செண்பக ஜெகதீசன்

வசையிலா வண்பயன் குன்று மிசையிலா
யாக்கை பொறுத்த நிலம்.   (திருக்குறள் -239: புகழ்)

புதுக் கவிதையில்…

அடுத்தவர்க்கு உதவி
அரும்புகழ் சேர்க்காதவனைத்
தாங்கிடும் நிலம்,
விளைச்சல் ஏதுமின்றிப்
பலனற்றுப் போய்விடும்
பாழ்நிலமாய்…!

குறும்பாவில்…

கொடுத்துதவிப் புகழ்பெறாதவனைக்
கொண்ட நிலமும் பாழாகும்,
வளம் குன்றியே…!

மரபுக் கவிதையில்…

மண்ணில் மனிதர் வாழ்வினிலே
  –மற்றவர் வாழ உதவியேதான்
புண்ணியத் தோடு புகழ்சேரார்
   -பார மாவார் புவியினுக்கே,
திண்ணமாய் இவரைத் தாங்குவதால்
  –தரணியும் வளமது குன்றியேதான்
மண்ணும் வறண்டு விளையாதே
  –மாறிடும் நிலைதான் வந்திடுமே!

லிமரைக்கூ…

பிறர்க்குதவி வாழ்வில் புகழினைச் சேரு,
புகழிலாரைத் தாங்கும் நிலமதுவும்
வளங்குன்றி மாறிடும் பாழ்நிலமாய்ப் பாரு…!

கிராமிய பாணியில்…

சேருசேரு புகழச்சேரு
சொத்தாநெனச்சி புகழச்சேரு,
சொந்தபந்தம் பாராம
சேத்துநல்லா ஒதவிதான்
சேருசேரு புகழச்சேரு..

புகழச்சேக்க மறந்தவன
தாங்கிநிக்கும் நெலங்கூடத்
தங்கியெதுவும் வெளயாத
தரிசிநெலமாப் போயிடுமே…

அதால,
சேருசேரு புகழச்சேரு
சொத்தாநெனச்சிப் புகழச்சேரு!

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *