Tag: வையவன்

  • ஐந்து கை ராந்தல் – 29

    வையவன்

    வெற்றிவேல் நேராக அம்மாவிடம் வந்து அவர்களையும் அழைத்துக் கொண்டு சிங்காரப்பேட்டை போயிருக்கிறான்.
    திருப்பத்தூரில் வீடு பூட்டியிருந்தது. பக்கத்து வீட்டில் சொன்னார்கள். அம்மா தான் எழுதிய கடிதத்தையே பார்த்திருக்க முடியாது என்று புரிந்தது.

    சிவா சிங்காரப்பேட்டைக்குப் பஸ் ஏறினான்.
    இறங்கி ஐயர் ஹோட்டலில் பால் சாப்பிட்டு விட்டு அவர் எடுத்துக் கொடுத்த சைக்கிளில் புளியம்பட்டிக் காட்டு நிலத்துக்குப் போனான்.

    தூரத்தில் நிலத்தை நெருங்கும் போதே வித்தியாசம் பளிச்சென்று தெரிந்தது.
    ஆங்காங்கே நிலத்தின் நடுவிலிருந்த சிறு சிறு பாறைகள் காணப்படவில்லை.

    என்ன செய்திருப்பான்? குழி தோண்டிப் புதைத்திருப்பானோ? கூழாங் கற்களும் சரளைக் கல்லும் சுத்தமாகப் பொறுக்கப்பட்டிருந்தன.

    இருபது ஏக்கர் நிலமும் புல்டோஸரின் ராட்சஸ ஆதிக்கத்தில் மேடும் பள்ளமுமின்றி கதறி அடித்துக் கொணடு சமமாயிருந்தது.

    நாற்புறமும் முள் கம்பி கட்டிய கல் கம்பங்கள் வேலி வகுத்து நின்றன. நிலம் நெருங்கு முன் சாலையின் ஒரு சிறு மேட்டில் சைக்கிளில் காலை ஊன்றி சிவா நின்றான்.

    வெற்றிவேலின் நிலம் அந்த முன் கம்பி வேலியில் ஒரு கட்டில் வடிவில் காட்சியளித்தது.
    கரிசல் மண், கறுப்புக் கம்பளி விரித்த மாதிரி. அந்த பெரும்பரபரப்பு ஒரு சீராகச் சமமாக உதறி தூசு தும்பு தட்டப்பட்ட விரிப்பு போன்று தென்பட்டது.

    சமீபத்திய மழையில் சிறிது சிறிதாக, குருத்துக் குழந்தைகள் போன்று பயிர்ப் பசுமை தலைகாட்டியிருந்தது.
    கறுப்புக் கம்பளி விரித்த கட்டில்! உவமை மாறி விட்டது! அந்த மென்மையான பசுமை கட்டிலைத் தொட்டிலாக்கியிருந்தது.

    வெற்றிவேல்! சிவாவுக்கு நெஞ்சு விம்மிப் பூரித்தது. அவன் தான் ஆண் மகன் என்று ஒரு சிலாகிப்பு அந்த பூரிப்பினிடையே பூத்தது.

    கார்ப் பந்தயம் விட்டுக் கொண்டு, நாடு சுற்றிக் கொண்டு பரம்பரைப் பணக்கார மைனர் போன்று வேட்டைத் துப்பாக்கியோடு புதிய சாகசங்களைத் தேடிக் கொண்டு அலைந்த அந்த வெற்றிவேலா இவன்!
    “ஹி லிபரேட் மீ” என்று பாபாவைப் பற்றி வெற்றிவேல் சொன்ன வாக்கியம் பளிச்சிட்டது.

    பாபா எதிலிருந்து வெற்றிவேலை விடுதலை செய்திருக்கிறார்?
    அலைச்சலிலிருந்தா…? அற்புதங்களைத் தேடும் முடிவே இல்லாத ஆர்வத்திலிருந்தா…? ரொமாண்டிஸிஸத்திலிருந்தா…?
    சற்று தூரத்தில் கல் கம்பம் கட்டப்பட்ட முள்வேலியின் மத்தியில் வெற்றிவேலின் விடுதலை மௌன மொழியில் பேசிக் கொண்டிருந்தது.

    சிவா சைக்கிளில் உட்கார்ந்தவாறே கால் ஊன்றி யோசித்தான்.
    மண்ணை விடப் பெரிய பந்தம் எது?
    இந்த நிலத்தை விட வலிமை மிக்க பந்தம் எது?
    விடுதலை என்ற பெயரில் இவன் இந்த நிலத்தோடு பந்தப்பட்டு விட்டானோ?
    கானகங்களில் புல் வெளிகளில் மலைத் தாழ்வாரங்களில் கட்டற்ற சுயேச்சையோடு திரிந்த குதிரை இந்த நிலம் என்ற லாயத்திற்குள் அடக்கிக் கட்டப்பட்டு விட்டதோ?
    இது விடுதலையா…?
    சுதந்திரமற்ற ஒரு விடுதலை.

    சிவாவின் சிந்தனையில் அடுத்த அலை எழுந்தது. முன்பு வந்த எண்ணத்தை வாரி வழித்துத் தன்னோடு கரைத்துக் கொள்வது போன்ற பேரலை.
    சுதந்திரம் என்பது என்ன?
    என்ன சக்தி வாய்ந்த கேள்வி!
    அதற்கு விடை தேடி ஹிமாசல சிகரங்களுக்கும் நதி தீரங்களுக்கும் நகரின் இரைச்சல்களுக்கும் ஓய்வு ஒழிவற்ற சமுத்திரக் கரைகளுக்கும் வருஷக் கணக்கில் திரிய வேண்டும் போல் வலிமை வாய்ந்த கேள்வி.

    இதற்கு யார் விடை சொல்லப் போகிறார்கள்? அப்படிச் சொன்னாலும் அது ஒரு பதிலாகவா இருக்கப் போகிறது?
    நூறு விடைகள்… ஆயிரம் லட்சம் கோடி பல கோடி விடைகள்.

    வெற்றிவேலுக்கு விடை கிடைத்திருக்கலாம். பாபா அதை வழங்கியுமிருக்கலாம்.

    இந்த இருபது ஏக்கரில் விளையும் பயிரில், சிருஷ்டியின் சுவாசம் போன்று பூமி வெளியிடும் வெப்பப் பெருமூச்சில், இதில் பாயும் நீரின் பரிசுத்த மகிழ்ச்சியில், மழை வராத போது ஏங்கும் தூய்மையான வருத்தத்தில் அந்த சுதந்திரம் இருக்கலாம்.
    உழுது விதைத்து இந்த பூமியின் ஜீவன் மங்கி விடாது போராடி இதன் மணி வயிறு திறந்து அதில் உயிர் வளர்க்கும் மாணிக்கங்கள் குலுங்கும் போது அந்த சுதந்திரம் தரிசிக்கப்படலாம்.

    சிவா மேலும் யோசித்தான்.
    உழவு, நடவு, அறுப்பு என்று ஓயாது சுழலும் பருவ காலங்களின் சுற்றில் இயங்கி வட்டமிடும் மனித உழைப்பில் அது பிரத்யட்சமாகலாம்.

    அந்த உழைப்பின் இடைவெளிகளில் கேட்கும் ஓய்வின் உல்லாசத்தின் போதும் அது தோன்றலாம்.
    சிவா தனக்குள் சிரித்துக் கொண்டான்.

    இந்த சிந்தனைப் போக்குக்கு நவீன உலகம் ஒட்டியிருக்கும் லேபிள் என்னவென்று அவனுக்கு நினைவு வந்தது. பிரிமிடிவிஸம்… ஆதி மனித வாதம்.

    வெற்றிவேல் ஆதி மனித வாதியாகி இருக்கிறானோ! யந்திர உலகம் தொழிற்சாலைகளையும் பிரம்மாண்டமான யந்திரக் கருவிகளையும் சிருஷ்டித்துச் சிருஷ்டித்து சந்தை தேடி அலையும் ஒரு நவீன யுகத்தில் ஆதி மனித வாதத்தில் விடுதலையையும் சுதந்திரத்தையும் கண்டுபிடித்திருக்கிறானோ!

    என்ன நஷ்டம்?
    இதில் யாருக்கு என்ன குடி முழுகி விட்டது?
    வெற்றிவேல் தன் விடுதலையைத் தேடுகிறான்.

    எல்லோரும் அப்படியே. மனித உயிரைக் காப்பாற்றுவதற்கு பெரும் பெரும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கும் இதே நவீன உலகம் அதை பூண்டும் வேருமின்றிப் பொசுக்கி விடவும் அதைவிடப் பெரிய முயற்சியில் இறங்கியிருப்பது ஞாபகம் வந்தது.

    அது கூட விடுதலை தான் தேடுகிறது. ஆயுதங்களிலிருந்து விடுதலை. அச்சத்திலிருந்து விடுதலை.
    உலகில் வெகு காலமாக ஒரு சந்தர்ப்பத்திற்காக எதிர்பார்த்து உயிர் தாகத்தோடு காத்துத் தவித்துக் கொண்டிருக்கும் யுத்தக் கருவிகளை எண்ணிப் பார்த்தான் சிவா.

    நாளை என்பதற்கு எந்த நிச்சயமுமில்லாமற் போய் விட்ட நாள் இன்று.

    மனிதர்கள் சூறாவளி அச்சுறுத்தும் சமுத்திரக்கரையில் தமது கனவுகள் என்னும் மணல் வீடுகளை இன்னும் தைரியமாகக் கட்டிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

    நாளை நிச்சயமில்லை தான்.

    எனினும் இன்னும் ஆஸ்பத்திரிகள் திறக்கப்படுகின்றன. கல்வி நிலையங்கள் திறக்கப்படுகின்றன. பூமியின் முன்பு மண்டியிட்டது போய் அதைப் பலாத்காரம் செய்து பயிர்களை விளைவித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
    அச்சுறுத்தல்களுக்கிடையே நம்பிக்கையின் பிஞ்சுப் பாதங்கள் கால் தண்டை குலுங்க ஓடியாடிக் கொண்டு தானிருக்கிறது.
    இங்கு தான் சுதந்திரம்.

    இதுதான் சுதந்திரம்.
    யுத்தமே… விதியே… நீ என்னை சர்வ நாசமாக்கி விடுவாயெனினும் நான் அஞ்ச மாட்டேன்.
    என் விளையாட்டை நான் விளையாடியே தீர்ப்பேன். சூறாவளியின் சீற்றமே, நீ வேண்டுமானால் எனது மணல் வீடுகளை அழித்துக் கொள். அதுதான் உன்னால் முடியும்.

    என்னால் கட்ட முடியும்.

    ஒருவேளை நான் உயிர் பிழைத்திருந்தால் கட்ட முடியும்.
    நீ அழி. நான் உருவாக்குவேன்.

    நான் இல்லையெனில் என் வம்ச வித்தின் ஏதோ ஓர் ஈற்று அதை சாதிக்கும்.
    பிரிமிடிவிஸம்.

    அந்த லேபிளைக் குத்திய உலகம் ஆயிரக்கணக்கான மாறுதல்களுக்கு மார்தட்டிக் கொண்ட போதும் அடிப்படையில்இன்னும் அதே ஆதி மனித விதிகளில் நிற்பதை உணர்ந்தான்.

    நல்லது வெற்றிவேல்… நீ பிரிமிடிவிஸ்டாகவே இரு. நியூட்ரான் குண்டுகளைக் கண்டுபிடித்து அச்சத்திலிருந்து உலகம் விடுதலைக்கு அங்கலாய்க்கட்டும்.

    நீ நிலக்கடலை பயிரிட்டு உன் விடுதலையைத் தேடு.
    சிவா அங்கு தான் வெகு நேரம் நின்று விட்டதை உணர்ந்து சைக்கிள் மிதித்தான்.
    “வா சிவா” என்று அம்மாதான் வரவேற்றாள்.

    ஒரு கீற்றுக் கொட்டகையின் கீழே கயிற்றுக் கட்டிலில் ஒரு விரிப்பின் மீது பளிச்சென்று புதுப் புடவையும் நெற்றியில் குங்குமமும் நிறைவுமாக உட்கார்ந்திருக்கும் அம்மாவைப் பார்ப்பது அவனுக்கு புதுமையாக இருந்தது.
    அம்மா எவ்வளவு லட்சுமீகரமாக இருக்கிறாள்?

    பக்கத்தில் ஒரு ஈஸிசேரில் சாய்ந்து அம்மாவிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்த வெற்றிவேல் தலையைத் திருப்பினான்.
    “டேய்… லெட்டர் கூடப் போடலியே” என்று சட்டென்று எழுந்தான்.

    “மடையா… இப்படித்தான் எனக்குத் தெரிவிக்காமே அம்மாவைக் கூட்டிட்டு வர்றதா?” என்று செல்லமாகத் திட்டிக் கொண்டே சிவா சைக்கிளை ஓரமாக நிறுத்தினான்.

    “ஓஹோ… ஐயாவுக்கு லெட்டர் போட்டு பர்மிஷன் வாங்கிட்டு தான் அம்மாவைக் கூட்டிட்டு வரணுமோ!”
    அம்மா உனக்கு மட்டும் சொந்தமில்லை என்ற பாந்தவ்யம் வெற்றிவேலின் குரலில் மௌனமாக ஒலித்தது.

    “அதுக்கில்லே, நான் அம்மாவை மெட்ராஸுக்கே அழைச்சுட்டுப் போகணும்ணு லெட்டர் போட்டிருந்தேன். அவங்க அதைப் பார்க்கிறதுக்கு முன்னாடியே நீ கூட்டிட்டு வந்திருக்கே!”

    “எல்லாம் நல்ல விஷயம் பேசத்தான் இவன் என்னைக் கூட்டி வந்திருக்கான்டா.”
    “நல்ல விஷயமா?” காலியாயிருந்த ஒரு மடக்கு நாற்காலியில் போய் உட்கார்ந்த சிவாவுக்கு மனசு துணுக்குற்றது.
    “என்னடா அது?” என்று வெற்றிவேலைத் திரும்பிப் பார்த்தான்.
    “அவன் சொல்ல மாட்டான். நான் சொல்றேன். கல்யாண விஷயம்!”
    “யாருக்கு?”
    “வெற்றிவேலுக்குத்தான்”
    அப்பாடா… என்று ஒரு நிம்மதிப் பெருமூச்சு வந்தது.
    “இதென்னம்மா இவன்… எங்கிட்டே சொல்லாமே ஒங்ககிட்டே மட்டும் சொல்லியிருக்கான்” என்று சண்டை பிடிப்பது போல் ஆரம்பித்தான்.
    “ஒங்கிட்டே சொல்லி என்னடா புண்ணியம்? நீ சின்னப் பையன்… அம்மா கிட்டே தான் சொல்லணும்.”
    “நல்ல விஷயம் பேசறதுக்கு முன்னாடி எனக்கு இளநீர் கொண்டு வரச்சொல்! தாகமா இருக்கு.”
    “இளநீர் தானே… அஞ்சு வருஷம் கழிச்சு வா. அற்புதமான இளநீர் தர்றேன். இப்பதான் தென்னங்கண்ணு வச்சிருக்கேன்!”
    சிவா நிலத்தின் மீது மீண்டும் பார்வையை ஓட்டினான்.
    “யு ஹாவ் டன் எ மார்வல்!” என்றான்.
    “என்னப்பா சொல்றான் வேலு?”
    “ஏய்… இங்கிலீஷ் என்னடா வாழுது. அம்மா இருக்காங்க இல்லே.”
    “ஐ ஆம் சாரி…” என்று சொல்லி நாக்கைக் கடித்து தப்புமா, இவன் நிலத்திலே ஒரு அதிசயத்தையே பண்ணியிருக்காண்ணு சொல்ல வந்தேன்!”
    அம்மா பெருமிதத்தோடு அதை ஆமோதிப்பது போல் புன்னகை செய்தாள்.
    அந்தப் புன்னகையை அம்மாவிடம் கண்டு எவ்வளவு நாளாகிறது! அது வெற்றிவேலின் உழைப்பிற்கு வழங்கிய பதக்கம். இது அவனுக்குத் தெரியுமோ தெரியாதோ… சிவா அதைப் புரிந்து கொண்டான்.
    “மோர் குடிக்கிறியா சிவா!”
    “கொண்டு வரச் சொல்லு.”
    “டேய் காத்தாடி… செம்பகத்துட்டே சொல்லி ஒரு டம்ளர் மோர் வாங்கியா” என்று கூரை அருகில் சற்றுத் தூரத்தில் வீட்டின் கீழே நின்ற ஒரு அரை நிஜார் பையனிடம் குரல் கொடுத்தான்.
    “தோ வர்றேன் மொதலாளி” பையன் ஓடினான்.
    “டேய், நீ எப்படா முதலாளி ஆனே?”
    “அவங்க கூடவே வயல்லே எறங்கி வேலை செஞ்சு அவங்க குடிக்கிற கூழையே குடிச்சும் கூட இந்த மரியாதையை விட மாட்டேன்றாங்க. எத்தனையோ தடவை சொல்லிப் பார்த்துவிட்டுட்டேன். எனக்கு அது ஒரு புனை பெயர்னு சமாதானம் பண்ணிக் கிட்டேன்!”
    “நல்லது முதலாளி… எப்ப கல்யாணம்?”
    “ஏண்டா சிவா” என்று அம்மா குறுக்கிட்டான். “நீ பொண்t யாருண்ணு கேக்கவே இல்லியே?”
    “அவன் சொல்லவே இல்லியே. கல்யாணத்தன்னிக்கு பாத்துக்கினா போவுது.”
    “எல்லாம் ஒனக்குத் தெரிஞ்ச பொண்ணுதான்” என்று அம்மா நிறுத்தினாள்.

    யார்?
    அந்தக் கேள்வி திடீரென்று கேட்ட இடியொலி மாதிரி அவன் மனசை அதிர்வித்தது. யார்? யார்?
    “நீயா சொல்லு பாப்போம்.”
    “அவன் சொல்லிடுவாம்மா. அவனுக்கும் தெரியும்” என்று வெற்றிவேல் சொன்னான்.
    சிவாவை ஒரு பயம் மெதுவாக வந்து கவ்விற்று.

    அப்படியிருக்குமா? தன் மனசு என்னவென்று தெரியாமல் வெற்றிவேலுக்கு அப்படி ஓர் ஆசை வந்திருக்குமா? வந்திருந்தால் என்ன செய்வது?
    “தெரியலே” அவன் தலையசைத்தான்.

    “பிரீதாவாமே”
    சட்டென்று ஒரு நிம்மதி, சுகமான காற்று மாதிரி அவன் மனசில் பரவிற்று.
    “ஈஸிட்… என்ன துணிச்சலான, பொருத்தமான அற்புதமான செலக்ஷன்டா வெற்றிவேல்!” என்று எழுந்து வந்து அவனுக்குக் கை கொடுத்தான்.

    “அதுவும் சம்மதிக்கணுமே! அதான் எனக்கு கவலையா இருக்கு. மெட்ராஸிலே இருக்கிற பொண்ணு மலையாளத்துப் பொண்ணு. ஒறவு ஜனசந்தடி இதையெல்லாம் விட்டுட்டு வருமாண்ணு எனக்கு யோசனையா இருக்கு!” என்றாள் அம்மா.

    “சம்மதப்பட்டா பண்ணிக்குவோம். அது யோசிச்சா வேண்டாம். இவ்வளவு தானேம்மா!” என்று வெற்றிவேல் லகுவாக அம்மாவைக் கவலையிலிருந்து விடுவித்தான்.

    “நாளைக்கு போய் மொதல்லே நான் பொண்ணை பார்க்கறேன். அப்பறமா பேசுவோம். மோரை வாங்கிக் குடிப்பா” என்று அம்மா முடித்தாள்.

    தொடரும்

    Share
  • ஐந்து கை ராந்தல் – 28

    வையவன்

    அனகாபுத்தூருக்குப் போய் விலாசம் தேடி வீட்டிற்குள் நுழைந்தான் சிவா.
    கூடத்திலிருந்து ஒரு பெரிய நிலைக்கண்ணாடி முன்னால் மூக்குத்தி மாட்டிக் கொண்டு நின்றாள் திஷ்யா.
    “மார்வெலஸ்!” என்றான்.

    அவன் வந்த ஓசை கேட்காமல் மூக்குத்தியில் லயித்திருந்த திஷ்யா சட்டென்று திரும்பினாள்.
    கல் வைத்த மூக்குத்தியில் அவள் முகத்தில் ஒரு தனி சோபை கூடியிருந்தது. இத்தனை நாள் சிறு பெண்ணாயிருந்தவள் இன்றைக்குத் தான் முழு பெண்ணாக மாறிய மாதிரி ஒரு கம்பீரம்.

    “அட… எப்ப வந்தே… வந்தீங்க?”
    அவள் மூக்குத்தி திருகாணியை மாட்டிக் கொண்டிருந்தாள். அவனைப் பöர்த்த அவசரத்தில் அந்த வேலையை முழுக்க நிறைவேற்றுவாளோ இல்லை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டு விடுவாளோ என்று தோன்றியது.

    “திருகாணியை மாட்டிக்கிட்டே வா!”
    அவள் சிரித்துக் கொண்டே அவசரமாக திருகாணியை மாட்டினாள். பின்பு உள்ளே போய் ஒரு மடக்கு நாற்காலியைக் கொண்டு வந்தாள்.

    “பத்து நாள் கழிச்சு வர்ற மனுஷனுக்கு பத்து நிமிஷம் நிற்கிற தண்டனை தான் கொடுக்கணும்! போனாப் போவுதுண்ணு நாற்காலி கொண்டு வந்தேன்.”
    “ஒன்பது நாள்தான் ஆகுது.வேணும்னா ஒன்பது நிமிஷம் நிண்ணுட்டு ஒக்கார்றேன்!”
    அவன் நாற்காலியில் உட்காராமல் நின்றான்.

    “உட்காருங்க… ஸிட்டவுன்” என்று சொன்னாள்.
    “சரி டீச்சரம்மா! இனிமே லேட்டா வரல்லே” என்று சிவா உட்கார்ந்தான்.
    வீடு அமைதியாக இருந்தது.

    “எங்கே எந்த வாண்டுகளையும் காணோம்!”
    “எல்லாம் ஸ்கூலுக்குப் போயிருக்கு? சின்னக்குழந்தை தூங்குது… அப்பா ஹாஸ்பிடலுக்குப் போயிருக்கார்.”
    வீட்டைச் சுற்றிப் பார்வையை ஓட்டினான்.

    இரண்டு அறை… ஒரு கூடம்… ஒரு வாசல். கூடத்தில் நாற்பது பேர் படுக்கலாம் போல் அவ்வளவு விஸ்தாரம்.

    “வெளியே பின்புறம் பாத்ரூம்… டாய்லெட் பக்கத்திலேயே கிணறு இருக்கு. கிணத்திலே தண்ணி இருக்கு. ஆனா உப்பு!”
    “கச்சிதமா இருக்கு!”
    “இன்னொரு பாராட்டு சொல்லணும்.”
    “என்னது?”
    “வீட்டுக்காரர் சிங்கப்பூர்லே இருக்கார். ரெண்டு வருஷத்துக்கு ஒரு முறைதான் வருவார். அந்தத் தொந்தரவு இல்லே.”
    “சபாஷ்… சபாஷ்.”
    அவன் கையிலிருந்த பிளாஸ்டிக் பையைப் பார்த்தாள். சிவா அதை அப்படியே அவளிடம் நீட்டினான்.

    “இது எதுக்கு… ஒன்பது நாள் கழிச்சு வரறதுக்க காம்பென்சேஷனா? இல்லே பெனால்டியா?”
    “திஷ்யா, நான் வெற்றிவேல் பிரீதா மூணுபேரும் டில்லி… ஆக்ராண்ணு ஒரு ரவுண்டு போய் ரிஷிகேஷ் பார்த்துட்டு வந்தோம்.”
    “ஈஸிட்….” அவள் கண்கள் வியப்பால் விரிந்தன.

    மை பூசிய அந்த விழிகளின் கருமைக்கும் கல் மூக்குத்தியின் சுடருக்கும் ஏதோ ஒரு முரண்பாட்டின் கவர்ச்சி இருந்தது.
    “எப்ப மூக்கு குத்திக்கிட்டே”
    “நாலு நாளாச்சு. நல்லாருக்கா?”
    “நீ முழுமையுற்ற மாதிரி இருக்கு”
    “அவள் முகம் மின்னயது.

    “காதிலேயும் மூக்கிலேயும் துவாம் பண்ணி அங்கங்கே தங்கத்தை வச்சு அடைச்சாத்தான் ஆம்பிளைகளுக்கு பொம்பிளையின் முழுமை தெரியும் இல்லே?”

    “அப்ப ஏன் மாட்டிக்கிட்டே? ஃபெமினிஸ்ட் மாதிரி பேசறவ எல்லாத்தையும் எதிர்த்து உடைச்சிருக்க வேண்டாமோ!”
    “என்னமோ ஒரு கிறுக்கு…தோணிச்சு…இப்ப ஏண்டா குத்திக்கிட்டோம்ணு தோணறது.”

    “அற்புதமா இருக்கு” என்று அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்… பருகிக் கொண்டிருந்தான்… விழுங்கிக் கொண்டிருந்தான்…
    “சிவா…”
    “ம்ம்ம்”
    “பார்வை நல்லா இல்லியே!”

    “எதிராளி மொகம் என்னத்தைத் தூண்டுமோ பார்வையும் அந்த மாதிரி மாறிப் போகும். ஆக்ஷன்… ரியாக்ஷன்.”
    “என்ன இப்படி ஒரு ஞானம் ரிஷிகேஷ்லே பிடிச்சுட்டு வந்தியா?”
    “ஒன்கிட்டே கூட அடக்க ஒடுக்கமா ஒழுங்கா சாதுவா இருந்து நல்லபேர் வேறு வாங்கணும் போலிருக்கு!”
    திஷ்யா கலீரென்று சிரித்துவிட்டாள்.

    கூடத்தின் நடுவிலிருந்த பெரிய மேஜை மீது பிளாஸ்டிக் பையை வைத்துவிட்டு “பேசிக்கிட்டே நிக்கிறேன்… இரு போய் காப்பி கொண்டு வர்றேன்!” என்று சொல்லிவிட்டு எதிர்ப்புறமாக இருந்த சமையலறைக்குப் போனாள்.

    கூடத்திலிருந்த மேஜை பெரிய மேஜை. காப்பிக் கொட்டை அளக்கிற மாதிரி ஒரு சின்ன எடை மெஷின் எவர்சில்வர் தட்டுடன் காணப்பட்டது.

    ஒரு பக்கம் வரிசையாக சின்னச் சின்ன யுத்த வீரர்கள் மாதிரி விரல் நீளத்துக்கு ஏதோ பொட்டலங்கள் இருந்தன. எண்ணினால் நூறுக்கு மேல் போகும்.
    ஒன்றை எடுத்துப் பார்த்தான்.

    எப்ஸம் ஸால்ட்… பேதி உப்பு,
    பேதி உப்பு தயார் செய்கிறாளா?
    அதற்குள் உள்ளேயிருந்து திஷ்யா ஒரு டம்ளரை ஆற்றிக் கொண்டே நடந்து வந்தாள்.

    “நான் காப்பிண்ணு சொன்னேனே… நீ ஏன் வாயை மூடிக்கிட்டு இருந்ததே?”
    “பெயக்கண்டும் நஞ்சுண்டு அமைவர் நயத்தக்க நனி நாகரிகர்!”
    ‘நனி நாகரிகரே… இது நஞ்சு அல்ல, நல்ல மோர்!”
    “உப்பு போட்டிருக்கியா?”
    “ஏன்… ஒனக்கு போடப்படாதோ?”
    “சாதா உப்புண்ணா பரவால்லே. எப்ஸம் ஸால்ட்னா தான் யோசிக்கணும். எப்பவோ சின்ன வயசிலே சாப்பிட்டது?”
    அவன் கண்டுபிடித்து நறுக்கென்று விஷயத்துக்கு, வந்ததை மனசிற்குள் மெச்சிக் கொண்டாள்.

    அவள் நீட்டிய மோரை வாங்கிக் கொண்டான்.
    “ஒன்பது நாளைக்கு முன்னாலே இதுக்கு ஒரு ஐடியா கேக்கத்தான் வரச் சொன்னேன்?”
    “இது என்ன ஐடியா? சொல்லு.”

    “நீ வரலே… சரி தயங்கித் தயங்கி குழம்பறதை விட குளத்திலே குதிச்சுடறதுண்ணு எறங்கிட்டேன். எப்ஸம் ஸால்ட்டை அப்பா மொத்தமா வாங்கிட்டு வந்து கொடுத்துடறார். நூறு கிராம் ஐம்பது கிராமா பொட்டலத்திலே பாக் பண்ணி வச்சுடறோம். பல்லாவரத்திலேருந்து ஒரு மருந்துக் கடைக்காரர் சைக்கிள்ளே பையனை விட்டு அனுப்பிச்சிடறார். கொடுத்தனுப்பிடறோம்.”
    “என்ன பணம் கெடைக்கிறது?”

    “அஞ்சு நாளா வேலை செஞ்சதிலே நூத்தம்பது ரூபா கெடைச்சுது. அதுலே தான் இது!” என்று மூக்குத்தியைத் தொட்டுக் காட்டினாள்.
    “இதற்கு என் ஐடியா ஏன் கேக்கணும்னு நெனச்சே?”
    “இதுக்கெல்லாம் வேற யாருகிட்டே ஐடியா கேக்கட்டும்?”

    அப்படி ஒன்றும் உன்னை விட்டு விடத் தயாரில்லை என்று தப்பிக்க விடாமல் பிடிக்கிற மாதிரி சிவாவைப் பார்த்தாள்.
    அவன் அவளைப் பார்த்தான். அந்தப் பார்வை கொண்டாடுகிற உரிமையின் பிணைப்பில், இருமை அழிந்து ஒன்றுடன் ஒன்று சந்தித்து உண்டாகும் ஒரு மின்சார ஓட்டத்தின் சக்திப் பிரவாகத்தில் அவன் சற்று நேரம் சஞ்சரித்தான்.
    “மோரைக் குடிங்க!” என்று அவள் பார்வையை விலக்கிக் கொண்டாள்.

    “ஆமாம்… மோர் கொடுத்தே இல்லே?”
    அவன் மோரைக் குடித்துவிட்டு டம்ளரைக் கீழே வைத்தான்.
    “நல்ல ஐடியா தான்! வீட்டிலே இருந்தபடியே ஒரு தொழில் செய்யறது நல்லது தான்”
    “அது மட்டும் நோக்கமில்லே சிவா!”
    “வேறே?”

    “இந்தப் பசங்களுக்கு வீடு எப்படி நடந்துகிட்டிருக்கு? இங்கே அவங்களுக்கு என்ன ரோல்ணு தெரியணும். ஒழைக்கிற எண்ணம் உண்டாகணும். அவங்களை பிஸியா வச்சிருக்கணும். இதான் என் நோக்கம். இவங்கள்ளாம் அப்பா சம்பளத்தை நம்பியே யாரோ சம்பாதிச்சா நாம சௌக்கியமா இருந்துடலாம்ணு நம்பியே வளர்ந்துடு வாங்களோண்ணு எனக்கு ஒரு பயம் வந்துட்டது.”

    திஷ்யாவிடம் அந்தக் குடும்பத்தின் கண்ட்ரோல் இருப்பதற்கு அவன் உள்ளூர மகிழ்ந்தான்.
    “இப்பதான் ஒரு வழி கெடைச்சது. ரொம்ப சின்ன வழிதான். இந்த லைன்லேயே போய்ப் பார்த்தா அப்புறமா வெளிச்சம் தெரியலாம்.”

    “ஆரம்பம் எளிமையா இருக்கறது நல்லது! கங்கை உற்பத்தியாகிற கங்கோத்ரி கூட சின்னது தான்”
    “என்ன பேரு அது?”
    “கங்கோத்ரி…”

    “கங்கோத்ரி… கங்கோத்ரி… பேரு ரொம்ப நல்லா இருக்கு. அப்பா வெறும் பேப்பர்லே இதைப் பாக் பண்ண வேண்டாம். மேலே அச்சடிச்சு ஒரு மருந்து கம்பெனி பேரு வச்சு அடிக்கலாம்ணு சொன்னார்.”
    “மறுபடியும் அவருடைய ‘ஆம்பிஷன்’ வேலை செய்ய ஆரம்பிச்சுடுச்சா?”

    “ஆனா… இந்த ஆம்பிஷனுக்கு கால்கள் உண்டு. அது மெதுவா நடந்து தட்டுத் தடுமாறி புவியீர்ப்பை விட்டு விடாமத்தான் ஓடும்.”
    “குட்… அப்ப எனக்கு ராயல்டி கொடுக்கணும்!”
    “எதுக்கு?”
    “பேரு வச்சேனே அதுக்கு?”
    “என்ன பேரு வச்சிட்டே… என்ன ராயல்டி கேக்கிறே?”
    “கங்கோத்ரி பார்மசூடிகல்ஸ்”

    “கம்பீரமாத்தான் இருக்கு. ஆனா எதுவோ கொஞ்சம் பெரிய எடம்ணு மிரட்டுது… இங்கே வந்து பார்த்தா பொசுக்குணு இருக்கும். நான் எப்ஸம்ஸால்ட்டை அளந்து அளந்து போட… கொழந்தைகள் பொட்டலத்தை ஒட்டிக்கிட்டிருக்கும்.”
    “கங்கோத்ரி கூட அப்படித்தான் இருக்கு. ஆடு கூட தாண்டிடுமாம் அதை?”
    “சரி… அதே பெயரை கன்பர்ம் பண்ணிக்கிட்டேன்.”
    “ராயல்டி?”
    அவன் பார்வையையும் உதட்டையும் பார்த்துவிட்டு “ஸ்ஸ்ஸு” என்று அதட்டினாள் திஷ்யா.

    “பிளாஸ்டிக் பையை வச்சுட்டு நிக்கிறயே… நான் ஒனக்காக என்ன வாங்கி வந்திருக்கேன்னு பார்க்க அக்கறையில்லே?”
    “அதெல்லாம் பொருள்கள் தானே! ஆளே வந்திருக்கும் போது அது செகண்டரி.”

    அவன் மேலே உயரத்திற்குச் சென்றதை உணர்ந்தான் சிவா. எடுத்துப் பார்க்கச் சொல்லி வற்புறுத்தவில்லை.
    “நாளைக்கு மறுநாள் நான் ஊருக்குப் போகப் போறேன். அம்மாவை அழைச்சுட்டு வந்துடலாம்னு நெனக்கிறேன்.”
    “வீடு பார்த்துட்டியா?”
    “இல்லே”
    “பின்னே?”
    “பிரீதா க்வார்ட்டர்ஸ். அவங்க ரொம்ப கட்டாயப்படுத்தறாங்க.”

    “எனக்குப் பிடிக்கலே”
    “எனக்கும்தான். ஆனா பிரீதா ரொம்ப லோன்லியா ஃபீல் பண்ணுது!”
    “உன் இஷ்டம்.”

    “நான் பொறப்படறேண்ணு சொன்னப்பா பிரீதாவும் இதையே தான் சொல்லுச்சு!”
    “பண்ணுது, சொல்லிச்சு… என்ன அஃறிணையிலே அவளை ரெபர் பண்றே?”
    “அவள்ணு சொல்லப் பிடிக்கலே. அவங்கண்ணா ஓவர் மரியாதையாத் தோணுது.”
    “ஜாக்ரதையாயிரு”

    பளிச்சென்று அவன் மனசில் ஒரு சிவப்பு விளக்கு விழுந்தது. சிவா அவளை அலசுவது போலப் பார்த்தான்.
    “இது சந்தேகமா… பொறாமையா?”
    “ரெண்டுமில்லே. நான் பெண். அவளும் பெண்.”

    “இது சுவாரஸ்யமான திருப்பம்! ரொம்ப ரசிக்கும்படியா இருக்கு.”
    திஷ்யாவுக்கு முகம் புறுபுறுவென்று மாறி மூக்கு துடித்தது.
    “ஆஹா ஓஹோன்னு பெஃமினிஸம் பேச வேண்டியது. இன்னொரு பெண் குறுக்கிட்டா சடக்ணு சராசரிக்குக் கீழே போயிட வேண்டியதா?”

    “நான் ஃபெமினிஸ்ட்டுண்ணு ஒங்ககிட்டே கொடி தூக்கிட்டு வந்து நிக்கலே.”
    “பைத்தியம்! இந்த சிவாவை இன்னும் நீ புரிஞ்சுக்கணும். இவன் பசிபிக்!”
    “போதும்… ஒங்க சுய தம்பட்டம்! எனக்குப் பிடிக்கலே”
    “பிரீதா தாமுவுக்கு வாழ்க்கைப்பட இருந்தவள். வேறு சுய தம்பட்டமில்லேண்ணாலும் இந்த ‘வால்யூ’ ஒண்ணு போதும். நான் திடமானவனாய் நிற்க.”
    அவள் முகம் சகஜமாயிற்று.

    “என்ன செய்யப் போறே! பழைய வேலையா?”
    “எது?”
    “வேலை தேடற வேலை”
    அவன் அலட்சியமாகச் சிரித்தான்.

    “பொறுத்திருந்து பார்”
    “ஒருத்தர் வீட்டிலே தங்கறப்போ…” என்று அவள் பேசு முன்பு குறுக்கிட்டான்.
    “அங்கே ஒரு பாரம் மாதிரி ஒண்ணுக்கு ரெண்டு சுமையோட ஒக்காந்துக்குவேண்ணு நெனக்கிறியா?”
    “வேற…”
    “ஸீ”
    “எழுதுவே இல்லே? ஆனா அது நிரந்தர வேலையில்லையே!”
    “நான் அப்பறமா வர்றேன். வீட்டிலே எல்லாரும் இருக்கறப்ப அப்ப வந்து என் ராயல்டியை வாங்கிக்கறேன்.”
    அவள் முகம் சிவந்தது.

    “அந்தக் கதையெல்லாம் வேண்டாம். என் கேள்விக்கு பதில் சொல்லு!”

    “இப்ப வாங்கிகிட்டா ஏதோ சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கிற கோழைத்தனம் மாதிரி தோணுது. எல்லாரும் இருக்கறப்ப ஒரு சந்தர்ப்பத்தை கண்டுபிடிச்சா அதிலே ஒரு த்ரில் இருக்கும்”

    அவள் மேஜை மீதிருந்த செய்தித் தாளை மடித்து அவன் தோளின் மீது செல்லமாக அடித்தாள்.
    “நான் வர்றேன்” சிவா எழுந்தான்.

    தொடரும்

    Share
  • ஐந்து கை ராந்தல் (27)

    வையவன்

    கையிலிருந்த சூட்கேஸை கீழே வைத்து விட்டு, பிரீதாவிடமிருந்து சாவியை வாங்கி கதவைத் திறந்தான் சிவா. திறந்தவுடனே ஒரு கடிதம் எதிர்பட்டது. எடுத்துப் பார்த்தான்.

    திஷ்யாவிடமிருந்து தான் வந்திருந்தது.

    கையெழுத்தைப் பார்த்ததுமே பளிச்சென்று புலப்பட்டது. திருப்பி தேதியைப் பார்த்தான்.
    பத்து நாட்களுக்கு முன் வந்திருந்தது.

    மடித்துச் சட்டையில் போட்டுக் கொண்டு சூட்கேஸ்களை உள்ளே எடுத்து வைத்தான்.
    ஆட்டோவிற்குப் பணம் கொடுத்து விட்டுத் திரும்பி வந்தாள் பிரீதா.

    “எத்ர கம்பெல் செய்தும் வெற்றிவேல் எந்தினாணு நிர்க்காம நாட்டினு போயது?”
    “அவன் இப்போ ஒரு பிஸி விவசாயி. பெண்டாட்டி பிள்ளையைக் கூட விட்டுட்டு ஒரு விவசாயி இருப்பான். ஆனா நெலத்தை விட்டுட்டு இத்தனை நாள் தங்கறது அவனுக்கு மகா பாவம்!”

    “வாட் எ கிரேட் ஜென்டில் மன் ஹி ஈஸ்!”
    “மெய்தான்”
    “இன்னு ஞான் லீவ் எக்ஸ்டெண்ட் செய்யும்.”
    “ரெஸ்ட் எடுக்கணுமில்லே. லீவ் போட்டுடுங்க.”
    “ஐ… ரெஸ்ட்டோ மண்ணோ… எவ்வளவு குப்பை… லுக் ஹவ் டஸ்ட்டி… எல்லாத்தையும் க்ளீனாக்கணும்” என்று வீட்டைச் சுட்டிக் காட்டினாள்.

    “எனி லெட்டர்ஸ்.”
    “ஒண்ணுதான் வந்திருக்கு. எனக்கு”
    “அம்மாவிடமிருந்தா”
    “இல்லே. திஷ்யாவிடமிருந்து.”
    “என்ன விஷயம்?”
    “இன்னும் படிக்கலே.”
    பிரீதா பாத்ரூமுக்குப் போனாள்.

    அவன் அழுக்கடைந்திருந்த சட்டையையும் பாண்ட்டையும் உருவிப் போட்டு விட்டு ஒரு பனியனும் லுங்கியும் அணிந்து கொண்டு அந்த இன்லண்ட் கவரைப் பிரிந்தான். குண்டு குண்டான கையெழுத்து மணி கோர்த்தது மாதிரி ஓடியிருந்தது.

    “அன்புள்ளவருக்கு வணக்கம். இங்கு அனகாபுத்தூரில் வசதியான தனி வீடு கிடைத்து விட்டது. ராயப்பேட்டை வாடகைதான். குழந்தைகளுக்கெல்லாம் டி.சி. வாங்கி இங்குள்ள அரசாங்கப் பள்ளியிலேயே சேர்த்து விட்டோம்.

    படிக்கிறவர்கள் எங்கிருந்தாலும் படிப்பார்கள். அநாவசியமான பயணமும் ஆடம்பரச் செலவும் ஒழிந்தால் பணம் மிச்சமாகும். இது நகரமும் கிராமமும் கலந்த ஒரு விநோதக் கலவை. டென்ட் சினிமா இருக்கிறது. வயல் இருக்கிறது. ஏரிக்கரை இருக்கிறது. ஒரு முறை வாருங்கள்.

    ஓய்வாக வரலாமே என்று ஒத்திப் போடாதீர்கள், உடனே வாருங்கள். உங்களை ஒரு விஷயமாக யோசனை கேட்க விரும்புகிறேன். என்ன விஷயம் என்பதை நேரில் தான் சொல்லுவேன். அனைவரும் நலம். உடனே உங்களை எதிர்பார்க்கிறேன். அனகாபுத்தூர் அல்ல, அண்டார்டிகாவுக்குப் போய் விட்டாலும் உங்கள் திஷ்யா.”

    சிவாவின் உதட்டுச் சுழிப்பில் ஒரு குறுநகை தோன்றி ஒளிந்து கொண்டது.

    மீண்டும் கடிதத்தின் தேதியைப் பார்த்தான். மறுபடியும் ஒருமுறை ஒவ்வொரு தேதியாகக் கூட்டி நாளை எண்ணினான்.
    பத்து நாட்கள் அல்ல, ஒன்பது தான் ஆயிருந்தன. அவள் எழுதிய கடிதத்திற்குப் பத்து நாளாகப் போகாதிருந்ததைவிட ஒரு நாள் குறைந்ததில் ஒரு நிம்மதி ஏற்பட்டது.

    பாத்ரூமிலிருந்து திரும்பி வந்தாள் பிரீதா.

    “லெட்டர் என்ன சொல்லுது?”
    “நான் ஒடனே வரணுமாம், ஏதோ அவசரமா யோசிக்கணுமாம்.”
    “குளிச்சிட்டுப் பொறப்படு… தண்ணி நல்லா வந்துகிட்டிருக்கு.”
    சிவா அரை மணி நேரத்தில் குளித்து டிரஸ் செய்து கொண்டு தயானான்.

    தன் அழுக்குச் சட்டை துணி மணிகளை எல்லாம் தன் பெரிய சூட்கேஸில் போட்டுத் திணித்துப் பெட்டியை மூடினான்.
    திரும்பும் போது பிரீதா நின்று மௌனமாகக் கவனிப்பதைப் பார்த்தான்.

    “என்ன எல்லாத்தையும் ‘பாக்’ பண்றே!”
    அவளை நிமிர்ந்து பார்க்க விரும்பாமல் முகம் தாழ்த்தியவாறே சொன்னான்.

    “நான் வேற ரூம் பார்க்கப் போறேன்.”
    பளிச்சென்று ஓர் அறை வாங்கிய மாதிரி பிரீதாவின் முகம் பின்னிட்டதை அவன் கவனிக்கவில்லை.

    “ஏன்?” என்று கேட்ட பிரீதா சட்டென்று விழிப்புற்ற மாதிரி “உன் இஷ்டம்” என்றாள்.
    அந்த உன் இஷ்டத்தில் திடீரென்று தன்னை விட்டு விலகி அவன் அகலுகின்ற வேதனை தெரிந்தது.

    “இங்கு தங்குவது சரியில்லை. எனக்கல்ல… உனக்கு!”
    முதன் முறையாக தன்னை அவன் ஒருமையில் அழைப்பதை பிரீதா மனசில் குறித்துக் கொண்டாள். ஒரு வேளை வாய் பிசகிச் சொல்கிறானோ?
    “இட் வில் ஸ்பாய்ல் யுவர் நேம்.”
    கண்கள் மருள மருள அவனை விழித்துப் பார்த்தாள் பிரீதா.

    மீண்டும் “உன் இஷ்டம்” என்றாள்.

    “நான் அடிக்கடி வருவேன். உன்னை ஹாஸ்பிடல்லே வந்து பார்க்கிறேன்.”
    மீண்டும் அவள் “உன் இஷ்டம்” என்றாள்.

    அவன் கையில் எடுத்த சூட்கேஸை மீண்டும் கீழே வைத்துவிட்டு நாற்காலியில் உட்கார்ந்தான்.
    “ஒனக்கு டயம் ஆகலியா சிவா?”

    “நீ அந்த ‘உன்இஷ்டத்தை’ வாபஸ் வாங்கிக்கிட்டா தான் கௌம்புவேன்.”

    “ஏன்?”
    “இட் ஹர்ட்ஸ் மீ.”
    “நீ கௌம்பிப் போறது?”

    “அஃப்கோர்ஸ் அது ஒன்னை ஹர்ட் பண்ணும். மனசளவிலே ஹர்ட் ஆகிறது வேற… நல்ல பெயருக்கும் செய்யற தொழிலுக்கும் கெடைக்கிற ஹர்ட் வேறே.”

    “சிவா… நான் குழந்தையல்ல…”
    “ஸாரி…”
    “இப்போ ஒனக்கு வேலை இல்லே. ஒன் கையிலே எவ்வளவு காசு இருக்கோ எனக்குத் தெரியாது. இப்ப நீ பொறப்படறதே ப்யூர்லி ஒரு தன்மானத்தாலே தான்.”
    “………..”
    “ஒன்னை எனக்குத் தெரியாதா சிவா…?”
    சிவா அமைதியாக இருந்தான்.

    “தாமு இருந்தா நீ இப்படிப் போவியா?”
    அவள் கண்ணீர் சிந்துகிறாளோ என்று நிமிர்ந்து பிரீதாவின் விழிகளைப் பார்த்தான். அவள் அதைப் புரிந்து கொண்டாள்.

    “நோ… இந்த ஜென்மத்திற்கு எவ்வளவு அழுகை இதுநாள் வரை பாக்கியிருந்ததோ அவ்வளவும் பாபா முன்னாடி அழுதாச்சு. இனிமே நான் அழமாட்டேன்.”

    பிரீதா திடமான புன்முறுவலுடன் அவனை பார்வையால் அலசினாள்.

    “நான் உன்னை ‘கம்பல்’ பண்ணலே; உன் இஷ்டம்.”
    “ஆல்ரைட்… நான் போகலே பிரீதா. ஆனா எனக்கு அம்மாவை இங்கே அழைச்சுட்டு வரணும்போல தோணுது.”

    “இந்த யோசனையை நானே உனக்குச் சொல்ல விரும்பினேன்.”
    “அப்புறம்… அப்புறம்”
    “சொல்லு சிவா”
    “ஊருக்குப் போயிட்டு வந்து சொல்றேன்.”
    “போய்ட்டு வா”
    சிவா விடைபெற்றுக் கொண்டு ஒரு கைப்பையுடன் வெளியே நடந்தான்.

    பதினைந்துநாள் ரயிலிலும் பஸ்ஸிலும் காட்டிலும் மலையிலும் கங்கையும் டில்லியுமாகச் சுற்றி விட்டு சாலையில் நடக்கும் போது சென்னை ரொம்ப சின்னது ஆகிவிட்டாற் போன்ற உணர்வு ஏற்பட்டது.

    நேரே சிந்தாதிரிப்பேட்டைக்குப் போனான்.

    சாமிநாய்க்கன் தெருவில் ஒரு வீட்டுக்குள் நுழைந்ததும் வயர் பின்னிய இரும்பு நாற்காலியில் லுங்கியோடு கைக்குழந்தையைக் கொஞ்சிக் கொண்டிருந்த செங்குட்டுவன் பதைப்போடு எழுந்தான்.

    “சார்… வாங்க… வாங்க… எப்ப வந்தாப்பிலே… ஏ மரகதம், இந்தக் குழந்தையைப் பிடிம்மே” என்று கூப்பாடு போட்டுவிட்டு உட்கார்ந்திருந்த நாற்காலியை அவனுக்கு ஒதுக்கியவாறு, கூப்பிட்டால் மரகதம் வரப்போவதில்லை என்ற ரீதியில், தானே குழந்தையை எடுத்துக் கொண்டு உள்ளே போனான்.

    ஐந்து நிமிஷம் கழித்து ஒரு ஸ்டூலை எடுத்துக் கொண்டு வெளியே வந்தான்.
    “சார்…டூர் எல்லாம் நல்லபடி இருந்ததுங்களா?”

    ஆக்ராவில் செங்குட்டுவனுக்காக வாங்கிய தாஜ்மஹால் பொம்மை அடங்கிய அட்டைப் பெட்டியை எடுத்து அவனிடம் நீட்டினான் சிவா.

    “ஆக்ராவிலே வாங்கினேன். பத்திரமா உள்ளே கொண்டு போய் வை.”
    செங்குட்டுவனுக்கு முகம் மகிழ்ச்சியால் ஒளி வீசியது.

    “இந்த கிலுகிலுப்பையை கொழந்தைகிட்டே கொடு. கரோல்பாக்லே வாங்கியது.”
    இன்னொரு முறை அவன் முகம் பிரகாசித்தது.

    “டூர் நல்லபடியா இருந்ததா சார்?”
    “அற்புதமா இருந்தது செங்கு. உங்க வீட்டு எலுமிச்சை சாதமும் புளியஞ் சாதமும் அமர்க்களம்.”
    “போங்க சார்… கிண்டல் பண்றீங்க.”

    “இல்லேப்பா… பிரீதாம்மா ரொம்ப விரும்பி சாப்பிட்டாங்க.”
    “அப்படியா..?”
    “நான் சொன்ன விஷயம்.”

    “ரூம் தான் சார் தோதர கெடைக்கலே. ஒரு புரோக்கர் கிட்டே சொல்லி வச்சிருக்கேன். ரெண்டு நாள்… டயம் கேட்டிருக்கான்.”
    “லைசன்ஸு…?”

    “நீங்க எப்ப வருவீங்கண்ணு காத்துகிட்டிருந்தேன். டிராபிக் சூபரிண்டண்ட் எங்க மச்சினச்சி புருஷனுக்கு ப்ரெண்ட். அவரகிட்டே சொன்னேன். ஆல் ரைட் கூட்டியாண்ணு சொன்னாரு.”

    “நாளைக்குப் போவமா?”
    “ஓ… என்ன சார். காப்பி சாப்பிடாமே கூடக் கௌம்பிட்டீங்க” என்று அவன் அங்கலாய்க்க சமாதானம் சொல்லி விடைபெற்றான் சிவா.

    சிந்தாதிரிப்பேட்டை தபால் ஆபீஸுக்கு நடந்து வந்து அம்மாவுக்கு ஒரு கடிதம் எழுதினான்.

    ‘அன்புள்ள அம்மா அவர்களுக்கு வணக்கம் ரிஷிகேசத்திலிருந்து இன்று காலை மூவரும் நலமாக வந்து சேர்ந்தோம். நாளை எனக்கு இங்கு ஒரு முக்கியமான வேலை இருக்கிறது. அதைப் பார்த்துக் கொண்டு, நாளை மறுநாள் ஊருக்கு வருகிறேன். அங்கிருந்து ஓரிரு தினங்களில் நாம் இருவரும் சென்னைக்கு வருகிறோம். ஆம், நிரந்தரமாக நீங்கள் சென்னையில் என்னுடன் இருக்கப் போகிறீர்கள்.

    ‘என் சாப்பாட்டையும் ஹோட்டல் சாப்பாட்டையும் சாப்பிட்டு சாப்பிட்டு எனக்கு அலுத்து விட்டது. நிச்சயம் நாம் இங்கு ஒன்றாக வசிக்கப் போகிறோம். மற்றவை நேரில் தங்கள் அன்புள்ள மகன் சிவா.’
    அந்தக் கடிதத்தை அஞ்சலில் சேர்த்தபோது சிவாவுக்கு நிம்மதியாயிருந்தது.

    தைரியமும் எதையும் எதிர் கொள்ளத் தயாரான தன்னம்பிக்கையும் மனசிற்குள் சுரந்தன.

    அவன் அண்ணாசாலைக்குப் போக ஒரு பஸ்ஸில் ஏறினான். அங்கே போய் இறங்கினால் தான் அனகாபுத்தூருக்கு பஸ் பிடிக்க முடியும்.

    தொடரும்

    Share
  • ஐந்து கை ராந்தல் (26)

    வையவன்
    யாரோ தொட்டு உலுப்புகிறார்கள்.
    கங்கையோடு கங்கையாக வனாந்திரங்களில் பர்வதத் தாழ்வுகளில் பாறைகளில் சிக்கி ஆனால் அடிபடாமல் சிவா போய்க் கொண்டேயிருந்தான்.
    ஏதோ நீந்துகிற மாதிரி… தண்ணீரின் மீதே பறப்பது மாதிரி… பறவைகள் பாடிய கரையோரங்களைப் பார்த்துக் கொண்டே போகிறான்.
    யாரோ தொட்டு உலுப்புகிறார்கள்.
    சட்டென்று கண் விழித்தான். வெற்றிவேல்.
    “என்ன வெற்றி… பொழுது விடிஞ்சாச்சா?”
    “இல்லை. இன்னும் நேரமிருக்கு. வெளியே பாபா காத்துகிட்டிருக்கார். கங்கையிலே குளிக்கப் போவோம், வர்றீங்களாண்ணு கூப்பிட்டார்.”
    “இந்தக் குளிர்லேயா?”
    “குளிர்லே குளிச்சா கங்கை சூடாயிருக்கும். அது தனி சுகம். குளிர் விட்ட பிறகு குளிச்சா அது ஜில்லுணு இருக்கும். எதையும் ‘மிஸ்’ பண்ணக் கூடாது.”
    “சரி…” சிவா சோம்பலை உதறிக் கொண்டு எழுந்தான்.
    வெளியே பாபா ஒரு மேல் துண்டு கூட இல்லாமல் நின்றார்.
    “போவோமா” என்று சிரித்தார்.
    அவர்கள் மூவரும் பாதுகாப்புக் கம்பிகள் கட்டப்பட்டிருந்த ஒரு நீர்த்துறைக்குச் சென்றனர். வழியில் ஒன்றும் பேசாமல் நடந்தனர்.
    கங்கை பேசிக் கொண்டிருந்தது. மனித மொழிகள் அடங்கியிருந்த அந்த அதிகாலையில் குளிர் மறந்து நடப்பது சிரமமாயிருந்தது. எனினும் அந்த நிசப்தத்தை, கங்கை ஓடும் ஒலி மட்டும் கேட்கும் மௌனத்தை மனம் தோய்த்து ரசித்தான்.

     
    நீர்த்துறையில் சிறு கூட்டமிருந்தது.
    மூவரும் மூழ்கி எழுந்தனர்.
    மேற்புறத்தில் பனிக்கட்டி போன்று குளிர்ந்த கங்கை சற்று ஆழத்தில் வெதுவெதுப்பாக இருந்தது. மூன்று முழுக்கு போட்டு எழுந்த போது குளிர் சுத்தமாக விட்டுப் போயிற்று.
    உடம்பில் ஜிவுஜிவுவென்று ஒரு புத்துணர்ச்சி பரவியதை சிவா உணர்ந்தான். தலையிலிருந்து பாரமெல்லாம் கழிந்து விட்ட நிம்மதி. மனசு மேகமில்லாத ஆகாயம் மாதிரி தெளிவாயிருந்தது.
    பாபாவும் வெற்றிவேலும் கரையேறிய பின்னரும் கூட அவன் நீர்த் துறையை விட்டு எழுந்திருக்க மனமின்றி பத்து நிமிஷம் குளித்தான்.
    அதற்கப்புறம் அவர்களைக் காத்திருக்க விடலாகாது என்ற எண்ணம் உதித்துக் கரையேறினான்.
    “கங்கை அன்னையின் மடியிலிருந்து எழுந்து வர மனசு வராது!” பாபா சொன்னார்.
    “மேலும் இவன் எழுத்தாளன்” என்று வெற்றிவேல் சொன்னான்.
    அந்த அறிமுகம் அசந்தர்ப்பமானதாக சிவாவுக்குப் பட்டது.
    “நல்லது” என்று ஆசிர்வதிப்பது போல பாபா சொன்னார்.
    சிவா தலை துவட்டிக் கொண்டான்.
    மூன்று பேரும் ஒரு பாறை மேல் நின்று கொண்டிருந்தனர்.
    “உட்கார்ந்து போகலாமே!” என்று பாபா சொன்னார்.
    இருவருக்கும் அங்கே இருப்பது சுகமாகத் தோன்றியது.
    மூவரும் உட்கார்ந்தனர்.
    “அம்மா எப்படி இருக்கிறாள்?”
    முதன் முறையாக அவன் தன் மகன் என்ற உரிமையை உணர்த்துவது போன்று பாபாவின் பேச்சு ஆதுரமாக ஒலித்தது.
    அவருக்கும் தனக்கும் மத்தியில் நடந்த மௌனமான யுத்தம் முடிந்தது போன்று நினைத்தான் சிவா. அவன் மீது தன்னையறியாது ஒரு நேய உணர்வு தோன்றியதைக் கவனித்தான்.
    “சௌக்கியமா இருக்காங்க”
    “என்ன எழுதுகிறாய்?”
    சிவா தயங்கினான்.
    “கதைகள்”
    “ம்ம்ம்… நல்லது”
    “குறுகிய காலத்தில் எல்லார் கவனத்தையும் கவருகிற மாதிரி எழுதியிருக்கிறான்” என்று வெற்றிவேல் விளக்கினான்.
    “நல்லது… எதிலும் நலம் செய்ய முடியும். நன்மையை எதிலும் விநியோகிக்க முடியும். நோக்கம் மேன்மையானால் நலமும் நன்மை நாடும். இயல்பும் வாய்க்கும்.”
    சிவா கேட்டுக் கொண்டான். பொதுப் படையானது போன்ற அந்தச் சொற்களில் பொருள் பொதிந்திருப்பதை அவன் கண்டான்.
    “உனக்கு இதன் மேல் வருத்தமில்லையே மகனே” என்று தன் மார்பைத் தொட்டுக் காட்டினார் பாபா.
    அவர் நான்… என் என்ற சொற்களைத் தவிர்த்து விட்டதை அண்செட்டி சந்திப்பிலேயே புரிந்து கொண்டிருந்தான்.
    “இல்லை பாபா”
    அவர் முகம் பரம சாந்தத்தில் லயித்திருந்தது. பூ மலர்ந்தது போன்ற புன்னகை அந்த வெள்ளைத் தாடியினூடே தென்பட்டது.
    “நல்லது மகனே! வருத்தம் ஒரு பந்தம். அது பந்தத்தின் மீதி, பிரிய வேண்டிய நேரத்தில் மலர் உதிர்கிறது. இறக்கை முற்றுகிற தருணத்தில் பறவை பறந்து விடுகிறது. விடுபட்ட வேகத்தில் அதோ அன்னை ஓடிக் கொண்டிருக்கிறாள்.”
    சிவாவும் வெற்றிவேலும் கூர்ந்து கவனித்தனர்.
    “மகனே” என்று சிவாவைப் பார்த்துத் தனியாக ஒரு வார்த்தை சொல்வது போல் தொடங்கி நிறுத்தினார்.
    “இது வேதாந்தம் அல்ல. உலக இயல்பு. வருத்தமும் உலக இயல்புதான். நேரம் வரும்போது அதுவும் தீர்ந்து போகிறது. உன் தாய்…” பாபா சற்று யோசித்து விட்டுத் தொடர்ந்தார்.
    “மகா ஞானி. எதற்கு வருந்துவது… எதற்குத் தடை செய்வது என்று நன்கு உணர்ந்தவள்.”
    சிவாவுக்கு மெய் சிலிர்த்தது.
    “அவள் நலமாகவே இருப்பாள்.”
    பாபா இறுதி விடை பெறுகிறார் என்று சிவாவுக்குத் தோன்றியது.
    “யாவும் நலமாகவே நடக்கும். மகனே, உன் பாதை தெளிவாகியிருக்கிறது!” என்று எதையோ சுட்டிக்காட்டி உணர்த்துவது போல் சொன்னார்.
    தன் மனசுக்குள் நடந்தனவற்றை அவர் கூறுகிறாரா?
    “நீ உன் பாதையில் பயணம் செய். உன் இயல்பு உன் பாதையைச் செப்பனிட்டுப் போகிறது. நல்லது.”
    அவர் சற்று நிறுத்தி நிசப்தமானார். பிறகு பாலத்தைப் பார்த்தவாறே தொடர்ந்தார்.
    “எத்தனையோ பாதைகள் எத்தனையோ பாலங்கள்; எங்கும் தேங்கி நிற்காத பிரயாணம் தான் முக்கியம். பாதைகளும் பாலங்களும் சொந்தமானவையாக இருக்க வேண்டும் என்பதில் கூட ஒரு நியாயம் உண்டு!”
    சிவாவின் மனசில் நடந்த போராட்டம் யாவற்றையும் சுட்டிக்காட்டுவது போன்று அந்தப் பேச்சு விளங்கிற்று.
    “கங்கைக்குப் பந்தமில்லை. ஆனால் துணை உண்டு.”
    பாபா அர்த்தபுஷ்டியோடு நிறுத்தினார்.
    “அதே மாதிரி வாழ்க்கைக்கும் துணை உண்டு. சிலருக்கு அது தேவை. சிலருக்கு அது தேவை இல்லை.”
    வெற்றிவேல் அவர் இன்னும் வெளிப்படையாகச் சொன்னால் நலமாக இருக்கும் என்று எதிர்பார்த்தான்.
    “நீங்கள் எதைச் சொல்கிறீர்கள் பாபா?”
    அவர் மௌனமானார்.
    சிவா ஒவ்வொரு வார்த்தையாக கிரகிப்பவன் போன்று அவரை கவனித்துக் கொண்டிருந்தான்.
    “துணை அமைவது முக்கியம். ஒரு சமயம் துணை தானாகவும் அமையும்…அந்தக் குழந்தை…அவள் பெயர் என்ன?”
    வெற்றிவேலுக்கு சட்டென்று விளங்கிற்று.
    “பிரீதா” என்றான்.
    “அவள் உத்தமமானவள். துன்பமும் துயரும் உலையில் உருக்கி உருக்கி அவளை பசும்பொன் மாதிரி சுடர வைத்திருக்கிறது. அத்தகைய துணை ஒருவருக்கு கிட்டுவது அபூர்வம்.”
    சிவா துணுக்குற்றான்.
    அவளை ஏற்றுக்கொள் என்று சொல்ல வருகிறாரா…? அப்படிச் சொல்வது அவரது இயல்புக்கு முற்றிலும் விரோதமானது!
    அவர் புன்னகை செய்தார்.
    “உங்கள் இருவரில் எவரேனும் அவள் அருமையை அறிந்திருக்கிறீர்களா?”
    சிவா நிம்மதிப் பெருமூச்சு விட்டான்.
    “உங்கள் இருவரில் எவரேனும் ஒருவர் சகோதரனாக இருந்து அவள் அருமையை அறிந்த ஒருவனிடத்தில் ஒப்படையுங்கள். அவன் ஆசிர்வதிக்கப்பட்டவன் ஆவான்.”
    அந்த ரிஷிகேஷ் பயணமும், அதிகாலையில் நீரில் குளிக்கச் சென்றதும் அவர்கள் இருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் பொருள் நிறைந்ததாக ஊர் திரும்பும் போது தோன்றின.
    பாபாவுடன் அவர்கள் குளிக்கச் சென்ற போது என்ன பேசினர் என்று பிரீதாவிடம் எவரும் சொல்லவில்லை. அவள் கேட்கவுமில்லை.
    அவளுக்கும் பாபாவைப் பார்த்ததும் அவர் முன்னால் மனசையெல்லாம் திறந்து கொட்டி அழுது தீர்த்ததும் மட்டுமே போதுமானதாக இருந்தன.
    கைலாச யாத்திரைக்குக் கால்நடையாக ஏழு பேர் கொண்ட பாபாவின் குழு புறப்பட ஆயத்தமான போது சிவாவோ வெற்றிவேலோ சற்றும் எதிர்பாராதது போன்று ஒரு காரியத்தை அவள் செய்தாள்.
    அந்தக் குழுவின் முன்பு நெடுஞ்சாண் கிடையாக விழுந்து இரண்டு கைகளையும் பாபாவின் காலடிகளைத் தொட்டவாறு சிரம் கவிழ்த்து வணங்கினாள்.
    “எழுந்திரு குழந்தாய்… உனக்கு சௌபாக்கியம் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறது” என்று சொன்னார் பாபா.
    “ஹர ஹர சங்கர்… ஜெய ஜெய சங்கர்” என்று எவரோ கூறினர்.
    அதற்குள் கைலாச யாத்திரைக்கு பாபா புறப்பட்ட விஷயம் தெரிந்து கூடிய பெருங் கூட்டம் “ஹர ஹர ஷங்கர், ஜெய ஜெய ஷங்கர்” என்று ஆயிரம் தொனிகள் இணைந்த ஐக்கியத்தோடு கூவிற்று.
    ‘போலோ பசுபதி மகராஜ் கீ…”
    கூட்டம் “ஜே” என்று கத்திற்று.
    “போலோ கைலாஷ்நாத் கீ”
    “ஜே”
    லக்ஷ்மண் ஜூலா பாலத்தின் அக்கரையில் கூட்டம் நின்றுவிட அந்த ஏழு யாத்ரிகர்கள் மெல்ல மெல்ல அந்தப் பாலததின் மீது நடந்து செல்வது தூரப் புள்ளிகளாய் மறைந்தது. லக்ஷ்மண் ஜூலாவின் தொங்கும் பாலம் அசைந்து அசைந்து ஆடிற்று.
    அவர்கள் பார்வைக்கு முற்றிலும் மறைந்து போயினர்.
    தங்கள் உடமைகளை எடுத்துக் கொண்டு ஊர் திரும்பும் யோசனையில் பாபாவின் ஆசிரமத்திற்கு வந்தனர்.
    ஆசிரமத்தின் சகல உடமைகளையும் சொத்துக்களையும் காளிகாம்பாள் வாலா மகராஜின் நிர்வாக டிரஸ்டுக்கு எழுதி வைத்துவிட்டு துண்டை சுத்தமாக உதறி எந்த தூசும் எடுத்துச் செல்லாமல் பாபா புறப்பட்டிருக்கிறார் என்று அங்கே பேசிக் கொண்டார்கள். சிவா தெளிவாயிருந்தான்.
    அந்த ஏழு பேரும் திரும்புவதில்லை என்ற முடிவுடன் கிளம்பியிருக்கிறார்கள் என்பது விளங்கிற்று.
    அந்தப் பயணத்தையும் அதற்குத் தான் மறுத்ததையும் நினைத்தான்.
    மார்பு விம்மி உடம்பு ஆடிற்று. கண்கள் அடக்க முடியாது கண்ணீரில் தத்தளித்தன.
    கையைத் தொட்டான் வெற்றிவேல்.
    சிவாவின் உணர்ச்சியால் துடிக்கும் முகம் அவனுக்கு சட்டென்று விளங்கிற்று.
    சிவாவின் கையை அவன் இறுகப் பற்றினான். பற்றிய கைக்கு பதிலளிப்பது போல் சிவா தன் அழுத்தத்தை அதற்கு வெளியிட்டான்.
    “ஹரித்வார்… ஹரித்வார்” என்று ஒரு வேன்காரன் ஹார்ன் அடித்துக் கொண்டே கூவினான். மூவரும் அதை நெருங்கினர்.

    தொடரும்

    Share
  • ஐந்து கை ராந்தல் (25)

    வையவன்

    இரண்டு அறைகள் கொண்ட ஒரு காட்டேஜில் அவர்கள் இரவு தங்கினார்கள். கம்பளியும் கொசு வலையும் தலையணையும் அங்கே தரப்பட்டன. பிரீதா மட்டும் தனியாக ஓர் அறையில் படுத்துக் கொண்டாள்.

    தூரத்தில் கங்கை ஓடும் ஒலி இடைவிடாது கேட்டது. இரவு வெகு நேரம் வரை உறக்கம் வராமல் கங்கையின் ஒலியைக் கேட்டுக் கொண்டே படுத்திருந்தான் சிவா. வெற்றிவேல் ஒரு நேரமாக விழித்துக் கொண்டான்.

    “என்ன சிவா, தூக்கம் வரலியா?”
    “இல்லே.”
    “ஏன்?”
    “யோசனைகள்”

    வெற்றிவேலுக்கும் தூக்கம் கலைந்தது. கட்டிலில் எழுந்து உட்கார்ந்தான்.

    “என்ன யோசிக்கறே?”
    “ஓசை காதிலே விழுதா?”
    வெற்றிவேல் உற்றுக் கேட்டான்.

    “கங்கை ஓடுகிறது!”
    “ஆமாம்… அந்த ஒலி தான் யோசனையைக் கிளப்பி விட்டது.”

    “ம்ம்ம்”
    “அந்த மஹா யாத்திரையின் ஒலியில் நெடிய தவம் ஒன்று தென்படறது இல்லியா வெற்றி!”
    “எக்ஸாக்ட்லி”
    “நன்மை… தீமை… பாவ புண்ணியம்… ஜனன மரணம்னு எல்லாத்தையும் வாரிச் சுமந்து கொண்டு அது ஓடறாப்பிலே எனக்குப் பட்டது.”
    “சொல்லு”

    “இதுதான் வாழ்க்கை வெற்றிவேல்! இடைவிடாது தன்னை எல்லோருக்கும் அர்ப்பணித்துக் கொண்டு ஓடும் ஓட்டம்”
    “வாழ்க்கைப் பற்றி இது இன்னொரு கருதுகோள். அனதர் டெஃபனிஷன்”

    “கைலாசத்துக்கு ஓடுவது வாழ்க்கையல்ல”
    அவன் எதிர்ப்புணர்ச்சி நடு இரவில் கத்தி போல தன்னைத் தாக்கியதை உணர்ந்தான் வெற்றிவேல்.
    “கைலாசத்துக்கு ஓடுவது அல்ல, கைலாசத்திலிருந்து ஓடி வருவது.”

    “ஒனக்கு ஏன் பாபா பேரிலே இப்படி ஒரு வெறுப்பு?”
    “ஒனக்கு ஏன் பாபா பேரிலே இப்படி ஒரு வியப்பு?”

    “சொல்றேன்” என்று மெத்தைக்கடியில் வைத்திருந்த சிகரெட்டையும் தீப்பெட்டியையும் எடுத்தான் வெற்றிவேல். சிகரெட்டைப் பற்ற வைத்து அவன் உறிஞ்சி இழுத்தான். கனிந்த முனை செம்மையாய்ச் சுடர் விட்டது,

    “போன வருஷம் ரிஷிகேஷûக்கு வந்து தங்கினேன். அப்ப ஆச்ரமம் இங்கே இல்லே. கங்கையின் அக்கரையில் இருந்தது. அப்போ சீடர்கள் கூட்டம் இவ்வளவு இல்லே. வரும், போகும். பெர்மனெண்டா யாரும் நிக்க மாட்டாங்க.”
    “நீ ஏன் ரிஷிகேஷ் வந்தே?”

    “ஆஸ் யூஷூவல்… ஒரு மாறுதலுக்குத்தான். இந்தியனான என்னை ஒரு அமெரிக்க நண்பன் இங்கே அழைச்சுட்டு வந்தான். அவனை நான் கல்கத்தா ஹார்பர்லே மீட் பண்ணேன். பத்து நாள் நானும் அவனும் ஒண்ணா சுத்தினோம். அவன் இங்கே கூட்டி வந்தான்.”

    “பாபா கிட்டேயா?”
    “ஆமா. அவர் இங்கிலீஷும் ஹிந்தியும் பேசினார். பார்த்தவுடனே எனக்கு அங்க அடையாளங்களை வச்சு இன்னது என்று தோன்ற முடியாத உள்ளுணர்வில் இவர் தான் உன் தந்தை என்று தோணிற்று.”
    “விசாரிச்சியா?”

    “ஆமாம்; ஒப்புகிட்டார். நீ கேட்டியே அதைவிட அதிகமான கேள்விகளை நான் கேட்டேன்!”
    “எப்படி? என்ன கேட்டே?”
    “பெண்டாட்டி புள்ளைய விட்டுட்டு அந்த பொறுப்புக்கு பயந்துகிட்டு ஞானம் தேடி வந்தீங்களே… அவங்க என்ன ஆனாங்கண்ணு ஒங்களுக்குத் தெரியுமாண்ணு கேட்டேன்.”

    “அவர் என்ன பதில் சொன்னார்?”
    “ஈசுவராண்ணார்… அந்த ஈசுவரன் ஒங்க பெண்டாட்டிகிட்டேயும் பிள்ளை கிட்டேயும் தென்படலியாண்ணேன். அவர் மறுபடியும் ஈசுவராண்ணார்.”
    “இது ஞானமா…கல்லுளி மங்கத்தனமா?”

    “அதையும் நான் கேட்டேன்! அவர் சொன்ன விவரங்கள் மயிர்க் கூச்செறிகிறது, இப்ப நெனச்சாக் கூட”
    சிவா நிமிர்ந்து உட்கார்ந்தான். வெற்றிவேலுக்குத் தன் தந்தையின் தாம்பத்தியத்தைப் பற்றி, தனக்குத் தெரிந்ததை விட அதிகமாய் ஏதோ தெரிந்திருக்கிறது என்ற சிலிர்ப்பு எந்தது.

    “அவரது இளமைப் பருவத்திலிருந்தே பாபாவுக்குள் ஏதோ ஒரு நூதன அவஸ்தை இருந்து வந்திருக்கிறது. அவருக்குள் ஏதோ ஒரு குரல் இடைவிடாமல் உண்மையைத் தேடு… உண்மையைத் தேடுண்ணு கேட்டுகிட்டே இருந்திருக்கு. ரொம்ப வயசான காலத்திலே உன்னுடைய தாத்தாவுக்கும் பாட்டிக்கும் கொழந்தையா பொறந்திருக்கிறார். அவருக்கு அறிவு உதயமான காலத்தில் உன் தாத்தாவுக்கு அறுபது முடிஞ்சிருக்கு.”

    சிவாவுக்கு மார்பு நடுங்கிற்று. இவன் இன்னும் திடுக்கிடக் கூடியதாக எதையோ சொல்லப் போகிறான் அதைக் கேட்க வேண்டாம். அது இவனுக்கும் பாபாவுக்கும் அம்மாவுக்கும் மத்தியிலேயே புதைந்து போகட்டும் என்று நடுக்கம் எழுந்தது.
    சீ… உண்மைக்கு நான் ஏன் நடுங்க வேண்டும்?

    எதுவாயிருந்தாலும் அந்த உண்மையை நான் சந்திப்பேன் என்று தன்னை திடப்படுத்திக் கொண்டான்.

    “ஆறு குழந்தைகள் பிறந்து பிறந்து இறந்த பின்னால் ஏழாவது குழந்தையாக உன் தந்தை பிறந்திருக்கிறார். ஆறு இறந்த அத்தனை சோகத்தையும் நம்பிக்கையாக மாற்றி இவர் தலை மேல் சுமத்தியிருக்கிறார்கள். ‘மகனே, அதுதான் பந்தத்தின் மீது சுமத்தப்பட்ட பந்தமாக என் தலைமேல் விழுந்ததுண்’ணு சொன்னார்.”

    வெற்றிவேல் சிகரெட் சாம்பலை உதறிவிட்டு என்றோ நடந்து முடிந்த ஒரு கதையில் தான் ஒரு பாத்திரமானது போல் தூரத்தில் பார்வையை ஓடவிட்டான்.

    “உள்ளத்தை வண்டு குடைவது மாதிரி உண்மையைத் தேடு… உதறி விடு… உதறி விடுண்ணு ஓர் உத்தரவு குடைகிற வேளையில் வயதான பெற்றோர்களின் நம்பிக்கையை மோசம் செய்யாது அவர் வாழ்ந்திருக்கிறார். அவர் திருமணம் செய்து கொள்ள முடியவே முடியாது என்று தீவிரமாக மறுத்த வேளையில் உங்க தாத்தா தூக்குக் கயிற்றை மாட்டிக் கொண்டிருக்கிறார். உறவினர்கள் எல்லாம் வந்து திட்டி அந்த திருமணம் நிர்ப்பந்தத் திருமணமா நடந்திருக்கு.”
    வெற்றிவேல் சிகரெட்டைக் கீழே போட்டு நசுக்கினான். ஃஸ்ஸ்ஸ்… என்று வாயிலிருந்த புகை முழுவதையும் ஊதி விட்டு சற்று அமைதியாயிருந்தான்.

    சிவா அவனது ஒவ்வோர் அசைவிலும் மனம் பதித்து கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான்.
    “அவர் சாந்தி முகூர்த்தத்தன்று என்ன செய்தார் தெரியுமா?”
    சிவா தலை கவிழ்ந்து உட்கார்ந்தான்.

    “நேரா போய் நின்னுகிட்டிருந்த ஒங்க அம்மா கால்லே விழுந்திருக்கார். அவங்க பயந்து போய் அழுதிருக்காங்க. ‘பயப்படாதே, எனக்கு நீ போக வஸ்துவில்லே. புண்ணியம் செய்ய வந்த தெய்வம்’ணு சொல்லியிருக்கார். மூணு வருஷம் அவங்க புருஷன் மனைவியா இல்லாமே ஏதோ ஒரு குடும்பத்து உறுப்பினர் மாதிரி வாழ்ந்திருக்காங்க. வம்ச விருத்தியில்லேண்ணு மனசு ஒடஞ்சு அதை வற்புறுத்தப் பயப்பட்டு சிறுகச் சிறுக வருந்தி ஒங்க தாத்தா செத்திருக்கார். அதுக்கப்புறம் ‘இந்தக் குடும்பம் வௌங்க மடிப்பிச்சை போடுடா’ண்ணு ஒங்க பாட்டி கேட்டிருக்காங்க. ‘நீ பெரிய மகானாக்கூட இருக்கலாம். பட்டினத்தாருக்கு அம்மா மேலே இருந்த பாசம் கூடவா ஒனக்கு இல்லே’ண்ணு தன் மருமகள் எதிரிலேயே வெளிப்படையா கேட்டிருக்காங்க.”

    “போதும் வெற்றிவேல்…”
    “கேள். இன்னும் கொஞ்சம் தான் இருக்கு. ஒரே ஒருமுறை தன் அம்மாவுக்காக பாபா தன் மனைவியோட வாழ்ந்திருக்கிறார். ஒருமுறை…அது எதற்குண்ணு ரெண்டு பேருக்கும் தெரியும். ரெண்டு பேருக்கும் அது சம்மதம். ரெண்டு பேரும் சேர்ந்து பண்ணிக்கிட்ட இச்சையில்லாத வம்ச விருத்திக்கான ஒப்பந்தம மாதிரி அது நடந்திருக்கிறது விளைவு…நீ”
    சிவாவுக்கு மார்பு பீறிட்டு வெள்ளம் வெள்ளமாக ஒரு துக்கம் மூண்டது. அம்மாவுக்காக…அப்பாவுக்கு ஆறு குழந்தைகளை இழந்த தாத்தாவுக்காக…பாட்டிக்கா… தனக்காக…விதிக்காக….

    ஆனால் அழுது யாருக்கு என்ன லாபம்!
    தன் ஆண்மை குன்றி விடுகின்ற தன்னிரக்கத்தைத் தானே அனுபவிக்கிற இழிவு தவிர-கழிந்து போன எந்த சரித்திரத்தின் ஏடுகளை இந்தக் கண்ணீர் அழிக்கப் போகிறது?
    “வெற்றிவேல், நாம வெளியே போய்ட்டு வருவோமா?” என்றான்.
    “எங்கே?”

    “எனக்கு நடக்கணும் போலிருக்கு”
    “இந்த ராத்திரியிலேயா.”
    “ஆர் யூ டயர்ட்?”
    “நோ…நாட் அட் ஆல். வா போவோம்.”

    அவர்கள் இருவரும் வெளிக் கதவைப் பூட்டிக் கொண்டு கையில் ஒரு டார்ச்சுடன் நடந்தனர்.
    கங்கை ஓடும் ஒலியின் பின்னணியில், காலி கம்பள் வாலா மகராஜின் தோட்டத்து மரங்களில் உதிர்த்த இலைச் சருகுகளை அவர்களது காலடி மிதிக்கும் சத்தம் சரசரத்தது.

    “மேலே சொல்லு வெற்றிவேல்.”
    தூரத்தில் ஒரு கணப்புச் சட்டியருகில் நாலுபேர் உட்கார்ந்து குளிர் காய்ந்தனர். நந்தி மாதிரி செருக்குடன் மதர்த்து வளர்ந்திருந்த ஒரு நேர்த்திக் காளை மெதுவாக அவர்களைக் கடந்து சென்றது.

    “உன் பாட்டி இறந்து அவர்களுக்கு ஈமக்கடன் முடித்த வேளையில் பாபா உன் தாயாரிடம் துறவுக்கு உத்தரவு கேட்டிருக்கிறார். உன்னை வளர்த்துப் பராமரிக்க நாலு ஏக்கர் நிலமும் ஒரு பம்பு ஷெட்டும் வைத்துவிட்டுக் கேட்டிருக்கிறார். தன்னுடன் வாழாமல் வெறுமனே உடனிருந்து அவர் கேட்ட உத்தரவைத் தானும் ஒரு சுமையாக இராமல் உன் அம்மா பெருந்தன்மையோடு வழங்கியிருக்கிறார்.”

    கம்பளி போர்த்துக் கொண்டு யாரோ ஒரு சாது கஞ்சாக் குழலுடன் உட்கார்ந்திருந்ததை இருவரும் கவனித்தனர்.
    “கௌன் ஹோ?” என்று அவர் விசாரித்தார்.

    “யாத்ரிக்! நீந்த் நஹி ஆதா. கூம்தா ஹைன்” என்று வெற்றிவேல் பதிலளித்தான்.
    “ஹோஷியார் கீஜியே. சோர் ஹைன்.”
    “என்ன சொல்கிறார்” என்று விசாரித்தான் சிவா.
    “திருடர்கள் இருக்கிறார்கள். ஜாக்கிரதை” என்கிறார்.
    “அவருக்கு நன்றி சொல்.”
    “தன்ய வாத் மஹராஜ்.”
    “ஜீதே ரஹோ பேடா… ராம் ராம்.”
    “ராம்… ராம்.”
    அவர்கள் மேலே நடந்தனர்.

    “அந்த நாலு ஏக்கர் நிலமும் பம்ப்ஷெட்டும் வெங்களாபுரத்தில் இருந்திருக்கிறது.”
    “தெரியும்” என்று அதைப் பற்றி விவரம் தெரிந்ததால், தன் உறவினர்களால் வஞ்சித்து ஏமாற்றப்பட்ட தாய் அதைப் பறிகொடுத்த கதையை மீண்டும் ஒரு முறை கேளாமல் தவிர்த்தான் சிவா.
    “பாபா உண்மையைத் தேடி இந்தியா முழுதையும் நடந்தும் அலைந்தும் சாமியார்களிடமும் குருஜிக்களிடமும் திரிந்திருக்கிறார். அவர் கால் படாத புண்ய ஸ்தலம் எதுவும் இந்தியாவில் இல்லை. அவர் நீராடாத தீர்த்தம் எதுவும் இல்லை. ஆனால் உண்மை, அவரை மாநிலம் மாநிலமாக அலைக்கழித்திருக்கிறது. இறுதியில் இங்கே புலப்பட்டிருக்கிறது.”
    சிவா பெருமூச்சு விட்டான்.

    “ஏன் களைப்பா இருக்கா… திரும்பிடுவோமா?” என்றான் வெற்றிவேல்.
    “இல்லை. அவர் தேடிய உண்மையில் அவர் கண்டது என்ன?”
    “கண்டவர் விண்டிலர். அதைப் பற்றி அவர் சொல்லவில்லை. அவர் சய்கிறது உபதேசமே இல்லை. தன் மனசிலிருந்து அபூர்வமான ஒரு சாந்தியை அவர் ‘ட்ரான்ஸ்மிட்’ செய்கிறார். கம்பியில்லாத மின் அலை மாதிரி அது நம்மைத் தீண்டுகிறது. ஹாவ்ன்ட்யூ எக்ஸ்பீரியன்ஸ்ட் இட்?
    “ஆம்… நானும் அதை அனுபவித்தேன்!”
    “பல நேரங்களில் அவர் கண்களை மூடி அமர்ந்திருக்கிறார். அது தியானமோ என்று தோன்றுகிறது! எதைத் தியானிக்கிறீர்கள் பாபா என்று ஒருமுறை நான் கேட்டேன். ‘லோக க்ஷேமத்தை லோக சாந்தியை’ண்ணு புன்முறுவலோடு பதில் சொன்னார்.”
    சிவா நின்றான்.

    “உலக சேவை என்பது பேசுவதிலும் எழுதுவதிலும் ஓடியாடி உழைப்பதிலும் கூட்டம் கூட்டிப் போரிட்டு ஒன்றை அழித்து இன்னொன்றை உருவாக்குவதிலும் மட்டும்தான் இருக்கிறது என்று நீயும் நம்புகிறாயா சிவா?”
    “இல்லை” என்று மறுதளித்தான்.
    மனசிற்குள் ஒரு குரல் எழுந்தது.

    “அது ஆயிரம் வடிவம் கொண்டது. கருமானின் சுத்தியலும், தச்சனின் இழைப்புளியும், செருப்புத் தொழிலாளியின் ஊசியும், உழவனின் ஏர் முனையும் கூட அதில் ஈடுபட்டிருக்கின்றன.”
    “அதுதான் கர்மா” என்று வெற்றிவேல் மேலே போனான்.

    “அவை எல்லாமும் பிரதிபலன் எதிர்பார்க்கின்றன. அதனால் அவை கட்டுண்டிருக்கின்றன. வெற்றி தோல்வியுடனும், உழைப்பு கூலியுடனும், புகழ் ஆசையுடனும் கட்டுண்டிருக்கின்றன.”
    வெற்றிவேலின் வாக்கு மணிநாதம் போன்று ஒலித்தது.

    “பாபா, லோக க்ஷேமத்தை தியானிக்கிறார். எந்த பிரதிபலனையும் அவர் யாரிடமும் எதிர்பார்க்கவில்லை. மழை மாதிரி, கங்கை மாதிரி தன் இயல்பு என்ற கர்மாவில் அவர் ஈடுபட்டுத் தியானிக்கிறார். ஞாபகமிருக்கிறதா அந்த திருக்குறள்?”
    பளிச்சென்று மின்னலடித்தது போன்று நினைவிலிருந்து அந்தக் குறள் ஓடி வந்தது, சிவாவுக்கு.

    வெற்றிவேலே அதை வாய் விட்டுச் சொன்னான். “தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார் மற்றல்லார் அவஞ் செய்வார் ஆசையுட் பட்டு! எல்லாக் காலத்திலும் எந்த யுகத்திலும் இப்படி ஒரு பாபா இருப்பதுண்டு சிவா!”
    லக்க்ஷமண் ஜூலா பாலம் வரை சென்று அவர்கள் நின்றனர்.
    “பாலத்தைக் கடக்கலாமா?” என்று வெற்றிவேல் கேட்டான்.
    “வேண்டாம். திரும்பிடுவோம்”

    இருவரும் வந்த வழியே திரும்பினர்.

    “மிஸ்டிக்கலா அவர் எந்த உயரத்தைத் தொட்டிருக்கிறார். அவர் சித்து விளையாடுவாரா? அவரிடம் அற்புத சக்திகள் உண்டா…ஐ’ம் நாட் இண்ட்ரஸ்டட்.

    அதில் எனக்கு ஆர்வமும் இல்லை. அக்கறையும் இல்லை. எந்த பிரதிபலனையும் எதிர்பாராமல், இந்த உலகத்திலிருந்து ஒரு சல்லியையோ ஒரு பழத்தையோ கூட எதிர்பாராமல் இந்த உலக க்ஷேமத்தையும் சாந்தியையும் தியானிக்கிற மனிதன்…” அவன் மெதுவாகச் சொல்லிக் கொண்டே மெல்ல நடந்தான்.
    சிவா கேட்டுக் கொண்டே வந்தான்.
    “தியானம் ஒரு செயல் அல்ல என்று நீ மறுக்கலாம். அதை செயல் என்று-பரிபூரணமான செயல் என்று நான் நம்புகிறேன். அவர்கள் கைலாசத்திற்கு ஏன் போகிறார்கள் தெரியுமா?”
    “சொல்”
    “உலக க்ஷேமத்திற்காக தியானிக்கவே போகிறார்கள். சொந்த முக்தியைத் தேடி அல்ல.

    “உயிர் உள்ளவரை இறுதி மூச்சு இருக்கும் வரை அவர்கள் அப்படியே தியானித்து கொண்டிருப்பார்கள். அவர்கள் திரும்ப மாட்டார்கள். இதை அவர்கள் விளம்பரம் செய்யவில்லை.

    “வாய்விட்டு எவரிடமும் தெரிவிக்கவில்லை. பாபாவின் போக்கிலிருந்து நான் புரிந்து கொண்டேன்.”
    அவர்கள் இருவரும் அப்புறம் ஒன்றும் பேசாமல் கங்கையின் ஒலியைக் கேட்டுக் கொண்டே நடந்தனர்.
    தங்கள் காட்டேஜை அடைந்து பூட்டைத் திறந்து உள்ளே நுழைந்தனர்.

    “சிவா, நீ ஏன் அவரைப் பார்க்க வேண்டும் என்று நான் விரும்பினேன் தெரியுமா?”
    சிவா பேசாமல் உட்கார்ந்திருந்தான்.

    “நாட் பிகாஸ் ஹி ஈஸ் யுவர் ஃபாதர். அவர் உன் தந்தை என்பதற்கும் மேலாக உன் கருத்துப்படி ஏதோ மகான் என்பதற்கும் மேலாக அப்ஸல்யூட்லி டிஃபரன்ட் பெர்ஸனாடிலி என்பதினாலேயே அவரை நீ பார்க்க வேண்டும் என்று விரும்பினேன்.”
    சிவாவின் மார்பு ஒருமுறை விம்மி உயர்ந்தது பின்பு தாழ்ந்தது. அவன் எதையோ கட்டுப்படுத்துகிறான்.
    “ஆஸ் எ ரைட்டர்… நீ நம்பிக்கையை விதைக்க விதிக்கப்பட்டவன். விதைகளைத் தூவுகிறவன். இப்படி ஒரு மனிதரை நீ சந்திக்கும் போது உன் விதைக்கூடை நிரம்பும்… இதைத் தவிர எனக்கு வேறு நோக்கம் இல்லை. டு யூ பிலீவ் மீ?”
    “நம்புகிறேன் வெற்றிவேல்.”

    அவர்கள் இருவரும் அதற்கப்புறம் படுத்துக் கொண்டனர். வெற்றிவேல் விழித்திருந்தான். சிவாவுக்கு சீக்கிரமே தூக்கம் வந்துவிட்டது.
    —————————————————————————————————————————————————————————————————–

    தொடரும்

    Share
  • பயன்மிகு இணையவழிச் சேவைகள் – கட்டுரைப் போட்டி முடிவுகள்

    அன்பினிய நண்பர்களே,

    வணக்கம். சென்ற [ஜூலை, 2015] மாதத்திற்கான, பயன்மிகு இணையவழிச் சேவைகள்’ கட்டுரைப் போட்டிக்கான, நடுவர் திரு ஐயப்பன் கிருஷ்ணன் அவர்களின் முடிவை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். பரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துகள். இந்த மாத போட்டிக்குத் தயாராகிவிட்டீர்களா? விரைவில் தங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டுகிறோம். வாழ்த்துகள்.

    Google_Appliance

    ஐயப்பன் கிருஷ்ணன்

    மூன்று கட்டுரைகளில் இரண்டின் பேசு பொருள் ஒன்றாக இருக்கிறது.

    திருமதி. சிவானந்தம் கனகராஜ். மற்றும் ​– எஸ். நித்யலக்ஷ்மி. இருவரும் இணையத்தில் ஆவண சேமிப்பு மற்றும் பகிர்தல் குறித்து தங்கள் பார்வையை வைத்திருக்கிறார்கள். இதில் திருமதி சிவானந்தம் கனகராஜ் தெளிவாக பல இணையத் தளங்களைக் குறித்து விளக்கமான பார்வையை வைத்திருப்பது சிறப்பு.

    இதையும் தவிர்த்த மிக முக்கியமான தளங்கள் உள்ளன. அவற்றையும் கட்டுரைகளில் கொண்டு வந்திருக்கலாம்.

    நித்தியலக்ஷ்மி தன்னுடைய இன்னொரு கட்டுரையில் தேடுபொறியின் நுட்பங்களை விவரித்துச் சென்றிருப்பது மிகுந்த பயனளிக்கும் ஒன்றாகும்.

    நித்தியலக்ஷ்மி மற்றும் திருமதி. சிவானந்தம் கனகராஜ். இருவரின் கட்டுரைகளுமே பயனுடையவை. ஆகவே இவ்விருவருக்கும் இந்த வெற்றியை சமமாக பகிர்ந்து அளிக்க விரும்புகிறேன்.

    வாழ்த்துகள்.

    Share
  • ஐந்து கை ராந்தல் (24)

    வையவன்

    சாந்த்னி சௌக்கும், செங்கோட்டையும், குதுப்மினாரும், பிர்லா மந்திரும், குருத்வாரா ஸிஸ்கன்ஜும், ஜும்மா மசூதியும், ராஜகட்டமும், சாந்தி கட்டமும், ஜந்தர் மந்தரும், கனாட்பிளேஸும் பிரீதாவுக்கு உணர்ச்சிகளின் கலைடாஸ்கோப்பில் புதுப்புதுச் சித்திரங்களைத் தீட்டிக் காட்டின. அவள் சிரிப்பதும் வியப்பதும் ரசிப்பதும் சிவாவை விட வெற்றிவேலுக்கு திருப்தியாக இருந்தது. அவள் வந்தது சரி!

    ஆக்ரா, தாஜ்மஹால், பதேபூர் சிக்ரி, மதுரா.

    கட்டிடங்கள்.. காட்சிகள்… சரித்திரத்தின் மிஞ்சிய எலும்புக்கூடு போன்ற சாட்சிகள்.

    ஓயாமல் ஒழியாமல் இறந்த காலத்தின் பாதுகாக்கப்பட்ட எலும்புக்கூடுகளைத் தரிசிக்கப் பறந்துவரும் டூரிஸ்டு பஸ்கள். பஸ்ஸில் ஏறி இறங்கி ஓடி ஓடிச் சுற்றிய அலுப்புகள்.

    ஜல்தி ஆவோ… ஜல்தி ஆவோ.
    அதோ அடுத்த ஊருக்குப் பறக்க ஒரு கூட்டம் அங்கலாய்த்துக் கொண்டு நகர்கிறது.
    கடும் பனி வீசிய, கொடிய குளிர் நடுக்கிய ஓர் இரவுப் பயணத்தின் பின் தொங்குகின்ற லக்ஷ்மண்ஜூலா பாலத்தை மிதிக்கும் போது சிவா நினைத்தான்.
    இது என்ன புதிர்?
    கீழே கங்கை ஓடிக் கொணடிருந்தது.

    நுரை கொப்பளித்துக் கொண்டு பெரும் சீற்றத்துடன் ஓடும் கங்கை.கனலில் தெரியும் காளி போன்று புனலில் தெரியும் சக்தி.
    எங்கே ஓடுகிறாய் கங்கையே?
    ‘அன்னையே என்று கேள்’ அவனுக்குள்ளே யாரோ திருத்தினார்கள்.

    ‘எங்கே ஓடுகிறாய் அன்னையே?’
    கங்கை அவனுடன் பேசினாள்.
    ‘வெகுதூரம் மகனே… வெகுதூரம்.”

    ‘மேடுகளைப் பிளந்து பள்ளத்தில் தாவி நீர்வீழ்ச்சிகளில் குதித்துக் கூத்தாடி கோடானு கோடி ஜீவன்களின் தலைவிதியைச் சுமந்து கொண்டு அவர்களை நீராட்டி அவர்கள் படகுகளைக் கரை சேர்த்து லட்சோப லட்சம் கதிர்மணிகளில் என் கருணையின் தீபங்களை ஏற்றிக் கொண்டு, என் உதரத்தில் கருக்கொண்ட உயிர்களுக்கு உருவளித்து, கற்பூரத்தோடு எரியும் பிணங்களைக் கரைசேர்த்து வெகுதூரம் மகனே… வெகுதூரம்.’

    ‘ஏன் ஓடுகிறாய் அன்னையே?’

    ‘விடுதலையை நாடி… அலைகடலின் ஆதரவை நாடி… பிறந்த இடத்திற்கு திரும்பிப் போகிறேன் மகனே.’
    ‘தோன்றியும் மறைந்தும் உதித்தும் கலந்தும் பின்பு ஒரே சுழற்சியின் மறு சுற்றில் மீண்டும் மீண்டும் உன் பயணம் நடந்து கொண்டேயிருக்கிறது. இதில் விடுதலை எங்கே அன்னையே?’

    ‘மகனே… விடுதலை என்பது அனுபவம். ஓய்வு ஒரு பந்தம். நிர்ச்சலனம் விடுதலையல்ல. நிஷ்டை ஒரு விடுதலையல்ல. இயக்கம்தான் விடுதலை.’

    ‘நாங்கள் நிராகார நிர்வாணத்தை விடுதலை என்கிறோம். அசைவின்மையை – யாவும் அவிந்த பரிபூர்ண சாந்தியை விடுதலை என்கிறோம்.’
    கங்கை கலகலவென்று சிரித்தாள்.

    ‘மகனே… நீ சொல்லும நிர்வாணத்திலிருந்தே நான் பிறந்தேன். பரிபூரண சாந்தியின் பனிச் சிகரங்களிலிருந்தே நான் உதயமானேன்.

    நீ சொல்லும் விடுதலையில் நான் அழிந்தது, இருந்தது, அழிந்தும் அழிந்த நினைவுகளுடன் நான் இருந்தேன்.
    என் நானின் கனம் தாளாது போய் இதோ என்னை கோடி கோடி ஜீவன்களுடன் பகிர்ந்து கொள்ளப் புறப்பட்டிருக்கிறேன்.
    செல்வேன். மீண்டும் வருவேன். பகிர்ந்து கொள். உனக்கென்று உன்னை எடுத்துக் கொள்ளாதே. உதறிவிடு. எல்லோரோடும் கரைத்துக் கலந்து உன்னை உதிர்த்துத் துளிர்த்து விடு. மீண்டும் மீண்டும் செய். அதுதான் விடுதலை.

    கங்கையின் சிரிப்பொலி, பனிக் குகைகளிலிருந்து மீண்டு வந்த அவளது எதிரொலி, மனோ மயமாகிய அவளது ஆனந்த தாண்டவத்தின் சலங்கை ஒலி, விதிக்கிசைய ஓடியும் விதியை வென்று பரிகசிக்கும் அவளது நகைப்பின் வெற்றி ஒலி…
    எல்லாவற்றையும் தனித்தனியே சிவா கேட்டான்.

    அவள் கொண்டு வந்த நூறு கோடி வெள்ளங்களின் மௌனக் கதையைக் கேட்டான்.
    நாளழிந்து மாதமிழந்து வருடமழிந்த போதும் ஓய்வு ஒழிவற்று தானழியாது ஓடுகின்ற அவள் உச்சரித்த மந்திரம் அவனுள் நிரம்பியது.

    காலி கம்பள் வாலா மகராஜின் தியான ஆச்ரமத்தில் வரிசை வரிசையாக நின்ற குடில்களைக் கடந்தனர். செஞ்சாந்து பூசிய சிமெண்ட் பெஞ்சுகள் அணிவகுத்து நிற்கும் சாலையினூடே கவிந்த மர நிழல்களில் சிதறிய சூரிய ஒளியில் நடக்கும்போது மூவருக்குமே வெறும் டூரிஸம் என்ற கிளர்ச்சி அழிந்தது.

    காடும் கங்கையும் நிசப்தமும்.
    அவர்களுக்கு சத்தியத்தின் பிராகார வெளியில் நடப்பது போன்று ஓர் உணர்வு வந்தது.

    எங்குமே நடக்கும் வியாபாரம் அங்கும் நடந்தது. மணி மாலை விற்றனர்… வளையல் விற்றனர்… தங்குவதற்கு இருப்பிடம் விற்றனர்.

    விற்று விற்று வயிறு பிழைக்கும் அந்த உபாதைகளை நீங்கி சத்தியம் அந்த வான வெளியிலும் வீசிய காற்றிலும் பரவி நின்றது.

    ரொட்டிக்கு மாவு பிசைந்தோர், மூட்டைகளிலிருந்து பழைய ரொட்டியைப் பகிர்வோர்.
    “யெ ஹை உன்கா. ஆஷ்ரம்!” வழிகாட்டி வந்தவர் ஒரு கட்டிடத்தைக் காட்டினார்.

    “போலோ குரு மகராஜ் கீ ஜே”
    “ஹரி போலோ பாயி ஹரி போலோ”
    “ஹர ஹர ஷங்கர்… ஜெய ஜெய ஷங்கர”
    பாபா ஓம்கார்நாத்தின் இருப்பிடத்திலிருந்து ஓசைகள் வந்தன.

    தோலுரித்த கோழிகள் போன்ற ஐரோப்பிய வெண்மை.

    உழுத செம்மண் நிலம் போன்று, கரிசல் போன்று உவர் நிலம் போன்று, எத்தனை மனித நிறங்கள் சூழ மார்பை மறைக்கும் வெண்தாடியுடன் அந்த உருவம் உட்கார்ந்திருக்கிறது!
    பாபா ஓம்கார்நாத் அவர்களைப் பார்த்ததும் பிரியமாகச் சிரித்தார்.

    கனிந்த பழம் ஒன்று தன் கனிவின் இனிமையை எல்லோருக்குமாகப் பகிர்ந்தது போன்று ஓர் ஆனந்தம் அந்தச் சிரிப்பில் மிளிர்ந்தது.

    அது வரவேற்றது. வாழ்த்தியது.
    “பாபா, நான் மீண்டும் வந்திருக்கிறேன்.”
    “வா மகனே”
    “சிவாவையும் பிரீதாவையும் அழைத்து வநன்திருக்கிறேன்.”

    “வாருங்கள் குழந்தைகளே.”
    பிரீதாவுக்குள் எந்த மனித முகங்களைச் சந்தித்தும் ஏற்படாத அதிசயமானதொரு நெகிழ்ச்சி அவர் முகத்தைப் பார்க்கும்போது உண்டாயிற்று.

    அவர்கள் வந்து உட்கார்ந்ததும் யாரோ ஜால்ராக் கட்டையும் மிருதங்கமுமாக ஹரிபஜன் செய்தார்கள். வலது கோடியில் இரண்டு ஐரோப்பியர்கள் (ஒரு வேளை அமெரிக்கர்களோ) அதற்கு முற்றிலும் தொடர்ற்றவர்கள் போன்று தியானத்தில் அமர்ந்திருந்தனர்.

    நாலைந்து பேர் ஒன்றுகூடி சிறு குழுவாகப் பேசிக் கொண்டிருந்தனர். அறை மூலையில் யாரோ இருவர் தலைக்கு ஒரே ஸூட்கேஸை வைத்துக் கொண்டு எதிரும் புதிருமாகப் படுத்திருந்தனர்.

    அங்கிருந்த எவருக்கும் குருஜி என்று ஒருவர் உட்கார்ந்திருக்கிற மாதிரியே தோன்றியதாகத் தெரியவில்லை. அத்தகைய இடங்கள் சிலவற்றை பிரீதா பார்த்திருக்கிறாள்.

    அங்கே ஒரு மரியாதையும் சடங்கு மாதிரி ஓர் ஒழுங்குக் கட்டுப்பாடும் தெரியும்.
    இங்கோ இயல்பாக ஏதோ ஒரு கல்யாண நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் போன்று கூடியிருந்தோர் சுதந்திரமாக இருந்தனர்.

    எனினும் பாபா ஓம்கார்நாத் தான் இந்த முரண்பாடு போன்று தெரியும் சுதந்திரத்தின் மையமாக இருக்கிறார் என்று புரிந்தது.

    “இவர்கள் உங்கள் ஆசிர்வாதத்தை வேண்டி வந்திருக்கிறார்கள் பாபா!” வெற்றிவேல் வந்த காரியத்தை விளக்குவது போல் அறிமுகம் செய்தான்.

    “வழியனுப்பத்தானே மகனே!”
    அந்த குழுவும் முற்றிலும் அன்னியர்களுக்கு மத்தியில் அவர்களுக்கு உரியவர் போன்று தன் தந்தை உட்கார்ந்திருப்பதும் சிவாவின் மனசில் ஓர் எதிர்ப்புணவைக் கிளப்பின.

    தந்தையருக்கும் தனயருக்கும் மத்தியில் இருந்து வரும் ஓர் அடிப்படை எதிர்ப்புணர்வு அது.
    ஒன்றிலிருந்து ஒன்று மாறுபட்டு நிற்க வேண்டும் என்ற வாழ்வியல் நெறியின் எதிர்ப்புணர்வு.
    உன்னிலிருந்து நான் வந்தேன். ஆனால் நான் வெறும் நீயல்ல.

    நீ கண்டது உனக்கு. நான் காண்பது எனக்கு. என்னை நான் உருவாக்கிக் கொண்டிருக்கிறேன் என்ற உயிரினத்தின் சுயேச்சையைக் குறிக்கும் போர்க் குரல் அது.
    எல்லோரிடையிலும் அது எழுகிறது.

    உயிர்த்துவத்தின் இடையறா ஓட்டம் தொடர அதுதான் அத்தியாவசியமாகிறது.
    சிலர் அந்த எதிர்ப்புணர்வையை வென்று விடுகிறார்கள். சிலர் சமரசம் செய்து கொள்கிறார்கள். சிலர் இறுதி வரை அதனுடன் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

    சிவா போராடிக் கொண்டிருந்தான்.

    இதில் வேறொன்றும் கலந்திருந்தது. பொறுப்பை உதறிவிட்டு விடைபெற்றுக் கொண்டவர். இவர் விடுதலை பெற்றவர் என்று வெற்றிவேலால் வர்ணிக்கப்படுகிற இவர் என் தந்தை.

    இவர் எதற்கு கைலாசம் போக வேண்டும். கைலாச சிகரத்தில் இவருக்கு என்ன காத்திருக்கிறது?
    விடுதலையடைந்தவனுக்கு கைலாசமானால் என்ன கன்யாகுமரி ஆனால் என்ன? எல்லாம் சமம் தானே!
    இவர் என்ன? விடுதலையடைந்தவரா? சாமியாரா? வேஷமா? ஒரு தொழில் முறை குரு மஹாராஜா? யார் இவர்?
    வெற்றிவேலுக்கு இவர் மீது ஏற்பட்டுள்ள விளக்க முடியாத கவர்ச்சியின் அடிநாதம் என்ன?
    இந்தக் கேள்விகள் நீர்ப் பரப்பில் ஒரு பழம் விழுந்ததும் ஓடி வந்து கவ்வுகின்ற மீன் கூட்டம் போன்று அவனுள் எழுந்தன.
    ஞானமும் உண்மை தேடுதலும் ஒற்றையடிப் பாதைகள். ஒருவன் முதலில் நடக்கிறான். பலர் பின்பற்றுகிறார்கள்.

    பின்பற்ற விரும்பாதவன் முதல் பாதை தேய்ந்து சாலையாகி, சத்தியம் தேய்ந்து சாமான்யமானதால் தன் சொந்தப் பாதையை தானே சமைக்கிறான்.

    அது அவன் விதி, அவன் வழி.

    சிவா பாதை தேடியவன். பின்பற்றுகிறவன் அல்ல. சமைப்பவன். இன்னொரு பாதையில் முரண்பாடுகள் காண்பவன்.
    எனவே பாபா ஓம்கார்நாத்தின் பாதை மீது அவனுக்கு சந்தேகம் வந்தது.

    “நான் வழியனுப்ப வரவில்லை” என்று துணிந்து சொன்னான்.
    சுறுக்கென்று அவன் இயல்பு மாறியதை மற்ற இருவரும் கவனித்தனர்.
    “நல்லது” என்றார் பாபா.

    அவர் முகம் பழையபடியே சாந்தமாயிருந்தது. அவர் கண்கள் ஆழ்ந்த கருணையோடு அவனது எதிர்ப்புணர்வையே தரிசிப்பவர் போன்று அவனைப் பார்த்தார்.
    அவர்கள் மூவரும் தங்கள் பைகளையும் சூட்கேஸையும் இறக்கி வைத்துவிட்டு சாவகாசமாக உட்கார்ந்தனர்.

    சற்று நேரத்தில் இரண்டு அன்பர்கள் அவர்களுக்கு சுடச்சுட மூன்று கோப்பைகளில் பால் கொண்டு வந்து கொடுத்தார்கள்.
    “வழியனுப்புதல் ஒரு சம்பிரதாயம் தானே! மகனே, இவர்கள் ரிஷிகேஷிற்கு வருவது இது முதல்முறை இல்லையா?”
    “ஆமாம் பாபா…” என்று பதிலளித்தான் வெற்றிவேல்.

    “நல்லதே நடக்கும்” என்று வாழ்த்துவது போல் சொன்னார் பாபா.
    வெற்றிவேல் தன் பையை அவிழ்த்து ஒரு எவர்சில்வர் தட்டை எடுத்தான். வழியில் வாங்கிய பூக்கள் செல்போன் உறையில் இன்னும் வாடாமல் காத்திருந்தன.

    கொண்டு வந்திருந்த பழம், புஷ்பம், கற்கண்டு எல்லாவற்றையும் ஒரு சீடரிடம் கொடுத்தான். அவர்கள் வந்தது ஏன் என்று புரிந்து கொண்டவர் மாதிரி பாபா சிரித்தார், வெற்றிவேல் கேட்டான்.
    “எப்போது புறப்படுகிறீர்கள்?”
    “நாளை மறுநாள் உதயத்தின் போது”
    “எப்போது திரும்புவீர்கள்?”
    பாபா பற்கள் ஒளிவீசச் சிரித்தார்.

    அவர்கள் பதிலுக்குக் காத்திருந்தனர்.
    பிரியமாக ஒவ்வொரு மனசிலும் தேன் துளிர்ப்பது போன்று அவர்களை அவர் பார்த்தார்.

    “ஆனந்தமாய் இருங்கள்” என்று இரு கைகளையும் நீட்டி அவர்களை வாழ்த்திவிட்டு மீண்டும் கை கூப்பிக் கும்பிட்டார்.
    “எப்போது திரும்புவீர்கள் பாபா?”
    மீண்டும் பாபா சிரித்தார்.

    அந்த சிரிப்பில் ஒரு விடைபெறல் தொனித்தது.
    “எதற்கு கைலாசம் போகிறீர்கள்?” சிவா குறுக்கிட்டான்.
    “பிரயாணத்தில் அது ஒரு போக்கிடம்”
    “அது ஏன் கைலாசமாக இருக்க வேண்டும்?” சிவா குதர்க்கமாகக் கேட்கிறான் என்று பிரீதாவுக்குப் பட்டது.
    “ஷ்ஷ்… சிவா” என்று அவனை அவள் தடுக்க முயற்சித்தாள்.

    “லீவ் ஹிம்” என்று வெற்றிவேல் அவளுக்குச் சொன்னான்.
    சுற்றிருந்தவர்களை கைகளால் வரிசையாகச் சுட்டிக்கபாட்டி “இவர்கள் தீர்மானம்” என்றார்.
    “நீங்கள் ஏன் அதை மறுக்கக் கூடாது?”
    “மறுப்பில் பந்தமுண்டு. இசைவின் பந்தம். எதிர்ப்பின் பந்தம்”
    “உயிர் உள்ளவரை பந்தமும் உண்டு.”

    “உண்மை… உயிர் உள்ளவரை பந்தமும் பந்தத்திலிருந்து அகலும் சுதந்திரமும் உண்டு.”
    திடீரென்று அங்கு நிலவிய எல்லா சந்தடிகளும் ஓய்ந்தன.

    அவர் பேசுவதைக் கேட்கும் உண்மையான ஆர்வம் ஒருங்கிணைந்த வடிவமாய் அங்கு சூழ்ந்தது.
    “எது சுதந்திரம்?”
    “இயல்பு”
    “இயல்பு தீமையானால்?”
    “நன்மை தீமை என்பவை மதிப்பீடுகள். அவை மாறும்.”
    “இயல்பும் மாறுமா?”
    “தன் இயல்பு எதுவென உணரும் ஒளி வரும் வரை எதுவும் மாறும்.”
    “அப்போது மாறாத இயல்புதான் சுதந்திரமா?” சிவா மடக்கினான்.

    “மாறாத என்பது அடைமொழி. இயல்பின் மீது சுமத்தும் பளு. இயல்பு என்பது லகு. சுலபம்.. சாந்தம்.”
    அவன் மேலும் மேலும் கேள்விகளால் பாபாவை வேட்டையாடுவது போன்று பிரீதாவுக்குத் தோன்றியது. அவள் அதைத் தவிர்க்க விரும்பினாள்.

    “பாபாஜி… எனக்கு ஒரு செய்தி கொடுங்கள்.”
    சிவா அவள் குறுக்கிட்டதைக் கண்டு ஆச்சரியமுற்று அவளைப் பார்த்து விட்டுப் பின்பு பாபாவை நோக்கினான்.
    பாபா அவர்கள் இருவரையும் மாறி மாறிப் பார்த்தார். அவரது குளிர்ந்த பார்வை பிரீதாவின் மீது சென்று சிறிது நேரம் தங்கிற்று.

    “சாந்தி வரும் குழந்தாய்.”
    அந்த சொற்களில் இருந்த ஆதுரம் தொட்ட குளுமையில் அவள் உடைந்து போனாள். விம்மி விம்மி விம்மி விம்மி பிரீதா அழத் தொடங்கினாள்.

    அந்தச் சூழ்நிலையில் அவளது அழுகை ஒலி உலகின் ஒட்டு மொத்த துயர் போன்று கூர்மையுற்று ஒன்று குவிந்து எல்லோர் மனசையும் தாக்கிற்று.

    அவள் எந்த இழப்பிற்கோ, எந்த வேதனைக்கோ அழாமல் தன் துயரப் பொதி முழுவதையும் அவிழ்த்து அதன் தாள முடியாப் பாரத்திலிருந்து அகன்று ஒதுங்கி விடுவது போன்று ஐந்து நிமிஷத்திற்கும் மேலாக வாய் விட்டு அழுதாள்.
    எல்லோரும் சித்திரத்தில் எழுதிய உருவங்கள் போன்று அமர்ந்திருந்தனர்.

    அவளிடம் இவ்வளவு துயரம் பொதிந்திருக்க முடியுமா என்பதை சிவாவே முதன் முறையாக அப்போது தான் உணர்ந்தான், அவன் நெஞ்சு கரைந்தது.

    “மனிதப் பிறவி இவ்வளவு பெரிய துயரைத் தாங்கியிருக்க வேண்டிய அளவு என்ன சபிக்கப்பட்டதடா தெய்வமே” என்று அவன் நெக்குருகினான்.

    மாறாத புன்னகையுடன் கனிவுடன் ஆசிர்வதிப்பது போன்ற பிரியத்துடன் அவள் அழுது முடிப்பது நல்லது என்ற சித்தத்துடன் பாபா அவளைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

    “பாபா… எப்போது சாந்தி வரும்?”
    தான் இரண்டு ஆண்களுடன் கூட வந்தோம் என்ற உணர்வோ, பல ஆண்களின் மத்தியில் அமர்ந்திருக்கிறோம் என்ற கூச்சமோ இல்லாமல் வெகு இயல்பாக விம்மிக் கொண்டே கேட்டாள்.

    “வரும் குழந்தாய்… விரைவில் வரும்”
    “வருமா பாபாஜி?”
    “நிச்சயம் வரும்”
    ஐந்து நிமிஷம் கழித்து அவள் குளித்து முழுகிய மாதிரி புத்துணர்ச்சியுடன் தலை நிமிர்ந்தாள்.

    தொடரும்

    Share
  • ஐந்து கை ராந்தல் (23)

    வையவன்

    “ஞானும் வரும்” என்றாள் பிரீதா.
    இருவரும் அதை எதிர்பார்க்கவில்லை. குறிப்பாக சிவா.
    “நீங்க என்ன சொல்றீங்க?” என்று பிரீதாவைக் கேட்டான்.

    “ஞானும் ரிஷிகேஷ் வரும்.”
    அவர்கள் புட்டு சாப்பிட்டுக் கொண்டிருந்த நேரத்தில் உள்ளே வந்தாள் பிரீதா. இந்த நண்பர்களின் விவாதத்தைக் கேட்டாள். திடீரென்று எதிர்பாராவிதமாக தன் முடிவை அறிவித்தாள்.

    “என்ன பிரீதா சொல்றீங்க?”
    “எனிக்கு எவிடயோ போகணும் எவ்விடயெங்கிலும்” என்று தட்டுத் தடுமாறி அவள் தமிழில் தொடர்ந்தாள்.

    “நான் இருபது நாட்களாக மனுஷியாகவே இல்லை. எனக்கு ஒரு பிரயாணம் தேவை!”
    சிவாவைச் சாட்டை போல் அந்த வாசகம் தாக்கிற்று.

    தாமுவின் மரணம் அவளை எவ்வளவு தாக்கியது என்பதை உணரவும் நேரமின்றித் தன் சொந்தத் துயரத்தில் மூழ்கிப் போனான்.

    அது என்ன சுயநலம்!
    “பதினைந்து நாளுக்கு மேலே ஆகுமே! ஐ திங்க் யூ மே நாட் கெட் லீவ். தனியார் நர்ஸிங்ஹோம்லே லீவ் தர மாட்டாங்களே” என்று வெற்றிவேல் அவள் வருவகையைத் தவிர்க்கும் விருப்பத்தோடு குறுக்கிட்டான்.

    “எனக்கு லீவ் வேணும். கொடுக்க மாட்டேண்ணா நான் ரிஸைன் பண்ணுவேன்.”
    அவள் இவ்வளவு தீவிரமாகப் பேசுவாள் என்று வெற்றிவேல் எதிர்பார்க்கவில்லை. சிவாவைப் பார்த்தான்.

    “வரட்டும்!” என்றான் சிவா.
    சற்று நேரத்துக்கு முன் வரவே மாட்டானோ என்று தாமும் நினைத்த சிவா, அவளும் வரட்டும் என்று சொன்ன பதிலில் தான் வர விரும்பவில்லை என்ற ஆட்சேபம் அடிபட்டுப் போனதை வெற்றிவேல் கவனித்தான்.

    “தாங்யூ சிவா” என்று சிரித்தாள் பிரீதா. இருபது நாட்களுக்கு அப்புறம் அவள் முகத்தில் சிரிப்பு இப்போது தான் மலர்ந்திருந்தது.

    நெடிய தொருக் கொடிய தீக்கானலில் மழையின்றிப் பட்டுப் போன ஒரு மரத்தில் மீண்டும் பெய்த மழையில் எங்கோ ஒரு சொட்டு போல் ஒட்டிக் கொண்டிருந்த உயிர்ப்பு மீண்டும் மலர்வது மாதிரி இருந்தது.

    பிரீதா தான் வாங்கி வந்த ரொட்டியை எடுத்து வர உள்ளே போனாள்.

    “பெண்கள் சக்தி வாய்ந்தவர்கள்!” என்று வெற்றிவேல் சொன்னான்.

    தன் தீர்மானமும் விமர்சனமும் தகர்ந்து போனதை வெற்றிவேல் சுட்டிக்காட்டுகிறான் என்று சிவாவுக்கு புரிந்தது.

    “உண்மைதான்! நான் பிரீதாவுக்காக வருகிறேன்.”
    “உன் தந்தைக்காக” என்று அந்தக் கருத்து பாபா ஓம்கார்நாத்தை அவமரியாதை செய்துவிட்டது போல் துடிப்போடு குறுக்கிட்டான் வெற்றிவேல்.

    “ஸாரி வெற்றிவேல்! எனக்கு என் தந்தையின் மீது கோபமில்லை. பாபாவின் மீது உன் மாதிரி ‘ஒர்ஷிப்’பும் இல்லை… நான் வருவது” என்று பிரீதாவைப் பார்த்து பேசியதை முடிக்காமல் தவிர்த்தான்.

    ரொட்டியை இருவருக்கும் பரிமாறிவிட்டு… “நான் கிளம்பறேன்! அரை மணி நேரம் பர்மிஷன் வாங்கி வந்தேன். நாம என்னிக்குப் புறப்படணும்?” என்றாள் பிரீதா.
    “பதினெட்டாந் தேதி பாபா ரிஷிகேஷ்லேருந்து கௌம்பறார்.

    ரெண்டு நாள் முன்னாடி நாம அங்கே போயிடணும்!”
    “இன்னிக்கு பதினொண்ணு… எதிலே போகப் போறோம்…?”
    “தமிழ்நாடு எக்ஸ்பிரஸ்லே டில்லி போய்ட்டா அங்கிருந்து நெறைய டூரிஸ்ட்கோச் டெய்லி கௌம்பறதாம்.”
    “ஆ யு ஷ்யூர்?” என்று வெற்றிவேலைக் கேட்டாள் பிரீதா.

    “ஷ்யூர்.”
    “அப்ப டிக்கெட் புக் பண்ணிடுங்க.. மூணு பேருக்கும்” என்றாள் பிரீதா. மீண்டும் அவளே யோசித்து விட்டுச் சொன்னாள்.

    “டிக்கெட் கெடைக்கறது கஷ்டமாயிருக்கும். ஒரு ரயில்வே ஆபீசர் தன் மனைவி பிரசவத்துக்காக ரொம்ப கஷ்டப்பட்டுக்கிட்டிருக்கிறார். அது இங்கே அட்மிட் ஆயிருக்கு. ஐ’ல் போன் ஹிம். நீங்க பொறப்படறப்ப என்கொயரியிலே வந்து என்னைக் கூப்பிடுங்க”

    “சரி”
    பிரீதா புறப்பட்டுச் சென்றாள்.
    “இது என்னடா சிவா திடீர்த் திருப்பம்?”
    “திருப்பம் தான்; திடீர்த் திருப்பம் அல்ல”
    “வாட் டு யூ மீன்?”

    “நான் வர ஒப்புக்கிட்டது இவளுக்காக”
    “யார் இவள்? ஐ-மீன் ஒனக்கு இவள் யார்?”
    “ஓர் உண்மையான சிநேகிதி.”
    “அதுக்கு மேலே?”

    “தாமுவின் பார்ட்னர், நான் உருவாக வேண்டும் என்று அந்தரங்க விசுவாசத்தோடு விரும்புகிறவள். தாமு இவளைத் திருமணம் செய்து கொள்ள இருந்தான்” அவன் பெருமூச்செறிந்தான்.

    “நீ அப்ஸெட் ஆயிட்டியா? தாமு ‘டெத்’தை சொல்றேன்.”
    “இட் ஈஸ் பாஸ்ட்”
    “அதுக்கு மேலே ஒண்ணுமில்லியா?”
    “வாட் எல்ஸ்?”
    “நீ… எழுத்தாளனா நீ? ஆர் யூ… எ… ரைட்டர்?” நம்பாதது மாதிரிக் கேட்டான் வெற்றி.

    “ரைட்டர்…ஃபைட்டர் எல்லாம் அப்புறம் மனுஷன்! அதானே ‘பேஸிக்’. தாமு எனக்கு அதைத்தான் உணர்த்தினார். அவர் போனதும் உலகம் இருண்டது”

    அவனைப் பேச விடுவது போல் மார்பின் மீது கை கட்டிக் கொண்டு வெற்றிவேல் சிவாவைக் கவனித்தான்.

    “அது ஒரு தவறு. போராடு. உன்னைக் கண்டுபிடி. இதுதான் தாமு எனக்குத் தந்த செய்தி. மனிதன் மறைந்ததும் நான் உணர்ச்சி வசமானேன். அதிலே செய்தி மறந்து விட்டது.”
    “பலவீனம்… அது தானே மனிதன்!”

    “இல்லை. விழுந்து விழுந்து எழுகிற பலம். அதுதான் மனிதன்.”
    “மறுபடியும் ஒரு கருத்து யுத்தமா?”

    “இல்லேடா வெற்றி… எப்பவும் நான் அஃபென்ஸ் ஆடறதில்லே. டிஃபென்ஸ் தான். உன் கருத்து தாக்கறப்போ நான் என்னைக் காப்பாத்திக்க வேண்டாமா?”

    “மேலே சொல்லு” என்று சொல்லிவிட்டு ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்தான் வெற்றிவேல்.

    “செய்தி மறந்துதான் போச்சு. மறைஞ்சு போயிடலே.செய்திகள் மறக்கறதில்லை. மனுஷன் தான் மறைஞ்சு போயிடறான். உயிரோட இருக்கறவன் சொந்த சுக துக்கங்கள்ளே சுயநலத்தினாலே அதைத் தள்ளிப் போடறான். அவ்வளவுதான். இன்னிக்குக் காலையிலே மறந்தது என் நினைவுக்கு வந்தது… போகட்டும்! எப்படி இருக்கு உன் விவசாயம்?”

    “நீ வந்து பார்”
    “சொல்ல மாட்டியா?”
    “சொல்வதற்கு அது செய்தி அல்ல”
    “ஆல்ரைட்… நானே வர்றேன்”
    “உங்க அம்மாவைப் பார்த்தேன்!”

    “எப்ப?”
    “நேத்து ரிஷிகேஷ் போறேன். வாங்கண்ணு கூப்பிட்டேன்”
    “என்ன சொன்னாங்க”
    “சிரிச்சாங்க.”

    “அப்புறம்?”
    “கம்ணு இருந்தாங்க. கொஞ்ச நேரம் கழிச்சு சிவாவைக் கூப்பிட்டுகிட்டுப் போப்பாண்ணாங்க!”
    “அப்பிடியா சொன்னாங்க?”

    “ஆமாம். நீ தாமு மரணத்தைப் பத்தி எழுதியிருந்த கடிதத்தைக் காட்டினாங்க. ரொம்ப மனசு கெட்டுப் போயிருக்காம்பா… அவசியம் கூட்டிக்கிட்டுப் போண்ணு சொன்னாங்க சொன்னது மட்டுமில்லே” என்று ஒரு கவரை எடுத்து அவனிடம் நீட்டினான் வெற்றி.

    “இதிலே என்ன இருக்கு?”
    “பத்தா ஆயிரம் ரூபா இருக்கு நீ அனுப்பிய காசையெல்லாம் அவங்க செலவழிக்காம பாங்க்லே போட்டு வச்சிருக்காங்க. அதிலேருந்து பத்தாயிரம் ரூபா எடுத்து ஒங்கிட்டே வழிச் செலவுக்குக் கொடுக்கச் சொன்னாங்க.”

    கப்பென்று மார்பை எதுவோ பிடித்தது. மதகு வெள்ளம் திறந்த மாதிரி குபுகுபுவென்று மனசு நிறைந்தது.
    ‘எங்கிட்டே எதுக்குக் கொடுக்கறே?”
    “அம்மா கொடுக்கச் சொன்னாங்க.”

    சிவா கவரைத் தொட்டு விட்டு மீண்டும் விரல்களை எடுத்துக் கொண்டான்.
    “சரி… நான் வாங்கிட்டேன்! வச்சுக்கோ. வழியிலே நீயே செலவு பண்ணு.”

    “நீ என்னை அவமானம் பண்றே!” உனக்கு இசைவில்லாத ஒரு பிரயாணத்துக்கு உன்னை நான் கூப்பிடறேன். அதுக்கு நீ செலவு பண்ணணும்னு எதிர்பார்த்து வந்திருக்கேண்ணு நெனச்சியா?”

    “நல்லது… நீயே செலவு பண்ணு. அந்தப் பணத்தை நீயே வச்சிரு. கேக்கறப்ப-நான் எப்பவாவது கேட்டா கொடு!”

    “ஒன்னை மாதிரி பிடிவாதம் பிடிச்ச முசுடுகிட்டே எவண்டா ஆர்க்யூ பண்ணுவான்” என்று மெய்யாகவே கோபித்துக் கொண்டான் வெற்றிவேல்.

    “வெற்றிவேல்” என்று பளிச்சென்று ஒரு தெளிவோடு சிவா ஆரம்பித்தான்.
    “சொல்லு.”

    “நான் ஆர்க்யூ பண்ணுவேன். ஆனா எப்பவும் நீ தான் ஜெயிக்கணும்னு விட்டுடுவேன்.”
    வெற்றிவேல் உணர்ச்சி வசப்பட்டான். அதைக் காட்டிக் கொள்ளாமல் கண்களைக் கவிழ்த்துக் கொண்டான்.

    “சரி விடு. கௌம்புவோமா?” என்று எழுந்தான் வெற்றிவேல். அவர்கள் கிளம்பிய போது வானம் மெல்ல மூடிற்று.

    திரும்பி வரும்போது மழை தொடங்கிற்று. அது இரண்டு நாள் நீடித்தது.
    இரண்டு நாளாகப் பொழிந்து தீர்ந்தும் இன்றும் வானத்தை விட்டுப் பிரிய மனமின்றி மேகங்கள் மூடியிருந்தன.

    தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ட்ரெய்ன் கார்டின் சிக்னலுக்காகக் காத்துக் கொண்டிருந்தது.
    “சூரியன் இல்லாமே நல்லாவே இல்லே..” என்று சொன்னாள் பிரீதா.

    ஜன்னலோரத்து ஸீட்டை அவளுக்கு விட்டுக் கொடுத்து விட்டு எதிர் ஸீட்டில் வெற்றிவேலுக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த சிவாவுக்கு அந்த வெளியீடு மிகவும் அழகாகப் பட்டது.

    “நாம சூரியனோட ரொம்ப பழக்கப்பட்டதாலே! வி மிஸ் தி சன்” என்று வெற்றிவேல் குறுக்கிட்டான்.
    “இட் ஈஸ் எ வெரிகுட் எக்ஸ்பிரஷன்! ஆனா எனக்கு வானம் மூடிக்கிட்டு மழை பெய்துகிட்டிருக்கப்ப அந்த ஊரை விட்டுட்டு கிளம்பறது ரொம்பப் பிடிக்கும்.”

    எதற்காகப் போகிறோம் என்பதை விட அந்த ரயில் பிரயாணத்தையே அவர்கள் மூவரும் விரும்பினர். அந்த மகிழ்ச்சியில் வெளியூர்ப் பயணங்களை ரசிக்கும் குழந்தைப் பருவத்தின் தூய்மையான ஆனந்தம் இருந்தது.

    “சார்…!” என்று யாரோ வெளியே கூப்பிடும் ஓசை கேட்டது.
    சிவா திரும்பிப் பார்ப்பதற்குள் பிரீதா முந்திக் கொண்டாள்.

    “ஹலோ செங்குட்டுவன்… ஒனக்கு எப்படித் தெரியும்?”
    சீனியர் மெக்கானிக் செங்குட்டுவன் ஜன்னல் அருகே வந்தான். அவன் முகம் மலர்ந்திருந்தது.
    “நான் சொல்லியிருந்தேன்!” என்று சட்டென்று எழுந்தான் சிவா.

    “நல்லா போய்ட்டு வாங்கம்மா!” என்று வாயெல்லாம் பல்லாக அவன் வழியனுப்புதல் சொன்னான்.
    அப்புறம் கையிலிருந்து ஒரு ப்ளாஸ்டிக் பையை எடுத்து அவளிடம் நீட்டினான்.

    “இதிலே என்ன இருக்கு?”
    “ஒண்ணுமில்லேம்மா, கொஞ்சம் எலுமிச்சை சாதம்.. கொஞ்சம் புளி சாதம்.”
    வெற்றிவேலுக்கு சிரிப்பு வந்தது.

    “ப்ளீஸ் டோன்ட் லாஃப்” என்று அவன் கையிலிருந்த பையை வாங்கிக் கொண்டே வெற்றிவேலுக்கு மட்டும் கேட்கும்படியாகச் சொன்னாள்.

    “இதெல்லாம் எதுக்கு செங்குட்டுவன்?
    “வாங்கிக்கங்கம்மா. வழியிலே ஒருவேளை சாப்பிடுங்க. ஐயா வந்திருந்தா பிரியாணி வாங்கி வந்திருப்பேன்.”

    செங்குட்டுவன் தொண்டை தழுதழுத்தது.
    “ஹூ ஈஸ் ஹி?” வெற்றிவேல்.

    “தாமுவினுடைய ஒர்க்ஷாப்லே சீனியர் மெக்கானிக்”
    தான் சிரித்ததற்காக நாக்கைக் கடித்துக் கொண்டான் வெற்றிவேல். தாமுவின் அன்பு எங்கெல்லாம் வேர் பாய்ந்திருந்தது என்பது அவனுக்கு மிகவும் உறைத்தது.

    வெற்றிவேல் திரும்பி பிரீதாவைப் பார்த்தான். தளதளவென்று புஷ்பித்துக் குலுங்கியது போன்ற அவள் மகிழ்ச்சி சட்டென்று குறைந்து முகம் வாடிற்று.

    “சந்தோசமா போயிட்டு வாங்கம்மா” என்று அந்த நேரத்தில் தாமுவை நினைவுபடுத்திய பிழையை உணர்ந்து செங்குட்டுவன் சிரித்தான்.

    “ஒன் மினிட்” என்று சிவா வெளியே போனான்.

    ‘எங்கே போறே?”
    “செங்குட்டுவன் கட்டுசாதம் கொண்டு வந்திருக்காரு. நம்மகிட்டே வாட்டர் ஜக் இல்லே. இங்கே ஒண்ணு வாங்கிட்டு வந்துடறேன்.”

    “டைம் இருக்கா?”
    “இருபது நிமிஷம் இருக்கு” சிவா செங்குட்டுவன் தோள் மீது கை வைத்துக் கொண்டே பிளாட்பாரத்தில் நடந்தான்.

    சிவா அதற்காக மட்டும் போகவில்லை என்று வெற்றிவேலுக்குப் பட்டது.
    வேறு ஏதோ ஓர் அந்தரங்கம் பேசவே போகிறான் என்று நினைத்தான்.

    தொடரும்

    Share
  • வருகை தந்து வாழ்த்துங்கள்

    வையவன்

    வணக்கம். ஒரு ஞாயிறு என்பது ஓயாத உழைப்புக்கிடையே கிட்டும் சிறு ஓய்வு. அந்த ஓய்வில் பங்கு கோருவது சரியில்லை தான். எனினும் அன்பும் தமிழும் நேசமும் அனுமதிக்கும் உரிமையில் வேண்டுகிறேன்.அடையாறு கலை இலக்கியச் சங்கமும் இந்திய நட்புறவுக் கழகமும் இணைந்து நிகழ்த்தும் இவ்விழாவிற்கு அன்பு கூர்ந்து வருகை தந்து வாழ்த்துங்கள்.

    book

    Share
  • ஐந்து கை ராந்தல் (22)

    வையவன்

    எங்கே போவாய் சிவா? அந்தக் கேள்வி கூடவே அவனுடன் நடந்து வந்தது.
    அதிகாலையில் சிவா மெரீனாவிற்குப் போனான். ‘வாக்கிங்’ பயிற்சிக்கும் ஓட்டப் பயிற்சிக்கும் ஆண்களும் பெண்களும் கடற்கரைச் சாலையில் சுறுசுறுப்பாக நடந்தார்கள். ஓடினார்கள்.

    அவன் மைலாப்பூரில் நர்ஸிங் ஹோமிலிருந்து கால்நடையாகவே புறப்பட்டான்.
    புறப்படும் போது பிரீதா கேட்டாள்.

    “தெரியலே…எங்கேயோ போகணும் போலிருக்கு!”
    “டிபன் சாப்பிட வந்துடு. எனக்கு காலைலே டூட்டி புட்டு செஞ்சு வச்சுட்டுப் போறேன். வந்து சாப்பிடு. இந்தா டூப்ளிகேட் சாவி!”
    பிரீதா நீட்டியபோது வாங்க மனமில்லை.

    “எங்க போறேண்ணே தெரியலே. எப்ப வருவேண்ணும் தெரியாது.”
    “பரவால்லே. எங்கிட்டே வேறே ‘கீ’ இருக்கு”
    “ஒருவேளை நான் ஊருக்குப் போய்ட்டா…?”
    “நானும் ஊருக்கு வருவேன்”
    அவன் பிரீதாவை நிமிர்ந்து பார்த்தான்.

    “யூ நோ! எனக்கு எப்படி இருக்கும்ணு நீ யோசிச்சியா?”
    அவள் கண்கள் கலங்கின. தளும்பி நின்ற அந்த கறுப்பு ஊற்றுக்களின் கீழே சமுத்திரம் குமுறிக் கொண்டிருக்கிறது.

    “என்னைப் பத்தி யோசிக்கவே மறந்துட்டே இல்லை?”
    மெய்தான். சிவா யாரைப் பற்றியும் யோசிக்க மறந்து விட்டான். விழுந்த அடி அவன் முதல் அனுபவம்.வழங்கப்படுகிற எந்த பாதுகாப்பும் எந்த ஆறுதலும் எந்த உறவும் எப்போதும் எந்த வினாடியிலும் ரத்து செய்யப்படும் என்ற கொடூரமான உண்மை தான் எல்லாவற்றிற்கும் அஸ்திவாரமாக நிற்கிறது.

    அது அவனைச் சந்தித்துப் போயிற்று. அந்த உண்மையைத் தெரிந்து கொண்ட பின்னால் அவனுக்கு யாரைப் பற்றியும் யோசிக்க முடியவில்லை.

    “எங்கே போவாய் சிவா?”
    அதே கேள்வியை திஷ்யாவும் கேட்டாள்.

    ராயப்பேட்டையில் உள்ள வீட்டில் தாமுவின் உடமைகளையெல்லாம் எடுத்துக் கொண்டு, தாமுவின் மாமா வீட்டைக் காலி செய்த பின்பு தனது சூட்கேஸை எடுத்துக் கொண்டு கிளம்பும் போது கேட்டாள்.
    “இப்ப பிரீதா க்வார்ட்டர்ஸிலே தங்கப் போறேன். அப்புறம் எங்க போவேண்ணு தெரியலே.”

    “மறந்துடுவீங்களா?”
    சிரித்துக் கொண்டே தான் கேட்டாள். நெஞ்சைக் குத்தும் சிரிப்பு. கண்ணீரை ரஸவாதம் செய்து வாக்குறுதிகளின் மெருகேற்றிக் கேட்ட சிரிப்பு.

    “வேணும்னா சொல்லு! ஐ வில் ட்ரை!
    புண்ணியகோடியின் தற்கொலை முயற்சி பற்றிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு அவர் பல்லாவரத்திற்கு மாறுதல் வாங்கியிருந்தார்.

    குடும்பத்தை அனகாபுத்தூருக்கு மாற்ற வீடு பார்த்துக் கொண்டிருந்தார். அதைச் சுட்டிக்காட்டி அவன் சொன்னான்.

    “நினைப்பு இருந்தா சரி!” அவள் மீண்டும் இடக்கு பேசினாள்.

    அவனுக்கு வேடிக்கை பேச மனசில் பசுமையில்லை.

    “திஷ்யா… இதை நீ உங்க அப்பாகிட்டே சொல்லு.”
    “ஏன்?”
    “இப்ப அவர் என்னைப் பார்க்கவே இஷ்டமில்லாதவர் போல போறார்… வர்றார்”
    தாமுவின் மரணத்திற்குப் பின்னர் புண்ணியகோட்டி விலகி விலகித்தான் நடந்தார். தாமு என்ற பின்னணி தகர்ந்து போனதும் அவன் தலையீடுகளெல்லாம் பெரும் பிழைகள் என்று அவருக்குத் தோன்றியிருக்குமோ!
    ராயப்பேட்டை வாசம் அவரை மனக்கோட்டைகள் இடிந்த மைதான வாசம் மாதிரி மாற்றியிருக்கக் கூடும்.

    பாவம்… துரத்துகின்ற நிழலுக்குப் பயந்து எட்டாத கானலுக்கு ஓடித் தோற்றவர்! அவர் மீது அவனுக்கு அனுதாபம் தான் வந்தது.

    “கொஞ்சம் இரு சிவா!” திஷ்யா உள்ளே போய் ஒரு வெள்ளைத் தாளில் விலாசம் எழுதிக் கொண்டு வந்தாள்.

    “வீடு கெடைச்சுட்டுது. இதான் புது அட்ரஸ். தபால் போடு”
    “தபால் தானே… எழுதறேன். எனக்கு விலாசம் கெடைக்கற வரைக்கும் நீ பதில் எழுத வேண்டாம். நான் தபால் எழுதிக்கிட்டே இருப்பேன்.”
    “சரி” அவள் நம்பிக்கையோடு சிரித்தாள்.

    “எங்கே போவாய் சிவா?” அப்புறமும் கேட்டாள்.
    அவன் கைகளை விரித்துக் காட்டி விட்டு வெளியேறினான்.
    எங்கே போவாய் சிவா?
    அவன் தன்னையே கேட்டுக் கொண்டான்.

    மெரீனாவிலிருந்து கரையோரமாக வெயிலை எதிர்பார்த்து விரிந்த வலைகளையும் கட்டுமரங்களையும் கடந்து நடந்தான்.

    அலைகள் கரையை விட்டுக் கொஞ்சம் பின் வாங்கியிருந்தன.
    கிழக்கே உதயத்தின் முதலாவது முலாம் பூசப்பட்டிருந்தது. இன்னொரு நாள் விடிவதை எதிர்பார்த்துக் கொண்டு மீனவர்கள் சுறுசுறுப்பாக இயங்கினர்.

    அவன் அலைகள் ஓயாத அந்த ஜீவ இயக்கத்தில் போக்கிடமற்ற ஒரு பயணி போன்று பார்வையாளனாக குறியற்று, நோக்கற்று நடந்தான்.

    லைட் அவுஸுக்குப் பின்புறம் உயர உயரமாக நின்ற கயிற்றுக் கருணைகள் வந்ததும் உட்கார் என்று யாரோ உத்திரவிட்ட மாதிரி உட்கார்ந்தான்.
    உதயமாயிற்று.

    மாணிக்கப் பசும்பொன் போன்று அந்த சிவப்பு வட்டம் கடல் விளிம்பிலிருந்து மெதுமெதுவே விடுதலையாகி சாண் உயர்ந்தது. முழம் உயர்ந்தது. மார் உயர்ந்தது.

    இது நேற்றும் வந்தது. உண்டோம். உறங்கினோம். மீண்டும் உதயமாகியிருக்கிறது.
    எல்லாம் யோசிக்கும் வேளையில் பசி தீர உண்பதும் உறங்குவதுமாக முடியும்…என்ற தாயுமானவர் பாடல் சரேலென்று நினைவுக்கு வந்தது.

    அதே இடத்தில் அமர்ந்து ஒரு சந்திரோதயத்தைத் தரிசித்ததை எண்ணினான் சிவா. அப்போது நினைவில் ஒரு தோணி போல் மிதந்து வந்த வாசகம் ஞாபகமாயிற்று.

    விடுதலை பெறுக!
    அம்மா, திஷ்யா, பிரீதா.

    பெண்களின் பந்தங்கள் தான் தன்னை இறுக்கி யிருந்தன என்று நினைத்திருந்தான் அதுவரை. தாமுவின் மரணம் ஒரே வீச்சில் அந்த நினைப்பை வெட்டி வீழ்த்தி விட்டது. உருவாக்கியது தெரியாமல் அவனை தாமு உருவாக்கியிருந்தான். அந்தக் கரம் வீழ்ந்ததும் தனக்குள் சுற்றிய சக்கரம் நின்று போனதை ஒரு சூன்ய உணர்வோடு அவன் உற்றுக் கவனித்தான்.

    தூரத்தில் முதலாவது கட்டுமரம் அன்றைய தினத்தை வரவேற்க கரைக்கு வந்து கொண்டிருந்தது. மீனவப் பெண்களும் குழந்தைகளும் அலைகளுக்கு அஞ்சாமல் அதனருகே ஓடினர்.

    இரவைக் கடலின் மடியில் கட்டுச் சோற்றுடன் கழித்து விட்டு மீனவர்கள் கரை திரும்பிக் கொண்டிருந்தனர்.

    பசி தீர உண்பதுவும் உறங்குவதுமாக மட்டுமா வாழ்க்கை முடிகிறது?
    வேதாந்திகளுக்கும் வாழ்க்கையை உதறிய துறவிகளுக்கும் ஒருவேளை யோசிக்கும் வேளையில் அப்படி முடியலாம்.

    ஓர் அலை எதிரில் வந்த கட்டுமரத்தை உந்தி கரைக்குத் தள்ளிற்று.

    அதோ பசி தீர உண்பதற்கும் உறங்குவதற்கும் கூட இயற்கையை எதிர்த்து, அலைகளோடும் சுறாக்களோடும் யுத்தம் செய்து நடக்கும் அந்த முயற்சியில் என்ன வேகம்! என்ன விளையாட்டு!

    கரையேறுவதற்குச் சாடி வந்த அலை ஒன்று சிலீரென்று அரைந்து தன் நுரைப் பாவாடையை விரித்துச் சிரித்தது. அதற்கு அது தோல்வியோ. அது மீண்டும் வரும். அதற்கு வெற்றியுமில்லே. தோல்வியுமில்லை.

    விடுதலை பெறுக.

    அவனுக்கு அந்த வாசகம் மீண்டும் ஞாபகம் வந்தது.
    அதற்கு அவனுக்கு இப்போது புதுப் பொருள் புரிந்தது.

    சார்பு நிலையிலிருந்து விடுதலை பெறுக…நீ எழுந்து உன் சொந்தக் கால்களில் நட… சிவாவுக்கு உடம்பு விறுவிறுத்தது.

    தன்னைக் கவிந்திருந்த முட்டையின் கூடு நொறுங்கி வெப்பமும் கடினமும் வாய்ந்த நிலப்பரப்பில் வந்து விழுந்த ஒரு சிலிர்ப்பு தோன்றியது.
    திஷ்யா, நான் விடுதலையாய் விட்டேன்.

    பிரீதா நான் விடுதலையாகிறேன்.
    அம்மா எனக்கு விடுதலை.

    தாமு உங்களுக்கு நன்றி. அரவணைத்தீர்கள். ஆதரவளித்தீர்கள். மேலே ஏறு என்று பொறுப்பளித்தீர்கள். அப்பாலே போ என்று அகன்று போய் விட்டீர்கள். நன்றி. எல்லாவற்றிற்கும் நன்றி.
    சிவா வெய்யில் உறைக்கவே எழுந்தான்.

    கூழ் மாதிரி ஜெல்லி மீன் மாதிரி நெகிழ்ந்து குழைந்து வந்து அங்கே உட்கார்ந்திருந்து விட்டு மீள எழுந்தபோது எஃகு மாதிரி உறுதியோடு நிமிர்வதை நினைத்தான்.

    பதினெட்டு நாட்கள் கழித்து அவனுக்குப் புன்னகை வந்தது.
    தான் அப்படி இருந்ததை தாமு ரசித்திருப்பானா?

    இல்லை. யார் ரசிக்கிறார்கள்… யார் ரசிக்கவில்லை என்பது இனி எனக்கு அளவுகோல் இல்லை. நான் அப்படி இருந்தது எனக்கு ஒரு தேவை. இந்த விடுதலைக்காக என்னை உதறி என் கட்டுகளை வெட்டியெறிவதற்கு ஒரு தேவை!
    அவன் மணலில் வேகமாக நடந்தான்.

    கயிற்றுக் கருணை நின்ற அந்த கடற்கரை மூலையிலிருந்து நடக்க நடக்க ஒரு நதி மூலம் உதித்த மாதிரி யோசனைகள் வந்தன. திடமான, ஆண்மை பொருந்திய யோசனைகள் – தீர்மானங்கள்.
    இப்போது அவனுக்குப் பசித்தது.

    பிரீதா க்வார்ட்டர்ஸுக்குப் போக வேண்டும் போல் தோன்றியது. அவன் வேகமாக நடந்தான்.
    அங்கிருந்து புறப்பட்ட சிவா வேறு சிவா. அவனுக்கு மரணம் வழங்கிய அதிர்ச்சி தீர்ந்து வாழ்க்கை வழங்கிய உத்வேகம் நிரம்பிய சிவா.

    யோசிக்கும் வேளையில் உண்பதும் உறங்குவதுமாக முடிந்தாலும் இந்த நாடக அரங்கில் தன் பாத்திரம் என்ன என்று உணர்ந்த சிவா.

    அம்மா… வெற்றிவேல்… தாமு… திஷ்யா… பிரீதா எல்லோருமே தனித்தனியாக இதைத்தான் அவனுக்கு உணர்த்திக் கொண்டிருந்தார்கள். உணர வேண்டுமென்று ஊதி ஊதி ஓதிக் கொண்டிருந்தார்கள்.
    புரிந்து கொள்வதற்கு தாமதமாகி விட்டது.

    அவனுக்கு அந்த கடற்கரைக் காற்றைப் போல் மனசு பரிசுத்தமாயிருந்தது. லேசாயிருந்தது.
    ஜனனத்தைத் தனியே சந்தித்தேன். மரணமே உன்னையும் தனியே சந்திக்க வேண்டும்! நல்லது; காத்திரு… இந்த இடைவேளையில் எனக்கு ஒரு வேலை இருக்கிறது.

    இதோ உருவழிகிற இந்த காலடிச் சுவடுகள் போன்று என் வேலைக்கு எனக்கு அப்புறம் எந்த அடையாளமும் இல்லாமற் போகலாம்! நல்லது. வேலை…வேலை தான் அடையாளம் பதிந்தாலென்ன? அழிந்தாலென்ன?

    ஆயிரம் மனப் பிரமைகளுக்கு நடுவில் நேர்கிறது இந்த ஜனனம் என்ற விபத்து. இதற்கு ஆளான கோடிக்கணக்கானவரிடம் எனக்கு ஒரு வேலை உண்டு. என்னிடம் ஒரு பேனா உண்டு.

    இயற்கையாகவோ செயற்கையாகவோ இந்த மனிதர்கள் கலைத்துப் பிரித்து ஏற்படுத்தியிருக்கும் சிக்கலில் ஓர் இழையையாவது நேராக்குகிற வேலை கதை சொல்லும் வேலை. சிந்தித்து என் பிரார்த்தனைகளைப் பகிர்ந்து கொள்கிற வேலை.

    அக்கரையில் – இல்லை – அடுத்த அசைவிலேயே மரணம் காத்திருக்கிறது. ஆல்ரைட்.
    எப்போது வேண்டுமானாலும் அது வந்து என பந்தங்களில் எதை வேண்டுமானாலும் அது பறித்துச் செல்லட்டும். இந்த நிமிஷம்…இந்த வினாடி யெனினும் அதற்கு நானும் தயார்.

    அது விட்டு வைக்கிற வரை நான் என் வேலையைச் செய்வேன். சிந்திப்பேன். எழுதுவேன். என்னை வெளிப்படுத்துவேன்.

    பிரீதாவின் குவார்ட்டர்ஸுக்கு வெளியே ஒரு கார் நின்றிருந்தது.
    யார் வந்திருப்பது?
    அவன் படியேறும் போதே கணீரென்ற ஒரு குரல் அவனை வரவேற்றது.
    “வா சிவா”
    வெற்றிவேல்.

    பளபளவென்று கலையாத தலையோடு, இன் பண்ணிய உடையும் பாலீஷ் மின்னும் ஷûவுமாக மின்னிக் கொண்டு கையில் சிகரெட் புகைய அவன் வெளி வராந்தாவில் பிரம்பு நாற்காலியில் உட்கார்ந்திருந்தான்.

    “எப்போ வந்தே?”
    “வழக்கப்படி ஐயாவுக்காக வெய்ட் பண்ணிகிட்டிருக்கேன். ஒரு மணி நேரம் ஆச்சு”இந்த அட்ரஸ்?”
    “திஷ்யா சொன்னா”
    திஷ்யா என்ற பெயரையும் சொன்னாள் என்ற ஒருமையையும் ஒரு சுதந்திரத்தோடு பிரயோகித்ததை சிவா கவனித்தான்.

    “நர்ஸம்மா வந்து இங்கே வெய்ட் பண்ணிகிட்டிருங்க. வந்துடுவார்ணு சொல்லிட்டுப் போனாங்க”
    “நீ சாப்பிட்டியா… எனக்குப் பசிக்குது” என்று வெறுமனே மூடியிருந்த கதவைத் திறந்து கொண்டே கேட்டான்.

    “நான் சாப்பிடல்லே. வா ரெண்டுபேரும் ஒரு ஹோட்டலுக்குப் போவோம். ஒனக்காக வெய்ட் பண்ணிட்டிருக்கேன்.”

    “வெற்றி… எனக்கு ஹோட்டலுக்கு வர்ற அளவு பொறுமை ல்லே. பசி… உயிர் போவுது… உள்ள வா! பிரீதா புட்டு பண்ணி வச்சிருப்பா. உள்ளே பிரெட் பிஸ்கெட் எதாவது இருக்கும். ஷேர் பண்ணிப்போம்.”
    “ஆல்ரைட்”
    வெற்றிவேல் உள்ளே எழுந்து வந்தான்.

    புட்டு வைத்திருந்த பாத்திர மூடியைத் தூக்கிப் பார்த்தான். இரண்டு பேருக்கும் காணாது. அரை லோஃப் ரொட்டி இருந்தது. தொட்டுக் கொள்ள ஜாமோ சாஸோ இல்லை. அது போன வாரமே தீர்ந்துவிட்டது.

    புட்டு ஆறி வறவற வென்றிருக்கும். எங்கிருந்தோ தேடி வந்திருப்பவனுக்கு இந்தத் தண்டனை எதற்கு?
    சிவா சட்டென்று ஸ்டவ் ஸ்விச்சை “ப்ளக்”கில் செருகினான்.

    “என்னடா செய்யப்போறே… சமையலா?”
    “பத்து நிமிஷம் உட்காரு. ஒரு டொமாடோ சூப் வச்சுடறேன்.”
    “ஹோட்டலுக்கே போயிருக்கலாம்.”

    “அங்கே புட்டும் டொமாட்டோ ஸுப்பும் சேந்து கெடைக்காது” என்று முட்டை வைத்திருக்கும் பெட்டியைத் தூக்கிப் பார்த்தான். நல்ல காலம் நாலு முட்டைகள் இருந்தன. வெற்றிவேலுக்கு ஆம்லெட் பிடிக்கும்.

    “எங்கிருந்து வந்தே? ஏன் வந்தே?”
    “இதான் விருந்தாளிக்கிட்டே பேசற மானர்ஸா?”
    “நீ விருந்தாளியில்லே. ஒனக்கு மானர்ஸ் எதுக்கு?”
    “சிங்காரப் பேட்டையிலிருந்து புறப்பட்டு வர்றேன். ரிஷிகேஷிற்குப் போய்க்கிட்டிருக்கேன்… ஐம் ஸாரி, போகப் போறோம்.”
    “ரிஷிகேஷ்?” சிவா நெற்றியைச் சுருக்கியவாறே திரும்பிப் பார்த்தான்.

    “எஸ்…ரிஷிகேஷ்” என்று மீண்டும் வெற்றிவேல் வலியுறுத்தினான்.
    “நான் கூடவா?”
    “ஆமாம்; நீ கூட”
    “அங்கே என்ன விசேஷம்?”
    “பாபா ஓம்கார்நாத் கைலாச யாத்திரை தொடங்கப் போறார். அங்கே நண்பன் ஒருவன் கடிதம் எழுதியிருந்தான்.”

    பாபா ஓம்கார்நாத் என்ற சொல் ஜிவ்வென்று ரத்த ஓட்டத்தில் ஒரு சிலிர்ப்பை உண்டாக்கிற்று. அடுத்த கணமே தன்னை சிவா சுதாரித்துக் கொண்டான்.

    “பாபாக்கள் கிட்டேயிருந்தும் ஸ்வாமிஜிகள் கிட்டேயிருந்தும் ஒனக்கு இன்னும் விடுதலை கிடைக்கலியா?”
    “பாபாவுக்கு பந்தமில்லை. அவர் கடிதம் எழுதவில்லை. ஒரு ஜெர்மன் நண்பன் எழுதியிருந்தான்.”

    “கைலாசத்துக்குப் போறது அவர் பிஸினஸ். அங்கே ஒனக்கு என்ன பிஸினஸ்?”
    “ஒனக்குண்ணு சொல்லாதே. நமக்குண்ணு சொல்லு”
    “ஆல்ரைட், நமக்கு என்ன பிஸினஸ்.”
    “ஒருவேளை அவர் திரும்பாமல் போயிடலாம்.”

    “கடவுள் சித்தம். நான் என்ன பண்ண முடியும்? போய்த் தடுக்கலாம்கறியா?”
    “முட்டாள்! கடைசியாக.. ஐம் ஸாரி… வழியனுப்புவதற்கு ஒருமுறை போய்ட்டு வருவோம். நீ அவர் மகன்.”
    “அது பழைய கதை! மகான்களுக்கு மகன்கள் இல்லை.”
    “மகன்களுக்கு தந்தை உண்டு.”

    தந்தைக்கும் மகனுக்குமிடையே இல்லாத உறவுக்கு, பொருளிழந்து போன பந்தத்திற்கு வெற்றிவேல் பாலம் போடுவது இது இரண்டாவது முறை. இதில் என்ன இவனுக்கு இப்படி ஒரு சிரத்தை?
    “வெற்றிவேல்…” என்று தட்டிய முட்டையை நிறுத்தி அவனை விளித்தான் சிவா.

    “ஒனக்கு ஏண்டா இந்த வீண் வேலை?என்ன கண்டுட்டே அந்த பாபா ஓம்கார்நாத்கிட்டே?”
    “விடுதலை. அவர் அதோ அந்தப் பறவை மாதிரி… இப்ப பறந்தது பாரு அந்த திக்கு மாதிரி விடுதலையடைந்தவர். ஹி லிபரேடட் மீ… அவர் என்னை விடுதலை செய்தார்.”

    “எதிலிருந்து?”
    “என் சிறையிலிருந்து…”
    “இந்தப் பரிபாஷை வேண்டாம்… பீ பிளெய்ன்…”

    “என்னோட அகந்தையிலிருந்து… என் அட்வென் சரிஸத்திலிருந்து…என் வேட்கைகளிலிருந்து”
    “நீ விடுதலை ஆயிட்டதா நெனைக்கிறியா?”
    “எஸ்… பெருமளவு”
    “மீதிக் கொஞ்சம் இருக்கு… இல்லையா?”
    “ஆமாம்”

    “மை டியர் வெற்றி… இது ஒரு கற்பனை…உன் விடுதலையும் கற்பனை…உன் தளைகளும் கற்பனை. நீ இந்த வெளிநாட்டுப் பேர் வழிகளோடே பழகிப் பழகி அவர்கள் மாதிரி கற்பனையிலேயே காணாமற் போய் கற்பனையிலேயே ஒன்னை மறுபடியும் கண்டுபிடிச்சுகிட்டிருக்கே. அதுக்கு ஒன்னை நீயே கட்டுப்பாடு பண்ணிகிட்டிருக்கே. நீ இழந்திருப்பது உன் சுதந்திரம்.”

    புத்திக் கூர்மையோடு சிவா அவனை மடக்குவதைப் புரிந்து கொண்ட மாதிரி வெற்றிவேல் சிரித்தான். சிவா மேலும் தொடர்ந்தான்.

    “விடுதலைக்கு விலை சுதந்திரம் அல்ல”
    “நீ ‘இன்டெலச்சுவல்’ மாதிரி பேசறே. நான் ஸாலிடா இருக்கேன்.”
    சூப் கொதிக்கும் ஓசை கேட்டது.

    “சிவா…நான் விடுபட்டது எதிலிருந்துண்ணு எனக்கு தெளிவாத் தெரியும். அந்த முட்டையிலேருந்து நீ வெளியே எடுத்த கரு மாதிரி எனக்குத் தெரியும். என் முட்டை ஓடு நொறுங்கியது என் காதில் விழுந்தது. டோன்ட் டாக் லைக் எ ப்ளடி மெடீரியலிஸ்ட்”
    சிவா சட்டென்று அவனைத் திரும்பிப் பார்த்தான்.

    வெற்றிவேல் கோபிக்கவில்லை. கண்கள் பளபளக்க அவனைக் கூர்மையாக, பொறுமையாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.

    “ஆல் ரைட்.. சூப் தயாராயிருக்கு. சாப்பிடுவோம் அப்பறமா பேசலாம்.”
    வெற்றிவேலுக்காகத் தயாரித்த ஆம்லெட்டைத் தட்டில் போட்டுக் கொண்டு மேஜைக்கு வந்தான் சிவா.

    தொடரும்

    Share
  • ஐந்து கை ராந்தல் (21)

    வையவன்

    மனிதர்கள்!

    ஆண்டாண்டு காலத்துக்குத் தாம் வாழப் போகிறோம் என்பதில் ஒவ்வொருவருக்கும் என்ன நிச்சயம்! எவ்வளவு நம்பிக்கை!

    சாலையிலும் வீதியிலும் மரணம் அவர்களைச் சந்திக்கிறது.
    ஹலோ சொல்லுகிறது. ஞாபகம் இருக்கிறதா என்று நமுட்டுச் சிரிப்பு சிரிக்கிறது. கடன் கொடுத்துவிட்டு வசூல் செய்யும் தமிழ் சினிமாப் பட்டாணியன் போல் மிரட்டுகிறது. விபத்துக்களின் கோரைப் பற்கள் இளிக்கின்றன.

    ஆனால் மனிதர்கள்?
    கொஞ்சம் வெலவெலக்கிறார்கள். வியர்க்கிறார்கள். நான் அங்கிருந்தால்… என்று கற்பனை செய்கிறார்கள்.

    இறந்து போனவர்களிடம் தங்கள் இடம் மாற்றிப் பார்க்கிறார்கள். அப்பாடா, நல்லவேளை. அது நானில்லை என்று நிம்மதி அடைகிறார்கள். நகர்கிறார்கள்.

    மீண்டும் மீண்டும் மரணம் எதிர்கொள்கிறது. நம்பிக்கைகள் கொஞ்சம் நெளிந்து கொடுக்கின்றன. ஆனாலும் என்ன? அவை மீண்டு விடுகின்றன.

    எல்லாம் ஒரு நாளைக்கு மாறிவிடும். இருந்த சுவடு தெரியாமல் அழிந்து விடும். அது அவர்களுக்கும் தெரியும்.

    அந்த உண்மையை அவர்களுக்குச் சந்திக்கப் பிரியமில்லை. கூடுமானவரை உண்மையைத் தள்ளிப் போடவே அவர்கள் விரும்புகிறார்கள்.

    தன்நலம்… தன் சுகம்… தன் பாதுகாப்பு… தன் எச்சரிக்கை… தான்… தான்… தான். அதற்கு எங்கே குந்தகம் வந்தாலும் அவர்களுக்கு எரிச்சல் வருகிறது. வேறு வேலை இருப்பது, அவசரம் காத்திருப்பது கவனம் வருகிறது.

    சாலையிலே ஒரு டூரிஸ்டு பஸ் கவிழ்ந்து விழுந்திருக்கிறது.
    நொறுங்கிய கண்ணாடிச் சிதறல்; இரத்தம் குட்டையாய்த் தேங்கியிருக்கிறது. முனகல்கள்.. ஊசலாடும் உயிர்களின் ஓலம்.

    சாலையில் இரவு நேர லாங் ரூட் பஸ்கள் போகின்றன. நிற்பதில்லை லாரிகள் போகின்றன. நிற்பதில்லை. கார்கள் பறக்கின்றன. நிற்பதில்லை.

    தான், தன் பாதுகாப்பு, தன் அவசரம், கடிகார முட்களில் கட்டப்பட்டு விட்ட யந்திர வாழ்க்கையில் ஓடு ஓடு என்று நியமிக்கப்பட்ட ஒரு கற்பித ஓட்டப் பந்தயத்திற்கு குந்தகம் வந்து விடும்.

    போலீஸ்… வழக்கு… கோர்ட்… சம்மன்..
    “வண்டியை விடுப்பா”
    ஓரிரண்டு வாகனங்கள் நிற்கின்றன. வேடிக்கை பார்க்க. பிரயாணிகளுக்கும் ‘தான்’ ஞாபகம் வந்து விடுகிறது.

    “அடுத்த ஊர் போலீஸ் ஸ்டேஷன்லே போய் ரிப்போர்ட் பண்ணுவோம். வண்டியை எடுப்பா.”
    ‘விபத்தில் சில மனித உயிர்கள் போயிருக்கின்றன. போய்க் கொண்டிருக்கின்றன. ப்சப்… புவர் சாப்ஸ்… போலீஸ் இருக்கிறது. வந்து பார்த்துக் கொள்ளும்.’

    ‘அது போலீஸோட கடமை புவர் சாப்ஸ்… வர வர டூரிஸ்ட் வண்டிக்காரனுங்க ராத்திரி தூக்கமில்லாம தண்ணி அடிச்சிட்டு வண்டியை விடறானுங்க.’

    எல்லாருமே இப்படித்தானா?

    இதயம்… இரக்கம்… உணர்ச்சிகள்… எல்லாவற்றையும் எலக்ட்ரானிக் கடிகார எண்கள் சாப்பிட்டு விட ஒரு நிமிஷத்தை விட்டு அடுத்த நிமிஷத்துக்கு ஓடுவதிலேயே மனித நாகரீகம் கண்ணும் கருத்துமாக இருக்கிறதா?

    இல்லை.
    சாலையில் ஒரு ஜீப் வருகிறது.
    அதில் ஓர் ஆணும் பெண்ணும். அவர்கள் வண்டியை நிறுத்துகிறார்கள். ரத்தக் குட்டையை, மரண ஓலங்களை, சிதைந்த அங்கங்களைப் பற்றிப் பயமில்லாமல் பஸ்ஸில் விழுந்திருப்பவர்களை ஒவ்வொருவராக இழுத்து வெளியேற்றுகிறார்கள்.

    குழந்தைகளை, கிழவிகளை வெலவெலத்து உயிருடன் இருக்கும்போதே செத்து விட்டதாக விழுந்திருக்கும் நபர்களை இறக்குகிறார்கள்.

    ஏழெட்டு பிணங்கள் விழுந்துவிட்டன. முன் ஸீட் பக்கமாக உட்கார்ந்திருந்தவர்கள் பத்துப் பதினைந்து… இல்லை இருபது பேருக்கு மேல் பலமான அடி.

    “பிரீதா… நீ இங்கே தனியா நிக்கிறியா… நான் ஏழெட்டுப் பேரை அள்ளிப் போட்டுக்கிட்டுப் போயி கேஷûவாலிட்டிலே அட்மிட் பண்ணிட்டு வர்றேன்!”
    “ஓ… எஸ்”
    “வண்டி ஏதாவது வந்தா நிறுத்து… கை காட்டு… விஷயத்தைச் சொல்லு! ஏ.பி. பார்டர் தானே இது… ஐ வில் கோ டு சித்தூர் ஹாஸ்பிடல்.”
    வண்டியில் அவள் அவன் காயமடைந்த உடல்களை ஏற்றுவதற்கு உதவி செய்கிறாள். வண்டி கிளம்புகிறது.

    அவள் மட்டும் தனியாக ஒரு தீரமான உள்ளத்தோடு அடிபட்டவர்களுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டு நிற்கிறாள்.

    முக்கால் மணி நேரத்தில் சாலையில் சென்ற பல லாரிகளை நிறுத்தும் முயற்சியில் தோற்றுப் போய் அவள் காத்திருக்கிறாள்.

    இரண்டாவது ‘சிங்கிள்’ அடிக்க அவன் ஜீப்போடு வருகிறான்.
    “ப்ளாகார்ட்ஸ்… ஹாஸ்பிடலா நடத்தறானுங்க. நோபடி கேர்ஸ்… டூட்டி முடிஞ்சு போச்சு! டாக்டர் பர்மிஷன் வேணும்… இல்லாத ரூல்ஸ் பேசறானுங்க. போலீஸ் வான் எடுத்துட்டு வாங்கய்யான்னா கமிஷனர் கிட்டே போன்லே பரிமிஷன் வாங்கிட்டு வர்றோம்னு சொல்றாணுங்க” அவன் வெறுப்போடு திட்டித் தீர்க்கிறான்.

    “டோன்ட் வேஸ்ட் டைம்… இந்த சிங்கிள்ளே நானும் வர்றேன். மனுஷங்களை சபிச்சு திட்டி ஒரு புண்ணியமுமில்லே வேஸ்ட் ஆஃப் டைம்… வேஸ்ட் ஆஃப் எனர்ஜி”
    ஹாஸ்பிடலுக்குப் போய் ‘பிரயாணிகளை’ இறக்கி விட்டு விட்டு நர்ஸுகளைச் சந்தித்து, டாக்டரைச் சந்தித்து என்னமோ படபடவென்று பேசுகிறாள்.

    அவள் செம்மஞ்சள் நிறத்தில் கவர்ச்சியாக இருக்கிறாள். அவள் முகத்தில் சொட்டுச் சொட்டாகக் குறைந்து கொண்டு போகும் அந்த ‘ஸோ-கால்ட்’ மனிதாபிமானம் ஜுவாலை வீசுகிறது. அதன் உண்மை தகிக்கிறது.

    அவ்வளவு அழகான, இளமையான, கவர்ச்சியான நர்ஸாக இருக்கின்ற ஒரு பெண் பேசும்போது தான் மனிதாபிமானம் என்ற சரக்குக்கு ஒரு விலை மதிப்பு வருகிறது.

    ஒரு பட்டாளம் டாக்டர்கள் நர்ஸுகள் ஓடி வருகிறார்கள்… ஸ்ட்ரெச்சர்கள்… ‘பெட்’கள்.
    “இன்னும் ஒரு சிங்கிள் அடிச்சுடலாமா தாமு!”

    “ஓ…எஸ்”
    “பாவம், யூ அர் வெரி டயர்ட்”
    “இல்லே… ஐம் வெரி ஹாப்பி… நமக்கு ஒரு சில நிமிஷமாவது மனுஷனா வாழற ஒரு சான்ஸ் கிடைச்சுதே!”
    அதுதான் அவன் பேசிய கடைசிப் பேச்சு.

    மூன்றாவது சிங்கிளில் எக்கச் சக்கமாக சிக்கிக் கொண்டிருந்த ஒரு பிணத்தை இழுத்து வெளியேற்றும் போது நாலைந்து பேர் ஏறி தங்கள் உடமைகளை அவசரமாக இழுத்து வெளியேற்றுகிற கலவரத்தில், விழுகிற நிலைக்கு வந்திருந்த ஓர் இரும்புப் பெட்டி நச்சென்று அவன் தலையைக் குறிப்பார்த்த மாதிரி வந்து விழுந்தது.

    தாமுவையும் கேஷûவாலிட்டிக்குக் கொண்டு போகிறார்கள். காப்பாற்ற வந்தவனுக்கு விபத்து நேர்ந்த பரிதாபம் எல்லோரையும் நெகிழ வைக்கிறது.

    “ஸ்கல் ஃப்ராக்சர். இங்கே கருவிகள் கிடையாது. வேறே வசதிகள் கிடையாது. சி.எம்.சிக்கு எடுத்துட்டு போயிடுங்க. நிலைமை சீரியஸ்” என்று சித்தூர் கை விரிக்கிறது.

    ஜீப்பில் இரண்டு பேர் துணையுடன் அவனை சி.எம்.சிக்குக் கொண்டு வருகிறார்கள்.
    அடுத்த இருபத்தி நாலு மணி நேரம்.

    அவளுக்கு நம்பிக்கையும் பயனும் அந்தரத்தில் தொங்கும் கம்பி ரயில் பயணமாக மாறி மாறி வருகின்றன.

    உலகின் எந்த மூலையில், எந்த சிகரத்தில், எந்த சமுத்திரத்தில், எந்தக் கட்டிடத்தில், உயிரை மண்ணோடு கட்டி வைக்கிற மஹாசக்தி இருக்கிறது?
    அவள் எல்லாவற்றையும் வேண்டுகிறாள்.

    அவன் அவளைக் காதலித்ததில்லை.
    அவளும் அவனைக் காதலித்ததில்லை.
    இரவுகளிலும் பகல்களிலும் ஒருவர் உடம்பும் உள்ளமும் மற்றவருக்குத் தேவைப்பட்டன.
    இதைத் தவிர வேறு பந்தம் இல்லை.

    எனினும் அவள் பெண். கற் பாறையை ஊடுருவி உயிரின் வேர்களை பந்தம் கொண்டாட விடும் பூமி.
    வானத்தில் பறந்துவிடத் துடிக்கும் உயிர்களை தன் கருணையின் ஈரத்தில், கனிவின் அமிர்தத்தில் கட்டிப் போடும் ஆகர்ஷணம்.

    அவளுக்கு இறந்த காலம் ஒன்று இருந்தது. நேசித்தவை எல்லாம் – பிரியமானவை எல்லாம் – கையிலிருந்து பறிக்கப்பட்ட சபிக்கப்பட்டதொர இறந்த காலம்.

    அவன் எதிர்காலம் ஒன்றிற்கு வாக்குறுதி அளித்திருந்தான். அவள் அந்த இறந்த காலங்களின் குவிந்த சாம்பல் மேட்டின் முன் மண்டியிட்டாள்.

    ‘எனிக்கு இத்ர மதி. பகவானே ரக்ஷிக்கு ரக்ஷிக்கு’ பிரார்த்தித்தாள் உருகினாள்.

    ஆனால் பிரார்த்தனைகளின் சிறகுகளுக்கு உயரமான எல்லை விரைவில் தட்டுப்படுவதில்லை.
    அவை முன்னும் பின்னுமற்ற, முடிவும் தொடக்கமுமற்ற ஆகாயத்தில் அனாதைகளாகப் பறக்கின்றன.
    சில சமயம் தொடுவானம் ஆயிரமாயிரம் மைல்களுக்கு அப்புறம் வெறிச்சிட்டிருக்கிறது.

    நீலமாய்… சாம்பலாய்… நித்தியத்துவம் என்ற நிற உருவமற்ற சூன்யமாய், பிரார்த்தனைகள் பறந்து கொண்டே செல்கின்றன.

    சிவா வரும்போது எல்லாம் முடிந்து விட்டிருந்தது. ‘மார்ச்சுவரி’யில் பாண்டேஜ் போடப்பட்டு செலுத்த வேண்டிய பில் கட்டணத்தை எதிர்பார்த்து தாமுவின் உடம்பு டெலிவரி செய்யப்படுவதற்காகக் காத்திருந்தது.

    அவன் போன பத்து நிமிஷத்தில் மதனபள்ளியிலிருந்து தர்மராஜ ரெட்டிகாருவின் உறவினர்கள் ஒரு மெடாடரில் வந்து இறங்கினர்.

    பில் கட்டப்பட்டதும் ஸ்ட்ரெச்சரில் தாமுவின் உடல் லேசாகத் தூக்கித் தூக்கிப் போடப்பட வந்து சேர்ந்தது.
    இதுதான் தாமு.

    விசாலமான இருதயம். வைராக்கியம், நேசம், தொழில் திறமை.. தான் தான் என்று சுழலும் சுயநலச் சக்கர அச்சிலிருந்து சந்தர்ப்பம் வரும்போது துண்டித்துப் பிரிந்து வரும் துணிவு.

    மிச்சம் எல்லாம் போர்வை போர்த்தப்பட்ட இந்த உடம்புதான். மீதியெல்லாம் இவ்வளவு தான்.
    சிவா நொறுங்கிப் போனான்.

    பிரீதா சில்லு சில்லாகச் சிதறியவள் போல் நின்றாள். அவள் சிவாவைப் பார்த்து தலையசைத்தாள். அழவில்லை. கதறவில்லை.

    அவையெல்லாம் நேர்ந்துள்ள இழப்பின் முன்னே கொச்சையானவை. அந்த வெளியீடுகளில் நேர்ந்த நஷ்டத்தின் துக்கத்தை செலவிட முடியாது.

    மதனபள்ளியில் கட்டிலின் மீது படுத்துக் கொண்டே தாமுவின் தந்தை அவன் தனக்கு செய்ய வேண்டிய ஈமச் சடங்குகளை பிறர் அவனுக்குச் செய்வதைப் பார்த்தார்.

    செய்தி வேட்டைக்காரர்கள், புகைப்படம் பிடித்தார்கள். மறுநாள் கொட்டை எழுத்துக்களில் இயந்திரங்கள், இயந்திர மயமாய்விட்ட வாழ்வில் மனிதர்கள் மிச்சமிருக்கும் அதிசயத்தை அச்சடித்தன.
    மயானத்திற்கு கூட்டங் கூட்டமாய் மனிதர்கள் வந்தார்கள். தாமுவின் அந்த அந்தஸ்திற்காக வந்தார்கள் சிலர்.

    மனிதன் ஒருவன் மாண்ட வருத்தத்தைப் பகிர்ந்து கொண்டோர் பலர்.
    செங்குட்டுவன் வந்தான்.

    ராயப்பேட்டையிலிருந்து மலர் வளையங்கள் வந்தன.
    புண்ணியகோட்டி வந்தார். திஷ்யா வந்தாள்.
    தந்திகள் வந்தன.
    தபால்கள் வந்தன.

    சிவாவுக்கு சுயநிலை மீள மூன்று நாளாயிற்று. கரை தெரியாமல் இருண்டு விட்ட சமுத்திரத்தில் மரணம் என்ற சூறாவளியின் ஆர்ப்பரிப்பும், உணர்ச்சிகள் சுழன்றடிக்கும் ஊர்த்துவ வேகமும் மட்டும் அவனுக்கு நினைவிருந்தன.

    எப்படிப் போயின அந்த மூன்று நாட்கள்!
    பிரீதா எங்கே இருந்தாள்? என்னவானாள்?
    வந்தவர்கள் எப்படிப் போனார்கள்?
    போனவர்கள் எங்கே மறைந்தார்கள்? எதையும் அவனால் சொல்ல முடியவில்லை.

    அந்த மூன்று நாட்கள் அவன் எங்கே சாப்பிட்டான்? எவ்வாறு விழித்தான்? எதுவும் திருப்பிச் சொல்ல முடியாத அனிச்சை செயல்கள் மாதிரி நடந்தன.

    நாலாவது நாள் கட்டிலில் படுத்திருந்த தர்மராஜ ரெட்டிகாரு முன்னிலையில் விவகாரம் பேசினார்கள். அன்று சிவா சிவாவானான்.

    “ராயப்பேட்டா ஒர்க்ஷாப் கணக்கு வழக்கெல்லாம் ஒனக்கு நல்லாத் தெரியுமா?” தாமுவின் மாமா கேட்டார்.

    “எல்லாம் கரெக்டா எழுதி அப்டுடேட்டா வச்சிருக்கேன்…”
    “ஒர்க்ஷாப்பை மறுபடியும் நடத்தணுமா மாமா?” அவர் கட்டிலில் படுத்திருந்த தர்மராஜ ரெட்டிகாருவிடம் அபிப்பிராயம் கேட்டார் தெலுங்கில்.

    கட்டிலின் மீது ஒரு மார்பு இரண்டு மூன்ஙறு முறை குலுங்கிற்று. ஒரு மேல் துண்டு வாய் ஓசை வெளிவராமல் தான் வாங்கிக் கொண்டது.

    “இப்புடு தேனிகிஅதந்தா அடுகுதாரு?”
    அதை இப்போது கேட்க வேண்டாம் என்று யாரோ தடுத்தார்கள்.
    தர்மராஜ ரெட்டிகாரு ‘வேண்டாம்’ என்று கையசைத்தார்.

    ‘வொர்க்ஷாப் ஒத்து” என்று அவர் குழறிய குரலில் சொன்னதை எவரோ தெளிவாகத் திருத்திச் சொன்னார்.

    “ஒர்க்ஷாப்பை மூடிடலாம்னு சொல்றார்.”
    ‘இல்லை. ஒர்க்ஷாப் நடக்க வேண்டும்! அது தாமுவின் நினைவுச் சின்னம். வெறுங்கையுடன் சென்னைக்கு வந்த இளைஞன் ஒருவனின் வெற்றிச் சின்னம். தயவு செய்து அதை மூடாதீர்கள்.’
    சிவா எழுந்து கத்தப் போனான். ஏதோ ஒரு கை அவனைப் பிடித்தது. பிரீதா.

    அவள் அவன் மனசிலிருந்ததைப் புரிந்து கொண்டவள் போன்று அவனை ஒரு கணம் உற்றுப் பார்த்தாள். பின்பு மெதுவாக அதைத் தடுப்பது போல் தலையாட்டினாள்.

    தான் அதில் மானேஜர் என்பது அப்புறம் சிவாவுக்கு ஞாபகம் வந்தது. எழுந்து பேசினால் தன் உத்தியோகம் போய்விடும் என்று சொல்வதாக எடுத்துக் கொள்வார்கள்.

    தாமு போனபின் நினைவுச் சின்னங்களைப் பராமரிக்கிற அக்கறை அவர்களுக்கு இருக்க வேண்டிய அவசியம் என்ன?
    தன் தாமு வேறு.
    அவர்கள் தாமு வேறு.

    அவர்கள் தங்கள் தாமுவின் சொத்தைக் குறித்து விவகாரம் பேசுகிறார்கள். அதில் தலையிடுவதற்கு தனக்கோ பிரீதாவுக்கோ எவ்வித உரிமையுமில்லை.

    அங்கே விவகாரம் பேசப்பட்ட பதினெட்டாவது நாளில் தாமு நிறுவிய ஒர்க்ஷாப் அதன் குட்வெல்லோடும் ஸ்தாவர ஜங்கம சொத்துக்களோடும் இருபது லட்ச ரூபாய்க்குக் கை மாறியது.

    சிவாவின் கணக்கு வழக்குகள் அப்பழுக்கின்றி இருந்ததை மீடியேட்டராக இருந்த ஆடிட்டர் எல்லார் முன்னிலையிலும் பாராட்டினார்.

    அவனது மாதச் சம்பளத்தோடு ஒரு தொகை சேர்த்துக் கணக்கிட்டு கவரில் வைத்து அவனிடம் நீட்டினார்கள்.

    ஒர்க்ஷாப் நடுவில் சமீபத்தில் பிரேம் செய்து, பெரிதாக மாலை போட்டிருந்த தாமுவின் போட்டோவை சிவா திரும்பிப் பார்த்தான்.

    ‘தட்ஸ் ஆல் சிவா..தாங்க்யூ. தாங்க்யூ ஃபார் எவ்ரிதிங்.’

    போட்டோவில் திடமாக தீர்க்கமாக மரணத்தால் அழிக்க முடியாத உயிர்ச் சக்தியின் நினைவு போல் தாமு சிரித்தான்.

    தொடரும்

    Share
  • ஐந்து கை ராந்தல் (20)

    வையவன்

     

    “காரணீஸ்வரன் கோயில் தெருவுக்குப் போயிருக்கியா சிவா?”
    ஆஸ்பத்திரியில் புண்ணியகோட்டியைப் பார்த்து விட்டு ஒர்க்ஷாப் தபால் ஒன்றைச் சேர்க்க போஸ்டாபீஸுக்குப் போகும் போது திஷ்யா அவனைக் கேட்டாள்.
    தபாலைப் பெட்டியில் போட்டுக் கொண்டே அவன் பதிலளித்தான். “போயிருக்கேன்… என்ன விஷயம்?” என்றான்.
    அவளிடமிருந்து பதில் இல்லை. சிவா திரும்பினான்.
    அவள் நாக்கைக் கடித்துக் கொண்டு ஏதோ தப்பாகச் சொல்லி விட்டவள் மாதிரி விழித்துக் கொண்டு நின்றாள்.
    “ஏன் என்ன ஆச்சு?”
    “ஐ ஆம் சாரி”
    “எதுக்கு?”
    “ஒன்… அடச் சட்.. ஒங்களெ ஒருமையிலே பேர் வச்சுக் கூப்பிட்டுட்டேன்.”
    “இனிமே மரியாதை தரப் போறியோ.”
    அவள் முகம் அபூர்வமான நாணத்தால் மிளிர்ந்தது.
    “சரி.. ஒன் ஸாரியை ஏத்துக்கறேன்.. ஆனா திடீர்னு வாங்கோ போங்கோண்ணா எனக்கு அசிங்கமா இருக்கு.”
    “எனக்குக் கூட கஷ்டமாத்தான் இருக்கு”
    “அப்ப எதுக்கு கஷ்டப்படுத்திக்கறே?”
    “நாம கல்யாணம் பண்ணிக்கப் போறோமே!”
    “ஏய்… கிண்டல் பண்றியா?”
    அவள் பளிச்சென்று சிரித்தாள்.
    “என்ன இருந்தாலும் நீங்கள் கணவர்.”
    “இதானே வேணாம்!”
    அவள் முகம் மலர்ந்திருந்தது கூப்பிற்று.
    “என்ன திஷ்யா? திடீர்னு சேஞ்ச் ஆயிட்டே?”
    “ம் ம்…” என்று நினைவுகளில் புதைந்தவள் வெளிப்படுவது போல் விழித்தாள்.
    “என் ஃபிரண்டு ஒருத்திக்குக் கல்யாணம் இன்னிக்கு மாப்பிள்ளை அழைப்பு அந்த ஞாபகம்.”
    “அதான் காரணீஸ்வரன் கோயில் தெருவைக் கேட்டியா?”
    “ஆமாம்” அப்போதும் அவள் நினைவுச் சுமையிலிருந்து முழுக்க விடுபடவில்லை.
    “அங்கேதான் கல்யாணமா?”
    “ஆமாம்…”
    “போய்ட்டு வாயேன்.”
    “துணைக்கு? பிரேம் வரமாட்டேங்கறான்.”
    “நான் வரட்டுமா? அவள் தலையசைத்தாள்.”
    “என்ன அபாரமான ஐடியா… இவ்வளவு கலாட்டா நடந்திருக்கு. இப்ப உன் சிநேகிதி கல்யாணத்துக்கு நான் துணை வரணும்ங்கிறே!”
    “நீ தெரு முனையிலேயே நின்னுடு. உள்ளே வர வேண்டாம். நான் போய் அரை மணி நேரத்திலே திரும்பிடறேன்.”
    “அப்பா கிட்டே சொன்னியா?”
    “ம்ம்ம்.”
    “சரி பொறப்படு… நான் நாளைக்குக் காலையிலே திருப்பத்தூர் போகணும்… போனமா வந்தமாண்ணு தலையைக் காட்டிட்டு திரும்பிடு.”
    மைலாப்பூர் பீச் அருகில் அவர்கள் பஸ்ஸிலிருந்து இறங்கினர். காரணீஸ்வரன் கோவில் தெருவில் பந்தல் போட்டிருந்த ஒரு வீட்டுக்குச் சற்று முன்னே அவளிடமிருந்து விடைபெற்று தெருமுனைக்கு வந்து நின்றான் சிவா. சாலையை வேடிக்கை பார்த்தான்.
    சரியாக அரை மணி நேரத்தில் திஷ்யா வந்து விட்டாள்.
    “என்ன இவ்வளவு சீக்கிரம்?”
    “சொன்னது அரை மணி வார்த்தையைக் காப்பாத்தணுமோ இல்லியோ?”
    “என்ன சொன்னா ஒன் சினேகிதி?”
    “சிரிச்சா… பூரிச்சா… இருந்து நாளைக்குப் போகச் சொன்னா. ஒரு கல்யாணப் பொண்ணு வேற என்ன சொல்லுவா?…” அவள் பெருமூச்சு.
    “என்ன திஷ்யா… ஒரு துயரம்!”
    “பெண்… பாரதப் பெண், வேறென்ன சொல்றது? திடீர்னு ஒரு வசந்தம் கலைஞ்சிடுது. பெரிய டாக்டராகப் போகிறேன்… ஸயன்டிஸ்டாகப் போறேன்… லீடராகப் போகிறேன்னா… நாளைக்கு கல்யாணம் பண்ணிக்கப் போறா.”
    சற்று நிறுத்தி திஷ்யா மெலிதாகப் பெருமூச்செறிந்தாள்.
    “அடுத்த வருஷம் குழந்தை… அப்புறம் இன்னொண்ணு. அதுக்கப்புறம் குழந்தைக்கு ஜுரம். சமையல் ஆகலே… அவருக்கு சீதனம் கம்மிண்ணு கோபம்… ஓடி ஓடி அவள் சக்கரம் சுத்தும். கெழவியாவா…”
    சிவாவுக்கு சுரீர் சுரீரென்று ஊசியால் குத்துவது போலிருந்தது.
    “நிறுத்து… இதென்ன இப்படி ஒப்பாரி?”
    “எனக்கு ஒன்னோட பேசணும்! ரொம்ப ரொம்பப் பேசணும்.”
    “பேசிக்கிட்டுதானே இருக்கோம்.”
    “இல்லே தனியா!” அவள் குரலில் ஆழங் காண முடியாத அமைதி இருந்தது.”
    “மைலாப்பூர் பீச்சுக்குப் போவோமா?”
    “சீச்சீ… வீட்டுக்குப் போவோம்”
    “காதலர்கள்னா பீச்சுக்குப் போகணும்னு ஒரு சம்பிரதாயம் உண்டு. டோன்ட் ஃபோர்கோ இட்”
    “ஸ்டாப் ஜோகிங் ப்ளீஸ்” அவள் நிஜமாகவே வருத்தத்தோடு சொன்னாள்.
    “சரி…கட்டாயம் பீச்சுக்குப் போவோம். வீட்டில் ஒரு பட்டாளம் இருக்கு. நமக்கு எங்கே பேச டயம் கெடைக்கப் போவுது.”
    அவள் சம்மதித்தாள்.
    நிரந்தரமாக அலைகள் சந்திக்கும் கடற்கரையில் இன்றோ நாளையோ கட்டுமரங்களில் நனைந்து விட்டு வரக் காத்திருக்கும் கயிற்றுக் கருணைகளின் ஆளுயர மறைவில் அவர்கள் அமர்ந்திருந்தனர்.
    கடலும் காத்திருந்தது – கறுத்து வரும் நீலப்பரப்பின் ஒரு முகூர்த்த வெளிச்சத்திற்கு.
    “என்ன பேசப் போறே?”
    திஷ்யா அலைகளின் சிலிர்த்தெழும் வெண் பிடரிகளில் லயித்தாள். ஏதோ ஓர் அமைதி அவளுக்குத் தேவைப்படுவது போல் சிவா உணர்ந்தான்.மௌனமானான்.
    அங்கங்கே பேச்சுக் குரல்கள் காற்றில் சருகுகளாக மிதந்து வந்தன. புதிய காதலர்களும் பழைய காதலர்களும் கடந்து சென்றனர். தழுவித் தழுவி முத்தமிட்டனர்.
    ஒருவர் மடியில் இன்னொருவர் புதைந்தனர். சிரித்தனர். எல்லாம் அக்கரை ஒலிகள் போன்று அகன்றன.
    திஷ்யாவும் சிவாவும் மௌனமாய், ஒலிகள் யாவும் மெதுவாய் அமிழும் நிசப்தம் ஒன்றின் சந்நிதியில் நிற்பது போல் அமர்ந்திருந்தனர்.
    “சிவா”
    “சொல்லு”
    “என்ன உன் வாழ்க்கையின் நோக்கம்?”
    சிவாவுக்குத் தெரியவில்லை.
    “தெரியவே இல்லே!”
    “ஆமா”
    “டூ யூ லவ் மீ?”
    “எஸ்”
    “கல்யாணம் பண்ணிக்கற அளவு நீ ஸீரியஸா என்னை நேசிக்கிறியா?”
    “எஸ்”
    திஷ்யா அவனைப் பார்த்துச் சிரித்தாள். இருளில் முகத்தின் உணர்ச்சிகள் தெரியவில்லை. பல்லின் ஒளி மட்டும் தெரிந்தது.
    “நீ பொய் சொல்றே… அல்லது உன்னை முழுக்கத் தெரிஞ்சுக்காம சொல்றே!”
    “என்ன திடீர்னு ஒரு மாற்றம் உங்கிட்டே?”
    “இல்லே… அப்பாகிட்டே கடைசியிலே சினிமாவிலே நடிக்கறதா இருந்தா கூட சரிப்பான்னு சொன்னேனே! அது ஏண்ணு நீ என்னைக் கேட்டியா?”
    “அதுக்கு என்ன இப்போ! நீ மனசு ஒடிஞ்சு போன மூட்லே அதைச் சொல்லியிருக்கலாம்.”
    நிலா மெதுவாக எழுந்தது.
    “உன்னை ஏன் நான் இதிலே இன்வால்வ் பண்ணணும். நீ ஒரு ரைட்டர். எவ்வளவோ சாதிக்க வேண்டியிருக்கு. இந்த மனுஷாளை.. இந்த மண்ணை உன் எழுத்திலே ஏதாவது கொஞ்சம் புரட்டி எடுக்க வேண்டியிருக்கு.” சற்று நிறுத்தித் தூரவரும் ஓர் ஆண் அலையைப் பார்த்தாள். “என் வீட்டிலே ஒரு பட்டாளம் இருக்கு. வறுமை இருக்கு. பிரச்னை இருக்கு. எல்லாத்தையும் நீ ஏன் தலையிலே சொமந்துக்கறே?”
    “என்னை டெஸ்ட் பண்றியா?”
    “இல்லே, என்னையே டெஸ்ட் பண்ணிக்கறேன். நம்ம சினேகிதத்திலே உனக்கும் எனக்கும் மத்தியிலே அந்த ஸோ கால்ட் அர்ப்பணம் இல்லே. சூழ்நிலைகளின் நிர்ப்பந்தம் தான் இருக்கு”
    சிவாவுக்கு அவளது அறிவின் தெளிந்த கூர்மை அவனை வகிர்ந்து வரையறை செய்வது போலிருந்தது.
    “இப்படி ஆபரேஷன் பண்ணினா எல்லா உறவுகளும் ஒரு கோணத்தில் வெற்றுக் கோடுகளாயிடும்.”
    அவள் அவனது விமர்சனத்தைப் பொருட்படுத்தாதவள் போல் “ம்ம்ஹ்ஹ்ம்மா” என்று தனக்குள் சிரித்தாள். அது அவன் செவியில் விழுந்தது.
    “சிவா, எல்லா உறவும் வேறே..இது வேறே! ஒனக்குத் தர எங்கிட்டே இந்த அழகும் என் பெண்மையும் இருக்கு. அது மட்டும் இருந்தா பரிபூரண சந்தோஷம் கெடைச்சுடும். ஆனா கூடவே ஒரு சொமை இருக்கு. எங்க அப்பா… கூட நாலு ஜீவன்கள். இதெல்லாம் என் சொமை. நீயும் நானும் அதோ அந்தக் கப்பல்லே ஏறி கண் காணாத சீமைக்கு ஓடிட்டாலும் கூட அந்த சொமை எனக்குள்ளே அழுத்திட்டே இருக்கும்!”
    சிவா அவள் என்ன விரும்புகிறாள் என்று மனசிற்குள் அலசினான்.
    “நீ கல்யாணத்துக்கு மானசீகமா தயாராயிட்டியா?” என்று திஷ்யா அவனைக் கேட்டாள்.
    “எதுக்குக் கேக்கறே?”
    “நான் தயாராகலே. எனக்குப் பிடிக்காத ஒரு ஏற்பாட்டிலிருந்து தப்பிச்சிக்க ஒன்னைப் பயன்படுத்திட்ட மாதிரி எனக்குத் தோணுது.
    இன்னும் விளக்கமாச் சொன்னா ஒன் அனுதாபத்தை எனக்கு சாதகமாக்கிக் கிட்ட மாதிரி இருக்கு.”
    அப்படியெல்லாம் அவன் சிந்தித்துப் பார்க்கவில்லை. ஆனால் இந்த திஷ்யா விவகாரத்தில் பிரீதா குறுக்கிட்டு தன்னை ஏதோ ஒரு போக்கிற்கு செதுக்கி உருவாக்கிய மாதிரி இப்போது தென்பட்டது.
    “இன்னொண்ணு சொல்லட்டுமா?”
    “சொல்லு”
    “ஒரு நாள் இல்லாட்டி இன்னொரு நாள் இந்தச் சுமை உனக்கு பளுவாகும். தவிர்க்க நெனைப்பே. அப்ப இந்த பிரியம் போயிடும். நீ என்னை வெறுப்பே.”
    “இதெல்லாம் கற்பனை…யூகம். ஏதோ ஒரு முடிவுக்கு நீ வந்துட்டே! அதைச் சொல்லத் தயங்கறே… இப்படி சாக்கு போக்கு சொல்றே.”
    சந்திர வெளிச்சம் தனது ஆசியை அவள் மீது வீசிற்று.
    அவள் இளமை… அதன் மனசைக் கிறக்கும் கவர்ச்சி… முத்தமிடத் தூண்டும் அவளது உதடுகளின் ஈரப் பளபளப்பு… மையெழுதிய விழிகளின் இமைகளின் துடிப்பு…
    இவற்றை மீறி திஷ்யாவிடம் அவனுக்கு ஒரு மரியாதை எழுந்தது. இவள் சிந்திக்கிறாள்.
    “இது கற்பனை இல்லே சிவா. எனக்கு கற்பனை பண்ணத் தெரியாது. நடைமுறை இதான். எதிர்த்த வீட்டிலே, பக்கத்து வீட்டிலே, அடுத்த தெருவிலே இதான் நடக்கிறது.”
    “நீ என்ன முடிவுக்கு வர்றே?”
    “முடிவுக்கு நான் மட்டும் வரமுடியாது. நீயும் சேர்ந்து. இன்னும் சொல்லப் போனா இதுவரைக்கும் உங்க அம்மாவின் அபிப்பிராயம் என்னண்ணு நாம ரெண்டு பேரும் தெரிஞ்சுக்கலே…”
    “திஷ்யா” என்று சிவா அவளது கவலைக்கு முற்றுப்புள்ளி வைப்பது போல அழைத்தான்.
    “ம்ம்ம்” என்று அவள் பதிலளித்தாள்.
    “என் மேலே உனக்கு நம்பிக்கை வரலே. நான் கடைசி வரைலே உறுதியா இருப்பேனாண்ணு சந்தேகப்படறே!”
    திஷ்யா காற்றில் நெகிழ்ந்து போய் படபடத்த முந்தானையை இழுத்துப் போர்த்திக் கொண்டாள். அவள் வளையல்களின் ஒலி இனிமையாய்க் கேட்டது.
    “சிவா… நான் முன்னாடியே சொன்னேன். நாம ரெண்டு பேரும் சேர்ந்து முடிவு பண்ணுவோம்ணு…”
    அவளை விட்டு சற்றுத் தள்ளி ஒதுங்கி உட்கார்ந்திருந்த சிவா வேறொன்று நினைத்தான்.
    அவர்கள் நட்பு தொட்டுப் பழகாதது. ஓர் உடல் இன்னோர் உடலுக்கு ஸ்பரிசங்களின் தந்தி மீட்டலில் வழங்கும் நம்பிக்கையை அறியாதது. வாய்ச் சொற்களின் வரம்புகளில் நின்று இடைவெளிகளை அழிக்காதது. ஒரு பெண் ஆணை நம்புவதற்கு அதுவும் தேவைப்படுமோ!
    அவன் அவள் அருகில் நெருங்கினான்.
    “சிவா… என்னது இது?” என்று அவள் துணுக்குற்றாள்.
    சிவா அவள் இடையில் வழுவழுத்த வெற்று மேனியின் மீது ஒரு கை கொடுத்துத் தழுவி வலிமையும் உறுதியும் வெளிப்பட அவளைத் தன் அருகே இழுத்தான்.
    ஒரு கணம் அதை எதிர்க்கப் போராடியவள் நெருக்கத்தில் வந்த அந்த முகத்தைப் பார்த்துச் செயலற்றுப் போனாள்.
    அவன் கண்களிலும் உதட்டிலும் உறுதி மின்னிற்று. உண்மை ஒளி வீசியது.
    சிவா அவளை உதட்டில் முத்தமிட்டான்.
    கிளர்ச்சி… வெறி… இவை சம்பந்தப்படாத வாக்குறுதி போன்று ஒரு வலிமை அந்த முத்தத்தில் வெளிப்பட்டது. பின்பு நெற்றியில்… மூடிக் கொண்ட கண்ணிமைகளில் அவன் ஆழ்ந்து முத்தமிட்டான்.
    அவள் கன்னத்தில் கழுத்தில் மோவாயில் மீண்டும் உதடுகளில் அவன் உதடுகள் சஞ்சரித்தன.
    அவள் தன்னைத் தழுவியிருந்த கையை உதறித் தன்னை விடுவித்துக் கொண்டாள்.
    அவன் எதிர்பார்த்த மாதிரியே ஓர் ஆணின் காக்கும் கரத்தின் வலிமையை அவள் உணர்ந்தாள்.
    “போதும்” என்று மூச்சுத் திணறிக் கொண்டே சொல்லி நகர்ந்து உட்கார்ந்தாள்.
    சிறிது நேரம் இந்த ஆக்கிரமிப்பால் அவள் பேசும் சக்தியிழந்தாள். அவன் உணர்ச்சிவசப் படாமல் தூரத்திலேயே உட்கார்ந்திருந்தான்.
    “சிவா…” அவள் குரல் கலங்கியிருந்தது.
    “ம்ம்ம்…”
    அவள் தொண்டையைக் கனைத்துக் கொண்டாள்.
    “இப்ப நம்ம கல்யாணத்துக்கு அவசரமில்லே.”
    “……..”
    “காத்திருப்போம்”
    “எதுவரை?”
    “எதுவரை முடியுமோ அது வரை.”
    “எதுக்கு?”
    “நம்மை நாமே உறுதியாக்கிக்கிறதுக்கு.”
    அவன் கையை நீட்டினான்.
    ஏதோ ஓர் ஒப்பந்தத்துக்கு நீட்டுவது போல அவள் தன் கையை அதன் மீது வைத்தாள்.
    கடற் காற்றில் சில்லென்றிருந்த அந்தக் கை அவன் ஏந்திய சில நிமிஷங்களில் வெது வெதுப்பாயிற்று.
    “புறப்படு, போவோம்” என்று அந்தக் கையைப் பற்றி அவளைத் தூக்கினான் சிவா.

    தொடரும்

    Share
  • ஐந்து கை ராந்தல் (19)

    வையவன்

    ராயப்பேட்டை ஹாஸ்பிடல் கேட்டை விட்டு சிவா இறங்கினான். சாலையில் விளக்குகள் ஒன்றிரண்டு எரியாததால் இருள் அங்கங்கே தேங்கியிருந்தது.சென்னை இன்னும் உறங்கவில்லை.

    அவ்வப்போது சாலையில் சென்ற கார்களும் லாரிகளும் அவனுக்கு அதை அறிவித்தன.
    பால் வாங்கி வருவதற்காகக் கொண்டு வந்த பிளாஸ்க்கின் பிளாஸ்டிக் பெல்டை எடுத்து தோளில் மாட்டிக் கொண்டான்.
    “மணி இன்னா சார்?” எதிரே வார்டிலிருந்து வந்தவர் எவரோ கேட்டனர்.

    அவனிடம் கடிகாரம் இல்லை.

    “தெரியலே” என்று சொல்லி விட்டு நகரும் போது கதவருகில் நின்றவர் ஒருவர் சொன்னார்.
    “ரெண்டு அஞ்சு”
    “தாங்க்ஸ்”
    யாரோ யாருக்கோ சொன்னார்கள்.

    அவன் ஆஸ்பத்திரிக்குள் நுழைந்து எவ்வளவு நேரமாகப் போகிறதென்று கணக்கிட்டான்.
    ஐந்து மணி நேரம்.

    புண்ணியகோடி மரணத்தோடு ஐந்து மணி நேரமாகப் போராடிக் கொண்டிருக்கிறார்.
    சிவா சாலையில் நாற்சந்தி கடந்து திறந்திருந்த பால் கடை ஒன்றை நெருங்கினான்.
    “ப்ளாஸ்கைக் கழுவி ரெண்டு பால், ரெண்டு பன் பார்சல்”
    “இன்னா சார், கம்பவுண்டர் பொய்ச்சிக்கினாரா.”
    சிவா திரும்பிப் பார்த்தான்.

    பால் கடைக்குப் பக்கத்திலிருந்த பங்க் கடைக்காரன் கேட்டான்.

    “அபாய கட்டம் தாண்டிடுச்சி.”
    வாழைப்பழம் உரித்துத் தின்று கொண்டிருந்த நபர் ஒருவர் வேலை தீர்ந்து தோலை வீசிவிட்டு அரைகுறை அக்கறையோடு கேட்டார்.

    “யாரு?”
    “கம்பவுண்டர் புண்ணியகோட்டி இல்லே, அதாம்பா… வாரம் தவறாமே ரேஸுக்குப் போவாரே… நெத்திலே துண்ணூறு வச்சிகிணு எப்பவும் புல் ஷர்ட் போட்டுணு வருவாரே… நம்ம கடைலே அக்கவுண்ட் வச்சிகிணு ரேஸ் டிப்ஸ் வாங்க மாட்டாரு? அவரு பாய்ஸன் சாப்டாரு”

    “அடப் பாவமே…பூட்டாரா?”
    “தப்பிச்சுக்கிட்டாரு”
    “வயசான மன்சன். எத்தினி குடும்ப கஷ்டமோ?”
    “அது எப்பவோ நடந்துருக்கணும்பா… கொயந்த குட்டிக்கார ஆளு. ஏதோ மானத்தை மடியிலே கட்டிக்கினு தம் புடிச்சாரு.”
    “சீக்கிரமா குடுங்க” என்று அந்த சூழ்நிலையின் இறுக்கம் தாளாமல் கடுகடுத்தான் சிவா.

    “இப்பதானே சார் கொணாந்த… இதுக்குள்ள துடிச்சா… ப்ளாஸ்க் கயுவ வாணாம்.” என்று யாந்திரீகமான அமைதியோடு பதிலளித்து விட்டு வெந்நீரில் ப்ளாஸ்கைக் கழுவினான் கடைக்காரன்.

    “அது இன்னா கத…?” வாழைப்பழம் வம்புப் பிரியத்தில் வாயைக் கிளறியது.

    “பொண்டாட்டி ஒரு வைர வியாபாரிய இஸ்துக்கினு பூட்டா. அது நடந்து அஞ்சு வருஷமாவப் போவுது.”
    அவனை உதைக்கலாமா என்று சிவா யோசித்தான். ஒரு வாயை மூடும் முயற்சிக்காக விபரீதம் தான் விளையும்.

    “இப்ப ஏன் பாய்ஸன் சாப்டாரு?”
    “தெரிலே… பொண்ணு விஷயம் போல கீது”
    பால் கடைக்காரன் பன்னை மடித்துக் கட்டப் போனான்.

    “கட்ட வேணாம்” என்று காகித மடிப்பில் பன்களை வாங்கிக் கொண்டான். சில்லறையைக் கொடுத்து விட்டு வரும்போது சமூகத்திற்கு ஊர் வம்பில் இருக்கிற ருசி முள்ளாய் உறுத்திற்று.

    எட்டுப் போர்ஷன்கள் கொண்ட அந்த வீடு… வீதி… அறிந்தவர்கள்… புண்ணியகோட்டியைத் தெரிந்தவர்கள்… அவர்கள் அனைவர் முன்பும் தான் குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட்டிருப்பதை பிரத்யட்சமாக அனுபவித்தான்.

    பல கண்கள் அந்த ஐந்து மணி நேரத்துக்குள் அவனை விரோதித்தன. சிவாதான் அவருக்கு விஷத்தை ஊற்றிக் கொடுத்தவன் என்கிற மாதிரி பார்த்தன.
    ஹாஸ்பிடலுக்குள், காத்திருக்கும் பெஞ்சில் கால் நீட்டிப் படுத்திருந்த பிரேம் கூட முதலில் அவனை அப்படித்தான் பார்த்தான்.

    திஷ்யா மட்டும்தான் அந்த துவேஷம் மெல்லும் நிலையில் அவனிடம் வித்தியாசமாக நடந்து கொண்டாள்.
    கையில் பன்களுடன் அவன் அந்தப் பெஞ்சுக்குப் போனான்.

    வியர்வையில் மை கரைந்து போய் கண்கள் இன்னும் பெரிதாய்த் தெரிய அவள் பரிதாபமாய்க் காணப்பட்டாள்.
    “திஷ்யா… பன்னும் பாலும் வாங்கியாந்திருக்கேன். பிரேமை எழுப்பு.”
    “எனக்கு வேணாம்.”

    “நீ கூட ராத்திரி சாப்பிடலியே. மத்தியானம் கூட நீ சாப்பிடலேன்னு சீதா சொன்னாள்.”
    அவள் பிரேமை தட்டி உலுக்கினாள். அவன் கண்களை முழித்துப் பார்த்துவிட்டு மீண்டும் திரும்பிப் படுத்துக் கொண்டான்.
    “இவனை தூக்கத்திலேருந்து எழுப்ப முடியாது”

    “அப்ப நீ சாப்பிடு”
    “எனக்கு இப்ப வேண்டாம் ப்ளீஸ்… தொந்தரவு பண்ணாதீங்க.”
    அவன் பெஞ்சு ஓரமாக மாட்டியிருந்த ப்ளாஸ்டிக் கைப்பையீல் பன்களைப் போட்டான்.
    பிரேம் நகர்ந்து படுத்ததில் தலைப் பக்கம் கொஞ்சம் இடம் காலியாயிருந்தது. அங்கே போய் உட்கார்ந்தான். திஷ்யா பிரேமின் கால்மாட்டில் உட்கார்ந்திருந்தாள்.

    “டாக்டர் வந்தாரா?”
    “யாரும் வரல்லே. ஒரு நர்ஸ் வந்து போச்சு.”
    “என்ன சொல்லுச்சு”
    “பொழச்சுக்குவாராம்”
    அவன் நிம்மதிப் பெருமூச்சு விட்டான்.

    “சிவா… ரொம்ப ரொம்ப ஸாரி”
    அவன் ஒன்றும் பேசவில்லை. நிமிர்ந்து அவளைப் பார்த்தான்.

    “ஒங்களை நான் அநாவசியமா இதிலே இழுத்து விட்டுட்டேன்.”
    “சரி சரி… இதுக்கெல்லாம் அவசியமில்லே.”
    “அவசியம் வந்துடுச்சு.”
    “வேண்டாங்கறேனே… இந்தப் பேச்சை விடு”
    “இல்லே… நான் அப்பா இஷ்டப்படியே நடக்கறதுண்ணு முடிவு பண்ணிட்டேன்.”
    அவனுக்கு பளிச்சென்று அறைந்த மாதிரி இருந்தது.

    “பயந்துட்டியா?”
    “பயமா…” அவள் உதட்டிற்குள் வெறுமையாகச் சிரித்த ஓசை ஹூங்காரமாகக் கேட்டது.
    “அதெல்லாம் எப்பவோ போயிடுச்சு. அம்மா போனாளே அப்பவே போய்டுச்சு.”
    “இப்ப எதுவும் பேச வேண்டாம்.”
    “இல்லே, இப்ப பேசிடணும்” அவள் குரலில் உறுதி உயர்ந்து தொனித்தது.

    “இது என் பிரச்னைன்னு மட்டும் நெனச்சுட்டேன். அது மகா தப்பு. ஒங்க பிரச்னை. இந்தப் பையன்… அந்த ரெண்டு கொழந்தைங்க.. பொறப்பட்டுப் போனாளே அந்த மகராசி… அவ குடும்பத்துக்கு வச்சிட்டுப் போன நல்ல பேரு… அதுவும் பிரச்னை. வேண்டாம், என்னாலே என் பிடிவாதத்தாலே எதுவும் நடக்க வேண்டாம்.”

    “அதுக்காக சகதியிலே எறங்கிடறேண்ணு சொல்றியா?”
    “ஒருத்தி எறங்கிட்டா இத்தனை பேரும் தப்பிச்சுக்கலாம்.”
    “திஷ்யா.”
    அவள் சேலைத் தலைப்பை வாயில் புதைத்துக் கொண்டாள். அவளது கறுத்து அடர்ந்த நீளமான கூந்தல் அவள் முகம் குனிந்தபோது மெதுவாக அதிர்ந்து குலுங்கிற்று.

    அவள் விம்மல்களைக் கட்டுப்படுத்துகிறாள் என்று புரிந்து கொண்டான்.
    அந் நேரத்தில் அவளை வாரியணைத்து அந்த முகத்தை தன் மார்புறத் தழுவிக் கொள்ள வேண்டும் போலிருந்தது.

    அங்கு வழிந்த கண்ணீரையும் ஒலிக்கின்ற விம்மல்களையும் துளி விடாமல் முழுக்க முழுக்க அப்டியே தன் மார்பின் மீது வாங்கிச் சுமக்க வேண்டும் போன்று அவனுக்கு மனம் துடித்தது.

    அது ஹாஸ்பிடல். அந்த நேரம் அதற்கு ஒவ்வாத அபாக்கியமான நேரம். அந்த வெண்ணிற முதுகின் மீது செழித்து அடர்ந்த கருங்கூந்தல் குலுங்குவதையே அவன் கவனித்தான்.

    ஒரு வாரம் கம்பவுண்டர் புண்ணியகோடி ஆஸ்பத்திரியிலேயே இருந்தார். அங்கேயே கம்பவுண்டராக இருந்ததால் ஸ்பெஷல் சிகிச்சை.
    சிவா தினசரி மூன்று முறை அவரைக் காண ஆஸ்பத்திரிக்கு வந்தான்.

    ஒர்க்ஷாப் திறக்கும் முன் ஒரு வேளை காலையில் வருவான். மத்தியானம் ஹோட்டலில் சாப்பிட வரும்போது ஒரு முறை.
    ஒர்க்ஷாப்பை மூடிவிட்டு இரவு எட்டரைக்கு ஒரு முறை வருவான். சில சமயங்களில் புண்ணியகோடியின் பக்கத்தில் இருக்கும் ஸ்டூலில் மௌனமாக திஷ்யா உட்கார்ந்திருப்பாள்.

    சில சமயம் வேறு யார் யாரோ இருப்பார்கள். வியாசர்பாடியிலிருந்து திஷ்யாவின் சித்தி வந்து போனாள். பெங்களூரிலிருந்து அத்தை வந்து ஒரு நாள் தங்கி விட்டுப் போனாள்.

    “ஒம் மனசை இவ்வளவு கெடுத்த மகாபாவிங்க அனுபவிப்பாங்கடா!” என்ற பெங்களூர் அத்தை ஒன்றுக்கு பலமுறை சிவாவின் காதுபட புண்ணிய கோடியிடம் புலம்பினாள்.

    வீடு விரோதமாகப் பார்த்தது. வீதியில் பல கண்களில் காலித்தனம் தென்பட்டது. ஓரிருவர் “ஷோக்கான குட்டி இருக்கிற வூடா பார்த்து கொடகூலிக்குப் போவணுண்டா” என்ற கோழைச் சாக்காகப் பேசினர்.

    எல்லாவற்றையும் எதிர்கொள்ள சிவாவுக்கு ஓர் உரம் ஏறிற்று. வைராக்கியம் மிகுந்தது.

    எதிர்த்து நின்று தட்டிக் கேட்கட்டும். உண்டான பதிலைச் சொல்லலாம் என்று நிமிர்ந்த தலையோடு அவன் வீட்டிற்குப் போனான். வீதியில் உலவினான்.
    அப்படி எவரும் வரவில்லை. யாருக்குமே அந்தத் துணிச்சல் இல்லை.

    ஆஸ்பத்திரியில் புண்ணியகோடி அவன் வந்து நின்றால் பார்வையைத் திருப்பிக் கொள்வார். ஓரிரு நிமிஷம் அங்கே நிற்பான்.
    நர்ஸ்… டாக்டர் என்று எதிர்ப்படுகின்ற ஆஸ்பத்திரி ஊழியர்களிடம் அவருடைய உடல்நிலை குறித்து விசாரித்து அறிவான். பிறகு போய் விடுவான்.

    தாமுவுக்கு இவற்றைத் தெரிவிக்க வேண்டும் என்று ஏனோ தோன்றியது. விவரமாக ஒரு கடிதம் எழுதிப் போட்டான்.
    அவசியம் ஒரு பதில் போடவும் என்று ஒரு வரி எழுதியிருந்தான் – பதிலில் ஓர் அறிவுரை வரும் என்ற நம்பிக்கையில்.
    பதில் வரவில்லை.

    ஒரு வாரமாக பிரீதாவைக் காண வாய்ப்பில்லை. ரேடியம் தெரபி சம்பந்தமாக ஒரு விசேஷ பயிற்சிக்கு அந்த பிரைவேட் நர்ஸிங் ஹோம் அவளைத் தேர்ந்தெடுத்து வேலூர் சி.எம்.சிக்கு அனுப்பியிருந்தது.

    முகூர்த்தத் தேதி நிர்ணயமானதும் எழுதும்படி அவள் ஒரு கடிதம் போட்டிருந்தாள்.
    அதற்கு அவன் பதில் போடவில்லை.

    அந்த ஒரு வாரம் ஒரு புறக்கணிப்பின் கூண்டிலேற்றப்பட்ட உணர்வின் தனித்துவத் தன்மையை சிவா பூரணமாக அனுபவித்தான்.
    அவனைச் சுற்றி இருக்கிறவர்கள் தன்னை எரிக்கட்டும் என்ற திடத் தன்மையோடு எல்லார் வெறுப்பையும் ஏற்றுக் கொண்டான்.
    அந்த வேதனையில் ஒரு தனி சுகமிருந்தது. புடமிடப்படுவது போன்ற தகிக்கின்ற சுகம். மாசுகள் நீங்குவது போன்ற கொதித்துக் கரையும் சுகம்.
    ஏழாவது நாள்.

    காலையில் குளித்துக் கொண்டிருக்கும் போது கனத்த ஷý ஒலி கேட்டது. பழக்கமானது. தாமுவுடையது.
    “சிவா” என்று அடித் தொண்டையில் அவனுக்கே உரித்தான மெதுவான தொனியில் கூப்பிட்டான் தாமு.
    “எஸ் ஸார்” என்று பதிலளித்தான்.

    “குளிச்சுட்டு வா!”
    ஷூவைக் கழற்றிவிட்டு அவன் கதவைத் திறந்து கொண்டு உள்ளே போகும் ஓசை.

    குளித்துக் கொண்டிருந்த சிவாவுக்கு அவனை எப்படி ஏறிட்டுப் பார்ப்பது என்ற பிரச்னை தோன்றிற்று. தாமு திஷ்யாவை விரும்புகிறான். திருமணம் செய்து கொள்கிற அளவு.

    அவன் அவசரமாக துண்டை எடுத்துத் துவட்டியும் துவட்டிக் கொள்ளாமலும் போய் அவன் முன் நின்றான்.
    ஏதோ ஃபைலைப் புரட்டிய தாமு நிமிர்ந்து அவனைப் பார்த்தான். வெள்ளையாகச் சிரித்தான்.
    “ஸாரி, ஒடனே பதில் போட முடியலே” என்றான்.

    சிவா கண்களைத் தாழ்த்தினான்.
    “நேரிலே வரணும்தான். பதில் போடலே. நல்லா துடைச்சுக்கிட்டு வா. யூ ஆர் ஸ்டில் வெட்.”
    சிவா வெளியே வந்து உடம்பை நன்றாகத் துடைத்துக் கொண்டு துண்டை பிழிந்து கொடியில் போட்டான். காய்ந்து விட்டிருந்த ஒரு பனியனை மாட்டிக் கொண்டு மீண்டும் உள்ளே வந்தான். நின்றான்.

    “பீ ஸீடட்” என்று அருகிலிருந்த நாற்காலியைக் காட்டினான். சிவாவினால் உட்கார முடியவில்லை.
    “பீ ஸீடட் ஐ ஸே”
    சிவா கீழ்ப்படிந்தான்.

    “யூ ஃபீல் கில்ட்டி!” என்று அவனைப் பார்த்து மீண்டும் சிரித்தான்.
    “நானா எந்தத் தப்பும் பண்ணலே!”
    “அதுதான் லெட்டர்லே எழுதியிருந்தயே. பட் கங்க்ராட்ஸ்.”
    “எதுக்கு?”
    “யூ பிகம் சம்படி. அஞ்சு மாசத்துக்கு முன்னாடி நீ ஒரு ரைட்டர்தானே. நவ் யூ பிகம் எ மேன்”
    சிவாவுக்கு அவன் பெருந்தன்மை சிலிர்த்தது.

    “திஷ்யா பேர்லே எனக்கு ஒரு லைகிங் உண்டு. இட்ஸ் ஜஸ்ட் எ ஃபேன்ஸி. தெருவிலே போற பொண்ணுங்களைப் பார்க்கறப்ப இவளைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா நல்லாயிருக்கும். அவளைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா நல்லாயிருக்கும்னு தோணறாப்பிலே” என்று அவன் அலட்சியமாக தோள்களை உலுக்கிக் கொண்டான்.

    “டோன்ட் திங்க் மீ ஸோ மீனர். தனக்கு கிடைக்காதது வேற யாருக்கோ கெடச்சுட்டா பொறாமைப் படற மாதிரி ஆள் இல்லே நான். யூ நோ மீ.”
    சிவா மெதுவாக தலையசைத்தான்.

    “புண்ணியகோட்டி இன்னும் ஆஸ்பத்திரிலேதான் இருக்கறாரா?”
    “ஆமா…”
    “என்னிக்கு டிஸ்சார்ஜ் ஆவறாரு?”
    “இன்னிக்கு சாயங்காலம்”
    தாமு ஒரு சிகரெட்டை கேஸிலிருந்து உருவிப் பற்ற வைத்தான். ரசித்து உறிஞ்சுவிட்டுப் புகையை ஊதினான்.
    “ஹி ஈஸ் எ ஃபூல்” என்றான்.

    சற்று கழித்து “பேராசை பிடித்த முட்டாள்” என்றான். மீண்டும் ஒரு யோசனையோடு சிகரெட்டை ஊதினான்.
    “அப்பா எப்படி இருக்காரு?”
    “நல்லா இருக்கார். நான் போனவுடனே அவருக்குப் போற உசிரு திரும்பிடுச்சி. நான் ஒன்ஸ்ஃபார் ஆல் அங்கேயே தங்கிடப் போறேன்னு தெரிஞ்சதும் நாளுக்கு நாள் தேறிக்கிட்டு வர்றார். பட்… தேர் ஆர் சம் ப்ராப்ளம்ஸ்…” என்று கூறிவிட்டு பெருமூச்செறிந்தான்.

    வழக்கப்படி தேவைப்பட்டால் தாமுவே சொல்வான் என்று காத்திருந்தான் சிவா.

    “நான்… பொம்பளை விஷயத்திலே யோக்கியன் இல்லே. யூ நோ
    இட். அப்பாவும் அப்படித்தான். ஜமீந்தார் இல்லியா?”
    தாமுவின் முகத்தில் ஓர் இளக்காரப் புன்முறுவல் தொடர்ந்தான்.

    “எத்தனை வைப்பாட்டி உண்டோ அந்த அளவு மதிப்பு. ஒரு மனுஷன் எத்தனை பொம்பிளையை வெச்சிருக்கான்றது அவருடைய சொஸைட்டியிலே ஒரு ஸ்டேடஸ் சிம்பல். அதிலே ரெண்டு பேருக்கு குழந்தைகள் உண்டாய்ப் போச்சு. லீகலா க்ளெய்ம் பண்ணப் பார்த்தாங்க. ஐ டோன்ட் வாண்ட் டூ மேக் ஹிம் கிளைம். சுத்தமா பேசித் தீத்து கொஞ்சம் சொத்தைப் பிரிச்சுக் கொடுத்து விடுதலைப் பத்திரம் எழுதி வாங்கிட்டேன்.”
    சிவா கேட்டுக் கொண்டிருந்தான்.

    “யுவர் லெட்டர் வாஸ் அன் இன்ஸ்பிரேஷன்… இதோ எழுதியிருக்கே பாரு…” சட்டைப் பையில் கையை விட்டு சிவா எழுதிய கவரை எடுத்தான்.
    நான்காக மடித்து வைக்கப்பட்டிருந்த எட்டுப் பக்கங்களைப் புரட்டிப் புரட்டித் தள்ளிவிட்டு ஒரு பாராவை ஓரிரண்டு முறை படித்தான். பின்பு அதை மடித்து அவனிடம் நீட்டினான் தாமு.

    சிவா தான் எழுதிய அந்தக் கடிதத்தை வாங்கித் தானே மௌனமாக வாசித்தான்.

    “பெண்ணை விற்கிற, எந்த உருவத்திலாவது விற்கிற சமூகம் நசித்துவிடும். அங்கே வீரியம் இருக்காது. ஆண்மை இருக்காது. புண்ணியகோடி விற்கத் தயாராயிட்டார். ஒரு வேளை மனைவி ஓடிப்போனது அவர் மனசிலே பெண்களைப் பற்றிய மதிப்பையே அழித்திருக்கலாம். நான்கு குழந்தைகளுக்குத் தாயான ஒருத்தியை – தன் மனைவியை உண்மையாக நேசித்திருந்தால் அவள் ஓடிப் போயிருக்க மாட்டாள். பெண்ணைப் போகப் பொருளாக நினைத்தால் அவளும் அந்த அளவுதான் நம்மை மதிப்பாள். அப்போது அவர் விதைத்த வினையின் அறுவடை இப்போது நடைபெறுகிறது…”
    அவன் படித்துவிட்டுத் திருப்பிக் கொடுத்தான்.

    “இட் ஷûக் மி. என்னை அது கம்ப்ளீட்டா அசைச்சிடுச்சு.”
    தாமு சிகரெட்டை உறிஞ்சி மீண்டும் புகையை ஊதினான்.

    “போகட்டும் அதை அப்பறமா பேசுவோம். நீ டிரஸ் பண்ணிட்டு கௌம்பு. புண்ணியகோடியைப் போய்ப் பார்ப்போம்.”
    ஆஸ்பத்திரியில் புண்ணியகோடி மட்டும் இருந்தார். அவர் பார்வை சுழலுகின்ற மின்விசிறியை வெறித்துக் கொண்டிருந்தது.
    சிவாவையும் தாமுவையும் பார்த்ததும் எழுந்து உட்கார முயன்றார்.

    “நீங்க படுத்துக்குங்க” என்று தடுத்தான் தாமு. ஆனாலும், அவர் எழுந்து காலை பிடித்தவாறே உட்கார்ந்தார்.

    “ரொம்ப ஸாரி மிஸ்டர் புண்ணியகோடி என்னென்னவோ நடந்துட்டிருக்கு. எதுவும் இன்டென்ஷனோட நடக்கலே. ஒங்களுக்கு சிவாவைத் தெரியும். ஹி ஈஸ் எ பர்ஃபெக்ட் ஜென்டில் மன். ஒங்க குடும்ப விஷயத்திலே தலையிடணும்னு அவன் விரும்பலே. திஷ்யாவேதான் ஆள் விட்டு அவனைக் கூப்பிட்டிருக்கு…”
    புண்ணியகோடி தலை நிமிர்ந்து தாமுவைப் பார்க்கவில்லை.

    “ஒங்க ப்ராப்ளம் என்னன்னு எங்களுக்குப் புரியறது…”
    புண்ணியகோடி திடீரென்று குலுங்கினார்.
    “நான் ஒரு முட்டாள் மிஸ்டர் தாமு.”
    கட்டிலின் மீது போட்டிருந்த துண்டை எடுத்து அவர் அதில் வாய் புதைத்துக் கொண்டார். தாமு திரும்பி சிவாவைப் பார்த்தான்.

    அவர் உணர்ச்சிகள் வடிய அவர்கள் நேரம் வழங்கி நின்றனர். அவர் ஒரு நிமிஷம் கழித்து முகம் துடைத்துக் கொண்டார்.

    “கொழந்தை இப்பதான் வந்து சினிமாவிலே நடிக்க வக்கிறியோ… எங்க போகச் சொல்றியோ… என்ன பண்ணச் சொல்றியோ பண்றேம்பான்னு கண்ணு வழிய சொல்லிட்டுப் போறா… மிஸ்டர் தாமு… நானும் மனுஷன்தான். தோத்தவன். நஷ்ட்ப்பட்டவன். இருந்தாலும் நானும் மனுஷன்தான். ஐ ஆம் ஆஸ்ஸோ எமேன்! எ ஃபாதர்.”
    தாமு ஸ்டூலை இழுத்துப் போட்டு அவர் அருகில் உட்கார்ந்தான். அவர் தோள் பட்டையை மெதுவாகத் தொட்டான்.

    “தாமு சார்… யூ ஆர்… யூஆ…” அவருக்குத் தொண்டை அடைத்தது.
    மீண்டும் துண்டை முகத்தில் ஒற்றிக் கொண்டார்.

    “நீங்க பெரிய மனுஷன். நீங்களே இருந்து இவங்க கல்யாணத்தை நடத்தி வைங்கோ. நான் ஒண்ணும் பெரிசா செய்ய முடியாது. பெரிய குடும்பம்…”
    “டோன்ட் ஒரி… டோன்ட் ஒரி” என்று தாமு அவர் தோளைத் தட்டிக் கொடுத்தான்.

    ஆஸ்பத்திரியை விட்டு வெளியே வரும்போது தாமுவின் கண்கள் கலங்கியிருந்தன. இதை சிவாவுக்குக் காட்டாமல் மறைத்துக் கொண்டே தாமு சொன்னான்.

    “சிவா, நாம ரெண்டு பேரும் ஊருக்குப் போகணும். ஐ வான்ட் டு மீட் பிரீதா. அவளை மதனபள்ளிக்குக் கூட்டிப் போகப் போறேன்…”
    “சரி.”
    “நீ அப்படியே திருப்பத்தூர் போய் அம்மாவைக் கூட்டி வந்துடு! நாளை மறுநாள் முகூர்த்த தேதியை நிச்சயம் பண்ணிடலாம்” என்றான் தாமு.

    தொடரும்

    Share
  • ஐந்து கை ராந்தல் (18)

    வையவன்

    “என் குடும்ப விஷயத்திலே தலையிடறதுக்கு நீங்க யாரு?”
    பிரீதாவையும் சிவாவையும் பார்த்து சீறி வெடித்தார். புண்ணியகோடி.

    பனிரெண்டு மணிக்கு ஒரு காரில் வந்திருந்தார். வீடு பூட்டியிருப்பதைப் பார்த்த கொதிப்பும், வந்தவர்களிடம் பட்ட அவமானமும் அவரைக் கொதிப்பூட்டின.

    “எம் பொண்ணை நான் சினிமாவுக்கு அனுப்புவேனோ. டிராமாவுக்கு அனுப்புவேனோ… அது என் இஷ்டம். அவ எம் பொண்ணு. அவ கேக்கறாளோ இல்லையோ… நான் அவளை வற்புறுத்துவேன்… அடிக்கக்கூட அடிப்பேன்… என் இஷ்டம்.”
    அவர் பார்வை பிரீதா மீது பாய்ந்தது.

    “நீ யாரு… ஏம்மா நர்ஸம்மா, நீ இதைக் கேள். ஒங்க வழியிலே நான் குறுக்கே வந்தனா… நீங்க இன்னா எனக்கு ஜாதியா ஜனமா… சொந்த மனுஷாளா… எந்த தைரியத்திலே நீங்க என் வூடு ஏறி வந்தீங்க… ஏதோ பக்கத்திலே கொடக் கூலிக்கு இருக்கீங்கண்ணு மரியாதைக்கு நாலு வார்த்தை நல்லதனமா பேசியிருப்பேன்… அதுக்காக… என் வூட்டு விஷயத்திலே தலையிட ஒங்களுக்கு என்ன உரிமை?”
    எல்லாவற்றையும் அவர்கள் எதிர்பார்த்தே வந்திருந்தனர். அதனால் வெறி தணியட்டும் என்று காத்திருந்தனர்.

    திஷ்யா குழந்தைகளை அழைத்துக் கொண்டு உள்ளே ரூமிற்குப் போய்விட்டாள்.
    புண்ணியகோடிக்கு மேல் மூச்சு வாங்கிற்று. இரைக்க இரைக்க நின்றார். இந்த வயசான தோற்றத்தில் இப்படிக் கத்துகிற அவரைப் பார்த்து சிவாவுக்கு மிகவும் பரிதாபமாக இருந்தது.

    வாழ்வில் கானலை விரட்டுவதையே ஒரு தொழிலாகக் கொண்டு வருந்தி அடிவாங்கியவர். சமுதாய நோய்களுக்கு பலியானவர்.

    “சார்.”
    “நான் எதையும் கேக்கத் தயாரா இல்லே”
    “நீங்க கேக்கலேண்ணாலும் நாங்க சொல்ல வந்திருக்கோம். ஒங்க பொண்ணுக்கு இதிலே இஷ்டமில்லே” என்று உறுதியோடு சொன்னான் சிவா.

    “அதைச் சொல்ல நீ யாரு?”
    “ஒங்க பொண்ணைக் கூப்பிட்டு நான் யாருன்னு கேளுங்க.”
    “ராஸ்கல்” என்று சிவாவை அடிப்பது போன்று கையை ஓங்கிக்கொண்டு ஓடிவந்தார் புண்ணியகோடி. அவர் நெருங்கியபோது அவன் எழுந்து நின்றான்.

    அவர் முகம் திடீரென்று மாறிற்று.
    எல்லாவற்றுக்கும் இவன்தான் காரணம் என்பது போல் ஒரு வெறுப்பு அவர் முகத்தில் திரண்டது. அந்த வெறுப்பில் ஒரு பயம்..

    திஷ்யா கைவிட்டுப் போய்விடுவாளோ என்ற பயம் அவர் உயர்த்திய கையைக் கீழே விட்டார்.
    “நீ மிரட்டறியா?” என்று மூச்சு வாங்கக் கேட்டார். அவர் குரல் தாழ்ந்து விட்டது.

    “இல்லே, ஒங்க பெண்ணைக் கூப்பிட்டுக் கேளுங்க.”
    “நான் கேக்க மாட்டேன்! நீ வந்திருக்கறதிலே இருந்தே தெரியுது ஒன் துணிச்சலுக்கு என்ன காரணம்னு சிவா… சிவா… நான் ஒனக்கு என்ன தீமை செஞ்சிருக்கேன்.”

    அவர் குரல் தாழ்ந்தது. பிச்சை கேட்பது போல் கெஞ்சத் தொடங்கியது. “வாண்டாய்யா… விட்டுடு… இது ரொம்ப நொடிஞ்ச குடும்பம். நான் ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன். ஒனக்கு என்ன… ஆயிரம் எடத்திலே பொண்ணு கெடைக்கும். நான் ஏழை. நீ பெரிய பொஸிஷனுக்கு வருவே… ஒனக்கு அருமையான பொண்ணு கெடைக்கும். வாண்டாய்யா… வாண்டாம். ஒன்னைக் கையெடுத்து கும்புடறேன். எம் பொண்ணை விட்டுடு ஐயா! அது லைஃபை கெடுத்துடாதய்யா”
    “மிஸ்டர் புண்ணியகோடி” அவர் தேம்பி அழுவதைக் கேட்கச் சகிக்காமல் பிரீதா குறுக்கிட்டாள்.

    “எம்மா… நர்ஸம்மா.. ஒனக்குக் கோடிப் புண்ணியமுண்டு. இவனுக்கு புத்தி சொல்லு. எனக்கு இன்னும் மூணு பசங்க இருக்கு. இன்னும் எட்டு வருஷத்திலே நான் ரிட்டயராயிடுவேன். இதுங்களுக்கு இதுவரிக்கும் நான் ஒரு வழியும் பண்ணலே. எம் பொண்டாட்டி.. எம் பொண்டாட்டி…” என்று அவர் மேலும் தேம்பித் தேம்பி அழத் தொடங்கி விட்டார்.
    “அப்பா” என்று கத்திக் கொண்டே வெளியே வந்தாள் திஷ்யா.

    புண்ணியகோடி திரும்பிப் பார்த்தார்.
    “இப்ப என்ன நடந்து போச்சுண்ணு இப்படி பொலம்பறீங்க”
    “நீ உள்ளே போடி. உள்ளே போ” என்று திடீரென்று வெறிபிடித்துக் கத்தினார்.
    திஷ்யா உள்ளே போகவில்லை.

    “போக மாட்டே, போக மாட்டே” என்று கத்திவிட்டு அவர் படார் படாரென்று தன் தலையில் அறைந்து கொண்டார்.
    திஷ்யா அமைதியாக நின்றாள்.

    “எல்லாம் ஒன்னாலதாண்டி குடி கேடி! இப்படி நாலு பேர்கிட்டே நான் பொலம்பற நிலைக்கு ஆளாக்கிட்டியே. எல்லாம் ஒன்னால தான்”
    “இல்லே, நான் என்ன பண்ணணும்?”
    “உள்ளே போ”
    “இல்லே, நான் வெளியே போகப் போறேன்!”

    “நீ போயிடுவியா? ஒனக்கு அவ்வளவு தைரியம் உண்டா?”
    “நிச்சயமா. என்னை அழைச்சுட்டுப் போகத்தான் இவங்க வந்திருக்காங்க. நான் தன் தம்பி தங்கைகளை அழைச்சிகிட்டு வெளியே போகப் போறேன்.”

    “நீ எங்கே போவே?”
    “இவங்களோடே”
    “நான் போலீஸ்லே கம்ப்ளெயிண்ட் கொடுப்பேன்”
    “நான் எதிர்பார்த்தேன். நான் மேஜராய்ட்டேன். எனக்கு என் பாதையை தீர்மானிக்கிற சுதந்திரம் உண்டு.”
    “இதுக்காடி நான் ஒன்னைப் பெத்தேன்”
    திஷ்யா உறுதியோடு பேசினாள்.

    “இது கௌரவமானதுப்பா. சினிமா சினிமான்னு நீங்க அலையறீங்களே அதைவிட அது உத்தமமானது. ஒண்ணு இவருக்கும் எனக்கும் நீங்க கல்யாணம் நடத்திவச்சு நீங்களே கௌரவமா அனுப்புங்க. இல்லே இப்ப ஒங்க கண்ணெதிரே திருட்டுத்தனமா இல்லே பகிரங்கமா நான் போறேன். தனியா இல்லே, கொழந்தைகளோடே”
    சிவா அந்த நிமிஷம் வரை அவள் சொன்ன திருமணம் என்ற வார்த்தைக்கு தயாராயில்லாமல் இருந்து அவள் வாயில் அது வந்ததும் அதை ஏற்கச் சித்தமானான்.

    ஒரு தீர்மானத்துக்கு வருகிற வரை இருந்த மயக்கம் அப்படி வந்ததுமே பொழுது விடிந்த மாதிரி ஒரு தெளிவை அவனுக்கு வழங்கிற்று.

    “ஆமா சார், இப்ப நாங்க பொண்ணு கேட்க வந்திருக்கோம்னு வச்சுக்கங்க. ஒங்களை மிரட்ட வரலே.”
    புண்ணியகோடி எல்லா அம்புகளும் பயனற்று விட்டது போல் குறுகிப் போய் நாற்காலியில் உட்கார்ந்தார். தலை மீது கை வைத்துக் கொண்டார்.

    ஒரு நிமிஷம் அங்கே யாரும் பேசவில்லை.
    எல்லா விதத்திலும் போராடித் தோற்று விழுந்தவனைச் சுற்றி நிலவும் ஒரு மௌனம் அங்கே சூழ்ந்தது.
    சிவா பிரீதாவைப் பார்த்தான்.

    புண்ணியகோடியின் தோல்விக்கு தாங்கள் ஒரு காரணமான பச்சாதாபம் இருவர் பார்வையிலும் பகிர்ந்து கொள்ளப்பட்டது.
    “எம் பென்சிலை ஏந்தி எதுக்குதே… குது… குதுதீ” என்று குழந்தை ஆனந்து ஓ வென்று கூப்பாடு போடுவது கேட்டது.

    “ஏய் சீதா! பென்சிலைக் குடுத்துடு. அழவைக்காதே அவனை” என்று பிரேம் அதட்டினான்.

    எதையோ படாரென்று வீசியெறியும் ஓசையும் கலகலவென்று பென்சில்கள் உருண்டோடும் ஒலியும் ஒன்றையொன்று தொடர்ந்தன.

    பளாரென்று ஓர் அறை வைக்கும் சப்தம்.

    ஏக காலத்தில் இரண்டு அழுகுரல்கள். தனது நிலை என்னவென்று உணர்ந்தது போல அந்தச் சிறு சச்சரவை ஏதும் செய்ய மாட்டாமல் வெறித்துப் பார்த்தார் புண்ணியகோடி.

    “ஏய் சீதா, ஆனந்து, அழறதை நிறுத்துங்க” என்று அறைப் பக்கம் திரும்பி ஓர் உத்தரவு போட்டாள் திஷ்யா.
    ஸ்விட்சை அணைத்த மாதிரி இரண்டு குரல்களும் அடங்கின.

    பிரீதாவுக்கு ஒரு புன்னகை வந்தது.

    “ஆல்ரைட் சிவா, எம் பொண்ணை ஒனக்குக் கொடுக்கறேன். கல்யாணத்தை எதாவது கோயில்லே தான் நடத்த எனக்கு சௌகரியப்படும். முகூர்த்தத் தேதியை பார்த்து வந்து நாளைக்கு சொல்றேன்” புண்ணியகோடி ஈனசுரத்தில் பேசினார்.
    பிரீதாவின் முகத்தில் வீசிய ஒளி திஷ்யாவை விட அதிகமாய் இருந்தது.

    “சீக்கிரமா நடக்கணும்” என்றான் சிவா.

    “ரெண்டு மூணு நாள்ளே” – என்று ஈனசுரத்தில் பதிலளித்தார் புண்ணியகோடி.

    பிரீதாவின் குவார்ட்டர்ஸ் வரை உடன் சென்றான் சிவா. ஒன்றும் பேசாமல் வழியெல்லாம் யோசனையில் சென்றான்.
    “என்ன சிவா. ‘க்ளூமி’ ஆய்ட்டே?”
    “நான் மதனபள்ளி போகணும்.”

    “எதுக்கு, தாமுவோட பர்மிஷன் வாங்கவா?”
    “இதுக்கு பேர் பர்மிஷனா?”
    “வாட் எல்ஸ்?”

    “அவர் என்னை மனுஷனாக்கினார், அவருக்கு இது தெரியணும். த ஹோல் ஸிச்சுவேஷன்.”
    “அப்போ நானும் ஒன் கூட வர்றேன். நான்தான் அதை அவருக்குப் புரியறா மாதிரி விளக்க முடியும்.”

    “தாங்யூ. ஆனா அவர் கிட்டே ஒரு ரெகமெண்டேஷனோட நான் போற மாதிரி எனக்கே தோணிடும். இட்ஸ் குட் ஆர் பேட். நானே அதைத் தனியா சந்திக்கப் பிரியப்படறேன்.”
    பிரீதாவுக்கு அவன் மீதிருந்த மதிப்பு உயர்ந்தது.

    “போய் வா! ஆனா அதுக்கு முன்னாடி புண்ணிய கோடிகிட்டே முகூர்த்த தேதியைக் கன்பார்ம் பண்ணிக்க.”
    “எஸ், யூ ஆர் கரெக்ட்” என்றான் சிவா.

    இரவு ஒன்பது மணிவரை பிரீதாவுடன் பேசிக் கொண்டிருந்து விட்டு ராயப்பேட்டைக்கு பஸ் ஏறினான் சிவா.
    வீட்டு வாசலில் விளக்கெரிந்து கொண்டிருந்தது. கும்பலாக பெண்கள் உட்கார்ந்திருந்தனர். ஏதோ துர்ச்சம்பவம்.
    கீழ்ப் போஷன்காரர் வாசலில் மார்புத் துண்டோடு நின்றார்.

    “என்ன சார்” என்றான்.

    “நீ எல்லாம் மனுஷனாய்யா? ஒன்னாலே அந்த கம்பவுண்டர் வெசம் குடிச்சு டேஞ்சரா ராயப்பேட்டை ஹாஸ்பிடல்லே அட்மிட் ஆயிட்டான்” என்று அவர் வெடித்தார்.

    தொடரும்

    Share
  • ஐந்து கை ராந்தல் (17)

     வையவன்
    செம்மஞ்சளாகப் பிளந்திருந்த பப்பாளிப் பழத்துண்டங்களில் கருமுத்துகளாய் மின்னிய விதைகளை ஸ்பூனில் வழிக்கப் போனாள் பிரீதா.
    நாற்காலியில் உட்கார்ந்திருந்த சிவா “வெய்ட்” என்று தடுத்தான்.
    பீங்கான் கோப்பையில் அவள் அந்த எவர்சில்வர் ஸ்பூனை அப்படியே விட்டாள். ‘ணங்’கென்று ஓர் இனிய ஒலி வந்தது.
    “வாவ். ஹவ் லவ்லி” என்றான்.
    பிரீதாவும் அந்த அழகில் லயித்தாள்.
    “செம்மஞ்சள் மேகத்தில் மிதக்கும் கறுப்பு தேவதைகள்” என்றான்.
    “பிரிந்த இதயத்தின் நிராசைக் கருமணிகள்” என்றாள் பிரீதா.
    சிவா “வொண்டர் ஃபுல்” என்று அவள் உவமையைச் சிலாகித்தான். அவளைப் பார்த்தான். அந்தக் கண்களில் அந்த இனிய பிரீதா இல்லை. இவள் பிரச்னையை எதிர் கொள்பவள். குளிர்ச்சியான ஒளியூட்டுகின்ற பிரீதா இல்லை.
    இவள் வேறு-விளக்கின் கீழே நிற்கும் கருநிழல் மாதிரி.
    சிவா அவளிடம் அந்த அந்நியத்தைக் கண்டு அதைச் சந்திக்கப் பிரியமின்றி பார்வையை ஒதுக்கினான்.
    “உனக்கு திஷ்யாகிட்டே என்ன அப்படி ஒரு அக்கறை?”
    மெல்ல கடற்காற்று அசோக மரங்களை உயிர்ப்பித்தது.
    சிவாவுக்கு அவள் இன்னும் சில அடிகள் முன்னேறி வருவது போல் ஓர் உணர்வு.
    “இன்னிக்குக் காலையிலே அவள் ஒர்க்ஷாப்புக்கு தம்பியை அனுப்பி என்னைக் கூட்டி வரச் சொன்னா”
    “அதுக்கு மேலே?” அவள் தூண்டினாள்.
    “அதுக்கு மேலேயும் உண்டுண்ணு இன்னிக்குத்தான் வாய் விட்டுச் சொன்னாள்.”
    “ஓ”
    பிரீதா இதை இயல்பாகச் சொன்னாளா என்று அவன் நிமிர்ந்து பார்த்தான். அவள் புன்னகை செய்ய முயன்றாள். அதில் வலி தென்பட்டது.
    சிவாவின் கண்களில் அவள் எதையோ ஆழ்ந்து தேடினாள்.
    “உனக்கும் உண்டா?”
    “நேத்து வரைக்கும் இருந்தது.”
    “இப்ப…”
    “யோசிக்கிறேன்”
    “ஏன்?”
    “தாமுவுக்கு அவள் பேரிலே என்ன இன்ட்ரஸ்ட் இருக்கும்னு தெரிஞ்சபிறகு யோசிக்காம என்ன பண்றது?”
    “பப்பாளி விதையை எடுத்துடட்டுமா?”
    “ஓ… எஸ்!”
    பிரீதா விதைகளை அகற்றினாள். இன்னொரு சாஸரில் இரண்டு துண்டங்களை எடுத்து வைத்தாள்.
    “சாப்பிடு”
    அவன் கீழ்ப்படிவது போல் பழத் துண்டங்களில் செருகியிருந்த ஸ்பூனில் வெட்டினான்.
    அவன் பழத்தை அருந்தும் போது அவளும் கூட சாப்பிடத் தொடங்கினாள்.
    “எதற்காக யோசிக்கிறே?”
    “ம் ம்…” என்று அவள் கேள்வி புரியாது எங்கோ நினைவில் கரைந்திருந்த சிவா விழிப்பு வந்து கேட்டான்.
    “தாமு என்னை மனிதனாக்கியிருக்கிறார்”
    “நன்றி விசுவாசமா?”
    “அது மட்டுமல்லே.”
    “பின்னே?”
    “திஷ்யா தாமுகிட்டே இன்னும் மகிழ்ச்சியா இருக்கலாம்.”
    “உன்னை விரும்பின பிறகா?”
    “விருப்பங்கள் நிலையானவையல்ல”
    “வாட் டு யூ மீன்?”
    “வசதிகளைத் தான் மனசு எப்பவும் தேடுது. இன்னும் ஒண்ணுமே ஆகாத என்னாலே என்ன வசதி செஞ்சுட முடியும்? இந்தச் சினிமா சான்சை விட்டுட்டதுக்கு அவளே பின்னால வருத்தப்படலாம்.
    என்னை விரும்பியதுக்கும் சேர்த்து வருத்தப்படலாம். அவளே இல்லேண்ணாலும் அவங்க அப்பா, குடும்பம் எல்லாரும் அப்படி அவளை நெனைக்க வச்சுடலாம்.”
    “வாட் அபவ்ட் திஷ்யா? அவள் மனசு என்ன? தாமு யார் என்னண்ணு அவளுக்கு நல்லாத் தெரியும். அவ தாமுவை லைக் பண்ணுவாளா?”
    “இல்லே”
    “தென்?”
    “தென் இட்ஸ் ஹெர் ஒன் ப்ராப்ளம்”
    “இந்த ஒலகத்துக்கு நீ ஒரு மிஸ்ஃபிட் சிவா”
    அவன் சிரித்தான்.
    “இது நீ வாழ வேண்டிய காலமில்லே. நீ ஒரு நூற்றாண்டு பின்னாடி இருக்கே”
    “ஆ, இருக்கட்டுமே. ஒலகம் ரொம்பப் பெரிசு. அதற்குப் பொருத்தமானவங்களே மெஜாரிட்டி ஆயிட்டாலும் மைனாரிடிக்கு ஒரு மூலை இருக்கு.”
    “இதான் டிஃபீடிஸம். தோல்வி மனப்பான்மை.”
    “இது ஒரு மனப்பானந்மை. வெற்றியோ தோல்வியோ நாலு பேர் குத்தற முத்திரை. முத்திரைகளுக்கு வாழாம மனசுக்காக வாழ்கிறவனுக்கு இது விஷயமில்லே. தேர் அர்ஸோ மெனி மிஸ்ஃபிட்ஸ். நல்ல யோசிச்சா மிஸ் ஃபிட்ஸ் தான் மெஜாரிடி.”
    சிவா ஸ்பூனில் மற்றொரு பப்பாளிப் பழத்துண்டை எடுத்தவாறே பேசினான்.
    “நீயும் என்னைப் போலவே ஒரு கோழைதான் சிவா.”
    “ஆமா… நாம வாழ்க்கைக்கு வசதிகளுக்கு. அது நமக்கோ பிறருக்கோ இல்லாமப் போறதுக்கு ரொம்பப் பயப்படறோம்.”
    “தென்… நீ ஏன் பேனா எடுத்து எழுதறே. தன்னை விரும்புகின்ற நம்புகின்ற ஒருத்தியை ஏத்துக்க முடியாதவன்-அந்த பிரச்னைகளுக்குப் பயப்படறவன் என்ன எழுத்தாளன்?”
    அவன் அதிர்ச்சியுற்றான்.
    “பின்னாலே இந்தத் தோல்வி மனப்பான்மைக்கு கோழைத்தனத்திற்கு அழகான ஜோடனைகள் செய்து கதை எழுதுவே, பெரிய காதல் தோல்வி மாதிரி நீ இதைப் போஸ் பண்ணுவே”
    பிரீதாவிடம் இப்படி ஒரு பக்கத்தை அவன் எதிர்பார்க்கவில்லை.
    ‘நான் அப்படியா பிரீதா”
    “நீ மட்டுமில்லே. யூ மென், மோஸ்ட் ஆஃப்யூ ஆர் லைக் திஸ். ஒங்களுக்குப் பெண் வேணும்; பிரச்னைகள் இல்லாமே. லகுவா பொறுப்பு ஏத்துக்கனும்ணா ஒங்களுக்கு கசக்கும். எந்த சாக்கிலே கை கழுவலாம்னு யோசிப்பீங்க.”
    சிவாவுக்கு அவள் இன்னும் பேசட்டும் என்று ஒரு வெறி வந்தது.
    அவளுடைய வார்த்தைகள் உளித்தாக்கு போல் இறங்கி அவனைச் செதுக்கின.
    அவன் கொஞ்சம் கொஞ்சமாய் சிதைந்தான். வடிவமைப்பின் பரிணாமங்களில் உரிந்து உரிந்து வீழ்ந்தான்.
    “ஒங்களுக்கெல்லாம் காதல் வேணும். காதல் பிடிக்கும். அதன் பிரச்னைகளுக்கு நீங்க துடிதுடிப்பீங்க. ஆனா அது இன்னொருத்தருடையதா இருக்கணும். வென் இட் கம்ஸ்டு யூ. சமுதாயம்… தியாகம்… அது இதுண்ணு உங்க சுயநலத்துக்காக நீங்க போலிக் காரணங்களைத் தேடுவீங்க…”
    சிவா ஸ்பூனைக் கீழே வைத்து விட்டான்.
    இவள் வேறு பிரீதா. கொதிப்புற்றவள். வெடிக்கின்றவள்.
    மெய்மறந்து போய் அவன் கேட்டுக் கொண்டிருப்பது உறைத்த மாதிரி பிரீதா நிறுத்தினாள்.
    “ஸாரி சிவா.”
    “ப்ரொஸீட்… மேலே சொல்லுங்க. எக்ஸ்ப்ளய்ன் யுவர் செல்ஃப்.”
    அவள் முகம் குப்பென்று சிவந்தது.
    “ஐ டிட்ன்ட் மீன் யூ”
    “நோ… இட்ஸ் ஆல் ரைட்.. நானும் ஆண். அதே வர்க்கம், கேரி ஆன்.”
    அவள் உதட்டை மென்றுகொண்டே அவனை ஊடுருவுவது போன்று பார்த்தான். பிரீதாவின் கண்களிலிருந்து முத்து முத்தாக ஒரு மௌனத்தினிடையே நீர்த்துளிகள் உருண்டன.
    “பிரீதா” என்று ஒன்றும் புரியாமல் முனகினான்.
    அவள் சட்டென்று திரும்பி சமையலறைக்குப் போய் விட்டாள். பத்து நிமிஷம்… பதினைந்து நிமிஷம்… சிவா அங்கே ஒரு சம்பந்தமற்றவன் போன்று உட்கார்ந்திருந்தான்.
    அங்கே உட்கார்ந்திருப்பதா… எழுந்து செல்வதா என்று புரியாமல் கொஞ்சம் குழம்பினான்.
    சமையல் அறைக்கு உள்ளே போய் அவளை எந்த விதத்திலாவது தேற்ற வேண்டுமா என்று யோசித்தான்.
    பேசாமல் அங்கே உட்கார்ந்திருப்பதைத் தவிர தன்னால் எதுவும் செய்ய முடியாது என்று உணர்ந்து கொண்டவன் போன்று அமைதியாக சாஸரில் வைக்கப்பட்டிருந்த பப்பாளிக் கீற்றை ஸ்பூனில் கொஞ்சம் கொஞ்சமாக நறுக்கிக் கொண்டே அதை அருந்தாமல் வெறுமனே நறுக்கிக் கொண்டே அதன் சிதைவைக் கவனித்தான்.
    பதினைந்து நிமிஷம் கழித்து டிரஸ் மாற்றிக் கொண்டு வந்தாள். பிரீதா.
    பவுடர் டச்-அப் செய்திருந்தாள். அழுத முகமல்ல பழைய பிரீதா. இனிய, சுமுகமான, ஒளி பாய்ச்சுகின்ற பிரீதா.
    “சரி… நாம கௌம்புவோமா?” என்று அப்படி எதுவும் நடக்கவில்லை போன்று புன்னகையுடன் கேட்டாள்.
    “எங்கே?”
    “திஷ்யா வீட்டுக்குத்தான்”
    அவளை அழைத்துச் செல்லவே வந்திருக்கிறோம் என்பது சிவாவுக்கு அப்போதுதான் ஞாபகம் வந்தது.
    அவனும் எழுந்தான்.
    தொடரும்
    Share