நிர்மலா ராகவன்

 

எழுதப்படாத விதிமுறைகள்

ஒரு கணவனாக, மனைவியாக, பெற்றோராக, பொதுவாக, எந்த பொறுப்பான நிலையிலும் செய்யக்கூடாதவை பொய், பித்தலாட்டம், வன்முறை ஆகியவை. ஆனால், எத்தனை பேர் இதையெல்லாம் கடைப்பிடிக்கிறார்கள்?

முப்பது ஆண்டுகளுக்குமுன்

ஓயாமல் சண்டை பிடித்துக்கொண்டு, பின்பு விவாகரத்து பெற்றனர் அத்தம்பதி. மூத்தவளான டெய்ஸி தந்தையுடன் வளர, இளையவள் தாயின் பொறுப்பில் விடப்பட்டாள். அதற்கு முன்னர் பாசம் என்றால் என்னவென்றே அறியாது வளர்ந்திருந்தனர் இருவரும். பெற்றோர் மறுமணம் செய்துகொண்டார்கள்.

டெய்ஸி காதல் வயப்பட்டு மணந்துகொண்டாள் — தன்னையும் அறியாது, தந்தை தாயை வதைத்ததுபோன்று வன்முறையைக் கைப்பிடிக்கும் ஒருவனை. சில ஆண்டுகளுக்குப் பின்னர், அவனது கொடுமை தாங்கமுடியாதுபோக, மீண்டும் தந்தையின் வீட்டில் சரண் புகுந்தாள். சிற்றன்னை அவளது நிலைமையைப் புரிந்துகொண்டு, அன்புடன் ஆதரவு அளித்தாள்.

`இவள் வேறு எங்கு போயிருக்கப் போகிறாள்!’ என்று அவளைத் தேடி வருவதை வழக்கமாகக் கொண்டான் அவள் கணவன். வன்முறை தொடர்ந்தது.

டெய்ஸியின் மனநிலை பெரிதும் பாதிப்படைய, எதைக் கண்டும் அஞ்ச ஆரம்பித்தாள். காற்றில் கதவோ, ஜன்னலோ ஆடினால்கூட, கணவன்தான் வருகிறான் என்ற படபடப்பு ஏற்பட்டது.

அவளைப் பார்க்க வந்த தங்கை, “என் அக்காளுக்கு இங்கு போதிய பாதுகாப்பு இல்லை. நான் அவளை என் தாய் வீட்டுக்கே அழைத்துப் போகிறேன்,” என்று சிற்றன்னையுடன் வாதாடினாள்.

சிற்றன்னை சம்மதிக்கவில்லை. இருவருக்கும் பலத்த வாக்குவாதம் நடக்க, ஏற்கெனவே குழம்பியிருந்த டெய்ஸிக்கு நடப்பது என்னவென்றே புரியவில்லை. ஒரு கத்தியால் சிற்றன்னையைக் குத்திக் குதறினாள் – இருபது தடவைக்குமேல். `கொலையாளி!’ என்று சட்டம் அவளுக்கு ஆயுள் தண்டனை வழங்கியது. (இக்கதையை எனக்குச் சொன்னவர் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்).

இப்போது, `அன்பான சிற்றன்னையை நானே கொன்றுவிட்டேனே!’ என்று டெய்ஸி வருந்தாத நாளில்லை.

இதில் யார் குற்றவாளி?

சிறுவயதில் அன்போ, அரவணைப்போ அளிக்காது வளர்த்த பெற்றோரா?

`மனைவி’ என்றால் தன் மனம் போனபடி அவளை நடத்தலாம் என்றெண்ணிய கயவனா?

இவர்கள் தம் பொறுப்பிலிருந்து வழுவிவிட்டதால்தான் எத்தனை விபரீதம்!

அலட்டல் ஏன்?

அலுவலங்களில் அதிகமாக அலட்டிக்கொள்பவர்கள் பெரிய பதவிகளில் இருப்பவர்களாக இருக்காது. இவர்கள்தாம், `எனக்கும் அதிகாரம் இருக்கிறது!’ என்று தம்மையே ஏமாற்றிக்கொண்டு, அதைப் பிறருக்கும் உணர்த்த விரும்புகிறவர்கள்போல் நடப்பார்கள். தம்மைத் தாமே தாழ்வாக நினைப்பதால் வந்த வினை!

கதை

செல்வந்தர் ஒருவரின் வீட்டுக்கு வேலை செய்ய வந்தபோது, வேணி சிரித்தமுகமாய், சுறுசுறுப்பாக இருந்தாள். அவளை மிக மிக மரியாதையாக நடத்தியது அக்குடும்பத்தினர் செய்த பெரிய பிழை.

`இவர்களுக்கு நம்மைவிட்டால் வேறு யாரும் கிடைக்கமாட்டார்கள்’ என்ற திமிர் ஏற்பட்டது வேணிக்கு. பத்து வருடங்களுக்குப்பின், தனக்குச் சம்பளம் கொடுப்பவர்களையே அதிகாரம் செய்ய ஆரம்பித்தாள். தன் கவனிப்பில் இருந்த முதியவளுடன் ஓயாமல் தொலைகாட்சி பார்த்ததில், கையையும், தலையையும் ஆட்டிக்கொண்டு, `வீராங்கனை’போல் பேசும் பழக்கம் வந்தது.

விருந்தினர் ஒருவர் அந்த வீட்டுக்குப் போய் தங்கியபோது, `நான்தான் இந்த வீட்டு எஜமானி!’ என்பதுபோல் மரியாதைக்குறைவாக நடந்துகொண்டாள்.

அவர் ஏன் பொறுப்பார்? “சும்மா வாயாடாதே! உள்ளே போய், வேலை இருந்தா பாரு!” என்று பதிலுக்குக் கத்த, பயந்து, உள்ளே ஓடினாள் வேணி.

“அம்பது வயசுக்குமேல எனக்கு வாயாடிப் பட்டம்!” என்று முனகினாள், தன்னிரக்கத்துடன்.

அக்குடும்பத்து இளைஞனும் துணிந்து அவளை எதிர்க்க, “நான் வேலையை விட்டுப் போயிடுவேன்..,” என்று மிரட்ட ஆரம்பித்தாள்.

“நீ போனா, ரெண்டு நாள் கஷ்டப்படுவாங்க. அப்புறம் வேற ஒருத்தி கிடைக்காமலா போவா? யார் போனாலும், உலகம் நடக்காம போறதில்லே. வேண்டியவங்க போயிட்டா, நாம்ப சாப்பிடறதில்லையா, புதுத்துணி வாங்கறதில்லையா?” என்று யாரோ உணர்த்தினார்கள். (அது நானில்லை என்றால், நம்பவா போகிறீர்கள்?)

வெகு காலத்திற்குப் பிறகு, வேணி தன் உண்மை நிலையைப் புரிந்துகொண்டாள். எண்ணையில் போட்டு எடுத்ததும் பூரி உப்பியிருக்கும். சிறிது நேரத்தில் அமுங்கிவிடும். அதுபோல் வேணியின் பூரித்திருந்த செருக்கு அடங்கியது. அதன் பின்னர், “நான் இந்த வீட்டிலே வேலை செய்யறவதான். எதுவா இருந்தாலும், ஐயாகிட்ட கேளுங்க,” என்று கம்மிய குரலில் கூறப் பழகிக்கொண்டாள்.

மருத்துவர்கள்

ஆரோக்கியக் குறைவால் அவதியுறும் நோயாளிகளைப் பார்த்து, `வேடிக்கை!’ என்று சிரிக்கும் டாக்டரைப் பார்த்திருக்கிறீர்களா?

கோலாலம்பூரில் அப்படி ஒருவர் இருந்தார். பெயரா? கம்சன் என்று வைத்துக்கொள்ளலாம். `என்னால் எந்த வியாதியையும் குணப்படுத்திவிட முடியும்!’ என்ற செருக்குடன் செயல்பட்டார்.

`தோளில் வலி,’ என்று அவரிடம் போனேன், யாரோ செய்த சிபாரிசை நம்பி. ஒருமாதக் குழந்தைக்கும் அவரிடம் ஒரே வகை வைத்தியம்தான். உடலில் பல பாகங்களில் மெல்லிய மின்சாரத்தைச் செலுத்துவார். அதிர்வு உண்டாகும்.

வரிசையாக எட்டு பேரை உட்காரவைத்து, கம்சன் தனது `வைத்தியத்திறனை’ காட்டும்போது, `டாக்டர்! நான் பயந்தவள்!’ என்று சிலர் கெஞ்ச, பெரிதாகச் சிரிப்பார். மின்னதிர்ச்சி தாக்கியதும், சிரிப்பு இன்னும் பலக்கும்.

ஒரு முறை, என் அனுமதியைப் பெறாது தலையில் சற்று அதிகமான மின்சாரத்தைச் செலுத்த, எதிர்பாராத அதிர்ச்சியாலும், வலியாலும் அலறித் துடித்தேன். எந்தச் சிறிய சிகிச்சைக்கு முன்னரும் நோயாளிக்கு அதன் தன்மையை விளக்கவேண்டும் என்பது விதி.

இம்மாதிரி வைத்தியத்திற்கு இந்நாட்டில் அனுமதி கிடையாது என்று தெரிந்துபோனதும், மருத்துவத்துறையினரிடம் நான் புகார் செய்ய, ஐந்தாண்டுகள் வழக்கு நடந்தது. முதலில் இறுமாப்பாக நடந்துகொண்டார் கம்சன். அவர் சம்பாதித்திருந்த லட்சங்களெல்லாம் வக்கீல்களுக்குப் போயிற்று.

`எனக்கு வக்கீல் கிடையாது!’ என்றுவிட்டேன். நான் உண்மையே பேசுகிறேன் என்று புரிந்து, அவருடைய வக்கீல், “என் தொழிலைத்தான் செய்கிறேன்,” என்று தனிமையில் என்னிடம் மன்னிப்பு கோரினாள்.

போகப்போக, அவர் பிறருக்கு விளைவித்த அச்சம் அவரையே தாக்கியது. அந்த நடுக்கத்தைக் கண்டு எனக்குள் அலாதி திருப்தி பிறந்தது. இறுதியில், அவரது உரிமம் ஓராண்டு காலத்திற்கு பிடுங்கப்பட்டு, மருத்துவமனைக்கு `சீல்’ வைத்தார்கள்.

`நீங்கள் எப்படி ஏமாந்தீர்கள்?’ என்று என்னை நன்கு அறிந்த சிநேகிதி ஒருத்தி ஆச்சரியப்பட்டு, பிறகு, `ஓ! உங்களால்தான் அவருடைய நாட்பட்ட, அடாத செயலுக்கு ஒரு முடிவுகட்ட முடியும் என்றே இப்படி நடந்திருக்கிறது!’ என்றாள். நன்மை விளைந்தாலும், எனக்கு ஏற்பட்ட தாக்கத்தால் அடுத்த இரண்டு ஆண்டுகள் வக்கீல், வழக்கு சம்பந்தப்பட்ட எந்த ஆங்கிலப் புதினங்களையும் படிக்க முடியவில்லை.

இங்கு அரசாங்க மருத்துவமனைகளில் மிக நல்ல கவனிப்பு. ஐம்பத்தைந்து வயதுக்கு மேற்பட்டவர்களை மிக மரியாதையாக நடத்துவார்கள். ஏழையோ, பணக்காரரோ, எல்லாரும், `அங்கிள், ஆன்ட்டி’தான். எந்த வேலை செய்பவர்களாக இருந்தாலும், `நாம் செய்யும் வேலை இழிவானது,’ என்ற தாழ்வு மனப்பான்மை இல்லாது, சிரித்த முகத்துடன் நம்முடன் பேசுவார்கள். அவர்களுடைய தலைவர் பொறுப்பானவராக இருக்கவேண்டும்.

அந்த மனிதர் கம்சனின் போதாத காலம், நான் அங்கு சென்றிருக்கிறேன். இனி, தன்னிச்சைபோல் நடக்கத் துணியமாட்டார்.

அரசியல்வாதிகள்

அரசியலில் பெரிய பதவி வகித்து, `மக்கள் பணம் என் பணம்’ என்பதுபோல் நடந்துகொள்பவர்கள்… போதும், போதும். உங்களுக்குத் தெரியாததா!

எந்த ஓர் உத்தியோகத்திலும், எந்நிலையிலும் செய்யக்கூடியது, செய்யக்கூடாதது என்று சில எழுதப்படாத விதிமுறைகள் இருக்கின்றன. அவைகளைக் கடைப்பிடித்தால்தான் நிம்மதியும் மரியாதையும் நிலைக்கும்.

இது ஏன் பலருக்கும் புரிவதில்லை?

பிறரைப் பார்த்தும் இவர்கள் ஏன் கற்பதில்லை?

சரித்திரம் மீண்டும் மீண்டும் தலைதூக்கும் என்பது இதுதானோ?

தொடருவோம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *