க. பாலசுப்பிரமணியன்

துணிவுக்கு வரும் சவால்கள்

துணிவு முன்னேற்றத்திற்கான ஒரு  அறிகுறி. துணிவு இல்லாமல்  நம்மால் எதிலும் முன்னேற்றம் காணமுடியாது. துணிவுக்கு எதிர்மறையானதே பயம். துணிவு இருளில் ஒளியைத் தேடுகிறது. பயம் ஒளியில் இருளைக் காண்கிறது. துணிவு சாதனைக்கு வழியைத் தேடுகின்றது. பயம் சாதனைப் பாதையில் உள்ள தடைக்கற்களை கண்டு தயங்கி நிற்கிறது. துணிவு தோல்வியைக்கண்டு அஞ்சுவதில்லை. பயம் வெற்றிப்பாதையில் தோல்வியின் தடயங்களைக்கண்டு மலைக்கின்றது.

துணிவால் கிடைக்கின்ற சிறிய வெற்றிகூட அடுத்த முயற்சிக்கு வேண்டிய துணிவை நமக்கு அள்ளித்  தருகின்றது.இந்திய கடற்படையைச் சார்ந்த ஆறு பெண்மணிகள் Lt  கமாண்டர் விருத்திகா ஜோஷி அவைர்கள் தலைமயில் உலகம் முழுவதையும் ஒரு இயந்திர படகின் மூலமாக சுற்றி வருவதற்கான துணிவான முயற்சியை மேற்கொண்டார்கள், உலகின் பல்வேறு கடலலைகளின் தாக்கங்ககளையம் தாக்கல்களையும் முறியடித்துக்கொண்டு எட்டு மாதங்கள் தங்களுடைய பின்னடைவுகளுக்கு இரையாகாமல் துணிவோடு பயணித்தார்கள். எட்டு மாதங்களுக்கு பிறகு சில நாட்களுக்கு முன் அவர்கள் இந்தியா திரும்பியபோது இந்தப் பெண் வீராங்கனைகளை இந்திய துணைக்கண்டம் மற்றுமின்றி உலகத்தின் பல்வேறு நாடுகளும் புகழ்ந்தன .”

இந்திய விமானப் படையைச் சேர்ந்த வீரர் திரு சத்யேந்திர வர்மா தனது பள்ளியில் படிக்கும் பொழுதே வாழ்க்கையில் ஏதாவது புதிய சாதனை செய்ய வேண்டும் என்ற விருப்பத்தில் இருந்தார். விமானப் படையில் சேர்ந்ததும் விமானத்திலிருந்து கீழே விமானக்குடைகள் (parachute) மூலமாக குதிப்பதில் வல்லமை பெற்றார். அவருடைய சாகசங்கள் அவருடைய துணிவை மேலும் வளர்த்தன. அதன் பின் உலகின் பல உயரமான கட்டிடங்களிருந்து எவ்வாறு பாதுகாப்பான முறையில் கீழே குதிப்பது என்பதற்கான முயற்சிகளைத் துணிவுடன் மேற்கொண்டு பல சாதனைகளை நிகழ்த்திக்காட்டினார். இந்தியாவிலேயே இந்த சாகச விளையாட்டுக்களில் மிகத் தேர்வு பெற்றவராக விளங்கி இந்திய அரசின் பாராட்டுதல்களையும் பட்டங்களையும் இந்திய ஜனாதிபதியிடமிருந்து  பெற்றார். இளைஞர்களுக்கு அவர் கொடுத்த ஒரு செய்தியில் “துணிவு என்பது மனதில் இருந்தால் மட்டும் போதாது. அதைத் தொடர்ந்து நாம் ஈடுபடும் செயல்களில் நமக்கு போதிய அறிவும் திறன்களும் அந்த சாகசங்களை போதுமான தற்காப்புக்களுடனும் செய்வதற்கான திட்டங்களும் தேவை. துணிவுடன் செயல் படுவது என்பது ஒரு கண்மூடித்தனமான செயல் அல்ல

ஆழம்தெரிந்து .காலைவிடு என்பது பழமொழி மட்டுமல்ல ஒரு சிந்திக்கவைக்கும் அறிவுரை. பலபேர்கள் தொழில்களைத் தொடங்கும் பொழுது தங்களிடம் போதுமான பணம் இருக்கின்றது என்ற ஒரே ஆணவத்தில் தொழிலில் ஈடுபட்டு அதை முறையாகச்  செயல்படுத்துவதற்கோ அல்லது நடத்துவதற்க்கோ தேவைப்படும் திறன்கள் இல்லாமல் தோல்விகளில் தங்களை இழந்து விடுகின்றார்கள். மேலும் சில பேர் தங்களிடம் அறிவும் திறனும் இருப்பதால் மட்டும் தொழில்களில் மூலதனமின்றி ஈடுபட முடியும் என்ற ஒரு குருட்டு தைரியத்தில் தங்கள் பொன்னான நாட்களை இழந்து நிற்கின்றார்கள். இந்த இரண்டு வகையினரும் துணிவைத் தவறாக எடை போட்டவர்கள். அறிவு துணிவுக்குக் கண்கள். திறன்கள் துணிவுக்குக் கைகள். ,மூலதனமும் வளங்களும் துணிவுக்குக் கால்கள். இவை அனைத்தும் ஒருங்கிணைந்தால்தான் துணிவுக்கு முழுமையான வெற்றி கிடைக்கும்.

அறிவும் திறனும் இருந்து விருப்பமில்லாத பாதையில் துணிவாகச் செல்ல முயல்வது முட்டாள்தனம். பல நேரங்களில் பல படித்த துணிவான இளைஞர்கள் தங்களுடைய முன்னோர்கள் செய்த தொழிலை குடும்ப நிர்பந்தங்கள் காரணமாக விருப்பமின்றிச் செய்து பின்னடைவு ஏற்படுத்திய நிகழ்வுகள் பலவற்றைக் கண்கூடாகப் பார்த்திருக்கின்றோம். ஒரு முறை மருத்துவப் படிப்பிற்கான தேர்வுகள் நடந்துகொண்டிருந்த மையத்தில் தேர்வின் முடிவில் ஒரு மாணவனை நேர்கண்டபோது அவரிடம் எப்படி எழுதியிருக்கின்றீர்கள் என்று கேட்ட பொழுது “மிக நன்றாகத் தான் எழுதியிருக்கின்றேன். முதல் நூறு பேருக்குள் உறுதியாக வந்துவிடுவேன். ஆனால் உண்மையைச் சொல்லப்போனால் எனக்கு மருத்துவத்தில் விருப்பமில்லை. என் தாய் தந்தை இருவரும் மருத்துவராக இருப்பதினால் நான் இந்தத் தொழிலில் தான் வரவேண்டும் என்று விருப்பப்படுகின்றார்கள். எனக்கோ இலக்கியத்தில் தான் விருப்பம்.” என்று சொன்னபோது சில சமுதாய பார்வைகள் நமது வருங்காலத்தோடு எவ்வாறு விளையாடிக்கொண்டிருக்கின்றன என்று நாம் சிந்திக்க வேண்டிய நிலையில் இருக்கின்றோம்.

துணிவோடு செயல் படுபவர்கள் தோல்விகளைக் கண்டு அஞ்சமாட்டார்கள். அவர்கள் மாற்றங்களுக்கு வித்திடும் பொழுதும் புதிய சிந்தனைகளை முன்வைக்கும் பொழுதும் அதற்கான ஏற்புக்கள் குறைவாகவும் எதிர்புக்கள் அதிகமாகவும் இருக்கத்தான் செய்யும். இந்த எதிர்ப்புக்களை அவர்கள் தங்கள் ஆக்க சக்திக்கு உரமாக்கிக்கொண்டு முன்னேறுவதில் தங்கள் சாதனைகளுக்கு விளக்கம் அளித்துக்கொண்டிருப்பார்கள். முதல் முறையாக கிராமபோனை நியூட்டன் கண்டுபிடித்த பொழுது அமெரிக்காவின் ஒரு முன்னணிப் பத்திரிகை அவரை மிகவும் சாடியது மட்டுமின்றி தரக்குறைவாக விமர்சித்தது. அவரின் கண்டுபிடுப்பு பைத்தியக்காரத்தனத்தின் எல்லை என்றும் அது அமெரிக்காவின் நாகரீகத்தின் அடிப்படைகளைச் சிதைத்து விடுமென்றும் கூறியது.. ஆனால் நியூட்டன் துணிவும் விடாமுயற்சியும் இந்த விமர்சனங்களை புறக்கணித்து தன்னுடைய ஆராய்ச்சிகளின் வெற்றிகளின் பாதைகளை வகுத்துக்கொண்டிருந்ததன.

உங்கள் துணிவு பலபேரின் பயத்திற்குக் காரணமாக இருக்கலாம். உங்கள் துணிவு மற்றவர்களின் கருத்து ஆதிக்கங்களுக்குச் சவாலாக இருக்கலாம் உங்கள் துணிவு பழக்கத்தில் உள்ள பல நெறிமுறைகளுக்கும் செயல்களுக்கும் முடிவுரையாக இருக்கலாம். ஆனால் துணிவுதான் சமுதாய மாற்றங்களுக்கு அடிக்கல். அதற்கு நீங்களும் நானும் ஏன் முன்னுரை எழுதக்கூடாது ?

துணிந்து வாழ்ந்து பார்க்கலாமே !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *