படக்கவிதைப் போட்டி (38)
பவள சங்கரி
அன்பிற்கினிய நண்பர்களே!
வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?
துளசிதாசன் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.
இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (14.11.2015) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர், தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளர் திருமதி மேகலா தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.
புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்த திருமதி மேகலா இராமமூர்த்தி கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்றவர். அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009 ம் ஆண்டுகளில் (ஆர்லாண்டோ & அட்லாண்டா) கவியரங்கம், இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். புறநானூறு, குறுந்தொகைப் பாடல்களில் அதிக நாட்டமும், இலக்கியக் கூட்டங்களில் சுவைபட பேசுவதிலும் வல்லமை பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்
வண்ணங்களான கடவுள்
விடை மறந்த கடவுள்
வாகை மாதிரியான கடவுள்
வால் கொண்ட கடவுள்
குருதி சொட்டும் கடவுள்
கும்பிட்டு திரியும் கடவுள்
கூந்தல் வளர்க்கும் கடவுள்
ஆடை துறந்த கடவுள்
அழுக்கு நிறைந்த கடவுள்
வாய் உப்பிய கடவுள்
வயிறு உப்பிய கடவுள்
மஞ்சள் புடவைக் கடவுள்
மகாநதி பேசும் கடவுள்
மத்தளம் அடிக்கும் கடவுள்
மயானம் சுமக்கும் கடவுள்..
குழுமியிருக்கும் கடவுள்கள்
மத்தியில் திருதிருவென
விழித்துக் கொண்டிருந்தார்
புதிதாக சேர்ந்த, இன்னும் பெயர்
வைக்கப் படாத
இந்த கடவுளும்….
கவிஜி
நம்பிக்கை…
நிறைய வேண்டும்
நம்பிக்கை என்பதால்தானோ,
நம்பிக்கையுடன்
நிறைய கைகள் வைத்துக்கொண்டார்களோ
நாம் வணங்கும் கடவுள்களுக்கு…!
-செண்பக ஜெகதீசன்…
பட வரி 38.
எந்த உருவிது
பதினாறு கரங்களது விரித்து
பதித்த எந்த உருவிது!
பக்தியாய் வணங்குவதும் கலையிதுவென
பத்திரமாய் மதித்துச் செல்வதும்
பதுமையாய் பார்த்து விலகுவதும்
பலரது மன எண்ணமாகுது.
வேலையற்றவர் வேலையிதுவென சிலரது
வேற்றுமை எண்ணமும் குவிகிறது.
வேதா.இலங்காதிலகம்.
டென்மார்க்
14-11-15
எம்மதமும் சம்மதம்
தீவிர வாதமும்
பயங்கர வாதமும்
உச்சமாகிப்போனது
கொலைகளைச்செய்வதையே
கொள்கையாய் கொண்டோரையும்
நின்றழிக்கும் பத்ர காளியாய் தோன்றி பயமுறுத்த புறப்பட்டாயோ?
எம்மதமும் நம் மதமாய்
சம்மதித்து வாழ வழி செய்வாயோ
இல்லை நீயும் பொய் வேடமிட்டு
குண்டு வைப்பாயோ யாரறிவார்?
கடவுள் பெயராலேயே
கன்னக்கோல் சாத்தும் உலகமாயிற்றே
எல்லாம் கலிகாலம்…