படக்கவிதைப் போட்டி (163)
பவள சங்கரி
அன்பிற்கினிய நண்பர்களே!
வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?
கோபி சங்கர் எடுத்த இந்தப்படத்தை திருமதி ராமலஷ்மி ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து போட்டிக்காகத் தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.
இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (02.06.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.
ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.
போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்
தெய்வதரிசணம்!!
———————————-
#கொஞ்சும்பிஞ்சின் குமிழ்நகையில்
நெஞ்சம் அமிழ்ந்துநெகிழ்கிறது!!
வெஞ்சாமரமாய் வீசிடும் கரம்பட்டு
பஞ்சாமிருதருசியாய் இனிக்கிறது!!
#அஞ்சாப்புபடிச்ச நெனப்புலகிடந்து
கஞ்சாடையால கலங்குது மனசு!
வஞ்சிரம்போல வந்திங்குதித்திட்ட
வஞ்சிக்கொடிதான்இனியெம்வாழ்வு!
#மிஞ்சி மிஞ்சிப்பணமிருந்தாலும்
இஞ்சு இஞ்சா மகிழ்ச்சி தருஞ்சொத்து
நஞ்சைக்கூடஅமுதமாக்கும் மருந்து –
மஞ்சக்கிழங்காப்பிறந்த சிசு தானே!!
#கெஞ்சினாலும் கிட்டாத வரமெதுனா
தஞ்சம்மழலையிடம்அடைவதொன்றே!
எஞ்சியுள்ள எதிர்காலப்பலன் எதுனா
சஞ்சீவியாய் சிறப்பாய் வளர்ப்பதுவே!
#ஆஞ்சு அறிஞ்சு உயர்ந்திருந்தாலும்
சாஞ்சுபோனது உலகில் இல்லறம்!
தேஞ்சு போன இகபர சுகங்களுக்குள்
மீஞ்சிருப்பது பிள்ளைப்பேறுமட்டும்!
#ஈஞ்ச இலைகள் சித்திரை மாதத்தில்
காஞ்சு சருகாய் விழுவது இயற்கை!!
பாஞ்சு விழுகிற மழைத்துளிகளாக
ஓஞ்சவர்களுக்குஉயிரோ குழந்தை!!
(ஏ.ஆர்.முருகன்மயிலம்பாடி…
பவானி…ஈரோடு…
9442637264…..)
————————————————————-
பெண் பிள்ளை
பெண் மனம் மகிழ பெண்ணைப் பெற்றாள்
ஆண் மனம் மகிழ் ஆனைப் பெற்றாள்
ஏனோ உலகில் பாசத்தை பிள்ளைகளிடம் வைத்தான்
பெண்ணும், ஆணும் சமம் என உலகில் உணரவைத்தான் !
மகளின் பாசம் என்றும் தந்தையிடத்திலே
மகனின் பாசம் என்றும் தாயினிடத்திலே
இதுவே இன்றைய பாசவலையாய் தொடர்கிறது
தாய்தந்தையின் நேசக்கரங்கள் உதவுகிறது !
மகளே, உன் பிஞ்சு கால்களால் என்னை உதைக்கின்றாய்
என் நெஞ்சத்தையும், இதயத்தையும் நெகிழச்செய்கின்றாய்
உன் பிஞ்சு கால்கள் என் மார்பில் நடனமாடுதே
என் உள்ளம் மகிழ்ந்து திளைக்குதே !
களைப்புடன் நான் வரும்போது உன் கண் என்னைத் தேடுதே
உன்னை தூக்கச் சொல்லி என் கைகளை அழைக்கின்றதே
உன் கைகள் சாமரம் வீசி, என் களைப்பினை நீக்குதே
உன் கருவிழிக் கண்கள் என்னை அடிமையாக்குதே !
உன்னை உயரே தூக்கும்போது சிரித்து என்மேல் உமிழ்கின்றாய்
அதனை உமிழ்நீரை அமிர்தமாய் என்மேல் தெளிக்கின்றாய்
உன் தண்டைக் கால்களை என் முகத்தின் மேல் பதிக்கின்றாய்
என் வஞ்சிக்க கொடியே, உன் பிஞ்சு காலால் மகிழ்வூட்டுகின்றாய் !
பெண் மகள் என்றும் செல்ல மகள் ஆவாள்
திருவிழா காலங்களில் மஹாலக்ஷ்மியாய் உலா வருவாள்
தந்தைக்கு என்றும் தாதியாய் இருந்திடுவாள்
தரணியிலே மகளே என்றும் போற்றப்படுவாள் !
ரா.பார்த்தசாரதி
உன் வாய்மொழி
வார்த்தைகள்…
என்ன..
புதுவித அகராதியா..?
அர்த்தங்கள்
இல்லையென்ற போதும்
அதை ரசிக்காமல்
இருக்க முடியவில்லை….
இனி
என் கண்ணீரை
துடைக்க
கைக்குட்டை
தேவையில்லை…
உன்
கைகளே போதும்..
அமைதி எனும்
அற்புதத்தீவை
கண்களில் கொண்டு அவதரித்தாயா…!
உன்னை அனுகும்
ஒவ்வொரு முறையும்
வாஞ்சையுடன்
பிடிபடுகிறது..
என் மனம்…
தொட்டு பேச
வார்த்தைகள்
இல்லை…
விட்டு விலக
மனமும் இல்லை…
உன் ஈறுகள்
பதித்து ஈரமாக…
ஏங்குது என் கன்னம்…
உன் இதழ் பதித்து
நீ பேச
தவிக்குது என் இதயம்…
மண்ணில் கால்
புதைய நீ ஓட…
அங்கே..
தெரிவது என்ன
காவியம் பேசும்
ஓவியமா..?
ஒரே ஒரு முறை
தான்..
உன்னை தொட்டு
தூக்கி இருப்பேன்…
பிறகு ஏன்..?
என் கரங்கள்
கவி எழுத
தயங்குகிறது…
ஓ….
நான் எழுதும்
கவியை விட
அரத்தமுள்ள கவிதையாய்
உன்னை
கண்டு கொண்டதா
என் கரங்கள்…!!!
தந்தையின் பெருமிதம்::::::: ஆண்டவன் அருளாலே நான் பெற்ற அஞ்சுகமே!
அப்பா என்றழைத்து ஏற்றம் தந்தவளே!
உன்னை சுமக்கையிலே சிந்தை மகிழுதடி!
அன்னை சுமந்ததற்கு உள்ளம் நன்றி சொல்லுதடி!
மகளாய் நீ பிறந்த பின்னே வாழ்க்கையின் அர்த்தம் புரிந்ததடி!
நீ எட்டி உதைக்கையிலே கர்வம் தொலையுதடி!
நீ முத்தம் தருகையிலே ஆயுள் கூடுதடி!
உன் மழலை கேட்ட பின்,
குயில் கூவ மறந்ததடி!
உன்னைத் தழுவி மகிழ்ந்த பின்னே,
மலரும் முள்ளாய் தோன்றுதடி!
நீ நாக்கைக் காட்டையிலே!
உன் அன்னையின் தோற்றமடி!
உன் மனதின் ஆசையெல்லாம்
நிறைவேற்றும் உன் அன்புத் தந்தையடி!
நான் துவண்டு விழும் போது!
உன் மடியே என் சொர்க்கமடி!
என்னருகில் நீ இருந்தால்!
மரணமும் மகிழ்ச்சியடி!
பெண்ணைப் பெற்ற ஆண்களுக்கு மூன்று தாயடி!
கொடுத்து வைத்தோர் எனைப் போல அவனியிலே யாரடி!
எனைப் பெற்ற தாய் முதலானாள்!
என் பெண்ணைப் பெற்ற மனையாளும் தாயானாள்!
நான் பெற்ற என் பெண்ணே அன்பில், நீ மூன்றில் முதலானாய்!
பெண்ணினத்தால் இம்
மண்ணுலகம் சிறக்கும்..!
======================
திறத்தாலெ உயர்வுற்று தாய்நாட்டுப் பற்றுடனே
……….தோன்றிய பெண்களால் நம்நாட்டுக்குப் பெருமை..!
இறத்தலுக்கு அஞ்சா தாங்கிலேய ஆதிக்கத்திற்கு
……….எதிராக ஆயுதமேந்திப் போராடியவருமதில் உண்டு..!
மறத்தியர்போல் வாழ்ந்த மறக்க முடியாதவரதில்
……….மங்கை வீர வேலுநாச்சியும் அஞ்சலையம்மாளும்..!
அறத்தின் செல்வியென சுதந்திரப் போராட்டத்தில்
……….ஆயிரமாயிரம் வீராங்கனைகள் இவர் போலுண்டு..!
பெருமதிப்பு கொண்டே அக்காலத்தில் கருத்துடன்
……….பெண்ணைக் கண்ணாகக் கருதியே காப்பாற்றினர்..!
கருவிலேயே பெண்சிசுவை அழிக்கின்ற அடாத
……….காரியத்தைக் காணுகின்ற கொடுமை நிகழ்கிறது..!
அருகிவரும் பாலினமாக இன்று பெண்ணினமே
……….சுருங்கிவிடுமோ என்கிற அச்சமும் எழுகின்றது..!
அருங்கலம்போல் கிடைக்கின்ற அரிய உயிரை
……….அரும்புமுன் அழிப்பது கொடும்பாவச் செயலன்றோ..!
பெண்ணாய்ப் பிறந்தாலே முழுதும் துன்பமெனப்
……….பெரிதே கவலையுறும் தாய்மார்கள் திருந்தவேணும்..!
அண்டத்தில் பிறவி ஆணாயினும் பெண்ணாயினும்
……….அதிலரியது பெண்ணென்பதை அறிய வேண்டும்..!
பெண்டாட்டி தாய்மகள் சகோதரியெனும் பலவாறு
……….பிறவியெடுக்கும் பிறப்புக்குப் பெண்ணே மூலமெனும்..
கண்ணோட்டம் வந்துவிட்டால் கண்ணீர் அகலும்
……….காலமாற்றமும் இதற்கு நிச்சயமாய் உதவிசெய்யும்..!
அரும்பு மலரே.. அருமை மகளே..
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
-ஆ. செந்தில் குமார்.
அரும்பு மலரே.. அருமை மகளே..
கரும்புச் சுவையே..கணிவாய் மொழியே.. நான்
விரும்பும் தமிழே.. விண்ணுறை மதியே.. என்
இரும்பினை யொத்த இதய மதனை.. நீ
மருந்தெனும் சிரிப்பால் இளக்கி விட்டாயே…!
தென்கடல் முத்தே.. தெவிட்டாத அமுதே
கண்ணே மணியே.. கனவுப் பூவே.. என்
விந்தை உலகே.. வியத்தகு அழகே.. நான்
முன்னர் செய்த தவப்பயன் விளைவோ..
பொன்னே யுந்தன் தந்தை யானது…!
இதந்தரும் தென்றலே.. இனித்திடும் கவிதையே..
இதயத் துடிப்பே.. எந்தன் உயிரே.. நான்
எத்தனை எத்தனை வெற்றிகள் பெறினும்..
பத்தரை மாற்றுத் தங்கமே உன்னிடம்..
மொத்தமாய் பணிந்து தோற்பதே இனிமை…!
Mr. A.Senthilkumar really superb.last line of your poem really wonderful. Thanks for giving such a beautiful line.. God bless you..
Thank you, Mr. Soundar