ஐந்து கை ராந்தல் (27)

வையவன்

கையிலிருந்த சூட்கேஸை கீழே வைத்து விட்டு, பிரீதாவிடமிருந்து சாவியை வாங்கி கதவைத் திறந்தான் சிவா. திறந்தவுடனே ஒரு கடிதம் எதிர்பட்டது. எடுத்துப் பார்த்தான்.

திஷ்யாவிடமிருந்து தான் வந்திருந்தது.

கையெழுத்தைப் பார்த்ததுமே பளிச்சென்று புலப்பட்டது. திருப்பி தேதியைப் பார்த்தான்.
பத்து நாட்களுக்கு முன் வந்திருந்தது.

மடித்துச் சட்டையில் போட்டுக் கொண்டு சூட்கேஸ்களை உள்ளே எடுத்து வைத்தான்.
ஆட்டோவிற்குப் பணம் கொடுத்து விட்டுத் திரும்பி வந்தாள் பிரீதா.

“எத்ர கம்பெல் செய்தும் வெற்றிவேல் எந்தினாணு நிர்க்காம நாட்டினு போயது?”
“அவன் இப்போ ஒரு பிஸி விவசாயி. பெண்டாட்டி பிள்ளையைக் கூட விட்டுட்டு ஒரு விவசாயி இருப்பான். ஆனா நெலத்தை விட்டுட்டு இத்தனை நாள் தங்கறது அவனுக்கு மகா பாவம்!”

“வாட் எ கிரேட் ஜென்டில் மன் ஹி ஈஸ்!”
“மெய்தான்”
“இன்னு ஞான் லீவ் எக்ஸ்டெண்ட் செய்யும்.”
“ரெஸ்ட் எடுக்கணுமில்லே. லீவ் போட்டுடுங்க.”
“ஐ… ரெஸ்ட்டோ மண்ணோ… எவ்வளவு குப்பை… லுக் ஹவ் டஸ்ட்டி… எல்லாத்தையும் க்ளீனாக்கணும்” என்று வீட்டைச் சுட்டிக் காட்டினாள்.

“எனி லெட்டர்ஸ்.”
“ஒண்ணுதான் வந்திருக்கு. எனக்கு”
“அம்மாவிடமிருந்தா”
“இல்லே. திஷ்யாவிடமிருந்து.”
“என்ன விஷயம்?”
“இன்னும் படிக்கலே.”
பிரீதா பாத்ரூமுக்குப் போனாள்.

அவன் அழுக்கடைந்திருந்த சட்டையையும் பாண்ட்டையும் உருவிப் போட்டு விட்டு ஒரு பனியனும் லுங்கியும் அணிந்து கொண்டு அந்த இன்லண்ட் கவரைப் பிரிந்தான். குண்டு குண்டான கையெழுத்து மணி கோர்த்தது மாதிரி ஓடியிருந்தது.

“அன்புள்ளவருக்கு வணக்கம். இங்கு அனகாபுத்தூரில் வசதியான தனி வீடு கிடைத்து விட்டது. ராயப்பேட்டை வாடகைதான். குழந்தைகளுக்கெல்லாம் டி.சி. வாங்கி இங்குள்ள அரசாங்கப் பள்ளியிலேயே சேர்த்து விட்டோம்.

படிக்கிறவர்கள் எங்கிருந்தாலும் படிப்பார்கள். அநாவசியமான பயணமும் ஆடம்பரச் செலவும் ஒழிந்தால் பணம் மிச்சமாகும். இது நகரமும் கிராமமும் கலந்த ஒரு விநோதக் கலவை. டென்ட் சினிமா இருக்கிறது. வயல் இருக்கிறது. ஏரிக்கரை இருக்கிறது. ஒரு முறை வாருங்கள்.

ஓய்வாக வரலாமே என்று ஒத்திப் போடாதீர்கள், உடனே வாருங்கள். உங்களை ஒரு விஷயமாக யோசனை கேட்க விரும்புகிறேன். என்ன விஷயம் என்பதை நேரில் தான் சொல்லுவேன். அனைவரும் நலம். உடனே உங்களை எதிர்பார்க்கிறேன். அனகாபுத்தூர் அல்ல, அண்டார்டிகாவுக்குப் போய் விட்டாலும் உங்கள் திஷ்யா.”

சிவாவின் உதட்டுச் சுழிப்பில் ஒரு குறுநகை தோன்றி ஒளிந்து கொண்டது.

மீண்டும் கடிதத்தின் தேதியைப் பார்த்தான். மறுபடியும் ஒருமுறை ஒவ்வொரு தேதியாகக் கூட்டி நாளை எண்ணினான்.
பத்து நாட்கள் அல்ல, ஒன்பது தான் ஆயிருந்தன. அவள் எழுதிய கடிதத்திற்குப் பத்து நாளாகப் போகாதிருந்ததைவிட ஒரு நாள் குறைந்ததில் ஒரு நிம்மதி ஏற்பட்டது.

பாத்ரூமிலிருந்து திரும்பி வந்தாள் பிரீதா.

“லெட்டர் என்ன சொல்லுது?”
“நான் ஒடனே வரணுமாம், ஏதோ அவசரமா யோசிக்கணுமாம்.”
“குளிச்சிட்டுப் பொறப்படு… தண்ணி நல்லா வந்துகிட்டிருக்கு.”
சிவா அரை மணி நேரத்தில் குளித்து டிரஸ் செய்து கொண்டு தயானான்.

தன் அழுக்குச் சட்டை துணி மணிகளை எல்லாம் தன் பெரிய சூட்கேஸில் போட்டுத் திணித்துப் பெட்டியை மூடினான்.
திரும்பும் போது பிரீதா நின்று மௌனமாகக் கவனிப்பதைப் பார்த்தான்.

“என்ன எல்லாத்தையும் ‘பாக்’ பண்றே!”
அவளை நிமிர்ந்து பார்க்க விரும்பாமல் முகம் தாழ்த்தியவாறே சொன்னான்.

“நான் வேற ரூம் பார்க்கப் போறேன்.”
பளிச்சென்று ஓர் அறை வாங்கிய மாதிரி பிரீதாவின் முகம் பின்னிட்டதை அவன் கவனிக்கவில்லை.

“ஏன்?” என்று கேட்ட பிரீதா சட்டென்று விழிப்புற்ற மாதிரி “உன் இஷ்டம்” என்றாள்.
அந்த உன் இஷ்டத்தில் திடீரென்று தன்னை விட்டு விலகி அவன் அகலுகின்ற வேதனை தெரிந்தது.

“இங்கு தங்குவது சரியில்லை. எனக்கல்ல… உனக்கு!”
முதன் முறையாக தன்னை அவன் ஒருமையில் அழைப்பதை பிரீதா மனசில் குறித்துக் கொண்டாள். ஒரு வேளை வாய் பிசகிச் சொல்கிறானோ?
“இட் வில் ஸ்பாய்ல் யுவர் நேம்.”
கண்கள் மருள மருள அவனை விழித்துப் பார்த்தாள் பிரீதா.

மீண்டும் “உன் இஷ்டம்” என்றாள்.

“நான் அடிக்கடி வருவேன். உன்னை ஹாஸ்பிடல்லே வந்து பார்க்கிறேன்.”
மீண்டும் அவள் “உன் இஷ்டம்” என்றாள்.

அவன் கையில் எடுத்த சூட்கேஸை மீண்டும் கீழே வைத்துவிட்டு நாற்காலியில் உட்கார்ந்தான்.
“ஒனக்கு டயம் ஆகலியா சிவா?”

“நீ அந்த ‘உன்இஷ்டத்தை’ வாபஸ் வாங்கிக்கிட்டா தான் கௌம்புவேன்.”

“ஏன்?”
“இட் ஹர்ட்ஸ் மீ.”
“நீ கௌம்பிப் போறது?”

“அஃப்கோர்ஸ் அது ஒன்னை ஹர்ட் பண்ணும். மனசளவிலே ஹர்ட் ஆகிறது வேற… நல்ல பெயருக்கும் செய்யற தொழிலுக்கும் கெடைக்கிற ஹர்ட் வேறே.”

“சிவா… நான் குழந்தையல்ல…”
“ஸாரி…”
“இப்போ ஒனக்கு வேலை இல்லே. ஒன் கையிலே எவ்வளவு காசு இருக்கோ எனக்குத் தெரியாது. இப்ப நீ பொறப்படறதே ப்யூர்லி ஒரு தன்மானத்தாலே தான்.”
“………..”
“ஒன்னை எனக்குத் தெரியாதா சிவா…?”
சிவா அமைதியாக இருந்தான்.

“தாமு இருந்தா நீ இப்படிப் போவியா?”
அவள் கண்ணீர் சிந்துகிறாளோ என்று நிமிர்ந்து பிரீதாவின் விழிகளைப் பார்த்தான். அவள் அதைப் புரிந்து கொண்டாள்.

“நோ… இந்த ஜென்மத்திற்கு எவ்வளவு அழுகை இதுநாள் வரை பாக்கியிருந்ததோ அவ்வளவும் பாபா முன்னாடி அழுதாச்சு. இனிமே நான் அழமாட்டேன்.”

பிரீதா திடமான புன்முறுவலுடன் அவனை பார்வையால் அலசினாள்.

“நான் உன்னை ‘கம்பல்’ பண்ணலே; உன் இஷ்டம்.”
“ஆல்ரைட்… நான் போகலே பிரீதா. ஆனா எனக்கு அம்மாவை இங்கே அழைச்சுட்டு வரணும்போல தோணுது.”

“இந்த யோசனையை நானே உனக்குச் சொல்ல விரும்பினேன்.”
“அப்புறம்… அப்புறம்”
“சொல்லு சிவா”
“ஊருக்குப் போயிட்டு வந்து சொல்றேன்.”
“போய்ட்டு வா”
சிவா விடைபெற்றுக் கொண்டு ஒரு கைப்பையுடன் வெளியே நடந்தான்.

பதினைந்துநாள் ரயிலிலும் பஸ்ஸிலும் காட்டிலும் மலையிலும் கங்கையும் டில்லியுமாகச் சுற்றி விட்டு சாலையில் நடக்கும் போது சென்னை ரொம்ப சின்னது ஆகிவிட்டாற் போன்ற உணர்வு ஏற்பட்டது.

நேரே சிந்தாதிரிப்பேட்டைக்குப் போனான்.

சாமிநாய்க்கன் தெருவில் ஒரு வீட்டுக்குள் நுழைந்ததும் வயர் பின்னிய இரும்பு நாற்காலியில் லுங்கியோடு கைக்குழந்தையைக் கொஞ்சிக் கொண்டிருந்த செங்குட்டுவன் பதைப்போடு எழுந்தான்.

“சார்… வாங்க… வாங்க… எப்ப வந்தாப்பிலே… ஏ மரகதம், இந்தக் குழந்தையைப் பிடிம்மே” என்று கூப்பாடு போட்டுவிட்டு உட்கார்ந்திருந்த நாற்காலியை அவனுக்கு ஒதுக்கியவாறு, கூப்பிட்டால் மரகதம் வரப்போவதில்லை என்ற ரீதியில், தானே குழந்தையை எடுத்துக் கொண்டு உள்ளே போனான்.

ஐந்து நிமிஷம் கழித்து ஒரு ஸ்டூலை எடுத்துக் கொண்டு வெளியே வந்தான்.
“சார்…டூர் எல்லாம் நல்லபடி இருந்ததுங்களா?”

ஆக்ராவில் செங்குட்டுவனுக்காக வாங்கிய தாஜ்மஹால் பொம்மை அடங்கிய அட்டைப் பெட்டியை எடுத்து அவனிடம் நீட்டினான் சிவா.

“ஆக்ராவிலே வாங்கினேன். பத்திரமா உள்ளே கொண்டு போய் வை.”
செங்குட்டுவனுக்கு முகம் மகிழ்ச்சியால் ஒளி வீசியது.

“இந்த கிலுகிலுப்பையை கொழந்தைகிட்டே கொடு. கரோல்பாக்லே வாங்கியது.”
இன்னொரு முறை அவன் முகம் பிரகாசித்தது.

“டூர் நல்லபடியா இருந்ததா சார்?”
“அற்புதமா இருந்தது செங்கு. உங்க வீட்டு எலுமிச்சை சாதமும் புளியஞ் சாதமும் அமர்க்களம்.”
“போங்க சார்… கிண்டல் பண்றீங்க.”

“இல்லேப்பா… பிரீதாம்மா ரொம்ப விரும்பி சாப்பிட்டாங்க.”
“அப்படியா..?”
“நான் சொன்ன விஷயம்.”

“ரூம் தான் சார் தோதர கெடைக்கலே. ஒரு புரோக்கர் கிட்டே சொல்லி வச்சிருக்கேன். ரெண்டு நாள்… டயம் கேட்டிருக்கான்.”
“லைசன்ஸு…?”

“நீங்க எப்ப வருவீங்கண்ணு காத்துகிட்டிருந்தேன். டிராபிக் சூபரிண்டண்ட் எங்க மச்சினச்சி புருஷனுக்கு ப்ரெண்ட். அவரகிட்டே சொன்னேன். ஆல் ரைட் கூட்டியாண்ணு சொன்னாரு.”

“நாளைக்குப் போவமா?”
“ஓ… என்ன சார். காப்பி சாப்பிடாமே கூடக் கௌம்பிட்டீங்க” என்று அவன் அங்கலாய்க்க சமாதானம் சொல்லி விடைபெற்றான் சிவா.

சிந்தாதிரிப்பேட்டை தபால் ஆபீஸுக்கு நடந்து வந்து அம்மாவுக்கு ஒரு கடிதம் எழுதினான்.

‘அன்புள்ள அம்மா அவர்களுக்கு வணக்கம் ரிஷிகேசத்திலிருந்து இன்று காலை மூவரும் நலமாக வந்து சேர்ந்தோம். நாளை எனக்கு இங்கு ஒரு முக்கியமான வேலை இருக்கிறது. அதைப் பார்த்துக் கொண்டு, நாளை மறுநாள் ஊருக்கு வருகிறேன். அங்கிருந்து ஓரிரு தினங்களில் நாம் இருவரும் சென்னைக்கு வருகிறோம். ஆம், நிரந்தரமாக நீங்கள் சென்னையில் என்னுடன் இருக்கப் போகிறீர்கள்.

‘என் சாப்பாட்டையும் ஹோட்டல் சாப்பாட்டையும் சாப்பிட்டு சாப்பிட்டு எனக்கு அலுத்து விட்டது. நிச்சயம் நாம் இங்கு ஒன்றாக வசிக்கப் போகிறோம். மற்றவை நேரில் தங்கள் அன்புள்ள மகன் சிவா.’
அந்தக் கடிதத்தை அஞ்சலில் சேர்த்தபோது சிவாவுக்கு நிம்மதியாயிருந்தது.

தைரியமும் எதையும் எதிர் கொள்ளத் தயாரான தன்னம்பிக்கையும் மனசிற்குள் சுரந்தன.

அவன் அண்ணாசாலைக்குப் போக ஒரு பஸ்ஸில் ஏறினான். அங்கே போய் இறங்கினால் தான் அனகாபுத்தூருக்கு பஸ் பிடிக்க முடியும்.

தொடரும்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.