ஐந்து கை ராந்தல் (26)

வையவன்
யாரோ தொட்டு உலுப்புகிறார்கள்.
கங்கையோடு கங்கையாக வனாந்திரங்களில் பர்வதத் தாழ்வுகளில் பாறைகளில் சிக்கி ஆனால் அடிபடாமல் சிவா போய்க் கொண்டேயிருந்தான்.
ஏதோ நீந்துகிற மாதிரி… தண்ணீரின் மீதே பறப்பது மாதிரி… பறவைகள் பாடிய கரையோரங்களைப் பார்த்துக் கொண்டே போகிறான்.
யாரோ தொட்டு உலுப்புகிறார்கள்.
சட்டென்று கண் விழித்தான். வெற்றிவேல்.
“என்ன வெற்றி… பொழுது விடிஞ்சாச்சா?”
“இல்லை. இன்னும் நேரமிருக்கு. வெளியே பாபா காத்துகிட்டிருக்கார். கங்கையிலே குளிக்கப் போவோம், வர்றீங்களாண்ணு கூப்பிட்டார்.”
“இந்தக் குளிர்லேயா?”
“குளிர்லே குளிச்சா கங்கை சூடாயிருக்கும். அது தனி சுகம். குளிர் விட்ட பிறகு குளிச்சா அது ஜில்லுணு இருக்கும். எதையும் ‘மிஸ்’ பண்ணக் கூடாது.”
“சரி…” சிவா சோம்பலை உதறிக் கொண்டு எழுந்தான்.
வெளியே பாபா ஒரு மேல் துண்டு கூட இல்லாமல் நின்றார்.
“போவோமா” என்று சிரித்தார்.
அவர்கள் மூவரும் பாதுகாப்புக் கம்பிகள் கட்டப்பட்டிருந்த ஒரு நீர்த்துறைக்குச் சென்றனர். வழியில் ஒன்றும் பேசாமல் நடந்தனர்.
கங்கை பேசிக் கொண்டிருந்தது. மனித மொழிகள் அடங்கியிருந்த அந்த அதிகாலையில் குளிர் மறந்து நடப்பது சிரமமாயிருந்தது. எனினும் அந்த நிசப்தத்தை, கங்கை ஓடும் ஒலி மட்டும் கேட்கும் மௌனத்தை மனம் தோய்த்து ரசித்தான்.

 
நீர்த்துறையில் சிறு கூட்டமிருந்தது.
மூவரும் மூழ்கி எழுந்தனர்.
மேற்புறத்தில் பனிக்கட்டி போன்று குளிர்ந்த கங்கை சற்று ஆழத்தில் வெதுவெதுப்பாக இருந்தது. மூன்று முழுக்கு போட்டு எழுந்த போது குளிர் சுத்தமாக விட்டுப் போயிற்று.
உடம்பில் ஜிவுஜிவுவென்று ஒரு புத்துணர்ச்சி பரவியதை சிவா உணர்ந்தான். தலையிலிருந்து பாரமெல்லாம் கழிந்து விட்ட நிம்மதி. மனசு மேகமில்லாத ஆகாயம் மாதிரி தெளிவாயிருந்தது.
பாபாவும் வெற்றிவேலும் கரையேறிய பின்னரும் கூட அவன் நீர்த் துறையை விட்டு எழுந்திருக்க மனமின்றி பத்து நிமிஷம் குளித்தான்.
அதற்கப்புறம் அவர்களைக் காத்திருக்க விடலாகாது என்ற எண்ணம் உதித்துக் கரையேறினான்.
“கங்கை அன்னையின் மடியிலிருந்து எழுந்து வர மனசு வராது!” பாபா சொன்னார்.
“மேலும் இவன் எழுத்தாளன்” என்று வெற்றிவேல் சொன்னான்.
அந்த அறிமுகம் அசந்தர்ப்பமானதாக சிவாவுக்குப் பட்டது.
“நல்லது” என்று ஆசிர்வதிப்பது போல பாபா சொன்னார்.
சிவா தலை துவட்டிக் கொண்டான்.
மூன்று பேரும் ஒரு பாறை மேல் நின்று கொண்டிருந்தனர்.
“உட்கார்ந்து போகலாமே!” என்று பாபா சொன்னார்.
இருவருக்கும் அங்கே இருப்பது சுகமாகத் தோன்றியது.
மூவரும் உட்கார்ந்தனர்.
“அம்மா எப்படி இருக்கிறாள்?”
முதன் முறையாக அவன் தன் மகன் என்ற உரிமையை உணர்த்துவது போன்று பாபாவின் பேச்சு ஆதுரமாக ஒலித்தது.
அவருக்கும் தனக்கும் மத்தியில் நடந்த மௌனமான யுத்தம் முடிந்தது போன்று நினைத்தான் சிவா. அவன் மீது தன்னையறியாது ஒரு நேய உணர்வு தோன்றியதைக் கவனித்தான்.
“சௌக்கியமா இருக்காங்க”
“என்ன எழுதுகிறாய்?”
சிவா தயங்கினான்.
“கதைகள்”
“ம்ம்ம்… நல்லது”
“குறுகிய காலத்தில் எல்லார் கவனத்தையும் கவருகிற மாதிரி எழுதியிருக்கிறான்” என்று வெற்றிவேல் விளக்கினான்.
“நல்லது… எதிலும் நலம் செய்ய முடியும். நன்மையை எதிலும் விநியோகிக்க முடியும். நோக்கம் மேன்மையானால் நலமும் நன்மை நாடும். இயல்பும் வாய்க்கும்.”
சிவா கேட்டுக் கொண்டான். பொதுப் படையானது போன்ற அந்தச் சொற்களில் பொருள் பொதிந்திருப்பதை அவன் கண்டான்.
“உனக்கு இதன் மேல் வருத்தமில்லையே மகனே” என்று தன் மார்பைத் தொட்டுக் காட்டினார் பாபா.
அவர் நான்… என் என்ற சொற்களைத் தவிர்த்து விட்டதை அண்செட்டி சந்திப்பிலேயே புரிந்து கொண்டிருந்தான்.
“இல்லை பாபா”
அவர் முகம் பரம சாந்தத்தில் லயித்திருந்தது. பூ மலர்ந்தது போன்ற புன்னகை அந்த வெள்ளைத் தாடியினூடே தென்பட்டது.
“நல்லது மகனே! வருத்தம் ஒரு பந்தம். அது பந்தத்தின் மீதி, பிரிய வேண்டிய நேரத்தில் மலர் உதிர்கிறது. இறக்கை முற்றுகிற தருணத்தில் பறவை பறந்து விடுகிறது. விடுபட்ட வேகத்தில் அதோ அன்னை ஓடிக் கொண்டிருக்கிறாள்.”
சிவாவும் வெற்றிவேலும் கூர்ந்து கவனித்தனர்.
“மகனே” என்று சிவாவைப் பார்த்துத் தனியாக ஒரு வார்த்தை சொல்வது போல் தொடங்கி நிறுத்தினார்.
“இது வேதாந்தம் அல்ல. உலக இயல்பு. வருத்தமும் உலக இயல்புதான். நேரம் வரும்போது அதுவும் தீர்ந்து போகிறது. உன் தாய்…” பாபா சற்று யோசித்து விட்டுத் தொடர்ந்தார்.
“மகா ஞானி. எதற்கு வருந்துவது… எதற்குத் தடை செய்வது என்று நன்கு உணர்ந்தவள்.”
சிவாவுக்கு மெய் சிலிர்த்தது.
“அவள் நலமாகவே இருப்பாள்.”
பாபா இறுதி விடை பெறுகிறார் என்று சிவாவுக்குத் தோன்றியது.
“யாவும் நலமாகவே நடக்கும். மகனே, உன் பாதை தெளிவாகியிருக்கிறது!” என்று எதையோ சுட்டிக்காட்டி உணர்த்துவது போல் சொன்னார்.
தன் மனசுக்குள் நடந்தனவற்றை அவர் கூறுகிறாரா?
“நீ உன் பாதையில் பயணம் செய். உன் இயல்பு உன் பாதையைச் செப்பனிட்டுப் போகிறது. நல்லது.”
அவர் சற்று நிறுத்தி நிசப்தமானார். பிறகு பாலத்தைப் பார்த்தவாறே தொடர்ந்தார்.
“எத்தனையோ பாதைகள் எத்தனையோ பாலங்கள்; எங்கும் தேங்கி நிற்காத பிரயாணம் தான் முக்கியம். பாதைகளும் பாலங்களும் சொந்தமானவையாக இருக்க வேண்டும் என்பதில் கூட ஒரு நியாயம் உண்டு!”
சிவாவின் மனசில் நடந்த போராட்டம் யாவற்றையும் சுட்டிக்காட்டுவது போன்று அந்தப் பேச்சு விளங்கிற்று.
“கங்கைக்குப் பந்தமில்லை. ஆனால் துணை உண்டு.”
பாபா அர்த்தபுஷ்டியோடு நிறுத்தினார்.
“அதே மாதிரி வாழ்க்கைக்கும் துணை உண்டு. சிலருக்கு அது தேவை. சிலருக்கு அது தேவை இல்லை.”
வெற்றிவேல் அவர் இன்னும் வெளிப்படையாகச் சொன்னால் நலமாக இருக்கும் என்று எதிர்பார்த்தான்.
“நீங்கள் எதைச் சொல்கிறீர்கள் பாபா?”
அவர் மௌனமானார்.
சிவா ஒவ்வொரு வார்த்தையாக கிரகிப்பவன் போன்று அவரை கவனித்துக் கொண்டிருந்தான்.
“துணை அமைவது முக்கியம். ஒரு சமயம் துணை தானாகவும் அமையும்…அந்தக் குழந்தை…அவள் பெயர் என்ன?”
வெற்றிவேலுக்கு சட்டென்று விளங்கிற்று.
“பிரீதா” என்றான்.
“அவள் உத்தமமானவள். துன்பமும் துயரும் உலையில் உருக்கி உருக்கி அவளை பசும்பொன் மாதிரி சுடர வைத்திருக்கிறது. அத்தகைய துணை ஒருவருக்கு கிட்டுவது அபூர்வம்.”
சிவா துணுக்குற்றான்.
அவளை ஏற்றுக்கொள் என்று சொல்ல வருகிறாரா…? அப்படிச் சொல்வது அவரது இயல்புக்கு முற்றிலும் விரோதமானது!
அவர் புன்னகை செய்தார்.
“உங்கள் இருவரில் எவரேனும் அவள் அருமையை அறிந்திருக்கிறீர்களா?”
சிவா நிம்மதிப் பெருமூச்சு விட்டான்.
“உங்கள் இருவரில் எவரேனும் ஒருவர் சகோதரனாக இருந்து அவள் அருமையை அறிந்த ஒருவனிடத்தில் ஒப்படையுங்கள். அவன் ஆசிர்வதிக்கப்பட்டவன் ஆவான்.”
அந்த ரிஷிகேஷ் பயணமும், அதிகாலையில் நீரில் குளிக்கச் சென்றதும் அவர்கள் இருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் பொருள் நிறைந்ததாக ஊர் திரும்பும் போது தோன்றின.
பாபாவுடன் அவர்கள் குளிக்கச் சென்ற போது என்ன பேசினர் என்று பிரீதாவிடம் எவரும் சொல்லவில்லை. அவள் கேட்கவுமில்லை.
அவளுக்கும் பாபாவைப் பார்த்ததும் அவர் முன்னால் மனசையெல்லாம் திறந்து கொட்டி அழுது தீர்த்ததும் மட்டுமே போதுமானதாக இருந்தன.
கைலாச யாத்திரைக்குக் கால்நடையாக ஏழு பேர் கொண்ட பாபாவின் குழு புறப்பட ஆயத்தமான போது சிவாவோ வெற்றிவேலோ சற்றும் எதிர்பாராதது போன்று ஒரு காரியத்தை அவள் செய்தாள்.
அந்தக் குழுவின் முன்பு நெடுஞ்சாண் கிடையாக விழுந்து இரண்டு கைகளையும் பாபாவின் காலடிகளைத் தொட்டவாறு சிரம் கவிழ்த்து வணங்கினாள்.
“எழுந்திரு குழந்தாய்… உனக்கு சௌபாக்கியம் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறது” என்று சொன்னார் பாபா.
“ஹர ஹர சங்கர்… ஜெய ஜெய சங்கர்” என்று எவரோ கூறினர்.
அதற்குள் கைலாச யாத்திரைக்கு பாபா புறப்பட்ட விஷயம் தெரிந்து கூடிய பெருங் கூட்டம் “ஹர ஹர ஷங்கர், ஜெய ஜெய ஷங்கர்” என்று ஆயிரம் தொனிகள் இணைந்த ஐக்கியத்தோடு கூவிற்று.
‘போலோ பசுபதி மகராஜ் கீ…”
கூட்டம் “ஜே” என்று கத்திற்று.
“போலோ கைலாஷ்நாத் கீ”
“ஜே”
லக்ஷ்மண் ஜூலா பாலத்தின் அக்கரையில் கூட்டம் நின்றுவிட அந்த ஏழு யாத்ரிகர்கள் மெல்ல மெல்ல அந்தப் பாலததின் மீது நடந்து செல்வது தூரப் புள்ளிகளாய் மறைந்தது. லக்ஷ்மண் ஜூலாவின் தொங்கும் பாலம் அசைந்து அசைந்து ஆடிற்று.
அவர்கள் பார்வைக்கு முற்றிலும் மறைந்து போயினர்.
தங்கள் உடமைகளை எடுத்துக் கொண்டு ஊர் திரும்பும் யோசனையில் பாபாவின் ஆசிரமத்திற்கு வந்தனர்.
ஆசிரமத்தின் சகல உடமைகளையும் சொத்துக்களையும் காளிகாம்பாள் வாலா மகராஜின் நிர்வாக டிரஸ்டுக்கு எழுதி வைத்துவிட்டு துண்டை சுத்தமாக உதறி எந்த தூசும் எடுத்துச் செல்லாமல் பாபா புறப்பட்டிருக்கிறார் என்று அங்கே பேசிக் கொண்டார்கள். சிவா தெளிவாயிருந்தான்.
அந்த ஏழு பேரும் திரும்புவதில்லை என்ற முடிவுடன் கிளம்பியிருக்கிறார்கள் என்பது விளங்கிற்று.
அந்தப் பயணத்தையும் அதற்குத் தான் மறுத்ததையும் நினைத்தான்.
மார்பு விம்மி உடம்பு ஆடிற்று. கண்கள் அடக்க முடியாது கண்ணீரில் தத்தளித்தன.
கையைத் தொட்டான் வெற்றிவேல்.
சிவாவின் உணர்ச்சியால் துடிக்கும் முகம் அவனுக்கு சட்டென்று விளங்கிற்று.
சிவாவின் கையை அவன் இறுகப் பற்றினான். பற்றிய கைக்கு பதிலளிப்பது போல் சிவா தன் அழுத்தத்தை அதற்கு வெளியிட்டான்.
“ஹரித்வார்… ஹரித்வார்” என்று ஒரு வேன்காரன் ஹார்ன் அடித்துக் கொண்டே கூவினான். மூவரும் அதை நெருங்கினர்.

தொடரும்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.