கலாப்ரியா, க.பஞ்சாங்கம் ஆகியோருக்கு ‘விளக்கு’ விருது

1
Kalapriya and Panchangam
அமெரிக்கத் தமிழர்களின் ‘விளக்கு’ இலக்கிய அமைப்பின் 24வது (2019) “புதுமைப்பித்தன் நினைவு” விருதுகளை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம். எழுத்தாளர் திலகவதி, பேரா. சு. சண்முகசுந்தரம், கவிஞர் சமயவேல் ஆகிய மூன்று உறுப்பினர்களைக் கொண்ட நடுவர் குழு 2019ஆம் ஆண்டின் விருதுக்குரியவர்களாக கீழ்காணும் இரு எழுத்தாளர்களை ஒரு மனதாகத் தேர்வு செய்துள்ளது.
 
1. கவிஞர் கலாப்ரியா கவிதை, நாவல், வாழ்க்கை வரலாற்றுப் புனைவுகள், கவிதை விமர்சனம், தமிழ்த் திரையுலகம் பற்றியும் தமிழர் வாழ்வில் திரையுலகின் தாக்கங்கள் பற்றியும் ஏராளமான ஆவணப் பதிவுகள்.
 
2. பேரா. க.பஞ்சாங்கம் கவிதை, நாவல், சங்க இலக்கியம் முதல் சமகால இலக்கியம் வரை சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள், நவீனக் கோட்பாடுகளின் அடிப்படையிலான விமர்சன ஆய்வுகள்,
 
ஒவ்வொன்றும் ரூ 1,00,000 மதிப்புள்ள இவ்விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.
 
 
தமிழின் மிக முக்கியமான, ஒரு தவிர்க்கவே முடியாத அபூர்வமானதொரு நிகழ்வு கலாப்ரியா. தமிழ்க் கவிதைப் போக்கில், கவிதை மொழியில், அழகியலில், நவீனம் நோக்கிய பலவகையான உடைப்புகளையும் திறப்புகளையும் ஏற்படுத்திய முதன்மைக் கவியான கலாப்ரியாவுக்கு அவரது கவிதைச் செயல்பாட்டையும் அண்மைக்கால உரைநடைகள் மற்றும், புனைவு முயற்சிகளையும் கௌரவித்துப் போற்றும் வகையில் 2019ஆம் ஆண்டிற்கான ‘புதுமைப்பித்தன் நினைவு விளக்கு’ விருதினை அவருக்கு அளிப்பதில் ‘விளக்கு’ விருது நடுவர் குழுவும் ‘விளக்கு’ அமைப்பும் மனநிறைவும் மகிழ்வும் கொள்கின்றன.
 
தமிழில் பண்டைய இலக்கிய இலக்கணங்களில் இருந்து இன்றைய சமகாலம் வரையிலான எல்லா வகைப் பிரதிகளிலும் ஆழ்ந்த புலமையும், அவற்றைச் சமூகவியல் மற்றும் நவீன கலையிலக்கியக் கோட்பாடுகளின் அடிப்படையில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆழமான கட்டுரைகளில் திறனாய்வு செய்து, தமிழில் தெளிவான திறனாய்வுப் பார்வைகளை உருவாக்கியிருக்கும் பேராசிரியர் க.பஞ்சாங்கத்தைக் கௌரவித்துப் போற்றும் வகையில் 2019ஆம் ஆண்டிற்கான ‘புதுமைப்பித்தன் நினைவு விளக்கு’ விருதினை அவருக்கு அளிப்பதில் ‘விளக்கு’ விருது நடுவர் குழுவும் ‘விளக்கு’ அமைப்பும் மனநிறைவும் மகிழ்வும் கொள்கின்றன.
 
‘விளக்கு’ செயற்குழு
அக்டோபர் 14, 2020

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on "கலாப்ரியா, க.பஞ்சாங்கம் ஆகியோருக்கு ‘விளக்கு’ விருது"

  1. விளக்கு வழங்கும் புதுமைப்பித்தன் விருது 2019 சரியான நபர்களுக்கு வழங்கப்பட்டிருப்பதில் பெருமகிழ்ச்சி.

    கலாப்ரியா தமிழ் புதுக்கவிதை வரலாற்றில் முக்கிய ஆளுமை. வானம்பாடி கவிஞர்கள் தமிழ் பேராசிரியராக இருந்ததால் ஏற்பட்ட பல கேடுகளில் ஒன்று எழுத்துப் பரம்பரை கவிஞர்கள் வெளியில் தெரியாமல் போனதுதான். இன்றைக்கும் தமிழ் இலக்கியம் படிக்கும் மாணவர்களுக்கு இவர்களைப் பற்றி ஒன்றும் தெரியாது. இது போன்ற விருதுகள் அவர்களை அடையாளம் காண பெரும் துணையாக இருக்கும். விளக்கு அமைப்புக்கு நன்றி. சொற்களால் சமூகத்தை ஏமாற்றிப் கொண்டிருக்கும் வானம்பாடி கவிஞர்கள் சிலகாலம் நாடு கடத்தப்பட்டால் நல்லது. தமிழ் இலக்கியத்தின் பரந்த அளவிலான படைப்பூக்கம் வெளிப்பட வாய்ப்பு ஏற்படும்.

    பேராசிரியர் க பஞ்சாங்கம். எனது முன்னத்தி ஏர். தியாகராசர் கல்லூரி மாணவர். சிறந்த ஆய்வாளர். பண்பாளர். தகுதிக்கு ரிவர்.

    விளக்கு அமைப்புக்கு மீண்டும் எனது வாழ்த்துக்கள். தொடர்க உங்கள் பணி.

    நல்லவர்கள் பலர் அங்கீகாரத்திற்காக மௌனத்துடன். தவறில்லை பேசுங்கள் நீங்கள் தமிழுக்காக.

    நன்றி…

    முனைவர் ம இராமச்சந்திரன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.