பழமொழி கூறும் பாடம்
– தேமொழி.
பழமொழி: சேணோக்கி நந்துநீர் கொண்டதேபோன்று
தந்தம் பொருளும் தமர்கண் வளமையும்
முந்துற நாடிப் புறந்தர லோம்புக
அந்தண் அருவி மலைநாட! சேணோக்கி
நந்துநீர் கொண்டதே போன்று.
(முன்றுறையரையனார், பழமொழி நானூறு)
பதம் பிரித்து:
தம் தம் பொருளும், தமர்கண் வளமையும்,
முந்துற நாடிப் புறந்தரல் ஓம்புக
அம் தண் அருவி மலை நாட! சேண் நோக்கி,
நந்து, நீர் கொண்டதே போன்று!
பொருள் விளக்கம்:
தத்தமது பொருளின் அளவினையும், தன்னைச் சார்ந்திருப்போரது செல்வத்தின் நிலையையும் முற்றிலும் நன்கு ஆராய்ந்து, பின்னாளில் உதவும் பொருட்டு தகுந்த அளவு பொருளைச் சேமித்து வாழ வேண்டும். அழகிய குளிர்நீர் அருவிகள் பாயும் மலைநாட்டில் வாழ்பவரே, எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு நத்தை நீரைச் சேமித்துக் கொள்வது போல வாழ வேண்டும்.
பழமொழி சொல்லும் பாடம்: நத்தை நீரை சேமித்துக் கொண்டுவாழ்வதுபோல, எதிர்காலத்தில் துன்பமின்றி வாழ்வதற்காகத் திட்டமிட்டுப் பொருள் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு, எதிர்காலத்திற்காகத் திட்டமிடலை வலியுறுத்த வள்ளுவரும்,
எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய். (குறள்: 429)
வரப்போவதை முன்னே அறிந்து தன்னைக் காத்துக் கொள்ளும் திறன் கொண்ட அறிவுடையவர்க்கு, அதிர்ச்சி தரக்கூடிய துன்பம் ஏற்படாது, என்றும் அவ்வாறு திட்டமிடுதலை அறிவுடைமை என்பதனைக் குறிக்க,
ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்
ஆறென்பர் ஆய்ந்தவர் கோள். (குறள்: 662)
இடையூறு வருவதற்கு முன்பே நீக்குதல், வந்த பின் தளராமை ஆகிய இந்த இரண்டு வழிகளுமே அறிவுடையோர் கொள்கையாம், என்றும் குறிப்பிடுகிறார்.