Year: 2020

  • பூலோக சொர்க்கம் மொரீசியஸ் – தெ.ஈசுவரன் உரை

    பூலோக சொர்க்கம் மொரீசியஸ் – தெ.ஈசுவரன் உரை

    அண்ணாகண்ணன்

    இலங்கைத் தொழிலதிபர், அமரர் தெ.ஈசுவரன், இலங்கைக்கான மொரீசியஸ் நாட்டின் கௌரவத் தூதராக இருந்தவர். இயல்பிலேயே அமைதியும் நிதானமும் பொறுமையும் கொண்ட அவரது பேச்சும் தெளிந்த நீரோடை போல் இருக்கும். ஈஸ்வரன் பிரதர்ஸ் என்ற தேயிலை ஏற்றுமதி நிறுவனம், மொரீசியஸ் தூதரகப் பணி, கம்பன் கழகத் தலைவர், பிள்ளையார் கோவில் அறங்காவலர், ஆஞ்சநேயர் கோவில் கட்டுமானப் பணி, இலங்கையின் மிக உயரமான புத்தர் சிலை எழுப்புதல், சாயிபாபா அறக்கட்டளை, பல்வேறு பொது நிகழ்ச்சிகள்… எனப் பற்பல பணிகளுக்கு இடையில், உட்கார்ந்து எழுதுவதற்கு அவருக்கு நேரமில்லாமல் இருந்தது.

    2010 காலக்கட்டத்தில், அவருடைய அர்த்தமுள்ள அனுபவங்கள் நூலை அவர் சொல்லச் சொல்ல, நான் எழுதினேன். அதன் பதிப்பாசிரியராகவும் பணியாற்றினேன். இதற்காகக் கொழும்பு மாநகரில் இரு மாதங்கள், அவருடன் இணைந்திருந்தேன். சென்னைக்குத் திரும்பிய பிறகு, நேரில் சந்திக்க இயலாதபோது என்ன செய்வது என்ற கேள்வி எழுந்தபோது, அப்படியே பேசி, ஒலிக்கோப்பாக அனுப்பிவிடுங்கள். நான் தட்டச்சு செய்து அனுப்புகிறேன் என்று கூறினேன். அந்தக் காலத்தில் இன்றுபோல், ஒலியை எழுத்தாக்கும் மென்பொருள் கருவிகள், தமிழில் நடைமுறைக்கு வரவில்லை.

    அப்படி ஒரு முறை 2011இல் மொரீசியஸ் நாட்டைப் பற்றிய இந்தக் கட்டுரையை அவருடைய குரலில் பதிந்து அனுப்பியிருந்தார். பேச்சையே மென்மையாக, ஒரு தியானம் போல அவர் நிகழ்த்தியுள்ளதை இந்த உரையில் நீங்கள் கேட்கலாம்.

     

    Share
  • படக்கவிதைப் போட்டி – 255

    படக்கவிதைப் போட்டி – 255

    அன்பிற்கினிய நண்பர்களே!

    கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    பார்கவ் கேசவன் எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து ராமலக்ஷ்மி  தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (26.04.2020) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • படக்கவிதைப் போட்டி 254-இன் முடிவுகள்

    படக்கவிதைப் போட்டி 254-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    திரு. பிரேம்நாத் திருமலைச்சாமியின் கலைவண்ணத்தில் உருவான இந்த நிழற்படத்தைப் படக்கவிதைப் போட்டி 254க்குத் தேர்வுசெய்து தந்திருப்பவர் திருமிகு. ராமலக்ஷ்மி. நிழற்படக் கலைஞர், தேர்வாளர் இருவருக்கும் என் நன்றிகளை உரித்தாக்குகின்றேன்!

    ”புன்னகையால் அன்னையை மட்டுமல்லாது
    அகிலத்தையே மயக்கிடும் ஆற்றல்பெற்றது கனிமழலை!
    என்றென்றும் நிலைக்கட்டும் இந்த அழகின் சிரிப்பு!” என்று வாழ்த்திவிட்டு, இப்படத்திற்குக் கவிஞர்கள் வடித்துத் தந்திருக்கும் கற்கண்டுக் கவிதைகளைச் சுவைத்துவரப் புறப்படுவோம்!

    *****

    ”அன்னையைப்போல் அல்லாமல் நீ படிப்பில் சிறக்க வேண்டும்; உயர்ந்த நிலையும் கண்டிட வேண்டும்” என்று மழலையிடம் மனந்திறக்கும் அன்னையைக் காண்கிறோம் திரு. செண்பக ஜெகதீசனின் கவிதையில்.

    உயர் நிலை…

    அன்னை யென்றே ஆக்கியேதான்
    அடுத்த நிலைக்கே உயர்த்திவிட்டாய்,
    என்னைப் போலப் படிப்பறிவில்
    எளிய நிலையிலே விட்டிடாமல்
    உன்னை நானும் படிக்கவைத்தே
    உயர்ந்த நிலையில் வைத்திடுவேன்,
    தன்னை யறிந்திடத் தங்கமேயுனைத்
    தகுந்த முறையில் வளர்ப்பேனே…!

    *****

    அச்சமற்ற பெண்ணாய், மங்காத பொன்னாய், தாழ்வகற்றும் தண்ணிழலாய், மடமையிருள் போக்கும் மாவிளக்காய்த் தன் பிள்ளைக்கனி திகழவேண்டும் என விரும்பும் அன்புத் தாயை நம் கண்முன் நிறுத்துகின்றார் திருமிகு. ச. கண்மணி கணேசன்.

    பிள்ளைக்கனி

    செல்லம்மா – நீ சாதித்துப் பேர்வாங்கப் பிறந்தவள்; உன்சாதனை
    நாலுபேருக்கு வழிகாட்டி ஒளியூட்டுவதாய் இருக்கட்டும்!

    முத்தம்மா – நீ முன்னேறி மின்னப் பிறந்தவள்; உன்பாதை
    தடைக்கற்களைப் படிக்கட்டுகளாக்கும் வித்தையைச் சொல்லட்டும்!

    சின்னம்மா – நீ பதினாறும் பெறப் பிறந்தவள்; உன்இல்லறம்
    ஆலாய்த்தழைத்து அறுகாய்வேரோடி நல்லறம் ஆகட்டும்!

    அன்னம்மா – நீ நிமிர்ந்து நிற்கப் பிறந்தவள்; உன்ஆளுமை
    நாண்அச்சமின்றி மானிடம் மணக்க மிளிரட்டும்!

    தங்கம்மா – நீ என்றுமென் பேர்சொல்லப் பிறந்தவள்; உன்வாழ்வு
    மங்காத பொன்னாய்ப் புடம்போட்டு ஒளிரட்டும்!

    தாயம்மா – நீ தாழ்வகற்றத் தண்ணிழலாய் உதித்தவள்; உன்பிறவி
    சேயாகித் தரணியெங்கும் தமிழ்ப்புகழ் கூட்டட்டும்!

    நல்லம்மா – நீ எதையும் எதிர்கொள்ளப் பிறந்தவள்; உன்மேனி
    வெல்லும் அழகொடு திடம்பெற்றுப் பொலியட்டும்!

    பொன்னம்மா – நீ இலக்குநோக்கிப் பாயப் பிறந்தவள்; உன்மனம்
    மன்னும்விளக்காய் ஆயிரமாயிரம் அகலொளி ஊட்டட்டும்!

    கண்ணம்மா – நீ கற்றுக் கரைசேரப் பிறந்தவள்; உன்கல்வி
    மண்ணின் இருள்போக்கும் மாவிளக்காய்த் திகழட்டும்!

    அமிர்தம்மா – நீ சமைத்துப் பசியாற்றவும் பிறந்தவள்; இப்போது
    என்னிடம் வாநாம் ‘பப்பு கடஞ்சி’ விளையாடுவோம்!

    *****

    ”பாசப் பந்தே! பரிமளமே! பூடணம் வேண்டா ஆடகப் பொன்னே! சாதிக்கப் பிறந்தவள் நீ! உலக சரித்திரம் படைத்துவிடு!” என்று மங்கல மொழிகளால் மழலையை வாழ்த்துகின்றார் திருமிகு. சுதா மாதவன்.

    பாசப்பந்து நீதானே
    பரிமளமாய் இருப்பவளே
    முளைப்பற்கள் வருமுன்னே
    முகம் சாய்த்துச் சிரிப்பவளே

    தத்தி நடக்கும் கால்களோடு
    தாவிப் பிடிக்கும் கைகளும்
    தாயும் பாசப்பரிவோடு உனை
    தாங்கித் தான் பிடிக்கிறாளோ?

    தங்கம் வெள்ளி உனக்கெதற்கு?
    சர்வ பூஷணம் நீதானே!
    கவலைகள் நூறிருப்பினும் உனைக்
    கொஞ்சி மகிழும் தாயவள்!

    அவள் கனவு என்னவென்று
    கேட்டு நீயும் வளர்ந்திடு
    சாதிக்கப் பிறந்தவள் நீ
    சரித்திரம் படைத்திடு
    உலக மகா சரித்திரம் படைத்திடு!

    *****

    ”அன்னை மடி மெத்தையிலே ஆடிடும் தத்தை எனக்கு அன்னையின் அன்பே உயிர்காப்பு!” என்று தாயின் உயர்வைப் போற்றிடும் சேயைக் காட்டுகின்றார் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன்.

    அன்பின் அரிச்சுவடி

    அன்னைமடி மெத்தையிலே
    ஆடுமொரு தத்தை நான்!
    இத்தரையில் பிறந்தவரில்
    ஈடுஇணை அற்றவள் நான்!
    உத்தமராய் இவருமெனை
    ஊட்டி தினம் வளர்த்திடவே
    எத்தனையோ பிறவிக்கடன்
    ஏட்டினிலும் எழுதவொண்ணா
    ஐயிரு திங்கள் வைத்தீன்று
    ஒப்புரவுடனே வாழ்வதற்கு
    ஓயாமல் காத்து நிற்கும்
    ஒளடதமாம் இவர் அன்பெனும்
    ஆயுதமேயென் உயிர் காப்பு!

    *****

    தாய் சேய் உறவை அற்புதமாய்த் தம் பாக்களில் நெய்திருக்கும் கவிஞர்கள் அனைவருக்கும் என் மனங்கனிந்த பாராட்டுக்கள்!

    அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவாகியிருப்பது…

    உன்னுதட்டில் தெறிப்பதெல்லாம்
    என்னுயிரின் சிரிப்பு!
    உன்னுருவம் தானடி
    என் விழியின் சிலிர்ப்பு!

    குயிலும் குருவியும்
    சிரிக்கிறது மேலே
    உந்தன் மொழியோ
    புரிந்தது போலே!

    ஆழி அருவியின்
    ஆலாபம் சங்கீதம்
    அத்தனையும் அடங்கியதே
    அழகியுன் ரீங்காரம்!

    மகளே நீயே
    மாயக் கண்ணாடி!
    எந்தன் மறுவுருவைக்
    காட்டிவிட்டாய் முன்னாடி!

    அம்மாவென நானலற – நீ
    ஒருமுறை பிறந்தாயடி!
    அம்மாவென நீயழைக்க – நான்
    ஒவ்வொருமுறையும் பிறக்கிறேனடி!

    ”மகளே! நீயே என் உயிரின் சிரிப்பு, விழியின் சிலிர்ப்பு! மாயக் கண்ணாடியான உன்னில் என்னைக் காண்கிறேன்! நான் அம்மாவென்று அலற நீ பிறந்தாய்! நீ அம்மாவென்று அழைக்கும் ஒவ்வொரு முறையும் நான் பிறக்கிறேன்!” என்று மகளுக்கும் அன்னைக்குமிடையே பின்னிப் பிணைந்திருக்கும் உன்னத உறவை உணர்வுபூர்வமாய் விவரித்திருக்கும் திருமிகு. புவிதா அய்யாதுரையை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

    Share
  • கணித மேதை சீனிவாச ராமானுஜன் நினைவில்லம்

    கணித மேதை சீனிவாச ராமானுஜன் நினைவில்லம்

    அண்ணாகண்ணன்
     
    கணித மேதை சீனிவாச ராமானுஜனின் கும்பகோணம் வீட்டை, சாஸ்திரா பல்கலைக்கழகம், நினைவில்லமாகப் பரமாரித்து வருகிறது. கும்பகோணம் சென்று வந்த பலரும் கூட, இந்த வீட்டை நாங்கள் பார்க்கவில்லையே என்று வருந்தினார்கள். நாங்கள் சென்ற சமயத்தில் வீடு பூட்டப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்க்க ஆவலிருந்தும் முடியாமல் போய்விட்டது என்று நண்பர் முத்துக்குமார் பொன்னம்பலம் தெரிவித்திருந்தார். ரேழியும் முற்றமும் கொல்லையும் கொண்ட இந்த வீட்டுக்குள் சென்று வருவது, அந்தக் காலத்திற்கே பயணிக்கும் உணர்வைத் தருகிறது.
     
    29.12.2019 அன்று இந்த இல்லத்தைப் பார்த்து, அங்கிருந்த குறிப்பேட்டில், உடனுக்குடன் நான் எழுதிய வெண்பா இது.
     
    கனவில் உதித்த கணிதப் புதிர்கள்
    மனத்தில் விழித்த மனிதன் – தனித்துவ
    ராமா னுஜனின் ரகசியப் புள்ளிகள்
    சாமான்யன் வாழும் சபை.
     
    இராமானுஜனுக்குக் கனவில் கணித சூத்திரங்களுக்கு நாமகிரித் தாயார் விடை தந்துள்ளார். கடினமான கணக்குகளுக்குக் கனவில் விடை கண்டு, உடனே எழுந்து அவற்றின் வழிமுறைகளை எழுதுவது கணித மேதை ராமானுஜத்தின் வழக்கம். அவர் பயன்படுத்திய கட்டிலையும் கட்டிலிலிருந்து மேலே பார்க்கும்போது காட்சி தரும் உத்திரத்தையும் இந்தப் பதிவில் நீங்கள் காணலாம்.
     
     
    Share
  • வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-20

    வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-20

    தி. இரா. மீனா

    தோண்ட்ட சித்தலிங்க சிவயோகி 

    கன்னட உலகில் இலிங்காயத்துக்களின் வரலாற்றில் மிகச் சிறந்தவராகப் போற்றப்படுபவர். அல்லமா பிரபுவின் வழியிலான சூன்யபீடம் பசவேசர் உருவாக்கிய ஸட்ஸ்தல சித்தாந்தத்தை விளக்கமாகச் சொல்லி அனுபவ மண்டபத்தின் வழிமுறைகளைச் சீரமைத்து உயர்த்தியவர். இவரது சாதனைகள் கல்வெட்டுக்களில் வெளிப்படுகின்றன. மடங்கள், கோயில்கள் ஆகியவற்றிலும் இவர் பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ளன. அரதனஹள்ளி இவரது ஊராகும். தோட்டத்தில் எவ்விதப் பணியும் செய்யாமலிருந்ததால் “தோண்ட்ட சித்தலிங்கா“ என்றழைக்கப்பட்டார். பசவேசரின் வசனங்களை தேடிக்கண்டு பிடித்து தொகுத்து வசன இலக்கியப் பரம்பரையை முன்னடத்திச் சென்ற பெருமை இவருக்குண்டு. ”மகாலிங்க குரு சித்தேஸ்வர பிரபுவே” இவரது முத்திரையாகும்.

    1.“ஆட்டுவிக்காமல் ஆடுவதுண்டோ? எரியாமல் சுடுமோ ?
    சமைத்ததை மீண்டும் சமைக்கலாமோ?
    சுட்ட சட்டி மீண்டும் மண்ணோடு இணையுமா?
    நெருப்பு கற்பூரத்தை சார்ந்த பின்பு கரியுண்டோ?
    நதியும் நதியும் சேர்வது போல அடியான் இலிங்கமோடிணைந்து
    இலிங்கம் அடியானோடிணைய வேண்டும் ஐயனே!
    அஞ்ஞானிகளைக் காட்டாதிருப்பாய்
    மகாலிங்ககுரு  சிவசித்தேஸ்வரப் பிரபுவே“

    2.“ஈசலை உண்ட நரி தன் செயலுக்கு ஊளையிடுவது போல
    பேச்சின் கர்வத்திற்கு ஆகமம் அறிவோம் எனச் சொல்வர்
    ஆகமம் அதிமர்மமானது, அது அறிவீரோ மாந்தரே?
    ஆன்ம அனுபவத்தின் ஆகமமூர்த்தி அறிவான்
    உன் சரணர் அறிவர்
    மகாலிங்ககுரு  சிவசித்தேஸ்வரப் பிரபுவே“

    3.“பெருவிரலில் நாகம் தீண்டினால்
    உடல் முழுவதும் நஞ்சாகும்
    சரணன் உடலில் இலிங்கம் தீண்ட
    அவனுடல் முழுவதும் இலிங்கமாகிவிடும்
    அழிவிலாத சரணனுக்கு காமத்தின் உறவுண்டோ?
    மகாலிங்ககுரு  சிவசித்தேஸ்வரப் பிரபுவே“

    4. “வலமில்லை இடமில்லை முன்னுமில்லை பின்னுமில்லைகாரணம்
    அடியற்ற முடியற்ற உடலற்ற
    பிடிக்க, விட, காண, பேச,சேர முடியாத இணையற்றவன் நீ
    வடிவம் , நினைவற்று மகிமையானவனாதலால்
    அருவமில்லா இலிங்கம் நீ
    மகாலிங்ககுரு  சிவசித்தேஸ்வரப் பிரபுவே“

    5. “மாயையை வெற்றி கொள்ளாத வரையில்
    உடல்  நிர்வாணமாகியென்ன?
    உலகியலை விடாத வரையில்
    மொட்டையடித்தென்ன? எத்தகைய முக்தியிது?
    புறத்தோற்றத்தின் அற்பர்களைச் சரணர் விரும்புவதில்லை.
    மகாலிங்ககுரு  சிவசித்தேஸ்வரப் பிரபுவே“

     6. “அகப்பை சுவையறியுமா?
    சமைத்த சட்டி சாப்பிட இயலுமா?
    வெட்டவெளியைக் கட்டுப்படுத்த இயலுமா?
    அன்பு இல்லாதவரின் இலிங்கம் நியமத்திற்குள் அடங்குமா?
    மகாலிங்ககுரு  சிவசித்தேஸ்வரப் பிரபுவே“

     7. “படிகக் குடத்தின் விளக்கு
    உள்ளும் புறமும் ஒரேயளவில்  பிரகாசிப்பது போல
    என்னுள்ளும் புறமுமிருக்கும் இறைவன்
    ஆதியந்தம் காண வந்தான்
    அப்பரத் தத்துவ அடியான் ஒருவனே பாரீர்
    மகாலிங்ககுரு  சிவசித்தேஸ்வரப் பிரபுவே“

     8. “பெண்ணை, மண்ணை, பொன்னை விட்டேனென
    உலகின் கண்களைக் கட்டுபவர்களே கேளுங்கள்!
    பேச்சை விட்டீரோ? மனதை விட்டீரோ? சொல்வீர்
    இலிங்க நினைவு ஆளுமைக்குள் வந்தால் விட்டனரென்பேன்
    பேச்சை விட்டுவிட்டு மனத்துள் கொண்டால்
    பிறப்பு இறப்புக்களில் நிறுத்தி
    காலணியைக் கடிக்கும் நாய்போல விடாது பாரய்யா!
    பிடித்து சம்சாரிகளாகி, விட்டு துறவியாகி
    இரண்டுமன்றி துன்பப் படுபவரை என்னென்பேன்?
    மகாலிங்ககுரு  சிவசித்தேஸ்வரப் பிரபுவே“

    தட்சகண சிங்கிதேவய்யா

    “நாச்சய்யா பிரியமல்லிநாதய்யா“ இவரது முத்திரையாகும். குருபக்தியைக் காட்டுவதாக வசனங்கள் அமைகின்றன.

    1. “மனைவி மக்கள் பெற்றோர்க்கெனப் பெற்றால்
    உன்மீ்தாணை ஐயனே,
    மக்களுக்குச் சேவையாற்றினால் உன்மீதாணை
    உன்னையன்றிப் பிறரை வணங்கினால் உன்மீதாணை
    என் மனைவியன்றிப் பிறன்மனை விரும்பின் உன்மீதாணை
    உடல் உள்ளம் செல்வம் வஞ்சனையானால்
    உன்மீதாணை நாச்சய்யாப் பிரிய மல்லிநாதனே“

    2. “மனைவி மக்கள் பணியாளர் வஞ்சகர் பகைவரென்று
    நினைப்பது என் பிழை ஐயனே
    விழிப்பு கனவு உறக்கம் என பிழை எனதய்யனே
    மற்றவரில் நீங்களிருக்க அதையறியாத பிழை எனதய்யனே
    நாச்சய்யாப் பிரிய மல்லிநாதனே“

    தசரய்யா 

    இராமகொண்டே என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். தினமும் தோட்டத்திற்குச் சென்று பூக்களைக் கொய்து வந்து வழிபாடு  செய்வது இவரின் காயகம். ஒரு முறை பூக்கொய்த  போது “ஐயோ நொந்தேன் “என்றொரு ஒலி கேட்க அன்றிலிருந்து  பூக்களைக் கொய்வதை விட்டுவிட்டுக் கிழே கிடக்கும் பூக்களை  எடுத்து வந்து வழிபாடு செய்ததாக ஒரு செய்தியுண்டு. ”தசரேஸ்வரலிங்கா” என்பது இவரது முத்திரையாகும்.

    “உலகின் கூறு உடல்
    சூரியனின் கூறு சுக்கில சுரோணிதம்
    சிவனின் கூறு பசி
    காற்றின் கூறு ஜீவாத்மா
    வானத்தின் கூறு நெற்றி நடு சூட்சுமம் என
    இவை ஐந்துமுள்ள வரையில் வெற்றி தோல்வியுண்டு.
    அங்கங்கே இவற்றைத் தடுத்து விடுவிப்பாய்
    உனக்கு என்னிடம் அற்பத்தனம் வேண்டாம்
    அது என் பிழையன்று,உன் பிழையே
    தசரேஸ்வரலிங்கமே“

    தசரய்யாவின் புண்ணிய ஸ்த்ரி வீரம்மா

    இவர் தசரய்யாவின் மனைவி. சரணர் மனைவி புண்ணியஸ்திரீ என்ற அடைமொழியோடு அழைக்கப்படும் நிலையைச் சில இடங்களில் காணமுடிகிறது.” குருசாந்தேஸ்வரன் “இவரது முத்திரையாகும்

    “சேவல் நேரமறியும்
    சரணன் விரத ஈனனை அறிவான்
    அறிந்தும் சேர்ந்தால் நரகமே
    குருசாந்தேஸ்வரனே “

                                  [தொடரும்]

    Share
  • நாலடியார் நயம் – 7

    நாலடியார் நயம் – 7

    நாங்குநேரி வாசஸ்ரீ

     7. சினம் இன்மை

    பாடல் 61

    மதித்திறப் பாரும் இறக்க மதியா
    மிதித்திறப் பாரும் இறக்க – மிதித்தேறி
    ஈயுந் தலைமேல் இருத்தலால் அஃதறிவார்
    காயும் கதமின்மை நன்று.

    மதித்து நடப்பாரும் நடக்கட்டும்
    மதியாது அவமதிப்பாரும் இருக்கட்டும்
    அற்ப ஈயும் மிதித்து ஏறித்தலையில்
    அமருதலால் அந்நிலையுணர்ந்து
    சிந்திக்கும் சான்றோர் அவமதிப்போரை
    சீறிச்சினந்து இருத்தல் வேண்டா.

    பாடல் 62

    தண்டாச் சிறப்பின்தம் இன்னுயிரைத் தாங்காது
    கண்டுழி யெல்லாம் துறப்பவோ – மண்டி
    அடிபெயரா தாற்ற இளிவந்த போழ்தின்
    முடிகிற்கும் உள்ளத் தவர்.

    ஓரடியும் எடுத்து வைக்க
    ஒழியாத பெரு அவமதிப்பு
    வந்த காலத்தும் கலங்காது
    வகுத்த காரியம் நிறைவேற்றும்
    மனவலிமை மிக்கார்
    மிகச் சிறந்த தம் உயிரை
    சிறிய இடர் வந்தகாலத்தே
    சினம் பொறுக்காது விடுவரோ?

    பாடல் 63

    காவா தொருவன்தன் வாய்திறந்து சொல்லுஞ்சொல்
    ஓவாதே தன்னைச் சுடுதலால் – ஓவாதே
    ஆய்ந்தமைந்த கேள்வி அறிவுடையார் எஞ்ஞான்றும்
    காய்ந்தமைந்த சொல்லார் கறுத்து

    நா காவாமல் வாய்திறந்து
    நவிலும் சினச்சொல்
    இடைவிடாது தனக்கே
    இன்னலைத் தந்துவிடும்
    இடையறாது ஆராய்ந்து
    பொருந்திய கேள்வி அறிவைப்
    பெற்ற சான்றோர் சினத்தினால்
    கடுஞ்சொல் கூறார் என்பது
    கற்றறிந்த மேலோரின் கருத்து.

    பாடல் 64

    நேர்த்து நிகரல்லார் நிரல்ல சொல்லியக்கால்
    வேர்த்து வெகுளார் விழுமியோர் – ஓர்த்ததனை
    உள்ளத்தான் உள்ளி உரைத்துராய் ஊர்கேட்பத்
    துள்ளித்தூண் முட்டுமாம் கீழ்.

    பெரியோர் தமக்கு நிகரல்லாதார்
    பழிச்சொல்லைச் சொல்லுங்கால்
    மனம் புழுங்கிச் சினம் கொள்ளார்
    மனதில் இருத்தி நினைத்து நினைத்து
    மற்றவரிடம் பகிர்ந்து மேலும்
    கோபமுற்று ஆறாது ஊரெல்லாம்
    கேட்பத் துள்ளிக் குதித்துத் தூணில்
    முட்டிக்கொள்வர் கீழ்மக்கள்.

    பாடல் 65

    இளையான் அடக்கம் அடக்கம் கிளைபொருள்
    இல்லான் கொடையே கொடைப்பயன் – எல்லாம்
    ஒறுக்கும் மதுகை உரனுடை யாளன்
    பொறுக்கும் பொறையே பொறை.

    பொறிவழிச் செல்லா இளைஞனின்
    புலனடக்கமே அடக்கம்
    கொஞ்சமும் பொருள் இல்லானின்
    கொடையே பயனுள்ள கொடை
    பலவித எதிர்ப்புகளை வெல்லும்
    பலமும் மனவுறுதியும் உடையோன்
    சினம் பொறுத்தலே ஆகச்
    சிறந்த பொறுமை.

    பாடல் 66

    கல்லெறிந் தன்ன கயவர்வாய் இன்னாச்சொல்
    எல்லாரும் காணப் பொறுத்துய்ப்பர் – ஒல்லை
    இடுநீற்றால் பைஅவிந்த நாகம்போல் தத்தம்
    குடிமையான் வாதிக்கப் பட்டு.

    கல் எறிந்ததுபோல் வரும்
    கீழ்மக்கள் வாய்ச்சொல்லை
    மந்திரித்து இட்ட திருநீற்றினால்
    மயங்கிப் படம் அடங்கும்
    பாம்பைப்போல் தங்கள்
    குலப்பெருமையால் தடைபட்டு
    கட்டுண்டு சினமின்றி அமைதிகாத்து
    நல்வழி செல்குவர் பெரியோர்.

    பாடல் 67

    மாற்றாராய் நின்றுதம் மாறேற்பார்க்கு ஏலாமை
    ஆற்றாமை என்னார் அறிவுடையார் – ஆற்றாமை
    நேர்த்தின்னா மற்றவர் செய்தக்கால் தாம்அவரைப்
    பேர்த்தின்னா செய்யாமை நன்று.

    பகைகொண்டவராய் இருந்து
    பகைமைக்கேற்ப தீச்செயல்
    புரியும் ஒருவரை எதிர்த்துநின்று
    பகை கொள்ளாது பொறுமைகாப்பவரின்
    பண்பை இயலாமை எனப்
    பகரமாட்டார் பெரியோர்
    பகைவர் மனம் அடங்காது
    பல துன்பம் இழைப்பினும்
    பழிதீர்க்க திரும்பத் தீமைகள்
    புரியாதிருத்தலே நல்லது.

    பாடல் 68 

    நெடுங்காலம் ஓடினும் நீசர் வெகுளி
    கெடுங்காலம் இன்றிப் பரக்கும் – அடுங்காலை
    நீர்கொண்ட வெப்பம்போல் தானே தணியுமே
    சீர்கொண்ட சான்றோர் சினம்.

    கீழ்மக்கள் சினம் நெடுங்காலம்
    கழியினும் தணியாது வளரும்
    காய்ச்சும் பொழுது நீர்
    கொண்ட வெப்பம்போல்
    தானே தணிந்து குறையும்
    மேன்மை மிகுந்த
    மேலோர்களின் சினம்.

    பாடல் 69

    உபகாரம் செய்ததனை ஓராதே தங்கண்
    அபகாரம் ஆற்றச் செயினும் – உபகாரம்
    தாம்செய்வ தல்லால் தவத்தினால் தீங்கூக்கல்
    வான்தோய் குடிப்பிறந்தார்க் கில்.

    தாம் செய்த உதவியைத்
    துளியும் சிந்தியாது
    தமக்குத் தீமையே செய்தாலும்
    தாம் அவருக்கு நன்மையே கருதி
    திரும்பவும் உதவுவார்களன்றி
    தீமைசெய்தல் வானளவு புகழ்
    தன்னகத்தே கொண்ட குடியில்
    தோன்றியோர்க்கு இல்லை.

    பாடல் 70

    கூர்த்துநாய் கெளவிக் கொளக்கண்டும் தம்வாயாற்
    பேர்த்துநாய் கெளவினார் ஈங்கில்லை – நீர்த்தன்றிக்
    கீழ்மக்கள் கீழாய சொல்லியக்காற் சொல்பவோ
    மேன்மக்கள் தம்வாயால் மீட்டு.

    கோபம் கொண்ட நாய்
    கடித்தாலும் தம்வாயால்
    எதிர்த்துக் கடித்தவர்
    எவரும் இல்லை இவ்வுலகில்
    குணமில்லாக் கீழ்மக்கள்
    கூறும் ஈனச்சொல்லை
    மீண்டும் கூறுவரோ
    மேலோர் தம் வாயால்.

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 77 (அக்குல)

    சேக்கிழார் பாடல் நயம் – 77 (அக்குல)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

     அக்கு   லப்பதிக்  குடிமுதல்  வணிகர்;
        அளவில் செல்வத்து  வல்லமையின்  அமைந்தார்;
    செக்கர்   வெண்பிறைச்  சடையவர்  அடிமைத்
         திறத்தின்  மிக்கவர்; மறைச்சிலம்  படியார்;
    மிக்க   சீர்அடி  யார்கள்யா ரெனினும்
          வேண்டும்  யாவையும்  இல்லை என்னாதே
    இக்க  டல்படி  நிகழமுன்   கொடுக்கும்
             இயல்பின்  நின்றவர்; உலகியற்   பகையார் .

    பெருமையும்  வளமும் நிறைந்த பூம்புகார்  நகரில் பெருங்குடி  வணிகர் மரபைச் சேர்ந்த  ஓரடியார் வாழ்ந்தார். அவருக்கு வாணிகத்தினால்  வந்த பொருட்செல்வமும், இயற்கை நில வளங்களையும் பெற்று வாழ்ந்தார். பொருட் செல்வத்துடன் அருட் செல்வத்தையும் பெறும் நோக்கத்துடன் பிறையணிந்த செஞ்சடைப்  பிரானின்  திருவருளையும் நாடி  அடிமைத் திறத்தைப் பேணி வந்தார். அவர் செஞ்சடைப்பிரானின், வேதங்களாகிய சிலம்புகள் ஒலிக்கும்  திருவடிகளை யுடையார் தம், பெரும் சிறப்புடைய அடியவர்கள் யாவரேயாயினும், அவர்கள் வேண்டியவை   எவையேயாயினும் இல்லையென்னாதே கடல் சூழ்ந்த இந்த உலகிலே விளக்கமுற முன்னே கொடுக்கும் தன்மையிலே நிலைத்து நின்றவர் ஆவார்.  அவர் உலகியலுக்கு  மாறான நிலையிலே  எவையாயினும் இல்லை என்னாமல் கொடுக்கும் பண்பினால் ‘’உலகியற் பகையார்’’ என்ற காரணப் பெயரைப் பெற்றிருந்தார்.

    அவ்வூரின் பெருங்குடி வணிகர்கள் நற்குடி நாற்பத்தெண்ணாயிரவர் ஆவர். அவர்கள் இப்பர், கவிப்பர், பெருங்குடி வாணிபர் என மூன்று வகையினர். இவ்வகையிலே இயற்பகையார் மூன்றாவது வகையினர்.

    உலகச் செல்வம் சிவனடிமைத் திறத்தில் ஒழுகாதவிடத்திற் செல்வமாகாது; இன்னலுக்கே யேதுவாகும்,  ஆதலின் இதனையடுத்து பிறையணிந்த செஞ்சடைப்  பிரானின்  திருவருளையும் நாடி  அடிமைத்திறத்தில்  எவரினும் மிக்கவராய்  விளங்கினார் என  உடன்சேர்த்துக் கூறினார். அடியாரிடத்து அன்பு செய்யாக்கால் “ஈசனுக் கன்பிலார் அடியவர்க்கன் பில்லார்“ என்றபடி ஈசனிடத்தும் அன்பு இல்லையாய் முடியும்;  ஆதலின் அடியார்பாலன்பும் அடுத்து வைத்தோதினார்.

    அவர்  எல்லாவகைச் செல்வமும் பெற்றிருந்தாலும், அதன்  மேலும்  ஈசன் அடிமைச் செல்வமும் பெற்றிருந்தார். ஆதலால்  அடியார்க்குக்  கொடுக்கும் இயல்பில்   மற்றவரினும்  மிக்கவர்  ஆவார். இப்பாடலில் ‘’மறைச்சிலம்படியார்’’ என்ற தொடர் இறைவன் பாதச் சிலம்புகள் இறைவன் இலக்கணங்களையே தம்முட் கொண்டு ஒலிப்பன என்பதை விளக்குகிறது. ‘சார்ந்ததன் வண்ணமாதல்’ என்பது தத்துவம்! அந்தணரின் வேத ஒலிகள் கிளிமொழியாக வருவது போல!

    மேலும் ‘’யாவரேனும்’’ என்ற சீர், குலம், குறி, குணம் முதலான மனித பேதங்களைக் காணாமல், எல்லா அடியாரும் இறைவன்பால் அடிமைத் திறம் பூண்டமையால்  எவ்வகைப் பேதமும் அற்றவர் என்பது புலனாகும்.

    ‘’எவரேனும்  தாமாக,  இலாடத்திட்ட  திருநீறும் சாதனமும் கண்டால் உள்கி ‘’

    என்பது திருத்தாண்டகம். அடுத்து,

    ‘’நலமிலராக நலமதுண்டாக  நாட்டவர் நாடறி  கின்ற
    குலமிலராகக்   குலமதுண்டாக ‘’ என்றும்,

    ‘’கணங்களாய்  வரினும்  தமியராய்  வரினும்  அடியவர் தங்களைக் கண்டால்
    குணங்கொடு  பணியும்‘’

    என்றும்  திருஞான சம்பந்தர் தம் திருவாலவாய்த் தேவாரத்தில் கூறுகிறார். ஆகவே அடியார்களின் சிறப்பு விளங்கும். அவர்கள்  வேண்டும் பொருள்களைத்  தக்கது தகாதது என்ற வேறுபாடு கருதாது கொடுத்தலை ‘’வேண்டும் யாவையும்‘’ என்ற தொடர் குறிக்கிறது. அவர் அவ்வாறு கொடுத்தல் இவ்வுலகில் சிவதருமம் என்றும் நின்று நிலவு மாறு கொடுத்தலை ‘’இக்கடற் படி நிகழ முன் கொடுக்கும்” என்ற தொடர் விளக்குகிறது. ‘’இல்லை என்னாதே‘’ என்ற தொடர் இவருடைய கொடைத்திறத்தை  விளக்குகிறது. உலகியலில் ‘தமக்குப் பின் தான் தான தருமம்’ என்ற வகையில் அளவாகக் கொடுப்பார்கள். இவரோ எல்லாவற்றையும்  கொடுத்து விடுவார் என்பது கருத்து.

    இப்பாடலில் இவர் திருப்பெயரை ‘’உலகியற்பகையார்‘’ என்று  சேக்கிழார் கூறியதன் நுட்பம் எண்ணி எண்ணி மகிழத்தக்கது. இயற்பகையார் என்பது, உலகியலுக்குப் பகையாவார் என்ற உடன்பாட்டுக் கருத்தையும், சிவனடி யாருக்கு எல்லாவற்றையும் வழங்கும் உலகியலைப் பகைக்க மாட்டார்- பகையார்,  என்று எதிர் மறையாகவும் பொருள்  கொள்ள இடமளிக்கிறது.

    Share
  • தமிழில் செல்லிட ஆளுகை – அண்ணாகண்ணன் உரை

    தமிழில் செல்லிட ஆளுகை – அண்ணாகண்ணன் உரை

    அண்ணாகண்ணன்

    உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஒரு பகுதியாக 9ஆவது தமிழ் இணைய மாநாடு, கோவையில் 2010 ஜூன் 23 முதல் 27 வரை நடைபெற்றது. அதில் நா.கோவிந்தசாமி அரங்கில் 25.06.2010 அன்று, ‘கையடக்கப் பேசியில் தமிழ்’ என்ற தலைப்பிலான அமர்வு நடைபெற்றது. இந்த அமர்வுக்கு மலேசியாவைச் சேர்ந்த முத்து நெடுமாறன் தலைமை வகித்தார். இதில், ‘தமிழில் செல்லிட ஆளுகை’ என்ற தலைப்பில் என் கட்டுரையைத் திரை உரை முறையில் வழங்கினேன். இந்த அமர்வில் என்னுடன் ஜி.புவன் பாபு, எம். சிவலிங்கம், சுவர்ணலதா ஆகியோரும் உரையாற்றினார்கள். உரையைத் தொடர்ந்து கேள்வி – பதில் பகுதியும் இடம்பெற்றது. எனது முழு உரையையும் இங்கே நீங்கள் பார்க்கலாம்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

     

    Share
  • இங்கா இங்கா

    இங்கா இங்கா

    அண்ணாகண்ணன்
     
    (குழந்தையின் ங்கா ங்கா  என்ற ஓசைக்கு எழுதியது)
     
    இதை ஆசிரியரின் குரலில் இங்கே கேட்கலாம்
     
     
     
    நான் பிறந்தது இங்கா  இங்கா
    நலம் விளைந்தது  இங்கா இங்கா
    வான் கனிந்தது இங்கா  இங்கா
    வளம் கொழிப்பது இங்கா  இங்கா
    தேன் இனிப்பது இங்கா  இங்கா
    திசை களிப்பது இங்கா  இங்கா
    தான் வளர்வது இங்கா இங்கா
    தாகம் வளர்ப்பது இங்கா இங்கா.
     
    கண் மலர்ந்தது இங்கா  இங்கா
    கனவு மெய்த்தது இங்கா இங்கா
    மண் குளிர்ந்தது இங்கா இங்கா
    மனம் விழித்தது இங்கா இங்கா
    பண் இசைப்பது இங்கா இங்கா
    பந்தடிப்பது இங்கா இங்கா
    விண் சுரந்தது இங்கா இங்கா
    வெற்றிகள் சூழ்வது இங்கா இங்கா.
     
    பொழுது புலர்ந்தது இங்கா  இங்கா
    புதுமை விரிந்தது இங்கா  இங்கா
    அழுது சிரிப்பது இங்கா  இங்கா
    அமுது சுவைப்பது இங்கா  இங்கா
    எழுந்து நடப்பது இங்கா  இங்கா
    எழுத்து படிப்பது இங்கா  இங்கா
    மழலை குழைவது இங்கா  இங்கா
    மனசு திறப்பது இங்கா  இங்கா.
     
    நிலவு பார்ப்பது இங்கா  இங்கா
    நிலம் தவழ்வது இங்கா  இங்கா
    பால் மணப்பது இங்கா  இங்கா
    பாட்டில் தோய்வது இங்கா  இங்கா
    கொஞ்சி அணைப்பது இங்கா  இங்கா
    குறும்பு விளைப்பது இங்கா  இங்கா
    வாழ வந்தது இங்கா  இங்கா – நீ
    வாழ்த்த வந்தது இங்கா இங்கா.
     
    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)
    Share
  • ஏமாறாதே ஜாக்கிரதை!

    ஏமாறாதே ஜாக்கிரதை!

    கவியோகி வேதம்

    வானவில்லின் நாணறுந்து
    வர்ணமெல்லாம் மறையுதே!!
    நீநினைக்கும் கடல்ஓலம்,
    நிமிடத்தில் மாறுதே!!
    ஞானச்சுட ர்  ‘வாசல்’
    நாணமின்றி ஏய்க்குதே!
    கூனல் மயக்கத்தில்-அட!
    குனிந்தேநீ விழுவயோ!
    ஈன‘அகம்’ அகற்றிநீ
    ஈசனை“உள்” பூட்டுவாய்!

    சட்டிசுட்ட  பின்னுமிந்தச்
    சட்டையுடல்  காவலா?
    விட்டகுறை  வினையெல்லாம்
    விலகுமோ மானிடா?
    சட்டுவ- விவாதத்தால்
    சரியாமோ உன் ‘பாவம்’?
    முட்டைவிட்டுக்  குஞ்சுவரும்;
    முன்மயக்கம் தீர்ந்துவிடும்!

    பட்டணத்துச்  சாமிவந்து
    பற்றவைத்த  தீயடா-(*உன்னுள்)
    பத்ரகிரி  மயங்கிப்போய்
    பற்றுவைத்த  ஓடடா!
    பட்டுப்பட்டும் மாறுமோ-
    பாழுமனப் பேயடா?-(உன்)
    பட்டினியில், பத்தியத்தில்
    பயந்திடுமோ விதி-யடா?

    சாட்டைக்கோர்  விதியுண்டே,
    பம்பரம் சாட்சியடா!
    சாதகமும் உனைப்பற்றிச்
    சாற்றுவது கேளடா!
    நீட்டிப் படுத்துவிட்டால்
    நீயும்அங்கு நெருப்படா!(அவன்!)
    நிச்சயித்து விட்டாலோ
    நினக்கில்லை மண்ணடா?

    Share
  • ஸ்ரீ பாரதீ தீர்த்த யாத்திரை – 4

    ஸ்ரீ பாரதீ தீர்த்த யாத்திரை – 4

    மீ. விசுவநாதன்

    “அதிகாலைப் படிப்பு”

    அதிகாலை வேளை தன்னில்
    அமைதி யான போதில்
    மதிதானே விழித்தி ருக்கும்
    மனத்தில் பதியும் பாடம்
    விதிசெய்வாய் சீடா நீயும்
    வீணே தூங்கி டாமல்
    நிதியாக எண்ணிக் கற்று
    நிலத்தில் பேர்கொள் என்றார். (31)

    ஆக்கமுள பணிகள் செய்ய
    ஆசைப் பட்டால் போதும்
    ஊக்கமது தானே கூடும்
    உளமும் அடங்கி ருக்கும்
    தூக்கத்தில் ஆசை வைத்தால்
    துவளும் புத்தி கூர்மை
    நீக்கிடுக சோம்பல் தன்னை
    நிமிரும் கல்வி என்றார் .   (32)

    நீலவண்ணக் கழுத்து டையோன்
    நெகிழும் வண்ணம் பூஜை
    ஞாலத்தை மறந்து செய்யும்
    நல்ல பயிற்சி பெற்றார்.
    காலத்தை வீணாக் காமல்
    கண்ட படிபே சாமல்
    சீலமிகு சார தைக்கே
    சிந்தை என்றி ருப்பார் !    (33)

    “சீடரின் வளர்ச்சியில் குருவின் மனம்”

    எட்டாண்டு காலம் தங்கி
    வேதம் கற்ற சீடர்
    எட்டாத உயரம் செல்வார்
    என்றே குருஉ ணர்ந்தார் !
    மொட்டாக இருந்த உள்ளம்
    முழுதும் மலர்ந்த தாக
    மட்டற்ற மகிழ்ச்சி கொண்டார்
    மகாசன் னிதான ஆசான்.     (34)

    “சிருங்கேரி பீடத்தின் மகிமை”

    சங்கரர் வகுத்த நான்கு
    ரித்திர பீடம் தன்னில்
    மங்கிடாப் புகழைத் தாங்கி
    மதிப்புடன் இன்றும் உள்ள
    தென்திசைப் பீட மாக
    இருக்கிற சிருங்கே ரிக்குத்
    தன்திசை அறிந்த பூர்ணத்
    தவசிகள் பெருமை யன்றோ!  (35)

    “குருவின் பிராத்தனை”

    கனக்கும் ஆசை விட்ட
    கர்ம யோகி யாக,
    சினத்தைச் சிரிப்பி னாலே
    சிதைத்த துறவி யாக,
    தனக்குப் பின்னே நல்ல
    தரத்தில் சீடன் வேண்டி
    மனத்தால் வாணி முன்னே
    மகாசன் நிதானம் கேட்பார்.  (36)

    “சீடனைத் தேர்வு செய்த குரு”

    ஒருநல்ல நாளில் சீடன்
    ஒருவரைத் தேர்வு செய்ய
    குருநாதர் நினைக்க, “வைத்தி
    சுப்ரம ணிஐ யர்”தான்
    குருமுன்னே வந்து நின்றார்!
    குருவுடன் அவரை நோக்கிக்
    தருகந்தப் பஞ்சாங் கத்தைத்
    தனிடமே என்று சொல்லி      (37)

    அங்குள அலமாரி காட்ட
    ஐயரதை எடுத்த போது
    தொங்கிய சீட்டொன்று வீழ்ந்து
    துலக்கியது சீடர் தேர்வை !
    இங்கிதை நீர்படியும் என்று
    இன்முகத்துக் குருவும் சொல்ல
    இங்கித மாய்ப்படித்த ஐயர்
    இன்பத்தில் ஆழ்ந்து போனார்!  (38)

    பொத்தென விழுந்த சீட்டில்
    பொதிந்துள செய்தி யாவும்
    முத்தெனும் வித்யா தீர்த்தர்
    துறவினைக் கொள்ளும் போது
    எத்துணை நெறிகள் என்ற
    ஈடிலா அறத்தைப் பற்றி
    சுத்தமாய் இருந்த தம்மா !
    சோதனை கடந்த தம்மா !   (39)

    “பெற்றோருக்கு அறிவித்தல்”

    அறிவடக்க சீடன் அந்த
    ஆஞ்ச நேயலு தன்னை
    நெறிமாறா பீடத் திற்கு
    நிதியாய்ச் சேர்த்திடும் சேதி
    அறிவிக்க எண்ணி தந்தை
    “அவதா னி”களிடம் சொன்னார்
    குறியாகக் குருவைப் போற்றும்
    குலமே  தொழுததே அம்மா ! (40)

                                    (யாத்திரை தொடரும்)

    Share
  • நாலடியார் நயம் – 6

    நாலடியார் நயம் – 6

    நாங்குநேரி வாசஸ்ரீ

      6. துறவு

    பாடல் 51

    விளக்குப் புகஇருள் மாய்ந்தாங்கு ஒருவன்
    தவத்தின்முன் நில்லாதாம் பாவம் – விளக்குநெய்
    தேய்விடத்துச் சென்றிருள் பாய்ந்தாங்கு நல்வினை
    தீர்விடத்து நிற்குமாம் தீது.

    விளக்கு ஒளியின் முன்னே
    விலகிச்செல்லும் இருள்போல்
    செய்த நல் வினையின் முன்
    சேர்த்துவைத்த பாவம் நீங்கும்
    எண்ணெய் குறையும்நேரம்
    எங்கும் இருள் சூழ்வதுபோல்
    நல்வினைப்பயன் நீங்கும்
    நேரம் பாவம் வந்துநிற்கும்.

    பாடல் 52

    நிலையாமை நோய்மூப்புச் சாக்காடென் றெண்ணித்
    தலையாயார் தங்கருமம் செய்வார் – தொலைவில்லாச்
    சத்தமும் சோதிடமும் என்றாங்கு இவைபிதற்றும்
    பித்தரின் பேதையார் இல்.

    நிலையாமையும் மூப்பும்
    நோயும் சாவுத்துன்பமும்
    இவ்வுடம்பிற்கு உண்டு என
    இயன்றவரை கருமங்களைச்
    செய்து வாழ்வர் ஞானநூல்களைச்
    செவ்வனே கற்ற சான்றோர்
    இம்மைக்கு மட்டுமே பயன்நல்கும்
    இலக்கணநூல்களையும் சோதிடமும்
    பிறவற்றையுமே பிதற்றித்திரியும்
    பித்தர்களைவிட அறிவிலார்
    இவ்வுலகில் இல்லை.

    பாடல் 53

    இல்லம் இளமை எழில்வனப்பு மீக்கூற்றம்
    செல்வம் வலிஎன் றிவையெல்லாம் – மெல்ல
    நிலையாமை கண்டு நெடியார் துறப்பர்
    தலையாயார் தாம்உய்யக் கொண்டு.

    சிறந்த அழகு மனை இளமை
    செல்வாக்கு செல்வம் வலிமை
    இவையெல்லாம் நாளடைவில்
    இல்லாமல் போகும் நிலைஅறிந்து
    மேலோர் தாம் கடைத்தேற
    மேற்கொண்டு காலம்தாழ்த்தாது
    பற்றுக்களை விடுத்துப்
    பாங்காய் வாழ்வர்.

    பாடல் 54

    துன்பம் பலநாள் உழந்தும் ஒருநாளை
    இன்பமே காமுறுவர் ஏழையார் – இன்பம்
    இடைதெரிந் தின்னாமை நோக்கி மனையாறு
    அடைவொழிந்தார் ஆன்றமைந் தார்.

    ஆறாத்துன்பம் பலநாட்கள்
    அடைந்து துன்புற்றாலும்
    அறிவிற் சிறியர் ஒருநாளின்
    அற்ப இன்பம் விரும்புவர்
    இன்பம் நிலையற்றதெனவும்
    இன்னல் தருவதெனவும்
    உணர்ந்த சான்றோர்
    உடன் இல்லறத்தினின்று
    நீங்கிச் சென்று
    நீடூழி வாழ்வர்.

    பாடல் 55

    கொன்னே கழிந்தன்று இளமையும் இன்னே
    பிணியோடு மூப்பும் வருமால் – துணிவொன்றி
    என்னொடு சூழாது எழுநெஞ்சே போதியோ
    நன்னெறி சேர நமக்கு.

    இளமை வீணாய்க் கழிய
    இப்போதே நோயுடன்
    இணைந்து மூப்பும் வந்தது
    என்னோடு ஆலோசிக்காது
    எழுகின்ற மனமே!
    நமக்கு நல்வழி கிடைக்க
    நல்ல பாதையில் போகின்றாயோ?

    (நன்மார்க்கத்திற்குச் செல்லத் துணிந்தவன் தன் மனதுடன் பேசியதுபோல் அமைகிறது இப்பாடல்)

    பாடல் 56

    மாண்ட குணத்தொடு மக்கட்பேறு இல்லெனினும்
    பூண்டான் கழித்தற்கு அருமையால் – பூண்ட
    மிடியென்னும் காரணத்தின் மேன்முறைக் கண்ணே
    கடியென்றார் கற்றறிந் தார்.

    மாட்சிமைப்பட்ட குணமும்
    மக்கட்பேறும் இல்லையெனினும்
    மணம் செய்த கணவன்
    மனையாளை நீக்குதல்
    தகாது என்பதால்
    தானே தேடிக்கொள்ளும் துன்பம்
    திருமணம் செய்தல் என
    உணர்ந்த சான்றோர் எக்காலத்திலும்
    உறுதியாய் மணம்முடிக்காதீர் என்றனர்.

    பாடல் 57

    ஊக்கித்தாம் கொண்ட விரதங்கள் உள்ளுடையத்
    தாக்கருந் துன்பங்கள் தாந்தலை வந்தக்கால்
    நீக்கி நிறூஉம் உரவோரே நல்லொழுக்கம்
    காக்கும் திருவத் தவர்.

    முயன்று செய்த விரதங்கள்
    முடிவுற்று அழியும் வண்ணம்
    தாங்கமுடியாத் துன்பம் வரினும்
    தடங்கல்களை விலக்கித்
    தம் விரதங்களை நிலைநிறுத்தும்
    மனவலிமை கொண்டோரே
    மேலான துறவற ஒழுக்கம்
    மேற்கொள்ளும் சிறப்புடையவர்.

    பாடல் 58

    தம்மை இகழ்ந்தமை தாம்பொறுப்ப தன்றிமற்று
    எம்மை இகழ்ந்த வினைப்பயத்தால் – உம்மை
    எரிவாய் நிரயத்து வீழ்வர்கொல் என்று
    பரிவதூஉம் சான்றோர் கடன்.

    பழித்துப் பேசி தீவினை
    புரிந்தோரைத் தாம்
    பொறுப்பதோடல்லாது
    எம்மை இகழ்ந்த தீவினையால்
    எரியும் நரகம் வீழ்ந்து இவர்
    மறுமையில் துன்புறுவாரே என
    மனது இரங்குவதும்
    மேலோரின் கடமையே.

    பாடல் 59

    மெய்வாய்கண் மூக்குச் செவியெனப் பேர்பெற்ற
    ஐவாய வேட்கை அவாவினைக் – கைவாய்
    கலங்காமற் காத்துய்க்கும் ஆற்ற லுடையான்
    விலங்காது வீடு பெறும்.

    மெய் வாய் கண்
    மூக்கு செவி எனப்
    பெயர் கொண்ட ஐம்
    புலன்களை அடக்கி
    அவற்றின் வழி வரும்
    ஆசையைக் கலக்கமின்றி
    அறவழியில் செலுத்தும்
    வல்லவன் தப்பாமல்
    வீடுபேறு அடைவான்.

    பாடல் 60

    துன்பமே மீதூரக் கண்டும் துறவுள்ளார்
    இன்பமே காமுறுவர் ஏழையார் – இன்பம்
    இசைதொறும் மற்றதன் இன்னாமை நோக்கிப்
    பசைதல் பரியாதாம் மேல்.

    அறிவிலார் வாழ்வில் துன்பம்
    அதிகமாய் வருதல்கண்டும்
    துறத்தலை நினையாதவராய்
    துளியளவு இன்பம் விரும்புவர்
    அறிவுடைய மேலோர்
    அச்சிறு இன்பம் கிட்டும்நேரம்
    ஆசை கொள்ளார் மனதில்
    அதனைத் தொடரும் துன்பம்கருதி.

    Share
  • புலி வந்திருச்சி!

    புலி வந்திருச்சி!

    சி. ஜெயபாரதன், கனடா

    புலி வருது ! புலி வருது !!
    புலி வருதென
    அலறி
    அலை அலையாய்
    எழுந்தார்
    விழித்துக் கொண்டு !
    இப்போது
    புலி வந்திருச்சி !!!
    உயிருக்குப் பயந்தோர்  எல்லாம்
    ஓடி வாரீர் !
    தலை வைப்பீர்
    என் மீது !
    எதையும் தாங்கும் இதயம்
    எனக்கு !
    வீட்டுக்குள் அமர்ந்து வீடியோ
    காட்சி அளித்தார்
    எதிர்க்கட்சி எம்மெல்லே டைகட்டி !
    நாடாளும் மன்றம்
    ஆடாமல், குறட்டை விட்டு
    உறங்குது !
    பிரதம மந்திரி தெருவில் நின்று
    மக்களுக்கு
    மூக்கு வாய் மூடக்
    சுவாசக் கவசம்  கொடுத்தார் !
    வீட்டில்  அடைபட்டு
    நாட்டு மாந்தர்
    ஊழிய மின்றி, ஊதியம் இழந்து,
    உணவுத் தானியம்
    காலியாகி
    கை கட்டி நின்றார்
    கண்ணீரை
    டையில் துடைத்துக் கொண்டு !
    வயல்களில்
    காத்துக் கிடக்கும் பசுமையாய்
    காய்கறிகள், கனிகள்
    எடுப்பாரின்றி !
    மூலையில் எடுத்த கிழங்குகள்
    குவித்துக் கிடக்கும்
    வாகனத்தில்
    ஏற்றிக்
    கொடுப்பாரின்றி !
    சுவாசக் கருவிகள்,
    மூக்கு வாய் கவசங்கள்
    தைத்து
    மலிவாய்ச் செய்ய
    ஈபாடில்
    இன்றுதான் ஆர்டர்
    சைனாவுக்குப் போய்
    உள்ளது !
    நெடுதொலைக் குகையின்
    முடிவில்
    வெளிச்சம் தோன்றுமா ?
    சந்திர னுக்குச் சென்று மீண்ட
    விண்சிமிழ் செய்யும்
    வல்லரசுகள் கைவசம் இப்போ
    யந்திரம் இல்லை !
    செய்யும் திறம்,
    தொழில் நுணுக்கம் இல்லை !
    கோடான கோடி
    வல்லரசு நிபுணர்கள்
    டைகட்டி, கைகட்டி
    வாய் மூடி
    எதுவும் செய்ய இயலாது
    சைனா
    வேதாளத்தின்
    பாதத்திலே கிடக்கிறார்
    பாரீர் ! பாரீர் !
    பாரீர் !

    Share
  • குறளின் கதிர்களாய்…(297)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(297)

    பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னுந்
    தீப்பிணி தீண்ட லரிது.

           – திருக்குறள் – 227 (ஈகை)

    புதுக் கவிதையில்…

    எப்போதும்
    தன்னிடமிருக்கும் உணவைத்
    தான் மட்டும் உண்ணாது,
    பிறர்க்கும் பகிர்ந்தளித்து
    உண்டு வாழப்
    பழகியவனை,
    பசியென்னும் தீயநோய்
    அணுகுதல் அரிதாகும்…!

    குறும்பாவில்…

    இருக்கும் உணவைப் பிறருடன்
    பகிர்ந்துண்டு வாழப் பழகியவனைப் பசியென்னும்
    தீயநோய்த் தீண்ட வராதே…!

    மரபுக் கவிதையில்…

    தன்னிட மிருக்கும் உணவதனைத்
         தானே யுண்டு களிக்காமல்,
    தன்னை யொத்த பிறமாந்தர்
         தன்னுடன் பகிர்ந்தே உண்டுவாழும்
    தன்மை தன்னைப் பழகியுள்ள
         தன்னல மற்ற ஒருவன்தனை,
    துன்பம் தந்திடும் பசியென்னும்
         தீப்பிணி என்றும் தீண்டாதே…!

    லிமரைக்கூ…

    பலர்க்கும் பகிர்ந்தளித்தே யுண்டு
    வாழ்பவனை அணுகாதே பசியெனும் தீப்பிணி,       
    பயந்தோடிடும் அவனைக் கண்டு…!

    கிராமிய பாணியில்…

    குடுத்து ஒதவு குடுத்து ஒதவு
    அடுத்தவங்களுக்கும் குடுத்து ஒதவு..

    இருக்கிற ஒணவத்
    தான்மட்டும் திங்காம
    அடுத்தவங்களுக்கும் பங்குவச்சிக் குடுத்துத்
    தானும் தின்னு வாழுறவங்கிட்ட
    பசி பட்டினிங்கிற
    பெரிய நோயெல்லாம் நெருங்காதே..

    அதால
    குடுத்து ஒதவு குடுத்து ஒதவு
    அடுத்தவங்களுக்கும் குடுத்து ஒதவு…!

    Share
  • Bio-sequence, a possible solution to Corona

    Bio-sequence, a possible solution to Corona

    Dr.Annakannan

    (Annakannan Ideas – 39)

    When Corona / Covid-19 announced as pandemic, when first time lockdown announced in India, my wife asked me to find a solution to this issue. She used to hear many solutions from me for various issues and problems. I too was thinking about this, before she asked. But, didn’t get a catch. On 16th April 2020, in the early morning around 3 AM, I got a dream. The exact visual is tracing virus / bacteria through bio-sequence. Waked-up & I regain the word, that is ‘bio-sequence’. After that, I read few pages in online on this term.

    This page is related to this:

    “Bio-sequence analysis deals with the translation of bio-sequence information
    into biochemical and biophysical knowledge, to decipher the structural, functional and evolutionary clues encoded in the language of biological sequences.”

    We can create a tool / system, which can read the bio-sequence of entire eco-system with bigdata technologies. With this we can trace any and all virus / bacteria, where it’s alive, who are affected and which areas are affected and which level it is.

    We already know the bio-sequence of Corona (https://www.theverge.com). We need to deep scan with powerful tools, if there is any match in the surrounding; this tool should give immediate report of a person or any living being or any physical element or a surface or space in the air. Not only Corona / Covid-19, we can apply this to any virus or bacteria.

    Once, we know that a person is affected, we can quarantine. Again this bio-sequence can help in the treatment too. We can replace Covid-19 sequence with another sequence, which has more immunity. The Plasma treatment may help here. But, no need to depend a cured person. We can create the same healthy sequence & replace.

    I study biology only in my school days, that too 26 years back; just suggesting this with a basic logic. Scientists, doctors, biotech engineers or any science enthusiast can explore more. I hope, this ‘Key’ word will trigger the solution.

    ——————————————————-

    Pic courtesy: https://asm.org

    Share