Tag: ராஜகவி ராகில்

  • பேருந்துப் பயணம்

    ராஜகவி ராகில்

     

     

    என் சைகை கண்டு நிற்கிறது

    மது குடித்த வண்டிபோல

    விரைவாய் வந்த பேரூந்து

     

    அவசரமாய்

    ஏறிக்கொள்கிறேன் நான்

    என் அருகில் வருகிறான் நடாத்துனர்

    ஐம்பது ரூபாக் கொடுக்கிறேன்

    நான் செல்லுமிடம் சொல்ல

    அனுமதிச் சீட்டில் நாற்பது ரூபா எழுதியவன்

    பத்து ரூபா தராமல் நகரும்போது மீதி நான் கேட்கிறேன்

    பொய்யாகச் சொல்கிறான் இறங்கும் போது தருவதாய்

     

    நான் இறங்குமிடம் வருகிறது

    சில்லறையில்லை என்ற பதில் வாங்கியபடி

    அவசரமாய் இறங்குகிறேன் பின் கதவு வழியாய்

     

    என்னிடம் கை நீட்டுகிறான்

    அந்நேரம் பார்த்து

    அந்த வழி வந்த பிச்சைக்காரன்

    அவன் முகத்தில் தெரிகிறான்

    பேரூந்து நடத்துனர் .

    Share
  • அம்மாவின் நாட் குறிப்பிலிருந்து

    ராஜகவி ராகில்

     

     

    மகனே

    காகம் கரைந்தால் வீதியில் வந்து நிற்கின்றன

    என் கண்களடா

     

    உன் முகந்தான் தெரிகிறது

    நான் கண்ணாடி பார்க்கின்ற நேரமெல்லாம்

     

    என் பழைய சேலைகளிலும்

    உன் வாசந்தான் வாழ்கிறது மகனே

     

    அம்மா கண்களைப் பூக்களாக்க மாட்டாயா

    ஒரு தரம் வந்து

     

    மகனே

    சமைத்துத் தந்த சட்டி பானைகளுக்குள்ளும்

    உன் ஞாபகங்கள்தானடா

     

    பாசம் உயிரோடு கொல்லும்

    இதை உண்மையாக்கியவன் நீ

     

    பசி வரும் போது

    உனக்கும் சேர்த்து நிறையச்  சாப்பிட்டாலும்

    அடங்கியபாடில்லை மனப்பசிதான்

     

    நீ உப்பில்லாமல்தான் உண்கிறாய் போலும்

    உன் நாக்கிலும் செத்துப்போனதா

    அம்மா ஞாபகம்

     

    மகனே

    வீட்டில் விளக்கு எரிந்தாலும்

    இருளில் கிடக்கிறது என் மனசு

     

    காற்றோடு அதிகம் பேசுகிறேன்

    பழகுகிறேன்

    என்னை வாழவைத்துக் கொண்டிருப்பது அதுதானே

     

    மகனே

    வேர் கிளை ஒன்றாக இருந்தால்தான்

    விழுது விட முடியும்

     

    அங்கிருந்து ஆயுள் வரை

    நீ அம்மா குரல் கேட்க

    நான் சுசீலா அல்ல மகனே

     

    உன் அம்மா பாசம் தாகமாய்த் தவிக்கிறது

    கண்ணீர் கூட இல்லையடா

    நான் அருந்த

     

     

    Share
  • அகிம்சைக்காரனின் காதல்

    ராஜகவி ராகில்

     

     

    அவனுடைய சுவாசம் காத்திருந்தது

    தென்றலுக்காக

    அவன் சோலையில் இருந்தாலும்

    அவனுடைய பூ

    இன்னமும் மலரவில்லை

     

    அதோ

    அந்தக் கவிதை வருகிறாள்

    இதுவரை பத்திரமாகப் பிடித்து வைத்திருந்த

    அந்தப் பட்டாம் பூச்சியைக் கொடுத்து

    தன் காதலைச் சொன்னான் அவன் .

     

    அந்த தேவதை அவனை

    ஒரு வகையாகப் பார்த்தபடி கேட்டாள்

    இந்தப் பெரிய சோலையில் உங்களுக்கு

    ஒரு ரோஜாப்பூ கிடைக்கவில்லையா

     

    என் காதலைக் கூறுவதற்கு

    ஒரு கொலை செய்வது எனக்குப் பிடிக்கவில்லை

    பூவை

    செடியில் வைத்து ரசிப்பதுதான் அழகும் தர்மமும்

     

    இந்தப் பட்டாம் பூச்சியை நான் என்ன செய்வது

     

    பறக்க விடு

    காதல் சிறகு கொண்டு அது புதிதாகப் பறக்கட்டும்

     

    எனக்கு

    பூதான் வேண்டும்

    அந்தப் பூ பிடிவாதம் பிடித்தாள்

     

    ஒரு பூ செடியில் இருக்கும் போதுதான்

    அது உயிரோடு இருக்கும்

    அதைப் பறித்தால் அந்த மலர் இறந்துவிடும்

    உயிரில்லாத பூ தந்துதான்

    என் காதலை நான் வெளிப்படுத்த வேண்டுமா

     

    பட்டாம் பூச்சி உயிருள்ளது

    அது போல என் காதலும் உயிருள்ளது

     

    அந்தக் கார்முகில் குளிர் அழகி

    ஏற்றுக் கொண்டாள்

     

    நான் இனி கூந்தலுக்குப் பூக்கள் வைக்க மாட்டேன்

    உயிரில்லாதவற்றை யார் சூடுவார்

    இனி அதன் வாசங்கூட எனக்குப் பிடிக்காது

    என்றாள்

     

    அப்போ

    பட்டாம் பூச்சிகள் பிடித்துத் தருகிறேன்

    உன் கூந்தலில் சூடு என்றான் அவன் .

     

    அவை மணக்காதே

     

    உன் கூந்தல் நறுமணத்தில்

    பட்டாம் பூச்சிகள் மணக்கட்டுமே

     

    உங்களை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு

    ஒரு பூவைக் கூட பறிக்க விரும்பாத நீங்க

    என்னை நல்லாப் பார்த்துக்குவீங்க…என்றவள்

     

    ஒரு முத்தப் பூப்பறிக்கத் தயாரானாள்

    காதலைக் கட்டிப் பிடித்தபடி .

     

     

    Share
  • தென்றல் ஏங்கும் அழகி

    ராஜகவி ராகில்

     

    கடிகார இரு முட்களும் முத்தமிடும் நள்ளிரவு நேரம்
    நித்திரை என்னை ஆசீர்வதிக்கத் தயங்கியது
    ‘செல்போன்’ சிணுங்கியது
    ”ஹலோ ” என்றேன்
    ”உன்
    கண்கள் தருவாயா
    என்னை
    நான் பார்ப்பதற்கு ?”

    நீ ஒரு கவிதை சிந்திக் குரல் நிறுத்தினாய் .

    உன் காதலை என் இதயம் கண்டதிலிருந்து
    நான் தேனாக வடிந்து கொண்டிருந்தேன் .

    ஒரு விடுமுறை நாளில் என் காரியாலயம்
    வந்தாய் நீ !

    ‘என் வயதை நீதான்
    எனக்கு ஞாபகமூட்டினாய் .
    என் பருவம் தரித்து நிற்கிறது
    உன்னைச் சுமந்துகொள்வதற்காக .
    என் நரம்புகள் வயலின் தந்திகளாகி விட்டன
    நீ வாசிப்பதற்காக.

    உன் பார்வை பட்டதும்
    ரோஜாவாக மாறுகிறேன் .
    உன் குரல் கேட்டதும்
    மின் குமிழாக எரிகிறேன் நான் .
    ஏன்….ஏன்…?

    நீ விடை தரவா !
    விடையாக வா ?’

    எழுத்துக்களால் நறுமணம் தந்து சென்றாய் நீ .

    உன் சுவாசம் கிடைக்காதா என
    தென்றலே ஏங்கும் அழகி நீ .

    நீ பார்வைகளால் நெருங்கினாய்
    வார்த்தைகளால் என்னை நெருக்கினாய் .
    எழுத்துக்களால் என்னை நிறைத்தாய் .

    ”நீ எனக்குத் தந்த நறுமணம்
    என் உயிர் வரை மணம் வீசுகிறது” என
    என்னை உன்னிடம் அனுப்பினேன் .

    நீ என் இதயத்தில் கவிதைகள் வளர்த்தாய் .
    என் காதல் மிக அழகானது .

    விடியல் நேரத்தில் என் நித்திரை கலைப்பாய்
    உன் கவிதையால் .

    ‘என் விடியல்
    உன்னிடம் இருக்கிறது
    நீ விழித்தால்தான்
    நான்
    எழுந்து கொள்வேன் .” என்பாய் .

    இப்படித்தான் இன்றும் நள்ளிரவில்
    நீ என்னைக் கவிதையால் அழகுபடுத்தினாய் .

    அடுத்த பொழுதில் நீ என்னோடு
    பூங்காவில் வசித்தாய்.

    ”பேசு ” என்றேன் .
    ”உன்னோடு வசிக்கின்ற வினாடிகள் மிகவும் சுவையானவை
    என்னைச் சுவைக்கவிடு !”என்றாய் நீ .

    ”………………………..”
    நான் உன் மவுனம் ரசித்தேன் .
    உதிர்ந்தன சில நிமிடங்கள் .

    ”நான் ஒரு கவிதை சொல்லட்டுமா ?” என்றேன் .
    என்னை ஆச்சரியமாகப் பார்த்தாய் நீ .

    ‘இம் ….” என்றாய் .

    ”நீ
    பாத்திரமாக இருந்தாய்
    நான்
    வந்து நிறைத்தேன்
    பாலாக !”

    நீ எனக்கு முதல் முறையாக முத்தம் தந்தாய்.
    நான் சொன்னேன்
    ”கவிஞனாக இருக்கவே ஆசைப்படுகிறேன் ” என்று !

     

    Share
  • காதல்

    ராஜகவி ராகில் 

     

    பனித்துளிக்குள் 
    எரிகின்ற 
    நெருப்பு

    நித்திரையை
    பார்த்துக் கொண்டிருக்கும் 
    விளக்கு

    முள்ளை
    மலராக்கும் 
    பட்டாம் பூச்சி

    சில்லென 
    வீசுகின்ற 
    தீ

    ஓடையில் 
    மிதக்கின்ற 
    கடல்

    விறகினை 
    கரும்பாக்கும் 
    எறும்பு

    உரத்து 
    ஒலிக்கின்ற 
    மெளனம்

    வேடனை 
    வேட்டையாடும் 
    மான்

    முள்ளில் 
    சுரக்கின்ற 
    தேன்

    வண்டு தேடி 
    பறக்கின்ற 
    பூ

    தாஜ்மகாலை 
    விளம்பரப்படுத்தும் 
    தொலைக்காட்சி

    படகில் 
    பயணிக்கின்ற 
    நதி

    சிற்பியை 
    செதுக்கும் 
    உளி

    பூமியில் 
    வாழும் 
    ஆகாயம்

    காற்றில் 
    மிதக்கின்ற 
    வைரக் கல்

    மின்சாரமின்றி 
    எரிகின்ற 
    மின்குமிழ்

    நெருப்பு 
    பெய்கின்ற 
    மழை

    காதல் 
    ஒளியின் 
    நிழல் .

    Share
  • கண்கள் உடைக்கின்ற பாறை

     

     

    ராஜகவி ராகில் 

     

     

    உன்னிடம் குதிரையிருக்கலாம்

    குதிரை நீயென ஆசைப்படு

    உன் கால்களால் நடக்கவும் ஓடவும் பாயவும் குதிக்கவும்

    விரைந்து கடக்கவும்

     

    உன் கால்கள் சக்கரங்கள்

    உன் கால்கள் சிறகுகள்

    உன்னை நகர்த்திச் செல்லவும்

    உயரம் ஏறி நீ தொடவும்

    பறந்து வானம் பிடிக்கவும்

     

    அறுந்து போன ஒற்றைச் செருப்பு

    ஒரு கால் உடைந்த ஆசனம் என

    எண்ண இயந்திரம் உன் எரிபொருள் பெறுமாகிடின்

    உயிர்க்கும் உன் அவ நம்பிக்கை

     

    அவநம்பிக்கைப் புயல் சோம்பற் கோடை

    நெருங்கச் செய்திடின்

    பட்டுப் போய்விடும் வாழ்க்கை வேர்

     

    நம்பிக்கை

    தலையிலிருக்கும் மலையையும் சிறு கல்லாக்கிவிடும்

    அவ நம்பிக்கை

    தலையில் படிகின்ற தூசையும்

    மலையாக்கிவிடும்

     

    காற்று பாறை ஆனால்

    உன் மூக்குச் சம்மட்டி கொண்டு உடைத்துச் சுவாசி

    கண்களால் மெழுகுவர்த்தி ஏற்று

    பாதை இருளென்றால்

     

    உனக்குள் மழை இருக்கும் போது

    கோடையிடம் முறையிடாதே

    உனது நீரூற்றை நீதான் கண்டு பிடிக்க வேண்டும்

     

    மரம் நிற்கிறது என்கிறாய்

    அது வேர்களால் நீர் நோக்கி நகர்வது மறந்து

    தீ நேசி

    அதன் சுறு சுறுசுறுப்புக்காக .

     

    Share
  • உன் கால்களால் நடக்கின்ற நான்

    – ராஜகவி ராகில் –

     

    முளைத்தவுடன் பழம் தருகின்ற

    ஒரு நட்பு விதையென

    என் வாழ்க்கை நிலத்தில் நீதான் இருந்தாய் நண்பா

     

    என் இரவில் சூரியன் உதித்தது

    அடடா

    நீதான் வந்துகொண்டிருந்தாய்

     

    என் வாழ்க்கை உணவில் இனிப்பு உப்புக் கல்லாய் வந்தும்

    என் சுவை தீர்மானிக்கின்ற நா ஆகவும்

    என்னுள் வசித்தாய் நீதான்

     

    உனது நட்பு

    நான் கண்ணீர் சிந்தினால்

    நீர் இனத்துக்கே தீவைத்துக் கொளுத்தும் தீக் குச்சியாய்

     

    காட்டுப் பாதையில் எனக்கு முட்கள் தைக்குமென்று

    நீ நடக்கச் சொல்வாய்

    உன் கால்களால்

     

    நண்பா

    நான் காக்கையாகத் தான் இருந்தேன்

    உன் நட்பால் என்னை வளர்த்து ஆக்கினாய்

    வெண் கொக்காய்

     

    எனது காலியான சட்டைப் பைக்குள்

    செல்வமாய் நிரம்பியது

    உனது நட்புத்தான்

     

    என் தோழன் நீ நல்ல உழவன்

    உன் உயிர் வயலில் நான் விளைந்தேன்

    நீ அன்பு ஏர் பிடித்து உழுதபோது

     

    உயர் திணைப் பட்டாம் பூச்சியாய்

    உன் பால்ய கால நட்பு

    சின்னச் சின்ன சண்டை நீரால் நிரம்பியது

    நம் நட்புக் குளம்

    பக்கத்து வினாடியில் பாசம் பூப்பூத்து விரியும் தாமரையாய்

     

    பள்ளிக்கூட நட்புப் போல் வேரும் விழுதும்

    இல்லை

    ஆலமரத்துக்குக் கூட

     

    உனது பிஸ்கட்  நான் பறித்துச் சாப்பிடவும்

    எனது பிஸ்கட் நீ பறித்துச் சாப்பிடவும் என பள்ளிக் கூடம் போவோம்

    இடைவேளை வரும்வரை உயிரற்று இருப்போம்

     

    குடியிருந்தன

    வகுப்பறையில் உடல்கள் மட்டுந்தான்

    உயிரும் உணர்வும்  குயிலாய் கிளியாய்  காற்றாடியாய்

    திரிந்தன பறந்தும் விரிந்தும்

     

    இப்போதும் தொடர்ந்தும் விடாமலும் கல்லூரிக் காலம்

    மழையாய்ப் பெய்கிறது

    வேருக்குப் பாய்கின்ற நீர் போலான நட்பாய்

     

    என் உயிருக்குள் மூச்சாய் நிலைத்திருக்கிறது நட்பு

    சீகிரிய

    அஜந்தா ஓவியங்களாயும்

    கண்டி பேராதனைப் பல்கலைக் கழகமாயும்

    அழகானதாயும் அறிவியலாயும்

     

    தோழா

    என் வெற்றுக் கோப்பைக்குத் தாகமெடுத்த போது

    ஓர் ஆற்றையே நீ தந்தாய் கொண்டுவந்து

     

    ‘ ஆல் போல் நட்பு பால் போல் பால் போல்

    அல்லா நட்புப் பாழ் ‘ நண்பா .

     

     

    Share
  • உன் சேலையில் என் மனசு!

    -ராஜகவி ராகில் 

    உன் அழகு
    நதி
    அத்தனை மீன்களுக்கும்   devathai-cover
    ஆசை
    அதற்குள் வாழ!

    நீ
    எது விதைத்தாலும்
    முளைக்கும்
    பூக்கள் மட்டும்!

    உதிர்ந்து
    உன்னில் விழுந்த
    இலை
    பறந்து சென்றது
    பட்டாம் பூச்சியாகி!

    நீ
    வீதியில் நின்றால் போதும்
    யாரும்
    செல்ல மாட்டார்கள்
    மதுக்கடைக்கு!

    வீட்டுக்குள் இருந்த
    உன்னில்
    நனைய முடியவில்லை
    என்ற கவலையில்
    பெய்தது
    மழை!

    புயலை விடப்
    பல மடங்காக வீசுகிறது
    உன் அழகு
    பார்ப்பவர்கள் விழுகிறார்கள்
    தொப்பென!

    எல்லாருமே கவிஞர்கள்தான்
    நீ வாழுகின்ற
    ஊரில்!

    வயலில்
    அரிசி மணிகள் விளைந்தன
    உன்
    பல்லழகு
    பார்த்திருக்குமாக்கும்!

    இருளை
    மிக மிக நேசிக்கிறேன்
    உன் கூந்தலை
    நினைவூட்டுகிறதே!

     

     

    Share
  • தாத்தா அப்பா நானென மூன்று நண்பர்கள்

    ராஜகவி ராகில்

    அடிக்கடி பற்றாக்குறைத் தீ
    வீடு எரியும்
    சில வேளை
    அடுப்பில் பூனை படுத்திருக்கும்
    அப்பா அறையெங்கும் இரவு நேரத்திலும் பாசம் பரவி நிற்கும் வெளிச்சமாய்

    சட்டை பழையது
    அப்பா முகம் அணிகின்ற புன்னகை ஆடை
    காற்றைக் கலகலப்பாக்கும்
    இதய சுகந்தம் கலந்தபடியும் இனிப்பு நறுமணம் பூசியதுமாய்

    புறப்பட்டுச் சென்றுவிட்ட பழைய மாதத்தில்
    தாத்தா மீண்டும் பிறந்திருந்தார்
    எழுபது வயதுடன்

    நான் இறைவனிடம் இருந்திருக்க மாட்டேன்
    அப்பாவும் தாத்தாவும்
    தோழமைப் பாலங்கட்டியபோது

    தாத்தா கன்னத்தில் சோகக்கை அறைந்ததாகவும்
    கண்ணீர் முள் தைத்துக் காயப்படுத்தியதாகவும்
    தாத்தா குரல்மீது அப்பா தொனி ஏறி மிதித்ததாகவும்
    நான் அறிந்திருக்கவில்லை

    தாத்தாவுக்கென
    வேட்டியோ சட்டையோ வேறு தேவைகளோ
    நான் அறிய காணாமல் போகும் அப்பாவுக்குள்

    தாத்தா மூக்குக் கண்ணாடி
    ஒரு கை கண் இழந்து
    ஒரு வார வெயிலில் தினத் தண்ணீர் வற்றிப்போன நேரம்
    என் கை அணிந்த புதிய கண்ணாடியில்
    தெரிந்தது அப்பா முகம்

    பாசம் கட்டளைக்குள் புதையுண்டு
    தாத்தாவுக்குக் கொடுக்கச் சொன்னபோது
    எனது இறந்தகாலக் கேள்வி
    அடம் பிடித்தது விடைகேட்டு

    நானும்
    ஒரு நாள்
    உன் தாத்தா போலாவேன்

    அப்பா அணிந்த பதில் கண்ணாடியில்
    தெளிவாகத் தெரிந்தது
    எனது முகம் .

    Share
  • விரல்களில் வெளிச்சங்கள்

    ராஜகவி ராகில்

     

    வாடாத வரம் 

    பெறும்

    அன்னை மீது விழுந்த பூ 

    தாயின் நா கொண்டு சேர்க்கத்தான் 

    பூக்களில் 

    தேனும் தேனீயும் படைத்தான் 

    இறைவன் 

    பட்டு 

    மலர் 

    பஞ்சு 

    மெத்தைகள் சாய 

    ஆசைப்படும் இடம்  அன்னை மடி

    ஓர் ஆலயத்தை விட புனிதமானது 

    அன்னை உடுத்த 

    சேலை 

    அம்மா முகம்  பார்த்திடின் 

    எமனுக்கு தோணவே தோணாது 

    அவள் உயிர் பறிக்க 

    தாய் தாலாட்டின் பின்னே  கை கட்டி நிற்கும்  

    புகழ் பூத்த புலவன் 

    கவிதை 

    தாய் வாழுகின்ற 

    வீட்டுக்குத் தேவையில்லை 

    விளக்கு 

    உயிர் ஊட்டப்படுகின்ற புனித தலம்

    தாய் கருவறை 

    உலகம் என்ற உருண்டை விருட்சம்  

    நிற்கிறது 

    அன்னை வேரில் 

    மாதா கண்ணீர் திரவத் தீ 

    திரவத் தீ 

    அது அழித்துவிடும் பாறைகளையும் 

    அன்னை புன்னகை அரண் 

    அது தடுத்துவிடும் 

    எந்தச் சுனாமிகளையும் 

    அன்னை 

    பிசைந்தூட்டிய கூழ் 

    ஐந்து நட்சத்திர ஹோட்டல் அமுதத்தினையும் 

    ஆக்கிவிடும் வெறும் வைக்கோலாய்

    அம்மா சமைப்பது அரிசியல்ல

    பாசம் 

    விறகுகள் வென்று 

    அவள் எரிகிறாள் 

    அடுப்பில் 

    இறைவன் 

    அதிசயிக்கின்ற அதிசயம் 

    அன்னை பிரசவம் 

    தன் தாய் மறந்த மகன்  

    இதயத்தால் இறந்த 

    பிணப் பிரஜை 

    தாய் 

    இருமல் சத்தம் ஒரு தரம் கேட்டாலும் 

    மருத்துவம் செய் 

    வைத்தியன் கடத்தி வந்து 

    ஒரு குயிலிடம் கேள் 

    அது சொல்லும் 

    தன் குக்கூ 

    அன்னைக்கான வாழ்த்தென 

    மழைத் துளிகளிடம் விசாரி 

    அவை மொழியும்  

    தாய் பாதம் தொடத்தான் பொழிவதாய்

    அன்னைக்கு

    பணிவிடை செய்கின்ற கைகளில் இருப்பவை  

    விரல்களல்ல வெளிச்சங்கள்

    Share
  • காதல் தோட்டம்

    ராஜகவி ராகில்

     

    தாளம் தப்பினாலும் சுருதி விலகினாலும்

    சரியான சங்கீதம்

    காதல்

     

    பூமியில் நீ வானம்

    காதல்தான்

    சிறகு

     

    விண்மீன்கள் எண்ணிக்கை கேட்டால்

    மிக இலகுவாகச் சொல்வாய்

    உன்னிடம் இருக்கும் காதல் உச்சரித்த கணக்கு

     

    காதல்

    இளமையான முதுமை

     

    காதலுக்கு கூந்தல்  இருந்தால்

    இலட்சம் கோடி ஆண்டுகளானாலும்

    கறுப்புத்தான்

     

    காதல் வந்த பின்

    அந்தவினாடியில் அத்தனையும் மறந்து போய் விடும்

    காதலைத் தவிர

     

    காதல் முள்

    அதில் அமருகின்ற வண்டும்

    பூவாகி விடுகிறது

     

    நீ வீசுகின்ற வலையில்

    நீயே

    சிக்குப்படுகின்ற அதிசயம் காதல்

     

    நீச்சல் மறந்து போவாய்

    விழிக் கடலில் நீ விழ ஆரம்பிக்கும் போதே

     

    உன் சட்டைப் பைக்குள் சமுத்திரம் நிரப்பியும்

    கைக் குட்டையில் வானம் வைத்தும்

    காதல்

    உன்னை அதிசயமாக்கி விடுகிறது

     

    காதல்

    உன்னைப்  பூக்கூடையாக்குகின்ற முட் சோலை

     

    உலவுகின்ற பழக்கூடையாய்

    நீ மாறுவாய்

    காதல் தோட்டம் நீயெனில் .

    Share
  • ஒளிரும் சாலையில் பிரகாசப் பயணம்

    ராஜகவி ராகில்

     

    மனசெல்லாம்
    ரோஜாப் பூக்களைவிட லட்சம் மடங்கு நறுமணம்
    பக்தியோடு இருக்கும் போது .

    இதயம் உருகி உருகி
    இறைநாமம் உச்சரிக்கிறேன்
    பனித் துளி மென்மையை பின்தள்ளுகிறது என் இதயம் .

    பாவ நச்சு இருளுக்கு எனது வானத்தில்
    இடமில்லை என்றால்
    உயிருள்ள ஒளி நான் .

    சொர்க்கத்தை அடைகின்ற சிறகு
    வணக்கம் .

    இந்த உலகம்
    ஆகப் பெரிய பொய் என்று நம்புகின்ற போது
    மிகப் பெரிய மெய்யாகிறேன் நான் .

    இன்னொரு வாழ்க்கை இருக்கிறது என்று
    நம்புகின்ற எறும்புகூட
    தீண்டுவதற்கு மறுக்குமே .

    ஓட்டைகளால் ஆன இந்த வாழ்க்கைக் கப்பல்
    ஆத்மீகக் கடலில் மட்டுந்தான் மிதக்கும் .

    இருளை நேசிப்பதில்லை
    இறை பாதை .

    Share
  • மீன்கள் பெயர் நிலாக்கள்

    ராஜகவி ராகில்

    ‘ இந்தச் சூரியன் இப்படியே நிற்கக் கூடாதா ?’
    என் ஏக்கம் பெருமூச்சானது.

    இன்று ‘யூனிவர் சிட்டி ‘ வாழ்க்கை
    எனக்கு முற்றுப் புள்ளி தினம் .

    சோகத்துடன் அவிழ்ந்து கொண்டிருந்தது
    பிரியாவிடை விழா .

    எல்லோரும் செயற்கைப் புன்னகை தேடி
    தோற்றுக் கொண்டிருந்தார்கள் .

    ஒருகடல் கண்ணீர்
    எனக்குள் .

    சில வருடங்களின் சேமிப்பு
    தீர்ந்து போகிறது இன்றோடு .

    என் உடல் விழா மண்டபத்தில் இருந்தாலும்
    இதயம் அலைந்தது .

    எனது உடலில் எதுவுமே துடிக்கவில்லை
    உன்னைத் தவிர .

    ‘ இப்பொழுது ஒரு கவிதை ‘

    ‘துளியாக வந்தேன்
    கடலாகச் செல்கிறேன்

    இந்த வானம்
    வெற்றிடமாகச் செல்கிறது
    என் நிலா இன்றி ‘

    ஒரு நண்பனின் காதல்
    கண்ணீராக வடிந்து முடிந்தது .

    என் அருகே நீ பூத்திருந்தாய் .

    ‘ எனக்குள் பூத்திருப்பதை நீ பார்க்காமல்
    இருக்கிறாயே ‘

    என் இதயம் நீர் சுரந்தது .

    ‘ கவிதை சூப்பர் ‘
    என்றாய் நீ .

    ‘ இது கவிதை இல்ல ….அவன் தன் உயிரை
    அவளிடம் பரிமாறியிருக்கிறான்’ என்றேன் .

    ‘ எப்போ திருமணம் ?’
    திடீரெனக் கேட்டேன் .

    ‘யாரோடு ?’

    ‘ என் வாழ்க்கையில திருமணமே கிடையா …’
    நான் வெடித்துப் போனேன்
    துடித்துப் போனேன் .

    பிரியா விடை
    பிரிந்தது .

    ஒரு மரத்தடியில் சோகத்துடன் ஒதுங்கினேன்
    நீ பக்கத்தில் வந்தாய் .

    ‘ நான் செல்லட்டா …’
    திரும்பத் திரும்ப உச்சரித்துக் கொண்டிருந்தாய் நீ .

    ‘ திருமணம் செய்யுறதில்ல எண்டு ஏன் சொன்னீங்க …?’

    ‘ ஏற்கனவே எனக்குத் திருமணம் ஆகிட்டு ‘
    நான் மீண்டும் துடித்துப் போனேன் .

    ‘ உங்களை மனசால மணமுடிச்சி ரண்டு வருசமாச்சி ‘

    நான் உயிரால் உன் கை பற்றினேன் .

    ‘ நாம் பெஸ்ட் கிளாஸ்ல பாசாகிட்டோம் ‘
    என்றாய் நீ .

    ‘ காதல விட கஷ்டமான எக்ஸாம்
    வேறொண்டும் இல்ல ‘

    இனி
    வாழ்க்கை இனிப்புதான் என்றாய்
    முத்தத்தால்.

    Share
  • பறவையிடம் பாவ மன்னிப்புக் கேட்கும் வானமும் சுழன்றடிக்கின்ற காற்றும்

    ராஜகவி ராகில்

     

    வெளியே வெளிச்சமாய் இருளின் கருவூலம்
    உள்ளே உயிர்ப்பாய் உள்ளதாய்
    ஒளியற்ற ஒரு வயலில் இருட்டு விதைத்து
    முள் கல் நஞ்சு கலந்த ஒரு பயிர் வளர்ந்ததாய்
    உள்ளே இருந்த சாட்சித் தேவன் உரத்துச் சொல்லிக் கொண்டிருந்த வேளை
    செவிடாகத்தான் நகர்ந்தது காலம்
    தெரிந்தது
    லெளகீகக் காடு பூந்தோட்டமாய்
    ஆத்மீக வனம் கூரிய முட்காடாய்
    ஆசை பொய் கோபம் சந்தேகம் துரோகம் காமம்
    எல்லாம் சேர்ந்து படைத்த ஒரு கார்மேகம்
    மழை பெய்தபோது
    லெளகீகக் காடு வளர்ந்தது இன்னும் செழித்தும் சிலிர்த்தும்
    வானத்தை பிய்த்து வீசியபோது
    சிலுவையில் அறையபட்டன பறவை இறக்கைகள்
    என்றாலும்
    இருள் வானம் செத்து விழும் வரை
    எனது பறவை பறந்து கொண்டிருக்கிறது
    சுழன்றடிக்கின்ற காற்றையும் கடந்து
    பாவங்களைக் களைகின்றபோது
    வெளிக்கத் தொடங்கியது
    என் ஆத்மீகம்
    இப்போது
    இருள ஆரம்பிக்கிறது
    எனது லெளகீகம் .

    Share
  • சலசலத்த மெளன மொழிக்குள் தாகம்

     

    ராஜகவி ராகில் –

     

    என் உடல் முழுதும் பரவியது
    மலர் துப்பிய இனிப்பு எச்சில் சில துளி
    உயிர் நுரைத்துக் கசிந்து போனது

    தள்ளாடின கண்கள்
    நரம்புகளில் கேட்டது புல்லாங்குழல் சத்தம்

    வெளியே கோடைவெயில் எறித்தபோதும்
    நான்
    நனைந்து கொண்டிருந்தேன் மழையில்

    என் குருதி பாலாகியதாய்
    மூக்குத் துவாரம் நறுமணம் சாப்பிடுவதாய்
    ஒரு மயக்க நோய்

    தாகம் தீரலாம்
    என் கடல்பிடித்து
    காகிதமொன்றில் அலைகள் பரிமாறிடின்

    போதை மயக்கம் தணியலாம்
    அவிழ்ந்து சிரிக்கின்ற என் பூவாசம் கிள்ளியெடுத்து
    மொழிக் கோப்பை ஊற்றிடின்

    உன்னைப் பார்த்த என் எழுதுகோல் நீரோடை
    சல சலத்தபோதுதான் புரிந்தது
    காதல் மொழி மெளனமென

    ஒரு பட்டாம் பூச்சி
    என்னைக் கடந்து சென்ற கணத்தில் எதிரொலித்தது

    மொழி தேவையில்லை
    காதல் சொல்ல
    போதும் உன்கண்கள் மட்டுமென .

    Share