திருச்சி புலவர் இராமமூர்த்தி

 அக்கு   லப்பதிக்  குடிமுதல்  வணிகர்;
    அளவில் செல்வத்து  வல்லமையின்  அமைந்தார்;
செக்கர்   வெண்பிறைச்  சடையவர்  அடிமைத்
     திறத்தின்  மிக்கவர்; மறைச்சிலம்  படியார்;
மிக்க   சீர்அடி  யார்கள்யா ரெனினும்
      வேண்டும்  யாவையும்  இல்லை என்னாதே
இக்க  டல்படி  நிகழமுன்   கொடுக்கும்
         இயல்பின்  நின்றவர்; உலகியற்   பகையார் .

பெருமையும்  வளமும் நிறைந்த பூம்புகார்  நகரில் பெருங்குடி  வணிகர் மரபைச் சேர்ந்த  ஓரடியார் வாழ்ந்தார். அவருக்கு வாணிகத்தினால்  வந்த பொருட்செல்வமும், இயற்கை நில வளங்களையும் பெற்று வாழ்ந்தார். பொருட் செல்வத்துடன் அருட் செல்வத்தையும் பெறும் நோக்கத்துடன் பிறையணிந்த செஞ்சடைப்  பிரானின்  திருவருளையும் நாடி  அடிமைத் திறத்தைப் பேணி வந்தார். அவர் செஞ்சடைப்பிரானின், வேதங்களாகிய சிலம்புகள் ஒலிக்கும்  திருவடிகளை யுடையார் தம், பெரும் சிறப்புடைய அடியவர்கள் யாவரேயாயினும், அவர்கள் வேண்டியவை   எவையேயாயினும் இல்லையென்னாதே கடல் சூழ்ந்த இந்த உலகிலே விளக்கமுற முன்னே கொடுக்கும் தன்மையிலே நிலைத்து நின்றவர் ஆவார்.  அவர் உலகியலுக்கு  மாறான நிலையிலே  எவையாயினும் இல்லை என்னாமல் கொடுக்கும் பண்பினால் ‘’உலகியற் பகையார்’’ என்ற காரணப் பெயரைப் பெற்றிருந்தார்.

அவ்வூரின் பெருங்குடி வணிகர்கள் நற்குடி நாற்பத்தெண்ணாயிரவர் ஆவர். அவர்கள் இப்பர், கவிப்பர், பெருங்குடி வாணிபர் என மூன்று வகையினர். இவ்வகையிலே இயற்பகையார் மூன்றாவது வகையினர்.

உலகச் செல்வம் சிவனடிமைத் திறத்தில் ஒழுகாதவிடத்திற் செல்வமாகாது; இன்னலுக்கே யேதுவாகும்,  ஆதலின் இதனையடுத்து பிறையணிந்த செஞ்சடைப்  பிரானின்  திருவருளையும் நாடி  அடிமைத்திறத்தில்  எவரினும் மிக்கவராய்  விளங்கினார் என  உடன்சேர்த்துக் கூறினார். அடியாரிடத்து அன்பு செய்யாக்கால் “ஈசனுக் கன்பிலார் அடியவர்க்கன் பில்லார்“ என்றபடி ஈசனிடத்தும் அன்பு இல்லையாய் முடியும்;  ஆதலின் அடியார்பாலன்பும் அடுத்து வைத்தோதினார்.

அவர்  எல்லாவகைச் செல்வமும் பெற்றிருந்தாலும், அதன்  மேலும்  ஈசன் அடிமைச் செல்வமும் பெற்றிருந்தார். ஆதலால்  அடியார்க்குக்  கொடுக்கும் இயல்பில்   மற்றவரினும்  மிக்கவர்  ஆவார். இப்பாடலில் ‘’மறைச்சிலம்படியார்’’ என்ற தொடர் இறைவன் பாதச் சிலம்புகள் இறைவன் இலக்கணங்களையே தம்முட் கொண்டு ஒலிப்பன என்பதை விளக்குகிறது. ‘சார்ந்ததன் வண்ணமாதல்’ என்பது தத்துவம்! அந்தணரின் வேத ஒலிகள் கிளிமொழியாக வருவது போல!

மேலும் ‘’யாவரேனும்’’ என்ற சீர், குலம், குறி, குணம் முதலான மனித பேதங்களைக் காணாமல், எல்லா அடியாரும் இறைவன்பால் அடிமைத் திறம் பூண்டமையால்  எவ்வகைப் பேதமும் அற்றவர் என்பது புலனாகும்.

‘’எவரேனும்  தாமாக,  இலாடத்திட்ட  திருநீறும் சாதனமும் கண்டால் உள்கி ‘’

என்பது திருத்தாண்டகம். அடுத்து,

‘’நலமிலராக நலமதுண்டாக  நாட்டவர் நாடறி  கின்ற
குலமிலராகக்   குலமதுண்டாக ‘’ என்றும்,

‘’கணங்களாய்  வரினும்  தமியராய்  வரினும்  அடியவர் தங்களைக் கண்டால்
குணங்கொடு  பணியும்‘’

என்றும்  திருஞான சம்பந்தர் தம் திருவாலவாய்த் தேவாரத்தில் கூறுகிறார். ஆகவே அடியார்களின் சிறப்பு விளங்கும். அவர்கள்  வேண்டும் பொருள்களைத்  தக்கது தகாதது என்ற வேறுபாடு கருதாது கொடுத்தலை ‘’வேண்டும் யாவையும்‘’ என்ற தொடர் குறிக்கிறது. அவர் அவ்வாறு கொடுத்தல் இவ்வுலகில் சிவதருமம் என்றும் நின்று நிலவு மாறு கொடுத்தலை ‘’இக்கடற் படி நிகழ முன் கொடுக்கும்” என்ற தொடர் விளக்குகிறது. ‘’இல்லை என்னாதே‘’ என்ற தொடர் இவருடைய கொடைத்திறத்தை  விளக்குகிறது. உலகியலில் ‘தமக்குப் பின் தான் தான தருமம்’ என்ற வகையில் அளவாகக் கொடுப்பார்கள். இவரோ எல்லாவற்றையும்  கொடுத்து விடுவார் என்பது கருத்து.

இப்பாடலில் இவர் திருப்பெயரை ‘’உலகியற்பகையார்‘’ என்று  சேக்கிழார் கூறியதன் நுட்பம் எண்ணி எண்ணி மகிழத்தக்கது. இயற்பகையார் என்பது, உலகியலுக்குப் பகையாவார் என்ற உடன்பாட்டுக் கருத்தையும், சிவனடி யாருக்கு எல்லாவற்றையும் வழங்கும் உலகியலைப் பகைக்க மாட்டார்- பகையார்,  என்று எதிர் மறையாகவும் பொருள்  கொள்ள இடமளிக்கிறது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.