-செண்பக ஜெகதீசன்

செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பா னல்லிடத்துக்
காக்கிலென் காவாக்கா லென். (திருக்குறள் -301:வெகுளாமை)

 புதுக் கவிதையில்… 

சினத்தை அடக்குதலென்பது,
அது
பலிக்குமிடத்தில்
பயன்பாடுத்தாதிருப்பதே…

செல்லாத இடத்தில்
சினத்தை அடக்கினாலும்,
அடக்காமல் விட்டாலும்
எவ்விதப் பலனுமில்லை…! 

குறும்பாவில்… 

பண்பிலே சிறந்தது அது-
பலிக்குமிடத்தில் கோபத்தை அடக்குதல்,
பலிக்காயிடத்தில் அடக்குதலும் அடக்காததும் ஒன்றே…! 

மரபுக் கவிதையில் 

குணமதில் சிறந்தது சினமடக்கல்,
-கோப மதுவும் பலிக்குமிடம்
உணர்ந்தே அடங்கிப் போனாலது
-உண்மையி லுயர்ந்த சினமடக்கல்,
கணமு மிதனைக் கருத்தில்கொள்
-கோப மிதுவே பலிக்காத
பிணக்கு மிக்க யிடத்தினிலே
-பொறுமை கொள்வதில் பலனிலையே…! 

லிமரைக்கூ… 

பலிக்குமிடத்தில் அடக்குதலே அடக்குதல் சினத்தை,
பலிக்காயிடத்தில் அடக்குதலும் அடக்காததும் ஒன்றுதான்,
பலனிலாதுபோய்க் கவராது மற்றவர் மனத்தை…! 

கிராமிய பாணியில்… 

அடக்கு அடக்கு கோவத்த அடக்கு
அடுத்தவன்மேலக் கோவத்த அடக்கு…
கோவம் பலிக்கிற எடத்தில
கோவத்த அடக்குறதுதான்
உண்மயிலயே
கோவத்த அடக்குறது…

அதுயில்லாம
ஓங்கோவம் செல்லாத எடத்தில
நீ கோவத்த
அடக்குனாயென்ன அடக்காட்டியென்ன,
ஒரு பயனுமில்ல…

அதால,
அடக்கு அடக்கு கோவத்த அடக்கு
எப்பவும்
அடுத்தவன்மேலக் கோவத்த அடக்கு…!

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *