குறளின் கதிர்களாய்…(110)
-செண்பக ஜெகதீசன்
கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்
திங்களைப் பாம்புகொண் டற்று. (திருக்குறள்-1146: அலரறிவுறுத்தல்)
புதுக் கவிதையில்…
காதலரைக்
கண்டதுநான் ஒரு நாளே,
அதனாலெழுந்த ஊர்ப்பேச்சு,
நிலவைப் பாம்பு விழுங்கியதுபோல்
நிறைந்துவிட்டதே ஊரெங்கும்…!
குறும்பாவில்…
நிலவைப் பாம்புவிழுங்கிய சேதிபோல்
ஊரெல்லாம் பரவிவிட்டது ஊர்ப்பேச்சாய்,
ஒருநாள் காதலரைப் பார்த்தது…!
மரபுக் கவிதையில்…
கண்ணில் நிறைந்த காதலரைக்
கண்டு பேசிய தொருமுறைதான்,
வண்ணம் பலவாய் வந்திங்கே
வதந்தியாய்ப் பரவிடும் ஊர்ப்பேச்சு,
விண்ணில் நிலவைப் பிடித்தாங்கே
விழுங்கிடும் பாம்பின் கதைபோலே
எண்ணம் போல விரைவாக
எங்கும் பரவுதல் போலன்றோ…!
லிமரைக்கூ…
காதலரை ஒருநாள் பார்த்தது,
கதையிதாய் அலரது ஆனதே
நிலவைப் பாம்புவாய் சேர்த்தது…!
கிராமிய பாணியில்…
பேசுபேசு பாத்துப்பேசு
போயிடும்அதுதான் ஊர்ப்பேச்சா…
பாத்தேன்பாத்தேன் ஒருநாளுதான்
பிரியமுள்ள காதலர
பாத்தேன்பாத்தேன் ஒருநாளுதான்,
தெரிஞ்சிபோச்சி ஊரெல்லாமே
பரவிப்போச்சி ஊர்ப்பேச்சாவே…
கெரகணநாளுல நெலவத்தான்
பாம்புபுடிச்சி உழுங்குறது
பலருந்தெரிஞ்ச கதயாச்சே,
அதப்போலானதே எங்கதயும்…
அதால,
பேசுபேசு பாத்துப்பேசு
போயிடும்அதுதான் ஊர்ப்பேச்சா…!