குறளின் கதிர்களாய்…(217)

 

 

 

ஏதம் பெருஞ்செல்வந் தான்துவ்வான் தக்கார்க்கொன்   

றீத லியல்பிலா தான்.                                                

       -திருக்குறள் -1006(நன்றியில் செல்வம்)

 

புதுக் கவிதையில்…

 

சேர்த்த செல்வத்தைத்

தனக்காகச்

செலவு செய்யாமலும்,

தகுந்தவர்களுக்குக் கொடுத்து

உதவாமலும் இருப்பவன்,

அச்செல்வத்திற்கே

ஆவான் ஒரு நோயாய்…!

 

குறும்பாவில்…

 

தானும் அனுபவிக்காமல்

தகுந்தவர்க்குக் கொடுத்து உதவாதவன்,       

அச்செல்வத்துக்கொரு நோயாவான்…!

 

மரபுக் கவிதையில்…

 

செல்வம் சேர்த்துத் தனக்குமதைச்

     செலவென ஏதும் செய்யாமல்

இல்லை யெனவரும் தக்கவர்க்கே

     ஈகை ஏதும் செய்யாதவன்,

தொல்லை தந்தே வாட்டிவிடும்

     தீராக் கொடிய நோயாவான்,

அல்லும் பகலும் பாடுபட்டே

     அலைந்தவன் சேர்த்த செல்வத்திற்கே…!

 

லிமரைக்கூ..

 

சம்பாதித்தான் அலைந்து பேயாய்,   

செல்வமதை நுகராதே தக்கோர்க்கும் ஈயாதவன்           

ஆவான் அச்செல்வத்திற்கே நோயாய்…!

 

கிராமிய பாணியில்…

 

சேக்கணும் சேக்கணும்

செல்வம் சேக்கணும்,

சேத்த செல்வத்த

செலவுபண்ணணும்

நல்ல மொறயில..

 

சேத்த செல்வத்தத்

தனக்கும்

செலவு பண்ணாம,

தேவப்பட்டவங்களுக்கும்

குடுத்து ஒதவாதவன்

அந்த

செல்வத்துக்கே ஒரு நோயாவான்..

 

அதால

சேக்கணும் சேக்கணும்

செல்வம் சேக்கணும்,

சேத்த செல்வத்த

செலவுபண்ணணும்

நல்ல மொறயில…!

 

-செண்பக ஜெகதீசன்…

 

 

 

 

 

 

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *