இங்கா இங்கா
அண்ணாகண்ணன்
(குழந்தையின் ங்கா ங்கா என்ற ஓசைக்கு எழுதியது)
இதை ஆசிரியரின் குரலில் இங்கே கேட்கலாம்
நான் பிறந்தது இங்கா இங்கா
நலம் விளைந்தது இங்கா இங்கா
வான் கனிந்தது இங்கா இங்கா
வளம் கொழிப்பது இங்கா இங்கா
தேன் இனிப்பது இங்கா இங்கா
திசை களிப்பது இங்கா இங்கா
தான் வளர்வது இங்கா இங்கா
தாகம் வளர்ப்பது இங்கா இங்கா.
கண் மலர்ந்தது இங்கா இங்கா
கனவு மெய்த்தது இங்கா இங்கா
மண் குளிர்ந்தது இங்கா இங்கா
மனம் விழித்தது இங்கா இங்கா
பண் இசைப்பது இங்கா இங்கா
பந்தடிப்பது இங்கா இங்கா
விண் சுரந்தது இங்கா இங்கா
வெற்றிகள் சூழ்வது இங்கா இங்கா.
பொழுது புலர்ந்தது இங்கா இங்கா
புதுமை விரிந்தது இங்கா இங்கா
அழுது சிரிப்பது இங்கா இங்கா
அமுது சுவைப்பது இங்கா இங்கா
எழுந்து நடப்பது இங்கா இங்கா
எழுத்து படிப்பது இங்கா இங்கா
மழலை குழைவது இங்கா இங்கா
மனசு திறப்பது இங்கா இங்கா.
நிலவு பார்ப்பது இங்கா இங்கா
நிலம் தவழ்வது இங்கா இங்கா
பால் மணப்பது இங்கா இங்கா
பாட்டில் தோய்வது இங்கா இங்கா
கொஞ்சி அணைப்பது இங்கா இங்கா
குறும்பு விளைப்பது இங்கா இங்கா
வாழ வந்தது இங்கா இங்கா – நீ
வாழ்த்த வந்தது இங்கா இங்கா.
(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)
