குறளின் கதிர்களாய்…(212)
செண்பக ஜெகதீசன்
எனைப்பகை யுற்றாரு முய்வர் வினைப்பகை
வீயாது பின்சென் றடும்.
-திருக்குறள் -207(தீவினையச்சம்)
புதுக் கவிதையில்…
பகைபல பெற்றவர்க்கும்
வழியுண்டு
தப்பிப் பிழைக்க..
விடவே விடாது
தீவினைப் பகை மட்டும்,
தொடர்ந்து அவனைப்
பின்சென்று வருத்தும்…!
குறும்பாவில்…
எப்பகையுற்றாரும் தப்பிப் பிழைக்கலாம்,
தப்பமுடியாது தீவினைப் பகையுற்றோர்-
தொடர்ந்தவரைப் பின்சென்று ஒறுக்கும்…!
மரபுக் கவிதையில்…
மண்ணில் மாந்தர் வாழ்வினிலே
மலைபோல் பகைவரும் வகைவகையாய்,
எண்ணிலாப் பகைகள் இவற்றிலெல்லாம்
எப்படி யேனும் தப்பிடலாம்,
திண்ணமாய்த் தீவினைப் பகைமட்டும்
தப்பி யோட விட்டிடாது,
கண்ணில் காணா இடம்செலினும்
கூடச் சென்றே ஒறுத்திடுமே…!
லிமரைக்கூ..
பெற்றோரும் தப்பித்திடலாம் பகையில்பல வகை,
சற்றும் தப்பிக்கவிடாது எங்கே சென்றாலும்
தொடர்ந்து சென்றொறுக்கும் தீவினைப் பகை…!
கிராமிய பாணியில்…
பயமிருக்கணும் பயமிருக்கணும்
தீவினைக்குப் பயமிருக்கணும்..
தப்பிச்சிரலாம் தப்பிச்சிரலாம்
எந்தப்பக வந்தாலும் தப்பிச்சிரலாம்,
எப்புடியாவது தப்பிச்சிலாம்..
ஆனா,
தப்பியெங்க போனாலும்
தப்பவுடாம தொடந்துபோயி
தண்டிச்சிப்புடும்
தீவினப்பக மட்டும்..
அதால,
பயமிருக்கணும் பயமிருக்கணும்
தீவினைக்குப் பயமிருக்கணும்…!