தென்றல் ஏங்கும் அழகி

ராஜகவி ராகில்

 

கடிகார இரு முட்களும் முத்தமிடும் நள்ளிரவு நேரம்
நித்திரை என்னை ஆசீர்வதிக்கத் தயங்கியது
‘செல்போன்’ சிணுங்கியது
”ஹலோ ” என்றேன்
”உன்
கண்கள் தருவாயா
என்னை
நான் பார்ப்பதற்கு ?”

நீ ஒரு கவிதை சிந்திக் குரல் நிறுத்தினாய் .

உன் காதலை என் இதயம் கண்டதிலிருந்து
நான் தேனாக வடிந்து கொண்டிருந்தேன் .

ஒரு விடுமுறை நாளில் என் காரியாலயம்
வந்தாய் நீ !

‘என் வயதை நீதான்
எனக்கு ஞாபகமூட்டினாய் .
என் பருவம் தரித்து நிற்கிறது
உன்னைச் சுமந்துகொள்வதற்காக .
என் நரம்புகள் வயலின் தந்திகளாகி விட்டன
நீ வாசிப்பதற்காக.

உன் பார்வை பட்டதும்
ரோஜாவாக மாறுகிறேன் .
உன் குரல் கேட்டதும்
மின் குமிழாக எரிகிறேன் நான் .
ஏன்….ஏன்…?

நீ விடை தரவா !
விடையாக வா ?’

எழுத்துக்களால் நறுமணம் தந்து சென்றாய் நீ .

உன் சுவாசம் கிடைக்காதா என
தென்றலே ஏங்கும் அழகி நீ .

நீ பார்வைகளால் நெருங்கினாய்
வார்த்தைகளால் என்னை நெருக்கினாய் .
எழுத்துக்களால் என்னை நிறைத்தாய் .

”நீ எனக்குத் தந்த நறுமணம்
என் உயிர் வரை மணம் வீசுகிறது” என
என்னை உன்னிடம் அனுப்பினேன் .

நீ என் இதயத்தில் கவிதைகள் வளர்த்தாய் .
என் காதல் மிக அழகானது .

விடியல் நேரத்தில் என் நித்திரை கலைப்பாய்
உன் கவிதையால் .

‘என் விடியல்
உன்னிடம் இருக்கிறது
நீ விழித்தால்தான்
நான்
எழுந்து கொள்வேன் .” என்பாய் .

இப்படித்தான் இன்றும் நள்ளிரவில்
நீ என்னைக் கவிதையால் அழகுபடுத்தினாய் .

அடுத்த பொழுதில் நீ என்னோடு
பூங்காவில் வசித்தாய்.

”பேசு ” என்றேன் .
”உன்னோடு வசிக்கின்ற வினாடிகள் மிகவும் சுவையானவை
என்னைச் சுவைக்கவிடு !”என்றாய் நீ .

”………………………..”
நான் உன் மவுனம் ரசித்தேன் .
உதிர்ந்தன சில நிமிடங்கள் .

”நான் ஒரு கவிதை சொல்லட்டுமா ?” என்றேன் .
என்னை ஆச்சரியமாகப் பார்த்தாய் நீ .

‘இம் ….” என்றாய் .

”நீ
பாத்திரமாக இருந்தாய்
நான்
வந்து நிறைத்தேன்
பாலாக !”

நீ எனக்கு முதல் முறையாக முத்தம் தந்தாய்.
நான் சொன்னேன்
”கவிஞனாக இருக்கவே ஆசைப்படுகிறேன் ” என்று !

 

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க