— தேமொழி.

லேஸ்லோ க்ரேசேஹார்க்கை - László Krasznahorkai‘லேஸ்லோ க்ரேசேஹார்க்கை’ (László Krasznahorkai) என்ற ‘ஹங்கேரிய மொழி’ (Hungarian) எழுத்தாளர் சிறந்த இலக்கியப் படைப்பாளருக்கான 2015 ஆண்டின் ‘மான் புக்கர் பன்னாட்டுப் பரிசு’ (Man Booker International Prize) பரிசினைப் பெற்றுள்ளார்.

ஹங்கேரியைச் சேர்ந்த 61 வயதாகும் லேஸ்லோ க்ரேசேஹார்க்கை, சமூகத்தின் இருண்டபகுதியை, ஆழ்ந்த தீவிரமான முறையில் விவரிக்கும் புனைகதைகளின் மூலமும், மாறுபட்ட எழுத்து நடையின் மூலமும் வாசகர்களின் கவனத்தைக் கவர்ந்தவர். இவரது படைப்புகள் ‘பின் நவீனத்துவம்’ பிரிவில் அடங்குவன. இவரது புகழ்பெற்ற கதைகள் சில ஹங்கேரிய மொழியில் திரைப்படங்களாகவும் வெளிவந்துள்ளன.

‘ஷத்தன்டங்கோ’ (Satantango), ‘தி மெலன்காலி ஆஃப் ரெசிஸ்டன்ஸ்’ (The Melancholy of Resistance) ஆகிய இரு நூல்களும் அவ்வகையில் திரைப்படங்களாக வெளிவந்தவற்றில் குறிப்பிடத்தக்கன. இவரது நூல்களில் சில ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இலக்கியப் பங்களிப்பிற்காக இருபதுக்கும் மேற்பட்ட பரிசுகளைப் பெற்றவர் லேஸ்லோ க்ரேசேஹார்க்கை. அவற்றில் ‘காசத் பரிசு’ (Kossuth Prize), ‘வெலேனிக்கா பரிசு’ (Vilenica Prize) ஆகியவையும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது. இவரது முதல் புதினமான ஷத்தன்டங்கோ மூலமே இவர் முன்னணி எழுத்தாளர்களின் வரிசையில் இடம் பிடித்தவர்.

மான் புக்கர் இன்டர்நேஷனல் பரிசு என்பது உலகளாவிய முறையில், ஆங்கிலத்திலோ அல்லது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட இலக்கியங்களின் ஆசிரியர் ஒருவரைத் தேர்ந்தெடுத்து, அவரது கற்பனையில் உருவான சொந்த படைப்புகள், உலக புத்திலக்கியத்தில் ஆற்றிய பங்கினைப் பாராட்டி வழங்கப்படுகிறது. வாழும் எழுத்தாளர் ஒருவரின் இலக்கியப் பங்களிப்பைப் பாராட்டி வழங்கப்படும் இப்பரிசு இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்படுகிறது.

எழுத்தாளரின் பரிசுக்குரிய தகுதி பற்றி ஆராய பரிசுக் குழுவின் நடுவர்களே படைப்பாளிகளைத் தேர்ந்தெடுப்பார்கள், பிறரது பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்பது இப்பரிசுக்காக நடத்தப்படும் போட்டியின் விதி. எழுத்தாளரின் இலக்கியத்திற்கான தொடர் பங்களிப்பைப் பாராட்டி வழங்கப்படும் பரிசு என்பதால் இதைக் குறிப்பிட்ட ஒருநூலுக்கான பரிசு என்பதைவிட எழுத்தாளரின் தொடர்ந்த இலக்கியப் பணி பாராட்டப்படுகிறது என்ற வகையில் இப்பரிசு அமைகிறது.

மான் புக்கர் இன்டர்நேஷனல் பரிசு 2005 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. முதன் முதலில் பரிசு பெற்றவர் அல்பேனியா எழுத்தாளர் ‘இஸ்மாயில் கடரே’ (Ismail Kadare), இவரது அல்பேனிய மொழி இலக்கியங்களுக்காகப் பாராட்டப்பட்டார். இப்பொழுது ஆறாவது விருதாளராக லேஸ்லோ க்ரேசேஹார்க்கை, ஹங்கேரி மொழியில் படைத்த இலக்கியங்களுக்காக இப்பரிசைப் பெற்றுள்ளார். பரிசுபெற்ற ஏனைய எழுத்தாளர்கள் கனடா, அமெரிக்கா, நைஜீரியா என்ற பலநாடுகளைச் சேர்ந்த எழுத்தாளர்கள் அவர்கள் படைத்த ஆங்கில இலக்கியங்களுக்காகப் பரிசு பெற்றனர்.

இப்பரிசுத் தொகையின் மதிப்பு 60,000 பிரித்தானிய வெள்ளிகள், எழுத்தாளர் வாழ்நாளில் ஒருமுறைதான் தேர்ந்தெடுக்கப்படுவார். நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவருக்கும் 15,000 பிரித்தானிய வெள்ளிகள் பரிசு வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு இந்தப் பரிசுக்காக கருதப்பட்ட எழுத்தாளர்களில் ‘அமிதவ் கோஷ்’ (Amitav Ghosh) என்ற இந்திய எழுத்தாளரும் அடங்குவார்.

[குறிப்பு: ‘மான் புக்கர் புனைகதை விருது’ (Man Booker Prize for Fiction) என்னும் வேறோர் விருதை, இந்தியாவைச் சேர்ந்த அருந்ததி ராய் (The God of Small Things), கிரண் தேசாய் (The Inheritance of Loss), அரவிந்த் அடிகா (The White Tiger) ஆகியோர் வென்றுள்ளனர்.]

ஷத்தன்டங்கோ (Satantango), தி மெலன்காலி ஆஃப் ரெசிஸ்டன்ஸ் (The Melancholy of Resistance), வார் அண்ட் வார் (War & War), செய்போ தெர பெல்லோ (Seiobo There Below), அனிமல் இன்சைட் (Animalinside), எசர்கோர்ல் ஹேக் தெரல் தொ, நியூகத்ரோல் உத்தக், கெலத்ரோல் ஃபால்யோ (Északról hegy, Délről tó, Nyugatról utak, Keletről folyó), தி பில ஃபார் பால்மா வெச்சியோ அட் வெனிஸ் (The Bill: For Palma Vecchio, at Venice), அஸ் உட்ல்லுசோ ஃபார்க்கஸ் (Az utolsó farkas), மியுசிக் அண்ட் லிட்டரேச்சர், இஸ்யு (Music & Literature: Issue 2), அஸ் உர்கை ஃபோகொலி (Az urgai fogoly) ஆகிய நூல்களை லேஸ்லோ க்ரேசேஹார்க்கை எழுதியுள்ளார்.

இவரது நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து உதவியவர்கள் ‘ஜார்ஜ் செர்ட்டஸ்’ (George Szirtes) மற்றும் ‘ஒத்திலியே மொசாட்’ (Ottilie Mulzet) ஆகியோர். மான் புக்கர் இன்டர்நேஷனல் வழங்கிய மொழிபெயர்ப்பாளருக்கான பரிசுத் தொகையை இவரது இந்த இரு மொழி பெயர்ப்பாளர்களும் பகிர்ந்து கொண்டனர்.

‘தி மெலன்காலி ஆஃப் ரெசிஸ்டன்ஸ்’ அல்லது ‘எதிர்ப்பினால் விளையும் துயரம்’ என்ற பொருள்படும் புதினம் பற்றி சற்றே விரிவான முறையில் இக்கட்டுரையில் காணலாம். லேஸ்லோ க்ரேசேஹார்க்கை அவர்கள் ‘தி மெலன்காலி ஆஃப் ரெசிஸ்டன்ஸ்’ (The Melancholy of Resistance) என்ற புனைகதைப் புதினத்தை , 1989 ஆம் ஆண்டு ‘ஏஸி எல்லானலாஸ் மெலன்காலியஹா’ (Az ellenállás melankóliája) என்ற தலைப்பில் ஹங்கேரிய மொழியில் வெளியிட்டார். இந்நூல் ஆங்கிலத்தில் ‘ஜார்ஜ் செர்ட்டஸ்’ (George Szirtes) அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு 1998 ஆம் ஆண்டு வெளிவந்தது. மேலும், இந்தப் புதினம் ‘வெர்க்மெய்ஸ்ட்டர் ஹார்மனியாக்’ (Werckmeister harmóniák) என்று ஹங்கேரிய மொழியிலும், ‘வெர்க்மெய்ஸ்ட்டர் ஹார்மனிஸ்’ (Werckmeister Harmonies) என்ற ஆங்கிலத் தலைப்பில், புகழ் பெற்ற இயக்குநர் ‘பெலா டார்’ (Béla Tarr) இயக்கத்திலும் தயாரிப்பிலும் 2001ஆம் ஆண்டு ஹங்கேரிய மொழித்திரைப்படமாக வெளிவந்து பலரது பாராட்டையும் பெற்றது.

அப்படத்தின் திரைக்கதையை லேஸ்லோ க்ரேசேஹார்க்கை, இயக்குநர் பெலா டார் அவர்களுடன் இணைந்து உருவாக்கினார். வெர்க்மெய்ஸ்ட்டர் ஹார்மனிஸ் என்பது தி மெலன்காலி ஆஃப் ரெசிஸ்டன்ஸ் புதினத்தின் இரண்டாம் அத்தியாயத்தின் தலைப்பு. அது இசை மேதை ‘ஆண்ட்ரியஸ் வெர்க்மெய்ஸ்ட்டர்’ (Andreas Werckmeister) அவர்களின் இசைக் கோட்பாடானது, சுருதிபேதங்கள் என்பவை இசையின் ஒரு பகுதி என்று வரையறுப்பது போல, மக்களிலும் குறையற்றவர்கள் இருப்பது கிடையாது என்ற தத்துவ நோக்கை அடிப்படைக் கருத்தாகக் கொண்டது. வாழ்வில் இடர்கள் வந்து செல்வதை, “இது கடந்து சென்றது, ஆனால் முற்றிலும் மறையவில்லை” (“It passes, but it does not pass away”) என்று; இடர் நமக்கு வந்தது முடிந்துவிட்டது, ஆனால் மீண்டும் வராது என்பதை உறுதியாகச் சொல்லமுடியாத நிலையில் வாழ்க்கை அமைந்துள்ளது என்ற தத்துவத்தை நூலின் முதலில் வரும் சொற்றொடர் நூலைப் பற்றிக் குறிப்பால் உணர்த்துகிறது.

இந்த நூல் பொழுது போக்காகப் படித்துவிட்டுச் செல்லக்கூடிய ஒரு நூலல்ல; ஆழ்ந்து படிக்கும் வகையில் அமைந்த தத்துவக் கருத்துகள் கொண்ட ஒரு கற்பனைப் புதினம். கதைக்களம் இரண்டாம் உலகப் போரின் இறுதியில் சோவியத் ரஷ்யாவின் பிடியில் அகப்பட்ட ஹங்கேரியின் நிலையை மறைமுகமாக உணர்த்தும் உருவக நோக்கில் அமைக்கப்பட்டது எனவும், ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் கதை நடைபெறுவதாக நகரத்தின் இடக்குறிப்புகள் கூறுவதாகவும் விமர்சிக்கப்படுகிறது. இருப்பினும், கதையின் காலம் தொலைக்காட்சி, தொலைபேசி, இரயில் பயணம் என இக்கால வசதிகள் யாவும் பரவலாகிவிட்ட பிற்கால நிகழ்வுகளைக் கொண்டுள்ளதுடன், கதை நிகழும் இடம் ஹங்கேரியின் சிறிய நகரொன்று என்றுதான் காட்டப்படுகிறது. ஆனால் கதையின் எந்த ஒரு இடத்திலும் நகரின் பெயர் கொடுக்கப்படவில்லை. கிழக்கு ஐரோப்பாவின் அரசியலையும், அரசியல்வாதிகளின் நடவடிக்கைகள் பற்றிய ஒரு கண்ணோட்டத்தையும் இந்த நூல் தருகிறது என்பது இதன் சிறப்பு.

இந்த நூலில் குறிப்பிடும் வகையில் அமைந்துள்ள ஒன்று எழுத்தாளரின் எழுத்தின் நடையாகும். முக்கியமாக இவரது எழுத்து நடை அனைவரும் படிக்க ஆர்வமூட்டும் வகையில் அமைந்திருக்கவில்லை. எழுத்து வழியாக ஒரு கருத்து வாசிப்பவரை எளிதில் சென்றடையத் தேவையானால் அதற்கென சில வரைமுறைகள் உண்டு. இந்த வரைமுறைகள் கட்டாயம் அல்ல என்றாலும் அது வாசிப்பவரை எழுத்தை நோக்கி ஈர்க்கும் வகையில், புத்தகத்தைக் கையில் எடுத்தால் முடித்துவிட்டுத்தான் கீழே வைக்க விரும்பும் வகையில் அமைந்திருப்பது எழுத்தாளரின் எழுத்துப் பரவலுக்கு உதவும். எழுத்து நடை சுஜாதா போலவும் இருக்கலாம் அல்லது சாண்டில்யன் போலவும் இருக்கலாம், அது எழுத்தாளரின் தனித்தன்மையைக் காட்டும். அவர்கள் கூறும் கருத்தும் வரலாறாகவும் இருக்கலாம் அல்லது மர்மக் கதையாகவும் இருக்கலாம் ஆனால் வாக்கியங்கள் மிகவும் எளிமையாக, சிறு சிறு வரிகளாக, ஒவ்வொரு கருத்தும் தனித் தனியே பத்தி பிரிக்கப்பட்டு அமைப்பது வாசகரைக் கவரும் எழுத்தின் அடிப்படைப் பண்பு. இந்த அடிப்படை எதிர்பார்ப்பை முற்றிலும் தகர்த்து எறிகிறது லேஸ்லோ க்ரேசேஹார்க்கையின் எழுத்து நடை.

இக்கதையில் ஒரு பக்கத்தில் தொடங்கும் வரி அடுத்தப் பக்கத்திலும் முடியலாம், அல்லது அதற்கும் அடுத்த பக்கத்திலும் கூட முடியலாம். குறைந்தது 300 வார்த்தைகளுக்குப் பின்னரே ஒரு வாக்கியம் முடிவடைகிறது. வரிகளில் பல காற்புள்ளிகளைக் கொண்டே பல வாக்கியங்களாக எழுதக் கூடிய செய்தியை ஒரே வாக்கியமாக எழுதும் உத்தியைக் கடைப் பிடித்துள்ளார் ஆசிரியர். அதற்கேற்ப காற்புள்ளிகளை முற்றுப் புள்ளிகளாக மதித்துப் படிக்கும் வகையில் நம்மை மாற்றிக் கொண்டால் படிப்பது எளிதாகிவிடுகிறது. பத்தி என்பதே இல்லாத நூல் இருக்கலாம் என்பதையும் எழுத்தாளரின் எழுத்துமுறை காட்டுகிறது. இதை அப்படியே அவர் நடையிலேயே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த மொழிபெயர்ப்பாளரின் திறமைதான் மிகவும் பாராட்டிற்குரியது.

எழுத்தாளரின் வார்த்தைகளின் தேர்வு பாத்திரங்களின் மனநிலையையும், குணத்தையும் பிரதிபலிக்கும் வகையில் அமைவதுடன், சூழ்நிலையை கண்முன் நிறுத்தும் சரியான வகையில் அமைவதால் நாமும் கதைக் களத்தில் ஒருவராக மாறிவிடும் தோற்றத்தை உருவாக்குகிறது. இவரது வார்த்தைகளைத் தொடர்ந்து வாசிப்பது ஒரு இசை போலக் கூட அமைந்திருக்கிறது, இதனை உரத்து வாசிக்கும் பொழுதோ அல்லது பிறரை வாசிக்கச் சொல்லிக் கேட்கும் பொழுதோ உணரலாம். லேஸ்லோ க்ரேசேஹார்க்கையின் எழுத்து நடையில் கருத்தைக் கவரும் மற்றொன்று, அவர் பல இடங்களில் வாக்கியங்களை தமிழில் நாம் ‘அந்தாதி’ என்று கூறும் வகை போல அமைத்திருக்கும் முறை. ஒரு வாக்கியத்தின் முடிவு அடுத்த வாக்கியத்தின் தொடக்கமாக அமையுமாறு பல இடங்களில் எழுதியுள்ளார்.

காட்டாக, கீழ்வரும் வரிகளைக் கருத்தில் கொள்ளலாம்…

“at which point he took a tight grip of Valuska’s arm and continued on his way. He continued on his way, having decided that Valuska …”

மற்றும்,

“he had nevertheless to acknowledge that Mrs Harrer’s chattering had not been entirely beside the point. Not entirely beside the point, that was true …”

தி மெலன்காலி ஆஃப் ரெசிஸ்டன்ஸ் கதை ஒரு நவம்பர் 30 ஆம் தேதி மாலை, அதிகக் குளிர் நிறைந்த நாளொன்றில் தொடங்கி, அடுத்த இரண்டு நாட்களில் ஒரு சிறுநகரையும், அங்கு மூன்று நாட்கள் நடத்தத் திட்டமிடப்பட்ட சர்க்கஸ் நிகழ்ச்சியைப் பயன்படுத்தி ஊருக்குள் நுழையும் நூற்றுக்கணக்கான முரடர்களையும், அவர்களில் முப்பதுக்கும் சொச்சமான கேடிகளின் கைகளில் நகரம் சின்னாபின்னம் அடைவதையும் சித்தரிக்கிறது. சர்க்கஸ் நிகழ்த்துவோர் பாடம் செய்யப்பட்ட மிகப்பெரிய திமிங்கிலம் ஒன்றை மிகப் பெரிய ட்ரக் ஒன்றில் காட்சிப் பொருளாக வைத்துக் கட்டணம் வசூலித்து மக்களைப் பார்க்க அனுமதிக்கிறார்கள். அதைத் தவிர்த்து வேறு வித்தைகள் எதுவும் நடத்தவில்லை, அல்லது வித்தைக் காட்சிகள் நடத்த வாய்ப்பு கிடைக்கும் முன்னர் நிலைமை மாறிவிட்டதா என ஆசிரியர் குறிப்பிடவும் இல்லை. திமிங்கிலத்தை மட்டுமே டிசம்பர் முதல்நாள் அன்று சர்க்கஸ் நிறுவனம் காட்சிக்கு வைக்கிறது.

இதற்கிடையில் நகருக்கு வரப்போகும் ஆபத்தை மக்களில் சிலர் உணர்ந்துவிடுவதால் அச்செய்தி வதந்தி போல நகரத்திலும் பரவத் தொடங்குகிறது. டிசம்பர் ஒன்றாம் தேதி இரவு அந்த சிறிய நகர், முரடர் கூட்டத்தின் தாக்குதலுக்கு உள்ளாகி நகர மக்களில் பலரும் உயிரையும் உடமைகளையும் இழக்கிறார்கள். அழிவுக்குக் காரணமான போக்கிரிகள் சிலரும் இராணுவத்தினால் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். அதன் பிறகு, இரண்டு வாரம் கடந்த பின்னர் நகரின் நிலையில் ஏற்பட்ட மாற்றம், கதையின் இறுதியில் மிகச் சுருக்கமாகப் பின்னுரை பகுதியில் சொல்லப்படுகிறது. கலவரத்திற்கு முன்னர் நடைபெறும் நிகழ்வுகளைக் கொண்ட முன்னுரையாக வரும் முதல் அத்தியாயப் பகுதி ஒரு சிறு கதை போலவும், கலவரத்தின் பின்விளைவுகள் ஒரு சிறு தனிக்கதை போலவும் தோற்றம் அளிக்கும் வகையில் கதைக்களம் அமைந்துள்ளது.

நவம்பர் மாதத்தின் இறுதி நாளிலும், டிசம்பரின் முதல் இரண்டு நாட்களில் நகரில் நடைபெறும் கலவரத்தினால் ஏற்படும் மாற்றங்கள் நகரமக்களில் யார் யாரை எவ்விதம் பாதிக்கிறது, பிறகு அவர்கள் நிலை என்னவாகிறது என்பதையே கதை சித்தரிக்கிறது. கதையில் பல நகர மாந்தர்கள் குறிப்பிடப்பட்டாலும் கதையின் முக்கியமான பாத்திரம் என்பது, பதவியையும் அதிகாரத்தையும் அடைவதையே குறிக்கோளாக வைத்திருக்கும் “மிஸ்ஸஸ் துந்தே எஸ்ட்டெர்” (Mrs. Tünde Eszter) என்ற 52 வயதுப் பெண்மணியா; அல்லது நகரில் நடக்கும் அனைத்தையும் சாட்சியாகப் பார்த்துக் கொண்டும், முக்கிய கதாபாத்திரங்கள் அனைவருடனும் நேரடித் தொடர்பில் இருக்கும், வயதிற்கேற்ற மனமுதிர்ச்சியற்று, தன்னுடைய கனவுலகில் காலத்தைத் தள்ளிவரும், நல்ல மனதுடைய அப்பாவி 35 வயது இளைஞன் “யானோஸ் வலஸ்க்கா ஜூனியர்” (János Valuska, Jr.) என்பவனா என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாத அளவில் இருவரைச் சுற்றியுமே கதை அமைக்கப்பட்டுள்ளது.

 

கதையின் முக்கியமான கதாப்பாத்திரங்கள்:
மிஸ்ஸஸ் யோஃசெப் பிலஃப் (Mrs. József Plauff) – மிஸ்ஸஸ் பிலஃப் என்று அழைக்கப்படும் இவர் கதாநாயகன் யானோஸ் வலஸ்க்காவின் தாயார். வலஸ்க்காவின் தந்தையான யானோஸ் வலஸ்க்கா சீனியர் என்பவரை மணந்து, அவர் இறந்த பிறகு மற்றொருவரை மணந்து அவரும் இதயநோயால் இறந்த பிறகு, மகன் வலஸ்க்காவை 27 வயது வரை பராமரித்தவர் இத்தாய். அவன் பொறுப்பற்றவனாக தனக்கு அவமானம் தரும் வகையில் நடப்பதாலும், குடிகாரனாக இருப்பதாலும் அவனை வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டுத் தனிமையில் வாழ்கிறார். தனது துயரை மறக்க தோட்டம், வீட்டு அலங்காரம் என எதை எதையோ செய்து பார்த்தும் அவை எதுவுமே உதவாமல், மகன் தந்த ஏமாற்றத்தால் நிம்மதி இழந்து வாழ்க்கையைக் கடத்தும் 58 வயதுப் பெண்மணி இவர்.

யானோஸ் வலஸ்க்கா ஜூனியர் (János Valuska, Jr.) – இவனது வாழ்க்கை நிலை இவனது தாய் மிஸ்ஸஸ் பிலஃப்பிற்கு ஏமாற்றத்தை அளித்தாலும், இவன் தன்னைப் பொறுத்தவரை அதைப்பற்றியக் கவலையற்றவன். சூரிய மண்டலம், நிலா, வானம், சூரியன், சூரியக்கிரகணம் போன்றவற்றில் அதிகப்படியான ஆர்வம் கொண்டவன். தான் இரவில் மது அருந்தச் செல்லும் மதுபான விடுதியில் தனக்கென இருக்கும் நண்பர்களான ஓட்டுநர், நாவிதர், சமையல்காரர் போன்ற உழைப்பாளர் கூட்டத்திற்காக அவர்களையே நடிக்க வைத்து தினம் தினம் சூரியகிரகணத்தை செயல்முறையில் விளக்குபவன். பகல் பொழுதில் அஞ்சல் அலுவலக ஊழியனாகப் பணியாற்றி, தனது தோளில் என்றும் நிரந்தரமாகத் தொங்கும் பையில் நாளிதழ்களை எடுத்துச் சென்று வாடிக்கையாளர்களுக்குக் கொண்டு சேர்க்கும் பணி செய்பவன். எதைப் பற்றியும் கவலையற்றவன், யாரையும் நம்புபவன், எவருடைய உள்நோக்கத்தையும் அறியும் திறனற்றவன்.

விவாகரத்து இன்றி பிரிந்து வாழும் எஸ்ட்டெர் தம்பதிகளிடையே இணைப்புப் பாலமாக இருந்து இருவருக்கும் உதவுபவன். தனிமையில் உடல்நலமற்று வாழும் முதியவர் மிஸ்டர் எஸ்ட்டெருக்கு உணவு கொண்டு வருவது, அவர் மனப்பாரத்தைக் குறைக்கப் பேச்சுத் துணையாக இருப்பது போன்றவை வலஸ்க்காவின் தினசரி நடவடிக்கைகள்.

பலர் வலஸ்க்காவை முட்டாள் என்று நினைக்க விரும்பினாலும், அவன் மேல் அதிக அன்பும் அக்கறையும் கொண்டு வலஸ்க்காவைத் தனது உற்ற தோழனாக நினைக்கும் மிஸ்டர் எஸ்ட்டெர் மட்டும், அப்பாவியாக இருக்கும் அவன் ‘அரிய அழியக்கூடிய நிலையில் உள்ள வண்ணத்துப் பூச்சி ஒன்று தீப்பிடித்த காட்டில் பறக்கும் போது காணாது போவது’ (‘Like a rare endangered butterfly lost in flight in a burning forest …’) போன்ற பரிதாபத்திற்குரிய நிலையில் இருப்பவன் என்று எண்ணுபவர்.

மிஸ்டர் கையோர்கி எஸ்ட்டெர் (Mr. György Eszter) – காரியவாதியான மனைவி மிஸ்ஸஸ் துந்தே எஸ்ட்டெருடன் 30 ஆண்டுகள் வாழ்ந்தவர். இசைப் பேராசிரியராகப் பணியாற்றியவர். இவருக்கு வீட்டில் எடுபிடியாக உதவி செய்யும் மிஸ்ஸஸ் ஹாரர், வலஸ்க்கா ஆகியோர் துணையுடன் காலாத்தைக் கழிப்பவர். கலவரத்தில் வலஸ்க்கா காணாமல் போன பிறகு அவனுக்காக மிகவும் கவலைப்பட்டு அலைகிறார்.

மிஸ்ஸஸ் துந்தே எஸ்ட்டெர் (Mrs. Tünde Eszter) – தன்னம்பிக்கையையும் துணிச்சலும் கொண்ட பெண்மணி இவள். பிறர் அழிவில் தன்னை உயர்த்திக் கொள்பவள், கதையின் போக்கின்படி மிஸ்ஸஸ் எஸ்ட்டெர் எந்த வகையிலும் மிஸ்டர் எஸ்ட்டெர்ரைத் துன்புறுத்தியதாகக் காட்டப்படவில்லை. மாறாக, கிறுக்குப் பிடித்தவர் போல சமயத்தில் கணவர் நடந்து கொண்டாலும், தானுண்டு தனது இசையுண்டு என்று துறவி போல வாழும் கணவரை; சமூகத்தில் மதிப்புடன் வாழும் (someone who was an idol of the educated public, … man generally regarded as an eccentric hermit living in absolute isolation) ஒரு பெரிய மனிதரான மிஸ்டர் எஸ்ட்டெரை விவாகரத்து செய்யவில்லை மிஸ்ஸஸ் எஸ்ட்டெர். தன்னை, தனது உறவை அவமதித்த கணவரை மிகவும் வெறுத்தாலும், அவருடன் இருக்கும் உறவை வெட்டாமல் இருப்பது தனது வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு உதவும் என்பது இவளது எண்ணம்.

நகரத்தின் காவல்துறைத் தலைவருடன் காதல் உறவு கொண்டு அவரைக் கைக்குள் போட்டுக் கொண்டு, அவரது உதவியுடன் நகரசபையின் “தூய்மை மற்றும் துப்புரவு திட்டத்தின்”(A TIDY YARD, AN ORDERLY HOUSE) ஒன்றின் பிரதிநிதியாகவும், நகர கவுன்சிலின் மகளிர் குழுவின் தலைவியாகவும் பதவி பெறுகிறாள். இதனால் டவுன்ஹாலில் நுழைந்து, சமயம் வரும்பொழுது நகரசபையின் முக்கியப்பதவி ஒன்றை அடைந்து அதிகாரத்தைக் கைப்பற்றவும், பதவியை அடையவும் திட்டம் போட்டுக் காய்களை நகர்த்தி, வாய்ப்புகளை எதிர்பார்த்துக் காத்திருக்கும் பேராசை கொண்ட அரசியல்வாதி இந்த மிஸ்ஸஸ் எஸ்ட்டெர்.

கதையில் வரும் அனைத்து மாந்தர்களையுமே தன்னல நோக்குடன் தனது காரியத்தை சாதிக்கப் பயன்படுத்திக் கொள்ளும் மிஸ்ஸஸ் எஸ்ட்டெர் ஒவ்வொருவரையும் எதனால் வீழ்த்த முடியுமோ, அல்லது விலைக்கு வாங்க முடியுமோ அதைக் கொண்டு காரியத்தைச் சாதித்துக் கொள்பவள். வலஸ்க்காவின் அப்பாவித்தனத்தை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறாள். சர்க்கஸ் நிகழ்ச்சியால் நகருக்குள் கலவரம் ஏற்படும் பொழுது நகர மேயர் முதல் கொண்டு கலவரம் அடைந்த நிலையில் இருக்கும் பொழுது, அந்த சூழ்நிலையைத் தனக்கு சாதகமாக்கிக் கொள்வதிலேயே மிஸ்ஸஸ் எஸ்ட்டெர் குறியாக இருக்கிறாள். மோசமான சூழ்நிலையையும், தடைகளையும் நம்பிக்கையுடன் தனது உயர்வுக்கு தனது திட்டத்திற்குப் பயன்படுத்துவதில் குறியாக இருப்பதும், தக்க சமயத்தில் ராணுவத்தினருக்கு நகரின் நிலையை விளக்கும் பொறுப்பை வலிந்து ஏற்று நகரத்தின் கலவரக்காரர்களைக் கட்டுக்குள் கொண்டுவர எதிர்த்து நிற்க உதவும் பாங்கும் (leader of the resistance) இவளது வியக்க வைக்கும் நடவடிக்கைகள். அதனால் நகரசபையினர், இவளைப் போல தலைவர் ஒருவர் நகருக்குத் தேவை என எண்ணி நகர கவுன்சிலின் செயாலாளர் பதவியை வழங்கி, ‘மேடம் செகரட்டரி’ என்று மரியாதையுடன் அழைக்கும் நிலையை அடைகிறாள்.

தன்னலவாதியாக இருந்தாலும் தனக்கு வலது கை போல உதவும் மிஸ்டர் ஹாரருக்கு நகரசபையில் ஒரு பணிக்கு ஏற்பாடு செய்ய முயற்சிப்பதும், தவறாக கலவரக்காரர்களிடம் சிக்கிக் கொள்ளும் தனது மற்றொரு உதவியாளனான வலஸ்க்கா குற்றங்கள் செய்ய திறனற்றவன் என இராணுவ அதிகாரிக்கு எடுத்துக் கூறி அவன் கொல்லப்படாமல் தடுத்து, அவனை மனநோய் மருத்துவமனையில் சேர்க்க ஏற்பாடு செய்வதும், திறமையுடன் தன்னை வெளியேற்றிய கணவரின் வீட்டிலேயே மீண்டும் சமயம் பார்த்து நுழைந்து விடும் திறமை எனக் கனக்கச்சிதமாக செயலாற்றும் மிஸ்ஸஸ் எஸ்ட்டெரின் பாத்திரப்படைப்பு வலஸ்க்காவை விட கவனத்தைக் கவரும் வகையில் அமைந்துள்ளது.

மிஸ்டர், மிஸ்ஸஸ் ஹாரர் (Mr. and Mrs. Harrer) – இத்தம்பதிகளின் வீட்டின் பின்னறை ஒன்றில்தான் வலஸ்க்கா வசிக்கிறான். மிஸ்டர் ஹாரர் ஊரின் மரியாதைக்குரியவர்களில் ஒருவர், கற்தச்சர், மிகப்பெரும் குடிகாரர். மிஸ்ஸஸ் பிலஃப், வலஸ்க்கா ஜூனியர், மிஸ்டர், மிஸ்ஸஸ் எஸ்ட்டெர்; மிஸ்டர், மிஸ்ஸஸ் ஹாரர் ஆகிய இந்த முக்கியமான ஆறு பாத்திரங்களின் மூலமே கதையைச் சொல்லிச் செல்கிறார் லேஸ்லோ க்ரேசேஹார்க்கை.

 

கதையின் சுருக்கம்:
கதை தொடங்கும் முதல்நாள் மாலையில் மிஸ்ஸஸ் பிலஃப் நடமாட இயலாத தனது சகோதரிகளை சந்தித்துவிட்டு இரயிலில் வீடு திரும்புகிறார். தாமதமாக வந்து சேரும் இரயிலினால் வீடு செல்லும் கடைசிப் பேருந்தையும் தவறவிட நேருகிறது. என்றும் இல்லாதவகையில் நகர் இருளில் வேறு மூழ்குகிறது. அச்சத்துடன் அவசர அவசரமாக அவர் வீடுதிரும்பும் வழியில் மறுநாள் நகரில் நடைபெறப்போகும் சர்க்கஸ் நிகழ்ச்சிக்காக பெரிய ட்ரக் ஒன்று வருவதையும், ஊருக்குப் புதியவர்களான முரடர் கூட்டம் சாலைகளில் குழுமுவதையும், அவர்களில் ஒரு சிலர் வன்முறையில் ஈடுபடுவதையும் காணுகிறார். அவர் வீடு திரும்பிய சிறிது நேரத்தில் அவரைச் சந்திக்க வரும் மிஸ்ஸஸ் எஸ்ட்டெர், தனது உதவியாளனான மிஸ்ஸஸ் பிலஃப்பின் மகன் வலஸ்க்காவை தன்னிடம் இருந்து பிரிந்து வாழும் தனது கணவரிடம் உதவி கோரி அனுப்பப் போவதாகச் சொல்லி மிஸ்ஸஸ் பிலஃப்பின் கருத்தை அறிய விரும்புகிறாள். மிஸ்ஸஸ் எஸ்ட்டெர் மீது நன்மதிப்பு கொண்டிராத மிஸ்ஸஸ் பிலஃப் அவளிடம் பட்டும்படாமல் பேசி அவளை வெளியேற்றிவிடுகிறார்.

மிஸ்ஸஸ் எஸ்ட்டெர் தனது வீட்டிற்குத் திரும்பி அவளது காதலரான நகரக் காவல்துறை அதிகாரிக்காகக் காத்த்கிறார். பெரும் குடிகாரரான காவல்துறைத் தலைவர் வந்து அவளுடன் பேசிக்கொண்டிருக்கிறார். சர்க்கஸ் நிறுவனம் எங்கு சென்றாலும் அவர்களைத் தொடர்ந்து சென்று அவர்களுக்குத் தொல்லை தரும் முரடர் கூட்டம் இந்த ஊருக்கும் வந்துவிட்டதால், அடுத்தநாள் நிகழவிருக்கும் சர்க்கஸ் நிகழ்ச்சியில் கலவரம் நிகழலாம் என ஏதிர்பார்க்கும் சர்க்கஸ் நிறுவனம் காவல்துறையின் பாதுகாப்பைக் கோருவதாகக் கூறிச் செல்கிறார். கலவரம் நடந்தால் அதனைத் தனக்குச் சாதகமாக்கும் வகையில் திட்டமிடுகிறது மிஸ்ஸஸ் எஸ்ட்டெரின் மனம். அடுத்தநாள் பிரிந்துவாழும் தனது கணவரின் வீட்டில் குடியேற எண்ணி அதற்கான ஏற்பாடுகளில் ஈடுபடுகிறாள்.

இதற்கிடையில் வலஸ்க்கா மதுபான விடுதியில் நண்பர்களுடன் பொழுதைக் கழித்துவிட்டு விடியப்போகும் நேரத்தில் வீடு திரும்புகிறான். வழியில் சர்க்கஸ் நிறுவனம் காட்சிக்கு வைத்திருக்கும் பாடம் செய்த திமிங்கிலத்தை ஆர்வத்துடன் பார்க்கிறான். தனக்காக மிஸ்ஸஸ் எஸ்ட்டெர் அவனது வீட்டில் வழக்கமாகச் சந்திக்க வரும் நேரம் கடந்துவிட்டது நினைவு வந்து அவசரமாக தனது வீட்டிற்குச் செல்கிறான். அவனுக்காக அங்கு காத்திருந்து, தனது கணவரின் துவைத்த துணிகளை அவரிடம் ஒப்படைக்கக் கொடுக்கும் மிஸ்ஸஸ் எஸ்ட்டெர், தனது கணவரை தனது திட்டத்திற்கு உதவும் வகையில் அவரது நண்பர்களிடம் பேசச் சொல்லி உதவி கோரும் கடிதத்தையும் கொடுக்கிறாள். கடிதத்தை மிஸ்டர் எஸ்ட்டெரிடம் சேர்ப்பிக்கிறான் வலஸ்க்கா.

வலஸ்க்கா உண்மையை அறிந்திருப்பான் என யூகிக்கும் மிஸ்ஸஸ் எஸ்ட்டெர் அவனை திசை திருப்ப காவல்துறை அதிகாரியின் பிள்ளைகளைக் கவனித்துவிட்டு அவனது வழக்கமான வேலைகளுக்கு திரும்பச் சொல்கிறாள். இடையில் நகரே குலுங்கும் வண்ணம் பெரிய ஓசைகள் எழுகிகின்றன. மிஸ்டர் எஸ்ட்டெர் பற்றிய கவலையுடன் வெளியேறுகிறான் வலஸ்க்கா. மிஸ்டர் எஸ்ட்டெர் தனது நண்பர்களுடன் கொண்ட உரையாடல்களால் எச்சரிக்கை அடைந்து, பாதுகாப்பிற்காக ஜன்னல்களை மரப்பலகைகள் வைத்து மறைத்துவிட்டு வலஸ்க்காவிற்காகக் காத்திருக்கும் வேலையில் அசதியால் உறங்கிவிடுகிறார். அவரை சந்திக்க வரும் வலஸ்க்கா முரடர்கள் கையில் மாட்டிக் கொள்கிறான். அவனையும் இழுத்துக் கொண்டு செல்லும் முரடர் கூட்டம் ஊரில் உள்ள திரையரங்கம், அஞ்சல் அலுவலகம், தொலைபேசி அலுவலகம், மருத்துவமனை என ஒன்றுவிடாமல் அடித்து நொறுக்குகிறது. வீடுகளின் கண்ணாடி ஜன்னல்களை இரும்புத் தடிகொண்டு நொறுக்குகிறது, கார்களைக் கவிழ்க்கிறது, அகப்படும் மக்களைக் கொலை செய்கிறது. முப்பது பேர் கொண்ட முரட்டுக் கூட்டத்தை, நகரின் காவல்துறை சரியான தலைமை இல்லாத காரணத்தால் தடுக்கமுடியாமல் போகிறது. முரடர் கூட்டம் கலைந்து செல்லும்பொழுது அசதியில் இருக்கும் வலஸ்க்காவை தனியே விட்டுவிட்டுப் போய் விடுகிறது. இராணுவம் உதவிக்கு வரவழைக்கப்படுகிறது. அவர்களிடம் கலவரக்காரர்களின் குறிப்புக்கள் கொடுக்கப்படும் பொழுது வலஸ்க்கா பற்றிய குறிப்பும் அதில் மாட்டிக் கொள்கிறது.

மிஸ்டர் ஹாரர் வீடு திரும்பி, முரடர்களின் வன்முறையால் தாக்கப்பட்டு சேதமடைந்திருந்த தனது வீட்டில் அச்சத்துடன் இருக்கும் மனைவியிடம் வலஸ்க்கா பற்றி கூறி மிஸ்டர் எஸ்ட்டெருக்கு தகவல் கொடுக்க அனுப்பிவிட்டு, மிஸ்ஸஸ் எஸ்ட்டெர் கொடுத்த ஆலோசனைப்படி வலஸ்க்காவைச் சந்தித்து ஊரைவிட்டு ஓடி மறைந்து வாழ எச்சரிக்கச் செல்கிறார். இரயிலடியில் அவனைச் சந்தித்து எச்சரிக்கிறார். மிஸ்ஸஸ் ஹாரர் மூலம் வலஸ்க்கா பற்றிய தகவல் அறிந்து மிஸ்டர் எஸ்ட்டெர் வலஸ்க்காவைக் காப்பாற்ற, இராணுவத்திடம் முறையிட நகரசபைக்கு ஓடுகிறார். வழியில் முதல் நாளிரவு கலவரத்தில் உயிரிழந்தவர்களில் வலஸ்க்காவின் தாயும் ஒருவர் எனத் தெரிகிறது.

இராணுவம் வந்தபொழுது அச்சத்தில் இருந்த மேயரும், போதையில் இருந்த காவல்துறை அதிகாரியும் செயலிழந்த நிலையில் மிஸ்ஸஸ் எஸ்ட்டெர், சூழ்நிலையை தனது கையில் எடுத்துக் கொண்டு இராணுவத்திற்கு உதவும் வகையில் தகவல்கள் கொடுத்து உதவுகிறாள். அதனால் இராணுவ அதிகாரியின் நன்மதிப்பையும் நட்பையும் பெறுகிறாள். இராணுவ விசாரணை நடக்கும்பொழுது வலஸ்க்கா குற்றம் செய்யும் திறனற்றவன் என்று எடுத்துக் கூறி அவனை மனநல விடுதிக்கு அனுப்ப ஏற்பாடு செய்து காப்பாற்றுகிறாள். அவளது திறமையான வழிப்படுத்துதலைக் கண்டு நகரசபையின் செயலாளர் பதவி அவளைத் தேடி வருகிறது. தனது கணவரின் வீட்டிற்கு மீண்டும் குடிபெயர்கிறாள் மிஸ்ஸஸ் எஸ்ட்டெர்.

வலஸ்க்காவின் உயிருக்கு ஆபத்து இல்லை என்பதை அறிந்து நிம்மதி அடைந்த மிஸ்டர் எஸ்ட்டெர், வீட்டிற்குள் நுழைந்துவிட்ட மனைவியைப் பொருட்படுத்தாமல் தனது இசை ஆராய்ச்சி பக்கம் கவனத்தைத் திருப்புகிறார். மிஸ்ஸஸ் எஸ்ட்டெர் நகரமக்களால் மதிக்கும் நிலையை அடைகிறாள். தனக்கு உதவி செய்த மிஸ்டர் ஹாரருக்கு நல்ல பதவியை அளிக்க ஏற்பாடும் செய்கிறாள். மேலும், வலஸ்க்காவின் தாயாரின் மரணத்திற்கு இறுதி அஞ்சலி செலுத்தச் சென்று மிஸ்ஸஸ் பிலஃப் பற்றி பாராட்டிப் பேசுகிறாள்

 

லேஸ்லோ க்ரேசேஹார்க்கின் வர்ணனைகள் சூழ்நிலையைக் கண்ணெதிரே கொணரவும், ஒரு கதாப்பாத்திரத்தின் குணநலன்களை விவரிக்கவும் திறமையாகப் பயன்படுத்தப் பட்டிருக்கிறது. இருப்பினும் கதையின் சில இடங்களில் தேவையற்ற வகையில் அமைந்த வர்ணனைகள் வாசிப்பவர்களுக்கு அயர்ச்சி ஏற்படுத்தவும் தவறுவதில்லை. முழுக்கதையையுமே படித்து முடித்த பின்னர் காட்சிகளை ஆராயும்பொழுது, கதையின் முதல்காட்சியில் வரும் மிஸ்ஸஸ் பிலஃப்பின் இரயில் பயணமும், அதில் அவர் எதிர் கொள்ளும் மாந்தர்களுமே கதைக்கு எந்த விதத்திலும் உதவில்லை என்பது தெரிகிறது. அதைப்போன்றே மிஸ்ஸஸ் எஸ்ட்டெர் உறங்கும் பொழுது தேவையற்ற வகையில் விவரிப்பு விரிந்து சென்று அறையில் அலையும் எலிகளைப் பற்றியெல்லாம் குறிப்பிடுவதும் கதையோட்டத்திற்குக் கொஞ்சமும் உதவும் வகையில் இல்லை. மற்றொரு காட்சியில் மிஸ்ஸஸ் ஹாரர், மிஸ்டர் எஸ்ட்டெர் வீட்டிற்கு கலவரம் நடக்கும் நள்ளிரவில் ஓடிவந்து வலஸ்க்கா கலவரம் செய்யும் முரடர்கள் கையில் சிக்கிவிட்டான் என்று கூறுவதை விட்டுவிட்டு ஆதியில் தொடங்கி அந்தம் வரை நீள நீளமாக விவரிப்பது கேட்பவர் யாராக இருந்தாலும் பொறுமையை இழக்கச் செய்யும் செயலே.

மிஸ்ஸஸ் ஹாரர் வழியாக கலவரத்தை விவரிக்க ஆசிரியர் மேற்கொண்ட உத்தியாக அது இருந்தாலும் தொடர்ந்து, முரடர்களின் கைப்பாவையாக மாட்டிய வலஸ்க்கா மூலமாகவே கலவரக்காரர்கள் செய்யும் அட்டூழியத்தை விளக்கும் காட்சியும் தொடர்வதால் மிஸ்ஸஸ் ஹாரர் வாய்மொழியாக வரும் பகுதியை தவிர்ப்பதனால் கதையோட்டத்தில் இழப்பு ஏதும் ஏற்பட்டிருக்காது என்றே தோன்றுகிறது. மற்றொரு இடத்தில் கலவரத்தில் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள ஜன்னல்களில் மரச்சட்டங்களை மிஸ்டர் எஸ்ட்டெர் ஆணிவைத்து அடிப்பதைச் சித்தரிக்கும் காட்சியும் தேவையற்ற அளவுக்கு மீறிய விவரிப்பு என்ற வகையில் அடங்கும். இது போன்று மேலும் சில இடங்கள், கதையோட்டத்திற்கும் உதவாமல், கதாபாத்திரதத்தின் குணநலனையும் விவரிக்க உதவாமல் மேம்போக்காகக் கதையின் போக்கை தொய்வடையச் செய்யும் வகையில் அமைந்திருப்பதைக் குறிப்பிடலாம்.

ஹங்கேரிய மொழியில் அமைந்த மூலநூல் மிகவும் சிறப்பாக இருந்திருக்கக் கூடும், ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவரும் மிகவும் பாராட்டத் தக்க வகையில் மொழியாக்கம் செய்துள்ளார் என்றாலும் ஆழமான, மிகத் தீவிரமான வாசிப்பை எதிர்பார்க்கும் இந்தப் புதினத்தை தீவிரமான இலக்கிய இரசிகர்கள் மட்டுமே விரும்புவார்கள் என்று கூறும் வகையில்தான் இந்த நூல் அமைந்துள்ளது.

 

நன்றி: “இலக்கிய  வேல்”  இலக்கிய மாத இதழ் (ஜூலை & ஆகஸ்ட் – 2015 )

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *