Tag: செண்பக ஜெகதீசன்

  • குறளின் கதிர்களாய்…(217)

     

     

     

    ஏதம் பெருஞ்செல்வந் தான்துவ்வான் தக்கார்க்கொன்   

    றீத லியல்பிலா தான்.                                                

           -திருக்குறள் -1006(நன்றியில் செல்வம்)

     

    புதுக் கவிதையில்…

     

    சேர்த்த செல்வத்தைத்

    தனக்காகச்

    செலவு செய்யாமலும்,

    தகுந்தவர்களுக்குக் கொடுத்து

    உதவாமலும் இருப்பவன்,

    அச்செல்வத்திற்கே

    ஆவான் ஒரு நோயாய்…!

     

    குறும்பாவில்…

     

    தானும் அனுபவிக்காமல்

    தகுந்தவர்க்குக் கொடுத்து உதவாதவன்,       

    அச்செல்வத்துக்கொரு நோயாவான்…!

     

    மரபுக் கவிதையில்…

     

    செல்வம் சேர்த்துத் தனக்குமதைச்

         செலவென ஏதும் செய்யாமல்

    இல்லை யெனவரும் தக்கவர்க்கே

         ஈகை ஏதும் செய்யாதவன்,

    தொல்லை தந்தே வாட்டிவிடும்

         தீராக் கொடிய நோயாவான்,

    அல்லும் பகலும் பாடுபட்டே

         அலைந்தவன் சேர்த்த செல்வத்திற்கே…!

     

    லிமரைக்கூ..

     

    சம்பாதித்தான் அலைந்து பேயாய்,   

    செல்வமதை நுகராதே தக்கோர்க்கும் ஈயாதவன்           

    ஆவான் அச்செல்வத்திற்கே நோயாய்…!

     

    கிராமிய பாணியில்…

     

    சேக்கணும் சேக்கணும்

    செல்வம் சேக்கணும்,

    சேத்த செல்வத்த

    செலவுபண்ணணும்

    நல்ல மொறயில..

     

    சேத்த செல்வத்தத்

    தனக்கும்

    செலவு பண்ணாம,

    தேவப்பட்டவங்களுக்கும்

    குடுத்து ஒதவாதவன்

    அந்த

    செல்வத்துக்கே ஒரு நோயாவான்..

     

    அதால

    சேக்கணும் சேக்கணும்

    செல்வம் சேக்கணும்,

    சேத்த செல்வத்த

    செலவுபண்ணணும்

    நல்ல மொறயில…!

     

    -செண்பக ஜெகதீசன்…

     

     

     

     

     

     

    Share
  • குறளின் கதிர்களாய்…(216)

    -செண்பக ஜெகதீசன்

    நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்  
    சொற்பொருள் சோர்வு படும்.   (திருக்குறள் -1046: நல்குரவு)

     புதுக் கவிதையில்… 

    நல்ல பொருளை
    நன்கு அறிந்துணர்ந்து
    சொன்னாலும்,
    வறியவரின் வாய்ச்சொல்
    கருதப்படும்
    பொருளற்றதாகவே…! 

    குறும்பாவில்…

    உயர்ந்த நூற்களின் கருத்துக்களை
    ஆய்ந்தறிந்து சொன்னாலும், பொருளற்றதாகிவிடும்
    வறியோர்தம் வாய்ச்சொல்…! 

    மரபுக் கவிதையில்…

    நல்ல நூற்கள் கற்றுணர்ந்தே
         -நயமுடன் அவற்றின் பொருளதனைச்
    சொல்லும் வகையில் சொன்னாலும்
       -சேர்ப்ப தில்லை பொருளுளதாய்,
    நல்லதாய் அதையே ஏற்பதில்லை
    -நவில்வோர் தமையும் மதிப்பதில்லை,
    செல்வம் ஏதும் இல்லாத
    -சோர்ந்த வறியோர் சொன்னாலே…! 

    லிமரைக்கூ…

    நல்ல சொல்லும் தேறாது
    நற்பொருளை ஆய்ந்தறிந்து சொன்னாலும்,
    ஏழைசொல் அரங்கம் ஏறாது…! 

    கிராமிய பாணியில்… 

    கொடிது கொடிது வறும கொடிது
    ஒலக வாழ்க்கயில வறும,
    கொடிது கொடிது மிகக் கொடிது…
    நல்லாப்படிச்சி எல்லாந் தெரிஞ்சி
    எதச்சொன்னாலும் எடுபடாது…
    பொல்லாத வறுமயில
    இல்லாதவன் எடுத்துச்சொன்னாலும்
    எதச் சொன்னாலும் எடுபடாது,
    ஏறாது சபயினிலே… 

    தெரிஞ்சிக்கோ,
    கொடிது கொடிது வறும கொடிது
    ஒலக வாழ்க்கயில வறும,
    கொடிது கொடிது மிகக் கொடிது…!

     

     

    Share
  • குறளின் கதிர்களாய்…(215)

    -செண்பக ஜெகதீசன்

     பலகுடை நீழலுந் தங்குடைக்கீழ்க் காண்ப 
    ரலகுடை நீழ லவர்.       (திருக்குறள் -1034: உழவு) 

    புதுக் கவிதையில்… 

    உழவின் பயனாய்
    நெல்லினைப் பெற்றிருக்கும்
    வள்ளன்மை மிக்கோர்,
    பல மன்னர்தம்
    குடைக் கீழுள்ள
    நிலங்களையெல்லாம்
    தம்வேந்தரின் குடைக்கீழ்
    வரக் காண்பர்…! 

    குறும்பாவில்… 

    உழவினால் நெல்விளைவித்த நல்லோரால்
    பிறநாட்டு மன்னர்தம் நிலமெலாம் வந்திடும்
    தன் நாட்டு மன்னர் குடைக்கீழ்…! 

    மரபுக் கவிதையில்… 

    வயலில் உழைத்துநெல் விளைவித்த
         -வள்ளல் தன்மை கொண்டோரெலாம்
    சுயமாய்க் காண்பர் நாட்டினிலே
         -சொத்தாய்ச் சேர்ந்த நிலமெல்லாம்
    அயலுள நாட்டு மன்னர்கள்
         -ஆட்சி விட்டு மாறிவந்தே
    பயனுள வகையில் தம்மன்னர்
         -பாது காப்பில் சேர்ந்திடுமே…! 

    லிமரைக்கூ… 

    நெல்நிறைக்கும் உழவர்தம் உழைப்பு,
    நந்நெஞ்சால் காண்பர் மாற்றரசர் நிலமெலாம்
    தம்மரசர் நிலமாகிட அழைப்பு…! 

    கிராமிய பாணியில்… 

    பாரு பாரு நல்லாப் பாரு
    ஒலகத்தில ஒசந்த தொழிலு
    ஒழவுத் தொழிலு பாரு…
    ஒழவுத்தொழிலச் செய்து
    நெல்லு நெறய வச்சிருக்கும்
    நல்லவனுக்குத் தெரியும்,
    அடுத்த நாட்டு ராசாக்களோட
    நெலமெல்லாம்
    அப்புடியே வந்திடுமே
    அவன் நாட்டு ராசாகிட்ட… 

    அதால
    பாரு பாரு நல்லாப் பாரு
    ஒலகத்தில ஒசந்த தொழிலு
    ஒழவுத் தொழிலு பாரு…!

     

    Share
  • குறளின் கதிர்களாய்…(214)

     -செண்பக ஜெகதீசன்

    பொறுத்த லிறப்பினை யென்று மதனை
    மறத்த லதனினும் நன்று. (திருக்குறள் -152: பொறையுடைமை) 

    புதுக் கவிதையில்…

    பிறர் தீங்கு செய்கையில்,
    அவரை
    ஒறுக்கும் திறனிருந்தும்
    பொறுத்துப் போதல் நன்று… 

    அத் தீமையை
    அடியோடு மறந்திடுதல்
    அதனினும் நன்று…! 

    குறும்பாவில்…

    பிறர் செய்த தீமைகளைப்
    பொறுத்துக்கொள்ளுதல் நல்லது,
    மறந்துவிடுதல் மிகநல்லது…! 

    மரபுக் கவிதையில்…

    நமக்குத் தீங்கு செய்தவரை
         -நம்மால் ஒறுக்க முடிந்தாலும்,
    அமைதி காத்துப் பொறுமையாக
         -அடங்கி யிருத்தல் நன்றாகும்,
    சுமக்கும் சுமையாய் நெஞ்சினிலே
         -செய்த தீமையைக் கொள்ளாமல்,
    நமக்கு வேண்டாம் சுமையெனவே
          -நாமே மறப்பது மிகநன்றே…! 

    லிமரைக்கூ…

    பொறுத்திடு பிறர்செய்தாலும் தீங்கு,
    மறத்தலதை மிகநல்லதென மறந்துவிட்டு
    நல்ல பெயர்தனை வாங்கு…! 

    கிராமிய பாணியில்…

    பொறுமவேணும் பொறுமவேணும்
    வாழ்க்கயில பொறுமவேணும்…
    தீங்கு நமக்குச் செஞ்சவனத்
    தண்டிக்கத் தெறம நமக்கிருந்தாலும்,
    அதப்
    பொறுத்துப்போறது நல்லகொணம்… 

    அதயே மனசுல வச்சிக்காம
    அப்புடியே மறந்துபோறது
    மிகவும் நல்ல கொணம்… 

    அதால,
    பொறுமவேணும் பொறுமவேணும்
    வாழ்க்கயில பொறுமவேணும்…!

     

     

    Share
  • குறளின் கதிர்களாய்…(213)

    -செண்பக ஜெகதீசன்

    நயன்சாரா நன்மையி னீக்கும் பயன்சாராப்
    பண்பில்சொற் பல்லா ரகத்து. (திருக்குறள் -194 பயனில சொல்லாமை)

    புதுக் கவிதையில்… 

    பயனேதும் சாராத
    பண்பிலாச் சொல்லைப்
    பலரிடத்தும் பேசுதல்,
    ஒருவனை
    நீதி நேர்மையுடன் சாராமல்
    நன்மை பெறவிடாமல்
    நீக்கிவிடும்…!

    குறும்பாவில்… 

    பயனற்ற பண்பிலாச் சொல்லை
    பலரிடமும் பேசுதல், அவனை நீதிநேர்மையுடன்
    சாராது நன்மைபெறாமல் தடுத்துவிடும்…!

    மரபுக் கவிதையில் 

    பயனது ஏதும் தாராத
    -பண்பே யில்லாச் சொல்லதனை,
    அயலார் அறியப் பேசிடுதல்,
    -அறியா ததனைப் பேசியோனை,
    உயர்ந்த நீதி நேர்மையெலாம்
    -உடைமையாய் வந்து சேராமல்
    பயன்படும் நன்மை பெற்றிடாமல்
    -பாழாய்ப் போக விட்டிடுமே…!

    லிமரைக்கூ… 

    பேசாதே பயன்சாராப் பண்பிலாச் சொல்லை,
    பிறரறியயிதனைப்  பேசுவோர் தமக்கு என்றும்
    நீதி நேர்மையொடு நன்மையேது மில்லை…!

    கிராமிய பாணியில்… 

    பேசாத பேசாத
    பயன்தராத சொல்ல
    எப்பவுமே பேசாத…

    பண்பேயில்லாம
    பயன்தராத சொல்ல
    பெறரறியப் பேசாத,
    அப்புடிப் பேசுறவனுக்கு
    நீதி நேர்மயோட
    நன்ம எதுவும் கெடைக்காதே…

    அதால,
    பேசாத பேசாத
    பயன்தராத சொல்ல
    எப்பவுமே பேசாத…!

     

     

    Share
  • குறளின் கதிர்களாய்…(212)

    செண்பக ஜெகதீசன்

     

    எனைப்பகை யுற்றாரு முய்வர் வினைப்பகை                                                                    

    வீயாது பின்சென் றடும்.

           -திருக்குறள் -207(தீவினையச்சம்)

     

    புதுக் கவிதையில்…

     பகைபல பெற்றவர்க்கும்

    வழியுண்டு

    தப்பிப் பிழைக்க..

     விடவே விடாது

    தீவினைப் பகை மட்டும்,

    தொடர்ந்து அவனைப்

    பின்சென்று வருத்தும்…!

     

    குறும்பாவில்…

    எப்பகையுற்றாரும் தப்பிப் பிழைக்கலாம்,   

    தப்பமுடியாது தீவினைப் பகையுற்றோர்-    

    தொடர்ந்தவரைப் பின்சென்று ஒறுக்கும்…!

     

    மரபுக் கவிதையில்…

    மண்ணில் மாந்தர் வாழ்வினிலே

         மலைபோல் பகைவரும் வகைவகையாய்,

    எண்ணிலாப் பகைகள் இவற்றிலெல்லாம்

         எப்படி யேனும் தப்பிடலாம்,

    திண்ணமாய்த் தீவினைப் பகைமட்டும்

         தப்பி யோட விட்டிடாது,

    கண்ணில் காணா இடம்செலினும்

         கூடச் சென்றே ஒறுத்திடுமே…!

     

    லிமரைக்கூ..

    பெற்றோரும் தப்பித்திடலாம் பகையில்பல வகை,  

    சற்றும் தப்பிக்கவிடாது எங்கே சென்றாலும்       

    தொடர்ந்து சென்றொறுக்கும் தீவினைப் பகை…!

     

    கிராமிய பாணியில்…

    பயமிருக்கணும் பயமிருக்கணும்

    தீவினைக்குப் பயமிருக்கணும்..

    தப்பிச்சிரலாம் தப்பிச்சிரலாம்

    எந்தப்பக வந்தாலும் தப்பிச்சிரலாம்,

    எப்புடியாவது தப்பிச்சிலாம்..

     

    ஆனா,

    தப்பியெங்க போனாலும்

    தப்பவுடாம தொடந்துபோயி

    தண்டிச்சிப்புடும்

    தீவினப்பக மட்டும்..

     

    அதால,

    பயமிருக்கணும் பயமிருக்கணும்

    தீவினைக்குப் பயமிருக்கணும்…!

    Share
  • குறளின் கதிர்களாய்…(211)

    செண்பக ஜெகதீசன்

     

    நல்லா றெனினுங் கொளல்தீது மேலுலக                                                                      

    மில்லெனிலு மீதலே நன்று.

           -திருக்குறள் -222(ஈகை)

     

    புதுக் கவிதையில்…

     

    பிறர் கொடுக்க

    அதைப்

    பெற்றுக்கொள்வது என்பது,

    பல்லோர் சொன்ன

    நல்வழியெனிலும் தீதே..

     

    மேலுலகமென ஒன்றிருப்பினும்,

    அது

    கிடைக்காமல் போய்விடுமெனிலும்,

    வறியவர்க்கு

    ஈதலே நல்லதாகும்…!

     

    குறும்பாவில்…

     

    நல்வழியென சொல்லப்பட்டாலும் பிறரிடம்  

    பெறுதல் தீது, மேலுலகம் கிடைக்காமல்போனாலும்   

    வறியவர்க்கு ஈதலே நன்று…!

     

    மரபுக் கவிதையில்

     

    மெச்சத் தகுந்த மேலுலகதன்

          மிக்க நல்ல வழியெனிலும்,

    பிச்சை யெனவே பிறரிடத்தில்

         பெற்றுக் கொள்வது தீதாகும்,

    நிச்சய மில்லா மேலுலகம்

         நிச்சயம் கிடைக்கா நிலைவரினும்,

    இச்சை யோடுள வறியவர்க்கே

         ஈதலே யென்றும் நன்றாமே…!

     

    லிமரைக்கூ..

     

    நல்வழியென நம்பிடினும் இன்று, 

    பெறுதல் தீது, மேலுலகம் கிடைக்காதெனிலும்      

    வறியவர்க்கென ஈதலே நன்று…!

     

    கிராமிய பாணியில்…

     

    தருமஞ்செய்யி தருமஞ்செய்யி

    வறியவரு வாழத்தான்

    உருப்படியாத் தருமஞ்செய்யி..

     

    சொர்க்கத்துக்கு வழியிதுண்ணு

    சொன்னாலும் அடுத்தவங்கிட்ட

    வாங்கிறது நல்லதில்ல..

     

    சொர்க்கமுண்ணு இருக்கோயில்லியோ,

    அந்த

    சொர்க்கமே கெடைக்கல்லண்ணாலும்

    ஏழயளுக்குத் தருமஞ்செய்யிறது

    எப்பவுமே நல்லதுதான்..

     

    அதால,

    தருமஞ்செய்யி தருமஞ்செய்யி

    வறியவரு வாழத்தான்

    உருப்படியாத் தருமஞ்செய்யி…!

    Share
  • குறளின் கதிர்களாய்…(210)

     

     

     

    மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு                                                                      

    தானஞ் செய்வாரின் தலை.

           -திருக்குறள் -295(வாய்மை)

     

    புதுக் கவிதையில்…

     

    மனத்தோடு பொருந்த

    மெய் பேசும் ஒருவன்,

    தானம்

    தவம் செய்வோரைவிட

    உயர்ந்தவனாகிறான்…!

     

    குறும்பாவில்…

     

    தானமும் தவமும் செய்வோரைவிட 

    தன் மனமிசைய உண்மையே பேசுபவன்,  

    உயர்நிலை பெறுகிறான்…!

     

    மரபுக் கவிதையில்

     

    மண்ணில் மனித வாழ்வினிலே

         மனமது பொருந்த உண்மையதைக்

    கண்ணிய மாகப் பேசுவதைக்

         கடமை யாகக் கொண்டவன்தான்,

    புண்ணியச் செயல்களில் உயர்ந்தவராம்

         பிறர்க்குத் தானம் கொடுப்போனையும்

    உண்மைத் தவமது செய்வோனையும்

        விடவும் சிறப்பில் உயர்ந்தவனே…!

     

    லிமரைக்கூ..

     

    மனம்பொருந்த மெய்பேசுதல் அரிது, 

    தானம் தவம்செய்வோன் சிறப்பைவிட இதுபோல்     

    மெய்பேசுவோன் சிறப்பே பெரிது…!

     

    கிராமிய பாணியில்…

     

    பேசு பேசு உண்மபேசு,

    எப்பவும் உண்மயே பேசு..

     

    தானதர்மம் செய்யிறவனயும்

    தவஞ்செய்யிறவனயும் விட,

    தன்மனம் பொருந்த

    எப்பவுமே

    உண்ம பேசறவந்தான்

    ஒசந்தவன்

    உண்மயிலே ஒசந்தவன்..

     

    அதால

    பேசு பேசு உண்மபேசு,

    எப்பவும் உண்மயே பேசு…!

     

    -செண்பக ஜெகதீசன்…

    Share
  • குறளின் கதிர்களாய்…(209)

    -செண்பக ஜெகதீசன்

    செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பா னல்லிடத்துக்
    காக்கிலென் காவாக்கா லென். (திருக்குறள் -301:வெகுளாமை)

     புதுக் கவிதையில்… 

    சினத்தை அடக்குதலென்பது,
    அது
    பலிக்குமிடத்தில்
    பயன்பாடுத்தாதிருப்பதே…

    செல்லாத இடத்தில்
    சினத்தை அடக்கினாலும்,
    அடக்காமல் விட்டாலும்
    எவ்விதப் பலனுமில்லை…! 

    குறும்பாவில்… 

    பண்பிலே சிறந்தது அது-
    பலிக்குமிடத்தில் கோபத்தை அடக்குதல்,
    பலிக்காயிடத்தில் அடக்குதலும் அடக்காததும் ஒன்றே…! 

    மரபுக் கவிதையில் 

    குணமதில் சிறந்தது சினமடக்கல்,
    -கோப மதுவும் பலிக்குமிடம்
    உணர்ந்தே அடங்கிப் போனாலது
    -உண்மையி லுயர்ந்த சினமடக்கல்,
    கணமு மிதனைக் கருத்தில்கொள்
    -கோப மிதுவே பலிக்காத
    பிணக்கு மிக்க யிடத்தினிலே
    -பொறுமை கொள்வதில் பலனிலையே…! 

    லிமரைக்கூ… 

    பலிக்குமிடத்தில் அடக்குதலே அடக்குதல் சினத்தை,
    பலிக்காயிடத்தில் அடக்குதலும் அடக்காததும் ஒன்றுதான்,
    பலனிலாதுபோய்க் கவராது மற்றவர் மனத்தை…! 

    கிராமிய பாணியில்… 

    அடக்கு அடக்கு கோவத்த அடக்கு
    அடுத்தவன்மேலக் கோவத்த அடக்கு…
    கோவம் பலிக்கிற எடத்தில
    கோவத்த அடக்குறதுதான்
    உண்மயிலயே
    கோவத்த அடக்குறது…

    அதுயில்லாம
    ஓங்கோவம் செல்லாத எடத்தில
    நீ கோவத்த
    அடக்குனாயென்ன அடக்காட்டியென்ன,
    ஒரு பயனுமில்ல…

    அதால,
    அடக்கு அடக்கு கோவத்த அடக்கு
    எப்பவும்
    அடுத்தவன்மேலக் கோவத்த அடக்கு…!

     

     

     

    Share
  • குறளின் கதிர்களாய்…(208)

    -செண்பக ஜெகதீசன்  

    நிலையஞ்சி நீத்தாரு ளெல்லாங் கொலையஞ்சிக்
    கொல்லாமை சூழ்வான் தலை. (திருக்குறள் -325: கொல்லாமை)

     புதுக் கவிதையில்… 

    மானிடப் பிறப்பின் தன்மை
    அறிந்தஞ்சி,
    பிறவாமை வேண்டித்
    துறந்தார்களுக்குள்,
    கொலைச்செயல் அஞ்சிக்
    கொல்லாமை அறம் சார்ந்தோர்
    உயர்ந்தவரே…! 

    குறும்பாவில்… 

    புவிவாழ்வின் நிலையஞ்சித் துறந்தாருள்,
    கொலைச் செயல்களுக்கஞ்சிக் கொல்லாமை
    அறம் சார்ந்தோர் உயர்ந்தோரே…! 

    மரபுக் கவிதையில்… 

    மண்ணில் மானிடப் பிறப்பதுவாய்
    -மீண்டும் பிறக்க வேண்டாமென
    எண்ணித் துறவை மேற்கொண்ட
    -ஏற்ற மிக்கப் பெரியோர்க்குள்,
    எண்ணம் போல உயிர்களைத்தான்
    -எமனுல கனுப்பிடும் கொலைத்தொழிலைப்
    பண்ண விரும்பா அறம்சார்ந்த
    -பண்பு கொண்டோர் உயர்வாமே…! 

    லிமரைக்கூ… 

    துறவுகொண்டார் பிறப்பினுக்கே அஞ்சி,
    கொல்லாமை அறம்சார்ந்தோர் மேலானவராவர்
    துறவியர் அவரையும் மிஞ்சி…! 

    கிராமிய பாணியில்… 

    அஞ்சிடு அஞ்சிடு
    கொலபாதகத்து அஞ்சிடு,
    ஒலக வாழ்க்கயில
    கொலபாதகத்து அஞ்சிடு…

    ஒலக நடப்பப் பாத்துபயந்து
    மறுபொறப்பு வேண்டாமுண்ணு
    சாமியாரா ஆனவங்களில,
    மத்த உயிரக் கொல்லாத
    நல்ல கொணத்தக் கொண்டவங்க
    எல்லாத்திலயும் மேலுங்க…

    அதால,
    அஞ்சிடு அஞ்சிடு
    கொலபாதகத்து அஞ்சிடு,
    ஒலக வாழ்க்கயில
    கொலபாதகத்து அஞ்சிடு…!

     

     

    Share
  • குறளின் கதிர்களாய்…(207)

    -செண்பக ஜெகதீசன் 

    கற்றில னாயினுங் கேட்க வஃதொருவற்
    கொற்கத்தி னூற்றாந் துணை. (திருக்குறள் –414: கேள்வி) 

    புதுக் கவிதையில்… 

    கற்கவில்லை கல்வியெனிலும்,
    கற்றறிந்தோரிடம்
    கேட்டுத் தெரிந்துகொள்!

    அது,
    தளர்ச்சியுறும்போது
    தாங்கிப் பிடிக்கும்
    ஊன்றுகோல் போல்
    உதவும் துணையாகும்…! 

    குறும்பாவில்… 

    கேட்டறிந்துகொள் கற்றோரிடம், நீ கற்காதபோதும்,
    கேள்வியது ஊன்றுகோலாய் உனைத்தாங்கும்-
    தளர்வுறும்போது துணையாகி…! 

    மரபுக் கவிதையில் 

    தளர்வுறும் போதில் ஊன்றுகோலாய்த்
    -தாங்கிப் பிடிக்கும் துணையாகும்
    வளர்த்திடும் கேள்வி யறிவதுவே
    -வாழ்வில் என்றும் மறவாதே,
    உளத்தினில் இதனைக் கொண்டிடுவாய்
    -உயர்ந்த கல்வி பெறாவிடிலும்,
    வளமாம் கல்வி கற்றோரிடம்
    -வாங்கிடு கேட்டே அறிவதையே…! 

    லிமரைக்கூ… 

    கற்கவில்லை யெனிலும் கேட்டிடு,
    தளர்வுறும்போது ஊன்றுகோலாய் உறுதுணையாவதால்
    கேள்வியறிவை நீநிலை நாட்டிடு…! 

    கிராமிய பாணியில்… 

    வளத்துக்கோ வளத்துக்கோ
    நல்ல அறிவ வளத்துக்கோ,
    கேள்வி அறிவ வளத்துக்கோ…

    படிப்பறிவு இல்லண்ணாலும்
    படிச்சவங்கிட்ட கேட்டுத்தானே
    நல்ல அறிவ வளத்துக்கோ,
    கேள்வி அறிவ வளத்துக்கோ…

    அதுதான் ஒனக்குத் தொணயாவும்
    ஆபத்துக்கு ஒதவியாவும்,
    தளர்வாநீ இருக்கும்போது
    தாங்கிப்புடிக்கும் தடிக்கம்பா
    தொணயா ஒனக்கு வருமிதுவே…

    அதால,
    வளத்துக்கோ வளத்துக்கோ
    நல்ல அறிவ வளத்துக்கோ,
    கேள்வி அறிவ வளத்துக்கோ…!

     

     

    Share
  • குறளின் கதிர்களாய்…(206)

     

     

     

    சென்ற விடத்தாற் செலவிடா தீதொரீஇ                                                                  

    நன்றின்பா லுய்ப்ப தறிவு.

           -திருக்குறள் -422(அறிவுடைமை)

     

    புதுக் கவிதையில்…

     

    செல்லும் தீய பாதையில்

    மனதைச்

    செல்லவிடாமல் தடுத்து,

    நல்ல பாதையில்

    செலுத்துதல்தான் அறிவு…!

     

    குறும்பாவில்…

     

    தீய பாதையில் செல்லும் மனத்தைத் 

    தடுத்து தீமையகற்றி தூயபாதை 

    செலுத்துதலே அறிவு…!

     

    மரபுக் கவிதையில்

     

    கட்டுப் பாடுகள் ஏதுமின்றிக்

         கடந்தே செல்லும் மனத்தினையே,

    கட்டுப் படுத்தித் தடைசெய்து

         கெட்ட வழியில் செல்லாமல்,

    திட்ட மிட்டே நல்வழியில்

         தீயன அகற்றிச் செலவிடுதல்

    மட்டும் தானிவ் வுலகதிலே

         மகிமை மிக்க அறிவாமே…!

     

    லிமரைக்கூ..

     

    செலவிடாதே மனததன்வழி யதுவே, 

    செலுத்ததை தீமையகற்றி நல்லவழியிலே,  

    செம்மை அறிவென்பதுதான் இதுவே…!

     

    கிராமிய பாணியில்…

     

    அறிவுயில்ல அறிவுயில்ல- இது

    அறிவுயில்ல அறிவேயில்ல,

    அதுபோக்கில மனசப் போகவிட்டா

    அதுக்கபேரு அறிவில்ல..

     

    அடங்காமப்போற மனச அடக்கி

    அது கெட்டவழியில போகாம

    நல்லவழியில அனுப்புனா,

    அதுக்கப்பேருதான் அறிவு..

     

    அதால

    அறிவுயில்ல அறிவுயில்ல- இது

    அறிவுயில்ல அறிவேயில்ல,

    அதுபோக்கில மனசப் போகவிட்டா

    அதுக்கபேரு அறிவில்ல…!

     

    -செண்பக ஜெகதீசன்…

    Share
  • குறளின் கதிர்களாய்…(205)

    -செண்பக ஜெகதீசன் 

    முதலிலார்க் கூதிய மில்லை மதலையாஞ்
    சார்பிலார்க் கில்லை நிலை. (திருக்குறள் -449:பெரியாரைத் துணைக்கோடல்) 

    புதுக் கவிதையில்… 

    முதல் போடாதவர்க்கு
    அதனால் வரும்
    ஊதியமில்லை…
    தூணாய்த் தாங்கிடும்
    பெரியோர் துணையில்லாதவர்க்கு
    உறுதிப்பாடில்லை…! 

    குறும்பாவில்… 

    ஊதியம் எதுவும் கிடைப்பதில்லை
    உற்ற முதல் இல்லாதவர்க்கு,
    தாங்கும் துணையிலார்க்கு நிலையில்லை…! 

    மரபுக் கவிதையில்… 

    வருவாய் எதுவும் வருவதில்லை
    -வலுவாய் முதலது இலாதார்க்கே,
    அரியணை யமர்ந்திடும் மன்னவர்க்கே
    -அருகே தாங்கிடும் தூணெனவே
    பெரியோர் துணையது தந்தருளும்
    -பேணிடும் அறிவுரை யில்லையெனில்,
    உருவில் பெரிய நாட்டரசும்
    -உறுதி யின்றி வீழ்ந்திடுமே…! 

    லிமரைக்கூ… 

    ஊதியம்பெற, வேண்டும் முதலே,
    தாங்கிடும் தக்கதுணை இல்லார்க்கு
    நிலையில்லை அரசாட்சி யதிலே…! 

    கிராமிய பாணியில்… 

    தொணவேணும் தொணவேணும்
    பெரியவுங்க தொணவேணும்…

    வராது ஊதியமெல்லாம்
    மொதலு இல்லாதவனுக்கே…

    அதுபோல
    தூணுபோலத் தாங்கிப்புடிக்கும்
    பெரியவங்க தொணயில்லாத ராசாவும்
    உறுதியா நெலைக்கமாட்டானே…

    அதால
    தொணவேணும் தொணவேணும்
    பெரியவுங்க தொணவேணும்…!

     

     

    Share
  • குறளின் கதிர்களாய்…(204)

    -செண்பக ஜெகதீசன் 

    அமைந்தாங் கொழுகா னளவறியான் றன்னை
    வியந்தான் விரைந்து கெடும். (திருக்குறள் -474: வலியறிதல்) 

    புதுக் கவிதையில்… 

    மனம் ஒன்றிப்
    பிறருடன் பழகாதவன்,
    தன் வலிமையின்
    அளவை அறியாதவன்,
    தன்னையே வியந்துபேசிப்
    பிறரைப் பகைத்த அரசன்
    கெடுவான் விரைவில்…! 

    குறும்பாவில்… 

    பிறருடன் பழகாது தன்வலிமை அறியாமல்,
    தன்பெருமை பேசிப் பகைவளர்க்கும்
    மன்னன் கெடுவான் விரைவில்…! 

    மரபுக் கவிதையில் 

    மன்னன் என்போன் தன்னையொத்த
    மன்னர் பலருடன் பழகவேண்டும்
    என்பதை மறந்தே, தன்வலிமை
    என்ன யென்பதை யறியாதே,
    தன்னைப் பற்றியே பெருமையாகத்
    தினமும் பேசிப் பகைவளர்த்தால்,
    முன்னே வந்து முகங்ககட்டும்
    முடிவைத் தந்திடும் கேடதுவே…! 

    லிமரைக்கூ… 

    பழகிடப் பிறரையென்றும் நாடு,
    தன்பலமறியாது தற்பெருமை பேசும்
    மன்னனுக்கு வரும்விரைவில் கேடு…! 

    கிராமிய பாணியில்… 

    தெரியணும் தெரியணும்
    நம்மபெலம் நமக்குத் தெரியணும்…

    நாடளும் ராசாண்ணாலும்
    நாலுபேரோட நல்லாப்பழகணும்,
    நம்ம பெலத்த நல்லாத்தெரியணும்…

    இதுயில்லாம
    தற்பெரும பேசித்திரிஞ்சா
    நாடு வெளங்காது
    கேடுதான் வருமே…

    அதால
    தெரியணும் தெரியணும்
    நம்மபெலம் நமக்குத் தெரியணும்…!

     

     

    Share
  • குறளின் கதிர்களாய்…(203)

    -செண்பக ஜெகதீசன் 

    வானோக்கி வாழு முலகெல்லாம் மன்னவன்
    கோனோக்கி வாழுங் குடி. (திருக்குறள்-542: செங்கோன்மை) 

    புதுக் கவிதையில்… 

    வையத்து உயிர்களெல்லாம்
    வான்மழையை நம்பியே
    வாழ்கின்றன…

    நாட்டின் குடிமக்களெல்லாம்
    அரசின்
    நல்லாட்சியை

    நாடியே வாழ்கின்றனர்…! 

    குறும்பாவில்… 

    அகிலத்து உயிர்களெல்லாம்
    வாழ்வது வான்மழையை எதிர்பார்த்துத்தான்,
    நாட்டுமக்கள் நல்லாட்சி நோக்கித்தான்…! 

    மரபுக் கவிதையில் 

    மண்ணில் பெய்து வளம்சேர்க்கும்
    -மழையை நம்பி வாழ்கின்ற
    எண்ணில் நில்லா உயிர்கள்போல்,
    -எல்லா வளமும் நிறைந்திருந்தும்
    எண்ணம் நல்லதாய்க் கொண்டேதான்
    -எல்லா மக்களும் நலம்பெறவே
    கண்ணிய மாக ஆட்சிசெய்யும்
    -காவலன் நாடும் குடிமக்களே…! 

    லிமரைக்கூ… 

    மழைநாடும் மன்னுயிர்கள் போலே,
    நாட்டுமக்கள் நாட்டம் கொள்வார்கள்
    நல்லாட்சிதரும் மன்னன் மேலே…! 

    கிராமிய பாணியில்… 

    வேணும் வேணும் நல்லாட்சி
    எப்பவும் வேணும்
    மக்களக்காக்கும் நல்லாட்சி…

    ஒலகத்திலவுள்ள உசிரெல்லாம்
    வானத்துமழய நம்பியேதான்
    வாழ்க்கநடத்திக் கொண்டிருக்கு…

    அதுபோல
    நாட்டுலவுள்ள மக்களெல்லாம்
    நம்பியிருக்கது
    நல்ல ஆட்சி நடத்துற
    நல்ல ராசாவத்தானே…?

    அதால
    வேணும் வேணும் நல்லாட்சி
    எப்பவும் வேணும்
    மக்களக்காக்கும் நல்லாட்சி…!

     

     

     

    Share