குறளின் கதிர்களாய்…(215)
-செண்பக ஜெகதீசன்
பலகுடை நீழலுந் தங்குடைக்கீழ்க் காண்ப
ரலகுடை நீழ லவர். (திருக்குறள் -1034: உழவு)
புதுக் கவிதையில்…
உழவின் பயனாய்
நெல்லினைப் பெற்றிருக்கும்
வள்ளன்மை மிக்கோர்,
பல மன்னர்தம்
குடைக் கீழுள்ள
நிலங்களையெல்லாம்
தம்வேந்தரின் குடைக்கீழ்
வரக் காண்பர்…!
குறும்பாவில்…
உழவினால் நெல்விளைவித்த நல்லோரால்
பிறநாட்டு மன்னர்தம் நிலமெலாம் வந்திடும்
தன் நாட்டு மன்னர் குடைக்கீழ்…!
மரபுக் கவிதையில்…
வயலில் உழைத்துநெல் விளைவித்த
-வள்ளல் தன்மை கொண்டோரெலாம்
சுயமாய்க் காண்பர் நாட்டினிலே
-சொத்தாய்ச் சேர்ந்த நிலமெல்லாம்
அயலுள நாட்டு மன்னர்கள்
-ஆட்சி விட்டு மாறிவந்தே
பயனுள வகையில் தம்மன்னர்
-பாது காப்பில் சேர்ந்திடுமே…!
லிமரைக்கூ…
நெல்நிறைக்கும் உழவர்தம் உழைப்பு,
நந்நெஞ்சால் காண்பர் மாற்றரசர் நிலமெலாம்
தம்மரசர் நிலமாகிட அழைப்பு…!
கிராமிய பாணியில்…
பாரு பாரு நல்லாப் பாரு
ஒலகத்தில ஒசந்த தொழிலு
ஒழவுத் தொழிலு பாரு…
ஒழவுத்தொழிலச் செய்து
நெல்லு நெறய வச்சிருக்கும்
நல்லவனுக்குத் தெரியும்,
அடுத்த நாட்டு ராசாக்களோட
நெலமெல்லாம்
அப்புடியே வந்திடுமே
அவன் நாட்டு ராசாகிட்ட…
அதால
பாரு பாரு நல்லாப் பாரு
ஒலகத்தில ஒசந்த தொழிலு
ஒழவுத் தொழிலு பாரு…!