-செண்பக ஜெகதீசன்

நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்  
சொற்பொருள் சோர்வு படும்.   (திருக்குறள் -1046: நல்குரவு)

 புதுக் கவிதையில்… 

நல்ல பொருளை
நன்கு அறிந்துணர்ந்து
சொன்னாலும்,
வறியவரின் வாய்ச்சொல்
கருதப்படும்
பொருளற்றதாகவே…! 

குறும்பாவில்…

உயர்ந்த நூற்களின் கருத்துக்களை
ஆய்ந்தறிந்து சொன்னாலும், பொருளற்றதாகிவிடும்
வறியோர்தம் வாய்ச்சொல்…! 

மரபுக் கவிதையில்…

நல்ல நூற்கள் கற்றுணர்ந்தே
     -நயமுடன் அவற்றின் பொருளதனைச்
சொல்லும் வகையில் சொன்னாலும்
   -சேர்ப்ப தில்லை பொருளுளதாய்,
நல்லதாய் அதையே ஏற்பதில்லை
-நவில்வோர் தமையும் மதிப்பதில்லை,
செல்வம் ஏதும் இல்லாத
-சோர்ந்த வறியோர் சொன்னாலே…! 

லிமரைக்கூ…

நல்ல சொல்லும் தேறாது
நற்பொருளை ஆய்ந்தறிந்து சொன்னாலும்,
ஏழைசொல் அரங்கம் ஏறாது…! 

கிராமிய பாணியில்… 

கொடிது கொடிது வறும கொடிது
ஒலக வாழ்க்கயில வறும,
கொடிது கொடிது மிகக் கொடிது…
நல்லாப்படிச்சி எல்லாந் தெரிஞ்சி
எதச்சொன்னாலும் எடுபடாது…
பொல்லாத வறுமயில
இல்லாதவன் எடுத்துச்சொன்னாலும்
எதச் சொன்னாலும் எடுபடாது,
ஏறாது சபயினிலே… 

தெரிஞ்சிக்கோ,
கொடிது கொடிது வறும கொடிது
ஒலக வாழ்க்கயில வறும,
கொடிது கொடிது மிகக் கொடிது…!

 

 

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க