ஐந்து கை ராந்தல் (18)

வையவன்

“என் குடும்ப விஷயத்திலே தலையிடறதுக்கு நீங்க யாரு?”
பிரீதாவையும் சிவாவையும் பார்த்து சீறி வெடித்தார். புண்ணியகோடி.

பனிரெண்டு மணிக்கு ஒரு காரில் வந்திருந்தார். வீடு பூட்டியிருப்பதைப் பார்த்த கொதிப்பும், வந்தவர்களிடம் பட்ட அவமானமும் அவரைக் கொதிப்பூட்டின.

“எம் பொண்ணை நான் சினிமாவுக்கு அனுப்புவேனோ. டிராமாவுக்கு அனுப்புவேனோ… அது என் இஷ்டம். அவ எம் பொண்ணு. அவ கேக்கறாளோ இல்லையோ… நான் அவளை வற்புறுத்துவேன்… அடிக்கக்கூட அடிப்பேன்… என் இஷ்டம்.”
அவர் பார்வை பிரீதா மீது பாய்ந்தது.

“நீ யாரு… ஏம்மா நர்ஸம்மா, நீ இதைக் கேள். ஒங்க வழியிலே நான் குறுக்கே வந்தனா… நீங்க இன்னா எனக்கு ஜாதியா ஜனமா… சொந்த மனுஷாளா… எந்த தைரியத்திலே நீங்க என் வூடு ஏறி வந்தீங்க… ஏதோ பக்கத்திலே கொடக் கூலிக்கு இருக்கீங்கண்ணு மரியாதைக்கு நாலு வார்த்தை நல்லதனமா பேசியிருப்பேன்… அதுக்காக… என் வூட்டு விஷயத்திலே தலையிட ஒங்களுக்கு என்ன உரிமை?”
எல்லாவற்றையும் அவர்கள் எதிர்பார்த்தே வந்திருந்தனர். அதனால் வெறி தணியட்டும் என்று காத்திருந்தனர்.

திஷ்யா குழந்தைகளை அழைத்துக் கொண்டு உள்ளே ரூமிற்குப் போய்விட்டாள்.
புண்ணியகோடிக்கு மேல் மூச்சு வாங்கிற்று. இரைக்க இரைக்க நின்றார். இந்த வயசான தோற்றத்தில் இப்படிக் கத்துகிற அவரைப் பார்த்து சிவாவுக்கு மிகவும் பரிதாபமாக இருந்தது.

வாழ்வில் கானலை விரட்டுவதையே ஒரு தொழிலாகக் கொண்டு வருந்தி அடிவாங்கியவர். சமுதாய நோய்களுக்கு பலியானவர்.

“சார்.”
“நான் எதையும் கேக்கத் தயாரா இல்லே”
“நீங்க கேக்கலேண்ணாலும் நாங்க சொல்ல வந்திருக்கோம். ஒங்க பொண்ணுக்கு இதிலே இஷ்டமில்லே” என்று உறுதியோடு சொன்னான் சிவா.

“அதைச் சொல்ல நீ யாரு?”
“ஒங்க பொண்ணைக் கூப்பிட்டு நான் யாருன்னு கேளுங்க.”
“ராஸ்கல்” என்று சிவாவை அடிப்பது போன்று கையை ஓங்கிக்கொண்டு ஓடிவந்தார் புண்ணியகோடி. அவர் நெருங்கியபோது அவன் எழுந்து நின்றான்.

அவர் முகம் திடீரென்று மாறிற்று.
எல்லாவற்றுக்கும் இவன்தான் காரணம் என்பது போல் ஒரு வெறுப்பு அவர் முகத்தில் திரண்டது. அந்த வெறுப்பில் ஒரு பயம்..

திஷ்யா கைவிட்டுப் போய்விடுவாளோ என்ற பயம் அவர் உயர்த்திய கையைக் கீழே விட்டார்.
“நீ மிரட்டறியா?” என்று மூச்சு வாங்கக் கேட்டார். அவர் குரல் தாழ்ந்து விட்டது.

“இல்லே, ஒங்க பெண்ணைக் கூப்பிட்டுக் கேளுங்க.”
“நான் கேக்க மாட்டேன்! நீ வந்திருக்கறதிலே இருந்தே தெரியுது ஒன் துணிச்சலுக்கு என்ன காரணம்னு சிவா… சிவா… நான் ஒனக்கு என்ன தீமை செஞ்சிருக்கேன்.”

அவர் குரல் தாழ்ந்தது. பிச்சை கேட்பது போல் கெஞ்சத் தொடங்கியது. “வாண்டாய்யா… விட்டுடு… இது ரொம்ப நொடிஞ்ச குடும்பம். நான் ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன். ஒனக்கு என்ன… ஆயிரம் எடத்திலே பொண்ணு கெடைக்கும். நான் ஏழை. நீ பெரிய பொஸிஷனுக்கு வருவே… ஒனக்கு அருமையான பொண்ணு கெடைக்கும். வாண்டாய்யா… வாண்டாம். ஒன்னைக் கையெடுத்து கும்புடறேன். எம் பொண்ணை விட்டுடு ஐயா! அது லைஃபை கெடுத்துடாதய்யா”
“மிஸ்டர் புண்ணியகோடி” அவர் தேம்பி அழுவதைக் கேட்கச் சகிக்காமல் பிரீதா குறுக்கிட்டாள்.

“எம்மா… நர்ஸம்மா.. ஒனக்குக் கோடிப் புண்ணியமுண்டு. இவனுக்கு புத்தி சொல்லு. எனக்கு இன்னும் மூணு பசங்க இருக்கு. இன்னும் எட்டு வருஷத்திலே நான் ரிட்டயராயிடுவேன். இதுங்களுக்கு இதுவரிக்கும் நான் ஒரு வழியும் பண்ணலே. எம் பொண்டாட்டி.. எம் பொண்டாட்டி…” என்று அவர் மேலும் தேம்பித் தேம்பி அழத் தொடங்கி விட்டார்.
“அப்பா” என்று கத்திக் கொண்டே வெளியே வந்தாள் திஷ்யா.

புண்ணியகோடி திரும்பிப் பார்த்தார்.
“இப்ப என்ன நடந்து போச்சுண்ணு இப்படி பொலம்பறீங்க”
“நீ உள்ளே போடி. உள்ளே போ” என்று திடீரென்று வெறிபிடித்துக் கத்தினார்.
திஷ்யா உள்ளே போகவில்லை.

“போக மாட்டே, போக மாட்டே” என்று கத்திவிட்டு அவர் படார் படாரென்று தன் தலையில் அறைந்து கொண்டார்.
திஷ்யா அமைதியாக நின்றாள்.

“எல்லாம் ஒன்னாலதாண்டி குடி கேடி! இப்படி நாலு பேர்கிட்டே நான் பொலம்பற நிலைக்கு ஆளாக்கிட்டியே. எல்லாம் ஒன்னால தான்”
“இல்லே, நான் என்ன பண்ணணும்?”
“உள்ளே போ”
“இல்லே, நான் வெளியே போகப் போறேன்!”

“நீ போயிடுவியா? ஒனக்கு அவ்வளவு தைரியம் உண்டா?”
“நிச்சயமா. என்னை அழைச்சுட்டுப் போகத்தான் இவங்க வந்திருக்காங்க. நான் தன் தம்பி தங்கைகளை அழைச்சிகிட்டு வெளியே போகப் போறேன்.”

“நீ எங்கே போவே?”
“இவங்களோடே”
“நான் போலீஸ்லே கம்ப்ளெயிண்ட் கொடுப்பேன்”
“நான் எதிர்பார்த்தேன். நான் மேஜராய்ட்டேன். எனக்கு என் பாதையை தீர்மானிக்கிற சுதந்திரம் உண்டு.”
“இதுக்காடி நான் ஒன்னைப் பெத்தேன்”
திஷ்யா உறுதியோடு பேசினாள்.

“இது கௌரவமானதுப்பா. சினிமா சினிமான்னு நீங்க அலையறீங்களே அதைவிட அது உத்தமமானது. ஒண்ணு இவருக்கும் எனக்கும் நீங்க கல்யாணம் நடத்திவச்சு நீங்களே கௌரவமா அனுப்புங்க. இல்லே இப்ப ஒங்க கண்ணெதிரே திருட்டுத்தனமா இல்லே பகிரங்கமா நான் போறேன். தனியா இல்லே, கொழந்தைகளோடே”
சிவா அந்த நிமிஷம் வரை அவள் சொன்ன திருமணம் என்ற வார்த்தைக்கு தயாராயில்லாமல் இருந்து அவள் வாயில் அது வந்ததும் அதை ஏற்கச் சித்தமானான்.

ஒரு தீர்மானத்துக்கு வருகிற வரை இருந்த மயக்கம் அப்படி வந்ததுமே பொழுது விடிந்த மாதிரி ஒரு தெளிவை அவனுக்கு வழங்கிற்று.

“ஆமா சார், இப்ப நாங்க பொண்ணு கேட்க வந்திருக்கோம்னு வச்சுக்கங்க. ஒங்களை மிரட்ட வரலே.”
புண்ணியகோடி எல்லா அம்புகளும் பயனற்று விட்டது போல் குறுகிப் போய் நாற்காலியில் உட்கார்ந்தார். தலை மீது கை வைத்துக் கொண்டார்.

ஒரு நிமிஷம் அங்கே யாரும் பேசவில்லை.
எல்லா விதத்திலும் போராடித் தோற்று விழுந்தவனைச் சுற்றி நிலவும் ஒரு மௌனம் அங்கே சூழ்ந்தது.
சிவா பிரீதாவைப் பார்த்தான்.

புண்ணியகோடியின் தோல்விக்கு தாங்கள் ஒரு காரணமான பச்சாதாபம் இருவர் பார்வையிலும் பகிர்ந்து கொள்ளப்பட்டது.
“எம் பென்சிலை ஏந்தி எதுக்குதே… குது… குதுதீ” என்று குழந்தை ஆனந்து ஓ வென்று கூப்பாடு போடுவது கேட்டது.

“ஏய் சீதா! பென்சிலைக் குடுத்துடு. அழவைக்காதே அவனை” என்று பிரேம் அதட்டினான்.

எதையோ படாரென்று வீசியெறியும் ஓசையும் கலகலவென்று பென்சில்கள் உருண்டோடும் ஒலியும் ஒன்றையொன்று தொடர்ந்தன.

பளாரென்று ஓர் அறை வைக்கும் சப்தம்.

ஏக காலத்தில் இரண்டு அழுகுரல்கள். தனது நிலை என்னவென்று உணர்ந்தது போல அந்தச் சிறு சச்சரவை ஏதும் செய்ய மாட்டாமல் வெறித்துப் பார்த்தார் புண்ணியகோடி.

“ஏய் சீதா, ஆனந்து, அழறதை நிறுத்துங்க” என்று அறைப் பக்கம் திரும்பி ஓர் உத்தரவு போட்டாள் திஷ்யா.
ஸ்விட்சை அணைத்த மாதிரி இரண்டு குரல்களும் அடங்கின.

பிரீதாவுக்கு ஒரு புன்னகை வந்தது.

“ஆல்ரைட் சிவா, எம் பொண்ணை ஒனக்குக் கொடுக்கறேன். கல்யாணத்தை எதாவது கோயில்லே தான் நடத்த எனக்கு சௌகரியப்படும். முகூர்த்தத் தேதியை பார்த்து வந்து நாளைக்கு சொல்றேன்” புண்ணியகோடி ஈனசுரத்தில் பேசினார்.
பிரீதாவின் முகத்தில் வீசிய ஒளி திஷ்யாவை விட அதிகமாய் இருந்தது.

“சீக்கிரமா நடக்கணும்” என்றான் சிவா.

“ரெண்டு மூணு நாள்ளே” – என்று ஈனசுரத்தில் பதிலளித்தார் புண்ணியகோடி.

பிரீதாவின் குவார்ட்டர்ஸ் வரை உடன் சென்றான் சிவா. ஒன்றும் பேசாமல் வழியெல்லாம் யோசனையில் சென்றான்.
“என்ன சிவா. ‘க்ளூமி’ ஆய்ட்டே?”
“நான் மதனபள்ளி போகணும்.”

“எதுக்கு, தாமுவோட பர்மிஷன் வாங்கவா?”
“இதுக்கு பேர் பர்மிஷனா?”
“வாட் எல்ஸ்?”

“அவர் என்னை மனுஷனாக்கினார், அவருக்கு இது தெரியணும். த ஹோல் ஸிச்சுவேஷன்.”
“அப்போ நானும் ஒன் கூட வர்றேன். நான்தான் அதை அவருக்குப் புரியறா மாதிரி விளக்க முடியும்.”

“தாங்யூ. ஆனா அவர் கிட்டே ஒரு ரெகமெண்டேஷனோட நான் போற மாதிரி எனக்கே தோணிடும். இட்ஸ் குட் ஆர் பேட். நானே அதைத் தனியா சந்திக்கப் பிரியப்படறேன்.”
பிரீதாவுக்கு அவன் மீதிருந்த மதிப்பு உயர்ந்தது.

“போய் வா! ஆனா அதுக்கு முன்னாடி புண்ணிய கோடிகிட்டே முகூர்த்த தேதியைக் கன்பார்ம் பண்ணிக்க.”
“எஸ், யூ ஆர் கரெக்ட்” என்றான் சிவா.

இரவு ஒன்பது மணிவரை பிரீதாவுடன் பேசிக் கொண்டிருந்து விட்டு ராயப்பேட்டைக்கு பஸ் ஏறினான் சிவா.
வீட்டு வாசலில் விளக்கெரிந்து கொண்டிருந்தது. கும்பலாக பெண்கள் உட்கார்ந்திருந்தனர். ஏதோ துர்ச்சம்பவம்.
கீழ்ப் போஷன்காரர் வாசலில் மார்புத் துண்டோடு நின்றார்.

“என்ன சார்” என்றான்.

“நீ எல்லாம் மனுஷனாய்யா? ஒன்னாலே அந்த கம்பவுண்டர் வெசம் குடிச்சு டேஞ்சரா ராயப்பேட்டை ஹாஸ்பிடல்லே அட்மிட் ஆயிட்டான்” என்று அவர் வெடித்தார்.

தொடரும்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.