கற்றல் – ஒரு ஆற்றல் (18)
க. பாலசுப்பிரமணியன்
மழலைப் பருவத்தில் பாடல்களின் நோக்கம்
பெரும்பாலும் ஆரம்ப காலங்களில் குழந்தைகளுக்குப் பாடல்கள் ஆடல்கள் மூலமாக கற்பிக்கப்படுகின்றது. ஆடல்களும் பாடல்களும் குழந்தைகளின் மன நிலைக்கு உகந்ததாகவும் அவர்கள் உள, உடல் வளர்ச்சிக்கு உரம் ஊட்டுவதாகவும் உள்ளதாக குழந்தை மன இயல் வல்லுனர்கள் கருதுகின்றனர். பொதுவாக, சொல்லிக் கொடுக்கும் பாடல்கள் அவர்களுக்கு நல்ல கருத்துகளை போதிப்பதாகவும் நல்வழிப்படுத்துவதாகவும் இருக்கவேண்டும். அதன் மூலம், இயற்கை, வாழ்வியல், உறவுகளின் மேன்மை, ஆரோக்கியம் மற்றும் நாட்டு நடப்புகளை அறிதல் முக்கிய நோக்கம். சமூகம், சமயப் பெரியோர்களின் வாழ்க்கை மற்றும் சரித்திரக் கருத்துகள் விளக்கப்படுகின்றன.
ஆகவே பாடல்களைத் தேர்வு செய்யும் பொழுது கீழ்கண்ட கருத்துகளை முன்வைத்தல் மிக அவசியம்.
- பாடல்கள் குழந்தைகளின் வயதுக்கு உகந்ததாக இருக்கின்றதா?
- பாடலின் மூலம் குழந்தைகளுக்கு ஏற்பில்லாத கருத்துகள் சொல்லப்படுகின்றதா?
- பாடலின் கருத்துகள் எந்த அளவில் அவர்களின் மன நிலையைப் பாதிக்கும் ?
- இந்தப் பாடலின் மூலம் குழந்தைகளிடம் பயம், பொறாமை, காழ்ப்புணர்ச்சி, கோபம், வெறுப்பு, தவறான உணர்வுகள் ஏற்பட வாய்ப்புள்ளதா?
- குழந்தைகளின் தன்னம்பிக்கையையும், சார்புணர்வையும் எந்த அளவு பாதிக்கும்?
இந்த கருத்துகள் பள்ளிக்கூடங்களில் மட்டுமின்றி வீட்டிலும் பெற்றோர்கள் மனதில் கொள்ளுதல் அவசியம்.
சில நேரங்களில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் மகிழ்ச்சிக்காகவோ அல்லது தங்களின் மகிழ்ச்சிக்காகவோ சில திரைப்பட பாடல்களை சொல்லிக் கொடுக்கின்றனர். அது தவறு அல்ல. ஆனால் அவற்றில் உள்ள வார்த்தைகளும் கருத்துகளும் மேற்கண்ட வினாக்களுக்கு பதில் தரும் வகையிலும் குழந்தைகளின் மனநிலையை பாதிக்காத வகையிலும் இருத்தல் மிக அவசியம்.
இளம்வயதில் பாடல்களால் என்ன விதமான நன்மைகள் குழந்தைகளுக்குக் கிடைக்கின்றன?
1. அவர்கள் உள நலம் வலுப்படுகின்றது.
- அவர்கள் குரல் வளம் செழிக்கின்றது.
- இடது மற்றும் வலது மூளையின் செயல்கள் ஒருங்கிணைகின்றன.
- அறிதல், புரிதல் செயல்கள் இலகுவான முறையில் நடக்கின்றன.
- பாடப்படும் நேரத்தில் தன்னம்பிக்கை வலுப்படுகின்றது.
- மற்றவர்களோடு இணைந்து பாடும் பொழுது கூட்டு முயற்சியும் இணைந்து செயல்படும் திறனும் வலுக்கின்றன.
7 . மூளையுடன் உடல் பாகங்கள் இணைந்து செயல்படுகின்றன.
8. உடல் மொழியின் நோக்கங்கள் எளிதில் புரிந்து கொள்ள முடிகிறது.
9. இடம், பொருள், நேரம் இவற்றின் உள்நோக்கங்கள் அறிந்து கொள்ள முடிகின்றது.
10.தயக்கம் இன்றி கருத்துகள் வெளிப்படுத்தவும், பரிமாறிக் கொள்ளவும் முடிகின்றன.
பாடல்களை வெறும் பொழுது போக்காகக் கருதாமல் அதன் மூலம் மொழி, அறிவியல், சமூகவியல், வாழ்வு நெறிமுறைகள், கணிதம் போன்ற பல கருத்துகளை எளிதாக சொல்லிக் கொடுக்க முடிகிறது. இப்படி மறைமுகமாகவோ அல்லது உணர்வுப்பூர்வமாகவோ கற்றுக்கொள்ளப்பட்ட கருத்துகள் குழந்தைகளின் நினைவில் ஆழமாகப் பதிந்து கொள்கின்றன.
முன் காலங்களில் பள்ளிகளில் மாணவர்கள் வாய்ப்பாடுகளை நித்தம் பாடல் போலப் பாடி வந்தனர். ஆகவே அவை அவர்களின் நினைவில் மிக ஆழமாகப் பதிந்து எண்களின் பரிமாற்றம் மிக எளிதாக புரிந்துகொள்ள முடிந்தது. .
பல நேரங்களில் பெற்றோர்கள் இவையெல்லாம் குழந்தைகளுக்கு எதற்கு? கணினி மூலமாக அவர்கள் இவற்றை எளிதாக செயல்படுத்தி விடலாம் என்று கருதுகின்றனர். இது சற்று தவறான கருத்து. மேலை நாடுகளில் இந்தியர்களின் நினைவுகளின் வண்ணங்களையும் பரிமாணத்தையும் கண்டு வியக்கின்றனர். எந்த ஒரு செயலும் மூளையின் வளர்ச்சிக்கும் பேணுதலுக்கும் குந்தகமாக இருக்கும் பட்சத்தில் அவைகளின் உபயோகத்திற்கு வரைமுறை படைத்தல் மனித வளர்ச்சிக்கு மிக தேவையான ஒரு விசயம்.
தொடருவோம்