இலக்கியம்கவிதைகள்

குறளின் கதிர்களாய்…(297)

செண்பக ஜெகதீசன்

குறளின் கதிர்களாய்…(297)

பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னுந்
தீப்பிணி தீண்ட லரிது.

       – திருக்குறள் – 227 (ஈகை)

புதுக் கவிதையில்…

எப்போதும்
தன்னிடமிருக்கும் உணவைத்
தான் மட்டும் உண்ணாது,
பிறர்க்கும் பகிர்ந்தளித்து
உண்டு வாழப்
பழகியவனை,
பசியென்னும் தீயநோய்
அணுகுதல் அரிதாகும்…!

குறும்பாவில்…

இருக்கும் உணவைப் பிறருடன்
பகிர்ந்துண்டு வாழப் பழகியவனைப் பசியென்னும்
தீயநோய்த் தீண்ட வராதே…!

மரபுக் கவிதையில்…

தன்னிட மிருக்கும் உணவதனைத்
     தானே யுண்டு களிக்காமல்,
தன்னை யொத்த பிறமாந்தர்
     தன்னுடன் பகிர்ந்தே உண்டுவாழும்
தன்மை தன்னைப் பழகியுள்ள
     தன்னல மற்ற ஒருவன்தனை,
துன்பம் தந்திடும் பசியென்னும்
     தீப்பிணி என்றும் தீண்டாதே…!

லிமரைக்கூ…

பலர்க்கும் பகிர்ந்தளித்தே யுண்டு
வாழ்பவனை அணுகாதே பசியெனும் தீப்பிணி,       
பயந்தோடிடும் அவனைக் கண்டு…!

கிராமிய பாணியில்…

குடுத்து ஒதவு குடுத்து ஒதவு
அடுத்தவங்களுக்கும் குடுத்து ஒதவு..

இருக்கிற ஒணவத்
தான்மட்டும் திங்காம
அடுத்தவங்களுக்கும் பங்குவச்சிக் குடுத்துத்
தானும் தின்னு வாழுறவங்கிட்ட
பசி பட்டினிங்கிற
பெரிய நோயெல்லாம் நெருங்காதே..

அதால
குடுத்து ஒதவு குடுத்து ஒதவு
அடுத்தவங்களுக்கும் குடுத்து ஒதவு…!

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க