இலக்கியச் சித்திரம் – இனிய பிள்ளைத்தமிழ் – 1
– மீனாட்சி பாலகணேஷ்.
பைந்தமிழ்ப் பின் சென்ற பச்சைப் பசும் கொண்டல்!
பிள்ளைத்தமிழ்ச் சிற்றிலக்கிய நூல்கள் கடவுளரைக் குழந்தையாகக் கண்டு அவர்களின் உடல், உள்ள வளர்ச்சியை அழகுற விவரித்துப் போற்றுகின்றன. குழந்தைகளின் வளர்ச்சியை பத்துப் பருவங்களாகப் பிரித்து ஒவ்வொரு பருவத்துக்கும் உண்டான செயல்களை விவரிக்கும் போது, அப்பாடல்கள் தமிழ் மொழியின் இனிமை, இலக்கிய நயம், சந்த நயம், வண்ணம், பலவகையான அணிகள், உவமங்கள், தொன்மக் கருத்துக்கள் முதலியனவும் இணைந்து இயைந்து மிளிரும் அழகையும் ரசிக்கும் விதத்தில் அமைந்துள்ளன என்பது ஒவ்வொரு தமிழனும் எண்ணியெண்ணிப் பெருமிதம் கொள்ள வேண்டிய ஒன்றாகும்.
நல்லிசைப் புலமைச் சான்றோர் பலர் இலக்கியச்சுவை ததும்பும் பிள்ளைத்தமிழ் இலக்கியங்களைப் பாடி வைத்துள்ளனர். கிட்டத்தட்ட ஐநூறுக்கும் மேற்பட்ட பிள்ளைத்தமிழ் இலக்கியங்கள் இயற்றப்பட்டுள்ளன. பல பாடல்களில் இப்புலவர் பெருமக்கள் விவரிக்கும் காட்சிகள், அருமையான சலனச் சித்திரங்கள் போன்று உள்ளத்தைக் கொள்ளை கொள்வன. ஒவ்வொன்றும் பலவிதமான இலக்கிய நயங்கள் கொண்டு பொலிகின்றன. இவற்றிலிருந்து சில பாடல்களை ஒவ்வொன்றாகத் தேர்ந்தெடுத்து அவற்றின் நயங்களை ரசித்து மகிழலாமே!
முதலில் நாம் காணப்போவது, குமரகுருபரர் இயற்றியதும் பிள்ளைத்தமிழ் இலக்கியங்களுக்கே சிகரமாகத் திகழ்வதுமான மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழிலிருந்து ஒரு பாடல் தீட்டும் இலக்கியச் சித்திரம். காப்புப் பருவத்திற்கான முதற்பாடல். காக்கும் கடவுளான திருமாலை குழந்தையைக் காக்கும்படி முதலில் வேண்டுவது பிள்ளைத்தமிழ் மரபாகும்.
அதற்கேற்ப குமரகுருபரர் திருமாலிடம், “பழைய மறைகளாகிய வேதங்கள் நீ எம்மை மறந்து விட்டாயே எனப் புலம்பும் வண்ணம் இனிய தமிழ்ப்பாடலின் மீது விருப்புற்று அதனைப் பாடும் புலவரைத் தொடர்ந்து சென்ற பசுமை நிறம் வாய்ந்த மேக வண்ணனான திருமாலே!” என அவனை விளிக்கின்றார்.
இதில் அடைபட்டது சுவாரசியம் மிகுந்த ஒரு கதை! திருமால் தமிழின் பின் சென்ற விதம் இயற்கை நயத்தையும் தமிழின் பெருமையையும் உயர்த்தி வியந்து போற்றும் அழகான வளமிகுந்த கற்பனை. அன்னையின் அருள் பெற்ற புலவர் பெருமான் கவிதையால் வரைந்த எழில் மிகும் சித்திரம்! மனக்கண்ணில் காட்சிகளைக் கண்டு, செய்யுளைப் படித்து இன்புறலாமே!
***
மேக வண்ணனான திருமால்; வேர்க்க, விறுவிறுக்கக் கழனிப் பாதையில் நடந்து சென்று கொண்டிருக்கிறான். கண்ணிகளாகக் கட்டப்பட்ட வாசமிகுந்த திருத்துழாய் மாலை (துளசிமாலை) அவனுடைய பரந்த திருமார்பில் புரளுகின்றது; அதிலிருந்து தேன் வழிந்து வெள்ளம் போலப் பெருக்கெடுத்து ஓடுகின்றது. ஆகவே அது அவன் (திருமால்) நடந்து செல்லும் கழனியாகிய நடைபாதையில் சேறு போலப் பரவியிருக்கின்றது. வயலில் பூத்து நிற்கின்ற தாமரை மலரில் தங்குபவள் அவன் காதல் மனையாளாகிய திருமகள்; திருமால் எங்கு செல்கிறானோ அங்கு தானும் அவனைப் பின்தொடர்ந்து செல்ல விழைகிறாள் அவள். கணவன் செல்வதைக் கண்ணுற்றதும், தானும் அவனுடன் செல்ல வேண்டும் எனும் ஆவலால் எழுந்து தானும் உடன் செல்ல முயல்கிறாள். செல்ல வேண்டும் எனும் ஆவலும் எண்ணமும் உள்ளத்தே இருப்பினும், செல்லவொண்ணாமல் ஏதோ ஒன்று தடுக்கின்றதாம்! அவ்வாறு தடுப்பது என்ன? சேறாகி விட்ட வயல் தான்; மிகவும் வழுக்குகின்றது; ஆகவே அவளால் நடக்க இயலவில்லை. பார்த்தான் பெருமாள். அவனுக்கோ யாரையோ தொடர்ந்து போகும் அவசரம்! உடனே தனது கையணையைக் கொண்டு, அவளுடைய கையை, முகந்தெடுத்தது போலக் கோர்த்துக் கொண்டு உடனழைத்துச் செல்கின்றான். (திருமால் பள்ளி கொள்ளும் போது தனது கையையே தலையணை போல வைத்துக் கொள்பவன். பள்ளிகொண்ட பெருமாளின் கோலத்தினை ஒரு கணம் மனதில் எண்ணிப் பார்த்துக் கொள்ளலாமே?) ஆகவே இந்தக் கையணையைக் கொடுத்து அவளை அணைத்தவாறு நடத்திச் செல்கின்றான். பார்க்கவே அழகாக இல்லை? இளம் காதலர் இருவர் கழனிச் சேற்றில் தம்மை மறந்து விரைகின்றனர். அவளுக்கு அவனுடன் செல்வது இன்பம். அவனுக்கும் இன்பம் தான்; ஆயினும் இப்போது தான் மிகவும் விரும்பும் ஒரு பொருளுக்காக ஒருவர் பின்னால் அவர் சொல்லுக்குக் கட்டுப்பட்டு விரைந்து கொண்டிருக்கிறான் அவன். தான் படுத்துக் கொண்டிருந்த பைந்நாகப் பாய்ப் படுக்கையைச் சுருட்டி எடுத்துத் தோளில் போட்டுக் கொண்டிருக்கிறான். அது சரியாக விறைப்பாக இராமல், நெகிழ்ந்து குழைந்து அவன் முதுகில் தனது வாலால் ‘பட், பட்’டென அடித்தபடி அவனைத் துன்புறுத்துகின்றது. இருந்தும் கொண்ட காரியமே கருத்தாக திருமகளின் கையைப் பிடித்தணைத்தபடி ஓட்டமும் நடையுமாக விரைகின்றான் திருமால்.
அவன் விரும்பிப் பின் செல்லும் பொருள் என்ன தெரியுமா? இனிய தமிழினாலாகிய பைந்தமிழ்ப்பாடல்கள் தாம். இந்தப் பாடல்களைப் பாடி அவனை ஏற்றிப் போற்றிப் பரவும் ஒரு அடியார்- திருமழிசை ஆழ்வார்- ஊரைவிட்டே செல்கின்றார். அவர் அவ்வாறு போய்விட்டால் எங்ஙனம் அவர் பாடும் இனிய தமிழ்ப் பாடல்களைக் கேட்டு இன்புறுவது? திருமாலுக்கு அவருடைய தமிழ்ப் பாடல்கள் என்றால் கொள்ளை விருப்பம். அவர் பாடுவதைக் கேட்காமல் ஒருநாள் கூடக் கழியாது அவனுக்கு. அவரோ ‘நான் ஊரை விட்டுச் செல்கிறேன்; நீயும் உன் பாம்பணையைச் சுருட்டி எடுத்துக் கொண்டு எம்முடன் வந்து விடு,’ என அன்புக்கட்டளை இடுகிறார். ஆகவே தானும் அவர் பின்னால் போய்விடலாம் என்று திருமாலும் கிளம்பி விட்டானாம்! திருமழிசை ஆழ்வார் ஊரை விட்டே செல்ல ஒரு காரணம் உண்டு. அதை நாம் தெரிந்து கொள்ள வேண்டாமா? இக்கதையின் சாராம்சமே அது தானே!
***
திருமழிசை ஆழ்வார் திருப்பணி செய்து வந்த காஞ்சிபுரம் திருவெஃகா பெருமாள் கோவிலில் ஒரு முதிய கிழவி – கூன் விழுந்த முதுகு. பெருமாள் சந்நிதியைக் கூட்டுவது, துடைப்பது, கோலம் போட்டு அலங்கரிப்பது ஆகிய செயல்களைப் பெரும் சிரத்தையோடு செய்து வந்தாள். ஆழ்வார் ஒருநாள் அவளிடம், “அம்மா, நீ எம்பெருமானுக்குச் செய்யும் இந்தக் கைங்கர்யங்கள் என்னைப் புல்லரிக்கச் செய்கின்றன,” என மனமுவந்து பாராட்டினார். “சுவாமி, இப்போது எனக்கு வயதாகி விட்டது, இன்னும் சிறு வயதிலேயே இங்கு வந்திருந்தால் இந்தக் கைங்கர்யத்தினை நீண்ட நாட்கள் தொடர்ந்து செய்யும் பேறு கிடைத்திருக்குமே!” என வருத்தப் பட்டுக் கொண்டாள். “தாயே! வருந்தாதே!” என்று திருமழிசை ஆழ்வார் தனது திவ்விய கடாட்சத்தை அவள் மேல் செலுத்த, அம்முதியவள் உடனே முதுமை நீங்கி அழகிய ஒரு இளம் பெண்ணாக அங்கு நின்றாள்.
நகர்வலம் வந்தபோது மன்னன் இந்த அழகிய இளம் பெண்ணைக் கண்டு விரும்பி மணம் புரிந்து கொண்டான். நாட்கள் நகர்ந்தன. அரசன் தான் மட்டும் முதுமை அடைவதனையும் தனது அரசி (ஆழ்வார் இளமையடையச் செய்த பெண்) இளமை அழகு குன்றாது இருப்பதனையும் கண்டு ஆச்சரியமடைந்தான். ஆழ்வாருடைய திருக்கடாட்சத்தின் மகிமை இது என அறிந்து கொண்டவன், அவருடைய சீடனான கணிகண்ணனை அரசவைக்கு அழைத்தான். தனக்கும் இது போன்றே என்றும் மாறா இளமையைத் தருமாறு ஆழ்வாரிடம் கூறும்படி கணிகண்ணனை வற்புறுத்தினான் அரசன். கணிகண்ணன் மறுத்தான். அரசன் மிக்க சினம் கொண்டு கணிகண்ணனை நாட்டை விட்டு வெளியேறுமாறு கட்டளையிட்டான்.
கணிகண்ணனும் தனது குருவான ஆழ்வாரிடம் இதனைத் தெரிவித்து நாட்டை விட்டுச் செல்லக் கிளம்பினான். தனது மாணாக்கனுடன் தானும் செல்ல முடிவெடுத்து திருமழிசையாழ்வார், கோவிலில் பள்ளி கொண்ட திருமாலிடம் வந்து,
“கணிகண்ணன் போகிறான் காமரு பூங்கச்சி
மணிவண்ணா! நீ கிடக்க வேண்டா- துணிவுடைய
செந்நாப் புலவன் யான் செல்கின்றேன் நீயும் உன்றன்
பைந்நாகப்பாய் சுருட்டிக் கொள்”– என அன்புடன் வேண்டிக் கொண்டார்.
உடனே திருமால் தனது பாம்புப் பாயைச் சுருட்டித் தோள் மேல் போட்டுக் கொண்டு புலவர்- ஆழ்வார்- பின்னால், அவர் தமிழ்ப்பாடல்களை இடையறாது கேட்கும் ஆவலில் செல்லலானான். அதனைத்தான் குமரகுருபரர் ‘பைந்தமிழ்ப்பின் சென்ற பச்சைப் பசும் கொண்டலே’ எனத் திருமாலை ஏத்துகிறார்.
ஆழ்வாரின் கதையை முற்றும் பார்க்கலாம். அடுத்த நாள் காலை கோவில் சென்ற மன்னன், திருமாலை அங்கு காணாமல் திடுக்குற்றுப் பின் நடந்ததை எல்லாம் அறிந்து கொண்டு விரைந்து சென்று, காஞ்சியை விட்டுச் சென்று கொண்டிருக்கும் கணிகண்ணன், ஆழ்வார் ஆகியோரின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கி மன்னிப்புக் கேட்டு, அவர்களைத் திருவெஃகாவிற்குத் திரும்ப வர வேண்டினான். திருமழிசை ஆழ்வாரும் திருமாலிடம்,
“கணிகண்ணன் போக்கொழிந்தான் காமரு பூங்கச்சி
மணிவண்ணா! நீ கிடக்க வேண்டும்- துணிவுடைய
செந்நாப் புலவன் யான் போக்கொழிந்தேன் நீயும் உன்றன்
பைந்நாகப்பாய் படுத்துக் கொள்” என வேண்டத் திருமாலும், திரும்ப வந்ததாக ஒரு அழகான புராணக் கதை.
***
ஆகவே திருமால் தமிழ்க்கவிதை மேல் கொண்ட காதலால், ஆழ்வார் வேண்டுகோளுக்கிணங்கி, பாம்புப் பாயைச் சுருட்டித் தோளில் வீசிப் போட்டுக்கொண்டு, சேறு வழுக்கும் கழனியில் திருமகளின் கையை முகந்தணைத்தபடி விரையும் சலனச் சித்திரம் கண்முன் அப்படியே விரியவில்லையா? அவ்வாறு விரைபவனின் பின்னால், பழைய மறைகளான வடமொழி வேதங்கள், “அந்தகோ! எம்மை மறந்து விட்டுத் தமிழின் பின் செல்கின்றீரே,” என முறையிட்டுப் புலம்பிய வண்ணம் தொடர்ந்தன என ஒரு அதிகப்படியான காட்சியையும் காண்கிறோம். பச்சை பசுமையான மேகங்களின் நிறங்கொண்ட திருமாலைக் கண்டு களிக்கிறோம்.
சரி. திருமாலை இவ்வாறு சித்தரித்து என்ன வேண்டுகிறார் குமர குருபரனார்? ‘எம் அன்னையாகிய இந்தச் சிறு குழந்தை மீனாட்சியைக் காப்பாயாக,’ என வேண்டுகிறார். திருமாலின் பெருமையை அழகுறக் கூறியவர் அவன் தங்கையின் பெருமையினையும் அழகு குன்றாது அருமையாக விளக்குகிறார்.
பலவகையான மணிகளைத் தன்னுட் கொண்ட பெரும் கடலால் சூழப்பட்டது இப்பூமண்டலம். அதனை ஆதிசேடன் எனும் பாம்பு தாங்கி நிற்கின்றது. அதன் தலையின் உச்சிமேல் அங்கயற்கண்ணியும், எம் இறைவனாகிய சிவபிரானும் வீற்றிருக்குமாறு இந்திரன் எட்டு யானைகள் தங்கள் தோள்களில் தாங்கும் விமானத்தை விண்ணுலகிலிருந்து அனுப்பித் தந்தான். அதில் வெள்ளிய பிடரி மயிரினை உடைய சிங்கங்கள் தாங்கும் அழகமைந்த பீடத்தில், பொன்முடி தரித்து இறைவனுடன் அரசு வீற்றிருப்பவள் கயற்கண் கொண்ட அமுதமனைய எம் அன்னை மீனாட்சி. ‘அவளை நீ காக்க வேண்டும் திருமாலே!’ என வேண்டும் போது, திருமால் தமிழின் பால் கொண்ட காதலைக் கூறி, அதற்காக அவன் செய்த ஒரு செயலை நயம்பட உரைக்கின்றார் குமரகுருபரனார்.
அவ்வழகிய பாடல் இதோ:
மணிகொண்டநெடுநேமி வலயஞ் சுமந்தாற்று
மாசுணச் சூட்டுமோட்டு
மால்களிறு பிடர்வைத்த வளரொளிவிமானத்து
வாலுளை மடங்கல்தாங்கும்
அணிகொண்டபீடிகையின் அம்பொன்முடி முடிவைத்தெம்
ஐயனொடு வீற்றிருந்த
அங்கயற் கண்ணமுதை மங்கையர்க்கரசியையெம்
அம்மனையை இனிதுகாக்க
கணிகொண்ட தண்துழாய்க்காடலைத் தோடுதேம்
கலுழிபாய்ந் தளறுசெய்யக்
கழனிபடு நடவையில் கமலத்தணங்கரசொர்
கையணை முகந்துசெல்லப்
பணிகொண்ட முடவுப் படப்பாய்ச்சுருட்டுப்
பணைத்தோள் எருத்தலைப்பப்
பழமறைகள் முறையிடப்பைந்தமிழ்ப் பின்சென்ற
பச்சைப் பசுங்கொண்டலே.
மீனாட்சி க. (மீனாட்சி பாலகணேஷ்)
முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
கற்பகம் பல்கலைக் கழகம், கோவை,
நெறியாளர்: முனைவர் ப. தமிழரசி,
தமிழ்த்துறைத் தலைவர்.