Month: November 2015

  • தித்திக்கும் தீபாவளி!

        -எம் . ஜெயராமசர்மா, மெல்பேண், அவுஸ்திரேலியா

    மனமெல்லாம் ஒன்றுபட்டு
    மகிழ்ச்சிவெள்ளம் பெருக்கெடுத்துத்
    தினமெங்கள் வாழ்வுவரின்
    தித்திக்கும் தீபாவளி!

    பட்டாசு மத்தாப்பு
    பட்சணங்கள் அத்தனையும்
    சுற்றிவந்து நின்றுவிடின்
    சுவைத்துவிடும் தீபாவளி!

    எத்திக்கும் உள்ளவெங்கள்
    இரத்தபந்தம் எல்லாரும்
    எங்களிடம் வந்துநின்றால்
    இனித்துவிடும் தீபாவளி!

    புத்தாடை தனையுடுத்திப்
    புத்துணர்வு கொண்டவராய்
    புன்முறுவல் முகம்வந்தால்
    பூத்திடுமே தீபாவளி!

    மதங்களால் மோதும் மனம் மாறிவிட்டால்
    இனங்களைச் சிதைக்கும் குணம் மாறிவிட்டால்
    மதுபோதை என்னும் வெறி மாறிவிட்டால்
    மண்மீது என்றும் நல்ல தீபாவளிதானே!

    பட்டாசு வெடிப்பதைப் பக்குவமாய் வெடித்தால்
    பட்சணங்கள் உண்பதையும் பக்குவமாய்ச் செய்தால்
    பலபேரின் மனத்தினையும் மகிழ்ச்சிபெற வைத்தால்
    பலநாளும் எங்களுக்குத் தீபாவளி அன்றோ!

    நரகாசுரராக நாம்மாறி இருந்து கொண்டே
    லாபநட்டம் பேசுவதில் நியாயமென்ன இருக்கிறது?
    நம்மனதில் அசுரகுணம் நமைவிட்டே அகன்றுவிடின்
    நமக்குநல்ல தீபாவளி நாளுமே வந்துநிற்கும்!

    மத்தாப்புக் கொளுத்துகின்றோம் மதவெறியும் ஊட்டுகின்றோம்
    சத்தியத்தைத் தர்மமதை தலைகுனியச் செய்கின்றோம்
    மாபாதகம் அனைத்தும் மனத்தைவிட்டு வெளியேற்றித்
    தீயதெல்லாம் தீயிடுவோம் தீபாவளித் தினத்தில்!

    தீபாவளித் தினத்தில் சிறுவர்களைக்  காத்திடுங்கள்
    தீயினால் வருங்கேட்டைத் தினம்மனதில் எடுத்திடுங்கள்
    மத்தாப்பும்  பட்டாசும் மனமகிழ்ச்சி தந்திடினும்
    மனம்வருந்தச் செய்துவிடும் மகிழ்ச்சியையும் போக்கிவிடும்!

    ஆதலால் அனைவருமே அகமகிழ்ந்து நிற்பதற்கு
    அவசரத்தைக் கைவிட்டு அயர்வகற்றி நின்றிடுவோம்
    கோபமதைக் குறைத்திடுவோம் குணமுயர்வு பெற்றுநிற்போம்
    பூதலத்தில் தீபாவளி பொலிவுபெற நாமிணைவோம்!

    கோவில் சென்றுகும்பிடுவோம் குறைசொல்லல் தவிர்த்திடுவோம்
    பாவநிறை அத்தனையும் பறந்தோடச் செய்திடுவோம்
    தோழமையை வளர்த்திடுவோம் சுயநலத்தை விட்டிடுவோம்
    யார்மனமும் நோகாமல் நல்லதீபம் வைத்துநிற்போம்!

     

     

    Share
  • சிவபிரதோஷம்

    -மீ.விசுவநாதன்

    மழையில் நனைந்தால் சிவனே
    மனதில் உன்னை நினைப்பேன் !                  shiva
    அழைப்பேன் ருத்ரம் சொல்லி
    அதிலும் குளித்து மகிழ்வேன் !
    உழைக்கும் போதும் சிவனே
    ஒளியாய் ஒன்றிப் பணிவேன்
    பிழைப்புக் காக உன்தாள்
    பிடிக்க மாட்டேன் சிவனே !

    என்னை நினைக்கும் உன்னை
    என்னுள் வைத்தேன் நன்றாய்
    முன்னை வினையின் தொடரை
    முடித்து வைப்பாய் சிவனே !
    தன்னை உணர்ந்த நிலையைத்
    தருவாய் எனக்கு என்றே
    சென்னி மேலே உன்தாள்
    சிந்தை செய்வேன் சிவனே !

    ( அரையடி வாய்பாடு: மா,மா,மா  )

     

    Share
  • விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது எப்படி?

    விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது எப்படி? தீயணைப்பு அதிகாரி செயல் முறை விளக்கம்:
    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது எப்படி? என தேவகோட்டை தீயணைப்பு அதிகாரி பள்ளி மாணவர்களுக்குச் செயல் முறை விளக்கம் அளித்தார்.

    தீபாவளி பண்டிகையின் போது பள்ளி மாணவர்கள், விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது எப்படி? என்பது குறித்து தேவகோட்டை தீயணைப்பு நிலையத்தின் சார்பில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் செயல் விளக்கப் பயிற்சி முகாம் நடந்தது. முகாமிற்குப் பள்ளி தலைமை ஆசிரியர் லெ. சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். ஆசிரியை கலாவல்லி வரவேற்புரை வழங்கினார்.

    இதில் தேவகோட்டை தீயணைப்பு அதிகாரி கருப்பையா பள்ளி மாணவ-மாணவிகள் எப்படி தீபாவளி பண்டிகையின் போது பாதுகாப்பாகப் பட்டாசுகளை வெடிக்க வேண்டும்? என்பது குறித்து செயல்முறை விளக்கப் பயிற்சி அளித்தார். மேலும் பட்டாசு வெடிக்கும் போது தீ விபத்து ஏற்பட்டால் எப்படி தீயை அணைக்க வேண்டும்? எப்படி பட்டாசு பாதுகாப்பாக வெடிக்க வேண்டும்?என்பதையும் விளக்கிச் சொன்னார்.

    fire

    பின்னர் விழாவில் தீயணைப்பு அதிகாரி கருப்பையா பேசியதாவது; சீன பட்டாசு வேண்டாம். பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் குழந்தைகள் தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகளை பெரியவர்களின் மேற்பார்வையில் வெடிக்க வேண்டும். பெற்றோர்கள் சீன பட்டாசுகளை வாங்கித் தரவேண்டாம். தீ விபத்தை A,B,C,D,E என வகைப் படுத்துகின்றனர்.

    A என்பது எரிந்து சாம்பலாகி தண்ணீர் ஊற்றி அணைப்பது ஆகும்.
    B என்பது ஆவியாகி எண்ணெய்யில் பட்டுத் தீ பிடிப்பது ஆகும். இதனை மணல் போட்டு அணைத்தல் வேண்டும்.

    FIRE விளக்கம்:
    FIRE என்பதில் F என்கிற எழுத்துக்கு தீயை கண்டுபிடி- Find
    I என்ற எழுத்துக்கு தீயை தெரியப்படுத்துதல் – Inform
    R என்ற எழுத்துக்கு தீயில் இருந்து காப்பாற்றுதல் – Rescue
    E என்ற எழுத்துக்கு தீயில் இருந்து வெளி ஏறுதல் – Escape/Exit 
    என்கிற விளக்கத்தைக் கொடுத்தார்.

    மாணவர்கள் வெடி வெடிக்கும்போது அம்மா அப்பாவைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு வெடிக்கவும்.
    வெடிக்காத வெடியைக் கையில் எடுக்கக் கூடாது .
    ராக்கெட் வெடி வாங்க வேண்டாம்.
    குப்பைகளைப் பக்கத்தில் போட்டு வெடிக்க வேண்டாம்.
    இறுகிய உடைகளைப் போட்டு கொண்டு வெடி வெடிக்க வேண்டும்.
    தீ பிடித்து விட்டால் வாளி தண்ணீரை அப்படியே ஊற்றாமல் கப்பில் அள்ளித் தெளிக்க வேண்டும்.

    மேலும் தீ காயங்களின் வகைகளையும், தீ காயம் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதையும் தெளிவாக எடுத்துக் கூறினார். பின்னர் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை தேவகோட்டை தீயணைப்பு நிலையத்தைச் சார்ந்த, கனகராஜ் பாலமுருகன் வழங்கினார்கள். ஏராளமான பெற்றோர்களும் கலந்து கொண்டு செயல் விளக்கத்தைப் பார்த்து பயன் பெற்றனர்.

    நிகழ்ச்சியில் பரமேஸ்வரி, தனம், ரஞ்சித், காயத்ரி, கார்த்திகா, பிரவீணா, ராஜலெட்சுமி, பரத், ராஜேஸ்வரி உட்பட பல மாணவ, மாணவியர் கேள்விகள் கேட்டு பதில் பெற்றனர். மாணவ,மாணவியர் இனி வரும் தீபாவளி பண்டிகை அனைத்தையும் விபத்தில்லா தீபாவளி பண்டிகையாகக் கொண்டாடுவோம் என உறுதி எடுத்துக் கொண்டனர். நிறைவாக ஆசிரியை செல்வமீனாள் நன்றி கூறினார்.

    பட விளக்கம் :
    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது எப்படி? என தேவகோட்டை தீயணைப்பு அதிகாரி கருப்பையா பள்ளி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். உடன் பள்ளி தலைமை ஆசிரியர் லெ. சொக்கலிங்கம்

    அறிவிப்பு:
    பள்ளி தலைமை ஆசிரியர் லெ. சொக்கலிங்கம்

    L.Chokkalingam,M.Sc,M.Phil,B.Ed,PGDHRM,BLISc,DGT
    Head Master,
    Chairman Manicka Vasagam Middle School,
    Devakottai.630 302.
    Sivagangai Dist.
    TamilNadu.
    09786113160.
    E-Mail : jeyamchok@gmail.com
    http://www.kalviyeselvam.blogspot.in/

    Share
  • தீபங்கள் ஏற்றுவோம்!

    செண்பக ஜெகதீசன் 

    தீபங்கள் ஏற்றிடும் தீபாவளி
    -தீமைகள் அகற்றிடும் தீபாவளி,
    கோபங்கள் மாற்றிடும் தீபாவளி
    -குவலயம் போற்றிடும் தீபாவளி…      (தீபங்கள்)   Saibaba temple Panjim

    பட்டாசு வெடித்திடும் தீபாவளி
    -பண்டங்கள் படைத்திடும் தீபாவளி,
    பட்டாடை கட்டிடும் தீபாவளி
    -பாரெல்லாம் போற்றிடும் தீபாவளி…  (தீபங்கள்)

    வெறுப்புகள் போக்கிடும் தீபாவளி
    -வேற்றுமை மாற்றிடும் தீபாவளி,
    பொறுப்புகள் சேர்த்திடும தீபாவளி
    -புதுப்புது துணைதரும் தீபாவளி…        (தீபங்கள்)

    இனிப்புகள் வழங்கிடும் தீபாவளி
    -இறைவனை வணங்கிடும் தீபாவளி,
    புனிதமாம் புவியினில் தீபாவளி
    -போற்றுவோம் போற்றுவோம் தீபாவளி…  (தீபங்கள்)

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி (38)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

    12210933_913951735325693_2075831684_o

    94284833@N07_rதுளசிதாசன் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (14.11.2015) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர், தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளர் திருமதி மேகலா தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.

    புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்த திருமதி மேகலா இராமமூர்த்தி கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்றவர். அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009 ம் ஆண்டுகளில் (ஆர்லாண்டோ & அட்லாண்டா) கவியரங்கம், இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். புறநானூறு, குறுந்தொகைப் பாடல்களில் அதிக நாட்டமும், இலக்கியக் கூட்டங்களில் சுவைபட பேசுவதிலும் வல்லமை பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

    Share
  • முக்கோணத் தொடுதிரை!

    -கவிஜி  

    நண்பர்கள்
    நம்பர்களாகிப்
    போனார்கள்…

    ஒன்றாக இருந்தாலும்
    முகம் அறியாதவர்களே
    ஒன்றியிருக்கிறார்கள்…!

    உறவினர்கள்
    பக்கத்து வீட்டுக்காரர்கள்
    அனைவருமே ஸ்டேடஸுக்குள்
    அடங்கி விட்டார்கள்…                                              cell-phone

    தலை குனிந்தே
    நடப்பதில் ஆண் பெண்
    சமம் ஊர்ஜிதப் படுத்தப்படுகிறது…!

    எழுந்ததும் கையில்
    மிதக்கும் அலைபேசி
    எழுவதற்கு முந்தியும் அலைகிறது
    மனதுக்குள்…!

    மாற்றங்கள் வேண்டிய
    மானுட குலம்
    மாற்றத்துள் மாட்டிக் கொண்ட
    முக்கோணமாய்த் தொடுதிரைக்குள்
    காணாமலே போகிறது…

    முகநூலில் கட்டை விரல்
    உயர்த்தலில்
    வாழ்த்தலின் அத்தனை
    உணர்வும் சிதைவதாகவே
    தோன்றுகிறது…!

    எண்ணங்கள் அனைத்துக்குமே
    எழுத்துருவம் தர
    முடியும் என்றே
    முரட்டு நம்பிக்கை
    விதைக்கிறது…

    இனி முகங்கள்
    மறக்கும் அகங்களின்
    கழுத்தில் எண்களே
    அடையாளமாகும்!

     

     

    Share
  • “பொய்யே மெய், மெய்யே பொய்”

    –இரா. ஞானசேகரன்.

    “பொய்யே மெய், மெய்யே பொய்”
    «Les paroles redictes ont, comme autre son, autre sens. » Montaigne.
    «La structure symbolique pluri-dimensionnelle» Derrida, De la Grammatologie.

    “பொய்யே மெய், மெய்யே பொய்”……..
    என்ன இது? அட என்னதான் இது?

    இவை என்ன சொல்ல வருகின்றன? இவை என்னதான் அப்படி புதிதாக சொல்லிவிடப்போகின்றன? மெய் என்றால் என்ன? பொய் என்றால் என்ன? ‘இருத்தல்’ என்பது மெய்யா? அல்லது இல்லாமல் இருப்பது பொய்யா? இந்த இரண்டில் எது மெய்? எது பொய்? நேற்று மெய்யாக இருந்தது இன்று மெய்யாகவே மெய்யாக இருக்கிறதா? அல்லது பொய்யாகிப்போனதா? எதனால் அந்த மெய் இன்று பொய்யாகிப்போனது? அது மெய்யாகவே பொய்யாக இருக்கிறதா? அல்லது பொய் போல் தோற்றமளித்து மறைமுகமாக மெய்யாக இருக்கிறதா? எது எப்படியோ, இறுதியாக மெய் மெய்யாகவும், பொய் பொய்யாகவும், மெய் பொய்யாகவும், பொய் மெய்யாகவும் உள்ளது.

    உண்மை என்றால் என்ன? உண்மையில் ‘உண்மை’ என்ற ஒன்று உள்ளதா? ‘உண்மை’ என்பது மொழி அடிப்படியில் ஒரு சொல். இதற்கு ‘மெய்’ என்று வேறொரு அர்த்தமும் உண்டு. மெய் என்றால் இருத்தல் என்று பொருள். ‘ஒன்று’ இருக்கிறது, அதனை மனிதன் தன் ஐம்புலன்களினால் ஆராய்ந்து பார்க்கிறான். அதாவது கண், காது, மூக்கு, நா, மற்றும் தொடுவுணர்வு ஆகிய ஐம்புலன்களினால் அந்த ஏதோ ‘ஒன்றை’ பற்றி உணர்கின்றோமா இல்லையா? ‘உணர்தல்’ என்பது அனைவராலும் உணர்தலான ஒன்றாக இருத்தலே உண்மையான இருத்தல் அல்லது ‘உணர்தல்’ என்பதாகும். நான் ஒன்றைப் பார்க்கிறேன், அது அனைவராலும் பார்க்கக்கூடியதாக இருத்தல் வேண்டும். நான் ஒன்றைக் கேட்கிறேன், அது அனைவராலும் கேட்கக்கூடியதாக இருத்தல் வேண்டும். நான் ஒன்றை நுகர்கிறேன், அது அனைவராலும் நுகரக்கூடியதாக இருத்தல் வேண்டும். நான் ஒன்றைச் சுவைக்கிறேன், அது அனைவராலும் சுவைக்கக்கூடியதாக இருத்தல் வேண்டும். நான் ஒன்றைத் தொடுகிறேன், அது அனைவராலும் தொட்டுப்பார்த்து உணரக்கூடியதாக இருத்தல் வேண்டும். இந்த ‘இருத்தல்’ என்பது மிக மிக முக்கியமான ஒன்றாகும். ஒரு மனிதனின் ‘இருத்தல்’ என்பது அவன் அவனாக இருத்தலின் பொருட்டே கட்டமைக்கப்படுகின்றது. இங்கு ‘இருத்தல்’ என்பது உணர்தல், உணர்ச்சி, மெய் ஆகியவற்றோடு தொடர்புடையவையாக கருதலாம். உண்மையில் ‘இருத்தல்’ என்பது ‘ஒன்று’ அதுவாகவே இருத்தல், அதன் தனித்தன்மையில் இருத்தல். அதாவது ‘ஒன்று’ அதுவாகவே இருத்தல் என்பது ‘அதன்’ உண்மையான இருத்தலை உணர்த்துகின்றது. மாறாக ‘ஒன்று’ அதுவாக இல்லாமல் ‘மற்றொன்றாக’ இருத்தல் என்பது தன் ‘இருத்தலை’ விட்டுவிட்டு வேறொன்றின் ‘இருத்தலை’ இருப்பிடமாகக்கொள்வது. அதாவது தன் சுய அடையாளங்களைத் தானே தொலைப்பதும், தன் இருத்தலைத் தானே அழிப்பதும் ஆகிய இரண்டினையும் இரு வேறாகக் கருத முடியாது. உண்மையில் அவை இரண்டும் ஒன்றே.

    சரி ‘உண்மைக்கு’ திரும்புவோம். ‘உண்மை’ என்பது ஒரு சொல். அந்தச் சொல்லானது ஆங்கிலத்தில் ‘abstract noun’ என்ற பகுதியில் இருக்கக்கூடியது. ‘Abstract’ என்பது ஐம்புலன்களிற்கு அப்பாற்பட்டது. அது தன்னுடைய ஐம்புலன்களின் துணைகொண்டு ஆறாவதாக உள்ள ‘மனம்’ என்ற ஒன்றினோடு பொருத்திப்பார்த்து அதன் மூலமாக மீண்டும் தன் ஐம்புலன்களின் ஒன்றின் உதவியோடு வெளிவரும் ‘ஒன்றே’ ஆகும். அவ்வாறு வெளிவரும் ஒன்றானது தற்போது ‘abstract’ஆக இல்லாமல் ‘concrete’ஆக மாற்றம் பெறுகின்றது. அதாவது முன்பு ‘abstract’ஆக இருந்தது தற்போது ‘concrete’ஆக மாற்றம் பெற்றுள்ளது. எனவே ‘உண்மை’ என்பது தன்னுடைய மெய்யால் மட்டுமே அறிந்து ஆராயும் ‘ஒன்று’ என்று பொருள் தரலாம்.

    இன்னும் மேலே சொல்லப்போனால் இந்த ‘abstract’ மற்றும் ‘concrete’ என்ற இரண்டையுமே சந்தேகமாக சந்தேகிக்கும் நிலை ஏற்படலாம். ஒரு ‘abstract’ஆன ஒன்றை தன்னுடைய ஐம்புலன்களின் மூலம் ‘concrete’ஆக உணரும்போது அது எப்படி ‘abstract’ஆக இருக்க முடியும்? உதாரணத்திற்கு ‘கடவுள்’ என்பது ஒரு சொல். மொழியில் உள்ள எண்ணற்ற சொற்களில் அதுவும் ஒன்று. இந்த ‘கடவுள்’ என்ற சொல்லிற்கு இணையான பல சொற்கள் உலக மொழியில் உள்ளன. அதை யாவற்றையும் எடுத்துச் சொன்னோமானால் ஒரு புத்தகமே போடலாம். சரி நாம் நம் விஷயத்திற்கு வருவோம். கடவுள் என்பது மனிதனை விட சக்தி படைத்தது என்று வைத்துக்கொள்வோம். அது ‘abstract’ நிலையில் இருந்து இயங்கக்கூடியதாக உள்ளது. காரணம் ஐம்புலன்களினால் ஆராய்ந்து அறிய முடியாதது தான் இந்த ‘கடவுள்’ என்ற ஒன்று. இறுதியாக ‘மனம்’ என்ற ஒன்றின் மூலமாக {மனம்- என்பது மொழி சார்ந்தது, மொழியின் உதவியோடு சரி/தவறு என்பதைப் பின்பற்றி நடக்கக்கூடியது} அந்தக் கடவுள் என்ற ஒரு சொல்லிற்கு பொருள் தேட முயல்கிறான் மனிதன். அதற்கு அவன் தன் ஐம்புலன்களையும் சிறப்பாக உபயோகிக்கிறான். அதாவது எப்படி எப்படியெல்லாம் அதைப்பற்றி சொல்ல வேண்டுமோ அப்படியெல்லாம் அதைப்பற்றி சிந்தித்து அதற்கான பொருளைத் தேட முற்படுகிறான். அவ்வாறான மனித சக்திக்கு மீறிய அந்த ஒன்றினை மனிதனாகவும் அல்லது மனுஷியாகவும் மட்டுமே உருவப்படுத்துவது, அல்லது பொருள்கொள்வதெல்லாம் முற்றிலும் முரணாக உள்ளது. காரணம் கடவுள் என்பது மனித சக்திக்கு அப்பாற்பட்டவன். அப்படி மனிதனுக்கு அப்பாற்பட்டவன் எப்படி மனித உருவில் இருக்க முடியும்?

    சிங்கம், புலி, யானை, சிறுத்தை, காட்டுப்பன்றி, காளை, எருது இன்னும் பல… ஆகியவை எல்லாம் மனித சக்திக்கெல்லாம் அப்பாற்பட்டவை. எனவே அவற்றை எல்லாம் கடவுள்கள் என்று சொன்னாலாவது சற்றே ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கிறது. காரணம் இவை எல்லாம் மனிதனை எளிதில் வீழ்த்தக்கூடியவை, அதுமட்டுமின்றி மனிதனை விட உடல் வலிமை உள்ளதாகவும் இருக்கின்றன. மனிதன் எந்த வித விஞ்ஞானமும் இன்றி, வேறு எந்தக் கருவியின் துணையும் இல்லாமல் இந்த விலங்குகளுடன் மோதினால் அவன் உயிரை இழப்பது நிச்சயம். அதுதான் ‘உண்மை’. இந்த விலங்குகளெல்லாம் மனித சக்திக்கு அப்பாற்பட்டவை, அதுமட்டுமின்றி மனிதனால் “உருவாக்கப்படாதவை”.

    அதாவது மனிதன் எப்படி இந்த உலகிற்கு வந்து தொலைத்தானோ அப்படியே அவையும் வந்து தொலைந்து, திரிந்து ஊர் ஊராகச் சென்று, காடு காடாக அலைந்து கிடந்து இருக்கின்றன. மனிதன் என்பவனும் ஒரு விலங்கு தான். Aristotle முதல் Paul de Man வரை உள்ள அனைத்துத் தத்துவ ஞானிகளும் அப்படிதான் மனிதனை வரையறுத்துள்ளனர். இவன் தன்னுடைய மொழியாளுமை மற்றும் தன் மனத்தின் உதவியோடு இவன் தன்னை மிருகத்திடமிருந்து வேறுபடுத்திக் காட்டிக்கொள்கிறான். அவ்வளவுதான். ஆதிமனிதன் உடை இல்லாமலே இருந்திருக்கிறான். மிருகங்களுக்கு இயற்கையிலேயே அடர்த்தியான தோல் மற்றும் முடிகள் உண்டு. எனவே அவை தன்னை வெயிலில் இருந்தும் குளிரில் இருந்தும் தன்னை காத்துக்கொள்ள ஏதுவாக இருக்கிறது. ஆனால் மனிதன் அப்படியல்ல. எனவே அவன் ஆரம்பக்காலத்தில் குகைகளிலும், பின்னர் மரப்பட்டைகளையும் அணிந்து தன்னை இயற்கையின் இடர்பாடுகளிலிருந்து தன்னை காத்துக்கொண்டான். அவனுக்கு “ஒருவனுக்கு ஒருத்தி” என்ற பேதமெல்லாம் தெரிந்திருக்கவில்லை. அவன் கண் முன்னர் எவள் தென்படுகின்றாளோ அவளைப் புணர்ந்து தன்னுடையவளாக்கிக் கொண்டு வாழ்ந்து வந்தான். பின்னர் இவன் வயதாகி இறக்கும் தருவாயில் உள்ள நேரத்தில் இவனிடமிருந்த பொருள்கள் (வேட்டைக்குப் பயன்படுத்திய கூரான கற்கள், நீளமான குச்சிகள்) போன்றவற்றை எந்த மகனுக்குக் கொடுப்பதென்பதில் சண்டை வந்தது. உடனே புதிதாக சட்டம் ஒன்றை இயற்றினார்கள். அதுதான் “ஒருவனுக்கு ஒருத்தி” என்ற ஒன்று. இதன் மூலம்தான் முதன் முதலாக தன் தந்தையின் சொத்துக்கு மகன் உரிமை கொண்டாட ஆரம்பித்தான். ஒரு பழங்குடி இனத்தவருக்கும் மற்ற பழங்குடி இனத்தவருக்கும் ஆரம்பக் காலத்தில் சண்டை மற்றும் சச்சரவுகள் இருந்து வந்தன. முதல் காரணம் அவர்கள் வசிக்கும் இடத்திற்கு இவர்கள் செல்வதே ஆகும். வேறொன்று இவர் பேசும் மொழி அவர்களுக்குப் புரியாமலும், அவர்கள் பேசுவது இவர்களுக்குப் புரியாமல் போனதுமே ஆகும். இங்கு மொழி என்பது ‘ஒலி’வடிவமாகிய சத்தத்தை தான் சொல்ல வருகிறேன்.

    “Early men spoke to his men in grunts and growls.” -B .V. Rao, World history from early times to A D 2000 page: 12.

    எழுத்து எழுதத் தெரியாத காலம் … முதலில் கண்களால் கண்டதை இலை, தழை, மண், சாணி, போன்றவற்றை வைத்து தான் வசித்த குகைகளில் வரையத்தொடங்கினான். பின்னர் இவன் மிகவும் வலிமைமிக்க ‘Flint’ வகை கற்களை பயன்படுத்தக் கற்றுக்கொண்டு பின்னர் அதன் மூலமாகவே அவன் நெருப்பை உருவாக்கவும் அறிந்து கொண்டான். பின்னர் நெருப்பின் வருகைக்குப் பின்னர் கரித்துண்டின் மூலம் அவனுக்கு வரைதல் என்பது மிகவும் எளிதான ஒன்றாக மாறிவிட்டது.

    அப்படியாக இருந்த ஒவ்வொரு கூட்டத்திற்கும் ஒரு தலைவன் உண்டு. ஒவ்வொரு நாளும் ஒன்று கூடி உட்கார்ந்து நெருப்பை மூட்டி அனைவரும் பொதுவாக அமர்ந்து வேட்டையாடியதை உண்டு மகிழ்வர். உண்ட உடன் தூங்குவதை தவிர்க்க அந்தக் கூட்டத்தின் தலைவனாகிய அந்த வயதான கிழட்டு மனிதன் தான் கனவில் கண்டதை எல்லாம் அனைவருக்கும் சொல்லி மகிழ்வான். இங்கு நாம் கவனிக்க வேண்டியது ‘கனவு’ என்ற சொல்லைத்தான். ‘கனவு’ என்பது ‘நனவு’ இல்லை. அது ஒருவன் சார்ந்தது. அவ்வாறு ஒரு கிழட்டு தலைவன் அவன் தலைமை தாங்கிய கூட்டமே அழியப் போகிறதாக கனவு கண்டான். உண்மையில் அவன் அப்படி கனவே காணவில்லை. அப்படி கனவு கண்டதாக அவன் தன கூட்டத்தாரிடம் சொல்லுகிறான். உடனே அங்கு இருந்த அனைவரும் பயத்தால் நடுங்கி இதற்கு என்ன பரிகாரம் என்பதைக் கேட்க தொடங்கினர். அதற்கு அந்தக் கிழட்டு தலைவன், “இந்த அழிவில் இருந்து நம்மைக் காப்பாற்ற எனக்கு ஒரு இளம்பெண்ணையும், சுட்ட பன்றி ஒன்றினையும், விருந்தாக அளிக்க வேண்டும்” என்றான் அந்தக் கிழட்டு மனிதன். இந்தக் கூட்டமும் இவனை நம்பி அனைத்தையும் விருந்தாகப் படைத்தளித்தனர். இந்தக் கிழட்டு மனிதன் பிறரின் பயத்தையே தன்னுடைய முதலாகக் கொண்டு நன்றாக உழைக்காமல் வெறுமனே ‘பேசிப் பேசியே’ ஏமாற்றிக் கொண்டிருந்தான். ‘பேசுதல்’ என்பது தான் ‘லோகோஸ்’இன் ஆரம்பம். பேச்சே ‘லோகோஸ்’. இப்படிக் காணாத ஒன்றைக் கண்டதாக சொல்லிச் சொல்லியே, அல்லது பேசி பேசியே, மக்களை ஏமாற்றிக் கொண்டிருந்தான் அந்தக் கிழட்டு கோமாளி. பின்னாளில் இந்தக் கிழவனும் இறக்கும் முன்னர் தன் மகனுக்கு இந்த ஏமாற்றும் வித்தையைக் கற்றுக்கொடுத்துவிட்டு இறந்தான். இவன் தன் தந்தையைக் கடவுளாகவும், தன்னை அந்தக் கடவுளின் வாரிசாகவும் இவனே அறிவித்துக்கொண்டான். இந்த மகனும் பிற்காலத்தில் அந்தக் கூட்டத்திற்கு தலைவனாகி உழைக்காமல் ஏமாற்றி ஏமாற்றியே நன்றாக உண்டு, பெண்கள் பலரை புணர்ந்து, கொழுத்து வளர்ந்தான். இவன் சொல்வதுதான் ‘வாக்கு’ லோகோஸ். இவன் மீது அனைவருக்கும் பயம் இருந்தது. காரணம் இவன் சொல்படி நடந்தால் அந்தக் கூட்டத்தில் வாழலாம். இல்லையென்றால் இவன் சொல் கேட்டு நடப்பவனை வைத்து, இவன் சொல்கேளாத பிறரின் மீது ஏவி விட்டு அடித்துத் துரத்துவது போன்ற செயல்களை செய்தான். இப்படித்தான் ஆதிகாலத்தில் இருந்து இன்று வரை மக்களாகிய மூடர்கள் நாமெல்லாம் இந்தக் கிழட்டு மனிதர்களின் பேச்சை நம்பி நம்பியே நாசமாய் போனதுதான் மிச்சம். இந்த நிகழ்வுதான் ஆதி காலத்து கடவுள் தோன்றியதின் வரலாறு. அனைத்திற்கும் ஒன்றே ஒன்று தான் காரணம். ‘பயம்’ அந்த ஒன்றுதான் எல்லாத் தீங்கிற்கும் காரணம். உண்மையில் இங்கு நல்லது என்று சொல்லப்படுகின்ற அந்தக் கடவுள்தான் அனைத்துத் தீங்கிற்கும் முழுமுதலான ஒன்றாக இருக்கிறது.

    ஆங்கில தத்துவ பேராசிரியர் Bertrand Russell அவர்கள் தன்னுடைய Dreams and Facts என்ற புத்தகத்தில் அருமையாகச் சொல்வார், “No man is liberated from fear who dare not see his place in the world as it is; no man can achieve the greatness of which he is capable until he has allowed himself to see his own littleness.”

    அவன் ஒரு கிழவன், உழைக்க முடியாதவன், அதனால் ஏனோ ஏமாற்றித் திரிந்தான், காணாததைக் கண்டதாக சொல்லி நன்றாக வாழ்ந்துவிட்டு இறந்தான். ஆனால் இவன் மகனுக்கு என்ன கேடு? ஆகச் சோம்பேறியாய் வாழத் திட்டமிட்டே இவர்கள் செய்யும் நாடகம்தான் இந்த புதிய கடவுள்களின் தோற்றம். புதிய கடவுள்கள் என்பது, ஒவ்வொரு கூட்டத்திலும் இப்படியாக ஒரு தலைவன் இருக்கத்தான் செய்வான். அவன் உருவாக்கும் புதிய புதிய கதைகளுக்கெல்லாம் மனிதன் உருவம் கொடுக்க ஆரம்பித்தான். அப்படியாக உருவானதுதான் ‘கடவுள்களின்’ தோற்றம். எப்படி மனிதன் குரங்கின் ஒரு இனத்தில் இருந்து வந்து ‘தொலைந்தானோ’ அப்படியே மனிதக்கடவுள்களும் பல பல உருவமெடுக்க ஆரம்பித்தனர். யானைத்தலை, பன்றித்தலை, குரங்குத்தலை… என எண்ணிலடங்கா தலைகள்.

    “It is better to note that we hardly come across any ethnically pure race or races in view of constant migration of people from one region to the other. Further, it is to be mentioned here that no single culture at present could be associated to any particular race.” -B .V. Rao., World history from early times to A D 2000 page:15.

    அப்படியே இங்கேயே சற்று வேறு ஒரு பாதையில் பயணிப்போம். பொய்யைப் பற்றி ஆராய்வோம். பொய் என்பது மெய்யால் சொல்லப்படுவது. சொல்லப்படுவதால் தான் அது பொய் எனப்படுகிறது. ‘சொல்லப்படுதல்’ என்ற ஒரு செயல் இங்கே முக்கிய பங்காற்றுகிறது. அவ்வாறான ‘சொல்’ எனப்படுவது இங்கே பெயர்ச்சொல்லாகவும், வினைச்சொல்லாகவும் விளங்குகின்றது. எனவே பொய் என்பது ஆங்கிலத்தில் ‘speech act ‘ என்ற விதியின் கீழ் வருகின்றது. பேசப்படுதல் மற்றும் சொல்லப்படுதல் ஆகிய இரண்டின் கீழே இந்தப் பொய் என்பது தன்னுடைய வெளிப்பாட்டை வெளிப்படுத்துகின்றது. நடித்தல், நிழல், மாதிரி, போல, எனப் பலவாறு இந்தப் பொய்யை வகைப்படுத்தலாம். எனவே இந்தப் பொய் என்பது ஒரு பொருளின் இருத்தலை அப்படியே அப்பட்டமாக வெளிப்படுத்தாமல் வேறு மாதிரியாகவோ அல்லது தன் நிலையை மாற்றி வெளிப்படுத்தினாலோ அது பொய் ஆகிறது. இதை உருசிய இலக்கிய கோட்பாட்டாளர் Viktor Shklovskiĭ அவர்கள் தன்னுடைய “Art as Technique” என்ற கட்டுரையில் ‘Defamiliarization’ என்ற கலைப்பயன்பாடு பற்றி எடுத்துரைப்பார். இங்கு Defamiliarization என்பது யாதெனில், “கலை என்பது யாதெனில் தன்னுடைய உண்மையான இருத்தலைத் தவிர்த்து புதிதாக அல்லது அறிமுகமில்லாத ஒன்றை மக்களுக்கு புதிய முறையில் எடுத்துக்கூறுவது ஆகும்.” இதுதான் கலை, அந்தக் கலையை பயன்படுத்த ‘Defamiliarization’ என்ற ஒரு உக்தி தேவைப்படுகின்றது. எனவே கலை கூட ஒரு வகை பொய்தான். இதைத்தான் அந்தகாலத்திலே பிளாட்டோ அவர்கள் தன்னுடைய ‘Republic’ என்ற புத்தகத்தில் ‘MIMESIS’ = Imitation (ஒன்றைப் போன்று நடித்தல், போலித்தோற்றம், பார்த்துப் பின்பற்றுதல்…) என்ற ஒரு கோட்பாட்டை பற்றிச் சிறப்பாக எடுத்துக்கூறினார்.
    எனவே இந்தப் பொய்யான கலை என்பது மக்களை நல்வழிப்படுத்தவில்லை என்பதே பிளாட்டோ அவர்களின் கருத்து. அதற்கு மாற்றாக அரிஸ்டாட்டில் வேறொரு கோட்பாட்டை முன்வைக்கிறார், நாம் அதைப்பற்றி இங்கே ஆராய வரவில்லை. மாறாகப் பொய்யை பற்றி சிலவாறு சிந்திப்போம். எனவே பொய் என்பது ‘தான் தானாக இல்லாமலிருப்பது’ என்று கூட சொல்லலாம். தன் நிலையை இழந்து வேறொரு நிலையில் இருந்து பேசுவது. தன்னுடைய ‘தன்னை’ தவறவிடுவது. ஆக மொத்தத்தில் சொல்லப்போனால் வேறொரு மனநிலையில் இருத்தல். வேறொரு என்றாலே இங்கு ‘தன்’ என்பதன் இருத்தல் இல்லாமல் இருப்பதே ஆகும். நடக்காதை நடந்ததாகச் சொல்வது, இல்லாததை இருப்பதாகச் சொல்வது, பார்க்காததைப் பார்த்ததாக சொல்வது,… போன்றவற்றை பொய்கள் என்று சொல்லலாம். அதாவது முன்னர் நாம் பார்த்த அந்தக் கிழட்டு கிழவனின் கனவுக்கதை போல. சரி, எதனால் இந்த மனிதன் என்பவன் பொய் சொல்லித்தொலைக்கிறான்? இதனால் அவனுக்கு என்ன பயன் நடக்கப்போகிறது? என்ன தேவைக்காக பொய் சொல்கிறான்? என்ன நன்மை, என்ன கேடு வரப்போகின்றது? சற்றே ஆராய்ந்து பார்ப்போம்.

    இங்கு நாம் பொய்யை பற்றி உண்மையாகச் சிந்திப்போம். ஒரு மனிதன் எதற்காகப் பொய் சொல்கிறான் என்றால் ‘தப்பித்துக்கொள்ள’ அவ்வளவுதான். எங்கு இருந்து ‘தப்பித்துக்கொள்ள’ அதில் தான் பொய்யை பற்றியான உண்மை அடங்கியுள்ளது. நிஜத்தில் இருந்து தப்பித்துக்கொள்ள இந்த நிழலான பொய் என்பது மனிதனுக்கு உதவுகின்றது.

    “I’m not upset that you lied to me, I’m upset that from now on I can’t believe you.” –Nietzsche
    “Experience is the source that is standard not only for art appreciation and enjoyment, but also for artistic creation. Everything is an experience.” –Heidegger.

    சில நேரங்களில் பொய் பேசுவதென்பதே சிலருக்கு அன்றாட பழக்கமாகிப்போகின்றது. அவர்கள் எல்லாம் பொய்யையே மீண்டும் மீண்டும் பேசி மெய்யாக்கிக் காட்டக்கூடியவர்கள். அவர்களுக்கு மெய், பொய் என்ற வேறுபாடில்லை. உதாரணத்திற்கு வியாபாரிகள். இவர்கள் மெய் பேசினால் இவர்களுக்கு ஏற்படக்கூடியதென்பதோ வெறும் நஷ்டம் மட்டும்தான். பொய் என்பது மனித வாழ்வில் ஒரு இன்றி அமையா பங்காற்றுகின்றது. உண்மையில் உலக மக்கள் அனைவருமே பொய் பேசுகின்றனர். ஆனால் எதற்காகப் பேசுகின்றனர் என்பதில் சில வேறுபாடுகள் உள்ளது. நன்மையான பொய்கள், தீமையான பொய்கள் என்று இவற்றை இரண்டாகப் பகுக்கலாம். தீமையான பொய் என்பது சிலநேரங்களில் பெருத்த சிக்கல்களை விளைவிக்கக்கூடியது. ஆனால் நன்மையான பொய்கள் யாவையும் தீமைகளை விளைவிக்காமல் வெறும் அன்பை பகிர்வதற்காகவே சொல்லப்படுகின்றது. (எ.கா. ‘நீ அழகாக இருக்கிறாய்’ ‘உன் குரல் குயில் போன்று உள்ளது’)… சரி நாம் இந்தப் பொய்களுக்கான காரணங்களைப் பற்றி சற்று சிந்திப்போம்.

    முதலில்: பயம். இந்தப் பயம் ஒன்று தான் அனைத்துப் பொய்கள், மற்றும் போலிகளுக்கான ஆரம்பம் ஆகும். எனவே இன்றைய சூழ்நிலையில் இருந்து தப்பிக்க அவன் பொய் சொல்கிறான். அவனுக்குத் தேவையற்ற என்ற ஒன்றிலிருந்து தப்பித்துக்கொள்ள வேண்டும். அவ்வளவுதான். நாளை என்ற ஒன்றைப் பற்றி அவனுக்குக் கவலையே இல்லை. அது மட்டுமின்றி அந்தப் பொய்யானது அவனை சில நேரங்களில் காத்தருள்கிறது, சிலநேரங்களில் அந்தப் பொய்யே அவனை அழிக்கவும் செய்கிறது. எனவே பொய் சிலநேரங்களில் காக்கவும் செய்யும், அழிக்கவும் செய்யும். இவன் சொல்லும் பொய்யைவிட வேறொருவன் சொல்லும் சிறப்பான பொய், முன்னர் சொன்ன பொய்யனைத் தோற்கடித்து அவனை அதலபாதாளத்தில் தள்ளுகிறது. பொய்க்கு எதிரி பொய்யே. எனவே உலக யதார்த்தத்தில் இருந்து தப்பிக்கவே மனிதன் பொய் சொல்லுகிறான். அதனால் அவன் மகிழ்ச்சியாக வாழ்வதாக அவன் நினைத்துக்கொள்கிறான். காரணம் உடலளவிலும் சரி, மனதளவிலும் சரி அவனுக்கு வேண்டியது பாதுகாப்பு. அதனால் பொய் சொல்கிறான். அளவுடன் சொல்லும் பொய் என்பது அவனுக்குப் பாதுகாப்பு, ஆனால் அளவில்லா பொய்கள் என்பது அவனுக்கே ஆப்பு.

    இரண்டாவதாக நாம் பார்ப்பது ‘மோதல்’, முரண்பாடு மற்றும் சச்சரவுகள் போன்றவற்றைத் தவிர்ப்பதற்காக சொல்லும் பொய்கள். இவ்வாறான மோதல் போக்கு என்பது பல நேரங்களில் வாதத்தில் முடியலாம். அவ்வாறாக முடியும் வாதமானது சண்டையில் முடியலாம். எனவே அதை தவிர்ப்பதற்காகத்தான் சிலர் பொய் சொல்கின்றனர். இங்கு நாம் பார்த்தால் ‘ஆமாம் சாமி’ என்று முழக்கமிடும் கும்பலை சிறந்த எடுத்துக்காட்டாகக் கூறலாம். இது போன்ற பொய் சொல்லும் மக்களுக்கு உடல்வலிமை என்பது மிக மிகக் குறைவே. எனவே தான் அவர்கள் பொய்யுரைக்கின்றனர். அதுமட்டுமின்றி வாதத்திறமை இல்லாத மனிதன் இந்த வகையான பொய்யை சாதாரணமாக மெய் போல பேசி அடுத்தவரை நம்ப வைப்பான். இது அவர்களின் பண்பாக மாறிப்போனதில் பெரிய ஆச்சரியம் இல்லை. காரணம் அவன் வாழ வேண்டும் அவ்வளவுதான்.

    மூன்றாவதாக நாம் பார்ப்பது ‘தண்டனை’ என்ற காரணத்தினால் ஆகும். பள்ளிக்கூடம் மற்றும் கல்லூரி செல்லும் பிள்ளைகளிடம் நாம் இதைக் காணலாம். காரணம் ஒரு சில குழந்தைகள் தவிர இன்ன பிற குழந்தைகள் யாவும் படிப்பில் சற்றே கவனம் குறைந்தவர்களாகத்தான் உள்ளார்கள். எனவே வாத்தியார் மற்றும் பெற்றோர்களிடமிருந்து தப்பிக்க அவர்கள் பொய்யுரைக்கிறார்கள். அதாவது ‘சார் நான் வீட்டுப்பாடங்களை எல்லாவற்றையும் முடித்துவிட்டேன். ஆனால் நோட்டு புத்தகத்தை வீட்டிலேயே வைத்துவிட்டு வந்துவிட்டேன்.’ இதுதான் உலக மகாப்பொய். இதைப் பல மாணவர்கள் சொல்லி நான் கேட்டுள்ளேன். 99 சதவிகிதம் இப்படிச் சொல்பவர் யாவரும் பொய்யரே ஆவர்.

    நான்காவதாக ஒதுக்குதல் அல்லது நிராகரித்தல் போன்றவற்றுக்காக பொய் சொல்லுதல். இந்த வகையான பொய்கள் எல்லாம் பெரும் தீமைகளை விளைவிக்காதது ஆகும். இந்த மாதிரியான பொய்களை பேசக்கூடிய மக்கள் பெரும்பாலும் பெரும் பணக்கார மற்றும் பகட்டான வாழ்க்கையை வாழக்கூடிய மக்களே ஆவர். உதாரணத்திற்கு, ‘உன் பையன் என்ன ஒரு லட்சம் மாத சம்பளம் வாங்குகிறானா? என் பையன் மாதம் மூன்று லட்சம் வரை சம்பாதிக்கிறான் தெரியுமா?’ இப்படியாக சில பல பொய்களை அடுக்கி வைத்தல். அவனுக்கு இவன் சொல்லும் பொய் மெய்யாகத் தோன்றலாம். இவனுக்கு அவன் சொல்லும் பொய் மெய்யாகத் தோன்றலாம். ஆனால் இருவரும் சொல்வதென்பதே பொய்தான். காரணம் வீண் பெருமை அவ்வளவே. சமுதாயத்தில் இருந்து ஓரங்கட்டப்படாமல் இருப்பதற்காகவே இந்தப் பொய்கள். நான் எதற்காகவும் உனக்குக் கீழ் அடிபணிய மாட்டேன் என்ற எண்ணம் கொள்வது. அல்லது, சமுதாயத்தில் ஒரு பெரும் சீமாட்டி போல தன்னை அடையாளப்படுத்திக்கொள்வது போன்றவற்றால் தான். அது மட்டுமின்றி இந்த மாதிரியான பொய்கள் என்பது பெரும் தீமைகளை ஏற்படுத்தக்கூடியது என்று சொல்லிவிட முடியாது. காரணம் அவர்களுக்கு வேண்டியது ‘புகழ்’ என்ற ஒன்று தான்.

    ஐந்தாவதாக இழப்பு, இழப்பு ஏதும் நேராமலிருக்க சிலர் பொய்களைச் சொல்கின்றனர். சிலர் அந்த நேரத்தில் அந்தப் பொய்யை சொல்லாமல் விட்டு விட்டால் சிலவற்றை இழப்பர், அதனால் பொய் சொல்லக்கூடும். உதாரணமாக: அரசாங்க அதிகாரிகள் சிலர் வீடு வீடாக வந்து குடும்ப நபர்களைப் பற்றி விசாரித்து அரசாங்கத்திற்கு ஒரு தொகுப்பாக சமர்ப்பிப்பார்கள். அப்படியாக விசாரிக்கும் போது குடும்ப நபர்களின் உண்மை நிலவரங்களைப் பற்றி குடும்பத்தார் சொல்வதில்லை. அவன் ஐம்பதாயிரம் ரூபாய் சம்பாதித்தால் இவர்கள் அவன் வெறும் ஐந்தாயிரம் தான் சம்பாதிக்கிறான் என்று சொல்வது உண்மையில் நடக்கிறது. காரணம் அப்படி உண்மை நிலவரங்களைச் சொல்வதினால் அரசு தன் குடும்பத்திற்குக் கொடுக்கும் இலவசங்களை எங்கே நிறு த்திவிடப் போகிறார்களோ என்ற ஒரு வித பயத்தினால்தான்.

    வேறு சில காரணங்கள்: இறுதியாக மக்கள் வேறு சில காரணங்களுக்காகப் பொய் சொல்லுகின்றனர். இந்தப் பொய்களானது இருவருக்குள் தனிமையில் ரகசியமாக நடைபெறுவது. இது காதலர்களுக்குள்ளே நடப்பது. உதாரணமாக மேலே சொன்னது போல, ‘நீ அழகாக இருக்கிறாய்’ ‘உன் குரல் குயில் போன்று உள்ளது’ போன்றவற்றைச் சொல்லி தன் துணையை சந்தோஷப்படுத்துவதற்கே ஆகும். இதில் வேடிக்கை என்னவென்றால் அவ்வாறாகச் சொல்லும் பொய் என்பது உண்மையில் ‘பொய்யே’ என்பது அந்த எதிர்பாலுக்கு முன்னரே தெரியும். இருந்த போதிலும் இந்தப் பொய்களெல்லாம் ஒருவருக்கொருவர் அன்பைப் பரிமாறிக்கொள்ளவே தவிர இந்தப் பொய்களால் பெரும் தீமைகள் ஏற்படுவதில்லை. இவ்வாறாகப் பொய் பேசுவதற்குப் பல காரணங்களை நாம் ஆராயலாம்.

    “Every sign is a sign for something, but not every sign has ‘meaning’, a ‘sense’ that the sign ‘expresses’.” –Husserl.

    இன்றைய தேதியில் இளைஞர்கள் யாவரும் தன்னுடைய எதிர்பாலினத்தவர்களிடம் கூறும் பொய்களைப்பற்றியும் அதற்கான உள்ளார்ந்த அர்த்தங்களைப்பற்றியும் சற்றே ஆராய்வோம். அதாவது தன் வாழ்க்கையில் புதிதாக சந்திக்கும் ஒரு பெண்ணிடம் இவன் எப்படி நடந்து கொள்கிறான், இவன் எப்படி எப்படியெல்லாம் அவளிடம் பொய் சொல்லுகிறான் என்பதைச் சற்றே சிந்தித்துப் பார்ப்போம். இன்றைய நகரத்து இளைஞர்கள் பெரும்பாலானவர்கள் மகளிரின் உளவியலை நன்றாகத் தெரிந்து வைத்துள்ளனர். அதில் அவர்கள் கைதேர்ந்த வித்தகராகவும் விளங்குகின்றனர். அவர்கள் யாவரும் தன் வாழ்வில் புதிதாக சந்திக்கும் பெண்களிடம் உபயோகப்படுத்துவதற்காகவே சில பல ‘உடனடி’ வாக்கியங்களை தன்னிடம் வைத்துள்ளனர். அவை மேலோட்டமாக ஒரு அர்த்தத்திலும், உள்ளார்ந்து பார்த்ததில் வேறொரு அர்த்தத்தையும் தரக்கூடியதாக இருக்கும். இப்போது அவற்றைப்பற்றி பேசுவோம்.

    சில நேரங்களில் அவ்வாறான வாக்கியங்கள் யாவும் அந்த எதிர்பாலின மகளிரைச் சற்று நேரத்திற்குச் சந்தோஷமாக வைத்துக்கொண்டாலும், உண்மையில் அவை என்ன நோக்கத்திற்காக பயன்படுத்தப்படுகின்றன என்பதில் பல ஐயங்கள் உண்டு. அந்த வாக்கியங்கள் யாவும் மிகவும் தெளிவாக, சில நேரங்களில் நகைச்சுவையாகவும், அறிவாளித்தனமாகவும், இருந்தால் அதில் ஒன்றும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. அவ்வாறான வாக்கியங்களை இந்த ஆண்மகனானவன், எந்த இடத்தில் உபயோகிக்கப்பட வேண்டும் என்பதில் மிக மிகத் தெளிவாகவும், கவனமாகவும் இருப்பான். அதுமட்டுமின்றி அந்த வாக்கியங்கள் யாவும் பல கட்டமைப்புகளை எல்லாம் கடந்து கவனத்துடன் உருவாக்கப்பட்டவை. இன்றைய இளைஞர்கள் யாவும் பெண்களிடம் எதிர்பார்ப்பது ஒன்றே ஒன்றுதான். சில பெண்கள் அந்த இளைஞனின் வெளி மற்றும் உள்நோக்கத்தை அறிவர், சிலர் அறியார்.

    1. இளைஞன்: “அன்பே, நீ மிகவும் அழகாகவும் கவர்ச்சியாகவும் உள்ளாய்.” இந்த வாக்கியத்தின் உள்ளார்ந்த அர்த்தம் யாதெனில், “பெண்ணே உன்னுடைய இளமை ததும்பும் உடலானது என்னை உண்மையில் மெய் சிலிர்க்க வைக்கின்றது. அதனால் உன்னுடன் உடனடியாக நான் உடலுறவு வைத்துக்கொள்ள ஆசைப்படுகிறேன்.
    2. இளைஞன்: “நான் உன்னைக் காதலிக்கிறேன்”. அர்த்தம் யாதெனில், “நான் உண்மையில் உன்னை காதலிக்கவெல்லாம் செய்யவில்லை, மாறாக உன் ‘மெய்’ மீது எனக்கு ஒரு வித காம உணர்வு ஏற்படுகின்றது. எனவே உன் ‘மெய்யை’ அடைய நான் இப்போது ‘பொய்யை’ மெய்போல சொல்கிறேன். நீ விரும்பினால் நாம் இருவரும் ‘DATING’ செய்து நம்மைப்பற்றி மேலும் தெரிந்து கொள்ளலாம்.” என்பதே ஆகும்.
    3. இளைஞன்: “என்னால முடியல” அர்த்தம் யாதெனில், “பெண்ணே நான் சொல்வதை கேள். நான் பல பெண்கள் பின்னால் சுற்றிச் சுற்றி அலைந்து ஓய்ந்துவிட்டேன். இனியும் என்னால் எவள் பின்னாலும் சுற்றித் திரிய முடியாது. எனவே நான் உன் பதிலுக்காக காத்திருக்கிறேன்.
    4. இளைஞன்: “நான் உன்னிடம் மேலும் நெருக்கமாக இருக்க ஆசைப்படுகிறேன்.” உண்மையான அர்த்தம் யாதெனில், “பெண்ணே என் சொல்லை கேள். நான் உன்னிடம் மிகவும் நெருக்கமாக இருப்பதால் நான் விரும்பிய நேரமெல்லாம் உன்னிடம் உடலுறவு வைத்துக்கொள்ள முடியும்.”
    5. இளைஞன்: “நான் உன்னை பிறகு அழைக்கிறேன்.” அர்த்தம் யாதெனில், “இப்போதைக்கு எனக்கு உன் மீது எந்த ஒரு ஆசையும் இல்லை. அப்படித் தோன்றும்போது நானே உன்னை அழைக்கிறேன்.”
    6. இளைஞன்: “வாழ்நாளில் உன்னைத்தவிர வேறெந்த பெண்ணையும் இதுவரை நான் கண்டதுமில்லை, கடந்து வந்ததுமில்லை.” அர்த்தம் யாதெனில், “தற்போதைய சூழ்நிலையில் உன்னைத் தவிர்த்து எந்த ஒரு பெண்ணிடமும் எனக்குத் தொடர்பு இல்லை. காரணம் என்னுடைய அதீத காம புத்தியினால் என் காதலை அவர்கள் கேவலப்படுத்திவிட்டு சென்றுவிட்டனர்.”
    7. இளைஞன்: “நான் உன்னை அதிகம் ‘மிஸ்’ பண்ணுகிறேன்.” அர்த்தம் யாதெனில், “எந்த ஒரு பெண்ணும் என்னை ஏறெடுத்துக்கூட பார்ப்பதில்லை.”
    ஆண்கள் தான் இப்படிப் பொய் சொல்லுகிறார்கள் என்றால் பெண்களும் அவர்களுக்கு ஏற்றவாறு வேறுமாதிரி எல்லாம் மாறி மாறிப் பொய் சொல்லுகிறார்கள். மன்னிக்கவும் மன்னிக்கவும், உண்மை சொல்லுகிற மாதிரி பொய் சொல்லுகிறார்கள்.

    1. பெண்: “எனக்கு இதைப்பற்றி ஒன்றும் தெரியாது. நீ தான் எனக்கு அதைப்பற்றிக் கற்றுக்கொடுக்க வேண்டும்.” உள்ளார்ந்த அர்த்தம் யாதெனில், “உண்மையில் அந்தப் பெண்ணுக்கு அதைப்பற்றி நல்லதொரு அறிவு உண்டு. இருப்பினும் இவள் சொல்லும் பொய்க்கு ஒரு காரணம் உண்டு. என்னவென்றால்: அந்த ஒன்றினைப்பற்றி ஆண் என்பவன் என்ன நினைக்கிறான், அவனின் நிலைப்பதென்பது அதன் மீது எப்படிப்பட்டதாக இருக்கின்றது என்பதைப் பற்றி அறியவே இவள் இப்படிச் செய்கிறாள்.” இதில் ஒன்றும் தவறில்லை. ஆணின் பொய்யை விட இவளின் பொய் எவ்வளவோ மேல். அதாவது தீமை தருவதென்பது ஆணின் பொய்யை விட இவளின் பொய் சற்றே சிறிது என்று பொருள் கொள்ளலாம்.
    2. பெண்: “நீ மிகவும் உயரியவன் (புத்திசாலி, சிறப்பானவன்,…)” இதன் உள்ளார்ந்த பொருள், “இவனிடம் இருந்து அவளுக்கு எதோ ஒரு காரியம் ஆக வேண்டியுள்ளது.”
    சரி இறுதியாகச் சொல்ல வந்ததைச் சொல்லிவிடுவோம். மனிதன் என்பவன் பேசக்கூடிய விலங்கு. எனவே அவன் பொய் பேசுவதில் ஒன்றும் ஆச்சரியமில்லை. அவனால் பொய் பேசாமல் வாழ்வதென்பதும் சாதாரணமான செயல் அல்ல. உலக மக்கள் அனைவரும் பொய் பேசினர், பேசுகிறார்கள், பேசிக்கொண்டே இருப்பார்கள். நமக்கே அவர்களைப்பற்றி உண்மையான நிலவரம் தெரியும் வரையில் அவர்கள் பேசும் பொய் என்பது மெய்யாகத்தான் தெரியும். ஒரு திருடன் என்பவன் மாட்டிக்கொள்ளாத வரை அவன் சமூகத்தில் ஒரு வள்ளலாகவும், தயாள மனப்பான்மை கொண்டவனாகவும் தான் தெரிவான். ஒரு மனிதன் தான் செய்யும் செயல் அனைத்திற்கும் ஒவ்வொரு அர்த்தமும் பின்னணியும் உள்ளது. அதை உணர அவனை மறுவாசிப்பு செய்தே ஆக வேண்டும்.

    ஆகப் பேச்சு/சொல் என்பது மெய்யுடன் தொடர்புடையதாகும். மெய்யால் மட்டும் தான் ஒலி எழுப்பிப் பேச முடியும். அவ்வாறு பேசும் சொல்/பேச்சு உண்மையில் உண்மையா அல்லது பொய்யா என்று எவருக்குத் தெரியும்? எங்குப் பார்த்தாலும் பொய், கடைக்குப்போனால் பொய், வேலை செய்யுமிடத்தில் பொய், மாணவர்களிடத்தில் வீட்டுப்பாடம் செய்தாயா என்று கேள்வி கேட்டால் அதற்கு ஒரு பொய், வீட்டுக்குப் போனால் அங்கே ஒரு பொய், சொந்தக்காரனிடம் பல பொய், பக்கத்து வீட்டுக்காரனிடம் ஒரு பொய், அரசியல்காரர்களிடம் பல பொய், வானமும் மழை பெய்யாமல் பொய்த்துத் தொலைக்கிறது,… பொய், பொய், பொய், பேசாமல் மனிதன் எவரும் இல்லாத இடத்திற்குச் சென்று அங்கே போய் பொய் பேசாமல் வாழலாம். மனிதர் இல்லாத இடம் என்று ஒன்று உண்டா? இதுவும் ஒரு ‘பொய்’. பொய்யிடமிருந்து மனிதன் தப்பிக்க வழியே இல்லை. காரணம் பொய்தான் அவனை மெய்யாகக் காப்பாற்றுகிறது.

    ______________________________
    இரா.ஞானசேகரன்,
    துணைப்பேராசிரியர்,
    ஆங்கிலத்துறை,
    IFET பொறியியல் கல்லூரி,
    விழுப்புரம்.

    Share
  • கற்றல் – ஒரு ஆற்றல் (2)

    க. பாலசுப்பிரமணியன்

    education

    கருவும் கற்றலும்சில உண்மைகள்

    தாயின் வயற்றில் கருவாக இருக்கும் பொழுதே கற்றல் என்ற செயல் ஆரம்பித்து விடுகிறதா என்பதை பல நாடுகளிலே ஆராய்ச்சி செய்து வருகின்றனர். ஒரு தாய் கருவுற்ற எட்டாம் வாரத்திலிருந்தே வெளிச் சூழ்நிலைக்கு ஏற்ப அந்தக் கருவின் அசைவுகள் இருப்பதாக மனோதத்துவ விஞ்ஞானிகள் சொல்லுகின்றனர்.

    இதைப் பற்றி ஆராய்ச்சி செய்ய பல நாடுகளில் கருவாக இருக்கும் நிலையில் கற்றல்- புரிதல் பற்றிய ஆராய்ச்சி செய்ய தனியான மையங்கள் அமைக்கப் பட்டுள்ளன   (Department of pre-natal Cognitive Psychology )

    டேவிட் சம்பெர்லைன்  என்ற மனோ தத்துவ விஞ்ஞானி கூறுகின்றார். ” ஒரு சமுதாயத்தில் வன்முறைகளைப் பின்பற்றுவோர்களுடைய  செயல்களை அவர்கள் கருவில் இருக்கும் போது போதிய ஊட்டச்சக்திகள் இல்லாமை, கவனக்குறைவுகள் மற்றும் வளர்ந்த குடும்பச் சூழ்நிலைகளின் அடிப்படியில் ஊகிக்கமுடியும் ”

    “மேலும் இளம் பிராயத்தில் பெற்றோர்களோடு பாசமின்மை, பெற்றோர்களை விட்டுப் பிரிந்து இருத்தல் போன்ற காரணங்களால் பல பின் விளைவுகள் ஏற்பட வாய்ப்புண்டு என்றும் நினைக்கின்றனர்.”

    தன்னுடைய தாயாரின் குரலை ஒரு கரு கிட்டத்தட்ட பதினாறு வாரங்களில் அடையாளம் கண்டு கொள்கிறது  இருபத்தி ஏழாவது வாரத்தில் குழந்தையின் பிரதிபலிப்புக்கள்  தாயின் குரலின் குணாதிசயங்களை உணர்ந்து வெளிப்படுத்துவதாக இருக்கின்றன.  அது மட்டுமல்ல, அந்தக் கரு தன் தாயின் உணர்வு   நிலைகளையும் (emotional state ) அடையாளம் கண்டு கொள்கிறது.

    ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட ஒரு ஆராய்ச்சியில் கருவாக இருந்த நிலையில் தாய் பார்த்த ஒரு ஹாலிவுட் படத்தின்   ஒலிகளையும் குரல்களையும் கேட்ட குழந்தை, பிறந்து சில வாரங்களில் அதே படத்தை போட்டபொழுது கருவில் காட்டிய அதே அசைவுகளைக் காட்டியதாகவும் கண்டுபிடிக்கப் பட்டது.

    சாரா பில்லே என்ற ஓர் விஞ்ஞானி தனது ஆராய்ச்சியின் அடிப்படையில் கருவாக இருக்கும் பொழுது மூளையில் வளர்ச்சி  பெற்றோர்களின் மனநிலை மற்றும் உணர்வு நிலைகளால் அதிகம் பாதிக்கப் படுகிறது என்று கூறுகின்றார்.  அன்பான, அமைதியான சூழ்நிலைகளில் வளரும் குழந்தைகளின் மூளை வளர்ச்சி மிகச் சிறப்பாக இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

    ஆகவே, கற்றல் என்ற ஒரு செயல் கருவுற்ற காலம் முதல்  துவங்குகின்றது.

    கருத்தரித்த காலத்தில் ஒரு தாய் படும் வேதனைகளும் துயரங்களும் குழந்தையின் மூளை வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்துவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. குறைவான மூளை வளர்ச்சி, வயதுக்கு தகுந்த அளவு மூளை வளர்ச்சி இல்லாமல் இருத்தல், மூளைக் கோளாறுகள்  போன்றவைகளை கருத்தரித்த காலத்தில்  நடந்த நிகழ்சிகளோடு இணைத்து  பார்த்தால் பல உண்மைகள் வெளிப்படும் என்றும் விஞ் ஞானிகள் கூறுகின்றனர்.

    அதே போல, பெற்றோரிடமிருந்து சில திறன்களையும் குழந்தைகள் கற்றுக் கொள்ளுகின்றனர். கருவுற்ற காலத்தில் இசை போன்ற பல கலைகளில் நாட்டம்  உடையவர்களுடைய குழந்தைகளைக்கு மூளை வளரும் நேரத்திலேயே இதில் ஈடுபாடு ஏற்படுவதாகவும் ஆகவே பிறந்த பின் அவற்றில் சுலபமாக நாட்டம் ஏற்பட்டு விடுவதாகவும் சொல்லுகின்றனர்.

    ஆகவே, மகளிருக்கு கருவுறும் காலம் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய காலம். ஒரு சந்ததியின் தலை எழுத்தை நிர்ணயிக்கத் தயாராகும் காலம்.

    பல நுண் கருவிகள் மூலம் தாயின் வயிற்றில் ஒரு கரு காட்டும் உணர்வுகள் படம் பிடிக்கப் பட்டிருக்கின்றன. கருவாக இருக்கும் நிலையிலேயே  முகத்தில் உணர்வுகளைக் காட்டும் குழந்தைகளின் படங்களைக் கண்டால் அந்த நிலையைப் பேணிப் பராமரிக்கும் தேவையை நாம் உணர முடிகின்றது .

    ஆகவே, பெற்றோர்கள் குழந்தை உருவாகும் நிலையில் அன்பு, அமைதி மற்றும் ஆக்கபூர்வமான சூழ்நிலை உருவாக்குதல் மிக அவசியம்.

    Share
  • மணமகளே உன் மணவறைக்கோலம் – 4

    பூ முடிப்பாள் இந்தப் பூங்குழலி …

    — வைதேகி ரமணன்.

    ராஜேஸ்வரியின் திருமணம்… ராஜேஸ்வரி தாயில்லாத பெண் மட்டுமல்ல கருப்பை இல்லாத பெண்ணும்கூட. அதை அறியாத அவளது கிராமிய குடும்பம் மல்லிகைப்பூவை விழுங்கச் சொல்லி தொல்லை செய்த கதை பெருங்கதை. அது இங்கு அவசியமில்லை. அவளும் ஒருவழியாக வேலைக்குப் போன பிறகு ஒருவரிடம் சிக்கினாள். உண்மையறிந்தும் அவர் அவளை மணம் செய்து கொள்ளவே விரும்பினார். பிறகென்ன உடன்போக்குதான்.

    வந்துவிட்டார்கள் அவளது இரு சகோதரர்களும், ஒரு அம்பாசிடர் காரில், நேரே நாங்கள் தங்கியிருந்த பெண்கள் விடுதிக்கே. அவளது தோழியான நான் விடுதியில் அவளை மறைத்து வைத்திருப்பேன் என்ற சந்தேகம் அவர்களுக்கு. விடுதி வாசலில் ரசாபாசத்தை விரும்பாத நான் அருகில் உள்ள டீக்கடை மரத்தடியில் துணையாக ஐவர் சூழ நின்றேன். கொஞ்சம் சுதாரித்துக் கொண்டு தாயில்லாத பெண்ணை இப்படியொரு முடிவெடுக்க வைத்து விட்டீர்களே என்று திரும்பத் தாக்கினேன்.

    என்னை நம்பாமல் விடுதியின் ஃபோன் பாயிடம் சொல்லி எனது அறையைச் சோதனை செய்தார்கள் அவளது அண்ணன்மார்கள். உண்மையில் நடந்தது எதுவும் எனக்கும் தெரியாது. மறுநாள் மிக நீண்ட கடிதம் வந்தபின்தான் உண்மை அறிந்தேன். இருந்தாலும் எனக்குக் கொஞ்சம் வருத்தம்தான். காலமும் ஓடிவிட்டது. இன்றும் இருவரும் நல்லமுறையில் ஒன்றாக இல்லறம் பேணுகிறார்கள். அவளது கணவரும் பணி ஓய்வு பெற்று விட்டார்.

    அவர்கள் ஒரு மகளைத் தத்தெடுத்து வளர்த்து, அவள் இப்போது பள்ளிப் படிப்பும் முடித்துவிட்டாள். அவளுக்கே தான் ஒரு தத்து மகள் எனத்தெரியாமல் அன்புடன் வளர்கிறாள். ராஜேஸ்வரியும் நல்லாசிரியராகப் பணிபுரிந்து நல்ல அம்மாவாக இருக்கிறாள். கஷ்டப்பட்டுத் தேடி பலவருடங்களுக்குப் பிறகு ஐந்தாண்டுகளுக்கு முன் அவளைக் கண்டுபிடித்தேன். இப்போது அடிக்கடி தொலைபேசி வழியே மீண்டும் நட்பைத் தொடர்கிறோம்.

    நான் வெளிநாட்டிற்குப் பணிபுரிய செல்லும் முன், என் வீட்டருகில் வசித்த, என் தம்பியுடன் படித்த ஒருவன் எங்கள் பல்கலைக்கழகத்தின் நூலகத்தில் வேலை பார்த்தான். அவனும் அந்தப் பாழாப் போன காதலில் சிக்கி …. வேறு யார்? … அவனது மாமன் மகள்தான், ஆனால் பதினைந்து வயது வித்தியாசம்…. மாமாவோ சும்மா … கவுண்டமணி கணக்கில் எகிறுபவர். அவர்கிட்ட என்னைத் தூதனுப்பினான். அப்பொழுது எனக்கு முப்பத்தைந்து வயது. விட்டாரு பாருங்க …. டோஸ்… செம்ம டோஸ்… மறக்க முடியாது. இவனோ அழுவறான். என் கல்யாணத்த முடிக்காம வெளிநாடு போறீங்களேன்னு அழுவறான். இன்னைக்கும் அவன் அழுகை நினைவில் இருக்கு. அதற்குப் பிறகு அவனைப் பார்க்கவே இல்லை. அதே பொண்ணை மணம் செய்து இப்போது சென்னையில் எங்கோ இருக்கான்.

    வெளிநாட்டில் பணிபுரிந்த பொழுது, ஒரு இலக்கிய விழாவில் ஓர் எழுத்தாளன் ஒருவன், என்னைவிடப் பலவயது இளையவன், எனக்கு அறிமுகமானான். எழுச்சி மிக்க; இலக்கிய ஆர்வம் மிக்க நல்லவனாக அறிமுகமாகியிருந்தான். திருமணமானவனாக இருந்தான். உழைப்பால் உயர்ந்தவனாக சில பல நல்ல குணங்களைக் கொண்டிருந்தான். நான் இந்தியாவிற்குத் திரும்பிய பிறகு தொடர்பு கொண்டு, இந்தியாவில் ஒரு பெண்ணைத் திருமணம் செய்யப்போவதாகவும், அதற்காகத் தாலி வாங்க கடையில் இருப்பதாகவும் சொல்லவே அதிர்ந்து போனேன். மறுநாள் இந்தியா வருவதாகவும் கூறினான்.

    அறிவுரை பல எடுத்துக்கூறி இருதாரம் குற்றம் எனவும்; சான்றுகள் பல கூறியும் திருமணத்தைத் தடுத்து நிறுத்தினேன். எல்லாம் நிறுத்திவிட்டதாகப் பலமுறை சத்தியம் செய்தான். நானும் அவனை நம்பினேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கோடையில் வேலை ஒன்றின் காரணமாக வெளிநாடு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஒரு இருபத்தைந்து நாள்தான். இந்தியா திரும்பினேன். இந்த இடைவெளியில் இந்தியா வந்து அதே பெண்ணைத் திருமணம் செய்துவிட்டான். கேட்டால் தடுக்க நீங்கள்தான் ஊரில் இல்லையே என்கிறான்.

    இப்பொழுது இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இரு குடும்பங்களையும் சமாளிக்க முடியாமல் கோர்ட், கேஸ் என அலைகிறான். இது மாதிரி ஆட்களை எப்படித் திருத்த? … என்ன செய்ய? … ஒருமுறை மணம் முடித்தவன் மறுமணம் பற்றி யோசிக்கலாமா? எவ்வளவு பெரிய முட்டாள் இவன் …இல்லையா?

    அண்மையில், இந்த ஆண்டின் துவக்கத்தில் நண்பரின் மகனின் திருமணத்திற்குச் சென்றேன். வெளிநாட்டில் பணிபுரியும் அவன் இரு ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவிற்கு வந்திருந்த பொழுது, அவனது மாமா தனது மகளை அவனுக்குக் கொடுக்க விரும்பி ஒரு சபை நடுவே அவனிடம் நேரடியாகக் கேட்டு விட்டிருக்கிறார். அவனோ தங்கை மாதிரியான அவளிடம் தனக்கு வேறுவிதமான எண்ணம் எதுவுமில்லை என்று மறுத்துவிட்டான். அவனது அம்மாவிற்கோ பாசமலர் அண்ணன் சென்டிமெண்ட். கணவன் மனைவி இருவரும் ஒப்புக்கொள்ளாவிட்டால் தற்கொலை செய்து கொள்வோம் என்று இந்தக்கால பிள்ளைகளின் மனோபாவம் புரியாமல் மிரட்ட, மிரண்டு போன பையன் என்வீட்டிற்கு வந்தான்.

    வேறு யாரிடமாவது சிக்கியிருப்பானோ என்ற என் சந்தேகத்திற்கு முற்றிலுமாக மறுத்து விட்டான். பணி ஓய்வு பெற்றுவிட்ட வயதிலும், இவ்வளவு அனுபவத்திற்குப் பிறகும் அவனை நம்பிய என்னை என்ன சொல்வது …. அதன் பிறகு மீண்டும் அவனை அயல்நாட்டில் சந்திக்க நேர்ந்தபொழுது உண்மையை ஒப்புக் கொண்டான். அவனுடைய தங்கையுடன் இருவரையும் டின்னரில் சந்தித்து, எல்லாக் கதைகளையும் கேட்டு, காதலை உறுதிப்படுத்திக் கொண்டு, அவனது அப்பாவிடம் தனியே உரையாடி அவரைப் புரிந்து கொள்ள வைத்தேன். அவனது தங்கையிடம் பேசி அவனது தாயை இளக வைத்தேன், அவனிடம் பேசி விரைவு படுத்தினேன். கடந்த இரண்டு வருடத்தில் ஒருவருக்குத் தெரியாமல் ஒருவர் என்று மூவரிடமும் பேசிப் பேசி ஒரு வழியாக இந்த ஆண்டு திருமணம் முடிந்தது.

    இதுதான் இப்போதைக்கு நான் சென்ற கடைசித் திருமணம். இப்போது புரியும் நான் ஏன் மணம் செய்து கொள்ள விரும்பவில்லை என்று. மலரும் நினைவுகள் என திரும்பிப் பார்க்கும் பொழுது….எனது பேராசிரியர் ஒருவரது மகன் செந்திலின் திருமணம் செட்டி நாட்டில் மிகச் சிறப்பாக நடந்தது. வித்தியாசமான திருமணம். போனதும் வந்ததுமான பயணம் சிறப்பாக இருந்தது. இடையிடையே என் அண்ணன், தம்பி, அக்கா என எனது உடன்பிறப்புகளின் மகள்கள், மகன்கள் என குடும்பத் திருமணங்கள் நடந்தேறின. அதில் ஏதும் சுவராசியமும் இல்லை. அவற்றில் என் பங்கு ஏதும் இல்லை, அத்திருமணங்கள் ஒரு சிலவற்றுக்கு நிதி உதவி செய்தது தவிர குறிப்பிட்டுச் சொல்லும்படி என் பங்களிப்பு ஏதும் இல்லை. அதனால் அவற்றைப் பற்றி எழுதவும் ஏதும் இல்லை. பரிசளிப்பதற்காகப் போன பல திருமணங்கள் எனது மாணவர்களின் திருமணங்கள்; தோழிகளுக்குத் துணையாகச் சென்ற திருமணங்கள்; தோழர்கள் தோழிகளின் பிள்ளைகளின் திருமணங்கள் எனப் பல்வேறு திருமணங்களுக்குப் போயிருந்த போதும் நினைவில் நிற்பவை மேற் சொன்னவைதான்.

    ________________________

    முன்பதிவுகள்:

    ________________________

    Share
  • வெள்ள நிவாரணம்

    -றியாஸ் முஹமட்

    எங்கக் களிமண் வீடு
    மழையினால் கரைந்தோடுகிறது
    எங்க மூத்த ராத்தாவின்
    கண்ணீர் போல…

    சூடு கண்ட பூனையொன்று
    எழுந்தோட வழியில்லாது
    எங்க வீட்டு அடுப்பங்கரையிலே
    படுத்துக் கிடக்கிறது

    திண்ணையில் சுருண்டு
    படுத்துக் கிடக்கும்
    என் தம்பியின் முகத்தில்
    தின்ன ஏதாவது கிடைக்குமா என்ற
    ஏக்கப் பார்வை எனக்கு புரிகிறது…

    தேநீராவது
    வைத்துக் கொடுக்கலாம் என்று
    எனக்குள் எழுந்த தெம்பு
    அங்கே நனைந்து போன
    கொள்ளிக் கம்பு கண்டு
    கலைந்து போகிறது…

    பலத்த காற்றில்
    முற்றத்திலிருக்கும்
    முருங்கை மரம்
    முறிந்து கிடக்கிறது

    முரட்டுக் காற்றில்
    முறுக்கேறி நின்று போராட
    அதுயென்ன முதுரை மரமா?

    அடித்து இழுத்துச் செல்லும் வெள்ளத்திற்கு எங்கே தெரியப் போகிறது…
    எங்கள் மூன்று நேர உணவும்
    இந்த முருங்கை இலைக்கறிதான் என்று!

    காண் நீர் வழிந்தோட
    வாசற்படி நின்ற வெள்ளம்
    எங்கள் குடிசைக்குள்
    குடிகொண்டு விட்டது

    நோய்வாய்ப்பட்டுப்
    படுத்த படுக்கையாக் கிடக்கும்
    உம்மாவுக்கு
    இனி பாய் விரிக்க இடமில்லை

    வெள்ள நிவாரண அறிவிப்பு
    எங்கள் ஊர்
    பள்ளியில் முழங்க…
    சோர்ந்து போன
    எங்க  ராத்தாவின் முகத்தில் எத்தனை மின்வெட்டுக்கள்!

    விறைத்துப்போன
    உம்மாவின் கை
    நிவாரண அறிவிப்புக் கேட்டு
    சற்று உசும்பியது என்னவோ உண்மைதான்…

    பசி மயக்கத்தில்
    உறங்கிப் போன தம்பி
    பீக்கர் சத்தம் கேட்டு
    எழும்பிக் குந்தி விட்டான்
    ரொட்டி  தின்னப் போகும்
    மகிழ்ச்சி அவன் முகத்தில்

    சாய்மனைக் கட்டிலில் இருந்து
    ஒரு வேகத்தில் எழும்பிய வாப்பா
    என்ன நினைத்தாரோ தெரியவில்லை
    இனி அவருக்குப் பொறுமையில்லை

    மழை என்றும் பாராத வாப்பா
    பள்ளியை நோக்கி  நடையைக் கட்ட
    மழையோ ஊரை வெளுத்துக் கட்ட

    ஊரெல்லாம் வெள்ள ஓட்டம்
    பள்ளிக்குள்ளே மக்கள் கூட்டம்

    அங்கே மாவுக்காக
    மக்களோடு மக்களாக
    மல்லுக் கட்டிக்கிடக்குது
    பள்ளி நிர்வாகக் கூட்டம்

    சுருட்டுவோர் சுருட்டிக் கொண்டு போனதுபோக
    மிகுதி மாவாவது கையில் கிடைக்குமா என்ற பெரும்  ஏக்கத்துடன்

    கையிலே உரப் பையை
    இறுக்கிப் பிடித்தவாறே
    பள்ளிச் சுவரில் சாய்ந்து
    கிடக்கிறார் எங்கள் வாப்பா!

     

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 186

    -மலர் சபா

    மதுரைக் காண்டம் – 06: கொலைக்களக்  காதை 

    கள்வன் ஒருவனின் செய்தி

    முன்னொரு நாளில் கள்வன் ஒருவன்
    பகல்பொழுதில் தூதுவன் வேடம் தரித்து
    அரண்மனையில் தங்கியிருந்து,
    இரவு நேரத்தில் பெண்வேடம் பூண்டு
    விளக்கின் இருளிலே பள்ளியறை புகுந்தான்.

    தூங்கிக் கொண்டிருந்த இளவரசன் மார்பில் அணிந்த

    வெயில்போல ஒளிவீசிக் கொண்டிருந்த வைரமாலையை
    அதனின்று வீசிய ஒளியின் வெளிச்சத்தின் துணை கொண்டு,
    மின்னலெனச் செயல்பட்டுக் களவாடிச் சென்றான்.

    உறக்கத்திலிருந்து விழித்த இளவரசன்,
    தன் மாலையைக் காணாது
    உடனே தன் வாளை உருவினான்.
    கள்வன் இளவரசனின் வாளின் உறையைத்
    தன் கையில் பற்றிக் கொண்டு,
    வாள்வீச்சு வரும் போதெல்லாம்
    உறையை வாளினுள் திணித்துத்
    தன்மீது குத்து வராதபடி
    கவனமாகப் பார்த்துக் கொண்டான்.

    அதனால் கோபமுற்ற இளவரசன்
    மற்போர் மூலம் அவனைத் தாக்க முயன்றான்.
    அங்கே இருந்த மணித்தூண் ஒன்றைத்
    தன்னைப் போலக் காட்டிக் கொண்டு
    தான் கற்ற களவுநூலின் பயிற்சியால்
    அங்கே இருந்து மறைந்து தப்பித்தான்.
    அங்ஙனம் மறைந்த அவனை
    இன்றுவரை யாராலும் காண முடியவில்லை.
    அப்படிக் கண்டவர் உளராயின்
    நீங்கள் எனக்குக் காட்டுங்கள்.
    இத்தகைய கள்வருக்கு ஒப்பானவர்
    உலகில் யாரும் இல்லை..
    இங்ஙனம் பொற்கொல்லன் கூறினான்.

    காவல் இளைஞன் ஒருவன் கள்வனைப் பற்றிக் கூறிய செய்தி

    அப்போது திருத்தமான வேலைத்
    தன் பெரிய கையில் ஏந்திய
    காவல் இளைஞன் ஒருவன்
    இங்ஙனம் கூறலானான்.

    “முன்னொரு நாள் கள்வன் ஒருவன்
    அணிகலன்களைத் திருடும் வேட்கையால்
    இருள் அடர்ந்த நள்ளிரவு யாமத்தில்
    உணவினைத் தேடிப் பசியால் அலையும் புலிபோல்
    என் முன்னால் தோன்றினான்.
    நிலம் தோண்டும் உளியைக் கையில் கொண்டு
    நீல நிற ஆடை உடுத்தியிருந்தான்.

    அவனைக் கொல்ல என் கைவாளை உருவிய போது,
    உடனே அவ்வாளைப் பறித்துக் கொண்டு மறைந்து விட்டான்.
    அதன் பின் அவனை யான் எவ்விடத்தும் காணவில்லை.
    இது போன்ற களவரின் செயல் யாராலும் அறிய முடியாதது.

    இவனைக் கொல்லாமல் நாம் விட்டுவிட்டால்
    அரசனின் தண்டனைக்கு ஆளாக நேரிடும்.
    எனவே, கொல்லும் கருவிகளைக் கையில் ஏந்தியவர்களே!
    நாம் இப்போது என்ன செய்யலாம்என்று
    சிந்தித்துச் சொல்லுங்கள்”என்று
    பிற காவலரிடம் கூறினான்.

     

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 190 – 211

    http://ilakkiyam.com/sangailakkiyam/23-tamil/iyal/sangailakkiyam/pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1133-kolaikalakathai–
     

    Share
  • உன்னையறிந்தால் ……. (30)

    நிர்மலா ராகவன்

    நட்பும் அதிகாரமும்

     உனையறிந்தால்

    கேள்வி: விளையாடும்போது குழந்தைகள் ஏன் ஓயாமல் சண்டை பிடித்துக்கொண்டிருக்கிறார்கள்? தம் குழந்தைகளுடன் தோழமையுடன் பழகுவது பெற்றோரால் முடிந்த காரியமா?

    குழந்தைகள் பிற குழந்தைகளுடன் இணைந்து விளையாடுவது பிற்காலத்தில் பிறருடன் பழக ஒரு பயிற்சி. வெற்றி, தோல்வி இதையெல்லாம் அவர்கள் பொருட்படுத்துவதில்லை. தம்மை வீட்டில் நடத்தும் விதத்தில் பிறரை நடத்துவார்கள். ஏழு வயதுவரை சுயநலம் மிகுந்திருக்கும். அதனால், பிறருக்கு விட்டுக்கொடுப்பது அவர்களுக்குக் கைவராத கலை.

    கதை: திருமணமாகி பல வருடங்களுக்குப்பின் பிறந்த குழந்தை என்பதால், ஏஞ்சல் என்று பெயரிட்டு, தம் பெண்ணை மிகுந்த செல்லம் கொடுத்து வளர்த்தார்கள் அவளுடைய பெற்றோர். அவள் கேட்ட எதையும் மறுத்ததில்லை.

    தான் ஓர் அற்புதமான பிறவி என்று தோன்றிப் போயிருக்கவேண்டும். எட்டு வயதில், தான் பிற சிறுமிகளுடன் விளையாடும்போது, அதே அதிகாரத்தை மற்றவர்களிடம் பிரயோகித்தாள் ஏஞ்சல்.

    அவள் விரும்பியபடியெல்லாம் நடந்துகொள்ள அவர்கள் மறுக்க, தெருவின் குறுக்கே நின்றுகொண்டு, `நான் சொல்வதை நீங்கள் எல்லாரும் கேட்காவிட்டால், காரில் அடிபட்டு சாகப்போகிறேன்!’ என்று மிரட்டியிருக்கிறாள். சில குழந்தைகள் பயந்து, வீட்டில் தெரிவித்தார்கள். ஆனால், அவர்கள் யாரும் அதற்குப்பின் அவளுடன் விளையாடத் துணியவில்லை.

    `என்னை ஏன் யாருக்குமே பிடிக்கவில்லை?’ என்று தனிமையில் அழத்தான் முடிந்தது அவளால். அவளால் மாறவும் முடியவில்லை. ஏனெனில், வீட்டில் தொடர்ந்து ராஜபோகம்தான்.

    குழந்தைகள் தமக்குள் சண்டை பிடித்துக்கொண்டால், பெரியவர்கள் கண்டும் காணாததுமாதிரி இருந்து விட வேண்டும். ஏனெனில், சிறிது நேரத்தில் அதை மறந்து, நட்பாகப் பழகுவார்கள். அதேபோல், குழந்தைகள் விளையாட்டில் தோல்வி அடைந்தால், அது பெற்றோருக்குத் தலைகுனிவு என்பதில்லை. குழந்தைகள் தம் வயதுக்கேற்ப நடக்கும்போது, அதற்காக ஏன் வெட்கப்பட்டு, அவர்கள் நடத்தைக்கு நியாயம் கற்பிக்க வேண்டும்? அவர்கள் தவறிழைக்கும்போதெல்லாம் தாமே சிறுமைப்பட்டு விட்டதைப்போல் குறுகி, குழந்தைகளைப் பழிப்பது தகாது.

    தம் அறிவையெல்லாம் குறுகிய காலத்தில் குழந்தைகளுக்குப் புகட்டிவிட வேண்டும் என்று எண்ணுபவர்கள்போல, `இப்படி விளையாடு,’ `இந்தச் சாமானை வைத்து விளையாடு,’ என்று தொணதொணப்பது ஒழுக்கம் கற்பிக்கும் வழியில்லை. ஒன்றுமே சொல்லாமல் குழந்தையை அதன் போக்கில் விளையாடவிட்டால் போதும். அதன் சிந்தனைத்திறன், ஆர்வம், தன்னம்பிக்கை எல்லாம் வளரும்.

    அப்படியின்றி, தாயின் மறு உரு குழந்தை என்பதுபோல் நடத்தினால், `அம்மா சொற்படி நடந்தால், அவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கலாம். வசவும் கிடைக்காது!’ என்று நினைக்கத் தலைப்படுவார்கள் குழந்தைகள்.

    அறியாப் பருவத்தில் அடக்கு முறையை அன்பு என்று நினைத்து கீழ்ப்படிந்தவர்கள், வயது ஏறியதும், பிறருடன் தம்மை ஒப்பிட்டுக்கொள்கின்றனர். தாம் ஏதோ விதத்தில் பலவீனமாக இருப்பதாக உணர்கிறார்கள். பிறர் சொற்படி நடந்தே பழகிவிட்டவர்களுக்கு சுயமாக எதையும் செய்யத் துணிவிருப்பதில்லை. அப்படியே செய்தாலும், அதிகாரமான பாவனை.
    தம்மை இந்த நிலைக்கு ஆளாக்கிவிட்ட தாய், தந்தை, அல்லது இருவர்மேலும் தீராத ஆத்திரம் கொள்கிறார்கள். அந்த பரிதாபத்துக்குரியவர்களின் மறைவுக்குப் பின்னரும் ஆத்திரம் என்னவோ மறைவதில்லை.

    தான் இன்னும் விவரம் அறியாப்பிள்ளை இல்லை, நல்லது, கெட்டது அறியும் வயதாகிவிட்டது, எதுவானாலும் பொறுப்பு தன்னுடையதுதானே என்றெல்லாம் சிந்தனை போக, பதின்ம வயதினர் பெற்றோரை எதிர்க்கிறார்கள். அறிவோ, அனுபவமோ அதிகம் இல்லாத நண்பர்களுடன் கூடிப் பழகுகிறார்கள்.

    `நாம் இவ்வளவு விரட்டும்போதே கெட்ட பழக்கங்களும், கூடா நட்பும் ஏற்பட்டு விடுகின்றன. ஒன்றுமே சொல்லக்கூடாதா?’ என்று சிலர் யோசிக்கலாம்.

    `உன் ஃப்ரெண்ட்ஸ்கூடப்போறபோது, எப்படியோ டிரெஸ் பண்ணிக்க. என்கூட வரபோது, அதுவும் கோயிலுக்கோ, கச்சேரிக்கோ வர்றபோது சூடிதார், இல்ல புடவைதான்! பெரியவங்க பேசறபோது குறுக்கே பேசக்கூடாது!’ — இப்படி சற்று விட்டுக்கொடுத்து, ஆனால் அதே சமயம் கண்டிப்பையும் விடாது கூறுங்கள். உரத்த குரலில், அதிகாரமாக இல்லை. சாதாரணமாகப் பேசுவதுபோல்.

    அதைக்கூடப் பொறுக்காது, பிள்ளைகள் கத்தினால், ` நான் நல்ல விதமாகச் சொன்னேனே!’ என்று பொறுமையாகச் சுட்டிக் காட்டுங்கள். இருவரும் சேர்ந்து கத்தினாலோ, அல்லது ஒருவர் பயந்து வாயை மூடிக்கொண்டாலோ, மனக்கசப்புதான் மிஞ்சும். இந்த நியதி எல்லா உறவுகளுக்கும் பொருந்தும்.

    எந்த வயதுக் குழந்தையானாலும், பொறுமையோடு அணுக வேண்டும்.

    கதை: `எனக்குப் பொறுமையே கிடையாது!’ என்று எரிச்சலுடன் அடிக்கடி கூறிவந்தாள் ஒரு தாய். குழந்தை விஷமம் பண்ணினால் தன் பொறுமை மீறி, படபடப்பு ஏற்பட்டுவிடும் என்று ஆறு வயதான பின்னரும், `ஒரே இடத்தில் உட்கார்ந்திருக்க வேண்டும், இல்லாவிட்டால் அடி!’ என்று மகனைப் பழக்கியிருந்தாள். தாய் கவனிக்காதபோது, நெருப்புக்குச்சியைப் பற்ற வைத்துக் கொண்டிருப்பான் சிறுவன்! அவனுக்கும்தான் பொழுது போக வேண்டாமா?

    குழந்தை விழுந்தால் அதன் உயிரே போய்விடும் என்பதுபோல், `ஓடாதே! விழுந்துடுவே!’ என்று பல பெற்றோர் எச்சரிக்கிறார்கள். நடக்கப் பழகும்போது, கீழே விழாதவர்கள் யார்?

    அவர்கள் கீழே விழுந்தால், அதைப் பார்க்காத மாதிரி முகத்தைத் திருப்பிக்கொண்டு விடுங்கள். தாய் பதட்டப்படும்போதுதான் அது குழந்தைகளையும் தொற்றிக் கொள்கிறது. பரிவுக்காக அதிகமாக நடிப்பார்கள்.

    குழந்தைகள் விளையாடப் போகுமுன், `நீ சமர்த்து! சண்டை போடாம விளையாடுவே!’ என்று முன்னெச்சரிக்கையாக, ஆனால் புகழ்ச்சிபோல சொல்வது, `மற்ற குழந்தைகளை அடிக்கக்கூடாது!’ என்ற எதிர்மறையான அறிவுரையைவிட நல்ல பயனளிக்கும்.

    அன்பாக இருக்கும் தாயிடம் குழந்தைகள் தங்கள் ரகசியங்களைப் பகிர்ந்து கொள்வார்கள். (`ஒரு பையன் என்னைக் கேலி செய்தான். நான் அவனை உதைச்சேன்!’) அவனுக்குத் தெரிந்த வகையில் எதிர்த்திருக்கிறான். அது புரிந்து, அவனுடைய மனநிலையில் உங்களை வைத்துப்பாருங்கள். ஒரேயடியாக புத்தி சொல்ல வேண்டாம்.

    அதுபோல், `உங்கள் செவிகளுக்கு மட்டும்!’ என்று பகிர்ந்துகொள்வதைப் பிறரிடம் கூறுவது அவனை அவமானப்படுத்துவதாகும்.

    உங்கள் அறிவுரையைப் புரிந்துகொள்ளாது மீறி, தவறிழைக்கிறான். மனம் வருந்தி, அதை உங்களிடமும் சொல்கிறான். அப்போது, `நான் சொன்னதைக் கேட்டிருந்தா, இப்படி ஆகியிருக்குமா?’ என்று இடித்துரைக்கவும் வேண்டாம்.

    அவர்களே குழம்பிக் கொண்டிருக்கும்போது, எதுவும் பேசாது, கேட்டுக்கொள்வதே அன்பின் அடையாளம். நட்பும் வளரும்.
    வீட்டில் காட்டும் நட்புதான் வெளியுலகத்திலும்

    தொடரும்.

    Share
  • குறளின் கதிர்களாய்…(94)

    செண்பக ஜெகதீசன்

    குன்றி னனையாருங் குன்றுவர் குன்றுவ
    குன்றி யனைய செயின்.  (திருக்குறள்-965: மானம்) 

    புதுக் கவிதையில்… 

    மலைபோல உயர்ந்த
    நிலையில் உள்ளோரும்,
    இழிசெயலொன்றைக்
    குன்றிமணியளவு செய்தாலும்
    நிலை தாழ்ந்திடுவர்
    புகழிழந்தே…! 

    குறும்பாவில்… 

    குன்றிமணியளவு இழிசெயலும்
    குறைத்தழிக்கும் புகழை,
    மலையளவு உயர்ந்தோர் செய்தால்! 

    மரபுக் கவிதையில்… 

    மலைபோல் உயர்ந்த மானமுள்ள
      மனிதர் சிலரும் வாழ்வினிலே
    நிலையில் திரிந்து சிலநேரம்,
         நோக்கச் சிறிய உருவினிலே
    குலையாய்க் காய்த்திடும் குன்றிமணி
      காய்ந்து சிதறும் விதையளவு
    விலைபெறா இழிசெயல் செய்தாலும்
      வீழ்ச்சி வாழ்வில் நிரந்தரமே…! 

    லிமரைக்கூ… 

    மானமுள்ள மனிதர் உயர்வினிலே மலை,
    உருவில் சிறிய குன்றிமணியளவு
    இழிசெயல் இவர்செய்தால் தாழ்வார் நிலை…! 

    கிராமிய பாணியில்… 

    மனுசனுக்கு வேணும் மானம்மருவாதி
    மலபோல் மனுசன் ஒயரணுண்ணா
    மனுசனுக்கு வேணும் மானம்மருவாதி… 

    மலபோல் ஒசந்த மனுசனுமே
    சின்னக் குன்னி முத்தளவு
    கெட்ட செயலச் செய்தாலும்,
    நெலம தாந்து போவாரே
    பேருங் கெட்டுப் போயிருமே… 

    மனுசனுக்கு வேணும் மானம்மருவாதி
    மலபோல் மனுசன் ஒயரணுண்ணா
    மனுசனுக்கு வேணும் மானம்மருவாதி…!

     

    Share
  • ஜனக்புரி மகராணி ராஜராஜேஸ்வரியே (பகுதி 3)

    சத்தியமணி

    காஞ்சியில் காமாட்சி மதுரையில் மீனாட்சி

    தில்லியம் பதியில்ஆளும் தேவியே வாழியவே

    ஆஞ்சியில் மன்னர்நாட தலைநகர் வந்துஆள‌

    கொற்றவை கொடிபிடித்த கொலுவீற்று வாழியே

    நாஞ்சிலின் நுனிகண்ட நாரணி சீதையாகி

    மங்கள நாண்காக்கும் மாதாவே வாழியவே

    ஜனக்புரி மகராணி ராஜராஜேஸ்வரியே

    எல்லா நலங்களும் எமக்கருள்வாயே !   5

     

    வித்தையில் விஜயனாக பக்தியில் அனுமனாக

    சங்கீத மாமேதை நாரத முனிவனாக‌

    சித்திரை கதிராக சிங்கார வேலனாக

    மதியில் கண்ணனாக கவிதையில் தாசனாக

    இத்தரையில் உதித்த ஞானியர் வடிவமாக‌

    என்றும் வாழியவே ! எம்உடனுறை வாழியவே

    ஜனக்புரி மகராணி ராஜராஜேஸ்வரியே

    எல்லா நலங்களும் எமக்கருள்வாயே !   6

     

    பக்தியில் பதித்து அனுதின‌ம் துதித்து

    சக்தியின் தாளிலே ச‌ரண‌மடைந்தேன்

    வெற்றியை தருவாய் வினைகள் களைவாய்

    பற்றினேன் உன்பத‌மலர் அடியே

    தாயின் மலரடி போற்றி போற்றி

    குருவின் மலரடி போற்றி போற்றி

     

    Share
  • ஜனக்புரி மகராணி ராஜராஜேஸ்வரியே (பகுதி 2)

    சத்தியமணி

    நவமணிகள் மின்னும் மாலைகள் அழகுபார்த்து

    பெருத்த மார்பகத்தில் அலங்கரித்து வாழியவே

    நலங்களைக் கவரியாக்கி கவிகளை கிரிடமாக்கி

    சொகுசாய் வீற்றிருக்கும் பேரழகே வாழியவே

    தாடங்கம் மின்னலிடும் அகிலாண்ட நாயகியோ

    இல்லையந்த திருக்கடவூர்  அபிராமியோ

    ஜனக்புரி மகராணி ராஜராஜேஸ்வரியே

    எல்லா நலங்களும் எமக்கருள்வாயே !  3

     

     

    கிளிகள் நாடும்கனி வண்டுகள் நாடும்மது

    பொருளை நாடுவோர்க்கு திருமகளே வாழியவே

    கவிகள் தேடும்சபை களிக்கும் உந்தன்அவை

    அருளைத் தேடுவோர்க்கு மலைமகளே வாழியவே

    துளிகள் வெள்ளமாகும் துயரம் யாவும்தீறும்

    ஒளியில் ஆனந்தமாய் தெரிபவளே வாழியவே

    ஜனக்புரி மகராணி ராஜராஜேஸ்வரியே

    எல்லா நலங்களும் எமக்கருள்வாயே !   4

    Share