ஸ்ரீ பாரதீ தீர்த்த யாத்திரை – 4

மீ. விசுவநாதன்

“அதிகாலைப் படிப்பு”

அதிகாலை வேளை தன்னில்
அமைதி யான போதில்
மதிதானே விழித்தி ருக்கும்
மனத்தில் பதியும் பாடம்
விதிசெய்வாய் சீடா நீயும்
வீணே தூங்கி டாமல்
நிதியாக எண்ணிக் கற்று
நிலத்தில் பேர்கொள் என்றார். (31)

ஆக்கமுள பணிகள் செய்ய
ஆசைப் பட்டால் போதும்
ஊக்கமது தானே கூடும்
உளமும் அடங்கி ருக்கும்
தூக்கத்தில் ஆசை வைத்தால்
துவளும் புத்தி கூர்மை
நீக்கிடுக சோம்பல் தன்னை
நிமிரும் கல்வி என்றார் .   (32)

நீலவண்ணக் கழுத்து டையோன்
நெகிழும் வண்ணம் பூஜை
ஞாலத்தை மறந்து செய்யும்
நல்ல பயிற்சி பெற்றார்.
காலத்தை வீணாக் காமல்
கண்ட படிபே சாமல்
சீலமிகு சார தைக்கே
சிந்தை என்றி ருப்பார் !    (33)

“சீடரின் வளர்ச்சியில் குருவின் மனம்”

எட்டாண்டு காலம் தங்கி
வேதம் கற்ற சீடர்
எட்டாத உயரம் செல்வார்
என்றே குருஉ ணர்ந்தார் !
மொட்டாக இருந்த உள்ளம்
முழுதும் மலர்ந்த தாக
மட்டற்ற மகிழ்ச்சி கொண்டார்
மகாசன் னிதான ஆசான்.     (34)

“சிருங்கேரி பீடத்தின் மகிமை”

சங்கரர் வகுத்த நான்கு
ரித்திர பீடம் தன்னில்
மங்கிடாப் புகழைத் தாங்கி
மதிப்புடன் இன்றும் உள்ள
தென்திசைப் பீட மாக
இருக்கிற சிருங்கே ரிக்குத்
தன்திசை அறிந்த பூர்ணத்
தவசிகள் பெருமை யன்றோ!  (35)

“குருவின் பிராத்தனை”

கனக்கும் ஆசை விட்ட
கர்ம யோகி யாக,
சினத்தைச் சிரிப்பி னாலே
சிதைத்த துறவி யாக,
தனக்குப் பின்னே நல்ல
தரத்தில் சீடன் வேண்டி
மனத்தால் வாணி முன்னே
மகாசன் நிதானம் கேட்பார்.  (36)

“சீடனைத் தேர்வு செய்த குரு”

ஒருநல்ல நாளில் சீடன்
ஒருவரைத் தேர்வு செய்ய
குருநாதர் நினைக்க, “வைத்தி
சுப்ரம ணிஐ யர்”தான்
குருமுன்னே வந்து நின்றார்!
குருவுடன் அவரை நோக்கிக்
தருகந்தப் பஞ்சாங் கத்தைத்
தனிடமே என்று சொல்லி      (37)

அங்குள அலமாரி காட்ட
ஐயரதை எடுத்த போது
தொங்கிய சீட்டொன்று வீழ்ந்து
துலக்கியது சீடர் தேர்வை !
இங்கிதை நீர்படியும் என்று
இன்முகத்துக் குருவும் சொல்ல
இங்கித மாய்ப்படித்த ஐயர்
இன்பத்தில் ஆழ்ந்து போனார்!  (38)

பொத்தென விழுந்த சீட்டில்
பொதிந்துள செய்தி யாவும்
முத்தெனும் வித்யா தீர்த்தர்
துறவினைக் கொள்ளும் போது
எத்துணை நெறிகள் என்ற
ஈடிலா அறத்தைப் பற்றி
சுத்தமாய் இருந்த தம்மா !
சோதனை கடந்த தம்மா !   (39)

“பெற்றோருக்கு அறிவித்தல்”

அறிவடக்க சீடன் அந்த
ஆஞ்ச நேயலு தன்னை
நெறிமாறா பீடத் திற்கு
நிதியாய்ச் சேர்த்திடும் சேதி
அறிவிக்க எண்ணி தந்தை
“அவதா னி”களிடம் சொன்னார்
குறியாகக் குருவைப் போற்றும்
குலமே  தொழுததே அம்மா ! (40)

                                (யாத்திரை தொடரும்)

Leave a Reply

Your email address will not be published.