Tag: செண்பக ஜெகதீசன்

  • குறளின் கதிர்களாய்…(111)

    செண்பக ஜெகதீசன்

    அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும்
    பிறன்போல நோக்கப் படும்.  (திருக்குறள் -1047: நல்குரவு) 

    புதுக் கவிதையில்… 

    வறுமை கொடிதுதான்,
    வந்தால் அது
    அறமல்லாத வழியில்,
    அன்னை கூட
    மகனைப்
    பெற்றதை மறந்து
    பிறரைப்போலப் பார்ப்பாள்…! 

    குறும்பாவில்…

    அறவழியிலல்லாமல் வறுமை வந்தால்,
    அன்னை கூட மகனை
    அயலானாய்த்தான் கருதுவாளே…! 

     மரபுக் கவிதையில்…

    பெற்ற தாயவள் பிள்ளையினைப்
         பிடிக்கும் வறுமையில் விடமாட்டாள்,
    தொற்றிடும் வறுமை வந்ததவன்
       தீய வழியெனத் தெரிந்துவிட்டால்,
    முற்றிலும் மகனை வெறுத்தேதான்
      மனதைப் பாறாங் கல்லாக்கி
    மற்றவர் முன்பும் மதிக்காமல்
       மாற்றான் போல நினைப்பாளே…! 

    லிமரைக்கூ… 

    புறவழியில் வறுமை வந்தது,
    பிள்ளையை வேறாயப் பார்க்கக்
    காரணம் தாய்மனம் நொந்தது…! 

    கிராமிய பாணியில்… 

    கொடியதுகொடியது வறுமகொடியது
    வாழ்வுலவரும் வறுமகொடியது,
    பெத்ததாயும் உடமாட்டா
    புள்ளயத்தான் வறுமயிலவாட… 

    ஆனா,
    கெட்டவழில வறுமவந்தா
    எட்டிக்கூட பாக்கமாட்டா
    புள்ளய
    பெத்ததாயும் பாக்கமாட்டா,
    புள்ளயாத்தான் பாக்கமாட்டா
    பெறத்தியாராப் பாப்பாளே… 

    அதால
    கொடியதுகொடியது வறுமகொடியது
    வாழ்வுலவரும் வறுமகொடியது…!

     

     

    Share
  • குறளின் கதிர்களாய்…(110)

    -செண்பக ஜெகதீசன்

    கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும் 
    திங்களைப் பாம்புகொண் டற்று.   (திருக்குறள்-1146: அலரறிவுறுத்தல்)

    புதுக் கவிதையில்…

    காதலரைக்
    கண்டதுநான் ஒரு நாளே,
    அதனாலெழுந்த ஊர்ப்பேச்சு,
    நிலவைப் பாம்பு விழுங்கியதுபோல்

    நிறைந்துவிட்டதே ஊரெங்கும்…! 

    குறும்பாவில்… 

    நிலவைப் பாம்புவிழுங்கிய சேதிபோல்
    ஊரெல்லாம் பரவிவிட்டது ஊர்ப்பேச்சாய்,
    ஒருநாள் காதலரைப் பார்த்தது…! 

    மரபுக் கவிதையில்…

    கண்ணில் நிறைந்த காதலரைக்
         கண்டு பேசிய தொருமுறைதான்,
    வண்ணம் பலவாய் வந்திங்கே

         வதந்தியாய்ப் பரவிடும் ஊர்ப்பேச்சு,
    விண்ணில் நிலவைப் பிடித்தாங்கே

         விழுங்கிடும் பாம்பின் கதைபோலே
    எண்ணம் போல விரைவாக
         எங்கும் பரவுதல் போலன்றோ…! 

    லிமரைக்கூ…

    காதலரை ஒருநாள் பார்த்தது,
    கதையிதாய் அலரது ஆனதே

    நிலவைப் பாம்புவாய் சேர்த்தது…! 

    கிராமிய பாணியில்… 

    பேசுபேசு பாத்துப்பேசு
    போயிடும்அதுதான் ஊர்ப்பேச்சா… 

    பாத்தேன்பாத்தேன் ஒருநாளுதான்
    பிரியமுள்ள காதலர

    பாத்தேன்பாத்தேன் ஒருநாளுதான்,
    தெரிஞ்சிபோச்சி ஊரெல்லாமே

    பரவிப்போச்சி ஊர்ப்பேச்சாவே… 

    கெரகணநாளுல நெலவத்தான்
    பாம்புபுடிச்சி உழுங்குறது

    பலருந்தெரிஞ்ச கதயாச்சே,
    அதப்போலானதே எங்கதயும்… 

    அதால,
    பேசுபேசு பாத்துப்பேசு

    போயிடும்அதுதான் ஊர்ப்பேச்சா…! 

     

     

    Share
  • குறளின் கதிர்களாய்…(109)

     

     செண்பக ஜெகதீசன்

     

     

    பருவத்தோ டொட்ட வொழுகல் திருவினைத்

    தீராமை யார்க்குங் கயிறு.

         -திருக்குறள் -482(காலமறிதல்)

     

    புதுக் கவிதையில்…

     

    காலமறிந்து

    கடமையைச் செய்..

     

    உரிய காலத்தில்

    ஒன்றி முயல்வது,

    செல்வம் நம்மை

    விட்டுச் செல்லாதிருக்கக்

    கட்டிவைக்கும் கயிறாமே…!

     

    குறும்பாவில்…

     

    காலமறிந்து கடமை செய்வது,

    செல்வம் விட்டுச்சென்றிடாமல்

    கட்டிடும் கயிறு போன்றதே…!

     

     மரபுக் கவிதையில்…

     

    செல்வம் என்றும் நில்லாமலே

         சென்று கொண்டே யிருப்பதினால்

    நில்லெனத் தடுத்துக் கட்டியேதான்

         நிறுத்திடும் கயிறது வேறில்லை,

    நல்ல செயலது தொடங்குமுன்னே

         நாளும் நன்மை பெற்றுத்தரும்

    வல்லமை மிக்க காலத்தினை

         வகையாய் அறிந்து செயல்படலே…!

     

    லிமரைக்கூ…

     

    காலமறிந்து செய்திடு கடமை,

    அதுதான் கயிறாய் கட்டியே

    செல்வமதை ஆக்கிடுமுன் உடமை…!

     

    கிராமிய பாணியில்…

     

    கடமயச்செய்யி கடமயச்செய்யி

    காலமறிஞ்சி கடமயச்செய்யி,

    காலத்த நல்லதாத் தெரிஞ்சிக்கிட்டே

    கடமயநீயும் தொடங்குனாலே

    கட்டாயம்வெற்றி வந்துசேரும்..

     

    அது,

    பாடுபட்டு சேத்தசெல்வம்

    பறிபோவாம கெட்டிப்போடும்

    பெலமாவுள்ள கயறேதான்

    பொருத்தமான தொணயேதான்..

     

    அதால,

    கடமயச்செய்யி கடமயச்செய்யி

    காலமறிஞ்சி கடமயச்செய்யி…!

     

    -செண்பக ஜெகதீசன்…

    Share
  • குறளின் கதிர்களாய்…(108)

    செண்பக ஜெகதீசன்.

     
     

    வாள்போல் பகைவரை யஞ்சற்க வஞ்சுக
    கேள்போல் பகைவர் தொடர்பு.
    -திருக்குறள் -882(உட்பகை)
     
     
    புதுக் கவிதையில்…

    வெட்டும் வாள்போல்
    வெளிப்படையான பகைக்குக்கூட
    பயப்பட வேண்டாம்,
    வஞ்சம் மறைத்து
    உறவினர்போல் ஒட்டிக்கொள்ளும்
    பகைவர் தொடர்பு மட்டும்
    வேண்டவே வேண்டாம்…!
     
     
    குறும்பாவில்…

    வாள்போல் வெளிப்படைப் பகையைவிடப்
    பெரிதும் அஞ்சி ஒதுங்கத்தக்கது,
    வஞ்சமுடன் உறவினர்போல் வரும்பகையே…!
     
     
    மரபுக் கவிதையில்…

    வெட்டும் வாளின் தன்மையது
              வெளிப்படை யாகத் தெரிவதுபோல்
    கிட்டே நேரில் வரும்பகைவர்
              கண்டே அஞ்சிடத் தேவையில்லை,
    ஒட்டும் உறவென வந்துநமை
              ஒழிக்கும் வஞ்சம் கொண்டவராம்
    கெட்ட பகைவர்க் கஞ்சிடுவாய்,
              கூட்டது அவருடன் வேண்டாமே…!
     
     
    லிமரைக்கூ…

    வாளென வரும்பகைவர்க்கு அஞ்சாதே,
    அஞ்சிடு வஞ்சமுடன் வருவோர்க்கு,
    உறவாய் அவரைநம்பிக் கொஞ்சாதே…!
     
     
    கிராமிய பாணியில்…

    அஞ்சாத அஞ்சாத
    ஆளப்பாத்து அஞ்சாத,
    ஆளவெட்டும் வாளப்போல
    வெளிப்படயாப் பககாட்டும்
    ஆளப்பாத்து அஞ்சாத..

    ஆனா நீயும்,
    அஞ்சிடுவரய் அஞ்சிடுவாய்
    அவுனப்பாத்து அஞ்சிடுவாய்,
    ஒறவுபோல நடிச்சிக்கிட்டு
    ஒழிச்சிக்கெட்டப் பாக்கவுன
    வஞ்சகன எதிராளிய
    ஒருநாளும் நம்பிடாத,
    ஒண்ணாச்சேந்து போயிராத…!

     

     

     

    -செண்பக ஜெகதீசன்…

     

    Share
  • குறளின் கதிர்களாய்…(107)

     

    செண்பக ஜெகதீசன்

     

    வில்லே ருழவர் பகைகொளினுங் கொள்ளற்க

    சொல்லே ருழவர் பகை.

         -திருக்குறள் -872(பகைத்திறம் தெரிதல்)

     

    புதுக் கவிதையில்…

     

    பகைத்திறம் தெரிந்துகொள்,

    வில்லேருழவராம்

    வீரர்தம்

    பகையைக் கொண்டாலும்

    பாதிப்பு அதிகமில்லை..

     

    சொல்லேருழவராம்

    கற்றறிந்தோர் பகையை மட்டும்

    எக்காரணத்தாலும் ஏற்றிடாதே…!

     

    குறும்பாவில்…

     

    வீரராம் வில்லேருழவர் பகையைவிடப்

    பெரிதும் கொடிது,

    சொல்லேருழவராம் அறிவுடையோர் பகை…!

     

    மரபுக் கவிதையில்…

     

    வில்லேர் உழவராம் வீரர்தமை

         வீணில் பகைத்தல் மிகக்கொடிதே,

    எல்லை யில்லாத் துன்பம்வரும்

         எளிதில் மீண்டிட வழியிலையே,

    அல்லல் அதனிலும் கூடவரும்

         ஆற்றல் எல்லாம் அழிந்துவிடும்,

    சொல்லேர் உழவர் அறிஞரவர்

         சார்ந்த பகைதான் வேண்டாமே…!

     

    லிமரைக்கூ…

     

    வீரரென்போர் உழுதிடுவர் வில்லால்,

    இவர்தம் பகையினும் கொடிது

    அறிஞர்பகை, அவருழவு சொல்லால்…!

     

    கிராமிய பாணியில்…

     

    ஒழவ மதிச்சிடு பகய மறந்திடு

    பகச்சிக்காத பகச்சிக்காத

    பாக்காமத்தான் பகச்சிக்காத..

     

    வில்லால உழுறுவந்தான்

    வீரமுள்ள படவீரன்,

    அவனநீ பகச்சாலும்

    சொல்லால உழுறவுன

    பகச்சிக்காத பகச்சிக்காத,

    படிச்சவனப் பகச்சிக்காத..

     

    அதால

    ஒழவ மதிச்சிடு பகய மறந்திடு

    பகச்சிக்காத பகச்சிக்காத

    பாக்காமத்தான் பகச்சிக்காத…!

     

    செண்பக ஜெகதீசன்

    Share
  • குறளின் கதிர்களாய்…(106)

    செண்பக ஜெகதீசன்

     

     

    தொழுதகை யுள்ளும் படையொடுங்கு மொன்னா

    ரழுத கண்ணீரு மனைத்து.

         -திருக்குறள் -828(கூடா நட்பு)

     

    புதுக் கவிதையில்…

     

    நட்பு நாடிவரும்

    பகைவர்

    கும்பிடும் கைகளுக்குள்ளும்

    கொடிய ஆயுதம் மறைந்திருக்கும்,

    அவர்கள்

    அழும் கண்ணீரும் அப்படி

    ஆபத்து நிறைந்ததே…!

     

    குறும்பாவில்…

     

    நட்புநாடும் பகைவரிடம் ஆயுதமிருக்கும்

    நமைவணங்கும் கைகளுக்குள்,

    வஞ்சகம் நிறைந்ததேயவர் கண்ணீரும்…!

     

    மரபுக் கவிதையில்…

     

    நம்மிடம் வந்திடும் நட்பினிலே

         நட்பிது நாடக் கூடாததே,

    கும்பிடும் கைகளின் உள்ளேதான்

         கொடிதாய்க் கொலைவாள் மறைந்திருக்கும்,

    நம்பிட வேண்டாம் பகைவரிவர்

         நதியாய் வடித்திடும் கண்ணீரையும்,

    அம்பென அழித்திடும் ஆயுதம்தான்

        அறிவாய்க் கூடா நட்பெனவே…!

     

    லிமரைக்கூ…

     

    கும்பிடுவோர் கையில்வாள் மறைந்திருக்கும்,

    கொடியோர் காட்டும் கண்ணீரிலும்

    பகையுடன் வஞ்சமே நிறைந்திருக்கும்…!

     

    கிராமிய பாணியில்…

     

    நம்பிடாத நம்பிடாத

    நட்புலதான் நம்பிடாத

    நடிப்பப்பாத்து நம்பிடாத,

    சேத்திடாத சேத்திடாத

    சேக்காளியாச் சேத்திடாத..

     

    கும்புடுற கைக்குள்ளதான்

    கொலவாள வச்சிருப்பான்,

    கவனிச்சித்தான் பாக்காமக்

    கூட்டாளியா ஆக்கிடாத..

     

    அப்புடித்தான்

    அவஞ்சிந்தும் கண்ணீருமே,

    அதப்பாத்து ஏமாறாத

    அவனநட்பாச் சேத்துடாத..

     

    நம்பிடாத நம்பிடாத

    நட்புலதான் நம்பிடாத

    நடிப்பப்பாத்து நம்பிடாத…!

     

    -செண்பக ஜெகதீசன்…

    Share
  • குறளின் கதிர்களாய்…(105)

    செண்பக ஜெகதீசன் 

    ஒளியார்முன் னொள்ளிய ராதல் வெளியார்முன்
    வான்சுதை வண்ணங் கொளல். (திருக்குறள்-714: அவையறிதல்) 

    புதுக் கவிதையில்… 

    அவைதனில்
    அறிவுடையோர் முன்னிலையில்
    அறிவுடையவராய் ஒளிரவேண்டும்…
    அறிவற்றவர்முன்
    வெண்ணிறச் சுண்ணாம்புச் சாந்துபோல்
    வெளிப்படையாய்
    அறிவிலார்போல இருக்கவேண்டும்! 

    குறும்பாவில்… 

    அறிந்தோர் அவையில் அவர்போலும்,
    அறியார்முன் அவர்போல சுண்ணச்சாந்தாய்

    வெளிப்படையாயும் இருத்தல்வேண்டும்! 

    மரபுக் கவிதையில்… 

    கற்றோர் நிறைந்த அவைதனிலே
        கற்றோர் போல அவையறிந்து
    சற்றும் குறைகள் வாராமல்
        சகலரின் முன்னே நடந்திடுவாய்,
    குற்றம் நிறைந்த அறிவற்றோர்

        கூடி யிருக்கும் இடத்தினிலே
    பற்றும் சுண்ணச் சாந்தினைப்போல்
        பளிச்சென அவர்போல் இருப்பாயே! 

    லிமரைக்கூ… 

    அறிவுடையோர் அவையில் அவர்போலவே இரு,
    அறிவற்றோர்முன் அப்படியே அறிவற்றோராய்

    சுண்ணச்சாந்தாய் ஒளிவின்றி வைத்திடுன் உரு! 

    கிராமிய பாணியில்… 

    நடந்துக்கணும் நடந்துக்கணும்
    நல்லபடி நடந்துக்கணும்,
    சமயம்போல நடந்துக்கணும்

    சபதெரிஞ்சி நடந்துக்கணும்… 

    அறிவுள்ளவன் சபயிலத்தான்
    அவுரப்போல நடந்துக்கணும்,
    அறிவயெல்லாங் காட்டிக்கணும்… 

    அறிவில்லாதவங் கூட்டத்தில
    அவுரப்போலக் காட்டிக்கணும்,
    வெள்ளச்சுண்ணாம்புச் சாந்தப்போல

    வெளிப்படயாக் காட்டிக்கணும்… 

    இப்புடித்தான்,
    நடந்துக்கணும் நடந்துக்கணும்

    நல்லபடி நடந்துக்கணும்,
    சமயம்போல நடந்துக்கணும்

    சபதெரிஞ்சி நடந்துக்கணும்!

     

     

    Share
  • குறளின் கதிர்களாய்…(104)

    செண்பக ஜெகதீசன்

    ஈன்றாள் பசிகாண்பா னாயினுஞ் செய்யற்க
    சான்றோர் பழிக்கும் வினை.    (திருக்குறள் -656: வினைத்தூய்மை)

    புதுக் கவிதையில்…

    பெற்ற தாயைப்
    பசியில் தவிக்கவிடுதல்
    பெரும் பாவம்…

    தாயவள் பசியில்
    தவிக்கக் காணினும்,
    என்றுமே செய்யாதே
    அறிவுடைச் சான்றோர்கள்
    பழித்துச்சொல்லும் செயலை…!

    குறும்பாவில்… 

    தாயவள் தவித்தாலும் பசியில்,
    தொடங்காதே
    தூய சான்றோர் வெறுக்கும் செயலை!

    மரபுக் கவிதையில்… 

    முன்னறி தெய்வம் இரண்டினிலே
      –முதலாம் தெய்வம் நமைப்பெற்ற
    அன்னை பசியில் வாடிநிற்கும்
      –அவல நிலையே வந்தாலும்,
    முன்னைப் பெரியோர் சான்றோர்கள்
      –முழுதாய்ப் பழிக்கும் செயலதைத்தான்
    என்ன காரணம் காட்டியுமே
      –என்றும் நீதான் செய்திடாதே!

    லிமரைக்கூ… 

    கொடிய பசிதனில் வாடிடும் அன்னை
    துயர்கண்டும், பெரியோர் பழிக்கும்
    செயலது செய்ய மாற்றிடாதே உன்னை!

    கிராமிய பாணியில்… 

    செய்யாத செய்யாத
    கொடுஞ்செயலச் செய்யாத… 

    செய்யாத செய்யாத
    பெரியவங்க விரும்பாததச்
    செய்யாத செய்யாத,
    பெரியவங்க பழிக்கிறதச்
    செய்யாத செய்யாத… 

    பெத்தவளே பசியோட
    பட்டினியாக் கெடந்தாலும்
    அதச்
    செய்யாத செய்யாத… 

    செய்யாத செய்யாத
    கொடுஞ்செயலச் செய்யாத! 

     

    Share
  • குறளின் கதிர்களாய்…(103)

    -செண்பக ஜெகதீசன் 

    ஞாலங் கருதினுங் கைகூடுங் காலங்
    கருதி யிடத்தாற் செயின்.    (திருக்குறள்-484: காலமறிதல்) 

    புதுக் கவிதையில்… 

    உலகு ஒன்றும்
    உன் கைகளுக்கு எட்டாததல்ல… 

    உற்ற காலத்து
    உரிய இடத்தில் செயலாற்றினால்,
    உலகம் கூட

    உனக்கு வசமாகும்…! 

    குறும்பாவில்… 

    காலம் இடமறிந்து
    கடமையாற்றினால்,
    உடமையாகிடும் உலகே…! 

    மரபுக் கவிதையில்… 

    நிலையா உலக வாழ்வினிலே
        -நடக்கா தென்பது எதுவுமில்லை,
    விலையாய் ஏதும் வேண்டாமே

        –வினையைச் செய்திடு இடமறிந்தே,
    அலையாய்ச் சென்றிடும் காலத்திலே

        –அறிந்து செயல்படு காலமதில்,
    அலைந்தே வெற்றி தேடவேண்டாம்

        –அகிலம் உன்கை வசப்படுமே…! 

    லிமரைக்கூ… 

    காலம் இடமறிந்தே ஆற்றிடுவாய் கடமை,
    வெற்றி உன்னைத் தேடிவரும்,
    உலகமதும் ஆகிவிடும் உந்தன் உடமை! 

    கிராமிய பாணியில்… 

    கடமயச்செய்யி கடமயச்செய்யி
    காலமறிஞ்சி கடமயச்செய்யி,
    கடமயச்செய்யி கடமயச்செய்யி

    எடத்தயும்பாத்து கடமயச்செய்யி… 

    அப்போ,
    எல்லாம்ஒனக்குக் கெடச்சிருமே

    எதுலயும்வெற்றி கெடச்சிருமே,
    ஒலகத்தநீ கேட்டாலும்

    ஓங்கையில கெடச்சிருமே… 

    அதால,

    கடமயச்செய்யி கடமயச்செய்யி
    காலமறிஞ்சி கடமயச்செய்யி,
    கடமயச்செய்யி கடமயச்செய்யி

    எடத்தயும்பாத்து கடமயச்செய்யி…!

     

     

    Share
  • குறளின் கதிர்களாய்…(102)

    செண்பக ஜெகதீசன்

    ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை
    நாகம் உயிர்ப்பக் கெடும்.   (திருக்குறள் -763: படைமாட்சி)

    புதுக் கவிதையில்…

    எத்தனைபேர் என்ற
    எண்ணிக்கையில் அல்ல,
    பலத்தில் உள்ளது
    படையின் பெருமை… 

    எலிகள்பல படையாய்ச்சேர்ந்து
    எதிர்த்தாலும்,
    எழுந்துசீறும் நாகத்தின்முன்
    எல்லாம் ஓடி அழியும்…!

    குறும்பாவில்…

    எலிப்படையால் எதுவும் ஆகாது,
    படமெடுத்துச் சீறிவரும் பாம்பின்முன்
    பயந்தோடும் எல்லாம் ஒன்றாய்…!

    மரபுக் கவிதையில்…

    படையின் பெருமை வீரமன்றிப்
    -பலரைச் சேர்த்தும் பலனில்லை,
    அடைய முடியா வெற்றிக்கே
    -அணியாய்த் திரளும் எலிக்கூட்டப்
    படையால் ஆவது ஏதுமில்லை,
    -படமதைக் காட்டிச் சீறியெழும்
    புடைவாழ் பாம்பைக் கண்டவுடன்
    -பதறி யடித்தே ஓடிடுமே…!

    லிமரைக்கூ…

    பலம்வீரம் இருந்தால்தான் சிறந்தவொரு படை
    பார்க்கும் அதிக எண்ணிக்கையல்ல,
    பாம்புசீறத் தடைப்படுமே எலிப்படையின் நடை…!

    கிராமிய பாணியில்…

    படயில்ல படயில்ல
    பெருங்கூட்டம் படயில்ல,
    வீரமிருந்தா படயாவும்
    வெரட்டியடிக்கும் படயாவும்… 

    எலியெல்லாஞ் சேந்தாலும்
    எல்லாம்படயா வந்தாலும்,
    பாம்பப்பாத்தா பயந்தோடும்
    பாம்புசீறுனா பாஞ்சோடும்… 

    அதால,
    படயில்ல படயில்ல
    பெருங்கூட்டம் படயில்ல,
    வீரமிருந்தா படயாவும்
    வெரட்டியடிக்கும் படயாவும்…!

     

     

    Share
  • குறளின் கதிர்களாய்…(101)

    செண்பக ஜெகதீசன்

    அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே
    செல்வத்தைத் தேய்க்கும் படை.  (திருக்குறள்-555: கொடுங்கோன்மை) 

    புதுக் கவிதையில்… 

    கொடுங்கோல் ஆட்சியாளர்தம்
    கீர்த்தி செல்வம் அழித்திட
    எதிரிப்படை
    எதுவும் வேண்டாம்,
    துன்பத்தில் துடித்து
    குடிமக்கள் சிந்திடும்
    கண்ணீரே போதும்…! 

    குறும்பாவில்… 

    கொடுங்கோலரை அழிக்கும் படை,
    குடிமக்கள் துன்புற்றழுத
    கண்ணீரே…! 

    மரபுக் கவிதையில்… 

    மக்களை வதைத்து முடிசூடி
      –மன்பதை ஆண்டிடும் கொடுங்கோலர்
    பக்கமாய் வந்தே அழித்திடத்தான்
      –படைகள் எதுவும் வேண்டாமே,
    துக்கம் மேலுறக் குடிமக்கள்
       -துன்பம் தாங்கா தழுதகண்ணீர்,
    மக்கள் படையாய் அவர்வாழ்வை
      –மீண்டும் எழாமல் அழித்திடுமே…! 

    லிமரைக்கூ… 

    கொடுங்கோல் ஆட்சியரை அழித்திடும் படை
    கொதித்திடும் குடிமக்களின் கண்ணீர்,
    கொடிய ஆட்சியாளர்க்குக் கொடுத்திடும் விடை! 

    கிராமிய பாணியில்… 

    ஆயுதம்வேண்டாம் ஆயுதம்வேண்டாம்
    அழிக்கத்தான் ஆயுதம்வேண்டாம்,
    கொடுங்கோலு ஆட்சியயையே
    அழிக்கத்தான் ஆயுதம்வேண்டாம்… 

    படவேண்டாம் படவேண்டாம்
    பொல்லாத அரசாங்கத்தப்
    போக்கிடத்தான் படவேண்டாம்,
    பாடுபட்ட பொதுசனங்க
    பொறுக்காத தும்பத்தில
    அழுதகண்ணீர் ஒண்ணேபோதும்,
    அழிஞ்சிடுவார் கொடுங்கோலர்… 

    அதால,
    ஆயுதம்வேண்டாம் ஆயுதம்வேண்டாம்
    அழிக்கத்தான் ஆயுதம்வேண்டாம்,
    கொடுங்கோலு ஆட்சியயையே
    அழிக்கத்தான் ஆயுதம்வேண்டாம்!

     

     

    Share
  • குறளின் கதிர்களாய்…(100)

    செண்பக ஜெகதீசன் 

    படைகொண்டார் நெஞ்சம்போல் நன்றூக்காது ஒன்றன்
    உடல்சுவை உண்டார் மனம்.   (திருக்குறள் -253: புலால்மறுத்தல்) 

    புதுக் கவிதையில்… 

    கொலைக் கருவியைக்
    கொண்டவனிடத்தில்
    கொஞ்சமுமிருக்காது இரக்கம்! 

    அதுபோல்,
    மற்ற உயிரழித்து

    மாமிசம் உண்போர்
    மனத்திலும் இருக்காது
    நல்லதாம் அருள்! 

    குறும்பாவில்… 

    வாளுடையானிடம் இருக்காது இரக்கம்,
    உயிர்வதைத்து ஊனுண்போரிடம்

    உறையாது அருள்! 

    மரபுக் கவிதையில்… 

    கரத்தினில் ஆயுதம் எடுத்தேதான்
        –காவு கொள்ள நிற்போர்க்கே
    இரக்கம் என்றும் இருப்பதில்லை
        –இதயம் கல்லாய்ப் போய்விடுமே,
    தெரிந்திடு இதுதான் கதையாகும்

        –துடிக்கத் துடிக்க உயிர்வதைத்துத்
    தெரிந்தே மாமிசம் உண்போரிடம்
        தங்கா துண்மை அருளதுவே! 

    லிமரைக்கூ… 

    கொலைவாளன் மனமது ஈரமிலா இருளே,
    கொன்ற உடலை உண்போரிடம்

    என்றும் தங்காது மனதினில் அருளே! 

    கிராமிய பாணியில்… 

    கொல்லாத கொல்லாத உயிரக்கொல்லாத,
    திங்காத திங்காத ஒடம்பத்திங்காத… 

    எரக்கமில்ல எரக்கமில்ல,
    அடுத்தவன அழிச்சிடவே

    ஆயிதத்த எடுத்தவங்கிட்ட
    எரக்கமில்ல எரக்கமில்ல
    மனசுலத்தான் எரக்கமில்ல… 

    அதுபோல
    உயிரக்கொன்னு ஒடம்பத்தின்னா
    அருளுயில்ல இருளேதான்… 

    அதால
    கொல்லாத கொல்லாத உயிரக்கொல்லாத,
    திங்காத திங்காத ஒடம்பத்திங்காத! 

     

     

    Share
  • குறளின் கதிர்களாய்…(99)

    செண்பக ஜெகதீசன்

    வசையிலா வண்பயன் குன்று மிசையிலா
    யாக்கை பொறுத்த நிலம்.   (திருக்குறள் -239: புகழ்)

    புதுக் கவிதையில்…

    அடுத்தவர்க்கு உதவி
    அரும்புகழ் சேர்க்காதவனைத்
    தாங்கிடும் நிலம்,
    விளைச்சல் ஏதுமின்றிப்
    பலனற்றுப் போய்விடும்
    பாழ்நிலமாய்…!

    குறும்பாவில்…

    கொடுத்துதவிப் புகழ்பெறாதவனைக்
    கொண்ட நிலமும் பாழாகும்,
    வளம் குன்றியே…!

    மரபுக் கவிதையில்…

    மண்ணில் மனிதர் வாழ்வினிலே
      –மற்றவர் வாழ உதவியேதான்
    புண்ணியத் தோடு புகழ்சேரார்
       -பார மாவார் புவியினுக்கே,
    திண்ணமாய் இவரைத் தாங்குவதால்
      –தரணியும் வளமது குன்றியேதான்
    மண்ணும் வறண்டு விளையாதே
      –மாறிடும் நிலைதான் வந்திடுமே!

    லிமரைக்கூ…

    பிறர்க்குதவி வாழ்வில் புகழினைச் சேரு,
    புகழிலாரைத் தாங்கும் நிலமதுவும்
    வளங்குன்றி மாறிடும் பாழ்நிலமாய்ப் பாரு…!

    கிராமிய பாணியில்…

    சேருசேரு புகழச்சேரு
    சொத்தாநெனச்சி புகழச்சேரு,
    சொந்தபந்தம் பாராம
    சேத்துநல்லா ஒதவிதான்
    சேருசேரு புகழச்சேரு..

    புகழச்சேக்க மறந்தவன
    தாங்கிநிக்கும் நெலங்கூடத்
    தங்கியெதுவும் வெளயாத
    தரிசிநெலமாப் போயிடுமே…

    அதால,
    சேருசேரு புகழச்சேரு
    சொத்தாநெனச்சிப் புகழச்சேரு!

     

     

    Share
  • போய்விடாதே…!

    செண்பக ஜெகதீசன்

    உயிர்த்தெழுந்த மனிதநேயத்தை,
    மீண்டும்
    சிலுவையில் அறையத்துடிக்கும்
    அரசியலார்…!

    மனிதநேயமே,
    பேய்மழை வெள்ளத்தில்
    பெருகி வந்ததுபோல்,
    பணவெள்ளத்தில்
    பொலிவிழந்து போய்விடாதே…!

    Share
  • குறளின் கதிர்களாய்…(98)

    செண்பக ஜெகதீசன்

    நவில்தொறும் நூனயம் போலும் பயில்தொறும்
    பண்புடை யாளர் தொடர்பு. 
    (திருக்குறள்-783: நட்பு)

    புதுக் கவிதையில்…

    படிக்கப் படிக்க,
    புதிதாய்ப் பொருள்தந்து
    புத்துணர்ச்சி தந்திடும்
    புத்தகம் போல்,
    பழகப் பழகப்
    பேரின்பம் தரும்
    பண்புடையோர் நட்பு…!

    குறும்பாவில்…

    படிக்கப் படிக்கப் புரியும்
    நூல்நயம்போல் இன்பந்தரும்,
    தொடரும் நல்லோர் நட்பு…!

    மரபுக் கவிதையில்…

    படிக்கும் நல்ல புத்தகத்தின்
      –பொருளும் நயமும் புரிந்திடவே
    அடிக்கடிப் படிக்கும் பழக்கமதை
      –அனுதினம் கொண்டால் நலந்தருமே,
    கிடைத்திடும் நல்லோர் நட்பினிலும்
      –கூடுதல் நேரம் பழகிவந்தால்,
    தடையிலா யின்பம் கிடைத்திடுமே,
         –தொடர்ந்திடு நல்லோர் நட்பினையே!

    லிமரைக்கூ…

    நயந்தெரிய நூலைப் படித்திடு நன்றாய்,
    நல்லாரொடு நட்பது சிறக்க
    பலமுறை பழகிடு அவருடன் ஒன்றாய்!

    கிராமிய பாணியில்…

    படிபடி நல்லாப்படி
    படிச்சதயே திரும்பப்படி,
    புத்தகத்துப் பெருமதெரிய
    பலமொறதான் நல்லாப்படி,
    படிக்கப்படிக்கப் பொருள்தெரியும்
    புத்தகத்துப் பெருமதெரியும்… 

    இதுபோல,
    பழகப்பழக வளந்துவரும்
    நல்லவுங்க நட்புதானே,
    அதால
    பழகுபழகு நல்லாப்பழகு
    நட்புபெருக நல்லாப்பழகு… 

    படிபடி நல்லாப்படி
    படிச்சதயே திரும்பப்படி,
    பழகுபழகு நல்லாப்பழகு
    நட்புபெருக நல்லாப்பழகு…!

     

     

    Share