உலகளவில் 6 வது இடத்தில் இந்தியப் பொருளாதாரம்!

0

பவள சங்கரி

 

தலையங்கம்

 

ஒவ்வொரு நாட்டின் பொருளாதாரத்தையும் நிர்ணயிப்பவர்கள் அந்த நாட்டின் அரசு அல்லது அந்நாட்டின் பெரும் முதலாளிகள். அமெரிக்காவைப் பொருத்தவரை அந்த நாட்டின் அரசும், பெரும் முதலாளிகளும் சேர்ந்து அந்த நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தி வருகின்றனர். சீனாவைப் பொருத்தவரை அந்த நாட்டின் அரசு எடுக்கும் பொருளாதார நடவடிக்கைகள், வியாபார உத்திகள் போன்றவையே அந்த நாட்டின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கின்றன. ஜப்பானைப் பொருத்தவரை பெரும் தொழில் அதிபர்களே அந்த நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தி நிலைநிறுத்திக் கொண்டிருக்கின்றனர். அண்மையில் நமது இந்தியா பொருளாதாரத்தில் உலகளவில் ஆறாவது நாடாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. பல்வேறு சோதனைகள் மிகுந்த இந்த காலகட்டத்தில் உயர் மதிப்பு நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த பிறகும், ஜிஎஸ்டி போன்றவைகள் மூலம் பொருளாதாரத்தில் குழப்பமானதொரு சூழ்நிலை இருப்பினும் இன்று இந்தியா 6வது இடத்தில் இருப்பதற்கு தனி மனித பொருளாதார முன்னேற்றமே காரணம் என்றே எண்ணத்தோன்றுகிறது. இந்திய மக்கள் ஒரு புதிய பொருளாதார சித்தாந்தத்தையே உருவாக்கிக்கொண்டுள்ளனர். ஒவ்வொரு தனி மனிதனும் தான் உயர வேண்டும் என்ற தீவிரத்துடன் உழைப்பதால் இந்தியப் பொருளாதாரம் இந்த உச்சத்தை அடைந்துள்ளது என்றே கொள்ளமுடிகிறது. வங்கிகள் மூலமாக பல ஆயிரம் கோடிகளை இழந்திருக்கும் இந்த நிலையிலும் மீண்டும் மீண்டும் வங்கிகளையே ஊக்கப்படுத்துவதால் புதிதாக என்ன முன்னேற்றம் வந்துவிடப்போகிறது என்ற எண்ணம் தோன்றுவதையும் தவிர்க்க இயலவில்லை. இந்த நிலையில் தனி மனித முன்னேற்றத்திற்குப் பொருளாதார உதவிகள் கிடைக்கும்பொருட்டு பொருளாதாரத்தில் இன்றைய 6 வது இடம் என்பது மாறி, நம் இந்தியா கட்டாயம் முதல் மூன்று இடங்களுக்குள் வருவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. தனி மனிதர்களுக்கு வங்கிகள் உதவி செய்தால் அவர்கள் திருப்பி செலுத்தமாட்டார்கள் என்பது ஒரு மாயைதான். கீழ்மட்டத்தில் இருப்பவர்களில் 90% பேர் சரியாக பணம் திருப்பி செலுத்திவிடுகின்றனர். மீதமுள்ள இந்த 10% மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தாது. பெரும் பிரச்சனை ஏற்படுவதெல்லாம் பெரும் பண முதலைகளால் மட்டும்தான். நம் இந்தியப் பொருளாதாரம் இன்னும் சிறப்பாகச் செயல்பட வேண்டுமானால் மத்திய வங்கியும் நிதி அமைச்சகமும் தங்களுடைய கொள்கைகளிலிருந்து மாறுபட்டு ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்க முன்வரவேண்டும். உயர் மதிப்பீடு நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த பிறகும் நம்முடைய வங்கிகளிலும் கள்ள நோட்டுகள் மற்றும் கணக்கில் காட்டப்படாத பணம் வங்கியில் செலுத்தியது 480 சதவிகிதம் அதிகரித்துள்ளது. உயர் மதிப்பு நோட்டு செல்லாது என்ற அறிவிப்பிற்குக் காரணமாக கள்ள நோட்டு ஒழிப்பு என்ற செயல் திட்டம் பலனற்றுப்போனது மட்டுமின்றி, கள்ள நோட்டுப் புழக்கம் 480 சதவிகிதம் நடைபெற்றுள்ளது என்பதே இதற்கான ஆதாரம். 400 சதவிகிதம் சந்தேகத்திற்குரிய பணப்பரிமாற்றங்கள் வங்கிகளில் நடந்துள்ளதாக அரசின் STR – suspicious transaction report, தெரிவிக்கிறது. மேலும் அதில், 4.73 இலட்சம் இந்த சந்தேகத்திற்குரிய பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாகவும் இந்த அறிக்கை கூறுகிறது. மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் இயங்கக்கூடிய FIU முறையற்ற பணப்பரிமாற்றங்கள் மூலமாக தீவிரவாதிகள் மற்றும் நக்சலைட்டுகளுக்கு இந்தப் பணப்பரிமாற்றங்கள் வங்கிகள் மூலமாகவும், மற்ற பொருளாதார நிறுவனங்கள் மூலமாகவும் சென்றைய ஆண்டுகளைவிட 2016-17இல் மட்டும் 3.22 இலட்சம் முறை நடந்திருப்பதாகக் குறிப்பிடுகின்றது. சி.சி.ஆர் அறிகையின்படி(counterfeit currency report) 2015 -16 இல், உயர் மதிப்பு நோட்டு செல்லாது என்று அறிவித்த பின்பு 7.33 இலட்சமாக, இது அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து மத்ய அரசு அடுத்து எடுக்கப்போகிற நடவடிக்கை எதுவாக இருக்கும் என்பதே சமூக நல ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.