செண்பக ஜெகதீசன்

 

நல்லா றெனினுங் கொளல்தீது மேலுலக                                                                      

மில்லெனிலு மீதலே நன்று.

       -திருக்குறள் -222(ஈகை)

 

புதுக் கவிதையில்…

 

பிறர் கொடுக்க

அதைப்

பெற்றுக்கொள்வது என்பது,

பல்லோர் சொன்ன

நல்வழியெனிலும் தீதே..

 

மேலுலகமென ஒன்றிருப்பினும்,

அது

கிடைக்காமல் போய்விடுமெனிலும்,

வறியவர்க்கு

ஈதலே நல்லதாகும்…!

 

குறும்பாவில்…

 

நல்வழியென சொல்லப்பட்டாலும் பிறரிடம்  

பெறுதல் தீது, மேலுலகம் கிடைக்காமல்போனாலும்   

வறியவர்க்கு ஈதலே நன்று…!

 

மரபுக் கவிதையில்

 

மெச்சத் தகுந்த மேலுலகதன்

      மிக்க நல்ல வழியெனிலும்,

பிச்சை யெனவே பிறரிடத்தில்

     பெற்றுக் கொள்வது தீதாகும்,

நிச்சய மில்லா மேலுலகம்

     நிச்சயம் கிடைக்கா நிலைவரினும்,

இச்சை யோடுள வறியவர்க்கே

     ஈதலே யென்றும் நன்றாமே…!

 

லிமரைக்கூ..

 

நல்வழியென நம்பிடினும் இன்று, 

பெறுதல் தீது, மேலுலகம் கிடைக்காதெனிலும்      

வறியவர்க்கென ஈதலே நன்று…!

 

கிராமிய பாணியில்…

 

தருமஞ்செய்யி தருமஞ்செய்யி

வறியவரு வாழத்தான்

உருப்படியாத் தருமஞ்செய்யி..

 

சொர்க்கத்துக்கு வழியிதுண்ணு

சொன்னாலும் அடுத்தவங்கிட்ட

வாங்கிறது நல்லதில்ல..

 

சொர்க்கமுண்ணு இருக்கோயில்லியோ,

அந்த

சொர்க்கமே கெடைக்கல்லண்ணாலும்

ஏழயளுக்குத் தருமஞ்செய்யிறது

எப்பவுமே நல்லதுதான்..

 

அதால,

தருமஞ்செய்யி தருமஞ்செய்யி

வறியவரு வாழத்தான்

உருப்படியாத் தருமஞ்செய்யி…!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.