
  முற்றும் துறந்தவரல்லர்,
  முழுதும் மறக்கப்பட்டவர்கள்..

  இளைஞர்களே
  எண்ணிப் பாருங்கள்
  முதுமைவரும் உங்களுக்கும்,
  உதறிடாதீர் பெற்றோரை-
  உங்கள் பிள்ளைகள்
  பார்த்த்துக்கொண்டிருக்கிறார்கள்-
  பாடமாக…!

  செண்பக ஜெகதீசன்…

 2. யாரிவர்கள்?

  கையினில் செல்போன் உடையவரோடு
  கதைப்பது யாரவரின் சதியா?
  ஐய இதென்ன அவர்அறி விப்பது
  அன்றைய நாளின் கலெக்ஷனையா?
  ஐயரிருந்துவெண் சங்கினை யூதி
  அழைப்பது சில்லறை சேர்த்திடவா?
  பையினைக் கையால் அணைத்திருக்கும் நபர்
  பார்ப்பது முன்வரும் கிராக்கியையா

  கையில் குறைகள் தெரியவில்லை அந்தக்
  கால்களில் சோர்வா புரியவில்லை
  மெய்யினிலே குறை யாதுமில்லை – அவர்
  மேனியுறுதி தளரவில்லை.
  உய்யும் வகைக்கவர் தேர்ந்தெடுத்த – இந்த
  உழைக்கும் வழிக்கென்ன காரணமோ?
  பையன்கள் பெண்கள் அன்னவரின்முது
  மையை நிராகரித் திட்டனரோ!

  தூரத்துரத்தி தெருவினில் விட்டு
  துரோக மிழைத்தவர் பிள்ளைகளோ!-இல்லை
  யாரும் சதமல்லவென்று உணர்ந்து தம்
  ஊரைவிட்டேயிவர் வந்தனரோ!
  வேரைப்பிடுங்கித் தம் பாசமறுத்து
  வெளிக்கிட்டுவிட்ட நிலையிதுவோ-இந்தப்
  பாரினில் யாதும் தம் ஊரெனும் நோக்கில்
  பரதேசி வாழ்வினைத் தேர்ந்தனரோ!

 3. மகுடிக்கு மயங்கிய பாம்பாட்டிகள்

  கண்டதே காட்சி…
  காண்பதே உண்மை…
  கேட்பதே செய்தி …
  – என்று
  சொன்னதை நம்பி
  தீர ஆராயும் திறனேதும் கொள்ளாமல்
  கொண்டதே கோலமென வாழ்ந்ததால்
  வாழ்வியல் செய்திகளை,
  சமூக நிலைமைகளை,
  சரித்திர உண்மைகளை
  மூடி போட்டு மறைத்து வைத்து
  வனிகச் செய்திகளை
  வறட்டு விவாதங்களை
  பசப்பு வார்த்தைகளை
  படாடோப விளம்பரங்களை
  வெளிச்சம் போட்டுக் காட்டுவதை
  உண்மை என்று வாழ்ந்து
  சொந்த மண்ணிலேயே
  அகதிகளாய் வாழுகின்றோம்
  சொந்தங்களை இழந்துவிட்டு
  அநாதையாய் இருக்கின்றோம்

  அரசியல் வாணிகப் பாம்புகளின்
  ஊடக மகுடிகளின் கூச்சலுக்கு
  மயங்கி மதிகேட்டு நிற்கும் பாம்பாட்டிகளாய் மாறிவிட்டோம்

 4. படக்கவிதைப் போட்டி 280

  சங்கினைத் துணைக் கொண்டு
  கோவில் வாயிலில் அமர்ந்து
  சாப்பாட்டிற்கான உத்தியாக
  சரித்திரம் உருவாகிறதா

  ஆலயத்தினுள் தான் முழங்க வேண்டி
  முன்னோர்கள் வகுத்த வழி
  ஆலயத்திற்கு வெளியே வந்ததன்
  விந்தைதான் என்ன

  யாசகம் கேட்பதற்கு சங்கு இதுவோ வரிசைக்கட்ட அமர்ந்துள்ள சித்தர்களா
  இல்லை பசிப்பிணியாலானப் பித்தர்களா

  விளக்குங்கள்
  அதிகரிக்கும் குழப்பங்கள்
  சங்கே நீ முழங்கு
  சங்கே நீயே முழங்கு

  சுதா மாதவன்

 5. ஆடி அடங்கி ஆட்டம் முடிந்த பின்
  ஆடல் வல்லன் ஆலய வாசலில்
  அடுத்த வேலை சோற்றுக்கு
  அடுத்தவர் கையை நோக்கும் அவலம்

  நீற் அணிந்த பிறை நெற்றி
  நீர் திரை மறைக்கும் சிறு விழிகள்
  நிறம் கருத்த நெடு மேனி
  வரம் வேண்டி தவம் கிடக்கிறது

  பெற்ற பிள்ளைகள் பிழைப்பு தேடி
  பெற்றவரை விட்டு விட்டு தனம்
  பெற பரதேசம் பேனதனால்
  பெற்றவர்கள் பெற்றது பரதேசிக்கோலம்

  உற்ற துணை யாரும் இல்லை
  உறுதுணையாக வரும்
  உறவுகள் ஏதுமில்லை – புது
  உறவு உருவானது புண்ணிய பூமியில்

  முதுமையின முடியமையால்
  முயற்சிக்க இயலாமையால்
  மூவரும் மூலவரை நோக்கி
  முக்தி வேண்டி பக்தி செய்கிறார்

  சங்கொலி முழங்க்கி
  சங்கடங்கள் தீர வேண்டுகிறர்
  சங்கரனே சற்று இறங்கிடு
  சங்குபால் குடித்தவர்கள்
  செவியில் இதை சேர்த்திடு

Leave a Reply

Your email address will not be published.