நிர்மலா ராகவன்

 

பொறுப்பே கிடையாது

இரண்டே வயதான குழந்தை வாசலிலிருந்த மண்ணைத் தன் தலையில் வாரிப் போட்டுக்கொண்டாள்.

“அம்மா திட்டமாட்டா?” என்று தன்னைவிடச் சற்றே பெரியவளாக இருந்த அக்காளிடம் முன்னெச்சரிக்கையாகக் கேட்டுக்கொண்டாள்.

“திட்டினா, திட்டட்டுமே!” என்று தைரியம் வழங்கப்பட்டது.

உள்ளே ஏதோ வேலையாக இருந்த தாய் ஓடோடி வந்தாள். அதற்குள் காரியம் கெட்டுவிட்டது.

“இவதான் சொல்லிக் குடுத்தா!” என்று அக்காளின் பக்கம் கையை நீட்டினாள் குழந்தை. தான் செய்யப்போகும் காரியம் தப்பு என்று தெரிந்தே செய்துவிட்டு, பழியை இன்னொருவர்மேல் சுமத்தினால், தண்டனையிலிருந்து தப்பிக்கலாம் என்று சிறுபிராயத்திலிருந்தே தெரிந்துவிடுகிறது.

விவரமறியாத அந்தச் சிறு குழந்தையை அடிக்கவோ, திட்டவோ பெற்றவளுக்கு மனம் வரவில்லை. பெரியவளைக் கண்டித்தாள்.

“நான் ஒண்ணுமே பண்ணலே!” என்று அவளும் வாதாடினாள், இடுப்பை ஆட்டி ஆட்டிக்கொண்டு, மனோரமா ஸ்டைலில். “என்னைப்போய் திட்டறியே!”

சகோதரிகள் ஒற்றுமையாக இருந்து, எனக்கு எதிராகச் செயல்பட்டதை இப்போது நினைவுகூர்ந்தால் சிரிக்கிறார்கள்.

இன்னொரு முறையும் அப்படி ஏதோ `செய்யக்கூடாத’ விஷமம் செய்த சிறியவளைக் கண்டித்தபோது, அதே சாக்குதான். அக்காளின் பக்கம் கையை நீட்டினாள்.

“அவ சொல்லிக்குடுத்தா, நீ ஏன் கத்துக்கறே?” என்று, சிரிப்பை அடக்கியபடி நான் கேட்டதற்குப் பதில் இல்லை. விழித்தாள்.

நான்கு வயதில் அச்சிறுமியிடம் கொஞ்சம் காசைக் கொடுத்து, “எதிர்க்கடையில் பிஸ்கோத்து வாங்குக்கோ. சாக்லேட் கூடாது. பல் கெட்டுப்போயிடும்,” என்று சொல்லி அனுப்பினேன்.

சிறிது நேரத்தில் கையில் சாக்லேட்டுடன் வந்தாள், முகத்தைக் கோணிக்கொண்டு. “நான் பிஸ்கேட்தான் .கேட்டேன். அவன் என்னமோ சாக்லேட் குடுத்துட்டான்,” என்ற சாக்கு வேறு!

(பொய் சொல்வது தவறு என்று அவளுக்குத் தெரியும். அதனால்தான் முகம் மாறியிருந்தது).

“பொய் சொல்லாதேடி, கழுதை!” என்று திட்டினேன்.

அந்த வயதில் கண்டிக்காது விட்டுவிட்டால், அதே நடத்தை பிற்காலத்திலும் தொடரும்.

ஆசிரியரிடம், `என் வீட்டுப்பாடத்தை எங்கள் வீட்டு நாய் கடித்துவிட்டது!’ `அலாரம் அடிக்கவில்லை. அதனால் நெடுநேரம் தூங்கிவிட்டேன்,’ என்றெல்லாம் சாக்குப்போக்கு சொல்வது இதனால்தான்.

அப்பாவிபோல் முகத்தை வைத்துக்கொண்டு, தாங்கள் குற்றமற்றவர்கள் என்று சாதித்தால் தண்டனை அவ்வளவு கடுமையாக இருக்காது என்று பலரும் நம்புகிறார்கள். நண்பர்களுடன் கும்மாளமடித்துவிட்டு, `நேத்திக்கு ஆபீசில ஒரே வேலை! அந்த மானேஜர் மீட்டிங் வேற வெச்சுட்டான்!’ என்று மனைவியை (அடிக்கடி) நம்பவைக்கும் கணவன்மார்களும் இதில் சேர்த்தி.

தம்பதிகளும் பொறுப்பைத் தட்டிக்கழிக்க ஒருவரையொருவரைப் பயன்படுத்திக்கொள்வதுண்டு.

“அப்பா ஆபீசிலிருந்து வரட்டும். ஒனக்கு இருக்கு!” என்று குழந்தையை மிரட்டுவாள் தாய்.

மகனின் நடத்தையில் திருப்தி இல்லாத தந்தையோ, “நீ ஒன் மகனை வளர்த்திருக்கிற லட்சணத்தைப் பார்!” என்றுவிடுவார், தனக்கு அவன் விஷயத்தில் சம்பந்தமே இல்லாததுபோல்!

அரசியல்வாதிகளும் பொறுப்பும்

பதவிக்கு, அதனால் கிடைக்கும் அதிகாரத்திற்கு, பலரும் ஆசைப்படுகிறார்கள். என்னென்னவோ முயற்சிகள் எடுத்துக்கொள்கிறார்கள்.

தேர்தலில் தங்கள் கட்சி தோற்றபின், அதற்குமுன் எதிர்க்கட்சியாக இருந்த ஆளுங்கட்சி இவர்கள் செய்த அட்டூழியத்தைத் தட்டிக்கேட்கும்போது, `எனக்கு மேலே இருந்தவர்களின் ஆணைப்படிதான் நடந்துகொண்டேன்!’ என்று அரசியல்வாதிகள் சாதிப்பார்கள்.

நடப்பது சட்ட விரோதம் என்று புரிந்தும், அதை எதிர்த்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தவர்களும் இதையே சொல்லி, தம்மேல் எந்தக் குற்றமும் கிடையாது என்பார்கள்.

`நான் செய்தது தவறு,’ என்று ஒத்துக்கொள்ள எத்தனை பேருக்குத் தைரியம் இருக்கிறது? தாம் செய்த செயலுக்குப் பிறர்மேல் பழியைச் சுமத்துகிறவர்கள் இவர்கள். `பொறுப்பு’ என்ற வார்த்தையின் அர்த்தமே புரியாதவர்கள்.

அண்மையில் மலேசியாவில் தேர்தல் நடந்து முடிந்தது உங்களுக்குத் தெரிந்திருக்கும். 1957-ல் சுதந்திரம் அடைந்திருந்திருந்த நாடு இது.

`அரசியல்வாதிகள் ஏதோ செய்துவிட்டுப் போகட்டும். நமக்குத்தான் வசதிகள் தாராளமாக இருக்கிறதே!’ என்று ஐம்பத்தைந்து ஆண்டுகளுக்குமேலும் விட்டேற்றியாக இருந்தனர் குடிமக்கள். விலைவாசி கண்டபடி எகிறியபோதுதான் விழித்துக்கொண்டார்கள். தம் பொறுப்பு என்னவென்று அவர்களுக்குப் பிடிபட்டது.

ஆளுங்கட்சியில் லஞ்சம், இன்னும் என்னென்னவோ ஊழல் என்று இணையத்தில் விரிவாக வந்தது. ஆளுங்கட்சியினரின் அளப்பரிய சொத்து (உள்நாட்டிலும், வெளிநாட்டிலும்), பங்களா எல்லாம் நம் பணம் என்று எல்லாரும் கொதித்தெழ, அக்கட்சி தேர்தலில் படுதோல்வி அடைந்தது. அது மலாய், சீனர், இந்தியர் ஆகிய மூவினத்தோரையும் இணைத்த கட்சி. இப்போது அனேகமாக அனைவரும் இணைந்து அதை எதிர்த்தார்கள்.

பிரதம மந்திரியின் மனைவி ஐந்நூறு கைப்பைகள் வைத்திருந்தாள்; ஒவ்வொன்றின் விலையும் பல லட்சம் (தங்கம், வைரம் பதித்தது), அவைகளுக்குள் பல கோடி உள்நாட்டு, அயல்நாட்டு நாணயம் இருந்தன என்றெல்லாம் தினசரிகள் அம்பலப்படுத்தியபோது, `நல்லவேளை, நாம் இப்போதாவது விழித்துக்கொண்டோமே!’ என்ற நிறைவு மக்களுக்கு எழுந்தது.

`புதிய மலேசியா’ என்று இப்போது வர்ணிக்கப்படும் நாடு ஒரு தேர்தலால் மாறியது விந்தையல்ல. இதுவரை ஓட்டிச்சாவடி பக்கமே போகாதவர்கள்கூட தம் பொறுப்பை உணர்ந்து நடந்துகொண்டதன் நல்விளைவு இது.

நாட்டுத் தலைவர்கள் மட்டுமின்றி, வீட்டுத் தலைவர்களுக்கும் பொறுப்புணர்ச்சி அவசியம் தேவை.

`பெரியவர்கள் சொல்வதை அப்படியே இம்மிபிசகாமல் கடைப்பிடிக்கவேண்டும்!’ என்பதுபோல் நடக்கும் பெற்றோர்கள் பிள்ளைகளின் சுய சிந்தனையைப் பறிக்கிறார்கள்.

`நாம்தான் வாழ்க்கையில் பல தவறுகள் செய்துவிட்டோம். நம் குழந்தைகளும் அப்படி நடக்காது பாதுகாக்கிறோம்!’ என்று அவர்கள் எண்ணமிடலாம். ஆனால், இம்மாதிரி வளர்க்கப்பட்டவர்கள் சிறிது சுதந்திரம் கிடைத்தாலும் தம் மனம்போனபடி நடப்பார்கள். தம் செயல்களுக்குப் பொறுப்பேற்க மாட்டார்கள்.

கதை

பல தீய பழக்கங்கள் கொண்ட ஒரு பெரியவர் என்னிடம் சிரித்தபடி கூறினார், “எங்கம்மா செல்லம் குடுத்து என்னைக் கெடுத்துட்டா! எட்டு வயசுவரைக்கும் என்னை இடுப்பிலே தூக்கி வெச்சுப்போ! அப்பா என்னைத் திட்டவே விடலே!’

பிற்காலத்தில் அவரது குடும்பம் நிர்க்கதியாகப் போயிற்று. அதைப்பற்றி அவர் கவலைப்படவில்லை. குற்ற உணர்ச்சியும் கிடையாது. ஏனெனில் தன் சுகமே பெரிது என்று நினைக்கும்படி வளர்க்கப்பட்டிருந்தார். அவர் பெற்ற தண்டனை: அவர் மரணத்தைத் தழுவியபோது, உண்மையாகத் துக்கப்பட்டவர்கள் எவருமில்லை.

தான் செய்தது தவறாக இருந்தாலும், அதற்குப் பொறுப்பேற்க ஒரு தலைவன் தயாராக இருக்கவேண்டும். அப்போதுதான் நினைத்ததைச் சாதிக்க இயலும். பிறரும் அவனை நம்புவர்.

உன் வெற்றி-தோல்விக்கு நீயே பொறுப்பு

`தோல்வி என்றால் அவமானம்!’ என்று பயந்து, எதுவுமே செய்யாதிருப்பதைவிட தவறு செய்து அதிலிருந்து கற்பது மேல்.

வெற்றியை நோக்கி நடக்கும்பொது, அவர்களை ஒவ்வொரு அடியிலும் வழிநடத்த பிறரை எதிர்பாராது, தம் செயலுக்குத் தாமே பொறுப்பேற்பவர்களுக்கு வெற்றி நிச்சயம். அப்படியே தவறு நேர்ந்தாலும், அதை ஒப்புக்கொள்ளும் தைரியமும் பொறுப்புணர்ச்சியும் ஏற்படும்.

கடுமையாக உழைத்தாலும், தான்தோன்றித்தனமாக நடப்பது சராசரி மனிதனின் குணம். ஆடம்பரமாக நடந்து, பார்ப்பவரை பிரமிக்க வைக்கவேண்டும் என்று நினைப்பவருக்கு மகிழ்ச்சி நிலைக்காது.

கதை

ஒரு தனியார் நிறுவனத்தின் மேலதிகாரியாக இருந்த நடராஜன், `இதுவரை ஏழ்மையில் உழன்றது போதும்,’ என்று நினைத்தவர்போல், ஆடம்பரச் செலவுகள் செய்தார். மனைவியுடன் அடிக்கடி சொந்தக் காரில் சுற்றுலா செல்வது அவருக்குப் பிடித்த விஷயமாக இருந்தது. `மாதம் பிறந்தால், சம்பளம் வந்துவிட்டுப்போகிறது!’ என்று மெத்தனமாக இருந்ததில், சேமிப்பு அறவே கிடையாது.

நாற்பது வயதுக்குள் அவர் மரணம் எய்த, குடும்பம் நிர்க்கதியாக ஆனது. மனைவிக்கோ அதிகக் கல்வி கிடையாது. மூன்று குழந்தைகளும் பள்ளிப்படிப்பை முடிக்கவில்லை. எதிர்பாராத தாக்கத்தால் எல்லாருக்குமே மன உளைச்சல் ஏற்பட்டது. உளவியல் சிகிச்சையும் தேவைப்பட்டது.

`குடும்பத் தலைவர்’ என்ற பொறுப்புடன் நடராஜன் நடந்துகொண்டிருந்து, `நாளை நடப்பதை யாரறிவார்!’ என்று சிறிதாவது சேமித்திருந்தால், அவருக்குப்பின் அவரது குடும்பம் திண்டாடி இருக்குமா?

“வாழ்க்கைக்கு அன்பும் உழைப்பும் மட்டும் போதாது. பொறுப்பும் அவசியம் இருக்கவேண்டும்”. (உளவியல் நிபுணர் ஃபிராய்ட் (FREUD))

தொடருவோம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *