இறையியல் சிந்தனைகள்: ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும்: 11 – உயிரிகள் உயிரற்றவற்றை விட பலம் மிக்கவர்கள் எனலாமா?

0

 

 

அவ்வைமகள்

 

வள்ளலார், ஸ்டீவ் ஜாப்ஸ் இருவருமே மிகச்சிறந்த ஆராய்ச்சியாளர்கள்; பிறவியிலேயே உண்மையான ஆய்வுணர்வு கொண்டவர்கள் எவரும், கடந்ததையும், கடப்பதையும், கடக்கப்போவதையும் அக்கு வேறு ஆணிவேறாய் நோண்டித் துருவி, பகுத்து, வகுத்து, துண்டங்களாய்க் கூறுபோட்டு, பிறர் காணுமாறு அவற்றை காட்சிக்கு வைத்து விடுவார்கள். இந்த ஆய்வுத்திறனால், அவர்கள் போற்றப்பெறுவது உண்டு. அனால் வெகு பெரும்பாலும் இவர்களது ஆய்வுகள் அவர்கள் வாழும் காலத்தில் உணரப்படாது – போற்றப்ப்படாது என்பது மட்டுமல்ல இகழ்வுக்கும் தூற்றுதலுக்கும் அவர்கள் இலக்காகவதும் ஆகும். வெகு பின்னாளில் அவர்கள் மறைவுக்குப்பின் மட்டுமே அவர்களது சிந்தனா சக்தியும், அதனால் அவர்கள் எத்தனை தீர்க்கதரிசகளாக இருந்தனர் என்பதும் அவர்களை பட்ட கட்டமும் நட்டமும், முழுமையும் வெளிவரலாகும். இவ்வகையில் வள்ளலார், ஸ்டீவ் ஜாப்ஸ் இருவருமே அவர்கள் வாழ்ந்தக் காலம் கடந்தபின் உணரப்படுவது காண்க.

ஸ்டீவ் ஜாப்ஸ் மேற்கொண்ட ஆய்வு பற்றி சிலபல நாம் அறிவோம் எனினும், அதுபற்றி விவரமாக விரைவில் பேச இருக்கிறோம். முதலில் வள்ளலாரின் ஆய்வுச் சிந்தையைச சற்றே கவனிப்போம்.

சென்ற பகுதியில் நாம் கண்ட சமயம் என்பது யாது என்கிற ஆய்வைத்தொடர்ந்து, சமயமெனும் அறிவியல் எத்துனை உயர்வானது – எத்தனைத் திடமானது – எத்தனை வேரோட்டம் கொண்டது – எத்துணை நீரோட்டம் கொண்டது, எத்தனை உயிரோட்டம் கொண்டது என்பதை இப்போது கவனிப்போம்.

இந்த அலசலை எளிது படுத்துவதற்காக, நாம் வாழும் பூமியின் சூரிய குடும்பத்தை மட்டும் இப்போது சிந்திப்போம். நமது சூரிய குடும்பம் பால்வண்ணப் பாதை எனப்படும் நாட்டிய மேடையில் அமைந்திருக்கிறது. இந்தப்பால்வண்ணப் பாதையில் மட்டும் 200 பில்லியன் அதாவது 2000 கோடி சூரியன்கள் உள்ளன என்பது ஒரு அறிவியல் மதிப்பீடு. இத்தனை சூரியன்களில், நமது சூரியன் ஒரு சூரியன் அவ்வளவே. நமது சூரிய குடும்பம் என்பது ஞாயிறு என்று நாம் அழைக்கும் சூரியனை மையமாக வைத்து, ஒன்பது கோள்கள் தன்னில்தான் சுழன்றபடி, சூரியனை வலம் வந்து கொண்டிருக்கின்ற ஒரு குடும்பமாகும். இந்தக் கோள்களை இருவகையாகப் பிரிக்கலாம்: உடுக்கோள் பட்டைக்கு (Asteroid Belt) உள்ளீடான கோள்கள் மற்றும் உடுக்கோள் பட்டைக்கு வெளியீடான கோள்கள் என்று.

உடுக்கோள் பட்டை புதனுக்கும் வியாழனுக்கு இடையில் உள்ளது. பெரும்பாலான உடுக்கோள்கள் இந்த உடுக்கோள் பட்டையில் சுழன்று கொண்டிருப்பினும், லட்சக்கணக்கான உடுக்கோள்கள், வியாழனின் வட்டப் பாதையிலேயே பொருந்தியவையாய், வியாழனுக்கு கிழக்கே 60 டிகிரியிலும், மேற்கே 60 டிகிரியிலும் பொருந்தியிருக்கின்றன. ஆக, நம் சூரிய குடும்பத்தில் நாம் காணுவது என்னவென்றால், புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், உடுக்கோள் பட்டை, வியாழன், சனி, நெப்ட்யூன், ப்ளூட்டோ ஆகிய கோள்கள் ஒரு சரஅடுக்காய் தம்மைத் தகவமைத்துக்கொண்டு சூரியனைச் சுழன்றபடி சுற்றிவருகின்றன என்பதே. இந்த அமைப்பில், ஒவ்வொரு கோளுக்கும், சுழலுதல் (spinning on its own axis) மற்றும் சுற்றுதல் (revolution), எனும் இருபெரு இயக்கங்களும், எடை, அளவு, வேகம், ஒளி, எத்தனைத் துணைக்கோள், சூரியனிலிருந்து எத்தனைத் தொலைவு ஆகிய ஆறு அளவீடுகளுமாக எண்குணங்கள் உள்ளன.

சிறிது காலத்திற்கு முன்பு -ப்ளூட்டோவை, கோள் அழைத்த அறிவியல் இப்போது அது கோள் இல்லையென்று தன்னைத் தானே குழப்பிக்கொள்ளும் கோளாறு ஏற்பட்டிருக்கிறது. ஆனால், இந்திய அறிவியலோ அன்றே ப்ளூட்டோவை கோள் என்று மட்டுமே உறுதி செய்தது; அதனை இன்றும் என்றும் கோளாகவேயே நிலைநிறுத்தி வருகிறது.

ராகு- கேது என இரட்டைக்கோள்களாய் நெப்ட்யூனையும் ப்ளூட்டோவையும் காட்டிய இந்தியப் பண்டை அறிவியலை எண்ணுந்தோறும் எண்ணுந்தோறும் புதுப்புது உவகை பிறக்கும். அதுபோன்றே இன்னொரு அறிவியல் குழப்பத்தையும் அன்றே, பாரதத்தின் பண்டைய விஞ்ஞானம் தெளிந்தேற்றியது; அதுதான் நிலவு. பூமியைச் சுற்றி வருவதால் நிலவை ஒரு துணைக்கோள் என்று கொள்வது பொருத்தம் எனினும், அது உற்பத்தியான விதத்தை வைத்துப் பார்த்தால் அதனை ஒரு கோள் எனக் கொள்வதே தகும் என்பது பாரத விஞ்ஞானத்தின் பார்வை. ஏனெனில், பிற கோள்களின் துணைக்கோள்கள் உருவானது போல நிலவு உருவாகவில்லை

முதலில் தோன்றிய பூமி (சிறிதாய் இருந்தது), ஒரு வலிய உடுக்கோளால் மோதப்பட, அப்போது அவ்வுடுக்கோள் பூமியுடன் இணைந்து, பெரிதாகியது. தொடர்ந்து அது பிளவுற்று நிலவாகவும் இப்போதைய பூமியாகவும் மாறியது. எனவே ஒரே அன்னையின் இரு குழந்தைகள் என்றவாறு இருப்பதால் நிலவை, கோளாக பாவித்தது பாரத விஞ்ஞானம். பிற கோள்களின் துணைக்கோள்கள் வேவ்வேறு உருவாகின என்றால் பெருவெடிப்பின் போது, துண்டங்களும், துகள்களும், வாயுக்களும் சேர்ந்து லட்டு உருண்டை போல மாறி அவை உருவாகின.

இது நிற்க.

மேற்கண்ட விளக்கித்திலிருந்து, கோள்களை ஆதிமூலத்தின் பகுதியாய் எடுத்துக்கொள்வது பொருத்தமாய்த் தெரிகிறது அல்லவா?

இவ்வகையில் தொடர்ந்து சிந்தனையை செலுத்தும்போது நமக்குப் பொறிதட்டுவது கோள்கள் வெற்றுப் பொருட்கள் அல்லவே என்பதே! கோள்களில் பலபொருட்கள் உள்ளனவே! மலைகள், பள்ளத்தாக்குகள், பாறைகள், மண், கல், தூசி என ஓராயிரம். பூமியில் கூடுதலாக கடல்கள், நதிகள், தாவரங்கள், விலங்குகள் எனப் பல்பல்லாயிரம்!

ஒரு கோள் இயங்குகிறது என்றால் அக்கோளில் இருக்கிற பொருட்களும் தாமே இயங்குகின்றன என்பது அடிப்படை. எனவே கோள்கள் ஆதிமூலத்தால் இயங்குவன என்றால், கோள்களாம் பருப்பொருட்களுக்குள் உள்ள பொருட்கள் யாவுமே ஆதிமூலத்தின் இயக்கத்தில் தானே இயங்குகின்றன!

இப்போது பொருட்களைப் பற்றி கொஞ்சம் சிந்திப்போம்:

பொருட்கள் இருவகைப்படும் என அறிவோம்: உயிருள்ளவை; மற்றும் உயிரற்றவை. உயிரியா இல்லையா என்கிறது அல்லாமல் இவ்விரண்டையும் பார்த்தால், மூலத்தின் -அதாவது கோளின் இயக்கமன்றோ இரண்டிலும் உள்ளது. உயிரியின் இயக்கம் பார்க்க ஒருவகையாக இருக்கலாம்; உயிரற்றதின் இயக்கம் பிறிதொரு வகையாய் இருக்கலாம்; எனினும் இரண்டுமே ஒரு மூலத்தின் பிள்ளைகள் தாமே! அந்த மூலம் எது? அதுதான் கோள் – அந்தக்கோள் தான் இரண்டின் வசிப்பிடமுமே! அந்தக் கோளின் தரையிலேதான் உயிரிகளும் உயிரற்றவைகளும் நின்றும், அமர்ந்தும், கிடந்தும், பறந்து, ஊர்ந்தும், நகர்ந்தும், பறந்தும் வசிக்கின்றன. ஆக, தரை அல்லது நிலம் என்கிற ஆதாரமின்றி உயிரோ உயிரற்றவையோ எக்கோளிலும் வசிக்க இயலாது என்பது தானே உண்மை!

சலனம் என்பது உயிரிகளின் இயக்க அடையாளம் என்கிறது அறிவியல். அதில் விலங்கினங்களுக்கு ஓட்டுமொத்தமான இடப்பெயர்வு சலனம் உண்டு என்றும் (இதனை locomotion என்பர்) தாவரஙகளுக்கு ஒட்டுமொத்த இடப்பெயர்வு சலனம் இல்லை என்பதும் ஒரு அறிவியல் புரிதல். சலனத்தை வைத்துக்கொண்டு உயிருள்ளது உயிரற்றது என வகைப்பாடு நிகழ்த்திய அறிவியல் உயிரிகளுக்கு வளர்சிதை மாற்றம் என்று ஒன்று இருப்பதாகவும் உயிரற்றவற்றுக்கு வளர்சிதை மாற்றம் இல்லை என்றும் கூறுகிறது.

அப்படியென்றால் உயிரற்றவை வளர்வதில்லையா சிதைவதில்லையா? உயிரற்றவை சலனமிடுவதில்லையா? என்கிற கேள்வி எழுகிறது. இந்தக் கேள்விக்கு, இன்றிய நவீன அறிவியல் உயரற்றதென வகைப்படுத்தியிருக்கும் காற்று, நெருப்பு, நீர் ஆகியவனற்றைக் கொண்டு ஆராய்வோம்.

நீரும், நெருப்பும், காற்றும் சலனமுடையவை – அதுவும் அவை சுயமான சலனம் உடையவை – நிரந்தர சலனம் உடையவை – அவை ஒருக்காலும், உயிரிகளைப்போல உறங்கி ஓய்வெடுப்பவை அல்ல. மேலும், ஒரு உயிரியை உயிரியாய் அடையாளம் காட்டுபவை சூடும், நீரும், காற்றும் மட்டுமே! ஒருவனின் சுவாசம் நின்றுவிட்டதென்றால், அவனின் சரீரம் நீரைப்பருகி, நீரைச் சிறுநீராய் வெளியேற்றவில்லையென்றால், அவனின் உடல் சூடின்றி சில்லிட்டு விட்டதென்றால், அவனை உயிரற்ற ஜடம் என்று தானே அழைக்கிறோம்?

ஆக, ஒரு உயிரிக்குள் நீரும், காற்றும், சூடும் சலனமிடவில்லையென்றால் அந்த உயிரி உயிரற்றதாய் கொள்ளப்படுகிறது. எனவே காற்றும், நீரும், சூடும் உயிர்மைத் தன்மை உடையன என்று கொள்வதுதானே பொருத்தம்? உயிருக்கு உயிர் அளிப்பவை என்ற வகையில் சூடும், நீரும், காற்றும் முதன்மை உயிரிகள் ஆகின்றன. நாம் உயிர்கள் என்று தம்பட்டம் அடித்துச் சொல்லும் அசடுகள் உண்மையில் உயிரிகள் அல்ல என்பது இப்போது தெற்றென விளங்குகிறது அல்லவா?

அதேபோல், நீரும், நெருப்பும், காற்றும் என்றும் வளர்பவை தேய்பவை – இவையும் வளர்சிதை மாற்றங்கள் தாமே! காற்றையும், நெருப்பையும், நீரையும் உயிரித்தன்மை கொண்டவை என்று சொல்ல என்ன தடை? அதே போல உயிரிகளுக்கு வசிப்பிடமாய் இருப்பதால் நிலமும் உயிர்த்தன்மை உடையதே!

சூடும், நீரும், காற்றும் ஆகாயத்தில் வியாபிப்பவை, ஆகாயத்தில் உற்பத்தியாபவை. ஆகாயம் என்பது கோளின் எல்லாத் திசைகளிலும் ஒட்டுமொத்தமாய் கபடமற்று தழுவிக் கிடப்பது. வெளி, கோளைத் தழுவும் சங்கமத்தின் சாட்சியே ஆகாயமென்பது. ஆக, ஆகாயமென்பது, கோளில் பொருத்தப்பட்டுள்ள வெளியின் வாசல். எனவே உயிர்மைப்பொருட்களின் பிறப்பிடம் எனும் வகையில் ஆகாயமும் ஒரு உயிர்மைப்பொருளேயாகிறது!

ஆக, நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், ஆகிய ஐந்தும் உயிர்த்தன்மை உடையவை என்பதை நம்மால் பரிபூரணமாக உணரமுடிகிறது.

சரி, உயிரற்ற பொருட்களைக் கொஞ்சம் இப்போது கவனிக்கலாமா? மலை மேல் அருவிகளும் – மலைக்குள் சுனைகளும், மலையடிவாரத்தில் நதிகளும் சலனமிடவில்லையா?

மலை மேல் காற்றும், மலைக்குள் காற்றும், மலையின் கீழ் காற்றும் சலனமிடவில்லையா? மலைமேல் சூடும், மலைக்குள் சூடும், மலையின் கீழ் சூடும் சலனமிடவில்லையா? மண்ணுக்குள்ளும், மண்ணின் மேலும் காற்றும், நீரும், சூடும் நித்தமும் சலனித்துக்கொண்டிருக்கின்றனவே! கோளின் உள்நடுவே இன்னும் ஆற்றொணா வெப்பம் இன்னமும் எப்பவும் தகித்துக்கொண்டிருக்கிறதே!

மேலும், குன்றுகளும் மலைகளும் தொடர்ந்து வளருகின்றனவே. இமயமலை மட்டும் ஒவ்வொவொரு ஆண்டும் 0.2 அங்குலம் வளருகிறதே! பல குன்றுகள் காலத்தால் குறைந்தும் கரைந்தும் மறைந்து போகின்றனவே! பாலைவனத்தில் மணல்மேடுகள் வளர்வதும் சிதைவதும் நித்தம் நடக்கிறதே – இவையெல்லாம் வளர்சிதைமாற்றங்கள் இல்லையா? இவையெல்லாம் உயிர்மை நிகழ்வுகள் இல்லையா?

சொல்லப்போனால் காற்றையும், நெருப்பையும், நீரையும் உயிருள்ளதா உயிரற்றதா என்று வகைப்படுத்த முயன்றபோது அறிவியல் அப்படியே ஆடிப்போய் விட்டது. இவற்றை வகைப்படுத்தும் வல்லமை அதற்கு இல்லை. அறிவியலின் திறன் அம்மட்டே! அறிவியலின் இந்தக் கையலாகாத்தனத்தை என்னென்பது? ஆக அறிவியல் வகைப்பாட்டில் பற்றாக்குறைகள், குளறுபடிகள் இருப்பதை உணர்க.

இது நிற்க.

சுருங்கச் சொல்லின், உயிர்மைத்தன்மை உடைய காற்றும், நீரும், சூடும் – மும்மாலையாய், நிலத்துடனும், ஆகாயத்துடனும் ஒருங்கிணையும்போது மட்டுமே அங்கே கோளில், உயிர்மைச் சலனம் சுழன்று சுழன்று ஜீவித்து நிற்கிறது எனக் காண்கிறோம். ஒரு கோளே உயிர்மைத்தன்மை உடையதாக இருக்கும்போது அதில் உள்ள யாவற்றுக்குமே உயிர்மைதன்மை இருப்பதாகத்தானே பொருள்?

இந்நிலையில், உயிருள்ளவைக்கும் உயிரற்றவைக்கும் நாம் இதுகாறும் நாம் கூறி வந்திருக்கிற வேறுபாடுகள் – விளக்கங்கள் யாவும் அர்த்தமற்றவையாகி விடுகின்றன அல்லவா?

இருசார் பொருட்களுக்கும் ஆதிமூலம் ஒன்று தான் என்பது விளங்குகின்றது அல்லவா?. உயிருள்ளதும் பரம்பொருளே! உயிரற்றதும் பரம்பொருளே என்பதும் புரிகின்றது அல்லவா!

மேலும், நம்மை மிகவும் ஆச்சரியப்படுத்தும் விடயம் என்னவென்றால், உயிரற்றவை நிலைத்ததாகவும் உயிருள்ளவை மடிவதுமாக இருக்கின்றன என்பதுதான்! மடிகிற உயிரிகள் யாவும் ஜடமாகின்றன. நடமே ஜடம்! என்னே இந்த வேடிக்கை என வியந்து வியக்கிறோம்.

அப்படியென்றால், உயிரிகள் ஜடமாய் முடிவதால், ஜடத்திலிருந்து தான் உயிரிகள் பிறந்தாக வேண்டும் என்பது வெளிச்சம். ஆக, ஜடத்திலிருந்து உயிரிகள் பிறந்து மீண்டும் அவை இறப்பில் ஜடமாகின்றன என்பதே தான் உண்மையல்லவா? எனவே, உயிரிகளை ஜடத்தின் உட்பிரிவு என்று கொள்வது தானே சாலப்பொருந்தும்?

இவாறு நாம் பேசும்போது, உயிரற்ற ஜடம் என்று நாம் சொல்லும் ஒவ்வொன்றினுள்ளும் ஒரு உயிர்ப்பொறி இருந்தவாறே தான் இருக்கிறது என்பதுதானே இதன் பொருள்? அந்த உயிர்ப்பொறி, காற்று, சூடு, நீர் ஆகிய மூன்றையும் உடலுள் செலுத்தியும் வெளித்தள்ளியும் வேலை செய்தவாறு இருக்கும் வரை அந்த ஜடம் உயிரி எனும் சொல்லும்படியான அடையாளங்களுடன் சலனம் செய்கிறது அன்றேல் அச்சலனம் ஓய அது சவமாகிவிடுகிறது என்று கொள்வதுதானே பொருத்தமாக இருக்கும்?

சரி இப்போது ஒரு வினாவை எழுப்புவோம்: கோளில் உள்ள ஒவ்வொவொரு உயிரியிலும் உள்ள அந்த நுட்பமான உயிர்ப்பொறியை இயக்கும் ஆற்றல் எங்கிருந்து வருகிறது? ஜடப்பொருளிலிருந்து வந்ததா? சாத்தியம் இல்லை. ஏன்? ஜடப்பொருளிலிருந்து வருவதாக இருந்தால் எல்லா ஜடப்பொருட்களுமே தாமே உயிரிகளாகிவிட ஆகிவிடமுடியுமே! அல்லது அவைகளை நாம் உயிரிகளாக்கிவிட முடியுமே! அது அவ்வாறு நடப்பதில்லை அல்லவா? – நடத்தப்பட முடிவதில்லை அல்லவா?

எனவே உயிரற்ற பொருளும் உயிருள்ள பொருளும் எல்லாவகையிலும் ஒன்றே தான் என்றாலும், உயிரற்ற பொருளில் இல்லாத ஒன்று உயிரிகளிடம் இருக்கிறது – அதுதான் உயிர்ப்பொறி என்று பொருள் கொள்ளலாமல்லவா?

அப்படியெனில், உயிர்ப்பொறியை இயக்கும் ஆற்றல் ஜடத்திற்குப் புறத்தேஇருந்து வருவது என்பதுதானே பொருள்?

உயிர்ப்பொறியை விசைக்கவல்ல ஆற்றல் ஜடத்தில் இல்லையென்றால் அது கோளில் இல்லை என்பது பொருள் – கோளில் இல்லையென்றால் – அது ஆகாயத்தில் இல்லையென்று பொருள் – ஆகாயத்தில் இல்லையென்றால் – அது வெளியில் இல்லை என்று பொருள் – வெளியில் இல்லையென்றால், அது பரவெளியில் இல்லை எனலாமா? பரவெளியில் இல்லாத ஒன்று உயிருள்ள ஒவ்வொன்றினுள்ளும் இருக்கிறது என்றால் அது பரவெளியின் மூலமான ஆதிமூலமாம் ஆதிப்பரவெளியாம்பரம்பொருளிலிருந்து மட்டும் தான் வர முடியும் என்று தெளிவுக்கு வருகிறோம்.

எனவே, உயிரிகளையும் உயிரற்றவற்றையும் ஓத்தே படைத்தினும் சற்று கூடுதலான ஒரு சங்கதியை ஆதிமூலமாம் பரம்பொருள் உயிரிகளிடம் சேர்த்த வித்தையை என்னென்பது.

இந்த உயிர்ப்பொறி பொருத்தப் பட்டதால், உயிரிகள் உயிரற்றவற்றை விட பலம் மிக்கவர்களானார்கள் எனலாமா?

உயர்ந்தவரானார்கள் எனலாமா? என்று வினவத்தோன்றுகிறது அல்லவா?

நல்ல கேள்விகள் தாம்!

மேலும் பேசுவோம்!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *