க.பாலசுப்பிரமணியன்

 

உணவும் வாழ்க்கை நலமும்

ஒருவரின் வாழ்வு சிறப்புற அவருடைய உடல்நலமும் மனநலமும் இணைந்து சிறப்பாக இருத்தல் மிக அவசியமானது. இரண்டில் ஏதேனும் ஒன்று தொய்ந்து இருந்தாலோ அல்லது அதில் குறைபாடுகள் இருந்தாலோ வாழ்க்கையை நல்ல பாதையில் எடுத்துச் செல்லவும் வெற்றிப்படிகளில் கால்கள் வைப்பதிலும் தடங்கல்கள் இருப்பது உறுதி. ஒரு மனிதனின் ஆரோக்யத்தைப் பற்றி விளக்கும் புத்தத் துறவி தலாய் லாமா அவர்கள் கூறுகின்றார் ” வாழ்க்கையில் நாம் நம்முடைய உடல்நலத்தை செலவழித்தும் வீணடித்தும் பணத்தைச் சேர்க்க முயல்கின்றோம். பின்பு நாம் சேமித்த பணத்தை முழுவதுமாக நம்முடைய உடல் நலத்தையும் ஆரோக்கியத்தையும் காத்துக்கொள்ளச் செலவழிக்கின்றோம்.” இது எவ்வளவு உண்மையான வாக்கு! உடல் நலத்தைப் பற்றி பேசும் பொழுது அதை வெறும் உடற் பயிற்சிகளால் மட்டும் சிறப்பாக வைத்திருக்க முடியாது. நாம் உண்ணுகின்ற உணவு, உண்ணும் முறைகள், நமது உணவைச் சார்ந்த பழக்க வழக்கங்கள், உடல் சுகாதாரம் ஆகிய பலவற்றால் நமது உடல் நலம் பாதிக்கப் படுகின்றது. பழங்களையும் காய்கறிகளையும் கீரை வகைகளையும் மற்றும் சிறப்பாக வளர்க்கப்பட்ட பயிரினங்களிலிருந்து கிடைக்கும் தானிய வகைகளையும் உணவாக ஏற்று பல்லாண்டு காலம் வாழ்ந்து வந்த நாம் இப்பொழுது வேதியல் பொருட்களால் பயிர்ப்பிக்கப் பட்ட தானிய வகைகளை மட்டுமின்றி, உடலுக்கு ஒவ்வாத பல வேதியல் பொருள்களால் தயாரிக்கப்பட்ட உணவுப்பண்டங்களை உட்கொண்டு உடல் நலத்தை கெடுத்துக் கொண்டு வருகின்றோம்.

இதுபற்றிய பலவித ஆரய்ச்சிகள் உலக அளவில் மேற்கொள்ளப்பட்டது மட்டுமின்றி, இவற்றால் நமக்கு ஏற்படும் பலவிதத் தீங்குகளை பற்றியும் விளக்கப்பட்டு வருகின்றன. மற்றும் உண்ணும் உணவுக்கும் நம்முடைய உடல் சக்திக்கும் மூளையின் வளர்ச்சி மற்றும் ஆற்றலுக்கும் உள்ள நேரடித் தொடர்பு பற்றியும் பல்வேறு ஆரய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் மூலமாக எவ்வாறு நாம் சில வகையான “துரித உணவுகளால் ” நம்முடைய உடலுக்கு கேடு விளைத்துக்கொண்டு வருகின்றோம் என்பது தெள்ளத்  தெளிவாக விளங்குகின்றது

 

தன்னுடைய மூளை சார்ந்த கற்றல் என்ற புத்தகத்தில் மூளை-நரம்பியல் மற்றும் கற்றல் பற்றிய ஆராய்ச்சியாளர் பென் ஜெசென் (Dr. Ben Jessen) என்பவர் கூறுகின்றார் “உங்களுடைய மூளையின் திறனை நீங்கள் உண்ணும் உணவு மூலம் மேலும் சிறப்பாக செயல் படுத்த முடியும். நீங்கள் உண்ணும் உணவு உங்கள் மூளையின் கீழ்கண்ட திறன்களை பாதிக்கின்றது:

1.உங்களுடைய மூளையின் சமநிலை

  1. உங்கள் உணர்வுசார்ந்த முடிவுகள் மற்றும் சிந்தனைகள்
  2. உங்களுடைய சிந்திக்கும் திறன் மற்றும் புத்திசாலித்தனம்
  3. உங்களுடைய புத்திகூர்மை
  4. உங்களுடைய ஞாபகசக்தி

மேலும் அது உங்களுடைய மூளையை இளமையுடன் வைத்திருக்க உதவுகின்றது.”

 

(The food you eat directly affects the performance of your brain. It has been proven that by eating the right food, you can boost your IQ, improve your mood, be more emotionally stable, sharpen your memory and keep your mind young-  Ben Jessen)

அது மட்டுமல்ல, மூளைக்குத் தேவையான சத்தான உணவுகளை உண்பதன் மூலம் மூளையின் செறிவு, கவனம் மற்றும் கூறிய சிந்தனைத் திறன் இவைகளை வளர்த்துக்கொள்ள முடியும் என்று ஆணித்தரமாகக் கூறுகின்றார். மூளைக்குத் தேவையான மூன்று முக்கியமான உள்ளீடுகள்: சத்தான உணவு, போதுமான நீர், மற்றும் நல்ல அளவில் ஆக்சிஜன் வாயு. எனவே உடல் நலத்தையும் மனநலத்தையும் பேணுவதற்கு நம்முடைய உணவுப் பழக்கங்களின் மீது கவனம் செலுத்துதல் மிக அவசியம்.

தற்காலத்தில் இளைய தலைமுறையின் உணவுப் பழக்கங்கள் மிகவும் அதிகமாகப் பாதிக்கப்பட்ட அளவில் உலக நாடுகள் அவர்களைத் தாக்கும் பல புதிய நோய்களை தடுப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. உதாரணமாக இளம் வயதில் சர்க்கரை நோய், (Juvenile Diabetes) உடலில் அதிகமான கொழுப்புச் சத்துக்கள், (Obesity)  வேதியல் பொருட்கள் கலந்த உணவுகளால் ஏற்படும் வயிறு மற்றும் உடல் கோளாறுகள், (Intestinal disorders), மூளை பாதிப்புகள் (psychological disturbances) ஆகியவை உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்திருக்கின்றன. வருங்கால சமுதாயத்தின் ஆரோக்கியத்தைப் பற்றிய கவலை வெளிப்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் நாம் என்ன செய்ய வேண்டும்?

 

நமது உடலுக்கு சிறப்பான வாழ்விற்கும் நாமே பொறுப்பு என்பதை உணரவேண்டும். நமது உடல் நலத்தையும் நமது மன நலத்தையும் பாதுகாப்பது நாம் நமக்கு செய்துகொள்ளுகின்ற ஆன்மீகக் கடமை என்பது மட்டுமின்றி அது நமது சமுதாயக் கடமை என்பதையும் அறிந்து செயல்பட வேண்டும். நமது உணவுகளுக்கும் நமது உணவுப் பழக்கங்களுக்கும் நாமே பொறுப்பு ஏற்றுக்கொள்ளவேண்டும்.

திருவள்ளுவரின் கீழ்கண்ட குறள் நமக்குப் புகுத்தும் அறிவை நாம் கருத்தில் கொள்ளுதல் நமக்கு நலம் தருமே !

மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்

ஊறுபாடு இல்லை உயிர்க்கு.

நமது வாழ்வை நாம் நல்லபடியாக வாழ்ந்து பார்க்கலாமே !

(தொடரும்)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *