கவிஞர் ஜவஹர்லால்

 

 

வாடாப்பா படைத்தவனே! உன்ப டைப்பின்

 வாழ்வுமுறை கண்டுமனம் மகிழ லாம்வா!

போடாப்பா அத்திசையில் கொஞ்சம்; சற்றுப்

 பொறுத்துப்பார்! நடையோரம் கிழிந்து போன

நாடாவைச் சிற்றாடை என்னச் சுற்றி

 நடைபயிலும் அரைவயிற்றைப் பார்த்தா யாநீ!

தாடாப்பா உன்கரத்தை; தயங்கா தேநீ!

 தள்ளுகொஞ்சம் பள்ளத்தில் விழப்போ கின்றாய்!

 

பள்ளத்தைத் தாண்டப்பா; இங்கே என்ன

 பள்ளமென்றா கேட்கின்றாய்? அடடா   இஃதைப்

பள்ளமென்றா சொன்னோமிங் குறைவோர் கேட்பின்

 பதைத்துமனங் குமுறிடுவார்; குளிக்க உண்ண

நல்லதென அன்னவர்கள் போற்று கின்ற

 நனிசுவைநீர் இதுதான்நீ அறிந்து கொள்வாய்;

நில்லப்பா! ஏன்மூக்கைப் பிடித்தாய்? நாற்றம்

 நினக்கொத்து வரவிலையோ? மேலே போ!போ!

 

ஈதென்ன திரைச்சீலை?’ என்கின் றாயா?

 இதுதானுன் படைப்புக்கள் பல்லோர் வாழும்

தீதில்லாப் பேரில்லம்; வேண்டும் போது

 தெருத்தாண்டி இடந்தாண்டி அமைத்தற் கேற்பத்

தோதான துணிவீடு; உள்ளே கொஞ்சம்

 துணிவோடு நுழையப்பா! தோலை என்பின்

மீதாகப் போர்த்ததுபோல் இருப்ப வள்தான்

 வீட்டுக்குப் பேரரசி! பேருக் குத்தான்;

 

அய்யய்யோ என்றகுரல் கேட்கு தாப்பா!

 அடடேநீ ஏனப்பா ஓடு கின்றாய்?

மெய்யெல்லாம் புண்ணாக வெளுத்து கின்ற

மேலோனும் அவன்கையில் மத்த ளம்போல்

மெய்சோர அடிவாங்கும் பெண்ணும் உன்றன்

 மேன்மையினா லுயிர்பெற்ற பொருள்தா மப்பா!

பொய்யில்லை எண்ணிப்பார்; இந்தக் கோலம்

 போற்றிவளர்த் திடவாநீ படைத்தாய்? சொல்லு!

 

தெருமுனையின் சிறுவீட்டைப் பாராய்; அங்கே

 சிரிக்கின்ற தாரென்றா வினவு கின்றாய்?

வருவண்டை இதழ்வீசி அழைத்துக் கண்ணின்

 வலைதன்னிற் பிணைத்திட்டு மேனி காட்டித்

தருபொருளைக் கொண்டுதினம் வாழு மந்தத்

 தண்மலரும் உன்படைப்பே; அவள்தான் அந்தோ

வருகின்றா ளுனைநோக்கி; விரைந்து வா!வா!

 வலைதன்னி லுனையுமவள் வீழ்த்தப் பார்ப்பாள்.

 

அதற்குள்ளா சலிக்கின்றாய்? அறத்தால் வாழும்

 அருமைமிகும் உன்படைப்பைக் காண வா!வா!

புதர்க்குள்ளே பதுங்குகின்ற முயலைப் போலப்

 பூமியிலே வாழ்கின்ற நல்லோ ரைப்பார்!

இதற்கில்லை அதற்கில்லை எதற்கு மில்லை;

 என்றங்கே இல்லையெனும் பாட்டே கேட்கும்;

எதற்கிந்த நிலையென்றா எனைக்கேட் கின்றாய்?

 என்னப்பா படைத்தவனே! நீயே சொல்லு!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *