– ராஜகவி ராகில் –

 

முளைத்தவுடன் பழம் தருகின்ற

ஒரு நட்பு விதையென

என் வாழ்க்கை நிலத்தில் நீதான் இருந்தாய் நண்பா

 

என் இரவில் சூரியன் உதித்தது

அடடா

நீதான் வந்துகொண்டிருந்தாய்

 

என் வாழ்க்கை உணவில் இனிப்பு உப்புக் கல்லாய் வந்தும்

என் சுவை தீர்மானிக்கின்ற நா ஆகவும்

என்னுள் வசித்தாய் நீதான்

 

உனது நட்பு

நான் கண்ணீர் சிந்தினால்

நீர் இனத்துக்கே தீவைத்துக் கொளுத்தும் தீக் குச்சியாய்

 

காட்டுப் பாதையில் எனக்கு முட்கள் தைக்குமென்று

நீ நடக்கச் சொல்வாய்

உன் கால்களால்

 

நண்பா

நான் காக்கையாகத் தான் இருந்தேன்

உன் நட்பால் என்னை வளர்த்து ஆக்கினாய்

வெண் கொக்காய்

 

எனது காலியான சட்டைப் பைக்குள்

செல்வமாய் நிரம்பியது

உனது நட்புத்தான்

 

என் தோழன் நீ நல்ல உழவன்

உன் உயிர் வயலில் நான் விளைந்தேன்

நீ அன்பு ஏர் பிடித்து உழுதபோது

 

உயர் திணைப் பட்டாம் பூச்சியாய்

உன் பால்ய கால நட்பு

சின்னச் சின்ன சண்டை நீரால் நிரம்பியது

நம் நட்புக் குளம்

பக்கத்து வினாடியில் பாசம் பூப்பூத்து விரியும் தாமரையாய்

 

பள்ளிக்கூட நட்புப் போல் வேரும் விழுதும்

இல்லை

ஆலமரத்துக்குக் கூட

 

உனது பிஸ்கட்  நான் பறித்துச் சாப்பிடவும்

எனது பிஸ்கட் நீ பறித்துச் சாப்பிடவும் என பள்ளிக் கூடம் போவோம்

இடைவேளை வரும்வரை உயிரற்று இருப்போம்

 

குடியிருந்தன

வகுப்பறையில் உடல்கள் மட்டுந்தான்

உயிரும் உணர்வும்  குயிலாய் கிளியாய்  காற்றாடியாய்

திரிந்தன பறந்தும் விரிந்தும்

 

இப்போதும் தொடர்ந்தும் விடாமலும் கல்லூரிக் காலம்

மழையாய்ப் பெய்கிறது

வேருக்குப் பாய்கின்ற நீர் போலான நட்பாய்

 

என் உயிருக்குள் மூச்சாய் நிலைத்திருக்கிறது நட்பு

சீகிரிய

அஜந்தா ஓவியங்களாயும்

கண்டி பேராதனைப் பல்கலைக் கழகமாயும்

அழகானதாயும் அறிவியலாயும்

 

தோழா

என் வெற்றுக் கோப்பைக்குத் தாகமெடுத்த போது

ஓர் ஆற்றையே நீ தந்தாய் கொண்டுவந்து

 

‘ ஆல் போல் நட்பு பால் போல் பால் போல்

அல்லா நட்புப் பாழ் ‘ நண்பா .

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *