ஐந்து கை ராந்தல் (24)

வையவன்

சாந்த்னி சௌக்கும், செங்கோட்டையும், குதுப்மினாரும், பிர்லா மந்திரும், குருத்வாரா ஸிஸ்கன்ஜும், ஜும்மா மசூதியும், ராஜகட்டமும், சாந்தி கட்டமும், ஜந்தர் மந்தரும், கனாட்பிளேஸும் பிரீதாவுக்கு உணர்ச்சிகளின் கலைடாஸ்கோப்பில் புதுப்புதுச் சித்திரங்களைத் தீட்டிக் காட்டின. அவள் சிரிப்பதும் வியப்பதும் ரசிப்பதும் சிவாவை விட வெற்றிவேலுக்கு திருப்தியாக இருந்தது. அவள் வந்தது சரி!

ஆக்ரா, தாஜ்மஹால், பதேபூர் சிக்ரி, மதுரா.

கட்டிடங்கள்.. காட்சிகள்… சரித்திரத்தின் மிஞ்சிய எலும்புக்கூடு போன்ற சாட்சிகள்.

ஓயாமல் ஒழியாமல் இறந்த காலத்தின் பாதுகாக்கப்பட்ட எலும்புக்கூடுகளைத் தரிசிக்கப் பறந்துவரும் டூரிஸ்டு பஸ்கள். பஸ்ஸில் ஏறி இறங்கி ஓடி ஓடிச் சுற்றிய அலுப்புகள்.

ஜல்தி ஆவோ… ஜல்தி ஆவோ.
அதோ அடுத்த ஊருக்குப் பறக்க ஒரு கூட்டம் அங்கலாய்த்துக் கொண்டு நகர்கிறது.
கடும் பனி வீசிய, கொடிய குளிர் நடுக்கிய ஓர் இரவுப் பயணத்தின் பின் தொங்குகின்ற லக்ஷ்மண்ஜூலா பாலத்தை மிதிக்கும் போது சிவா நினைத்தான்.
இது என்ன புதிர்?
கீழே கங்கை ஓடிக் கொணடிருந்தது.

நுரை கொப்பளித்துக் கொண்டு பெரும் சீற்றத்துடன் ஓடும் கங்கை.கனலில் தெரியும் காளி போன்று புனலில் தெரியும் சக்தி.
எங்கே ஓடுகிறாய் கங்கையே?
‘அன்னையே என்று கேள்’ அவனுக்குள்ளே யாரோ திருத்தினார்கள்.

‘எங்கே ஓடுகிறாய் அன்னையே?’
கங்கை அவனுடன் பேசினாள்.
‘வெகுதூரம் மகனே… வெகுதூரம்.”

‘மேடுகளைப் பிளந்து பள்ளத்தில் தாவி நீர்வீழ்ச்சிகளில் குதித்துக் கூத்தாடி கோடானு கோடி ஜீவன்களின் தலைவிதியைச் சுமந்து கொண்டு அவர்களை நீராட்டி அவர்கள் படகுகளைக் கரை சேர்த்து லட்சோப லட்சம் கதிர்மணிகளில் என் கருணையின் தீபங்களை ஏற்றிக் கொண்டு, என் உதரத்தில் கருக்கொண்ட உயிர்களுக்கு உருவளித்து, கற்பூரத்தோடு எரியும் பிணங்களைக் கரைசேர்த்து வெகுதூரம் மகனே… வெகுதூரம்.’

‘ஏன் ஓடுகிறாய் அன்னையே?’

‘விடுதலையை நாடி… அலைகடலின் ஆதரவை நாடி… பிறந்த இடத்திற்கு திரும்பிப் போகிறேன் மகனே.’
‘தோன்றியும் மறைந்தும் உதித்தும் கலந்தும் பின்பு ஒரே சுழற்சியின் மறு சுற்றில் மீண்டும் மீண்டும் உன் பயணம் நடந்து கொண்டேயிருக்கிறது. இதில் விடுதலை எங்கே அன்னையே?’

‘மகனே… விடுதலை என்பது அனுபவம். ஓய்வு ஒரு பந்தம். நிர்ச்சலனம் விடுதலையல்ல. நிஷ்டை ஒரு விடுதலையல்ல. இயக்கம்தான் விடுதலை.’

‘நாங்கள் நிராகார நிர்வாணத்தை விடுதலை என்கிறோம். அசைவின்மையை – யாவும் அவிந்த பரிபூர்ண சாந்தியை விடுதலை என்கிறோம்.’
கங்கை கலகலவென்று சிரித்தாள்.

‘மகனே… நீ சொல்லும நிர்வாணத்திலிருந்தே நான் பிறந்தேன். பரிபூரண சாந்தியின் பனிச் சிகரங்களிலிருந்தே நான் உதயமானேன்.

நீ சொல்லும் விடுதலையில் நான் அழிந்தது, இருந்தது, அழிந்தும் அழிந்த நினைவுகளுடன் நான் இருந்தேன்.
என் நானின் கனம் தாளாது போய் இதோ என்னை கோடி கோடி ஜீவன்களுடன் பகிர்ந்து கொள்ளப் புறப்பட்டிருக்கிறேன்.
செல்வேன். மீண்டும் வருவேன். பகிர்ந்து கொள். உனக்கென்று உன்னை எடுத்துக் கொள்ளாதே. உதறிவிடு. எல்லோரோடும் கரைத்துக் கலந்து உன்னை உதிர்த்துத் துளிர்த்து விடு. மீண்டும் மீண்டும் செய். அதுதான் விடுதலை.

கங்கையின் சிரிப்பொலி, பனிக் குகைகளிலிருந்து மீண்டு வந்த அவளது எதிரொலி, மனோ மயமாகிய அவளது ஆனந்த தாண்டவத்தின் சலங்கை ஒலி, விதிக்கிசைய ஓடியும் விதியை வென்று பரிகசிக்கும் அவளது நகைப்பின் வெற்றி ஒலி…
எல்லாவற்றையும் தனித்தனியே சிவா கேட்டான்.

அவள் கொண்டு வந்த நூறு கோடி வெள்ளங்களின் மௌனக் கதையைக் கேட்டான்.
நாளழிந்து மாதமிழந்து வருடமழிந்த போதும் ஓய்வு ஒழிவற்று தானழியாது ஓடுகின்ற அவள் உச்சரித்த மந்திரம் அவனுள் நிரம்பியது.

காலி கம்பள் வாலா மகராஜின் தியான ஆச்ரமத்தில் வரிசை வரிசையாக நின்ற குடில்களைக் கடந்தனர். செஞ்சாந்து பூசிய சிமெண்ட் பெஞ்சுகள் அணிவகுத்து நிற்கும் சாலையினூடே கவிந்த மர நிழல்களில் சிதறிய சூரிய ஒளியில் நடக்கும்போது மூவருக்குமே வெறும் டூரிஸம் என்ற கிளர்ச்சி அழிந்தது.

காடும் கங்கையும் நிசப்தமும்.
அவர்களுக்கு சத்தியத்தின் பிராகார வெளியில் நடப்பது போன்று ஓர் உணர்வு வந்தது.

எங்குமே நடக்கும் வியாபாரம் அங்கும் நடந்தது. மணி மாலை விற்றனர்… வளையல் விற்றனர்… தங்குவதற்கு இருப்பிடம் விற்றனர்.

விற்று விற்று வயிறு பிழைக்கும் அந்த உபாதைகளை நீங்கி சத்தியம் அந்த வான வெளியிலும் வீசிய காற்றிலும் பரவி நின்றது.

ரொட்டிக்கு மாவு பிசைந்தோர், மூட்டைகளிலிருந்து பழைய ரொட்டியைப் பகிர்வோர்.
“யெ ஹை உன்கா. ஆஷ்ரம்!” வழிகாட்டி வந்தவர் ஒரு கட்டிடத்தைக் காட்டினார்.

“போலோ குரு மகராஜ் கீ ஜே”
“ஹரி போலோ பாயி ஹரி போலோ”
“ஹர ஹர ஷங்கர்… ஜெய ஜெய ஷங்கர”
பாபா ஓம்கார்நாத்தின் இருப்பிடத்திலிருந்து ஓசைகள் வந்தன.

தோலுரித்த கோழிகள் போன்ற ஐரோப்பிய வெண்மை.

உழுத செம்மண் நிலம் போன்று, கரிசல் போன்று உவர் நிலம் போன்று, எத்தனை மனித நிறங்கள் சூழ மார்பை மறைக்கும் வெண்தாடியுடன் அந்த உருவம் உட்கார்ந்திருக்கிறது!
பாபா ஓம்கார்நாத் அவர்களைப் பார்த்ததும் பிரியமாகச் சிரித்தார்.

கனிந்த பழம் ஒன்று தன் கனிவின் இனிமையை எல்லோருக்குமாகப் பகிர்ந்தது போன்று ஓர் ஆனந்தம் அந்தச் சிரிப்பில் மிளிர்ந்தது.

அது வரவேற்றது. வாழ்த்தியது.
“பாபா, நான் மீண்டும் வந்திருக்கிறேன்.”
“வா மகனே”
“சிவாவையும் பிரீதாவையும் அழைத்து வநன்திருக்கிறேன்.”

“வாருங்கள் குழந்தைகளே.”
பிரீதாவுக்குள் எந்த மனித முகங்களைச் சந்தித்தும் ஏற்படாத அதிசயமானதொரு நெகிழ்ச்சி அவர் முகத்தைப் பார்க்கும்போது உண்டாயிற்று.

அவர்கள் வந்து உட்கார்ந்ததும் யாரோ ஜால்ராக் கட்டையும் மிருதங்கமுமாக ஹரிபஜன் செய்தார்கள். வலது கோடியில் இரண்டு ஐரோப்பியர்கள் (ஒரு வேளை அமெரிக்கர்களோ) அதற்கு முற்றிலும் தொடர்ற்றவர்கள் போன்று தியானத்தில் அமர்ந்திருந்தனர்.

நாலைந்து பேர் ஒன்றுகூடி சிறு குழுவாகப் பேசிக் கொண்டிருந்தனர். அறை மூலையில் யாரோ இருவர் தலைக்கு ஒரே ஸூட்கேஸை வைத்துக் கொண்டு எதிரும் புதிருமாகப் படுத்திருந்தனர்.

அங்கிருந்த எவருக்கும் குருஜி என்று ஒருவர் உட்கார்ந்திருக்கிற மாதிரியே தோன்றியதாகத் தெரியவில்லை. அத்தகைய இடங்கள் சிலவற்றை பிரீதா பார்த்திருக்கிறாள்.

அங்கே ஒரு மரியாதையும் சடங்கு மாதிரி ஓர் ஒழுங்குக் கட்டுப்பாடும் தெரியும்.
இங்கோ இயல்பாக ஏதோ ஒரு கல்யாண நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் போன்று கூடியிருந்தோர் சுதந்திரமாக இருந்தனர்.

எனினும் பாபா ஓம்கார்நாத் தான் இந்த முரண்பாடு போன்று தெரியும் சுதந்திரத்தின் மையமாக இருக்கிறார் என்று புரிந்தது.

“இவர்கள் உங்கள் ஆசிர்வாதத்தை வேண்டி வந்திருக்கிறார்கள் பாபா!” வெற்றிவேல் வந்த காரியத்தை விளக்குவது போல் அறிமுகம் செய்தான்.

“வழியனுப்பத்தானே மகனே!”
அந்த குழுவும் முற்றிலும் அன்னியர்களுக்கு மத்தியில் அவர்களுக்கு உரியவர் போன்று தன் தந்தை உட்கார்ந்திருப்பதும் சிவாவின் மனசில் ஓர் எதிர்ப்புணவைக் கிளப்பின.

தந்தையருக்கும் தனயருக்கும் மத்தியில் இருந்து வரும் ஓர் அடிப்படை எதிர்ப்புணர்வு அது.
ஒன்றிலிருந்து ஒன்று மாறுபட்டு நிற்க வேண்டும் என்ற வாழ்வியல் நெறியின் எதிர்ப்புணர்வு.
உன்னிலிருந்து நான் வந்தேன். ஆனால் நான் வெறும் நீயல்ல.

நீ கண்டது உனக்கு. நான் காண்பது எனக்கு. என்னை நான் உருவாக்கிக் கொண்டிருக்கிறேன் என்ற உயிரினத்தின் சுயேச்சையைக் குறிக்கும் போர்க் குரல் அது.
எல்லோரிடையிலும் அது எழுகிறது.

உயிர்த்துவத்தின் இடையறா ஓட்டம் தொடர அதுதான் அத்தியாவசியமாகிறது.
சிலர் அந்த எதிர்ப்புணர்வையை வென்று விடுகிறார்கள். சிலர் சமரசம் செய்து கொள்கிறார்கள். சிலர் இறுதி வரை அதனுடன் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

சிவா போராடிக் கொண்டிருந்தான்.

இதில் வேறொன்றும் கலந்திருந்தது. பொறுப்பை உதறிவிட்டு விடைபெற்றுக் கொண்டவர். இவர் விடுதலை பெற்றவர் என்று வெற்றிவேலால் வர்ணிக்கப்படுகிற இவர் என் தந்தை.

இவர் எதற்கு கைலாசம் போக வேண்டும். கைலாச சிகரத்தில் இவருக்கு என்ன காத்திருக்கிறது?
விடுதலையடைந்தவனுக்கு கைலாசமானால் என்ன கன்யாகுமரி ஆனால் என்ன? எல்லாம் சமம் தானே!
இவர் என்ன? விடுதலையடைந்தவரா? சாமியாரா? வேஷமா? ஒரு தொழில் முறை குரு மஹாராஜா? யார் இவர்?
வெற்றிவேலுக்கு இவர் மீது ஏற்பட்டுள்ள விளக்க முடியாத கவர்ச்சியின் அடிநாதம் என்ன?
இந்தக் கேள்விகள் நீர்ப் பரப்பில் ஒரு பழம் விழுந்ததும் ஓடி வந்து கவ்வுகின்ற மீன் கூட்டம் போன்று அவனுள் எழுந்தன.
ஞானமும் உண்மை தேடுதலும் ஒற்றையடிப் பாதைகள். ஒருவன் முதலில் நடக்கிறான். பலர் பின்பற்றுகிறார்கள்.

பின்பற்ற விரும்பாதவன் முதல் பாதை தேய்ந்து சாலையாகி, சத்தியம் தேய்ந்து சாமான்யமானதால் தன் சொந்தப் பாதையை தானே சமைக்கிறான்.

அது அவன் விதி, அவன் வழி.

சிவா பாதை தேடியவன். பின்பற்றுகிறவன் அல்ல. சமைப்பவன். இன்னொரு பாதையில் முரண்பாடுகள் காண்பவன்.
எனவே பாபா ஓம்கார்நாத்தின் பாதை மீது அவனுக்கு சந்தேகம் வந்தது.

“நான் வழியனுப்ப வரவில்லை” என்று துணிந்து சொன்னான்.
சுறுக்கென்று அவன் இயல்பு மாறியதை மற்ற இருவரும் கவனித்தனர்.
“நல்லது” என்றார் பாபா.

அவர் முகம் பழையபடியே சாந்தமாயிருந்தது. அவர் கண்கள் ஆழ்ந்த கருணையோடு அவனது எதிர்ப்புணர்வையே தரிசிப்பவர் போன்று அவனைப் பார்த்தார்.
அவர்கள் மூவரும் தங்கள் பைகளையும் சூட்கேஸையும் இறக்கி வைத்துவிட்டு சாவகாசமாக உட்கார்ந்தனர்.

சற்று நேரத்தில் இரண்டு அன்பர்கள் அவர்களுக்கு சுடச்சுட மூன்று கோப்பைகளில் பால் கொண்டு வந்து கொடுத்தார்கள்.
“வழியனுப்புதல் ஒரு சம்பிரதாயம் தானே! மகனே, இவர்கள் ரிஷிகேஷிற்கு வருவது இது முதல்முறை இல்லையா?”
“ஆமாம் பாபா…” என்று பதிலளித்தான் வெற்றிவேல்.

“நல்லதே நடக்கும்” என்று வாழ்த்துவது போல் சொன்னார் பாபா.
வெற்றிவேல் தன் பையை அவிழ்த்து ஒரு எவர்சில்வர் தட்டை எடுத்தான். வழியில் வாங்கிய பூக்கள் செல்போன் உறையில் இன்னும் வாடாமல் காத்திருந்தன.

கொண்டு வந்திருந்த பழம், புஷ்பம், கற்கண்டு எல்லாவற்றையும் ஒரு சீடரிடம் கொடுத்தான். அவர்கள் வந்தது ஏன் என்று புரிந்து கொண்டவர் மாதிரி பாபா சிரித்தார், வெற்றிவேல் கேட்டான்.
“எப்போது புறப்படுகிறீர்கள்?”
“நாளை மறுநாள் உதயத்தின் போது”
“எப்போது திரும்புவீர்கள்?”
பாபா பற்கள் ஒளிவீசச் சிரித்தார்.

அவர்கள் பதிலுக்குக் காத்திருந்தனர்.
பிரியமாக ஒவ்வொரு மனசிலும் தேன் துளிர்ப்பது போன்று அவர்களை அவர் பார்த்தார்.

“ஆனந்தமாய் இருங்கள்” என்று இரு கைகளையும் நீட்டி அவர்களை வாழ்த்திவிட்டு மீண்டும் கை கூப்பிக் கும்பிட்டார்.
“எப்போது திரும்புவீர்கள் பாபா?”
மீண்டும் பாபா சிரித்தார்.

அந்த சிரிப்பில் ஒரு விடைபெறல் தொனித்தது.
“எதற்கு கைலாசம் போகிறீர்கள்?” சிவா குறுக்கிட்டான்.
“பிரயாணத்தில் அது ஒரு போக்கிடம்”
“அது ஏன் கைலாசமாக இருக்க வேண்டும்?” சிவா குதர்க்கமாகக் கேட்கிறான் என்று பிரீதாவுக்குப் பட்டது.
“ஷ்ஷ்… சிவா” என்று அவனை அவள் தடுக்க முயற்சித்தாள்.

“லீவ் ஹிம்” என்று வெற்றிவேல் அவளுக்குச் சொன்னான்.
சுற்றிருந்தவர்களை கைகளால் வரிசையாகச் சுட்டிக்கபாட்டி “இவர்கள் தீர்மானம்” என்றார்.
“நீங்கள் ஏன் அதை மறுக்கக் கூடாது?”
“மறுப்பில் பந்தமுண்டு. இசைவின் பந்தம். எதிர்ப்பின் பந்தம்”
“உயிர் உள்ளவரை பந்தமும் உண்டு.”

“உண்மை… உயிர் உள்ளவரை பந்தமும் பந்தத்திலிருந்து அகலும் சுதந்திரமும் உண்டு.”
திடீரென்று அங்கு நிலவிய எல்லா சந்தடிகளும் ஓய்ந்தன.

அவர் பேசுவதைக் கேட்கும் உண்மையான ஆர்வம் ஒருங்கிணைந்த வடிவமாய் அங்கு சூழ்ந்தது.
“எது சுதந்திரம்?”
“இயல்பு”
“இயல்பு தீமையானால்?”
“நன்மை தீமை என்பவை மதிப்பீடுகள். அவை மாறும்.”
“இயல்பும் மாறுமா?”
“தன் இயல்பு எதுவென உணரும் ஒளி வரும் வரை எதுவும் மாறும்.”
“அப்போது மாறாத இயல்புதான் சுதந்திரமா?” சிவா மடக்கினான்.

“மாறாத என்பது அடைமொழி. இயல்பின் மீது சுமத்தும் பளு. இயல்பு என்பது லகு. சுலபம்.. சாந்தம்.”
அவன் மேலும் மேலும் கேள்விகளால் பாபாவை வேட்டையாடுவது போன்று பிரீதாவுக்குத் தோன்றியது. அவள் அதைத் தவிர்க்க விரும்பினாள்.

“பாபாஜி… எனக்கு ஒரு செய்தி கொடுங்கள்.”
சிவா அவள் குறுக்கிட்டதைக் கண்டு ஆச்சரியமுற்று அவளைப் பார்த்து விட்டுப் பின்பு பாபாவை நோக்கினான்.
பாபா அவர்கள் இருவரையும் மாறி மாறிப் பார்த்தார். அவரது குளிர்ந்த பார்வை பிரீதாவின் மீது சென்று சிறிது நேரம் தங்கிற்று.

“சாந்தி வரும் குழந்தாய்.”
அந்த சொற்களில் இருந்த ஆதுரம் தொட்ட குளுமையில் அவள் உடைந்து போனாள். விம்மி விம்மி விம்மி விம்மி பிரீதா அழத் தொடங்கினாள்.

அந்தச் சூழ்நிலையில் அவளது அழுகை ஒலி உலகின் ஒட்டு மொத்த துயர் போன்று கூர்மையுற்று ஒன்று குவிந்து எல்லோர் மனசையும் தாக்கிற்று.

அவள் எந்த இழப்பிற்கோ, எந்த வேதனைக்கோ அழாமல் தன் துயரப் பொதி முழுவதையும் அவிழ்த்து அதன் தாள முடியாப் பாரத்திலிருந்து அகன்று ஒதுங்கி விடுவது போன்று ஐந்து நிமிஷத்திற்கும் மேலாக வாய் விட்டு அழுதாள்.
எல்லோரும் சித்திரத்தில் எழுதிய உருவங்கள் போன்று அமர்ந்திருந்தனர்.

அவளிடம் இவ்வளவு துயரம் பொதிந்திருக்க முடியுமா என்பதை சிவாவே முதன் முறையாக அப்போது தான் உணர்ந்தான், அவன் நெஞ்சு கரைந்தது.

“மனிதப் பிறவி இவ்வளவு பெரிய துயரைத் தாங்கியிருக்க வேண்டிய அளவு என்ன சபிக்கப்பட்டதடா தெய்வமே” என்று அவன் நெக்குருகினான்.

மாறாத புன்னகையுடன் கனிவுடன் ஆசிர்வதிப்பது போன்ற பிரியத்துடன் அவள் அழுது முடிப்பது நல்லது என்ற சித்தத்துடன் பாபா அவளைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

“பாபா… எப்போது சாந்தி வரும்?”
தான் இரண்டு ஆண்களுடன் கூட வந்தோம் என்ற உணர்வோ, பல ஆண்களின் மத்தியில் அமர்ந்திருக்கிறோம் என்ற கூச்சமோ இல்லாமல் வெகு இயல்பாக விம்மிக் கொண்டே கேட்டாள்.

“வரும் குழந்தாய்… விரைவில் வரும்”
“வருமா பாபாஜி?”
“நிச்சயம் வரும்”
ஐந்து நிமிஷம் கழித்து அவள் குளித்து முழுகிய மாதிரி புத்துணர்ச்சியுடன் தலை நிமிர்ந்தாள்.

தொடரும்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.