Featuredஇலக்கியம்பத்திகள்

தோழமையுடன் ஒரு பயணம் – 3

ஸ்ரீலங்கா (பகுதி 3)

நிர்மலா ராகவன்

சிங்கள மொழியில், வில்பட்டு என்றால் ‘இயற்கை ஏரிகள்’ என்று பொருள். பெயருக்கேற்ப, அறுபது ஏரிகள். அவைகளில் வெள்ளை நிற அல்லிப்பூக்கள் அழகாக மலர்ந்திருந்தன. வடமேற்குக் கடற்கரையை ஒட்டிய இதில் வரட்சியான நிலமும் உண்டு. அலையடிக்கும் கடல் பகுதியும் இருந்தது.

alli
ஜீப் ஓட ஆரம்பித்தது. கடல் காற்றில் அசைந்த மரக்கிளைகளிலிருந்த முட்கள் என் முகத்தைக் கீறாதிருக்க அவ்வப்போது முகத்தைத் திருப்பிக்கொள்ள வேண்டியிருந்தது. மல்லிகை, மருதாணி — இரண்டு மரங்களைத் தவிர, மரங்கள் அடர்ந்திருந்த அக்காட்டில் வேறு எதன் பெயரும் தெரியவில்லை.

வழி நெடுகிலும் பாம்புப் புற்றுகள். தெருவின் குறுக்கே ஓடிய கீரி, மரத்தடியில் விழித்துக் கொண்டிருந்த மான் கூட்டம். தன் கூட்டத்திலிருந்து விலகி, எங்கள் வாகனத்திற்கு முன்னால், அதன் ஒலி கேட்டு பயந்து குடுகுடுவென ஓடி சிரிப்பு மூட்டிய குட்டி மயில் `தனியாப் போகாதேன்னு சொன்னா, கேட்டியா?’ என்று தாய் மயிலிடம் டோஸ் வாங்கியிருக்கும்). ஆடி அசைந்தபடி, நிறைய புகைப்படங்கள் எடுக்க வசதி செய்து கொடுத்த கரடி. சில ஏரிகளில் முதலைகள். விதவிதமான நீர்ப்பறவைகள்.

அக்காடு மிருகங்களுக்குச் சொந்தமான இடம். மனிதர்கள் அவைகளுக்கு மதிப்பு கொடுத்து, எந்த சப்தமும் போடாது, பார்த்து ரசிப்பதுடன் நிறுத்திக் கொண்டதால் அவை பயப்படுவது கிடையாது. எங்கள் பக்கத்திலேயே ஒரு புலியின் கால்தடங்கள். நல்லவேளை, இரவிலேயே உலவிவிட்டுப் போய்விட்டதோ, இதை எழுத உயிர் இருக்கிறதோ!

நான்கு மணி நேரம் போனதே தெரியவில்லை. தலைமுடியை முகத்தில் பறக்கவிட்ட கடல்காற்றும், மனித நடமாட்டமேயற்ற காட்டுப் பகுதியும்! ஆகா! பல தருணங்களில் கண்ணை மூடிக்கொண்டு, நான் எங்கேயிருக்கிறேன் என்பதை நினைவுபடுத்திக்கொண்டேன். அந்த அனுபவம் ஓர் ஆன்மிக உணர்வை அளிப்பதாக இருந்தது.

எங்கள் இருப்பிடத்துக்கு வந்ததும், எலுமிச்சை சாறு அளிக்கப்பட்டது. மொழிப் பிரச்னை இருந்ததால், வீட்டுச் சொந்தக்காரரை நான் தலை குனிந்து வணங்கி, விடைபெற்றேன். `ஆயு போவன்!’ (ayu bovan) என்றும் சொல்லி வைத்தேன். சிரித்துவிட்டு, அதையே திருப்பிச் சொன்னார்.

‘உங்களுக்கு நீண்ட ஆயுள் வாய்க்கட்டும்!’ என்ற பொருளானாலும், ஒருவரை வரவேற்கத்தான் அத்தொடரைப் பயன்படுத்துவார்களாம். ஏதோ, முயற்சித்து நம் மொழியில் ஒரு வார்த்தையாவது கற்று வைத்திருக்கிறாளே என்று அவர் சந்தோஷப்பட்டிருக்க வேண்டும்!

வழியில், தெருவை ஒட்டி இருந்த சாப்பாட்டுக் கடையில் மதிய உணவு. மீண்டும் சைகைதான். உள்நாட்டில் விளையும் சிவப்பு அரிசியில் இடியாப்பம் லேசாக, சுவையாக இருக்கிறது. எல்லா இடத்திலும் விரும்பிச் சாப்பிட்டோம். துருவிய தேங்காயுடன் உப்பு, ஊசி மிளகாய் சேர்த்து, coconut sambol என்ற ஒரு பதார்த்தம் எல்லா உணவுடனும் அளிக்கப்படுகிறது. (மலாயில் sambal என்றால் துவையல்). காரமாக இருந்தாலும் நல்ல ருசி. கட்டை விரலை உயர்த்தி என் பாராட்டைத் தெரிவித்தேன்.

அடுத்து, அனுராதபுரத்தில் சில மணி நேரங்கள். இது ஒரு யுனெஸ்கோ உலகப் பாரம்பரிய தளம் (world heritage site). பரந்த இடம். மரங்கள் அடர்ந்த பகுதியில் பல ஸ்தூபிகள். உள்ளே கார்கள் போக வசதியில்லாததால், ஆட்டோ வைத்துக்கொண்டோம்.

கி.மு. ஒன்றாம் நூற்றாண்டில் கட்ட ஆரம்பித்து, இதுநூறு வருடங்களுக்குப்பின் கட்டி முடிக்கப்பட்ட இந்த ஊர் ஒரு காலத்தில் இலங்கையின் தலைநகராக விளங்கியது. இந்தியா மற்றும் ஐரோப்பாவுடன் வர்த்தகத் தொடர்பு இருந்ததற்கான சான்றுகள் இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளன. 10,000 புத்த பிக்குகள் இவ்விடத்தில் தங்கிப் படித்தார்களாம். அங்குள்ள ஒரு தொல்பொருள் காட்சிசாலையில், புத்தருடைய கால்தடங்களை வைத்திருக்கிறார்கள். சரித்திரப் பிரசித்தி வாய்ந்த இடம் அனுராதபுரம்.

தொடரும்

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க