ஐந்து கை ராந்தல் – 29
வையவன்
வெற்றிவேல் நேராக அம்மாவிடம் வந்து அவர்களையும் அழைத்துக் கொண்டு சிங்காரப்பேட்டை போயிருக்கிறான்.
திருப்பத்தூரில் வீடு பூட்டியிருந்தது. பக்கத்து வீட்டில் சொன்னார்கள். அம்மா தான் எழுதிய கடிதத்தையே பார்த்திருக்க முடியாது என்று புரிந்தது.
சிவா சிங்காரப்பேட்டைக்குப் பஸ் ஏறினான்.
இறங்கி ஐயர் ஹோட்டலில் பால் சாப்பிட்டு விட்டு அவர் எடுத்துக் கொடுத்த சைக்கிளில் புளியம்பட்டிக் காட்டு நிலத்துக்குப் போனான்.
தூரத்தில் நிலத்தை நெருங்கும் போதே வித்தியாசம் பளிச்சென்று தெரிந்தது.
ஆங்காங்கே நிலத்தின் நடுவிலிருந்த சிறு சிறு பாறைகள் காணப்படவில்லை.
என்ன செய்திருப்பான்? குழி தோண்டிப் புதைத்திருப்பானோ? கூழாங் கற்களும் சரளைக் கல்லும் சுத்தமாகப் பொறுக்கப்பட்டிருந்தன.
இருபது ஏக்கர் நிலமும் புல்டோஸரின் ராட்சஸ ஆதிக்கத்தில் மேடும் பள்ளமுமின்றி கதறி அடித்துக் கொணடு சமமாயிருந்தது.
நாற்புறமும் முள் கம்பி கட்டிய கல் கம்பங்கள் வேலி வகுத்து நின்றன. நிலம் நெருங்கு முன் சாலையின் ஒரு சிறு மேட்டில் சைக்கிளில் காலை ஊன்றி சிவா நின்றான்.
வெற்றிவேலின் நிலம் அந்த முன் கம்பி வேலியில் ஒரு கட்டில் வடிவில் காட்சியளித்தது.
கரிசல் மண், கறுப்புக் கம்பளி விரித்த மாதிரி. அந்த பெரும்பரபரப்பு ஒரு சீராகச் சமமாக உதறி தூசு தும்பு தட்டப்பட்ட விரிப்பு போன்று தென்பட்டது.
சமீபத்திய மழையில் சிறிது சிறிதாக, குருத்துக் குழந்தைகள் போன்று பயிர்ப் பசுமை தலைகாட்டியிருந்தது.
கறுப்புக் கம்பளி விரித்த கட்டில்! உவமை மாறி விட்டது! அந்த மென்மையான பசுமை கட்டிலைத் தொட்டிலாக்கியிருந்தது.
வெற்றிவேல்! சிவாவுக்கு நெஞ்சு விம்மிப் பூரித்தது. அவன் தான் ஆண் மகன் என்று ஒரு சிலாகிப்பு அந்த பூரிப்பினிடையே பூத்தது.
கார்ப் பந்தயம் விட்டுக் கொண்டு, நாடு சுற்றிக் கொண்டு பரம்பரைப் பணக்கார மைனர் போன்று வேட்டைத் துப்பாக்கியோடு புதிய சாகசங்களைத் தேடிக் கொண்டு அலைந்த அந்த வெற்றிவேலா இவன்!
“ஹி லிபரேட் மீ” என்று பாபாவைப் பற்றி வெற்றிவேல் சொன்ன வாக்கியம் பளிச்சிட்டது.
பாபா எதிலிருந்து வெற்றிவேலை விடுதலை செய்திருக்கிறார்?
அலைச்சலிலிருந்தா…? அற்புதங்களைத் தேடும் முடிவே இல்லாத ஆர்வத்திலிருந்தா…? ரொமாண்டிஸிஸத்திலிருந்தா…?
சற்று தூரத்தில் கல் கம்பம் கட்டப்பட்ட முள்வேலியின் மத்தியில் வெற்றிவேலின் விடுதலை மௌன மொழியில் பேசிக் கொண்டிருந்தது.
சிவா சைக்கிளில் உட்கார்ந்தவாறே கால் ஊன்றி யோசித்தான்.
மண்ணை விடப் பெரிய பந்தம் எது?
இந்த நிலத்தை விட வலிமை மிக்க பந்தம் எது?
விடுதலை என்ற பெயரில் இவன் இந்த நிலத்தோடு பந்தப்பட்டு விட்டானோ?
கானகங்களில் புல் வெளிகளில் மலைத் தாழ்வாரங்களில் கட்டற்ற சுயேச்சையோடு திரிந்த குதிரை இந்த நிலம் என்ற லாயத்திற்குள் அடக்கிக் கட்டப்பட்டு விட்டதோ?
இது விடுதலையா…?
சுதந்திரமற்ற ஒரு விடுதலை.
சிவாவின் சிந்தனையில் அடுத்த அலை எழுந்தது. முன்பு வந்த எண்ணத்தை வாரி வழித்துத் தன்னோடு கரைத்துக் கொள்வது போன்ற பேரலை.
சுதந்திரம் என்பது என்ன?
என்ன சக்தி வாய்ந்த கேள்வி!
அதற்கு விடை தேடி ஹிமாசல சிகரங்களுக்கும் நதி தீரங்களுக்கும் நகரின் இரைச்சல்களுக்கும் ஓய்வு ஒழிவற்ற சமுத்திரக் கரைகளுக்கும் வருஷக் கணக்கில் திரிய வேண்டும் போல் வலிமை வாய்ந்த கேள்வி.
இதற்கு யார் விடை சொல்லப் போகிறார்கள்? அப்படிச் சொன்னாலும் அது ஒரு பதிலாகவா இருக்கப் போகிறது?
நூறு விடைகள்… ஆயிரம் லட்சம் கோடி பல கோடி விடைகள்.
வெற்றிவேலுக்கு விடை கிடைத்திருக்கலாம். பாபா அதை வழங்கியுமிருக்கலாம்.
இந்த இருபது ஏக்கரில் விளையும் பயிரில், சிருஷ்டியின் சுவாசம் போன்று பூமி வெளியிடும் வெப்பப் பெருமூச்சில், இதில் பாயும் நீரின் பரிசுத்த மகிழ்ச்சியில், மழை வராத போது ஏங்கும் தூய்மையான வருத்தத்தில் அந்த சுதந்திரம் இருக்கலாம்.
உழுது விதைத்து இந்த பூமியின் ஜீவன் மங்கி விடாது போராடி இதன் மணி வயிறு திறந்து அதில் உயிர் வளர்க்கும் மாணிக்கங்கள் குலுங்கும் போது அந்த சுதந்திரம் தரிசிக்கப்படலாம்.
சிவா மேலும் யோசித்தான்.
உழவு, நடவு, அறுப்பு என்று ஓயாது சுழலும் பருவ காலங்களின் சுற்றில் இயங்கி வட்டமிடும் மனித உழைப்பில் அது பிரத்யட்சமாகலாம்.
அந்த உழைப்பின் இடைவெளிகளில் கேட்கும் ஓய்வின் உல்லாசத்தின் போதும் அது தோன்றலாம்.
சிவா தனக்குள் சிரித்துக் கொண்டான்.
இந்த சிந்தனைப் போக்குக்கு நவீன உலகம் ஒட்டியிருக்கும் லேபிள் என்னவென்று அவனுக்கு நினைவு வந்தது. பிரிமிடிவிஸம்… ஆதி மனித வாதம்.
வெற்றிவேல் ஆதி மனித வாதியாகி இருக்கிறானோ! யந்திர உலகம் தொழிற்சாலைகளையும் பிரம்மாண்டமான யந்திரக் கருவிகளையும் சிருஷ்டித்துச் சிருஷ்டித்து சந்தை தேடி அலையும் ஒரு நவீன யுகத்தில் ஆதி மனித வாதத்தில் விடுதலையையும் சுதந்திரத்தையும் கண்டுபிடித்திருக்கிறானோ!
என்ன நஷ்டம்?
இதில் யாருக்கு என்ன குடி முழுகி விட்டது?
வெற்றிவேல் தன் விடுதலையைத் தேடுகிறான்.
எல்லோரும் அப்படியே. மனித உயிரைக் காப்பாற்றுவதற்கு பெரும் பெரும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கும் இதே நவீன உலகம் அதை பூண்டும் வேருமின்றிப் பொசுக்கி விடவும் அதைவிடப் பெரிய முயற்சியில் இறங்கியிருப்பது ஞாபகம் வந்தது.
அது கூட விடுதலை தான் தேடுகிறது. ஆயுதங்களிலிருந்து விடுதலை. அச்சத்திலிருந்து விடுதலை.
உலகில் வெகு காலமாக ஒரு சந்தர்ப்பத்திற்காக எதிர்பார்த்து உயிர் தாகத்தோடு காத்துத் தவித்துக் கொண்டிருக்கும் யுத்தக் கருவிகளை எண்ணிப் பார்த்தான் சிவா.
நாளை என்பதற்கு எந்த நிச்சயமுமில்லாமற் போய் விட்ட நாள் இன்று.
மனிதர்கள் சூறாவளி அச்சுறுத்தும் சமுத்திரக்கரையில் தமது கனவுகள் என்னும் மணல் வீடுகளை இன்னும் தைரியமாகக் கட்டிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
நாளை நிச்சயமில்லை தான்.
எனினும் இன்னும் ஆஸ்பத்திரிகள் திறக்கப்படுகின்றன. கல்வி நிலையங்கள் திறக்கப்படுகின்றன. பூமியின் முன்பு மண்டியிட்டது போய் அதைப் பலாத்காரம் செய்து பயிர்களை விளைவித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
அச்சுறுத்தல்களுக்கிடையே நம்பிக்கையின் பிஞ்சுப் பாதங்கள் கால் தண்டை குலுங்க ஓடியாடிக் கொண்டு தானிருக்கிறது.
இங்கு தான் சுதந்திரம்.
இதுதான் சுதந்திரம்.
யுத்தமே… விதியே… நீ என்னை சர்வ நாசமாக்கி விடுவாயெனினும் நான் அஞ்ச மாட்டேன்.
என் விளையாட்டை நான் விளையாடியே தீர்ப்பேன். சூறாவளியின் சீற்றமே, நீ வேண்டுமானால் எனது மணல் வீடுகளை அழித்துக் கொள். அதுதான் உன்னால் முடியும்.
என்னால் கட்ட முடியும்.
ஒருவேளை நான் உயிர் பிழைத்திருந்தால் கட்ட முடியும்.
நீ அழி. நான் உருவாக்குவேன்.
நான் இல்லையெனில் என் வம்ச வித்தின் ஏதோ ஓர் ஈற்று அதை சாதிக்கும்.
பிரிமிடிவிஸம்.
அந்த லேபிளைக் குத்திய உலகம் ஆயிரக்கணக்கான மாறுதல்களுக்கு மார்தட்டிக் கொண்ட போதும் அடிப்படையில்இன்னும் அதே ஆதி மனித விதிகளில் நிற்பதை உணர்ந்தான்.
நல்லது வெற்றிவேல்… நீ பிரிமிடிவிஸ்டாகவே இரு. நியூட்ரான் குண்டுகளைக் கண்டுபிடித்து அச்சத்திலிருந்து உலகம் விடுதலைக்கு அங்கலாய்க்கட்டும்.
நீ நிலக்கடலை பயிரிட்டு உன் விடுதலையைத் தேடு.
சிவா அங்கு தான் வெகு நேரம் நின்று விட்டதை உணர்ந்து சைக்கிள் மிதித்தான்.
“வா சிவா” என்று அம்மாதான் வரவேற்றாள்.
ஒரு கீற்றுக் கொட்டகையின் கீழே கயிற்றுக் கட்டிலில் ஒரு விரிப்பின் மீது பளிச்சென்று புதுப் புடவையும் நெற்றியில் குங்குமமும் நிறைவுமாக உட்கார்ந்திருக்கும் அம்மாவைப் பார்ப்பது அவனுக்கு புதுமையாக இருந்தது.
அம்மா எவ்வளவு லட்சுமீகரமாக இருக்கிறாள்?
பக்கத்தில் ஒரு ஈஸிசேரில் சாய்ந்து அம்மாவிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்த வெற்றிவேல் தலையைத் திருப்பினான்.
“டேய்… லெட்டர் கூடப் போடலியே” என்று சட்டென்று எழுந்தான்.
“மடையா… இப்படித்தான் எனக்குத் தெரிவிக்காமே அம்மாவைக் கூட்டிட்டு வர்றதா?” என்று செல்லமாகத் திட்டிக் கொண்டே சிவா சைக்கிளை ஓரமாக நிறுத்தினான்.
“ஓஹோ… ஐயாவுக்கு லெட்டர் போட்டு பர்மிஷன் வாங்கிட்டு தான் அம்மாவைக் கூட்டிட்டு வரணுமோ!”
அம்மா உனக்கு மட்டும் சொந்தமில்லை என்ற பாந்தவ்யம் வெற்றிவேலின் குரலில் மௌனமாக ஒலித்தது.
“அதுக்கில்லே, நான் அம்மாவை மெட்ராஸுக்கே அழைச்சுட்டுப் போகணும்ணு லெட்டர் போட்டிருந்தேன். அவங்க அதைப் பார்க்கிறதுக்கு முன்னாடியே நீ கூட்டிட்டு வந்திருக்கே!”
“எல்லாம் நல்ல விஷயம் பேசத்தான் இவன் என்னைக் கூட்டி வந்திருக்கான்டா.”
“நல்ல விஷயமா?” காலியாயிருந்த ஒரு மடக்கு நாற்காலியில் போய் உட்கார்ந்த சிவாவுக்கு மனசு துணுக்குற்றது.
“என்னடா அது?” என்று வெற்றிவேலைத் திரும்பிப் பார்த்தான்.
“அவன் சொல்ல மாட்டான். நான் சொல்றேன். கல்யாண விஷயம்!”
“யாருக்கு?”
“வெற்றிவேலுக்குத்தான்”
அப்பாடா… என்று ஒரு நிம்மதிப் பெருமூச்சு வந்தது.
“இதென்னம்மா இவன்… எங்கிட்டே சொல்லாமே ஒங்ககிட்டே மட்டும் சொல்லியிருக்கான்” என்று சண்டை பிடிப்பது போல் ஆரம்பித்தான்.
“ஒங்கிட்டே சொல்லி என்னடா புண்ணியம்? நீ சின்னப் பையன்… அம்மா கிட்டே தான் சொல்லணும்.”
“நல்ல விஷயம் பேசறதுக்கு முன்னாடி எனக்கு இளநீர் கொண்டு வரச்சொல்! தாகமா இருக்கு.”
“இளநீர் தானே… அஞ்சு வருஷம் கழிச்சு வா. அற்புதமான இளநீர் தர்றேன். இப்பதான் தென்னங்கண்ணு வச்சிருக்கேன்!”
சிவா நிலத்தின் மீது மீண்டும் பார்வையை ஓட்டினான்.
“யு ஹாவ் டன் எ மார்வல்!” என்றான்.
“என்னப்பா சொல்றான் வேலு?”
“ஏய்… இங்கிலீஷ் என்னடா வாழுது. அம்மா இருக்காங்க இல்லே.”
“ஐ ஆம் சாரி…” என்று சொல்லி நாக்கைக் கடித்து தப்புமா, இவன் நிலத்திலே ஒரு அதிசயத்தையே பண்ணியிருக்காண்ணு சொல்ல வந்தேன்!”
அம்மா பெருமிதத்தோடு அதை ஆமோதிப்பது போல் புன்னகை செய்தாள்.
அந்தப் புன்னகையை அம்மாவிடம் கண்டு எவ்வளவு நாளாகிறது! அது வெற்றிவேலின் உழைப்பிற்கு வழங்கிய பதக்கம். இது அவனுக்குத் தெரியுமோ தெரியாதோ… சிவா அதைப் புரிந்து கொண்டான்.
“மோர் குடிக்கிறியா சிவா!”
“கொண்டு வரச் சொல்லு.”
“டேய் காத்தாடி… செம்பகத்துட்டே சொல்லி ஒரு டம்ளர் மோர் வாங்கியா” என்று கூரை அருகில் சற்றுத் தூரத்தில் வீட்டின் கீழே நின்ற ஒரு அரை நிஜார் பையனிடம் குரல் கொடுத்தான்.
“தோ வர்றேன் மொதலாளி” பையன் ஓடினான்.
“டேய், நீ எப்படா முதலாளி ஆனே?”
“அவங்க கூடவே வயல்லே எறங்கி வேலை செஞ்சு அவங்க குடிக்கிற கூழையே குடிச்சும் கூட இந்த மரியாதையை விட மாட்டேன்றாங்க. எத்தனையோ தடவை சொல்லிப் பார்த்துவிட்டுட்டேன். எனக்கு அது ஒரு புனை பெயர்னு சமாதானம் பண்ணிக் கிட்டேன்!”
“நல்லது முதலாளி… எப்ப கல்யாணம்?”
“ஏண்டா சிவா” என்று அம்மா குறுக்கிட்டான். “நீ பொண்t யாருண்ணு கேக்கவே இல்லியே?”
“அவன் சொல்லவே இல்லியே. கல்யாணத்தன்னிக்கு பாத்துக்கினா போவுது.”
“எல்லாம் ஒனக்குத் தெரிஞ்ச பொண்ணுதான்” என்று அம்மா நிறுத்தினாள்.
யார்?
அந்தக் கேள்வி திடீரென்று கேட்ட இடியொலி மாதிரி அவன் மனசை அதிர்வித்தது. யார்? யார்?
“நீயா சொல்லு பாப்போம்.”
“அவன் சொல்லிடுவாம்மா. அவனுக்கும் தெரியும்” என்று வெற்றிவேல் சொன்னான்.
சிவாவை ஒரு பயம் மெதுவாக வந்து கவ்விற்று.
அப்படியிருக்குமா? தன் மனசு என்னவென்று தெரியாமல் வெற்றிவேலுக்கு அப்படி ஓர் ஆசை வந்திருக்குமா? வந்திருந்தால் என்ன செய்வது?
“தெரியலே” அவன் தலையசைத்தான்.
“பிரீதாவாமே”
சட்டென்று ஒரு நிம்மதி, சுகமான காற்று மாதிரி அவன் மனசில் பரவிற்று.
“ஈஸிட்… என்ன துணிச்சலான, பொருத்தமான அற்புதமான செலக்ஷன்டா வெற்றிவேல்!” என்று எழுந்து வந்து அவனுக்குக் கை கொடுத்தான்.
“அதுவும் சம்மதிக்கணுமே! அதான் எனக்கு கவலையா இருக்கு. மெட்ராஸிலே இருக்கிற பொண்ணு மலையாளத்துப் பொண்ணு. ஒறவு ஜனசந்தடி இதையெல்லாம் விட்டுட்டு வருமாண்ணு எனக்கு யோசனையா இருக்கு!” என்றாள் அம்மா.
“சம்மதப்பட்டா பண்ணிக்குவோம். அது யோசிச்சா வேண்டாம். இவ்வளவு தானேம்மா!” என்று வெற்றிவேல் லகுவாக அம்மாவைக் கவலையிலிருந்து விடுவித்தான்.
“நாளைக்கு போய் மொதல்லே நான் பொண்ணை பார்க்கறேன். அப்பறமா பேசுவோம். மோரை வாங்கிக் குடிப்பா” என்று அம்மா முடித்தாள்.
தொடரும்